||14.15|| ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களையுடையவர்களது கதி:
रजसि प्रलयं गत्वा कर्मसङ्गिषु जायते ।
तथा प्रलीनस्तमसि मूढयोनिषु जायते ।। १५ ।।
ரஜஸி ப்ரலயம் க3த்வா கர்மஸங்கி3ஷு ஜாயதே ।
ததா2 ப்ரலீநஸ்தமஸி மூட4யோநிஷு ஜாயதே ।। 15 ।।
रजसि ரஜஸி ரஜோகுணத்தில் प्रलयं गत्वा ப்ரலயம் க3த்வா மரணம் அடைந்து
कर्मसङ्गिषु கர்மஸங்கி3ஷு கர்மப் பற்றுடையவர்களிடத்து जायते ஜாயதே பிறக்கிறான்
तथा ததா2 அப்படியே तमसि தமஸி தமோகுணத்தில் प्रलीन: ப்ரலீந: மரணமடைகிறவன் मूढयोनिषु மூட4யோநிஷு அறிவிலிகளது கர்ப்பத்தில் जायते ஜாயதே பிறக்கிறான்.
ரஜோகுணத்தில் மரணமெய்துபவன் கர்மப் பற்றுடையவர்களுக்கிடையே பிறக்கிறான். அவ்வாறே தமஸில் சாகின்றவன் அறிவிலிகள் கர்ப்பத்தில் பிறக்கிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
ரஜோ குணத்தில் இறப்போன் கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான். அவ்வாறே, தமஸில் இறப்போன் மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான்.
விளக்கம்:
ரஜஸ் மற்றும் தமஸில் இறப்பவர்களின் கதி இங்கு சொல்லப்படுகிறது. சென்ற சுலோகத்தில் சொல்லப்பட்ட சத்வகுணத்தில் உடலை விடுபவன் முழு அறிவோடு அமைதியாகச் சாகிறான். ரஜோகுணத்தில் மரணமடைபவன் பதைபதைப்போடும், பேராவலோடும், துன்பத்தோடும் உயிர் துறக்கிறான். வாழ்க்கை முழுதும் ரஜஸின் ஆதிக்கத்தில் இருந்த அவன் மரணிக்கும் தருவாயிலும் ரஜஸின் ஆதிக்கத்திலேயே இருக்கிறான். இதனால் இடையறாது கர்மம் செய்யும் பாங்குடையவனாக அல்லது அதிக கர்மத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலையைக் கொண்டவனாக பிறக்கிறான் — கர்மஸங்கி3ஷு ஜாயதே.
அதுபோலவே, தமோகுணத்தில் தேகத்தை விடுபவன் பிரக்ஞையின்றி ஜடநிலையில் சாகிறான். அவன் மிருகமாக அல்லது அறிவிலியாகப் பிறக்கிறான். விலங்குகள் எப்போதும் தமஸின் ஆதிக்கத்திலேயே இருக்கின்றன. எனவேதான் அவைகளுக்கு சுய-உணர்வோ அல்லது தங்களுடன் தொடர்புடைய சிக்கல்கள் குறித்த அறிவோ இருப்பதில்லை. உதாரணமாக, அளவுக்கு மிஞ்சிய அதிகபட்சமான உணவு ஒரு நாய்க்கு வழங்கப்பட்டபோதிலும் அது அதை பதுக்கி வைக்காது. ஏனென்றால் எதிர்காலத்திற்கு அது தேவைப்படும் என்கிற உணர்வு இல்லாததால் அதனிடம் பேராசை இல்லை. எதிர்காலத்தைப் பற்றிய இந்த அக்கறை மனிதர்களுக்கு மட்டுமே உள்ளது. எனவேதான் அவர்கள் தங்கள் சொந்த எதிர்காலத்திற்காக மட்டுமல்ல, தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் செல்வத்தைக் குவிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் ரஜோகுணத்தின் ஆதிக்கமே. ஒவ்வொரு மனிதனிடமும் தன்னை சுய-உணர்வை அடையச் செய்ய போதுமான சத்வம் உள்ளது; மேலும் குழப்பத்தை உண்டாக்க போதுமான அளவு ரஜஸ் மற்றும் தமஸும் உள்ளது.
தமோகுணத்தில் இருப்பவன் ரஜோகுணத்துக்கு வர முயலவேண்டும். ரஜோகுணத்தில் இருப்பவன் சத்வகுணத்திற்கு மேலேறுதல் வேண்டும். அந்த நிலையில்தான், ஒருவன் தன்னை எந்த குணத்திற்கும் கட்டுப்படாத, குணங்களுக்கு அப்பாற்பட்ட குணாதீதனாக இருப்பவன் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும்.
---------------------------------------------------------------------------------------------
||14.16|| குணங்களின் இஹ-லோக அதிருஷ்ட பலன்:
कर्मण: सुकृतस्याहु: सात्त्विकं निर्मलं फलम् ।
रजसस्तु फलं दुःखमज्ञानं तमस: फलम् ।। १६ ।।
கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் ப2லம் ।
ரஜஸஸ்து ப2லம் து3:க2மஜ்ஞாநம் தமஸ: ப2லம் ।। 16 ।।
सुकृतस्य कर्मण: ஸுக்ருதஸ்ய கர்மண: நற்கர்மத்திற்கு फलम् ப2லம் பயன்
निर्मलं நிர்மலம் தூய்மை सात्त्विकं ஸாத்த்விகம் சாத்விகம்(என்று) आहु: ஆஹு: பகர்கிறார்கள் रजस: तु ரஜஸ: து ரஜோகுணத்துக்கோ फलम् ப2லம் பயன் दुःखम् து3:க2ம் துக்கம்
तमस: फलम् தமஸ: ப2லம் தமோகுணத்தின் பயன் अज्ञानं அஜ்ஞாநம் அறிவின்மை.
நற்செய்கையின் பயன் சாத்விகமும் தூய்மையும் என்பர். ரஜோகுணத்தின் பயனோ துன்பம்; தமோகுணத்தின் விளைவு அறிவின்மை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
சத்வ இயல்புடைய நிர்மலத் தன்மையே நற்செய்கையின் பயனென்பர். ரஜோ குணத்தின் பயன் துன்பம். தமோ குணத்தின் பயன் அறிவின்மை.
விளக்கம்:
இந்த மூன்று குணங்களின் இஹ-லோகத்திற்கான அதிருஷ்ட பலனை, அதாவது இக்குணங்களால் இப்போது அவனுக்கு என்ன பலன் கிடைக்கிறது என்பது இங்கு விளக்கப்படுகிறது.
ஒரு கோணத்தில், கர்மத்தை மூன்றாகப் பிரிக்கலாம்:
(1) சாத்விகம் கர்ம: சத்வத்திலிருந்து உருவாகும் செயல்கள். இவ்வகையான செயல்களுக்கு அதிருஷ்ட பலனாக புண்ணியம் உண்டாகிறது. புண்ணியத்தின் விளைவாகக் கிடைப்பது சுகம்.
நற்செய்கையின் பலன் சாத்விகமும் தூய்மையும் என்பர் — ஸுக்ருதஸ்ய கர்மண: ப2லம் நிர்மலம் ஸாத்த்விகம், எனக் கூறுகிறார் பகவான். ‘ஆஹு:’ எனும் சொல் இங்கு கற்றறிந்தவர்களால் கூறப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. செய்வது நற்செயலாக இருக்குமானால் அதனுடைய விளைவு தூய்மையானதான, துக்கத்தைக் கொடுக்காத சாத்விகம் ஆகும். உதாரணமாக ஒருவன் புண்ணியங்களைச் சேகரிக்கும் பொருட்டு சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட செயல்களையும், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள விஹித-கர்மங்களையும் செய்கிறான் எனில் இக்கர்மங்கள் அனைத்தும் சத்வத்திலிருந்து பிறந்தது. இதனால் இதனுடைய பலனும் சாத்விகமாகவே உள்ளது. இதன் விளைவாக இந்த வாழ்க்கையில் ஒப்பீட்டளவில் துக்கத்திலிருந்து ஒரு குறிப்பிட்டவளவு விடுதலையை பெறுகிறான். மேலும் அவன் இறந்த பிறகும், சொர்க்கம் முதலிய வலியோ துயரமோ இல்லாத உலகத்தை நீண்ட காலம் அனுபவிக்கிறான்.
(2) ராஜஸம் கர்ம: ரஜஸிலிருந்து பிறக்கும் செயல்கள் இவை. இதன் அதிருஷ்ட பலனாகக் கிடைப்பது பாபம்; பாபத்தின் விளைவாக துக்கம் உண்டாகிறது.
ரஜோகுணத்தின் பயன் துன்பம் — ரஜஸ: ப2லம் து3:க2ம். ரஜோகுணப் பிரதானமானவர்கள் அவர்களின் மீதுள்ள அழுத்தத்தின் காரணமாக, எப்போதும் சரியான வழிமுறையைப் பின்பற்ற முடியாதவர்களாக இருக்கின்றனர். இதனால் அவர்கள் இயற்கையாகவே பாபத்திற்கு ஆளாக நேரிடுகிறது. இதன் காரணமாக அசௌகரியங்களின் வடிவில் அவர்கள் பலவிதமான துன்பத்தை அடைகிறார்கள்.
(3) தாமஸம் கர்ம: தமஸிலிருந்து உண்டாகும் செயல்கள் இவை. இதன் பலன் அறியாமை; பயனற்ற வாழ்வு. இதனாலேயே அவர்கள் சென்ற சுலோகத்தில் பார்த்ததைப் போல மிருகமாக அல்லது அறிவிலியாகப் பிறக்கிறார்கள்.
தமோகுணத்தின் விளைவு அறிவின்மை — தமஸ: ப2லம் அஜ்ஞாநம், என்கிறார் பகவான். இதனால் அவன் பயனற்றதான வாழ்க்கையை வாழ்கிறான்.
=> சுவாமி சித்பவானந்தர்:
தமோகுணத்தினின்று தொழிலின்மையும் தீவினையும் தோன்றுகின்றன. அதனால் மனிதனுக்கு முன்னேற்றம் இல்லை. ஆழ்ந்து செயலில் ஈடுபடும்போது அது துன்பத்தை விளைவிக்கும். ஆனால் அத்துன்பம் வேண்டப்படாததல்ல. துன்பப்படுபவனே தன்னைத் திருத்தியமைக்கிறான். மனிதனுடைய முன்னேற்றத்துக்குத் துன்பம் பயன்படுவது போன்று வேறு எதுவும் பயன்படுவதில்லை. துயரத்தால் தன்னைத் தூயவனாக்குகின்றவன் நற்செயலுக்கு வருகிறான். அப்பொழுது தர்மம் அவன் மூலம் திகழ்கிறது. அதனால் அவன் சத்வகுணம் எய்துகிறான்; தூயவன் ஆகிறான்.
---------------------------------------------------------------------------------------------
||14.17|| குணங்களின் திருஷ்ட பலன்:
सत्त्वात् सञ्जायते ज्ञानं रजसो लोभ एव च ।
प्रमादमोहौ तमसो भवतोऽज्ञानमेव च ।। १७ ।।
ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப4 ஏவ ச ।
ப்ரமாத3மோஹௌ தமஸோ ப4வதோऽஜ்ஞாநமேவ ச ।। 17 ।।
सत्त्वात् ஸத்த்வாத் சத்வத்திலிருந்து ज्ञानं ஜ்ஞாநம் ஞானம்
सञ्जायते ஸஞ்ஜாயதே உதிக்கிறது रजस: एव च ரஜஸ: ஏவ ச ரஜஸிலிருந்து
लोभ: லோப4: பேராசை तमस: தமஸ: தமஸிலிருந்து अज्ञानम् அஜ்ஞாநம் அறியாமையும் प्रमाद मोहौ एव च ப்ரமாத3 மோஹௌ ஏவ ச கவனமின்மையும் மதிமயக்கமுமே
भवत: ப4வத: உண்டாகின்றன.
சத்வத்திலிருந்து ஞானம் உதிக்கிறது. ரஜஸிலிருந்து பேராசையும், தமஸிலிருந்து அறியாமையும் கவனமின்மையும் மதிமயக்கமுமே உண்டாகின்றன.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது; ரஜோ குணத்தினின்றும் அவாவும், தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும், அஞ்ஞானமும் தோன்றுகின்றன.
விளக்கம்:
இந்த மூன்று குணங்களினால் இஹ-லோகத்தில் அடையப்படும் திருஷ்ட பலனைக் கூறுகிறார் பகவான். அதாவது இந்த குணங்களின் பலனாக இப்போது இந்த ஜென்மத்தில் அடையப்படுகிற நேரடியான பயன் குறித்துப் பேசப்படுகிறது. சத்வத்திலிருந்து தோன்றுவது ஞானம், அறிவு. இது தர்மாதர்ம ஞானம் மற்றும் சத்ய-மித்யா ஞானத்தை அளிப்பதால், இந்த சத்வ குணமானது நற்காரியங்களைச் செய்வதன் மூலம் பேணப்பட வேண்டும். மேலும் ரஜஸிலிருந்து பேராசையும், தமஸிலிருந்து கவனமின்மை, அலட்சியம், தவறாகப் பொருட்படுத்துதல் மற்றும் அறியாமையும் தோன்றுகிறது.
ஒருவனின் விருப்பமான உணவுத் தெரிவுகளில் தொடங்கி, தவம், தானம் முதலிய பல்வேறு வகையான செயல்கள் மற்றும் உணர்வுகளில் இக்குணங்களின் ஆதிக்கம் பிரதிபலிக்கின்றது. உதாரணமாக நிபந்தனையற்ற அன்பு சாத்விகத்தையும், வெறித்தனமான பாசம் ராஜஸத்தையும், அதே அன்பு வெறுப்பை வளர்த்தால் அது தாமஸத்தையும் காட்டுகிறது.
ஒழுக்கம் மற்றும் சரியான விழுமியங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒரு முதிர்ந்த வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதை நாம் புரிந்துகொள்ள உதவும் வகையில் பகவான் இதைப் பற்றி விரிவாகக் பேசப் போகிறார். இதற்கு தேவையான வகையில் நமது சிந்தனையை ஒழுங்கமைக்க, குணங்கள் குறித்த இந்த பகுப்பாய்வு உதவுகிறது.
இதை ஆதாரமாகக் கொண்டு குணங்களுக்கு அப்பாற்பட்டதான குணாதீத நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது.
---------------------------------------------------------------------------------------------