||14.11|| சத்வ குணத்தின் அடையாளம்:
सर्वद्वारेषु देहेऽस्मिन्प्रकाश उपजायते ।
ज्ञानं यदा तदा विद्याद्विवृद्धं सत्त्वमित्युत ।। ११ ।।
ஸர்வத்3வாரேஷு தே3ஹேऽஸ்மிந்ப்ரகாச1 உபஜாயதே ।
ஜ்ஞாநம் யதா3 ததா3 வித்3யாத்3விவ்ருத்3த4ம் ஸத்த்வமித்யுத ।। 11 ।।
यदा யதா3 எப்பொழுது अस्मिन् देहे அஸ்மிந் தே3ஹே இந்த தேகத்தில்
सर्वद्वारेषु ஸர்வத்3வாரேஷு எல்லாப் பொறிவாயில்
ज्ञानं प्रकाश: ஜ்ஞாநம் ப்ரகாச1 ஞானத்தின் ஒளி उपजायते உபஜாயதே உண்டாகிறதோ
तदा उत ததா3 உத அப்பொழுதே सत्त्वम् ஸத்த்வம் சத்வகுணம்
विवृद्धं इति விவ்ருத்3த4ம் இதி ஓங்கியுள்ளது என்று विद्यात् வித்3யாத்3 அறிய வேண்டும்.
இந்த தேகத்தின் பொறிவாயில் அனைத்திலும் எப்பொழுது ஞான ஒளி வீசுகிறதோ அப்பொழுதே சத்வம் ஓங்கியுள்ளதென்று அறிதல்வேண்டும்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இந்த உடம்பில் எல்லா வாயில்களிலும் ஞான ஒளி பிறக்குமாயின் அப்போது சத்வ குணம் வளர்ச்சிபெற்ற தென்றறியக் கடவாய்.
விளக்கம்:
சுலோகம் பதினொன்று முதல் பதிமூன்று வரை பகவான் குணங்களின் லிங்கத்தை, அதாவது ஒருவன் எந்த குணத்தின் ஆதிக்கத்தில் இருக்கிறான் என்பதற்கான அறிகுறிகளை விளக்குகிறார். நெருப்பு உள்ளது என்கிற அறிவை அடைய எவ்விதம் புகை லிங்கமாக(அடையாளமாக) இருக்கின்றதோ அதுபோல குறிப்பிட்ட குணத்தின் வெளிப்பாட்டையும் லிங்கத்தின் மூலம் அறியலாம். இந்த சுலோகத்தில் சத்வகுணத்தின் முன்னீட்டத்தை அறிவது எப்படி எனக் கூறுகிறார்.
=> சத்வகுண ஆதிக்கத்தை அறிதல்:
‘ஸர்வத்3வாரேஷு’ எனில் ‘எல்லா நுழைவாயிலிலும்’ என்பது பொருள். இங்கு நுழைவாயில் என்பது கண், காது, வாய், மூக்கு, மெய் ஆகிய ஐந்து ஞானேந்திரியங்களைக் குறிக்கிறது. அதாவது, இந்த உடலில் பொறிவாயில் அனைத்திலும் ஞான ஒளி வீசும்போது சத்வம் மேலோங்கி உள்ளது என்கிறார் பகவான். ‘ப்ரகாச1’ என்பதை சங்கரர், அந்தக்கரணத்தில் தோன்றுகிற ஒரு குறிப்பிட்ட வ்ருத்தி(எண்ணம்) என வரையறுக்கிறார். இந்த உணர்வின் ஒளி அல்லது அறிவானது அனைத்து புலன்களின் வழியாகவும் உண்டாகின்றன. விழிப்புணர்வும் ஒருமுகப்பாடும் இருப்பதால் இந்த அறிவு(ப்ரகாச1) பிறக்கிறது. இதனால் பார்ப்பதில், கேட்பதில், ஒவ்வொரு புலன்களையும் கையாளுதலில் எழிலும் தெளிவும் திகழ்கின்றன.
எந்த நேரத்தில் சரியான அறிவு தோன்றுகிறதோ அப்போது சத்வம் மேலோங்கி இருக்கிறது என்பதை அறியலாம். இங்கு சரியான அறிவு என்பது நம் முன் இருக்கின்ற சூழ்நிலையை சரியாகப் பொருள்படுத்துதல் ஆகும். உதாரணமாக, சூக்ஷமமான(நுண்மையான) அறிவானது ஸ்தூலமான வார்த்தையாக வெளிவரும்போது அந்த ஸ்தூல சப்தத்தைக் கேட்டு, அவருள் இருக்கின்ற சூக்ஷமமான அறிவை அடைவது ஆகும். இது தவறாகப் புரிந்து கொள்ளப்படவும் வாய்ப்புள்ளது. ஒவ்வொருவரும் அவரது சூழ்நிலையை அல்லது ஒரு நிகழ்வை தவறாகப் புரிந்து கொள்ள பல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவ்விதம் நடக்காமல் அது சரியாகப் புரிந்துகொள்ளப்படும்போது அவன் சத்வகுணத்தின் வசத்தில் இருக்கிறான் என்பது பொருள். இந்நிலையில் மெய்யறிவு ஓங்குகிறது.
மேலும் வைராக்கியம், பொறுமை, அஹிம்சை, மன்னித்தல், உண்மையைப் பேசுதல் போன்ற நற்பண்புகள் சத்வத்தில் இருக்கும்போது வெளிப்படுகின்றன. சத்வத்தில் இருக்கும்போதுதான் ஒருவன் நற்பண்புகளை அடைவதற்கான முயற்சியிலும் ஈடுபடுகிறான்.
---------------------------------------------------------------------------------------------
||14.12|| ரஜோகுணத்தின் அறிகுறிகள்:
लोभ: प्रवृत्तिरारम्भ: कर्मणामशम: स्पृहा ।
रजस्येतानि जायन्ते विवृद्धे भरतर्षभ ।। १२ ।।
லோப4: ப்ரவ்ருத்திராரம்ப4: கர்மணாமச1ம: ஸ்ப்ருஹா ।
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்3தே4 ப4ரதர்ஷப4 ।। 12 ।।
भरतर्षभ ப4ரதர்ஷப4 பரதருள் காளையே लोभ: லோப4: பேராசை
प्रवृत्ति: ப்ரவ்ருத்தி இந்திரியங்கள் வாயிலாக வெளியுலகை நாடுதல்
कर्मणाम् आरम्भ: கர்மணாம் ஆரம்ப4: வினைகளை வளர்த்தல் अशम: அச1ம: அமைதியின்மை स्पृहा ஸ்ப்ருஹா வினையில் நாட்டம் एतानि ஏதாநி இவைகள்
रजसि विवृद्धे ரஜஸி விவ்ருத்3தே4 ரஜோகுணம் மேலெழும்பொழுது
जायन्ते ஜாயந்தே உண்டாகின்றன.
பரத சிரேஷ்டா, பேராசை, செயலில் பிரவிருத்தி, வினைப்பெருக்கு, அமைதியின்மை, ஏக்கம் இவைகள் ரஜோகுணம் மேலெழும்போது உண்டாகின்றன.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அவா, முயற்சி, தொழிலெடுப்பு, அமைதியின்மை, விருப்பம் இவை ரஜோ குணம் மிகைப்படுவதிலிருந்து தோன்றுகின்றன. பாரதா, காளையே!
விளக்கம்:
இந்த சுலோகத்தில் பகவான் ரஜோகுணத்தின் அறிகுறிகளைப் பட்டியலிடுகிறார்.
(i) பேராசை:
பொதுவாக ‘லோப4:’ எனில் பேராசை ஆகும். ஆனால், பின்வரும் இந்த நான்கு மனப்பான்மையும் லோபத்தின் வெளிப்பாடே ஆகும்.
(1) அதிருப்தி: — திருப்தியில்லாத நிலை. போதுமென்ற மனமில்லாத நிலை.
(2) பரத்3ரவ்ய லிப்ஸா — பிறருக்குச் சொந்தமான பொருட்களை அடைய வேண்டுமென்ற ஆசை; மற்றவர்களிடம் அது இருக்கக்கூடாது எனும் மனப்பான்மை. செல்வத்தை அபகரித்தல் வேண்டும் அல்லது அத்துமீறுதல் வேண்டும் போன்ற எண்ணங்களும்கூட லோபம் என்றே அழைக்கப்படும்.
(3) வித்3யமாநவஸ்து த்யாக3 அஸஹிஷ்ணு — தன்னிடமுள்ள பொருட்களைக் கொடுப்பதை பொருத்துக் கொள்ளாதநிலை; கஞ்சத்தனம்.
(4) வர்த4ந அபி4லாஷ: — மேலும் மேலும் வளரவேண்டுமென்கிற பேராசை.
மேற்கூரிய இந்த நான்குவகை மனநிலையும் மற்றும் இதை நியாயப்படுத்த எழும் சிந்தனையும் ரஜஸின் வெளிப்பாடாகும்.
(ii) செயல்:
இந்திரியங்கள் வாயிலாக வெளியுலக வியவகாரங்களில் முனைந்துபோதல் பிரவ்ருத்தி(ப்ரவ்ருத்தி) எனப்படுகிறது. இது செயலை மட்டுமே லக்ஷியமாக எண்ணி பயனற்றதான செயல்களில் ஈடுபடுதலைக் குறிக்கிறது. மேலும் பயனற்ற விளைவை விளைவிக்கும் செயலைச் செய்தல் மற்றும் தனது உடலின் பதற்றத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு செய்யப்படும் அர்த்தமற்ற செயல்கள் ஆகியவையும் இதில் அடங்கும். உதாரணமாக, கையில் ஏதேனுமொன்றை வைத்து சுற்றிக் கொண்டிருத்தல், காரணமின்றி முடிச்சுகளை போட்டு அவற்றை அவிழ்த்துவிடுதல், நகம் கடித்தல் போன்றவைகள்.
(iii) செயல்களினுடைய ஆரம்பம்:
புதிய புதிய கர்மங்களைத் துவக்குவதில் உண்டாகும் ஊக்கம் மற்றும் குறிப்பிட்ட பொறுப்பைத் திட்டமிட்டு எடுத்துக் கொள்ளுதல் போன்றவற்றை ‘கர்மணாம் ஆரம்ப4:’ என பகவான் குறிப்பிடுகிறார். கொடுக்கப்பட்ட ஒரு முடிவை நிறைவேற்றும் பொருட்டு வேண்டுமென்றே செய்யப்படும் கணக்கிடப்பட்ட முயற்சி மற்றும் குறிப்பிட்ட செயல்களினுடைய ஆரம்பம் ரஜஸின் வெளிப்பாடாகும். தேவையில்லாத பொறுப்புகள் அல்லது தனது ஸ்வதர்மத்தில் இல்லாத செயலில் ஈடுபடுதல் இதில் அடங்கும்.
(iv) விக்ஷேபம்:
‘அச1ம’ எனில் அமைதியின்மை ஆகும். உடல் அமைதியின்மையைப் போல மன அமைதியின்மையும் ரஜஸின் வெளிப்பாடாகும். ரஜஸின் ஆதிக்கத்தில் இருக்கின்ற ஒருவனின் மனதில் எண்ணங்களின் வேகமும் மோதலும் அதிகமாக இருக்கும். ‘இதை செய்துவிட்டு அடுத்ததாக அதைச் செய்ய வேண்டும்’ என்கிற சங்கல்பத்தின் ஓட்டம் இருந்துகொண்டே இருக்கும். மேலும் துவங்கிய கர்மங்களில் வெற்றியடையும்பொழுது மகிழ்வும், தோல்வியடையும்பொழுது மனச்சோர்வும் உண்டாகி, அமைதியின்மையை வருவித்துவிடுகிறது.
(v) வினையில் நாட்டம்:
ஆரம்பித்த கர்மங்களை செப்பனிட விருப்பம் ஏற்படுவதால் வினை வேட்கை அல்லது தொழில் தாகம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் தீவிர ஆசை உண்டாகிறது. அந்த குறிப்பிட்ட பொருளின் மீதான ஏக்கம்(ஸ்ப்ருஹா) உச்சத்தை அடைகிறது.
இவைகள் அனைத்தும் ரஜஸின் ஆதிக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. யதா2ர்த2 — யதா2 அர்தே2 ததா2 ஞானம். சூழ்நிலை எப்படியோ அப்படியே புரிதல் எனும் யதார்த்த அறிவு சத்வத்தின் வெளிப்பாடாகும். அதிகமான பேச்சு, கர்மேந்திரியங்களின் மீதான அபிமானம், ஹிம்சை செய்யும் புத்தி, கர்வப்படுதல் மற்றும் பகட்டு இவைகளனைத்தும் ரஜஸின் வெளிப்பாடாகும்.
---------------------------------------------------------------------------------------------