திங்கள், 9 அக்டோபர், 2023

ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் 9.13 - 9.14

||9.13|| பக்தர்களைக் குறித்து பேசுகிறார்:

महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिता:  

भजन्त्यनन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम् ।। १३ ।।

மஹாத்மாநஸ்து மாம் பார்த2 தை3வீம் ப்ரக்ருதிமாச்1ரிதா:

4ஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூ4தாதி3மவ்யயம் ।। 13 ।।


पार्थ  பார்த2  பார்த்தா    तु  து  ஆனால்    महात्मान:  மஹாத்மாநமஹாத்மாக்கள்    

दैवीं प्रकृतिम्  தை3வீம் ப்ரக்ருதிம்  தெய்வீக இயல்பை   श्रिता:  ஆச்1ரிதா:  அடைந்தவர்களாய்    

अनन्य मनस:  அநந்ய மநஸ:  வேறு எதிலும் பற்று வைக்காதவராய்    

भूतादिम्  பூ4தாதி3ம்  உயிர்களுக்கு பிறப்பிடமும்   अव्ययम्  அவ்யயம்  அழியாதவனும்   

मां மாம்  என்னை    ज्ञात्वा  ஜ்ஞாத்வா  அறிந்து    भजन्ति  4ஜந்தி  வழிபடுகிறார்கள்.


பார்த்தா, ஆனால் மஹாத்மாக்கள் தெய்வீக இயல்பை அடைந்தவர்களாய், உயிர்களுக்கு பிறப்பிடமும் அழியாதவனும் நான் என்று அறிந்து, வேறு எதிலும் பற்று வைக்காது என்னை வழிபடுகிறார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பார்த்தா, மகாத்மாக்கள் தெய்விக இயல்பைக் கைகொண்டு பூத முதலும் கேடற்றவனுமாகிய என்னை வேறு மனம் இன்றி வழிபடுகிறார்கள்.


விளக்கம்:

=> மஹாத்மாக்கள்:

இந்த சுலோகத்தில்துஎன்ற சொல், முந்தைய சுலோகத்தில் நாம் பார்த்தவர்களிடமிருந்து இங்கு பேசப்படுபவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. பார்த்தா, முன்பு பார்த்தவர்களின் சுபாவத்திலிருந்து இது மிகவும் வித்தியாசமானது எனக் கூறி பக்தர்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார்.

மறுபுறம், மஹாத்மாக்கள் என்னை நாடுகிறார்கள்மஹாத்மாந: து 4ஜந்தி. அன்பு மற்றும் இரக்கத்துடன் கூடிய இவர்கள் தூய்மையான பெரிய மனதை உடையவர்கள் ஆவர். அதனால்தான் அனைத்து சாதுக்களும் மஹாத்மாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஒரு சாது யாருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை; கருணையால் தூண்டப்படுவதால் முடிந்தவரை மற்றவருக்கு உதவுவது அவருக்கு இயற்கையான குணமாக ஆகிறது.


=> தெய்விக தன்மையுடையவர்கள்:

மேலும், இந்த மஹாத்மாக்கள் தெய்விக இயல்பை அடைந்தவர்களாக உள்ளனர்தை3வீம் ப்ரக்ருதிம் ஆச்1ரிதா:. தெய்விக இயல்பு சத்துவ குணத்தினின்று வருகிறது. ஜீவர்களெல்லாம் பகவானிடத்திருந்து தோன்றியவர்கள்; இப்பேருண்மையை உணர்ந்து திரும்பி அவனைச் சென்று அடைய விரும்புபவர்கள் மஹாத்மாக்கள் ஆகின்றனர். கரணங்களை அடக்குதல், அவருடைய உயிர்களிடத்து அன்பாயிருத்தல், அவரை அடைவதற்கு சிரத்தை காட்டுதல் முதலிய நல்லியல்புகள் அத்தகைய மேலோர்க்கு எளிதில் வந்தமைகின்றன. இச்சுலோகங்களில் பெயரால் மட்டுமே குறிப்பிடப்பட்ட ராக்ஷஸ, அசுர மற்றும் தைவீ எனும் இந்த மூன்று பிரக்ருதிகளையும், பகவான் பின்வரும் அத்தியாயங்களில் தனித் தலைப்புகளாக எடுத்துக் கொண்டு விரிவாக விளக்கப்போகிறார்.


=> உயிர்களின் பிறப்பிடம்:

அனைத்துயிர்களுக்கும் காரணமான என்னை நாடுகிறார்கள்பூ4தாதி3ம் மாம், என்கிறார் கிருஷ்ணர். பூ4தாதி3ம் பூ4 + ஆதி3ம், உயிர்களின் தொடக்கத்தில் எது இருந்ததோ அது என்பது பொருள். எது காரணமோ அதுவே ஆரம்பத்தில் இருக்கிறது. எனவேபூ4தாதி3எனில் இந்த உலகிற்கு காரணமானவர் எனப்படுகிறது. இந்த உலகம் முழுவதற்கும் காரணமானவர் என்று அவர் கூறும்போது, அது ஒருவித மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்று ஒருவன் நினைக்கலாம். ப்ரம்ம ஒரு காலத்தில் இருந்து, இப்போது உலகமாக மாறிவிட்டது. அப்படியானால், உலகம் மட்டுமே உள்ளது; ப்ரம்ம இல்லை என்றாகிறது.

அது அவ்விதம் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கில், ‘அவ்யயம்மாறாதது என்கிறார். தென்படுகிற இந்த உலகமாக மாறுவதற்கு, காரணமான ப்ரம்மம் உண்மையில் எந்த மாற்றத்தையும் அடைவதில்லை. ஆனால் மாற்றம் தெரிகிறதே எனில், அது முற்றிலும் மித்யாவான நாம ரூபத்தின் அடிப்படையில் காணப்படுகிறது. முழு சிருஷ்டியும் மித்யா எனும்போது தன்னை எவ்வித மாற்றத்திற்கும் உட்படுத்தாத, தனது இயல்பை எப்பொழுதும் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு மூலமே காரணமாக இருக்க முடியும். இவ்விதம் அழியாத காரணமாக விளங்குபவனாக என்னை அறிந்து, அவர்கள் என்னை நாடுகிறார்கள்பூ4தாதி3ம் அவ்யயம் மாம் ஜ்ஞாத்வா 4ஜந்தி


=> வேறெதிலும் பற்றில்லாதவர்கள்:

இந்த வகையில் அவர்கள் பகவானை எப்படி அறிகிறார்கள்? இங்கே தெரிந்துகொள்வது என்பது சாஸ்திரம் மற்றும் குரு மூலமாக அடையப்படும் பரோக்ஷ-ஞானம் ஆகும். ‘பரோக்ஷம்என்பது நேரடியானதாக அல்லாமல் மற்றொருவர் மூலமாக அடையப்படும் ஞானம், அதாவது செவி வழியாக கேட்டறியப்படும் கேள்வி-ஞானம் எனலாம். இந்தவளவு அறிவு கிடைத்தவுடன் சிரத்தை காரணமாக அவர்கள் பகவானை வழிபடுகிறார்கள், நாடுகிறார்கள். அவர்களின் இந்த நாட்டம் என்பது பகுதி-நேர விவகாரம் அல்ல. ஈஷ்வரனைக் காட்டிலும் வேறு இடத்தில் மனதைச் செலுத்தாதவர்களாக, வேறு எதனாலும் திசை திருப்பப்படாதவர்களாக நாடுகிறார்கள்அநந்ய மநஸ: 4ஜந்தி. விவேகத்தின் மூலம் தர்ம-அர்த்த-காமத்தில் பற்றை இழந்தவர்களாக மோக்ஷத்தை மட்டுமே நாடுகிறார்கள். சுய-கட்டுப்பாடு, இரக்கம், சாஸ்திர மற்றும் குருவிடம் சிரத்தை முதலியவைகள் அவர்களின் இயல்பான குணங்களாக ஆகின்றன. அவர்களின் அனைத்து பிரார்த்தனைகளின் பலனாக இந்த முமுக்ஷுத்துவம் வந்தமைகிறது

இது கவனச்சிதறல் இல்லாமல் செய்யப்பட வேண்டுமெனில், குடும்ப விவகாரத்தில் இருக்கும் ஒருவனால், தாயாக அல்லது தந்தையாக இருக்கும் ஒரு நபரினால் இதை எப்படி செய்யமுடியும் எனச் சிலர் கேட்கலாம். இந்த அறிவை தொடர்வது முழு நேரமாக செய்யப்பட்டாலும் அல்லது ஒருவனது கடமைகளை நிறைவேற்றுவதோடு கூட இதைத் தொடர்ந்தாலும், அவனின் அர்ப்பணிப்பு மட்டுமே முக்கியமானது. அர்ப்பணிப்பு இருந்தால் என்ன செய்தாலும் இந்த நாட்டம் போகாது. காதலில் இருக்கின்ற ஒருவன் அவனது அன்றாட கடமைகளில் ஈடுபடுவதால் அவனது காதலுக்கு எந்த பாதிப்பும் நேரப்போவதில்லை. அவனது மனதிலுள்ள அன்பு அப்படியே நீடிக்கிறது. அதுபோலவே இறை-நாட்டத்தில் முழு அர்ப்பணிப்புடன் இருக்கும் முமுக்ஷு, இங்கு அநந்ய மநஸ: என அழைக்கப்படுகிறான்

  இவர்கள் சுயநலமற்றவர்கள் என்கிறார் சங்கரர். ‘நான்-எனதுஎனும் கோட்பாட்டை கடந்தவர்களாக இந்த பாதையை பின்தொடர்கிறார்கள். இவர்கள் எப்படி ஈஷ்வரனை வழிபடுகிறார்கள் என அடுத்த இரு சுலோகங்களில் கூறுகிறார் கிருஷ்ணர்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||9.14|| எப்படிப்பட்டவர்களாக பக்தி செலுத்துகிறார்கள்

सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रता:

नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते ।। १४ ।। 

ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தச்1 த்3ருட4வ்ரதா:

நமஸ்யந்தச்1 மாம் 4க்த்யா நித்யயுக்தா உபாஸதே ।। 14 ।।


सततं  ஸததம்  எப்பொழுதும்    मां  மாம்  என்னை    कीर्तयन्तகீர்தயந்தபுகழ்பவராய்    

दृढव्रता:  த்3ருட4வ்ரதா:  உறுதியான விரதத்தோடு   यतन्त:   யதந்த:   முயல்பவராயும்    

भक्त्या  4க்த்யா  பக்தியுடன்    नमस्यन्त:    நமஸ்யந்த   நமஸ்கரிப்பவர்களாயும்    

नित्ययुक्ता:  நித்யயுக்தா:   நித்திய யோகிகள்    मां उपासते  மாம் உபாஸதே  என்னை உபாஸிக்கின்றார்கள்.


எப்பொழுதும் என்னை புகழ்பவராயும், உறுதியான விரதத்தோடு முயல்பவராயும், பக்தியுடன் நமஸ்கரிப்பவர்களாயும் நித்திய யோகிகள் என்னை உபாஸிக்கின்றார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

திடவிரதத்துடன் முயற்சி புரிவோராய், எப்போதும் என்னைப் புகழ்வோராய், என்னைப் பக்தியால் வணங்குவோராய் நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில், பக்தர்கள் தங்களை எப்படிப்பட்டவர்களாக வைத்துக் கொண்டு ஈஷ்வரனை வழிபடுகிறார்கள் என பகவான் கூறுகிறார். ஐந்து வகையான பக்த லக்ஷணங்களின் மூலம் இதை விளக்குகிறார்:


=> போற்றுபவர்கள்:

எப்பொழுதும் பரமேஷ்வரனாகிய எனது மகிமையை போற்றுகிறார்கள்ஸததம் மாம் கீர்தயந்த:. இந்த பக்தர்கள் எப்பொழுதும் ஈஷ்வரனின் பெருமையையும் மகிமையையும் புகழ்ந்து போற்றிக்கொண்டே இருக்கிறார்கள். ஈஷ்வர மகிமை சாதாரணமானது அல்ல. உதாரணமாக, எல்லா உயிர்களும் பொருட்களும் அவரிடத்தில் உள்ளன; ஆனால் ஈஷ்வரனோ அவைகள் அனைத்திலிருந்தும் விடுபட்டவராகவும், தனது இருப்புக்கு அவைகளைச் சாராதவராகவும் இருக்கிறார். மேலும் அவர், எந்த மாற்றத்தையும் அடையவில்லை, அதேசமயம் முழு சிருஷ்டியாகவும் இருக்கிறார்; அவர் எதையும் செய்வதில்லை, அதேசமயம் அனைத்து படைப்பையும் உருவாக்குபவராக, தக்கவைப்பவராக மற்றும் அழிப்பவராக இருக்கிறார். இப்படிப்பட்ட முடிவிலாத பரமேஷ்வரனின் மஹிமையை இவர்கள் புகழ்கிறார்கள். இந்தகீர்தயந்த:எனும் சொல்விசாரயந்த:என்ற பொருளில், சிரவண-மநந-நிதித்யாசனத்தின் மூலம் ஈஷ்வரனை விசாரம் செய்பவர்களையும் குறிக்கும். இதைச் செய்பவர்கள் யார்?


=> முயற்சி செய்பவர்கள்

யதந்த:எனில் முயற்சி செய்பவர்கள் என்று பொருள். எதற்காக முயற்சி செய்கிறார்கள்? சிரவண-மநந-நிதித்யாசனத்தின் மூலம் ஈஷ்வரனைக் குறித்த அறிவை அடைய, ஒருவனுக்கு முதிர்ச்சியடைந்த மனம் என்பது அடிப்படையானத் தகுதியாகிறது. முழு முயற்சியில் ஈடுபடுவதன் மூலமாகத்தான் ஒருவன் தெய்விக குணங்களை(தைய்வீ சம்பத்) அடையமுடியும். அதன் வழியாக அவன் மன முதிர்ச்சியை அடைகிறான். எனவேதான் சங்கரர் தனது பாஷ்யத்தில்யதந்த:எனும் சொல்லை பின்வருமாறு விளக்குகிறார்இந்திரியோபஸம்ஹார 1 3 3யா அஹிம்ஸாதி3 லக்ஷணை: 4ர்மை: ப்ரயதந்த:. இது சந்யாசத்தின் தெளிவான வரையறை ஆகும். ‘இந்திரிய உபஸம்ஹாரஎனில் புலனடக்கம்; கற்பனைகளின்படி செயல்படாது புலன்களை ஒடுக்குதலைக் குறிக்கும். இயற்கையாகவே இது உடலளவில் 1-த்தையும், மனதளவில் 3-த்தையும் உள்ளடக்குகிறது. இது மனதின் இயந்திரத் தனமான சிந்திக்கும் முறைகளையும் மனநிலைகளையும் கட்டுக்குள் வைத்திருக்கும் திறனைக் குறிக்கிறது. அதாவது எண்ண ஓட்டங்களில் கட்டுண்டு அவைகளால் வழிநடத்தப்படுவதற்கு பதிலாக, விலகி நின்று அதை பார்க்கின்ற தன்மையைக் குறிக்கிறது. அதுபோல இரக்கம்(3யா) மற்றும் துன்புறுத்தாமை(அஹிம்ஸா) போன்ற மனத்தூய்மைக்கான பண்புகளை கடினப்பட்டுதான் அடையமுடியும். அதற்காக எப்பொழுதும் முயற்சி செய்பவர்களாக இந்த பக்தர்கள் உள்ளனர். எனவேதான் பகவான் இங்குயதந்த:என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்

ஒரு சந்யாசியதி_முயற்சி செய்பவர்என அழைக்கப்படுகிறார். அந்த சந்யாசி செய்வதற்கு இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று ஞானத்தைப் பின்தொடர்வது, மற்றொன்று மன முதிர்ச்சிக்காக முயற்சி செய்வது. எனவே, அதிகாரித்துவத்தை அடையவும் சாஸ்திரத்தை கேட்டகவும் தேவையான முயற்சியை ஒரு வேதாந்தி ஒவ்வொரு நாளும் மேற்கொள்கிறான். இத்தகையவர்கள் இங்குயதந்த:என்றழைக்கப்படுகிறார்கள்.


=> உறுதியான விரதம் உடையவர்கள்:

மேலும் அவர்கள் உறுதியான விரதத்தை உடையவர்கள்த்3ருட4வ்ரதா:. பலர் ஆரம்பத்தில் மிகவும் உற்சாகமாக இருப்பார்கள், நாளடைவில் ஆர்வமிழந்து அமைதியாக விலகிச் செல்வார்கள். ஆனால் இங்கு இவர்கள் மோக்ஷத்தில் உறுதி கொண்டவர்களாக, இலக்கிலிருந்து எப்பொழுதும் பின்வாங்காதவர்களாக தொடர்கிறார்கள். பொதுவாகவ்ரதஎன்பது உறுதிமொழி அல்லது சபதம் என மொழிபெயர்க்கப்படும். இங்கு அது உறுதிப்பாட்டை, அர்ப்பணிப்புணர்வைக் குறிக்கிறது. அவர்கள் மோக்ஷமெனும் மேலான லக்ஷியத்தில் (பரம புருஷார்த்தம்) உறுதியாக இருக்கிறார்கள். மற்ற மூன்று புருஷார்த்தங்களான தர்ம, அர்த்த, காமம் அவர்களை தாக்குவதில்லை. சந்ததி, இம்மையில் பாதுகாப்பு மற்றும் மறுமையில் சிறந்த சூழ்நிலை போன்ற ஆசைகளிலிருந்து விடுபட்டவர்களாக அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிடுகிறார்கள். விடுதலையை அளிக்கும் ஆத்ம-ஞானத்திற்கு மட்டுமான வாழ்க்கையையே வாழ்கிறார்கள். அத்தகையவர்கள்த்3ருட4வ்ரதா:என்றழைக்கப்படுகின்றனர்.

=> சரணடைந்தவர்கள்:

இந்த பயணத்தில் ஈஷ்வரனின் அருள் முக்கியமானது. எனவே பகவான், இவர்கள் பக்தியுடன் என்னை சரணடைந்தவர்கள்4க்த்யா மாம் நமஸ்யந்த:, எனக் கூறுகிறார். இவர்கள் அஹங்காரமில்லாது, முழு நம்பிக்கையுடன் முயற்சி செய்து, அனைத்தும் ஈஷ்வர பிரசாதம் என பிரார்த்தனை மனதோடு சரணடைந்தவர்கள் ஆவர். ஈஷ்வர ஞானத்தை அடைவதில் பக்தி மிக அவசியமானது. அதனால்தான் வேதாந்தம் என்பது வெறும் கல்வியறிவு மட்டுமல்ல. அல்லது இது முழுக்க முழுக்க மதம் சம்பந்தப்பட்டது எனவும் கூறமுடியாது. ஏனெனில் இதில் நிறைய விசாரங்கள் உள்ளன. ஒவ்வொரு வார்த்தைகளையும் அவற்றின் அர்த்தங்களையும் விசாரணை செய்கின்றோம். இதற்கு இலக்கணம், தர்க்கம் போன்றவைகளும் தேவைப்படுகின்றன. இதனால் இது ஒரு கல்வியறிவாகத் தெரிந்தாலும் இதன் முழு நோக்கமும் பண்புநலன்களைச் சார்ந்தது. ஆகையினால் இது முழுவதும் சரணாகதியின் அடிப்படையில், பக்தியின் சூழலில் நடைபெறும் பயணம் ஆகிறது. எனவே, இவர்கள் பக்தியுடன் என்னிடம் சரணடைந்து, பிரார்த்தனை நிறைந்த இதயத்துடன் என்னைத் நாடுகிறார்கள்நமஸ்யந்தச்1 மாம் 4க்த்யா உபாஸதே, என்கிறார்.

மேலும், ஈஷ்வரனை கர்ம-2-தா3தா, செயல்களுக்கான பலனைத் தருபவராக அங்கீகரிப்பதன் மூலம் பக்தி மனப்பான்மை உண்டாகிறது. எல்லா கர்மங்களுக்கும் தலைமை தாங்குபவராக, எந்தச் செயலையும் சாத்தியமாக்குபவராக அவரே இருக்கிறார். இவ்வாறு இரண்டு நிலைகளிலும், அதாவது, செயலைச் செய்யும் நிலையிலும், அதற்கான பலன்களைப் பெறும் நிலையிலும், அவர்கள் ஈஷ்வரனை போற்றுகிறார்கள்.


=> நித்திய யோகிகள்:

என்றும் பொருந்திய மனதையுடையவர்களாக என்னை வணங்குகிறார்கள்நித்யயுக்தா:. இவர்கள் சஞ்சலமில்லாத, பாதுகாப்பாக வைக்கப்பட்ட மனதுடன் பக்தி செலுத்துகிறார்கள். புலன்கள், மனம், புத்தி முதலிய அனைத்து கருவிகளும் ஒன்றில் பொருந்தியவர்களாக ஈஷ்வரனை தியானிக்கிறார்கள். ‘மாம் 4க்த்யாஎனும் சொல்லைநமஸ்யந்த:மற்றும்நித்யயுக்தா:ஆகிய இரு சொற்களுடனும் இணைத்து பொருள் கொடுக்கலாம். அதாவது, பக்தியினால் என்னுடன் நிலையாக பொருந்தியிருப்பவர்களாக என்னை தியானிக்கிறார்கள்4க்த்யா நித்யயுக்தா: மாம் உபாஸதே. ‘உபாஸதேஎனில் வணங்குகிறார்கள், தியானிக்கிறார்கள் அல்லது பக்தி செலுத்துகிறார்கள்.

---------------------------------------------------------------------------------------------------------------------