||10.8|| அசையாத யோகம் என்றால் என்ன?
अहं सर्वस्य प्रभवो मत्त: सर्वं प्रवर्तते ।
इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विता: ।। ८ ।।
அஹம் ஸர்வஸ்ய ப்ரப4வோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே ।
இதி மத்வா ப4ஜந்தே மாம் பு3தா4 பா4வஸமந்விதா: ।। 8 ।।
अहं அஹம் நான் सर्वस्य प्रभव: ஸர்வஸ்ய ப்ரப4வ: அனைத்திற்கும் பிறப்பிடம்
मत्त: மத்த: என்னிடத்திருந்து सर्वं ஸர்வம் யாவும் प्रवर्तते ப்ரவர்ததே பிரவிருத்திக்கிறது
इति मत्वा இதி மத்வா இப்படி அறிந்து बुधा: பு3தா4: அறிஞர்கள்
भावसमन्विता: பா4வஸமந்விதா: அன்பு உணர்வோடு கூடி मां भजन्ते மாம் ப4ஜந்தே என்னை நாடுகிறார்கள்.
நான் அனைத்திற்கும் பிறப்பிடம். யாவும் என்னிடத்திருந்தே விரிகின்றன. இதை அறியும் ஞானிகள் என்னை அன்புடன் நாடுகிறார்கள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
நான் அனைத்திற்கும் தொடக்கம். என்னிடமிருந்தே எல்லாம் இயலும். இங்ஙன முணர்ந்த புலவர் என்னை அன்புடன் தொழுவார்.
விளக்கம்:
அஹம் ஸர்வஸ்ய ப்ரப4வ: — நான் அனைத்திற்கும் பிறப்பிடம், என்கிறார் பகவான். இங்கு ‘அஹம்’ என்பது பரப்ரம்மத்தைக் குறிக்கின்றது. ‘ப்ரப4வ’ எனில் படைப்பின் ஆதாரம், தோற்ற காரணம். நவீன காலப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வேறொருவரின் பொறுப்பில் வளர்ப்பதைப் போல, ஒருகால் பகவான் எல்லாவற்றையும் உருவாக்கி, அதை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை வேறொருவருக்கு அளித்திருக்கலாம் என்ற எண்ணம் எழலாம்.
அதை நிராகரிக்கும் விதமாக, என்னாலேயே அனைத்தும் நிலைபெறுகின்றன — மத்த: ஸர்வம் ப்ரவர்ததே, என்கிறார். ‘ப்ரவர்ததே’ எனும் சொல்லிற்கு ‘நிலைபெறுதல்’ அல்லது ‘பிரவிருத்தித்தல்’ எனப் பொருள் கூறலாம். ‘நிலைபெறக் காரணம்’ எனும் அர்த்தத்தை எடுத்துக் கொள்ளும்போது, இந்த உலகம் தொடர்ந்து இருப்பதற்கு காரணமானவனாக நான் இருக்கின்றேன். இங்கு தொடர்ந்து இருப்பது அல்லது நிலைபெறுவது என்பது தொடர்ந்து மாற்றத்தை அடைந்து நிலைத்திருப்பதைக் குறிக்கின்றது. ஒரு குறிப்பிட்ட உருவாக்கப்பட்ட பொருளை எடுத்துக் கொண்டால் அது சிறிது சிறிதாக மாற்றத்திற்கு உள்ளாகி இறுதியாக இல்லாமல் போதல் என்ற கடைசி கட்ட மாறுதலை அடைகிறது. மனித உடலும் அவ்விதமே. இந்த முழு உலகமும் அதன் இருப்பு, மாற்றம் மற்றும் சிதைவு மூலம் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. இவ்விதமாக சிருஷ்டியின் தோற்றத்திற்கு மட்டுமல்ல, அதனுடைய நிலைபெறுதலுக்கும் நானே காரணமாக உள்ளேன். எந்த ஒன்றும் அதுவாக இருக்க நானே காரணம், என்கிறார்.
இனியொரு பொருளான ‘பிரவிருத்தித்தல்’ எனில் விரிதல் ஆகும். என்னிடமிருந்தே அனைத்தும் வந்துள்ளது. அதாவது ‘ப்ரப4வ:’ என்பது நிமித்த காரணத்தையும், ‘ப்ரவர்ததே’ என்பது உபாதான காரணத்தையும் குறிக்கின்றது. இது ஈஷ்வரனை அறியும் படிகளைக் குறிக்கின்றது.
=> படிப்படியான அறிவு:
எந்தவொரு அறிவையும் படிப்படியாகத் தான் அடையமுடியும். ஈஷ்வரன் எப்படிப்பட்டவர் எனும் ஞானத்தின் படிகள் இந்த சுலோகத்தில் கூறப்பட்டுள்ளது.
(1) நிமித்த காரணம்: இவ்வுலகின் காரணகர்த்தா ஈஷ்வரன் — ஜகத் கர்த்தா ஈஷ்வரன். முதலில், ஈஷ்வரனே இந்த உலகை படைத்தவர் என அறிமுகப்படுத்தப்படுகிறது.
(2) உபாதான காரணம் + நிமித்த காரணம்: ஈஷ்வரனே இந்த ஜகத்தின் பொருள்காரணமாகவும் இருக்கிறார் — ஜகத் ஈஷ்வர ரூபேந பரிணதம். அடுத்த நிலையில், இந்த உலகின் பொருள்காரணமாகவும் ஈஷ்வரனே இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. உதாரணமாக, சிலந்தி வலைக்கு சிலந்தியே உருவாக்குபவனாகவும், அதன் பொருள்காரணமாகவும் இருப்பதைப் போல.
(3) விவர்த உபாதான காரணம்: உண்மையில் எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாத, ஸத்-வஸ்துவான, ப்ரம்மாகிய ஈஷ்வரனிடத்தில் பொய்யாக உலகம் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது — ஈஷ்வரே ஜகத் பா4தி. இறுதி நிலையில், உலகம் என்ற ஒன்று உண்மையில் இல்லை; அது கானல் நீரைப் போல, கயிற்றில் பாம்பைப் போல பொய்யான தோற்றம் எனக் கூறி உலகத்தின் உண்மைத் தன்மை நிராகரிக்கப்படுகிறது.
இங்கு (1) மற்றும் (2) எனும் படிகள், இந்த சுலோகத்தில் ‘ப்ரப4வ:’ மற்றும் ‘ப்ரவர்ததே’ எனும் சொல்லின் மூலம் குறிக்கப்படுகின்றது.
=> தெளிவான அறிவை உடையவர்கள்:
இதி மத்வா பு3தா4: மாம் ப4ஜந்தே — இவ்விதம் அறிந்து ஞானிகள் என்னை நாடுகிறார்கள். ‘ப4ஜந்தே’ எனில் பஜிக்கிறார்கள், நாடுகிறார்கள், தொழுகிறார்கள். ‘பு3தா4:’ எனில் அறிவுடையவர்கள், அறிஞர்கள், சம்சாரத்தை ‘அஸாரம்’ என புரிந்த ஞானிகள். ‘அஸாரம்’ எனில் அடையும் வரை பெரிதாகவும் முக்கியமானதாகவும் தெரிந்தாலும் அடைந்த பின்னர் இவ்வளவுதானா என்கிற மனப்பான்மையுடன் மனமானது வேறொன்றை நோக்கிச் செல்லும் தன்மை. இவ்வுலக இன்பம் எதுவும் ஸாரமற்றது; முழு திருப்தியை கொடுக்க இயலாதது. இந்த யதார்தத்தை அறிந்தவர்கள் ஞானிகள் ஆவர். மேலும், எல்லாவற்றின் உண்மையும் பரமாத்மாவைத் தவிர வேறில்லை — அவக3த-பரமார்த-தத்வ:, என அறிந்தவர்களை இங்கு ஞானிகள் என சங்கரர் வரையறுக்கிறார். இத்தகையவர்கள் என்னை அங்கீகரிக்கின்றனர், அறிகின்றனர், அடைகின்றனர்.
பகவான், ஞானிகளை ‘பா4வ’த்துடன் கூடியவர்கள், பா4வஸமந்விதா:, என விவரிக்கிறார். ‘பா4வ’ என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு. இவர்கள் அன்பு உணர்வோடு கூடியவர்கள், பக்தர்கள், பக்தியில் உச்ச நிலையை அடைந்தவர்கள் எனலாம். பயன்படுத்தப்பட்டுள்ள இந்த சூழலில் அது தரிசனத்தைக் குறிக்கிறது. ‘நான் ப்ரம்மன்’ என்ற மெய்மையைக் குறித்த திட்டவட்டமான புரிதலைக் குறிக்கின்றது. ‘ஜகத் காரணமாக விளங்கும் இந்த எல்லையற்ற ப்ரம்மம் நானாகவே இருக்கின்றேன்’ என்கிற தெளிவான பார்வையை உடையவர்கள் ‘பா4வஸமந்விதா:’ எனப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் என்னை அடைகிறார்கள். ஈஷ்வரனும் பரம் ப்ரம்ம, ஜீவனும் பரம் ப்ரம்ம. இவ்விதம் ஈஷ்வரனுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையில் எந்த அடிப்படை வேறுபாடும் இல்லாததால் அவர்கள் என்னுடன் ஒன்றிவிடுகிறார்கள் என்கிறார்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||10.9|| மேற்சொன்ன பக்தர்கள் எப்படி வாழ்கிறார்கள்:
मच्चित्ता मद्गतप्राणा बोधयन्त: परस्परम् ।
कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च ।। ९ ।।
மச்சித்தா மத்3க3தப்ராணா போ3த4யந்த: பரஸ்பரம் ।
கத2யந்தச்1ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச ।। 9 ।।
मच्चित्ता: மச்சித்தா: என்னிடம் சித்தத்தை வைத்தவர்கள்
मद्गत प्राणा: மத்3க3த ப்ராணா: உயிரை என்பால் செலுத்தியவர்கள்
परस्परम् பரஸ்பரம் ஒருவருக்கொருவர் बोधयन्त: போ3த4யந்த: விளக்கிக் கொள்வார்கள்
नित्यं நித்யம் எப்பொழுதும் कथयन्त: च मां கத2யந்த: ச மாம் என்னைப் பற்றியே பேசிக் கொள்பவர்களாயும் तुष्यन्ति च துஷ்யந்தி ச திருப்தியடைகிறவர்களாயும்
रमन्ति च ரமந்தி ச ஆனந்தமடைபவர்களாயும் ஆகிறார்கள்.
சித்தத்தை என்பால் வைத்து, உயிரை எனக்குரியதாக்கி, ஒருவருக்கொருவர் என்னை விளக்கிக் கொண்டும், எப்பொழுதும் என்னைப் புகழ்ந்து பேசியும் மனநிறைவடைந்தும் மகிழ்வடைந்தும் இருக்கின்றனர்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அகத்தினை என்பால் வைத்து, உயிரை என்னுள்ளே புகுத்தி, ஒருவரை யருவர் உணர்விப்பாராய், எக்காலுந் தம்முள் என்னைக் குறித்தியம்புவார்; அன்னோர் மகிழ்ச்சியும் இன்பமும் அடைவார்.
விளக்கம்:
சென்ற சுலோகத்தில் பகிரப்பட்ட, பக்தியின் உச்சநிலையை அடைந்த பக்தர்களின் வாழ்க்கை இங்கு கூறப்படுகிறது.
மச்சித்தா: — என்னிடம் சித்தத்தை வைத்தவர்கள். அவர்களின் மனம் முழுவதும் நானே நிறைந்திருக்கின்றேன். ‘சித்தம்’ எனில் சம்ஸ்காரம், பதிவுகள் அல்லது மனதின் வாசனைகள் ஆகும் — வாசநா ஆப்பந்நம் சித்தம். எல்லா காலத்திலும் என்னையே நினைத்திருப்பார்கள். எல்லாவற்றையுமே பகவானின் சொரூபமாகப் பார்ப்பதால் அவன் எப்பொழுதும் பகவானுடனேயே இருக்கின்றான். மனமானது பரமாத்மாவிடமிருந்து வேறில்லை என்கிற தெளிவான ஞானத்தினால் அவனுடைய மனம் இயற்கையாகவே ஈஷ்வரனிடமிருந்து பிரிந்திருப்பதில்லை.
மத்3க3தப்ராணா: — உயிரை என்பால் செலுத்தியவர்கள். இங்கு ‘ப்ராண’ என்பது புலனுறுப்புகளைக் குறிக்கின்றது. அவர்களின் இந்திரியங்கள் அனைத்தும் ஈஷ்வரனை நோக்கியே இருக்கின்றது; அவைகள் எப்பொழுதும் அவர்களுக்கு ஈஷ்வரனையே காட்டிக் கொண்டிருக்கின்றன. எப்படி? இந்த அறிஞர்கள் மற்றவர்களைப் போல புலனுறுப்புகளால் விஷயங்களை கிரஹித்தபோதிலும், இவர்கள் இனியொன்றையும் பார்க்கிறார்கள். இவர்களின் கண்களும் வடிவத்தை காட்டி, பார்க்கப்படுகின்ற அந்த குறிப்பிட்ட பொருள் மற்றவைகளிலிருந்து வேறுபட்டது எனக் காட்டுகின்றது. ஆனால் இவர்கள் மேலும் ஒன்றைத் தெளிவாகப் பார்க்கிறார்கள். அதாவது பார்க்கப்படும் பொருள், பார்த்தல் மற்றும் பார்ப்பவன் இவை மூன்றும் தனது இருப்பை ஒரே பிரக்ஞையில்தான் கொண்டுள்ளது என்பதையும் சேர்த்துப் பார்க்கிறார்கள். இவ்விதம் மேலான மெய்மை குறித்த அறியாமை நீக்கப்படும்போது அவர்கள் ‘மத்3க3தப்ராண’ ஆகிறார்கள். இதனால் புலன்களை உள்ளடக்கிய அனைத்து விதமான செயல்பாடுகளும் நடந்தபோதிலும் அவன் பரமேஷ்வரனிடமிருந்து விலகி இருப்பதில்லை.
புலனுறுப்புகளின் கிரஹிக்கும் தன்மை என்பது சுயத்தை பற்றிய அறிவுக்கு தடையாக இல்லை. எனவே இவ்வுலகில் இருப்பதோ, புலன்களால் ஒன்றை அறிவதோ, ஆத்ம தரிசனத்திற்கு எந்த வகையிலும் தடையாக இருக்காது. மேலும் அனுபவங்களை தவிர்ப்பதால் சுய-தரிசனம் கிடைத்துவிடும் எனவும் கூறமுடியாது. ஆத்ம தரிசனத்திற்கு அறியாமை தடையாக இருக்கிறதே தவிர புலனுணர்வு அல்ல. இந்த தடை இல்லாதவர்கள் இங்கு மச்சித்தா:, மத்3க3தப்ராணா: ஆகிறார்கள்.
‘ப்ராண’ எனில் சுவாசம் என்றும் பொருள் உள்ளதால் இது ஜீவிதத்தை குறிப்பதாகவும் கொள்ளலாம். ஆன்மீக வாழ்க்கை வேறு லெளகிக வாழ்க்கை வேறு எனக் கூறுபவர்களுக்கு மத்தியில், இவர்கள் ஈஷ்வரனிடமிருந்து பிரிந்து வாழாதவர்களாக, தங்களது வாழ்க்கையை அவருள் ஒடுக்கியவர்களாக உள்ளனர்.
=> இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?
ரமந்தி, அவர்கள் மகிழ்வுடன் உள்ளனர். எப்படி? பரஸ்பரம் போ3த4யந்த:, ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கற்பித்துக் கொள்கிறார்கள், என்னை பற்றி கற்க விரும்புகிறவர்களுக்கு விளக்குகிறார்கள். பரமேஷ்வரனான என்னைப் பற்றியே எப்பொழுதும் பேசிக் கொள்பவர்களாய் உள்ளனர் — கத2யந்த: ச மாம் நித்யம்.
‘கத2யந்த:’ என்பது ‘போ3த4யந்த:’ என்பதிலிருந்து வேறுபட்டது. ‘போ3த4ந’ என்பது ஒரு வகுப்பறை சூழ்நிலையை, கற்கும் அமைப்பை அல்லது ஒரு விவாதத்தைக் குறிக்கிறது. ‘கத2ந’ என்பது உரையாடலை, எடுத்துரைத்தலைக் குறிக்கிறது. இறைவனின் சக்தி, தத்துவம், அவரது அணுகிரஹம் போன்றவற்றை பகிர்தல் கத2ந எனப்படும். ‘என்னை’ பற்றிப் பேசியும், எனது தத்துவத்தைக் கற்பித்தும், எனது மஹிமைகளை விவரித்தும், எனது அணுகிரஹத்தைப் பகிர்ந்தும் அவர்கள் ஆனந்தத்தை அடைகிறார்கள், ரமந்தி. இதனால் அவர்கள் திருப்தியை அடைகிறார்கள் — துஷ்யந்தி. அவர்களுடைய திருப்திக்கோ மகிழ்வுக்கோ பரமேஷ்வரனைத் தவிர வேறெதுவும் தேவையில்லை என்று ஆகிறார்கள்.
கிட்டதட்ட ஒரே மாதிரியான பொருளைக் கொடுக்கும் ‘ரமந்தி’ மற்றும் ‘துஷ்யந்தி’ என்னும் சொற்களை பகவான் பயன்படுத்தியுள்ளார். எனவே அதைப் பொருள் கொள்ளும் விதத்திலுள்ள நுண்மை யாது என விசாரணை செய்யலாம். ‘ரமந்தி’ என்பது மக்களை உள்ளடக்கிய புற உலகைக் குறிக்கின்றது. பகவானைப் பற்றி ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதன்மூலம் மகிழ்வை அடைதலைக் குறிக்கின்றது. ‘துஷ்யந்தி’ என்பது தன்னைப் பற்றியது; ஆகவே அது திருப்தியை, தன்னிடத்தில் உள்ள மனநிறைவைக் குறிக்கின்றது. சிற்றின்பம் போன்று முடிவில் மனக்கிலேசத்தையோ, குறையையோ உண்டாக்குவதில்லை. பக்தியினால் என்றைக்கும் நிறை மனது அமையப்பெறுகின்றது. அந்த நிறைவில் ஆனந்தம் ஓயாது ஊற்றெடுக்கிறது. எனவே, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்காக விஷயங்களைப் பின்தொடரத் தேவையில்லை.
இதிலிருந்து இந்த சுலோகம் ஞானிகளாக ஆக விரும்பும் ஜிக்ஞாசு மற்றும் ஞானிகளைக் குறிப்பதாக உள்ளது. தனது சுயத்திலிருந்து வேறாக இல்லாத இறைவனின் தத்துவத்தை அறிய விரும்பும் சாதகர்களுக்கு ஞானிகள் அதை கற்பித்து மகிழ்கின்றனர். அறிகின்ற பயணத்தில் மேலும் தெளிவை அடைய விரும்புபவர்களாய், தாங்கள் தெரிந்து கொண்டதை பகிர்ந்து ஜிக்ஞாசுக்கள் மகிழ்கின்றனர்.
தனக்குத் தெரிந்ததை மற்றவர்களிடம் விவாதிக்கும்போது அது மேலும் தெளிவை அடைகின்றது. அறிவை பகிரும் இந்த செயல்பாட்டில், தனது சிந்தனையில் உள்ள எந்த தெளிவற்ற பகுதிகளும் மிகவும் தெளிவாகத் தெரிந்துவிடும். இதனால் மனம் விழிப்படைந்து, அந்த தெளிவற்ற பகுதிகளைக் குறித்த விளக்கங்களைக் கண்டறியத் தொடங்குகிறது. இதுவும் ப்ரம்மத்தை அறியும் சாதனையின் ஒரு பகுதியாகும்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
வெறுங் கண்ணாடியில் யாதொரு உருவமும் பதிவதில்லை. ஆனால் தகுந்த ரசாயனப் பொருளை அக்கண்ணாடியின் மேல் பூசிய பிறகு, படங்களை எழுதலாம். அதுபோல பக்தியாகிய ரசாயனப் பொருளை ஹிருதயத்தின்மீது தடவினால், ஆங்கு ஈஷ்வரனுடைய ரூபத்தை பதியச் செய்யலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------------