திங்கள், 2 அக்டோபர், 2023

ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் 9.11 - 9.12

||9.11|| அறிவிலிகளது தரம்:

अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितम्

परं भावमजानन्तो मम भूतमहेश्वरम् ।। ११ ।।

அவஜாநந்தி மாம் மூடா4 மாநுஷீம் தநுமாச்1ரிதம்

பரம் பா4வமஜாநந்தோ மம பூ4தமஹேச்1வரம் ।। 11 ।।


भूत महेश्वरम्  பூ4 மஹேச்1வரம்  உயிர்களுக்கெல்லாம் தலைவனானவனை   

मम परं भावम्  மம பரம் பா4வம்  என்னுடைய பரம இயல்பை   अजानन्त:  அஜாநந்த:  அறியாத   

मूढा:  மூடா4:  மூடர்கள்    मानुषीं तनुम्  श्रितम्   மாநுஷீம் தநும் ஆச்1ரிதம்  மானுட உடலை எடுத்துள்ள    

मां  மாம்  என்னை   अवजानन्ति  அவஜாநந்தி அவமதிக்கிறார்கள்.


என்னுடைய பர சொரூபத்தையும், நான் உயிர்களுக்கெல்லாம் ஈசனாயிருப்பதையும் அறியாத மூடர்கள், ஒரு மானுட வடிவம் எடுத்தவன் என்றெண்ணி என்னை அவமதிக்கிறார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

மனித சரீரந் தரித்த என்னை மூடர் புறக்கணிக்கிறார்கள். உயிர்களுக்கெல்லாம் உயர் தலைவன் நான் என்ற என் பரமநிலையை அவர்கள் அறிகிலர்.


விளக்கம்:

=> அறிவிலிகள்:

மூடா4:எனில் மூடர்கள், அறிவிலிகள், மோஹமடைந்தவர்கள். அதாவது, பகுத்தறியும் விவேகமில்லாத மனிதர்கள் என்பது பொருள். இவர்கள் ஆத்மாவை அகர்த்தா என்றும் அபோக்தா என்றும் அறியாதவர்களாய், செயல் செய்பவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு சுக-துக்கத்தையும் குற்ற உணர்வையும் அனுபவிப்பவர்களாக உள்ளனர். ஆத்மா என்பது இருத்தலினால் மட்டுமே அருளிக் கொண்டுள்ளது. செய்பவன், அனுபவிப்பவன் என்பது ஆத்மா மீது ஏற்றிவைக்கப்பட்ட ஒன்றே தவிர, அது ஆத்மாவிற்குரியதல்ல. இந்த அறிவு இல்லாத அறிவிலிகள், ஆத்மாவான என்னை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்றோ அல்லது விசாரத்தின் மூலம் புரிந்துகொள்ள வேண்டுமென்றோ எண்ணாமல் முற்றிலுமாகப் புறக்கணிக்கிறார்கள் அல்லது அவமதிக்கிறார்கள். ஏன் இவ்விதம் செய்கிறார்கள்? எனது எல்லையற்ற மேலான இயல்பை அறியாத காரணத்தினால்மம பரம் பா4வம் அஜாநந்த:. இங்கு சங்கரர் ஆத்மா ஆகாசத்தை போன்றது எனக் கூறுகிறார். அதாவது, அது எந்த ஒரு குறிப்பிட்ட வடிவத்தினாலோ அல்லது இடத்தினாலோ வரையறுக்கப்படுவதில்லை, எப்போதும் தூய்மையானது, எங்கும் வியாபித்திருப்பதாக உள்ளது. முழு படைப்பும் ஆகாசத்திற்குள் உள்ளது; ஆனால் ஆத்மாவோ ஆகாசத்தை காட்டிலும் நுண்ணியது மற்றும் ஆகாசத்திற்கே அடிப்படையாகத் திகழ்வது ஆகும். இத்தகைய பரம சொரூபத்தை அறியாதவர்களாய் அவரைப் புறக்கணிக்கிறார்கள்.

மேலும் அவர் உயிர்களுக்கெல்லாம் தலைவனாக இருப்பவர்பூ4 மஹேச்1வரம். இங்கு சங்கரர் அது ஒருவனின் சுயம் - ஸ்வாத்மா, என்கிறார். மனித உடலிலிருக்கும் அவரை மக்கள் அடையாளம் காண்பதில்லை. மனித வடிவம் எடுத்த என்னை அறியாதவர்கள்மாநுஷீம் தநும் ஆச்1ரிதம் மாம் அஜாநந்த:, பரமேஷ்வரனாக என்னை அடையாளம் காணாதவர்கள்பூ4 மஹேச்1வரம் மாம் அவஜாநந்தி, இந்த அறிவிலிகள். எவ்விதம் தங்களை உடல் என முடிவெடுத்துள்ளார்களோ அவ்விதமே என்னையும் இந்த உடலாகவே எடுத்துக் கொள்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் உடலின் வரம்புகளாகவுள்ள மாற்றம், மூப்பு, இறப்பு போன்றவற்றை ஆத்மாவினுடையது என்று முடிவு செய்து, தங்களை மரணத்திற்கு உட்பட்டவர்களாக நினைக்கிறார்கள். இவ்விதம் பரமேஷ்வரனை புறக்கணிக்கிறார்கள். இதன்மூலம் தங்களைத் தாங்களே புறக்கணித்துக் கொண்டவர்களாக ஆகிறார்கள்


=> புறக்கணிப்பவன்:

இந்த மனித உடலில் அமர்ந்திருப்பவனாகிய நானே அனைவராலும் தேடப்படுபவனாகவும் வழிபாட்டிற்குரியவனாகவும் உள்ளேன். என்னை இந்த மக்கள் நாடுவதில்லை’. எது நாடப்பட வேண்டுமோ அதைப் புறக்கணிக்கிறார்கள்; அவமதிக்கிறார்கள். இது மாயையின் அதிசயம்(ஆஷ்சர்ய). சங்கரர் கூறுகிறார், மனித வடிவிலுள்ள அவரே, அனைத்துவித கர்மங்களிலிருந்தும் அறியாமையிலிருந்தும் விடுபட்டவராக எப்பொழுதும் முக்தனாக இருப்பவர்நித்ய-சு1த்த-பு3த்34-முக்த-ஸ்வபா4. இந்த நித்ய முக்தனே, தனது சுய சொரூமாக பகவானை அங்கீகரிக்காதவனாக இருக்கின்றான் என கிருஷ்ணபகவான் கூறுகிறார். ஒருவனுடைய சுயத்தை ஒத்த, எல்லா உயிர்களுக்கும் தலைவனான ஈஷ்வரனாகிய இந்த எல்லையற்ற இயல்பை, எனது பரம சொரூபத்தை அறியாமல், அவர்கள் என்னை அவமதிக்கிறார்கள்மம பரம் பா4வம் அஜாநந்த:, மாம் அவஜாநந்தி.


=> எப்படியெல்லாம் இவர்கள் பகவானை அவமதிக்கிறார்கள்:

(1) பகவானின் இருப்பை உணராததே அவரை அவமதிப்பதற்குச் சமம்.

(2) பிரார்த்தனை, பூஜை முதலிய செயல்கள் வெற்றியைத் தரவில்லையெனில் இறைவனை நிந்தனை செய்வதன் மூலம் அவமதித்தல்.

(3) தனது இச்சையை நிறைவேற்றும் குறிப்பிட்ட தேவதையிடம் மட்டும் பற்றை வைத்து மற்ற அம்சங்களை ஏற்றுக் கொள்ளாமலிருத்தல் அவமரியாதை.

(4) மேலான நிர்குண ரூபத்தைப் பற்றிய அறிவு இல்லாமல், சகுண ப்ரம்மமே ஈஷ்வரன் என்று எண்ணுவது அவமரியாதை.


=> ஈஷ்வர அணுகிரஹம்:

பிறகு அவர்கள் வாழ்க்கையில் எதைத் தேடுகிறார்கள்? எதைத் தேடுகிறோம் என அறியாதவர்களாய் உண்மையில் அவர்கள் பகவானாகிய என்னைத்தான் தேடுகிறார்கள். தங்களது சுயத்தை அடையாளம் கண்டுகொள்ளாமல் அவர்கள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக நினைத்த பத்தாவது மனிதனைப் போல அல்லது உண்மையிலேயே இளவரசனாக இருக்கும் ஏழையைப் போல என்னைத் தேடத் தொடங்குகிறார்கள். இங்கு முழுப் பிரச்சனையும் அறியாமைதான்.

தனது சுயத்தைப் பற்றியதான இந்த அறியாமையிலிருந்து விடுபெற, ஈஷ்வரனுடனான ஐக்கியத்தைப் பெற மற்றும் அதற்கான உபாயமாக சாஸ்திரத்தில் சிரத்தையை அடைய ஈஷ்வர அணுகிரஹம் மிக அவசியமானதாகிறது. அந்த அருளில்லாமல் அனைவரது சுயசொரூபமாக விளங்கும் என்னைப் புறக்கணித்து அழிகிறார்கள்; சிந்திக்கும் திறன் வழங்கப்பட்டும் அதை பயன்படுத்தாதவர்களாக இருக்கிறார்கள். அடுத்த சுலோகத்தில் பகவான் இப்படிப்பட்டவர்களை மேலும் விவரிக்கிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

யானைக்கு வெளியே தோன்றும் தந்தமும் உள்ளே இருக்கும் பற்களுமாக இரண்டுவகைப் பற்களிருக்கின்றன. அவ்வாறு ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா போன்ற அவதார புருஷர்கள் சாதாரணமான வெளித்தோற்றம் உள்ளவர்களாய், எல்லாருடைய பார்வைக்கும் மனுஷ்ய ரீதியை உடையவர்களாகப் புலப்படுகின்றனர். ஆயினும் அவர்கள் கர்மவசத்துக்கு வெகுதூரம் அப்பாற்பட்டவர்களாகிப் பரம சாந்தியில் நிலைத்திருக்கின்றனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||9.12|| இறைவனை அவமதிக்கின்றவர்களது இயல்பு எத்தகையது:

मोघाशा मोघकर्माणो मोघज्ञाना विचेतस:

साक्षसीमासुरीं चैव प्रकृतिं मोहिनीं श्रिता: ।। १२ ।।

மோகா4சா1 மோக4கர்மாணோ மோக4ஜ்ஞாநா விசேதஸ:  

ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ச்1ரிதா: ।। 12 ।।


मोघाशा:  மோகா4சா1:  வீண் ஆசையுடையவர்கள்   

मोघ कर्माण:  மோக4 கர்மாண:  பயனற்ற செயல் செய்பவர்கள்   

मोघ ज्ञाना:  மோக4 ஜ்ஞாநா:  கோணலறிவுடையவர்கள்    

विचेतस:  விசேதஸ:  விவேகமில்லாதவர்கள்    मोहिनीं  மோஹிநீம்  மயக்குகின்ற    

साक्षसीं सुरीं प्रकृतिम् एव  ராக்ஷஸீம் ஆஸுரீம் ப்ரக்ருதிம் ஏவ  ராக்ஷஸ மற்றும் ஆசுர இயல்பையே    

श्रिता:  ச்1ரிதா:  அடைகின்றனர்


வீண் ஆசையுடையவர்கள், பயனற்ற செயல் செய்பவர்கள், கோணலறிவுடையவர்கள், விவேகமில்லாதவர்கள் மயக்குகின்ற ராக்ஷஸ மற்றும் ஆசுர இயல்பையே அடைகின்றனர்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

வீணாசையுடையோர், வீண் செயலாளர், வீணறிவாளர், மதியற்றோர், மயக்கத்துக்கு இடமான ராக்ஷத அசுர மோகினி சக்திகளைச் சார்ந்து நிற்கின்றனர். (ராக்ஷத, அசுர, மோகினி சக்திகளாவனஅவா, குரூரம், மயக்கம் என்ற சித்த இயல்புகள்).


விளக்கம்:

சென்ற சுலோகத்தில் அறிவற்றவர்கள் என பகவானால் கூறப்பட்டவரகள் இங்கு மேலும் விளக்கப்படுகிறார்கள்.

பொய்யுடலை மெய்யென்று நம்பி, அதன் மூலம் போகம் துய்த்தலே குறிக்கோள் என்ற மயக்கம் மோஹம் ஆகிறது. பின்பு, அதன் பொருட்டுக்கொள்ளும் ஆசையும், செய்யும் செயலும், வளர்க்கும் அறிவும், கையாளும் யுக்தியும் ஆத்ம லாபத்துக்கு உதவாதவைகளாய் வீணாகின்றன. இத்தகைய கீழான இயல்புடையவர்களுள் ரஜோகுணத்தோடு கூடியவர் ராக்ஷசர்; தமோகுணத்தோடு கூடியவர் அசுரர் ஆவர், என்கிறார் பகவான்.


=> வீண் ஆசையுடையவர்கள்:

மோகா4சா1:எனில் பயனற்ற விருப்பத்துடன், வீணான வெற்று கனவுகளுடன் கூடியவர்களைக் குறிக்கிறது. அல்லது இனியொரு கோணத்தில் இறையருளை வீணடித்தவர்கள் என்றும் கூறலாம். ஏனெனில் மனிதனாக பிறப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அணுகிரஹம் தேவை; ஆனால் அது சரியாகப் பயன்படுத்தப்படவில்லை எனும்போது அந்த அருள் வீணடிக்கப்படுகிறது


=> பயனற்ற செயல் செய்பவர்கள்:

மோக4 கர்மாண:என்பது பிரயோஜனமில்லாத கர்மம் செய்பவர்களைக் குறிக்கின்றது. ஆத்ம-ஞானத்திற்கு தன்னை தகுதிப்படுத்தும் அந்தக்கரண-சுத்திக்காக செய்யப்படாத எந்தவொரு செயலும் பயனற்றதாகவே உள்ளது. ஏனெனில் அதனுடைய முடிவு தெளிவானதாக இல்லை. எந்த இடைநிலை முடிவும் மனநிறைவைக் கொடுப்பதில்லை. எனவே அவர்கள் மீண்டுமொரு பயனற்ற செயலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். மாறாக, தெளிவான முடிவையுடைய தன்னறிவின் பொருட்டு செயல் செய்யப்படுவதால், கர்மயோகியும் முமுக்ஷுவும் செய்யும் எல்லா கர்மங்களும் அர்த்தமுள்ளதாக ஆகிறது


=> பயனற்ற அறிவையுடையவர்கள்:

மோக4 ஜ்ஞாநா:எனில் பிரயோஜனப்படாத அறிவை உடையவர்கள் என்று பொருள். பரமேஷ்வரனை அங்கீகரிக்கும் முதிர்ச்சியை அளிக்காத எந்தவொரு கல்வியும் புலமையும் பயனற்றதே ஆகும். கல்வி என்பது ஒருவனை பக்குவப்படுத்த வேண்டும். இது வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். நம் முன்னோர்கள் ஒன்றைச் செய்தார்கள் என்பதற்காக நாம் எதையும் பின்தொடர்வதில்லை. என்றாவது ஒரு நாள், ‘நான் என்ன செய்கிறேன்?’ என்ற கேள்வியும் அதற்கான விடையைக் கண்டறியும் முதிர்ச்சியையும் அது அளிக்க வேண்டும்

வெறும் பொருளீட்டுபவனை மட்டும் தயார் செய்யும் கல்வி பயனற்றது. விலங்குகள் கூட பள்ளிப்படிப்பு இல்லாமல் தங்கள் உணவையும் தங்குமிடத்தையும் கண்டுபிடித்துக் கொள்கிறது. கல்வியறிவு இல்லாமல் காடுகளிலும் மலைகளிலும் மக்கள் காலங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் வாழ்ந்தது மட்டுமல்லாமல் நல்ல மூதாதையர்களாக நம்மைப் போன்ற அதிநவீன மக்களை உருவாக்கினார்கள். நவீன மருத்துவமோ தொழில்நுட்பமோ இல்லாமல், இந்த மக்கள்தொகையை உருவாக்க போதுமான அளவு வாழ்ந்தனர். உண்மையில் அடிப்படைத் தேவைகளான உணவு உடை மற்றும் உறைவிடத்தை அடைய இன்றுள்ள பல விஷயங்கள் தேவையில்லை. எனவே கல்வி என்பது தன்னைப் பற்றிய அறிவை அடைவதற்கான முதிர்ச்சியை ஒருவனுக்கு அளிக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களின் அறிவினால் எந்தப் பிரயோஜனமும் இல்லை


=> விவேகமில்லாதவர்கள்:

விசேதஸ:என்பது பகுத்தறியும் புத்தி இல்லாதவர்களை, விவேகம் இல்லாதவர்களைக் குறிக்கின்றது. ஆத்ம-அனாத்ம அறிவு ஒருபுறமிருக்கட்டும், இவர்களிடம் எது சரியானது எது முறையற்றது என்பது குறித்த தர்ம மற்றும் அதர்ம அறிவுகூட இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எதைச் செய்வது சரியானதாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ளும் திறன் இல்லாது, எது தனக்கு வசதியானதாக இருக்குமோ அதை தேர்ந்தெடுக்கிறார்கள். இத்தகையவர்களுக்கு என்ன நடக்கிறது?


=> ராக்ஷஸ மற்றும் அசுர குணமுடையவர்கள்:

இவர்கள் ராக்ஷஸ மற்றும் அசுர இயல்புகளை எடுத்துக் கொண்டவர்களாக ஆகின்றனர்ராக்ஷஸீம் ஆஸுரீம் சைவ மோஹிநீம் ப்ரக்ருதிம் ச்1ரிதா:. ரஜோகுணத்தின் ஆதிக்கத்தில் இருப்பவன் ராக்ஷஸன் ஆகிறான். தனக்கென நிறைய லட்சியங்களை வைத்துக் கொண்டு அதை அடைய தற்பெருமையை தூண்டும் பல்வேறு செயல்களில் ஈடுபடுவான். அவனது இந்த லட்சியமே முக்கியமானது எனும் நோக்கில் அதற்கு தடையாக வரும் எதையும் எவரையும் அழிக்கின்றான். அது ஒரு ராக்ஷஸனின் தன்மை ஆகும். வணிக உலகில் இதுபோன்ற பல ராக்ஷஸர்களை நம்மால் பார்க்கமுடியும். எந்த ஒரு சிறிய போட்டியாளரையும் எங்கும் வாங்கிக் குவிப்பார்கள். இனியொருவரின் வாழ்க்கை, மகிழ்ச்சி மற்றும் நலன் குறித்த எந்தவித அக்கறையும் இல்லாமல் தன்னையே மையமாகக் கொண்டு செயல்படும் தன்மையுடைய இவனை, ராக்ஷஸ-பிரக்ருதி உடையவன் என்கிறோம். ஈஷ்வரனைக் குறித்த அங்கீகாரம் இல்லாததே இதற்கு காரணம் ஆகிறது.

அல்லது, இவன் ஒரு அசுரனாக தமோகுணப் பிரதானமானவனாக இருக்கிறான். இத்தகையவர்கள் சாப்பிடுவதிலும் குடிப்பதிலும் எந்தவொரு வரையறையும் இல்லாதவர்களாக உள்ளனர்.

=> புத்தியை மயக்குவது:

ஒருவனை மேலும் மோஹத்திற்குள்ளாக்கும் இந்த வகையான நடத்தையை, பிரக்ருதியை பகவான்மோஹிநீஎனக் கூறுகிறார். ‘மோஹிநீம்எனில் மயலூட்டுகிற, புத்தியை மயக்குகின்ற என்பது பொருள். மயக்கத்திற்கு இடம்தருகிற இந்த குணங்களை உடையவர்கள் தங்களது உடலையே சுயம் என எடுத்துக் கொள்கிறார்கள் என சங்கரர் தனது பாஷ்யத்தில் விளக்கமளிக்கிறார். அவர்களது பார்வையில் தனது சுயமும் உடலும் ஒன்றேயாம். உடல் இறக்கும்போது நானும் இறந்துவிடுகிறேன். எனவே முடிந்தவரை புலன்களைப் பேணி அவைகளைத் திருப்திபடுத்த வேண்டும் என வாதம் செய்கின்றனர். ‘மோஹிநீம்எனும் சொல்லுடன்ப்ரக்ருதிஎன்ற சொல்லை சேர்ப்பதன்மூலம், இந்த குணங்கள் அவர்களினுடைய இயல்பைக் காட்டிலும் அவர்களின் ஒருவகை தத்துவமாகவே மாறிவிடுவது காட்டப்படுகின்றது

அல்லது அவர்கள் சிந்திக்க முடியாத அல்லது சிந்திக்க விரும்பாத எளிய மனிதர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் மக்கள் சிந்திக்கத் தூண்டப்பட வேண்டும். ஒரு மனிதனைச் சரியாகச் சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே அவனுக்கு அளிக்கப்படக்கூடிய மிகப்பெரிய பரிசு ஆகும். சரியாக சிந்திப்பதன் மூலமே மக்கள் வளர்கிறார்கள்.

ராக்ஷஸர்கள் மற்றும் அசுரர்களின் இயல்பையும் வாழ்க்கை முறையையும் பற்றி சங்கரர் சில விஷயங்களைக் கூறுகிறார். அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் பின்வருமாறு இருக்கிறது: ‘சிந்தி_கொல்லுங்கள், பிந்தி_வெட்டுங்கள்என்று கூறிக் கொள்கிறார்கள். அதாவது எதை வேண்டுமானாலும் செய்து தனக்கு எதிர் நிற்பவனை அழித்துவிடு என்கிறார்கள். மேலும், ‘பிப_குடி, காட_சாப்பிடுபோன்ற வார்த்தைகளை பரிமாறிக் கொள்கின்றனர். அதாவது, எதை வேண்டுமானாலும் குடி; பறப்பது, ஊர்வது, நடப்பது, நீந்துவது என எதை வேண்டுமானாலும் சாப்பிடு என்கிறார்கள். அதேபோல, ‘மற்றவரின் செல்வத்தை, நிலத்தை, சொத்தை எதைச் செய்தேனும் அபகரிப்பதோடு தன்னை முன்னோடி என்று கூறி மார்தட்டிக் கொள்’, என்கிறார்கள். மேலும் அவர்கள் எத்தனை பேரை அழித்தார்கள், எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக மாறினார்கள், என்ன சாப்பிடுகிறார்கள், என்ன ஆபரணங்கள் வைத்திருக்கிறார்கள் போன்றவற்றின் அடிப்படையில் தங்களது சாதனைகளைப் பற்றி தங்களுக்குள் பேசுகிறார்கள். அவர்களின் செயல்பாடுகள் கொடூரமானவை. மேலும் அவர்கள் தங்களிடம் உள்ள அருளைப் சரியான வகையில் பயன்படுத்த முடியாததால் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.

விவேகமே அருள். அதைப் பயன்படுத்த தவறியவர்களின் அருள் வீணடிக்கப்பட்டதாகவே ஆகிறது. இந்த மேற்கூரிய மயக்கும் பிரக்ருதியிலிருந்து வெளியேறுவது மிகவும் கடினமானது. அதற்கு ஒருவன் ஈஷ்வரனிடமிருந்து பெறக்கூடிய அதிகபட்ச கிருபையை அடையவேண்டும்.  

---------------------------------------------------------------------------------------------------------------------