புதன், 18 அக்டோபர், 2023

ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் 9.15 - 9.16

||9.15|| எப்படிப்பட்ட பக்தி செலுத்துகிறார்கள்:

ज्ञानयज्ञेन चाप्यन्ये यजन्तो मामुपासते

एकत्वेन पृथक्त्वेन बहुधा विश्वतोमुखम् ।। १५ ।।

ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே

ஏகத்வேந ப்ருத2க்த்வேந 3ஹுதா4 விச்1வதோமுக2ம் ।। 15 ।।


अन्ये अपि  அந்யே அபி  ஏனையவர்களும்   ज्ञान यज्ञेन   ஜ்ஞாந யஜ்ஞேந  ஞானயக்ஞத்தால்   

यजन्त:  யஜந்த:  வழிபடுபவர்களாக    माम्   மாம்  என்னை   उपासते   உபாஸதே  உபாஸிக்கின்றனர்    

एकत्वेन  ஏகத்வேந  ஒன்றாய்    पृथक्त्वेन  ப்ருத2க்த்வேந  வேறாய்   

विश्वतोमुखम्   விச்1வதோமுக2ம்  பலவாய்    बहुधा  3ஹுதா4  இத்தனை விதங்களில்.


ஞானயக்ஞத்தால்  வழிபடுபவர்களாக ஏனையவர்களும் என்னை ஒன்றாய், வேறாய், பலவாய்இத்தனை விதங்களில் உபாஸிக்கின்றனர்.   


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

வேறு சிலர் ஞான வேள்வியால் வேட்போராய் என்னை ஒருமையாகவும் பன்மையாகவும் பலவாறாக எல்லாவிடத்தும் வழிபடுகிறார்கள்.


விளக்கம்:

சென்ற சுலோகத்தில் கூறப்பட்ட பக்தர்கள், எப்படிப்பட்டதான பக்தியின் மூலம் தன்னை வழிபடுகிறார்கள் என பகவான் கூறுகிறார். ‘அந்யே அபிஎனில்வேறு சிலர்என்பது பொருள். அதாவது பன்னிரெண்டாவது சுலோகத்தில் கூறப்பட்டமோகா4சா1: மோக4 கர்மாண:என்பவர்களிலிருந்து வேறான சிலராக இருக்கும் தெய்விக பண்புகளையுடைய மஹாத்மாக்கள் என்பது பொருள்

இவர்கள், ஞான ரூபமான வழிபாட்டுடன் கூடியவர்களாக என்னை வணங்குகிறார்கள்ஜ்ஞாந யஜ்ஞேந யஜந்த:, என்கிறார் கிருஷ்ணர். ஈஷ்வரனை விஷயமாக கொண்ட அறிவை மட்டுமே இவர்கள் வேள்வியாகக் கருதுகிறார்கள். பரம்பொருளை உள்ளபடி அறிகிறவர்கள் தங்களைப் பரம்பொருளுக்குக் கொடுத்துவிடுகிறார்கள். ஆகையால் அது ஞான வேள்வி(ஜ்ஞாந யக்ஞம்) என்றாகிறது. ஞானம் மற்றும் பக்தி இரண்டையும் பிரிக்க முடியாது. ஈஷ்வரனைப் பற்றிய தெளிவான அறிவை அடைய அடைய பக்தி அதிகரிக்கின்றது


இனி, பின்வருமாறு சொல்லப்பட்ட இத்தனை விதங்களில் பக்தர்கள் தன்னை வழிபடுவதாக பகவான் கூறுகிறார்:

=> ஒன்று என தியானித்தல்:

இங்குஒன்றாய்எனும் அர்த்தத்தை கொடுக்கிறஏகத்வேநஎன்ற சொல்லை இருவகையாகப் பொருள் கொள்ளலாம்

   (1) ஒன்றாய் எனும் அத்வைத பாவனை, பரமாத்மா ஒன்றுதான் உள்ளது என்ற எண்ணத்துடன் கூடிய தியானத்தைக் குறிக்கிறது. அதேபோல, பக்தனும் பக்தி செலுத்தப்படுபவனும் உண்மையில் வேறில்லை. இந்த ஞானத்தில் நிலைபெறுவதற்காக வழிபடுவதைக் குறிக்கிறது

   (2) ஒரேயொரு இறைவன்தான்; பல கடவுளர்கள் கிடையாது என்ற உணர்வுடன் வணங்குதல்


=> வேறாய் வழிபடுதல்:

வேறாய்எனும் அர்த்தத்தை கொடுக்கிறப்ருத2க்த்வேநஎன்ற சொல்லையும் இரு கோணத்தில் விளக்கலாம்

   (1) வேறாய் இருக்கும் துவைத பாவனை. ஆண்டவன் அடியவனுக்குப் புறம்பானவன்; ஈஷ்வரன் வேறு, பக்தன் வேறு என்ற எண்ணத்துடன் கூடிய வழிபாட்டைக் குறிக்கிறது

   (2) வேறுபடும் தன்மையுடன் கூடிய பல கடவுளர்கள், தேவதைகள் உள்ளனர் என்ற உணர்வுடன் வணங்குதல்.


=> பலவாய் வணங்குதல்:

பலவாய்எனும் அர்த்தத்தை கொடுக்கிறவிச்1வதோமுக2ம்என்ற சொல்லையும் இருவகையாகப் பொருள் கொள்ளலாம்.  

   (1) பலவாய் உள்ள எல்லா அங்கங்களும் ஒரு புருஷனைச் சார்ந்தவைகள். இது விசிஷ்டாத்வைத பாவனை. ஒருவனே இத்தனையும் ஆனான் என்ற எண்ணம் இப்பாவனையில் உண்டு

   (2) பார்க்கின்ற அனைத்துமாக ஈஷ்வரன் இருக்கின்றார். அனைத்திற்கும் நிமித்த மற்றும் உபாதான காரணமாக இருப்பவன் நான் என்று பகவான் கூறினார். காரணமே காரியமாக தோன்றுவதால் இந்த சிருஷ்டியாக நானே விளங்கிக் கொண்டிருக்கின்றேன். ஐம்பூதங்களும் நானே, அவற்றின் காரியங்களாகவுள்ள சூரியன் சந்திரன் மேகங்கள் என அனைத்தும் நானே. மேலும் பிரஹஸ்பதி, இந்திரன், வருணன் போன்ற தேவதைகளும் நானாகவே இருக்கின்றேன். இந்த விஷ்வரூபத்தை பகவான் பத்து மற்றும் பதினொன்றாவது அத்தியாயங்களில் விரிவாக விளக்க இருக்கிறார். மேலும் இந்த அத்தியாயத்தின் நான்கு மற்றும் ஐந்தாவது சுலோகங்களிலும் கூட, அனைத்தும் என்னிடத்திருக்கின்றன, நான் அவைகளிடத்தில்லை எனக் கூறியிருந்தார். இவ்விதம் பார்க்கின்ற அனைத்துமாய் ஈஷ்வரனே இருக்கின்றார் என அவரை வழிபடுகிறார்கள்.

இவ்விதமாக ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள இணக்கத்தை அத்வைதம், துவைதம் மற்றும் விசிஷ்டாத்வைதம் ஆகிய மூன்று நிலைகளில் எதில் வைத்துச் சாதனம் செய்தாலும், இறுதிப்பலனாக அது ஈஷ்வரனைப் பற்றிய தெளிவான ஞானத்தை அடைய வழிவகுப்பதால் அது ஞானயக்ஞம் ஆகிறது. இத்தனைவித உபாசனைகளும் எப்படி ஒரே பொருளைச் சார்வதாகும் என்ற ஐயம் எழலாம். அதற்கு கிருஷ்ணபகவான் அடுத்த சுலோகத்தில் பதிலளிக்கிறார்

---------------------------------------------------------------------------------------------------------------------

||9.16|| அனைத்துமாயிருப்பவன் ஈசன்:

अहं क्रतुरहं यज्ञ: स्वधाहमहमौषधम्

मन्त्रोऽहमहमेवाज्यमहमग्निरहं हुतम् ।। १६ ।।

அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதா4ஹமஹமௌஷத4ம்  

மந்த்ரோऽஹமஹமேவாஜ்யமஹமக்3நிரஹம் ஹுதம் ।। 16 ।।


अहं क्रतु:  அஹம் க்ரது:  நான் வைதிக கர்மம்   अहं यज्ञ:  அஹம் யஜ்ஞயக்ஞம் நானே   

अहं स्वधा  அஹம் ஸ்வதா4  பித்ரு அன்னம் நான்   अहं औषधम्  அஹம் ஒளஷதம்  நானே உணவு    

अहं मन्त्र:  அஹம் மந்த்ர:  மந்திரம் நானே    अहं एव ज्यम्  அஹம் ஏவ ஆஜ்யம்  நான்தான் நெய்   

अहं अग्नि:  அஹம் அக்3நி  வேள்வித்தீ நானே    अहं हुतम्  அஹம் ஹுதம்  அவி நானே.


நானே கிரது எனும் வைதிக கர்மம்; யக்ஞம் நானே; பித்ரு அன்னம் நான்; உணவு நான்; மந்திரமாவது நான்; ஹோமம் செய்யப்படும் நெய் நான்; வேள்வித்தீ நான்; அதில் அவியும் நானே.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

நான் ஓமம்; நான் யாகம்; நான்ஸ்வதாஎன்ற வாழ்த்துரை; நான் மருந்து; மந்திரம்; நான் நெய்; நான் தீ; நான் அவி.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் கிருஷ்ணர் வேதச் சடங்கின் ஒவ்வொரு அம்சமும் நானே எனக் கூறுகிறார். ஒரு வைதிக சடங்கு என்பது உயர்ந்த கர்மமாக கருதப்படுவதால், அதைநான்எனக் கூறுவதன் மூலம் இயற்கையாகவே மற்ற எல்லா வகையான கர்மங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்துமாக அவரே ஆகிறார்


=> யக்ஞம்:

ஈஷ்வரனின் பிரத்தியேக அம்சமாக இருக்கும் இந்திரன், வருணன் போன்ற தேவதைகளை ஆவாகனம் செய்யும்போது, வேள்வித்தீ மூட்டி அதில் அத்தேவதைகளுக்கான கணிக்கைகளை அவியாக அளிப்பது யக்ஞம் ஆகும். மாறாக ஒரு ஞான-யக்ஞத்தில், ஈஷ்வரன் மட்டுமே ஆவாகனம் செய்யப்படுகிறார் ஏனெனில் இந்த கர்மத்தின் ஒவ்வொரு பகுதியும் ஈஷ்வரனிடமிருந்து வேறானது அல்ல. இங்கு வேள்வியும், அக்னியும், அவியும், வேள்வி செய்பவனும் ஈஷ்வரன் ஆகையால் அதனால் அடையப்படும் பலனும் ஈஷ்வரனே ஆகும். நான்காவது அத்தியாயத்தின் இருபத்தி நான்காவது சுலோகத்தில்ப்3ரஹ்மார்பணம் ப்3ரஹ்ம ஹவிர்ப்3ரஹ்மாக்3நௌ ப்3ரஹ்மணா ஹுதம் ’, மொழி வேதவேள்வி குறித்ததாக இருப்பினும் அதன் பார்வை ஞானமாக இருந்தது. அவியை படைக்க பயன்படும் கரண்டி (அர்ப்பணம்) ப்ரம்மம், அவியாக(ஹவி) அளிக்கப்படும் நெய் ப்ரம்மம், அவி அளிக்கப்படும் இடமான நெருப்பு(அக்நி) ப்ரம்மம் மற்றும் அவி அளிக்கும் எஜமானன்(கர்த்தா) ப்ரம்மம் என்று சொல்லப்பட்டது. ப்ரம்மம் செயல் செய்யாத அகர்த்தாவாக அறியப்படும்போது, இந்த ஞானத்தினால் அடையப்படும் பலனும் ப்ரம்மம். இதை அடைபவன் எல்லா சூழ்நிலைகளிலும் ப்ரம்மத்தையே காண்கிறான். இவ்விதம் அனைத்தும் ஈஷ்வரன் என புரிந்தவனுக்கு எல்லா கர்மங்களும் ஈஷ்வரனாகவே ஆகின்றது. ‘ ஈஷ்வரா, நான் செய்வதனைத்தும் உங்களுக்கே அர்ப்பணம்என்பதன் பொருள் இதுவேயாம். இது ஒரு அணுகுமுறையாகவோ அல்லது தரிசனமாகவோ இருக்கலாம். அனைத்தும் ஈஷ்வரனே என்ற இந்த கண்டறிதல், பாவனையாக இருக்கும்பட்சத்தில் அது பக்தி; தரிசனமாக இருக்கும்பட்சத்தில் அது ஞானம். இங்கு வைதிக கர்மம் உட்பட எந்தவொரு செயலும் என்னிடமிருந்து வேறானதல்ல என பகவான் குறிப்பிடுகிறார்.


=> யக்ஞ காரணிகள்:

அஹம் க்ரது: அஹம் யஜ்ஞ:’, இங்குக்ரது:மற்றும்யஜ்ஞ:இரண்டும் வேதச் சடங்கையே குறிக்கிறது. கிரது என்பது வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள ஒருவகையான வைதிக கர்மத்தின் பெயராகும். யக்ஞம் என்பது ஸ்மிருதியில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்கள் அல்லது ரிஷிகளினால் சொல்லப்பட்ட பூஜைமுறைகளைக் குறிக்கும். வேதகாலத்திலிருந்த இந்த இரண்டு வகையான கர்மங்களையும் குறிப்பிடுவதன் மூலம் பகவான் அனைத்து வகையான செயல்களையும் உள்ளடக்குகிறார்.

அஹம் ஸ்வதா4 பித்ருக்களுக்கு படைக்கப்படும் உணவு நான், என்கிறார் பகவான். முன்னோர்களை வழிபடும் பித்ரு பூஜையின்போது, அவர்களை ஆவாகனம் செய்து பின் பிராமணர்களுக்கும் காகங்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது. அந்த உணவு ஸ்வதா எனப்படும்.

 அஹம் ஒளஷதம் எல்லோராலும் உண்ணப்படும் உணவு நான். ஓஷதி என்பது செடிகள், மரங்கள், கொடிகளைக் குறிக்கிறது. ஓஷதியிலிருந்து பிறந்தது ஔஷத ஆகும். எனவே உணவு என்பது சைவத்தையேக் குறிக்கிறது. அரிசி, சோளம், பழவகைகள், காய்கறிகள் போன்றவை அனைத்தும் ஔஷதம். அக்காலத்தில் மருந்துகள் பெரும்பாலும் மூலிகைகளாக இருந்ததனால் மருந்துகளும் ஔஷதம் என்றழைக்கப்படும். ஆனால் ஒரு சடங்கின் முக்கிய பகுதியாக விளங்குவதால் இங்கு அது உணவையேக் குறிக்கிறது

அஹம் மந்த்ர:தேவதைகளுக்கு அவி படைக்கும்போது ஓதப்படும் மந்திரங்கள் நான். மேலும், வேள்வித்தீயில் செலுத்துப்படும் முக்கிய அவியான நெய் நானேஅஹம் ஏவ ஆஜ்யம். எங்கு அவிகள் வழங்கப்படுகின்றனவோ அந்த வேள்வித்தீயும் நான்அஹம் அக்3நி

அஹம் ஹுதம் வேள்வி வேட்டல் எனும் செயலானது சொல்லப்படுகிறது. நானே யாகம் செய்தல் எனும் கர்ம ரூபமாக இருக்கின்றேன்


=> ஒன்றில் அனைத்தும் அடக்கம்:

வேதாந்தத்தை பொறுத்தவரையில் ஒருவன் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். மாறாக, கர்மங்கள் கையாளப்படும் இடத்தில் ஒருவன் தெரிந்து கொள்ளவும் செய்யவும் பல விஷயங்கள் உள்ளன. மேலும் எந்தவொரு கர்மத்திலும் சில விடுபடுதல்கள், தவறுகள் என பல பிரச்சினைகள் இருப்பதால் பெரும்பாலும் நாம் எதிர்பார்க்கும் முடிவுகள் எட்டப்படுவதில்லை. ஆனால் வேதாந்தத்தில் ஒன்றாக மட்டுமே இருக்கின்ற அந்த வஸ்து அறியப்படும்போது அனைத்தும் ஒடுங்குகிறது. இந்த ஒரு விஷயத்தின் அறிவில், மற்ற அனைத்தும் அடங்குவதால் இது ராஜவித்யா ஆகிறது. எனவே இதுவே சான்றோன் தேடும் விஷயம் ஆகிறது

---------------------------------------------------------------------------------------------------------------------