வியாழன், 4 ஜனவரி, 2024

விபூதி யோகம் 10.2 - 10.3

||10.2|| என் பெருமையை நானே அறிவேன்:

मे विदु: सुरगणा: प्रभवं महर्षय:

अहमादिर्हि देवानां महर्षीणां सर्वश: ।। ।।

மே விது3: ஸுரக3ணா: ப்ரப4வம் மஹர்ஷய:  

அஹமாதி3ர்ஹி தே3வாநாம் மஹர்ஷீணாம் ஸர்வச1: ।। 2 ।।


मे प्रभवं  மே ப்ரப4வம்  என்னுடைய மஹிமையை    सुरगणा:  ஸுரக3ணா:  தேவர் கூட்டங்கள்   

विदु விது3:  அறியார்    महर्षय:  மஹர்ஷய:   மஹரிஷிகள் அறியார்   हि  ஹி  ஏனென்றால்   

अहम्  அஹம்  நான்     देवानां महर्षीणां  தே3வாநாம் மஹர்ஷீணாம்   தேவர்களுக்கும் மகரிஷிகளுக்கும்   सर्वश:  ஸர்வச1அனைத்து வகையிலும்   दि:  ஆதி3:  முதற்காரணம்.


தேவர் கூட்டங்களும் மாமுனிவரும் என் மஹிமையை உணரார். ஏனென்றால் வானவர்க்கும் மஹரிஷிகளுக்கும் முற்றிலும் முதற்காரணம் நானே.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

வானவர் கணங்கள் என் மகிமையை உணரார்; பெருந்தகை முனிவருமுணரார்; யாங்கணும், வானோர்கட்கும் மகரிஷிகட்கும் ஆதி நானே.


விளக்கம்:

=> எனது மஹிமைகள்:

என் பெருமையை நானே அறிவேன் ஆதலால் நான் உனக்கு அதைச் சொல்லுகிறேன் என்கிறார் பகவான்.

பொதுவாக, ‘ப்ரப4வம்என்ற சொல்லுக்கு தோற்றம் என்பது பொருள். ஆனால் இந்த அத்தியாயத்தின் கருப்பொருளைக் கருத்தில் கொண்டு இது பகவானின் மொத்த மஹிமை அல்லது அவரது சக்தியைக் குறிக்கின்றது என சங்கரர் தனது பாஷ்யத்தில் குறிப்பிடுகிறார். எனவே, ‘மே ப்ரப4வம்என்பதை எனது மஹிமைகள் அல்லது சிருஷ்டி, ஸ்திதி, லயம், அணுகிரஹம் போன்ற எனது சக்திகள் அல்லதுநான் இந்த உலகத்தின் வடிவில் வருவதைஎன மூன்று விதங்களிலும் எடுத்துக் கொள்ளலாம். இந்த எனது பெருமைகள் அவர்களுக்கு முழுமையாகத் தெரியாது விது3:, என்கிறார். ஓரளவிற்குத் தெரிந்தபோதிலும் முழுமையாக அவர்கள் அறியமாட்டார்கள். யாரைப் பற்றி பகவான் குறிப்பிடுகிறார்

ஸுரக3ணா:தேவர் கூட்டங்கள். ‘ஸுரஎனில் இந்திரன், வருணன், ஆதித்யன் போன்ற தேவர்களைக் குறிக்கிறது. அவர்களும் கூட என்னை முழுமையாக அறியார். தங்களை பரமாத்மா என அவர்கள் அறிந்தபோதிலும், ஈஷ்வரனின் முழு மஹிமையையும் அவர்கள் அறிவதில்லை. மேலும், மஹர்ஷய:மஹரிஷிகள் அறியார். யாரிடமிருந்து நமக்கு அனைத்து அறிவும் கிடைக்கின்றதோ அப்படிப்பட்ட மகத்தான ஞானிகளுக்கும் கூட ஈஷ்வரனின் பெருமை முழுமையாகத் தெரியாது. ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரம்ம மட்டுமே மெய்ப்பொருள், மற்றவை அனைத்தும் மித்யா எனும் மெய்யறிவு ஞானிகளுக்குத் தெரியும். ப்ரம்மத்தைச் சார்ந்து தோன்றிக் கொண்டிருப்பதால், அறிந்தது மற்றும் அறியாதது என அனைத்தும் ப்ரம்ம மட்டுமே எனும் சர்வஞானம் அவர்களுக்கு உள்ளது. ஆனால் இந்த ஞானம், ஈஷ்வரனின் சர்வ ஞானத்திலிருந்து(ஸர்வக்ஞத்வம்) வேறுபட்டது. ஈஷ்வரன் ப்ரம்மத்தைப் பற்றிய ஞானத்துடன் கூடவே மித்யாவைப் பற்றிய அனைத்து விவரங்களும் தன்னிடத்தே கொண்டவர். இவ்வுலகின் சிருஷ்டி, ஸ்திதி, லயம், கர்மபலன், அணுகிரஹம் போன்ற இவ்வகையான விவரங்களை மஹரிஷிகள் அறிவதில்லை.  


=> முழு முதற்காரணம்:

ஹி அஹம் தே3வாநாம் மஹர்ஷீணாம் ஸர்வச1: ஆதி3:ஏனென்றால் தேவர்களுக்கும் மகரிஷிகளுக்கும் அனைத்து வகையிலும் நானே முதற்காரணம். பிள்ளையின் பிறப்பு முதலியவைகளைப் பிதா அறிகிறார். ஆனால் பிதாவின் பிறப்பு, பால்யம் முதலியவைகளைப் புத்திரன் ஒருநாளும் அறியான். பரம புருஷனிடத்திருந்து பிரம்மா முதலிய தேவர்களும் பிருகு முதலிய ரிஷிகளும் தோன்றினார்கள். சூரியனிடத்திருந்து கிளம்பிய கிரணம் சூரியனை முற்றும் அளந்து அறிய இயலாதது. அதுபோன்று தங்களுக்கு முதற்காரணமாயுள்ள பரமபுருஷனின் மஹிமைகளையும் சக்திகளையும் காண தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் இயலாது

தந்தையின் திருமண நிகழ்வை அவர் எவ்வளவுதான் விரிவாக மகனிடம் எடுத்துரைத்தாலும், அதைப் பற்றிய நேரடியான அனுபவம் மகனிடம் எப்படி இருக்கும்? பேச்சாளரின் சொற்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பினுள் தான் கேட்பவருக்கு புலப்படுகிறது. ஆகவே வார்த்தைகளால் வரம்பிற்குட்பட்டு பிறந்த மறைமுக அறிவு மட்டுமே மகனிடம் இருக்கும். அது தந்தையின் நேரடி அனுபவத்திற்கு எவ்விதத்திலும் இணையாகாது

சாஸ்திரத்தில் சிருஷ்டிக் கிரமம் பலவாறு கூறப்பட்டுள்ளது. பகவானிடமிருந்து ஒரே நேரத்தில் அனைத்தும் தோன்றுகிறது. அல்லது, முதலில் ஆகாசம், பிறகு வாயு, அக்னி உள்ளிட்ட பஞ்ச பூதங்கள், பிறகு ஸ்தூல பூதங்கள் தோன்றுகிறது. அல்லது, முதலில் ஹிரண்யகர்பன் தோன்றி அவரிடமிருந்து மற்ற அனைத்தும் உருவானது. இதுபோன்ற சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிருஷ்டி குறித்த பல முறைகளில், எதை எடுத்துக் கொண்டாலும் அதனுடைய முதற்காரணம் நானே, அஹம் ஆதி3:, என்கிறார் பகவான். இவ்விதமாக தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் நானே காரணகர்த்தாவாக இருப்பதனால், என்னைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? அவர்களுக்குத் தெரிந்த அனைத்தும் என்னால் கற்பிக்கப்பட்டது, நான் அறிந்த அனைத்தும் அதேவிதத்தில் அவர்களால் அறிய முடியாது.

எனது மஹிமையைப் பற்றி பேசுவதற்கு மிகவும் தகுதியானவன் நானே என்பதை பகவன் இவ்விதம் சுட்டிக்காட்டுகிறார்


=> ஏன் பகவான் மட்டுமே தகுதியானவர்?

மஹரிஷிகள் அனைவரும் மனிதர்கள். ப்ரம்ம ஞானத்தையும் பெரும் சக்திகளையும் கொண்டிருந்த போதிலும், அவர்கள் மனிதர்கள், ஜீவர்கள் மட்டுமே. அவ்விதமே தேவர்களும் ஆவர். ஆகவே வரையறைகுட்பட்ட அறிவுடன் மட்டுமே இருப்பதால், அவர்களால் என் மஹிமையை முழுமையாக அறிய முடியவில்லை, என்கிறார் பகவான்.

எனவே என் மஹிமையைப் பற்றி பேச எனக்கு மட்டுமே தகுதியுள்ளது, என்கிறார். இங்கு, பகவான் கிருஷ்ணர் தன்னை ஈஷ்வரனாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். உண்மையில் கிருஷ்ணர் தன்னை ஈஷ்வரனாகக் காட்டுகிறாரா அல்லது வியாசர் கிருஷ்ணரை ஈஷ்வரனாகக் காட்டுகிறாரா என்பது நமக்கு முக்கியமல்ல. கிருஷ்ணர் ஈஷ்வரனாக இருக்கிறார். ஆகவே இங்கு இந்த உரையாடல் கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில், ஈஷ்வரனுக்கும் ஜீவனுக்கும் இடையில் நடைபெறுகிறது

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.3||ஈஷ்வரனின் பெருமையை அறிவதன் பலன்:

यो मामजमनादिं वेत्ति लोकमहेश्वरम्

असंमूढ: मर्त्येषु सर्वपापै: प्रमुच्यते ।। ।। 

யோ மாமஜமநாதி3ம் வேத்தி லோகமஹேச்1வரம்

அஸம்மூட4: மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே ।। 3 ।।


:  :  யார்    माम्   மாம்  என்னை     अजम्  அஜம்  பிறவாதவன் என்றும்     अनादिं  அநாதி3ம்  ஆதி இல்லாதவன் என்றும்   लोकमहेश्वरम् லோகமஹேச்1வரம்   உலகனைத்துக்கும் தலைவன் என்றும்   

वेत्ति  வேத்தி  அறிகிறானோ    :  :  அவன்     मर्त्येषु  மர்த்யேஷு  மானுடர்களுள்    

असंमूढ:  அஸம்மூட4:  மயக்கமில்லாதவன்   

सर्वपापै: प्रमुच्यते  ஸர்வபாபை: ப்ரமுச்யதே  பாபங்களனைத்தினின்றும் விடுபடுகிறான்.


ஆதி இல்லாதவன் என்றும், பிறவாதவன் என்றும், உலகுக்குத் தலைவன் என்றும் என்னை அறிகிறவன் மானுடருள் மயக்கமில்லாதவன். அவன் பாபங்களனைத்தினின்றும் விடுபடுகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பிறப்பதில்லான், தொடங்குதலிலாதான், உலகின் பெருமுதலான என்றனையுணர்வோன், மானிடருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான், பாவமனைத்தினும் விடுதலைப்பட்டான்.


விளக்கம்:

சென்ற சுலோகத்தில் பகவான், தேவர்களும் மகரிஷிகளும் கூட தனது மஹிமையை முழுமையாக அறிவதில்லை எனக் கூறினார். எனில் அவரைப்பற்றி ஒன்றுமே தெரிந்துகொள்ள முடியாதோ என்கிற கேள்விக்கு விடையாக இந்த சுலோகம் வருகிறது. அவரின் பெருமையை ஒருவன் எவ்விதத்தில் அறியலாம், மேலும் அவ்வாறு அறிவதனால் உண்டாகும் பலன் குறித்தும் இங்கு பேசுகிறார்

அனைத்து தேவர்களுக்கும் மகரிஷிகளுக்கும் முதற்காரணம் நானே எனக் கூறியிருந்தார். இதில் ஒரு நுண்மையைத் தெளிவாக புரிந்து கொள்ளுதல் அவசியம். அவரே ஆத்மாவாக இருப்பதனால், ஒரு தேவனின் அல்லது மகரிஷியின் ஆத்மாவிற்கு ஈஷ்வரன் காரணம் அல்ல. எதன் காரணமாக ஒரு ஜீவனை தேவன் என்றோ, முனிவன் என்றோ, மனிதன் என்றோ அல்லது மிருகம் என்றோ அழைக்கிறோமோ அந்த உபாதிக்கு அவர் காரணமாக இருக்கிறார். அதாவது உடல், மனம் மற்றும் புலன்கள் உள்ளிட்ட உபாதிகளுக்கு ஈஷ்வரனே முழுகாரணம், ஆதி. தோற்றம் என்பது உபாதிக்கு மட்டுமே தவிர ஆத்மாவுக்கு அல்ல

=> இறை மஹிமை:

அனைத்திற்கும் நானே முழுமுதற்காரணம் என்பதால், எனக்கு மூலக்காரணம் என எதுவுமில்லை. எனவே ஆதி இல்லாதவன்அநாதி3. இதனால், பிறப்பற்றவன்அஜ:. இதை இனியொரு விதத்திலும் எடுத்துக் கொள்ளலாம். ‘அஜ:எனில் பிறவாதவன், என்பதால் எதனுடைய காரியமாகவோ விளைவாகவோ இல்லாதவன் எனப் பொருள்படுத்தலாம். எனவேஅநாதி3’, காரணமற்றவன்; எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பவன். வானவர்கள் மற்றும் முனிவர்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் காரணகர்த்தாவாக இருப்பதால், ஈஷ்வரனுக்கு மூலக்காரணம் என வேறு யாரும் அல்லது எதுவும் இல்லை.

லோகமஹேச்1வரம்உலகனைத்துக்கும் தலைவன். பிறப்புக்கு உட்படாதவன் மற்றும் விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் எனும் மூன்று நிலைகளுக்கு உட்படாதவன் என்று சங்கரர் கூறுகிறார். மேலும் ஸ்தூலம், சூக்ஷமம் மற்றும் காரணம் என்ற மூன்று உலகமாகவும் இல்லாதவன்; ஆனால் அவனே மூன்று உலகுக்கும், மூன்று நிலையில் இருப்பவனுக்கும் காரணமான அதிஷ்டானமாகவும் அவைகளின் மெய்ப்பொருளாகவும் இருப்பவன்; எல்லையற்றவன், அறியாமையிலிருந்தும் அதனுடைய விளைவுகளிலிருந்தும் விடுபட்டவன்; எல்லாவற்றிற்கும் காரணமான அவனே இறைவன், பரமேஷ்வரன்.


=> இவ்வகையில் பகவானை அறிபவன்:

இவ்விதமாக என்னை புரிந்து கொள்பவன், மயக்கமில்லாதவன் என்கிறார். ‘அஸம்மூட4:எனில் மூடனாக இல்லாதவன், தெளிந்தவன், மோஹத்தை நீக்கியவன், மயக்கமற்றவன் என்பது பொருள். அனைத்திற்கும் காரணமாகவுள்ள ஸத்-சித்-ஆனந்த-ஆத்மாவை, ஒரு பொருளாக, ஒன்றின் விளைவாக, காரியமாகப் பார்ப்பவன் மூடன். மோஹத்தினால் மயக்கமுற்றவனே, உருவமற்றதை வடிவத்துடன் காண்கின்றான்; காலமற்றதை காலத்திற்கு உட்பட்டதாக எண்ணுகின்றான். சுருங்கச் சொல்லின், ஆத்மாவை அனாத்மாக எடுத்துக் கொள்கின்றான். ‘நான் உயரமானவன், கருப்பானவன்என ஒருவன் கூறும்போது, அனாத்மாவான உடலை ஆத்மாவாக எடுத்துக் கொள்கிறான்; அனாத்மாவை ஆத்மாவின் மீது ஏற்றிவைக்கும் இந்த குழப்பத்தின் விளைவாக அவன் சம்சாரி ஆகின்றான். இத்தகையவனேஸம்மூட4:’, முழுமையான மூடன் எனப்படுகின்றான். இதுபோன்ற மயக்கத்திலிருந்து விடுபட்டவன் அஸம்மூட4 ஆவான்


=>  இறை மஹிமையை அறிவதன் பலன்:

இத்தகையவன் மானுடர்களுள் ஒருவனாக இருந்தபோதிலும் அவனை மரணிப்பவனாக ஒருபோதும் எடுத்துக் கொள்ளமுடியாது. ‘மர்த்யஎனில் மரணத்திற்கு யோக்கியதை ஆனவன், அதாவது மனிதன் என்பது பொருள். மரணத்திற்குட்பட்டவனை ஏன் மரணிப்பவனாகக் கொள்ளக் கூடாது? ஏனெனில் அவன் பாபங்களனைத்தினின்றும் விடுபடுகிறான்ஸர்வபாபை: ப்ரமுச்யதே. மோக்ஷத்தை அடைகின்றான்

அனைத்து பாபங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகின்றான் எனில் என்ன? பாபம் இரு வகை. ஒன்று, வேண்டுமென்றே திட்டமிட்டு, நன்கு சிந்தித்துச் செய்யும் பாபம். மற்றொன்று அலட்சியத்தினாலும் கவனக் குறைவினாலும் செய்யும் பாபங்கள். மேலும் வேதாந்தத்தை பொருத்தவரையில், புண்ணியமும் கூட ஒருவகையில் பாபமே ஆகும். ஏனெனில் புண்ணியமும் நம்மை பிணைக்கின்றது. தங்கச் சங்கிலியை போன்ற இந்த புண்ணியத்தினால் நாம் சில சிறந்த சூழ்நிலைகளை அனுபவிக்கிறோம் எனினும் அதுவும் பந்தத்தையே கொடுக்கின்றது. இரும்போ தங்கமோ கைதியின் கையிலிருக்கின்ற சங்கிலி எதுவாயினும் அது அவனை கட்டுப்படுத்தவே செய்கிறது. எனில் இந்த பாபங்களிலிருந்து ஒருவன் எப்படி விடுதலை அடைகிறான்? ஆத்மாவாகிய நான் கர்த்தா அல்ல, அகர்த்தாவாக எந்த செயலையும் செய்யாதவனாக இருக்கின்றேன். தவறான புரிதலினால் அனைத்துவித புண்ணிய-பாப-கர்மத்திற்கு என்னை உட்படுத்தி கொண்டிருந்தேன். தன்னை அகர்த்தாவாக பார்க்கும் இந்த ஞானத்தினால் அவன் புண்ணிய பாபத்திலிருந்து விடுதலை அடைகிறான். பூரணமான துக்க நிவிர்த்தியை அடைகின்றான். இதுவே மோக்ஷம் ஆகும். பிராரப்த-கர்மத்தில் சில நாட்கள் இருப்பதுபோல இருந்து, பின் காலப்போக்கில் அதிலிருந்தும் விடுதலை அடைகிறான். அவன் மீண்டும் பிறப்பதில்லை.

---------------------------------------------------------------------------------------------------------------------