புதன், 25 அக்டோபர், 2023

ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் 9.17 - 9.18

||9.17|| ஈஷ்வரனின் பெருமை தொடர்கிறது:

पिताहमस्य जगतो माता धाता पितामह:

वेद्यं पवित्रमोंकार: ऋक्साम यजुरेव ।। १७ ।।

பிதாஹமஸ்ய ஜக3தோ மாதா தா4தா பிதாமஹ:  

வேத்3யம் பவித்ரமோங்கார ருக்ஸாம யஜுரேவ ।। 17 ।।


अस्य जगत:  அஸ்ய ஜக3:  இந்த ஜகத்தின்   पिता माता  பிதா மாதா  தந்தை தாய்   अहम् एव  அஹம் ஏவ  நானே    

धाता  தா4தா  கர்மபலனைக் கொடுப்பவன்    पितामह:  பிதாமஹ:  பாட்டனார்   वेद्यं   வேத்3யம்  அறியத்தக்கவன்    

पवित्रम्  பவித்ரம்  தூய்மை செய்பவன்     ओङ्कार:  ஓங்கார:  ஓங்காரம்    

ऋक् साम यजु:  ருக் ஸாம யஜு:   ரிக் சாமம் யஜுர் வேதமும்.


இந்த ஜகத்தின் தாய் தந்தை பாட்டனாரானவனும், கர்மபலனைக் கொடுப்பவனும், அறியத்தக்கவனும், தூய்மை செய்பவனும், ஓங்காரம், ரிக் சாமம் யஜுர் வேதங்கள் ஆகின்றவனும் நானே.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இந்த உலகத்தின் அப்பன் நான்; இதன் அம்மா நான்; இதைத் தரிப்போன் நான்; இதன் பாட்டன் நான்; இதன் அறியப்படு பொருள் நான்; தூய்மை செய்வது நான்; ஓங்காரம் நான்; நான் ரிக்; நான் ஸாமம்; நான் யஜுர்.


விளக்கம்:

=> மூல காரணம்:

முந்தைய சுலோகத்தில் பார்த்தவிஷ்வதோமுகம்இங்கு மேலும் விளக்கப்படுகிறது. அஸ்ய ஜக3: அஹம் பிதாஇந்த உலகின் தந்தை நான் என்கிறார் பகவான். இங்கு தந்தை எனக் கூறுவதிலிருந்து, அவர் இந்த உலகனைத்தையும் படைத்தவன், நிமித்த-காரணமாக இருப்பவன் நான் என்கிறார். பின்னர், நான் தாய்அஹம் மாதா, என்கிறார். அதாவது மாயையான பிரக்ருதி என்னிடமிருந்து பிரிக்கப்படாதது ஆகையால் இந்த சிருஷ்டியின் உபாதான-காரணமாக நானே உள்ளேன் என்கிறார். இதிலிருந்து இவ்வுலகின் மூலப்பொருளாகவும் உருவாக்குபவனாகவும் நானே இருக்கின்றேன் என்கிறார்.

இவ்விதம் தந்தை மற்றும் தாய் எனக் கூறப்படும்போது, இயல்பாகவே ஒருவனுக்கு எழும் அடுத்த கேள்வி, அவருடைய பெற்றோர் யார்? கடவுளைப் படைத்தது யார்? இந்த சிந்தனைமுறையை மறுக்கும் நோக்கத்தில் பகவான், அஹம் பிதாமஹ: நான் பாட்டனார் என்கிறார். இதன் பொருள், நான் காரணமற்ற காரணம் என்பதாகும். இவ்வுலகின் ஆதாரமாக விளங்கும் ப்ரம்மனே தந்தையாகவும் பாட்டனாராகவும் இருக்கிறார் என்பதிலிருந்து உண்மையில் தனியாக பாட்டனார் என எவருமில்லை என்பதாகிறது

அஹம் தா4தா இந்த உலகை நிலைநிறுத்துபவன் மற்றும் கர்மபலனைத் தருபவன் நான்.


=> முழுவதுமாக அறியக்கூடியது:

அஹம் வேத்3யம் அறியப்பட வேண்டியவன் நான். யாரை அறிந்தால் வாழ்க்கையின் மர்மம் முழுதும் விளங்குகிறதோ அவன் அறியத்தக்கவன், ஈஷ்வரன். ஸத்-வஸ்துவான பரமேஷ்வரன் அறியப்படும்போது அனைத்தும் அறியப்படுகின்றது. உண்மையில் ஸத்-வஸ்து மட்டுமே முழுமையாக அறியக்கூடியது. மற்றவை அனைத்தும் மித்யாவாக இருப்பதால், சுதந்திரமானதாக இல்லாமல் தனது இருப்புக்கு வேறொன்றை சார்ந்திருப்பதால், பகுதிகளாக மட்டுமே அவைகளை அறியமுடியும். உதாரணமாக ஒரு சட்டையை எடுத்து கொண்டால், அது துணியைச் சார்ந்தும், துணி என்பது நூலைச் சார்ந்தும், நூல் என்பது பஞ்சை சார்ந்தும், பின் அதனுடைய சார்புத்தன்மை பருத்தி, மரம், விதை என நீண்டு கொண்டே செல்கிறது. எனவே இவ்வுலகில் எந்தவொன்றையும் ஒரு குறிப்பிட்ட நிலைபாட்டில் வைத்து வரையறுக்கலாமே தவிர அதையே அதனுடைய முழுமையான அறிவு எனக் கூறிவிட முடியாது. எந்தவொன்று நிலையானதாக உள்ளதோ, தனது இருப்புக்கு எதையும் சாராததாக, சுதந்திரமானதாக உள்ளதோ அதுவே அறியத்தக்கது. சுயமாக விளங்கும் இந்த வஸ்து எந்த பண்புகளும் அற்றதாக இருக்கிறது. இதனாலேயே ஆத்மா வேத்ய-வஸ்து என்றழைக்கப்படுகிறது. ஈஷ்வரனிடமிருந்து வேறானதாக இல்லாத இந்த ஆத்மா அறியத்தக்கது ஆகும்.  


=> வேதங்களும் சப்தங்களும்:

நான் எப்படி அறியப்பட வேண்டும்? ஸர்வை: வேதை:, எல்லா வேதங்களின் மூலமும் அறியப்பட வேண்டியவன் நான். எனவே, அஹம் ஏவ ருக் ஸாம யஜு:நானே ருக்வேதம், சாமவேதம், யஜுர்வேதம் என்று கூறுகிறார். நான்கு வேதங்கள் இருந்தாலும், எல்லா சடங்குகளிலும் இந்த மூன்று மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் அதர்வண வேதம் மிகப் பிற்காலத்தில் உண்டானதால் அது இங்கு பகரப்படவில்லை

இந்த வேதங்களே சப்தம் அல்லது ஓசையின் துணையைக் கொண்டு தோன்றியவைகள் ஆகும். ஓசை அனைத்தும் ஓங்காரத்தில் அடங்கியிருக்கின்றன. பகவானின் பெயராக விளங்கும் இந்த ஓம், எல்லா மந்திரங்களுக்கும் மூல மந்திரமாகும். இது சகுண ப்ரம்மத்தையும், நிர்குண ப்ரம்மத்தையும் குறிக்கிறது. இதன் முழு விளக்கத்தையும் மாண்டூக்ய உபநிஷத்தில் விரிவாகக் காணலாம். ஓம் என்பது ++ம் ஆகிய மூன்று ஓசைகளின் வடிவம் கொண்டது. ‘என்னும் எழுத்து தோற்றத்தையும், ‘என்பது இருப்பையும், ‘ம்என்பது ஒடுக்கத்தையும் குறிக்கின்றன. இந்த ஓங்காரமாக நான் உள்ளேன்அஹம் ஓங்கார:.


=> அனைத்தையும் நீக்குபவன்:

தூய்மைபடுத்தும் சாதனங்களாகப் பல உள்ளன. தம்மை வந்து சாரும் பொருள்களைத் தூயதாக்கும் இயல்பு மண், நீர், தீ, காற்று முதலியவைகளுக்கு உண்டு. அவ்விதம் தூய்மைபடுத்தப்பட்ட பொருட்கள் மீண்டும் மலினமடையக் கூடும். ஆனால் முற்றிலுமாகத் தூய்மைப்படுத்துவது எது? ஒரு ஜீவன், தனது விருப்பு வெறுப்பினால் தூண்டப்பட்டவனாக செய்யப்படும் செயல்களால் அவன் அனைத்து வகையான புண்ணிய பாபங்களைப் பெறுகின்றான். இதிலிருந்து அவனை சுத்திகரிக்கும் சாதனம் எது? ஈஷ்வர ஞானம். என்னைப் பற்றிய ஞானமே ஒருவனை சம்சாரத்தின் ஒவ்வொரு சுவடுகளிலிருந்தும் தூய்மைப்படுத்துவதால் நான் தூய்மை செய்பவன்அஹம் பவித்ரம்.

இவ்விதமாக செயலாகவும், செயலைச் செய்யும் முறைகளாகவும் மற்றும் செயலுக்கான பலனைத் தருபவராகவும் நானே இருக்கின்றேன் என பகவான் கூறியுள்ளார். அடுத்த சுலோகத்தில் மேலும் தொடர்கிறார்.

ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பகவான், பாகவதம், பக்தர்கள் இவையாவும் ஒன்றேயாம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

||9.18|| ஈஷ்வர மஹிமையின் தொடர்ச்சி:

गतिर्भर्ता प्रभु: साक्षी निवास: शरणं सुहृत्

प्रभव: प्रलय: स्थानं निधानं बीजमव्ययम् ।। १८ ।।

3திர்ப4ர்தா ப்ரபு4: ஸாக்ஷீ நிவாஸ: 1ரணம் ஸுஹ்ருத்

ப்ரப4: ப்ரலய: ஸ்தா2நம் நிதா4நம் பீ3ஜமவ்யயம் ।। 18 ।।


गति:  3தி:  புகலிடம்    भर्ता  4ர்தா  காப்பவன்    प्रभु:  ப்ரபு4:  தலைவன்       साक्षी  ஸாக்ஷீ  சான்று    

निवास:  நிவாஸ:  இருப்பிடம்   शरणं  1ரணம்   அடைக்கலம்    सुहृत्  ஸுஹ்ருத்  தோழன்    प्रभव:  ப்ரப4:  பிறப்பிடம்  

प्रलय:  ப்ரலய:  ஒடுங்குமிடம்   स्थानं  ஸ்தா2நம்  தங்குமிடம்    निधानं   நிதா4நம்  களஞ்சியம்    

अव्ययम् बीजम्  அவ்யயம் பீ3ஜம்  அழியாத வித்து.


நானே புகலிடம், காப்பவன், தலைவன், சாக்ஷி, இருப்பிடம், அடைக்கலம், தோழன், பிறப்பிடம், ஒடுங்குமிடம், தங்குமிடம், களஞ்சியம், அழியாத வித்தாக உள்ளேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இவ்வுலகத்தின் புகல், இதனிறைவன், இதன் கரி, இதனுறையுள், இதன் சரண், இதன் தோழன், இதன் தொடக்கம், இதன் அழிவு, இதன் இடம், இதன் நிலை, இதன் அழியாத விதை.


விளக்கம்:

நான் இவ்வுலகில் எப்படியெல்லாம் வெளிப்படுகிறேன் எனக் கூறி ஈஷ்வர மஹிமையைத் தொடர்கிறார் பகவான்.

3தி: நான் கதியாக உள்ளேன். செய்த கர்மத்திற்கு ஏற்றவாறு அடையுமிடம் அல்லது புகலிடம் கதி எனப்படுகிறது. எனவே ஒருவன் தனது செயலினால் அடையப்படும் எந்தவொரு முடிவுமாக நானே இருக்கின்றேன். சொர்க்கம் உள்ளிட்ட எந்தவொரு லோகங்களும் பரமேஷ்வரனான என்னிடமிருந்து வேறானதல்ல. எனது பிரபஞ்ச வடிவான விஷ்வரூபத்தில் அவை அனைத்தும் அடக்கம்


4ர்தா இந்த உலகத்தை போஷிப்பவன் நான். ‘4ர்தாஎன்ற சொல் உண்மையில் கணவனைக் குறிக்கிறது. ஏனெனில் அந்நாட்களில் குடும்பத்தை பொருளீட்டுவதன் மூலம் உணவளித்து காப்பவனாக வளர்ப்பவனாக கணவனே இருந்தான். ஆனால் இங்கு ஈஷ்வரன் உலகத்திற்கு இருப்பையே கொடுத்து காப்பதால் 4ர்தா ஆகிறார்


ப்ரபு4: தலைவன், எல்லா மஹிமைகளையும் உடையவன். பொதுவாக பிரபு என்பதற்கு சுவாமி, தலைவன், இறைவன், உடையவன் என்று பொருள். இவ்வுலகில் அனைத்து வளங்களும் முழுக்க முழுக்க பகவானையே சார்ந்துள்ளது. எனவே அவரைத் தவிர வேறு பிரபு இந்த உலகத்தில் இல்லை


ஸாக்ஷீஅனைத்து ஜீவராசிகளின் செயலையும் பார்ப்பவன். உயிர் வகைகள் தத்தம் கடமைகளை முறையாக செய்ததற்கும் செய்யாததற்கும் சாட்சியாக அல்லது பார்த்திருப்பவராக உள்ளார். இதன்மூலம் நான் சாட்சி மட்டுமே; நான் எதற்கும் பொறுப்பாளன் அல்ல. அவரவர்களின் கர்மத்திற்கு ஏற்றார்போல அவரவர்களின் சிருஷ்டி அதாவது சூழ்நிலை அமைகிறது என்கிறார்.


நிவாஸ:இருப்பிடம். பொதுவாக வசிக்கும் இடமான வீடு, நிவாஸ எனப்படும். இங்கு அது உயிர்கள் வாழுமிடம் என சங்கரர் விளக்கமளிக்கிறார். இப்புவியில் நாம் வீடுகளில் வசிக்கின்றோம். வீடுகள் சூரிய மண்டலத்தில் உள்ளன; அது விண்மீன் மண்டலத்தில் வசிக்கிறது. எனில், இந்த விண்மீன் திரள்கள் எங்கே வசிக்கின்றன? என்னில், என்கிறார் பகவான். இந்த முழு படைப்புக்கும் ஒரே உறைவிடம் நான், ஸர்வஸ்ய அதிஷ்டானம்.


1ரணம்துயரத்தை நீக்குமிடம், அடைக்கலம். சொர்க்கம் முதலிய லோகங்கள் தற்காலிகமான அடைகலமாகவே உள்ளது, ஏனெனில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அங்கிருந்தும் அவன் வெளியேறித் தான் ஆகவேண்டும். பூமிக்கும் வேறு லோகங்களுக்கும் மாறி மாறி பயணித்தே ஆக வேண்டும். எந்தவொன்று துக்கத்திலிருந்து ஒருவனை முழுமையாக விடுவிக்கின்றதோ, எங்கு முழு ஓய்வை ஒருவனால் அடைய முடியுமோ அதுவே இறுதி அடைக்கலம் என்கிறார் சங்கரர். அப்படிப்பட்ட சரணமாக நான் இருக்கின்றேன் என்கிறார் பகவான்.   


ஸுஹ்ருத் கைம்மாறு கருதாது நன்மை செய்பவன், உற்ற நண்பன். ஸுஹ்ருத் எனும் இந்த சொல்லை நாம் ஏற்கனவே ஆறாவது அத்தியாயத்தில் பார்த்துள்ளோம். எதையும் எதிர்பார்க்காமல் உதவுபவன், ப்ரத்யுபகார-அநபேக்ஷ:. நண்பன் ஒருவன் நட்பினாலும் அனுதாபத்தினாலும் பாசத்தினாலும் உதவுவான். மேலும் தனது நண்பனின் துயரம் தன்னை பாதிக்கிறது என்றும் தனக்கு அவனது உதவி தேவைப்படலாம் என்றும் உதவுவான். ஆனால் எந்த முன்னறிமுகமும் இல்லாத ஒருவன், அவனது நன்றியையும் கூட எதிர்பாராமல், தன்னால் எதைக் கொடுக்க இயலுமோ அதை கொடுத்து உதவுபவன்ஸுஹ்ருத்ஆகிறான். அத்தகைய உற்ற தோழன் நான் என பகவான் கூறுகிறார். அறிமுகத்திற்காகவோ இடைத்தரகருக்காகவோ அல்லது பரிந்துரைக்காகவோ காத்திருக்கத் தேவையில்லை. அவரிடம் காலங்காலமாகத் தெரிந்தவர் போல் நேரடியாகவே எதையும் ஒருவன் கேட்கலாம்.


ப்ரப4: ப்ரலய: ஸ்தா2நம்நான் பிறப்பிடம், முழு சிருஷ்டியும் யாரிடமிருந்து வந்ததோ; நான் ஒடுங்குமிடம், யாரிடம் அனைத்தும் ஒடுக்கத்தை அடைகிறதோ; மற்றும் நான் தங்குமிடம், எல்லாவற்றின் இருப்புக்கும் ஆதாரமாக யார் விளங்குகிறாரோ, யார் அனைத்தையும் தாங்குகிறாரோ, அத்தகையவராக பகவான் இருக்கின்றார்.


நிதா4நம்களஞ்சியம். விலைமதிப்பில்லாத பொருள்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் இடம் மற்றும் எதிர்காலத்தில் உயிர்வகைகள் அனுபவிப்பதற்குச் சேகரித்து வைத்துள்ள இடம் களஞ்சியம் எனப்படும். இங்கு, அனைத்து காரண-காரியங்களும் மற்றும் எல்லா ஜீவராசிகளின் கர்மபலனும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடமாக நான் உள்ளேன் என்கிறார்.

அவ்யயம் பீ3ஜம் அழியாத வித்து நான். பூமியில் நட்ட விதை அழிந்து செடியாக மாறுகிறது. ஆனால் ப்ரம்ம என்கிற வித்து ஒருவிதமான மாறுதலையும் அடையாது இருந்து கொண்டு இந்த ஜீவ-ஜகத் வகைகளைத் தன்னிடத்திருந்து தோன்றிவர இடங்கொடுக்கிறது

----------------------------------------------------------------------------------------------------------------------------------