||10.6|| புறப் பிரபஞ்சமும் என்னிடமிருந்தே வந்தது என்கிறார்:
महर्षय: सप्त पूर्वे चत्वारो मनवस्तथा ।
मद्भावा मानसा जाता येषां लोक इमा: प्रजा: ।। ६ ।।
மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா2 ।
மத்3பா4வா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா: ।। 6 ।।
सप्त महर्षय: ஸப்த மஹர்ஷய: ஏழு மஹரிஷிகள் तथा ததா2 அப்படியே पूर्वे பூர்வே பூர்வீகர்களான चत्वार: मनव: சத்வார: மநவஸ்ததா2 நான்கு மனுக்களும் मद्भावा: மத்3பா4வா: என்னுடைய பிரபாவத்தையுடையவர்களாய் मानसा: जाता: மாநஸா: ஜாதா: எனது சங்கற்பத்தில் பிறந்தார்கள்
लोके லோகே இவ்வுலகில் येषां யேஷாம் அவர்களிடத்திருந்து
इमा: प्रजा: இமா: ப்ரஜா: இவ்வுயிர்கள் உண்டாயின.
மஹரிஷிகள் எழுவரும், முன்னை மனுக்கள் நால்வரும் என் பிரபாவத்தோடு என் மனதில் உதித்தார்கள். உலகில் உயிர்கள் யாவும் அவர்களிடத்திருந்து வந்தவைகள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
முன்னை மகரிஷிகள் எழுவரும் நான்கு மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர். அவர்களுடைய மரபினரே இம்மக்களெல்லாரும்.
விளக்கம்:
அக உலகமாக கருதப்படும் உயிர்களின் பாவனைகள் அனைத்தும் என்னிடமிருந்து உண்டாயின என பகவான் சென்ற சுலோகத்தில் கூறினார். இனி புற உலகங்களும் என்னிடமிருந்தே வந்தது எனக் கூறுகிறார்.
=> ரிஷிகளும் மனுக்களும்:
பூர்வே — முதலில் தோன்றிய பூர்வீகர்கள் அல்லது மிக நீண்ட காலத்திற்கு முன்பு வாழ்ந்தவர்கள் எனப் பொருள்படும். ஒரு படைப்பின் தொடக்கத்தில், எடுத்துக்கொள்ளப்படும் ஒரு குறிப்பிட்ட சுழற்சியில், ஏழு மஹரிஷிகள் இருந்தனர் — பிருகு, மரீசி, அத்ரி, புலகர், அங்கிரஸ், கிரது, புலஸ்தியர். இந்த சப்த ரிஷிகளின் பெயர்கள் ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் மாறுபடும்.
ஒரு மன்வந்தரம் என்பது காலக் கணக்கின்படி ஒரு மனுவின் ஆட்சிக்காலம் ஆகும். ஒரு இந்திரனின் கால அளவும் அவ்வளவே. இது எழுபத்தியொரு சதுர் யுகங்களைக் கொண்ட காலம் ஆகும். இது நமது ஆண்டுக்கணக்கில் 306,720,000 ஆண்டுகளைக் கொண்டது. இது போல பதினாங்கு மனுக்கள் ஆளும்காலம் பிரம்மாவின் ஒரு நாள். பிரம்மாவின் ஆயுட்காலம் நூறு ஆண்டுகள் ஆகும்.
புராணங்களின்படி பதினாங்கு மனுக்கள் உள்ளனர் — சுவாயம்புவ, சுவாரோசிஷ, உத்தம, தாமச, ரைவத, சாக்ஷுஷ, வைவஸ்வத, ஸாவர்ணி, தக்ஷஸாவர்ணி, பிரம்மஸாவர்ணி, தர்மஸாவர்ணி, ருத்ரஸாவர்ணி, தேவஸாவர்ணி, இந்திரஸாவர்ணி. அதன்படி, நாம் இப்போது வைவஸ்வத என அழைக்கப்படும் மனுவின் ஆட்சியில் இருக்கிறோம். கீதையின் நான்காவது அத்தியாயத்தில் பகவான், இந்த யோகத்தை நான் விவஸ்வானுக்கு கற்றுக் கொடுத்தேன் எனக் கூறினார். அந்த விவஸ்வானின் மகன் இந்த வைவஸ்வத-மனு ஆவார்.
ஒவ்வொரு மன்வந்தரத்திலும், அதாவது மனுவின் காலத்திலும், அவர்களில் நான்கு பேர் மட்டுமே மக்களை உருவாக்குபவர்கள்(ப்ரஜா:) என்கிற அந்தஸ்தைப் பெறுகின்றனர் — பிரம்மஸாவர்ணி, ருத்ரஸாவர்ணி, தர்மஸாவர்ணி மற்றும் தக்ஷஸாவர்ணி. இந்த நான்கு மனுக்களும் மற்றும் ஏழு ரிஷிகளும் என்னுடைய பிரபாவத்தை உடையவர்கள் என்கிறார் பகவான்.
=> ஈஷ்வர பிரபாவம்:
‘மத்3பா4வா:’ எனில் மனதை என்னிடத்து ஒடுக்கியவர்கள், என் சொரூபமானவர்கள், என் பிரபாவத்தை உடையவர்கள் என்பது பொருள். அதாவது, என்னுடன் ஐக்கியம் அடைந்த ஞானிகள் இவர்கள் என்பதாகும். தங்களுடைய மனதை எப்பொழுதும் பரமேஷ்வரனிடத்தே வைத்திருந்தபடியால் ஈஷ்வர பிரபாவம் அவர்களுக்கு உண்டாயிற்று. மனது எதை உபாசிக்கிறதோ அதன் தன்மைகளை எடுத்துக்கொள்ள வல்லது. ஆகையால்தான் அது ஈஷ்வரனிடத்தே வைக்கப்பட வேண்டும்.
மாநஸா: ஜாதா: — என் மனதிலிருந்து, வெறும் சங்கற்பத்திலிருந்தே பிறந்தார்கள். ஏழு மஹரிஷிகளும் பதினாங்கு மனுக்களில் முக்கியமானவர்கள் நால்வரும் நேரடியாக ஈஷ்வரனுடைய மனதிலிருந்து அவருடைய மானசபுத்திரர்களாக உண்டானார்கள்.
யேஷாம் லோகே இமா: ப்ரஜா: — இவ்வுலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் அவர்களிடதிருந்து உண்டாயின. முதலில் மனுக்கள் தோன்றினர், பின்னர் ரிஷிகள் உருவாக்கப்பட்டனர். பின்னர் ரிஷிகளிலிருந்து ரிஷிகளின் சந்ததிகள் என்றவாறு அவர்களிடமிருந்தே இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களும் மனுவின் ஆணையின் கீழ் பிறக்கின்றன. இதனாலேயே மனிதர்கள் ‘மாநவா:’ என்றழைக்கப்படுகின்றனர். இங்ஙனம் சிருஷ்டிக் கிரமம் நடைபெறுகிறது. ரிஷிகளின் வழிவந்தமையால், அவர்களின் பெயர்களைக் கொண்டே கோத்திரங்களின் பெயர்களும் அமைந்துள்ளது. இவ்விதம், ‘அவைகள் அனைத்தும் என்னிடமிருந்து வந்தவைகள்’ என்கிறார் பகவான்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||10.7|| ஈஷ்வர விபூதி மற்றும் அதன் பலன்:
एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्वत: ।
सोऽविकम्पेन योगेन युज्यते नात्र संशय: ।। ७ ।।
ஏதாம் விபூ4திம் யோக3ம் ச மம யோ வேத்தி தத்த்வத: ।
ஸோऽவிகம்பேந யோகே3ந யுஜ்யதே நாத்ர ஸம்ச1ய: ।। 7 ।।
य: ய: யார் मम மம என்னுடைய एतां विभूतिं ஏதாம் விபூ4திம் இந்த விபூதிகளையும்
योगं च யோக3ம் ச யோகத்தையும் तत्वत: தத்த்வத: உள்ளபடி वेत्ति வேத்தி அறிகிறானோ
स: ஸ: அவன் अविकम्पेन योगेन அவிகம்பேந யோகே3ந அசையாத யோகத்தில்
युज्यते யுஜ்யதே இணைக்கப்படுகிறான் अत्र அத்ர இதில் न संशय: ந ஸம்ச1ய: சந்தேகமில்லை.
எனது விபூதிகளையும் யோகத்தையும் உள்ளபடி அறிகிறவன் அசையாத யோகத்தைச் சார்ந்திடுவான். இதில் சந்தேகமில்லை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இத்தகைத்தாகும் எனது பெருமையும் யோகந்தனையும் உள்ளவாறுணர்வோன் அசைவிலா யோகத்தமர்வான்; இதிலோர் ஐயமில்லை.
விளக்கம்:
ஈஷ்வரனுடைய இத்தகைய வல்லமையைத் தெரிந்துகொள்பவனுக்கு உண்டாவது யாது என்ற கேள்விக்கு விடையாக வருகிறது இந்த சுலோகம்.
=> உள்ளபடி அறிபவன்:
ஏதாம் மம விபூ4திம், இதுவரை சொல்லப்பட்ட என்னுடைய இந்த விபூதிகளையெல்லாம் அறிந்தவன். விபூதி என்பது ஈஷ்வரனிடமிருந்து வெளித்தோற்றத்திற்கு வந்த சக்திகளைக் குறிக்கிறது.
இவைகளுடனான எனது தொடர்பையும் யோக3ம் ச, உள்ளபடி அறிந்தவன், தத்த்வத: வேத்தி, இங்கு பகவானால் விவரிக்கப்படுகிறான். பகவானே இத்தனை விதமான விரிவுகளை அடையவல்லவராதலால் அவை யாவும் அவருடைய விபூதிகளாகின்றன. உண்மையில் பகவானின் சக்தி எல்லையற்றது. அதில் வெளித்தோற்றத்திற்கு வந்தவைகள் மிகவும் சொற்பமே. வெளிப்பட்ட இந்த சிறப்புகளை மட்டுமே நம்மால் அறிய முடிகிறது. அப்படியிருக்க, இத்தனையுமாய் விரிந்தபின் அவர் அவைகளோடு எத்தகைய இணக்கம் வைத்திருக்கிறார் என்பதை ஆராயும்போது அவருடைய யோகம் அறியப்படுகிறது. ஸத்-சித்-ஆனந்த-சொரூபமான ஈஷ்வரன், இந்த வெளித்தோற்றத்திற்கு வந்த விபூதிகளுடன் சத்ய-மித்யா சம்பந்தத்தில் உள்ளார். எந்தவொரு சக்தியும் எதையாவது ஒன்றை சார்ந்துதான் இருக்கமுடியும். இவ்வுலகில் காணப்படுகின்ற இந்த வேறுபட்ட தன்மைக்கு காரணமான மாயை எனும் சக்தியும் பரமாத்மா எனும் ஆதாரத்தை சார்ந்தே உள்ளது. இதில் ஒன்று மட்டுமே சத்யம்; மற்றொன்று மித்யா. எனவே மாயையின் மூலம் மட்டுமே அனைத்து தொடர்புகளும் உண்டாகின்றன; மாயையே பரமாத்மாவையும் வெளித்தோற்றத்திற்கு வந்த எந்தவொரு மஹிமையையும் சம்பந்தப்படுத்துகிறது. இதை அறிந்தவன் சத்ய-மித்யாவை அறிந்தவனாகிறான். இவன் ஈஷ்வர ஞானத்தை உள்ளபடி அடைந்தவனாகிறான்.
=> இத்தகையவன் அடையும் பலன்:
வெவ்வேறு படிநிலைகளில் அடையப்படும் இந்த ஞானம், ஒருவனுக்கு வெவ்வேறு விதங்களில் நன்மை பயக்கின்றது.
(i) அனைத்து பெருமைகளுக்கும் ஆதாரமாக ஈஷ்வரனை ஏற்றுக் கொள்ளும் ஒருவன் பல வகையான உளசிக்கல்களிலிருந்து விடுபடுகிறான். நாம் ஏற்கனவே விசாரம் செய்ததைப் போல, நல்ல திறமையுடைய ஒருவரைப் பார்க்கும்போது, வெறுப்போ, பொறாமையோ, அஹங்காரமோ, பாதுகாப்பின்மையோ தோன்றாது. ஈஷ்வர விபூதியே அவரிடம் இத்தகைய திறமையாக வெளிப்பட்டுள்ளது என்ற மனப்பான்மை ஒரு குறிப்பிட்ட அமைதியையும் அந்தக்கரண-சுத்தியையும் மனதிற்கு ஒருவகையான நிலைத்தன்மையையும் அளிக்கின்றது.
(ii) இனி அடுத்த படிநிலையாக, இந்த மஹிமைகளையும் மற்றும் அவைகள் எவ்வாறு வந்துள்ளன, ஈஷ்வரனுடனான அவைகளின் தொடர்பு யாது போன்றவற்றை அறிந்தவன், அசையாத யோகத்தில் இணைக்கப்படுகிறான் — அவிகம்பேந யோகே3ந யுஜ்யதே, என்கிறார் கிருஷ்ணர். இங்கு ‘யோகம்’ என்பது பார்வையை, தரிசனத்தைக் குறிக்கின்றது. இவன் உறுதியான ஆத்ம ஞானத்துடன் பொருந்துகிறான்; அசைக்க முடியாத தரிசனத்தைப் பெறுகிறான் என்பது பொருள். பரமேஷ்வரனாக ஆத்மாவை தரிசிப்பதில் உள்ள தெளிவானது, ஸம்யக்-தர்ஷண, இவனுக்கு உறுதியாகவும் நன்கு வேரூன்றியதாகவும் இருக்கிறது என சங்கரர் கூறுகிறார். எனவே ஈஷ்வரனுடைய விபூதிகளையும் அதனுடனான அவரது தொடர்பையும் உள்ளபடி பேரறிவுகொண்டு அறிகிறவர்கள் அவரிடத்து தளராத இணக்கம் அல்லது அசையாத யோகம் வைப்பார்கள். தடையற்ற தெளிவான ஆத்ம தரிசனத்தை அடைகிறார்கள்.
=> ஈஷ்வர ஞானம்:
ந அத்ர ஸம்ச1ய: — இதில் சந்தேகமில்லை, என்கிறார். இங்கு பலனை நம்மால் உடனுக்குடன் அனுபவிக்க முடியாததால் சந்தேகம் வரலாம். எனவே இந்த விஷயத்தில் ஐயப்படத் தேவையில்லை எனத் தெளிவுபடுத்துகிறார். ஈசனையும் அவரது மஹிமைகளையும் அதனுடனான அவரது தொடர்புகளையும் சரியாக புரிந்து கொள்வதென்பது சுயத்தை புரிந்து கொள்வதற்குச் சமமாகிறது. ஆத்ம-தரிசனமே ஈஷ்வர-தரிசனம் ஆகும்; வேறெந்த ஈஷ்வர-தரிசனமும் இங்கு இல்லை.
மேலும் ஈஷ்வரனுக்கும் இந்த உலகுக்கும் இடையேயான தொடர்பை புரிதல் என்பது ஈஷ்வரனை இந்த முழு பிரபஞ்சமாகப் புரிதலைக் குறிக்கிறது. இந்த ஜகத்தானது சைத்தன்ய-ஆத்மாவான பரமாத்மாவிலிருந்து தோன்றியுள்ளது; ஆகவே ஜகத் என்ற ஒன்று தனியாக இல்லை, அது ஆத்மாவைச் சார்ந்து தோன்றிக் கொண்டுள்ளது. இந்த தொடர்பு புரிந்து கொள்ளப்படும்போது சத்ய-மித்யா புரிந்து கொள்ளப்படுகிறது. இதுவே ஞானம்; இதுவே விடுதலை; இதுவே மோக்ஷம்.
‘யோகம்’ என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு. எனவே அது இங்கு என்ன பொருளில் பேசப்பட்டுள்ளது என்ற புரிதல் மிக அவசியம். எனவேதான் அதனுடைய பொருளை, சரியான பார்வையை அடுத்த சுலோகத்தில் பகவான் மேலும் விளக்குகிறார்.
அறிவு மட்டுமே அசைக்க முடியாதது. இவ்வுலகிற்கு காரணமானவர் என்று மட்டும் ஈஷ்வரனை அறிந்தால் போதாது. எப்படிப்பட்ட காரணமாக உள்ளார்? உண்மையிலேயே அவர் படைப்பாளியாக இருக்கின்றாரா? இது என்ன மாதிரியான படைப்பு என அனைத்தும் தெளிவாக அறியப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஈஷ்வரனைப் புரிந்து கொள்ளமுடியும். படைப்பாளியான ஈசனைப் புரிய, இந்த சிருஷ்டியின் யதார்த்தத்தைப் பற்றிய மெய்மையை புரிந்து கொள்ளவேண்டும். இந்த ஞானத்தை அடைந்த ஒருவன் அசைக்க முடியாத தரிசனத்தை பெறுகிறான்.
எப்படிப்பட்ட தரிசனம் அசைக்கமுடியாதது என அடுத்த சுலோகத்தில் பகர்கிறார்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
எண்ணெய் இல்லாதுபோனால் விளக்கு எரியாது. அதுபோல ஈஷ்வரனில்லாமற் போனால் மனிதன் ஜீவித்திருக்க முடியாது.
---------------------------------------------------------------------------------------------------------------------