புதன், 10 ஜனவரி, 2024

விபூதி யோகம் 10.4 - 10.5

||10.4|| தனது மஹிமையை விளக்கிக் கூறுகிறார்:

बुद्धिर्ज्ञानमसम्मोह: क्षमा सत्यं दम: शम:

सुखं दु:खं भवोऽभावो भयं चाभयमेव ।। ।।

பு3த்3தி4ர்ஜ்ஞாநமஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் 3: 1:  

ஸுக2ம் து3:2ம் 4வோऽபா4வோ 4யம் சாப4யமேவ ।। 4 ।।


बुद्धि:  பு3த்3தி4:  புத்தி    ज्ञानम्  ஜ்ஞாநம்  ஞானம்    असम्मोह:  அஸம்மோஹ:  மோஹமின்மை   

क्षमा  க்ஷமா  பொறுமை    सत्यं  ஸத்யம்  சத்தியம்   दम:  3:  புறக்கரணங்களை அடக்குதல்    

शम:  1:  உள்ளத்தை அடக்குதல்    सुखं  ஸுக2ம்  சுகம்     दु:खं  து3:2ம்  துக்கம்    भव:  4:  பிறப்பு   अभाव:  அபா4:  அழிதல்    भयं   4யம்   பயம்   अभयम् एव   அப4யம் ஏவ   பயமின்மையும்


புத்தி, ஞானம், மோஹமின்மை, பொறுமை, சத்தியம், அடக்கம், அமைதி, இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, அஞ்சுதல், அஞ்சாமை (அனைத்தும் என்னிடத்திருந்தே உண்டாகின்றன).


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

மதியும், ஞானமும், மயக்கமின்மையும், பொறுத்தலும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், அச்சமும், அஞ்சாமையும், ...


விளக்கம்:

உலகனைத்திற்கும் நானே தலைவன் என தனது மஹிமையின் தன்மையைச் சென்ற சுலோகத்தில் கூறியிருந்தார். அதை இனி விளக்க ஆரம்பிக்கிறார். மனிதனின் பார்வையில் உலகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (1) பாஹ்யம் - வெளி உலகம், (2) ஆந்தரம் - உள் உலகம், அதாவது மனதினால் அனுபவிக்கப்படுபவை. நான்கு மற்றும் ஐந்தாவது சுலோகத்தில் பகவான் அந்தக்கரணத்தின் தர்மங்களாக விளங்கும் அறிவு, பண்புகள், உணர்வுகள் மற்றும் குணங்கள் முதலிய உள்ளுலகமான ஆந்தர சிருஷ்டியைப் பற்றிக் கூறி, இவை அனைத்தும் என்னிடத்திருந்தே உண்டாகின்றன என்கிறார்.


=> உயிர்களின் குணங்களுக்குக் காரணமானவர் பகவான்:

பு3த்3தி4:புத்தி. நுண்ணிய விஷயங்களைப் புரிந்து கொள்ளும் சக்தி, நுண்ணறிவு மற்றும் ஆழ்ந்த கருத்துக்களை வாங்கவல்ல அந்தக்கரணம். இத்தகைய புத்தியை உடையவனை புத்திமான் என்றழைக்கிறோம்


ஜ்ஞாநம்ஞானம். ஆத்மா உள்ளிட்ட வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும் அறிவு; ஆத்மாவை அறியவல்ல இயல்பு. ஒரு பொருளை அறியும்போது உண்டாகும் அறிவு, ஞானம் எனப்படும். அந்த அறியும் திறனும் அதனால் தோன்றுகிற அறிவும் என்னிடமிருந்தே உண்டாகின்றன என்கிறார். இதனால் ஒருவனின் அஹங்காரம் தளர்வை அடைந்து நாசமாகிறது.


அஸம்மோஹ:மோஹமின்மை. மனதில் தெளிவு, எந்த நெருக்கடியிலும் மனக் குழப்பம் ஏற்படாமை மற்றும் சஞ்சலமில்லாமை அஸம்மோஹம் ஆகும். எந்த மனக்குழப்பமோ அல்லது சிதைவோ இல்லாமல், ஒரு பொருள் அவ்விதமே அறியப்பட்டால் அது அஸம்மோஹம் ஆகும். பகுத்தறியாமல் அவசரமாக முடிவெடுக்கப்படுமேயானால் அது ஸம்மோஹம் எனப்படும். உதாரணமாக, தெளிவான சிந்தனையில்லாது, குழப்பம் மற்றும் பயத்தின் காரணமாக, கயிற்றைப் பார்த்து பாம்பு என அலறுவது ஸம்மோஹம் ஆகிறது. புலன்களும் மனமும் ஒருவனை ஏமாற்றும் தன்மையுடையது என்பதை புரிந்துகொண்டு, பயம் மற்றும் பதட்டத்தின் காரணமாக இல்லாத ஒன்றை உருவாக்காமல், இருப்பதை உள்ளவாறே அறிகின்ற மனத் தெளிவு, அஸம்மோஹம் எனப்படுகிறது. அதுவும் என்னிடத்திருந்தே உண்டாகிறது.


க்ஷமாபொறுமை அல்லது பிறரால் தாக்கப்படும்போதும் மனம் நோகாதிருத்தல். அதாவது, ஒருவன் நம்மை திட்டும்போதும் அவமானப்படுத்தும்போதும் அதனால் பாதிக்கப்படாதிருத்தல், கஷ்டமான சூழ்நிலையில் மனம் விகாரமடையாதிருத்தல்ஸங்கடே அவிக்ருத சித்ததா, பொறுமை எனப்படுகிறது. எதையும் அகநிலைப்படுத்தாமல் அணுகுதல் பொறுமை ஆகும். உதாரணமாக கோபம் கொண்ட ஒருவனை சமாளிக்கும் செயல்பாட்டில், நாமே கோபத்தை அடையும்போது அந்த சிக்கலை உள்மயமாக்குகிறோம் என்பதாக ஆகிறது. அவன் ஏன் கோபமாக இருக்கிறான் என்பதை புரிந்துகொண்டு அதற்கு செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்வது என்பது அதைச் சரியாக கையாள்வதாக ஆகும். பொறுமை எனும் குணத்தையுடைய ஒருவனாலேயே எந்தவொரு விவகாரத்தையும் உள்மயமாக்காமல் கடந்து செல்ல முடியும்.


ஸத்யம்வாய்மை. பார்த்தும் கேட்டும் அனுபவித்தும் அறிந்தவைகளை அப்படியே பிறர்க்கெடுத்துப் பகர்தல் சத்தியம் ஆகும். எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்ல வேண்டுமென்பது இதன் பொருளல்ல. அது அவசியமுமில்லை. ஆனால் நம்மால் ஒன்று சொல்லப்படும்போது அது நேர்மையானதாக இருக்கவேண்டும். நம்மால் நேரடியாக அறியப்பட்டதை அல்லது மற்றவர்களின் மூலமாக என்ன கேள்விபட்டோமோ அதை அப்படியே உண்மையாகப் பகிர்தல் வேண்டும். இந்த தார்மீக ஒழுக்கமும் பகவானிடமிருந்து உண்டானது என்கிறார்.


3:இந்திரிய ஒழுக்கம். புறக்கரணங்களாகிய மெய், வாய், கண், மூக்கு மற்றும் செவி ஆகியவைகள அடக்குதல்3:ஆகும். ஒன்றைக் குறித்த எண்ணம் மனதில் உருவான பின்னரும் அது செயலாக வெளிப்படாமல் புலன்களைக் கட்டுப்படுத்தும் திறன், புலனடக்கம் எனப்படுகிறது


1:உள்ளத்தை அடக்குதல். அந்தக்கரணங்களாகிய மனம், புத்தி மற்றும் அஹங்காரம் ஆகியவைகளிடத்து அமைதியேற்படுதல். எவ்வகையில் சிந்தித்தல் வேண்டும் என்பதிலுள்ள தேர்ச்சி மனஒழுக்கம் ஆகும். தீங்கு விளைவிக்கும் எண்ணங்கள் அல்லது பயனற்ற சிந்தனைகளுக்கு அடிபணியாமல் அதை தவிர்க்கக்கூடிய பயிற்சி மனக் கட்டுப்பாட்டை வளர்க்கிறது. நமக்கும் மனதுக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியை கொடுத்துப் பழக்குவதன் மூலம் இது சாத்தியப்படுகிறது. மன ஒழுக்கம் இருக்கும்போது, இந்திரிய ஒழுக்கம் தானாக வந்தமைகிறது


ஸுக2ம்இன்பம், மனதில் உண்டாகும் மகிழ்ச்சி. விரும்பியதை அடையும்போது ஒருவன் மனமகிழ்ச்சியை அடைகின்றான். ஒருவனின் பெருமையை அதிகரிக்கும் வகையில் விரும்பத்தக்கவைகள் என எது கிடைக்கும்போதும், அதில் அவனுடைய சாதனை என எதுவுமில்லை. எல்லாம் பகவானின் மஹிமை. எதை நீ சாதித்தாலும் அது எனக்குச் சொந்தமானது, எனது புகழ், எனது சிறப்பு என்கிறார் பகவான்.


து3:2ம்துன்பம். தனியொருவனின் இன்பம் மட்டுமல்ல துன்பமும் கூட தன்னிடமிருந்தே வந்ததாக பகவான் கூறுகிறார். அனைத்து துயரமும் கர்மவினையின்படி வந்து சேருகின்றன. அந்த நியதியாகவும் அதை கொண்டு சேர்ப்பவனாகவும் மட்டுமல்லாமல் அந்த துன்பமும் என்னிடத்திருந்தே உண்டாகின்றன


4:படைப்பு, பிறப்பு. எந்தப் படைப்பும் என்னிடமிருந்தே உருவாகின்றது. நீங்கள் ஒரு குழந்தைக்குத் தந்தையாக இருந்தாலும், அந்தக் குழந்தை உங்களால் பிறந்தது என்று சொன்னாலும், அது என்னிடமிருந்து பிறந்தது என்கிறார் பகவான். ஆகவே, நான் உருவாக்கியவன் என்று யாராவது நினைத்தால் அது அர்த்தமற்றது. கோழிக்குஞ்சுகளை உருவாக்கியதாக கோழி நினைக்கலாம், நானே உரிமையாளனன் என சேவல் சொல்லலாம். ஆனால் பகவான், ‘நானே உரிமையாளன்என்கிறார். இந்த பேரண்ட சிருஷ்டிக்குள் தோன்றும் எந்தவொரு சிறிய படைப்பும் கூட பகவானிடமிருந்துதான் வருகின்றது, என்பதைக் குறிக்கின்றது.


அபா4:அழிவு, மரணம். பொதுவாகஅபா4என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. ‘எனும் முன்னொட்டு, முழுமையாக இல்லை(அபா4வார்த) என்ற பொருளைக் கொடுக்கிறது. அல்லது இச்சொல்லை, போதாமை(அல்பார்த) என்ற பொருளிலோ அல்லது எதிர்மறையை(விபர்யயார்த) குறிக்கும் பொருளிலோ பயன்படுத்தலாம். உதாரணமாக, வெளிச்சம் இல்லை எனக் கூறும்போது, அது இருளைக் குறிக்கலாம் அல்லது போதிய வெளிச்சம் இல்லாமையைக் குறிக்கலாம். இங்கு சங்கரர் எதிர்மறைப் பொருளைக் எடுத்துக் கொள்கிறார், ஏனெனில் இதற்குமுன் படைப்பு கூறப்பட்டது. எனவே அடுத்ததாக அதற்கு எதிர்மறையான அழிவும்கூட பகவானிடமிருந்தே உண்டாகின்றன எனக் கூறப்படுகிறது. அழிவு என்பது உருவாக்கப்பட்ட ஒன்றை அழிப்பதாகும். வாழ்க்கையை நிர்வகிக்கும் ஒரு நியதி உள்ளது. அந்த நியதியின் காரணமாகவே வாழ்க்கை தொடங்கி, தொடர்ந்து சென்று, பின்னர் முடிவையும் அடைகிறது. அந்த மரணமும் என்னிடமிருந்தே உண்டாகின்றன, என்கிறார் பகவான்.


4யம் பயம். உயிர்களின் முக்கிய உணர்வுகளில் ஒன்றான அச்சமும் என்னிடத்திருந்தே உண்டாகிறது என்கிறார் பகவான். இந்த சிருஷ்டியின் பரந்த தன்மையும் மற்றும் அதன் மாற்ற முடியாத சில நியதிகளும் ஒருவனுக்கு பயத்தைத் தருகின்றது. இந்த மாற்ற முடியாதவைகளில் மரணமும் காலமும் அதிக பயத்தை கொடுப்பவைகள் ஆகும். காலத்தையும் மரணத்தையும் மாற்ற முடியாது, அதே சமயத்தில் தவிர்க்கவும் முடியாது. இந்த நினைப்பே பயத்தை தோற்றுவிக்கின்றது. பய-காரணமாகவும் பகவானே இருக்கின்றார்

தைத்திரீய உபநிஷதத்தில், ஈஷ்வரனின் மீதுள்ள பயத்தினால்தான் காற்று நகர்கின்றது, சூரியன் உதிக்கின்றது எனக் கூறப்படுள்ளது. ஈஷ்வரனின் கட்டளையினால்தான் அக்னியும் இந்திரனும் அவரவர்களின் செயல்களைச் செவ்வனே செய்கின்றனர். மரணத்தின் அதிபதியான யமனும்கூட ஈஷ்வரனின் ஆணையின்படியே நகர்ந்துகொண்டிருக்கின்றார், எனக் கூறப்படுகின்றதுபீ4ஷாஸ்மாத்3 வாத: பவதே பீ4ஷோதே3தி சூர்ய: பீ4ஷாஸ்மாத்3 அக்நிச்1சந்த்3ரச்1 ம்ருத்யுர்தா4வதி பஞ்சம இதி


அப4யம்பயமின்மை. அதே ஈஷ்வரனே பயமின்மைக்கும் காரணம் என்கிறார். அச்சம் மற்றும் அச்சமின்மை இரண்டும் பகவானிடமிருந்தே வந்தவைகள். ஈஷ்வரனைப் பற்றிய ஞானம் இல்லாதபோது இந்த முழு உலகமும் தன்னிடமிருந்து வேறானதாக தெரிவதால் பயம் உண்டாகின்றது. ஈஷ்வரனை அறிதல் என்பது இந்த அனைத்து படைப்பையும் ஈஷ்வரனாக அறிதலாகும். இந்த அறிவின் காரணமாக தன்னிலிருந்து வேறானவராக இறைவனைப் பார்க்காதபோது பயமின்மை உண்டாகின்றது

இந்த அனைத்து உணர்வுகளும் எனது படைப்பாகும். மேலும் சில பண்புகளைக் கூறி, எதுவும் என்னிடமிருந்து வேறானதாக இல்லை என்பதை அடுத்த சுலோகத்திலும் தொடர்கிறார்

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.5|| உள்ளுலகமான மனதின் தன்மைகளும் என்னிடமிருந்தே உண்டாகின்றன என்பதன் தொடர்ச்சி:

अहिंसा समता तुष्टिस्तपो दानं यशोऽयश:

भवन्ति भावा भूतानां मत्त एव पृथग्विधा: ।। ।।

அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்தபோ தா3நம் யசோ1ऽயச1:

4வந்தி பா4வா பூ4தாநாம் மத்த ஏவ ப்ருத2க்3விதா4: ।। 5 ।।


अहिंसा  அஹிம்ஸா  துன்புறுத்தாமை    समता  ஸமதா  மனதின் நடுநிலை    तुष्टि:  துஷ்டி:  திருப்தி    

तप:  தப:  தவம்    दानं  தாநம்  தானம்     यश:  யச1:  புகழ்    अयश:  அயச1:  இகழ்ச்சி    

पृथग्विधा:  ப்ருத2க்3விதா4:   பலவிதங்களான    भावा:  பா4வா:  தன்மைகள்    

भूतानां  பூ4தாநாம்  உயிர்களுக்கு    मत्त: एव  மத்த ஏவ  என்னிடத்திருந்தே    भवन्ति  4வந்தி  உண்டாகின்றன.


துன்புறுத்தாமை, மனதின் நடுநிலை, திருப்தி, தவம், தானம், புகழ், இகழ்ச்சி ஆகிய பலவிதமான தன்மைகள் உயிர்களுக்கு என்னிடத்திருந்தே உண்டாகின்றன.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், ஈகையும், தவமும், இகழும், புகழும், இங்ஙனம் பலமிடுமியல்புகளெல்லாம் என்னிடம் பெறுவன உயிர்கள்.


விளக்கம்:

உயிர்களின் பலவிதமான தன்மைகளை சென்ற சுலோகத்தில் பகவான் கூற ஆரம்பித்தார். அதை இந்த சுலோகத்திலும் தொடர்ந்து கூறி, இதுபோன்ற அனைத்துவிதமான குணங்களும் என்னிடமிருந்தே உண்டாகின்றன. நானே அனைத்திற்கும் காரணகர்த்தாவாக இருக்கின்றேன் என்கிறார்

அஹிம்ஸாதுன்புறுத்தாமை, ஓருயிர்க்கும் தீங்கு செய்யாமைஎவ்விதம் நம்மை ஒருவர் மனதாலோ உடலாலோ சொல்லாலோ காயப்படுத்துவதை நாம் விரும்புவதில்லையோ அதுபோல மற்றவர்களையும் நாம் புண்படுத்துவதை தவிர்த்தல் அஹிம்சை ஆகும். அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக விளங்க வேண்டிய இந்த தார்மீக ஒழுக்கமும் பகவானிடமிருந்தே உண்டாகின்றது


ஸமதாமனதின் நடுநிலை. சமமான அமைதியான மனநிலை, விருப்பு வெறுப்புகளை விளைவிக்கும் செயல்களுக்கிடையில் மனது நடுநிலை பிறழாதிருத்தல்ஸமதாஆகும்


துஷ்டி:திருப்தி, போதுமென்ற மனநிலை. பொதுவாக, விருப்பப்பட்ட ஒன்றை அடையும்போது திருப்தி உணர்வு வந்துவிடும் எனக் கூறவிடமுடியாது. அது பேராசைக்கும் ஆதாரமாக அமையலாம். அடைய அடைய இன்னும் அதிகம் வேண்டும் என்ற எண்ணம் மேலெழலாம். அதற்கு எதிர்மறையாக, எந்தவொரு லாபம் கிடைக்கும்போதும்இது போதும்என்ற திருப்தி கொடுக்கிற மனநிறைவு, துஷ்டி எனப்படும்லாபேஷு பர்யாப்த புத்தி:. இதுஅலம்புத்தி:என்றும் அழைக்கப்படுகிறது.

தப:தவம். புலன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடலை ஒழுங்குப்படுத்துவது தபஸ் என சங்கரர் கூறுகிறார். மத மற்றும் ஆன்மீக நோக்கத்திற்காகவென உடலிற்கும் மனதிற்கும் விரும்பிக் கொடுக்கும் ஆக்கப்பூர்வமான வேதனை தவம் ஆகும். இதுபோன்ற மனமுவந்து அனுபவிக்கும் எந்தவொரு சிரமமும் நம்மை பலப்படுத்துகிறது. இந்த தவமும் என்னிடமிருந்தே உண்டாகின்றது என்கிறார் பகவான்

கடைபிடிக்கப்படும் ஒவ்வொரு ஒழுக்கமும் ஒரு குறிப்பிட்ட பலன்களைத் தருகின்றன. சாதனங்களையும் அதற்கான பலன்களையும் இணைக்கும் அந்த நியதி பகவானுடையது ஆகும். தபஸ் என்பது சாதனம், பலன் என்பது சாத்யம், இந்த தவத்தின் பலனாக இது கிடைக்கும் என்கிற மாறாத நியதி, அந்த சாதன-சாத்ய தொடர்பு ஈஷ்வரனுடையது.


தாநம்ஈகை, பிறருக்கு கொடுக்க வேண்டுமென்ற புத்தி. சிலர், இனி இது தனக்குப் பயன்படாது என்ற உறுதி ஏற்பட்ட பின் அதை பிறருக்கு அளிப்பார்கள். அதுவல்ல தானம். தனக்குப் பயன்படும் பொருள்களை மற்றவர்களுக்கு உவந்தளித்தல் ஈகையின் வெளிப்பாடு ஆகும். இங்கு சங்கரர் இனியொரு சுவாரஸ்யமான தகுதியைப் பற்றிக் குறிப்பிடுகிறார். கொடுத்தல் என்பது ஒருவனுடைய திறனுக்கு ஏற்ப இருத்தல் வேண்டும்; அதில் அவன் வரம்பு மீறக்கூடாது. ஒருவனது வரம்பை மீறிய தானம் என்பது அவனை பிறரிடம் தானம் பெறும் நிலைக்குத் தள்ளிவிடும். எனவே தன்னால் கொடுக்க இயன்ற அளவு தானம் செய்யலாம். தானம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு முதிர்ச்சியும், பணிவும் கலாசாரமும் தேவை. கொடுக்க மனம் வராத சிலர் உள்ளனர். சிலர் கொடுத்துவிட்டு அதைக் குறித்து எப்பொழுதும் புலம்பியும் புகார் கூறிக்கொண்டும் இருப்பார்கள். வேறு சிலர், கொடுத்துவிட்டு அதை தனது புகழுக்காகப் பயன்படுத்திக் கொள்வார்கள். இனி இதை தன்னால் உபயோகப்படுத்த முடியாது என்ற நிலையில் அதை பிறருக்கு கொடுத்துவிட்டு அச்செயலை தானம் எனக் கூறுபவர்களும் உண்டு. ஒரு சிலரே கொடுத்துவிட்டு, அதை மறக்ககூடியவர்களாக இருக்கின்றனர்; இதுவே உண்மையில் தானம் எனப்படும். தானம் கொடுப்பதில் இனியொரு முக்கியமான காரணியும் உண்டு. பாத்திரம் அறிந்து கொடுப்பது, பெறுவதற்குரிய தகுதி உள்ளவர்களுக்கு கொடுப்பதே சரியான தானம் ஆகும். யாருக்கு கொடுத்தால் அது பின்னாளில் நமக்குப் பயனுள்ளதாக இருக்கும் என கணக்கிட்டு, உறவினர்களுக்கு நண்பர்களுக்கு என வேண்டப்பட்டவர்களுக்கு கொடுப்பது தானம் ஆகாது. சரியான விநியோகம் (சமவிபா43) என்கிறார் சங்கரர். விநியோகத்தில் உள்ள உரிமை என்பது பெறுநரின் சரியான தேர்வைக் குறிக்கிறது.


யச1:புகழ், நம்மிடமுள்ள நல்ல பண்பு மற்றும் தர்மம் காரணமாக வரும் புகழ். தர்மத்திலிருந்து தோன்றும் புகழே உண்மையான புகழ்ச்சி, எனவே தர்ம-நிமித்த-கீர்த்தி என்கிறார் சங்கரர். ஒருகால் ஒருவன் லட்சக் கணக்கில் போதைப் பொருளை விநியோகம் செய்கிறான் என வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் அவன் அத்தகைய மனிதர்களுக்கு மத்தியில் புகழ் பெறலாம். ஆனால் இங்கு குறிப்பிடப்படுவது அத்தகைய புகழ் அல்ல; தார்மீக செயலின் காரணமாக உண்டாகும் கீர்த்தி குறிப்பிடப்படுகிறது. இதுவும் பகவானிடமிருந்தே உண்டாகின்றது.


அயச1:இகழ்ச்சி. இது ஒருவகையில் கெட்ட புகழ் எனக் கூறலாம். இங்குஎனும் முன்னொட்டு எதிர்மறைப் பொருளை(விபர்யய) தருகின்றது. முறையற்ற செயலால் கிடைக்கின்ற புகழ், இகழ்ச்சி ஆகும்அதர்ம-நிமித்த-கீர்த்தி. தீவிரவாதம், கொலை, கொள்ளை, கடத்தல் முதலிய தவறான செயல்களைச் செய்து பிரபலமானவர்களும் உள்ளனர். எந்தவொரு நாணயத்திற்கும் இருபக்கமுண்டு. புகழ் என்னிடமிருந்து வந்ததாக பகவான் கூறினார். எனில் இகழ் எப்படிப்பட்டது எனும் கேள்வி வரும்போது, அதுவும் என்னிடமிருந்தே வந்துள்ளது என்கிறார் பகவான்


=> அனைத்தும் என்னிடமிருந்து வருகின்றன:

இதுவரை பகவானால் குறிப்பிடப்பட்ட இந்த பலவிதமான தன்மைகள் அனைத்தும் உயிரினங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக இருக்கின்றது. அனைத்தும் பலவாகவும் மாறுபட்டவையாகவும் உள்ளனப்ருத2க்3விதா4:. எல்லா ஜீவராசிகளுக்கும் விதவிதமான பாவனைகள் என்னிடமிருந்தே உண்டாகின்றனபூ4தாநாம் ப்ருத2க்3விதா4: பா4வா: மத்த ஏவ 4வந்தி, என்கிறார். பகவானிடமிருந்து வந்தது எனில் இதை எப்படி புரிந்து கொள்வது? தனது தனிப்பட்ட இச்சையின் காரணமாக சிலருக்கு புகழும் சிலருக்கு இகழும் என பகவான் விநியோகித்தாரா எனில் இல்லை என்கிறார் சங்கரர். இந்த பாவனைகள் அனைத்தும் அவரவர்களின் கர்மவினைக்கும் முயற்சிக்கும் ஏற்ப வருகின்றதுஸ்வகர்ம-அநுரூபேந. கர்மத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தபோதிலும் பகவானிடம் எந்த பாரபட்சமும் இல்லை என்பதை விளக்க இந்த வார்த்தையை அறிமுகப்படுத்துகிறார். இவையனைத்தும் ஈசனிடமிருந்து வந்தபோதிலும் அது கர்ம நியதியின்படி, கடந்த கால கர்மவினை மற்றும் தற்போதைய முயற்சி இவைகளின் பலனிற்கு ஏற்றார்போல அவர்கள் அதை பகவானிடமிருந்து பெறுகிறார்கள். ஒரே மின்சார தத்துவம் எப்படி அடுப்பு, விசிறி, விளக்கு, இயந்திரம் என கருவிகளின் அமைப்புக்கு ஏற்றவாறு வெவ்வேறு விதமாக உபயோகப்படுகிறதோ அதுபோல மேற்சொன்ன விபூதிகளை ஜீவர்கள் ஈஷ்வரனிடமிருந்து அவரவர்களின் வினைக்கேற்றபடி வாங்கிக் கொள்கின்றனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------