||10.12|| தான் புரிந்து கொண்டதை அர்ஜுனன் கூறுகின்றான்:
अर्जुन उवाच ।
परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् ।
पुरुषं शाश्वतं दिव्यमादिदेवमजं विभुम् ।। १२ ।।
அர்ஜுந உவாச
பரம் ப்3ரஹ்ம பரம் தா4ம பவித்ரம் பரமம் ப4வாந் ।
புருஷம் சா1ச்1வதம் தி3வ்யமாதி3தே3வமஜம் விபு4ம் ।। 12 ।।
अर्जुन उवाच அர்ஜுன உவாச அர்ஜுனன் சொன்னது
भवान् ப4வாந் தாங்கள் परं ब्रह्म பரம் ப்3ரஹ்ம மேலான ப்ரம்ம சொரூபம்
परं धाम பரம் தா4ம மேலான இருப்பிடம் परमं पवित्रं பரமம் பவித்ரம் மேலான பரிசுத்தப்படுத்துமிடம்
दिव्यम् पुरुषं தி3வ்யம் புருஷம் திவ்வியமான புருஷன் शाश्वतं சா1ச்1வதம் நித்தியமானவர் आदिदेवम् ஆதி3தே3வம் ஆதிதேவர் अजं அஜம் பிறவாதவர் विभुम् விபு4ம் எங்கும் வியாபித்திருப்பவர்.
மேலான ப்ரம்மம், உயர்ந்த இருப்பிடம், ஒப்பற்ற புனிதம் தாம் ஆவீர். உங்களையே நித்தியமானவன் என்றும், திவ்ய புருஷன் என்றும், ஆதிதேவன் என்றும், பிறவாதவன் என்றும், எங்கும் வியாபித்து இருப்பவன் என்றும் (கூறுகின்றனர்) …
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அர்ஜுனன் சொல்லுகிறான்: நீயே பரப்பிரம்மம், நீயே பரவீடு, தூய்மை யனைத்தினுஞ் சிறப்புடைய தூய்மை நீ. நின்னையே ‘நித்திய புருஷ’னென்றும், ஆதிதேவனென்றும், பிறப்பிலானென்றும், இறைமைக் கடவுளென்றும்,
விளக்கம்:
=> அர்ஜுனன் தனது புரிதலை வெளிப்படுத்துதல்:
அர்ஜுனன், ஈஷ்வர விபூதியைப் பற்றியும் ஐஸ்வர்யத்தைப் பற்றியும் தான் கேட்டறிந்து கொண்டதன் கருத்தை சுலோகம் பன்னிரண்டு முதல் பதினெட்டு வரை விளக்கிக் கூறுகிறான். இது பகவானின் வாக்கியத்தில் அவனுக்குள்ள சிரத்தையைக் காட்டுகிறது.
மேலான ப்ரம்ம சொரூபமாக விளங்கும் நீங்கள், உயர்ந்த இருப்பிடமாகவும் உள்ளீர்கள் — ப4வாந் பரம் ப்3ரஹ்ம பரம் தா4ம. ‘தா4ம’ என்ற சொல்லிற்கு இரு வகையாகப் பொருள் கூறலாம்.
(1) இருப்பிடம் - சினிமாப் படம் முழுதுக்கும் திரை இருப்பிடமாவது போல அண்ட சராசரம் முழுமைக்கும் ப்ரம்மம் முடிவான இருப்பிடமாகிறது. பரம் ப்ரம்மமான நீங்களே ஒருவன் அடையும் உயரிய முடிவான இருப்பிடமாக உள்ளீர்கள்; இந்த இறுதிநிலைக்கு மேலான ஒரு முடிவு அவசியமுமில்லை அல்லது சாத்தியமுமில்லை.
(2) ஒளி - பொருட்களைப் பார்க்க ஒளி எவ்விதம் உதவுகிறதோ அது போல, ஒளிகளுக்கெல்லாம் ஒளியான பிரக்ஞையாக விளங்குபவர் நீங்கள். எல்லா உணர்வுகளுக்கும் ஆதாரமாக விளங்கும் மேலான அறிவு சொரூபம்; அனைத்தையும் விளக்கவல்ல பரஞ்ஜோதி நீங்கள்.
பரமம் பவித்ரம் — தூய்மைபடுத்த வல்லவைகளில் மேலானவர் நீங்கள். நிலம், நீர், தீ முதலியவைகள் தற்காலிகமாகப் பொருள்களைத் தூய்மைப்படுத்த வல்லவைகள். அதுபோல, மனதை தூய்மைப்படுத்தி அதற்கு ஆறுதல் அளிக்கும் விஷயங்கள் நிறைய உள்ளன. ஆனால் புண்ய-பாப-கர்மங்களுக்கு ஆதாரமாக விளங்கும் இந்த அந்தக்கரணத்தை எப்படி ஒருவனால் முழுமையாகத் தூய்மைபடுத்த முடியும்? ஈஷ்வர ஞானத்தை தவிர வேறு எதுவும் இந்த காரியத்தை செய்ய முடியாது. தனிமைபடுத்தப்பட்டவனாகவும் கட்டுண்டவனாகவும் பயத்தை உடையவனாகவும் உணரும் ஒரு ஜீவனை, இறைவனைப் பற்றிய அறிவானது விடுவிக்கின்றது. ஈஷ்வர ஞானத்தின் எழுச்சியில் ஜீவனின் தனித்துவம் அழிகிறது. நான் ஈஷ்வரனிடமிருந்து வேறானவனாக இல்லை எனும் அறிவு, ஒருவனின் அஹங்காரத்தை நீக்கி, அறிபவன்-அறிவு-அறியப்படும் பொருள் மூன்றும் ஒன்றென காட்டிக் கொடுக்கிறது. அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குபவனாக நான் இருக்கின்றேன் என்ற அறிவு ஒரு ஜீவனை முழுமையாகத் தூய்மைப்படுத்துகிறது. இதனால் பிறப்பு மற்றும் இறப்பு முதலிய வரையறைகளுக்கு உட்பட்ட அந்த சம்சாரி முழுமையாக விடுவிக்கப்படுகிறான். ஆகவே ஜீவர்களைப் புனிதமாக்குபவைகளில் பரப்ரம்மமாகிய நீங்களே தலையாய இடத்தில் உள்ளீர்கள்.
=> திவ்யமான நித்திய புருஷன்:
புருஷம் — புருஷன். இச்சொல்லிற்கும் இரு அர்த்தங்கள் உள்ளன.
(1) புரி சேதே புருஷ: — அனைத்து உடலுக்குள்ளும் வீற்றிருப்பவர்; சாட்சி சொரூபமாக, ப்ரத்யக ஆத்மாவாக, உடல்-மனம்-புலன்கள் எனும் உணர்வுக்குள் அமர்ந்திருப்பவர் புருஷன் என்றழைக்கப்படுகிறார்.
(2) பூர்ணத்வாத் புருஷ: — எங்கும் வியாபித்து இருப்பவர்.
இப்படிப்பட்ட புருஷனாக நீங்கள் இருக்கிறீர்கள். காலத்தினால் வரையறுக்கப்படாத புருஷனாக இருப்பதனால் நீங்கள் நித்தியமானவர் — சா1ச்1வதம். மேலும் நீங்கள் திவ்யமானவர் — தி3வ்யம். ‘தி3வ்யம்’ என்ற சொல்லிற்கான இரு விளக்கங்கள்:
(1) செய்யப்படாதது; இயற்கையாகவே இருப்பது என்று பொருள்.
இந்த உலகத்தில் இல்லாத உயர்ந்த இயல்புடைய ஒன்று, அலௌகிக. இது நாமறிந்த எதையும் போலல்லாமல் உள்ளது; அசாதாரணமான ஒன்றை விளக்குவதற்கு நமக்கு உதாரணம் இல்லாதபோது, ‘திவ்யம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.
(2) எதையும் சாராதது; தன் பெருமையிலேயே விளங்குவது - ஸ்வே மஹிம்நி திஷ்டதி.
இப்படிப்பட்ட திவ்ய புருஷனாக இருப்பவர் நீங்கள். மேலும் ஆதிதேவனாக நீங்களே உள்ளீர்கள். ‘ஆதி3தே3வம்’ எனில் தேவர்களின் தேவன். அனைத்து தேவர்களின் தொடக்கத்திற்கு முன்பு இருந்தவர்; அவர்களுக்கெல்லாம் ஆதாரமானவர் என்று பொருள்.
அஜம் — பிறவாதவர் அல்லது பிறப்பிற்கு உட்பட்டவர் அல்ல. சுயம்புவானவர். விபு4ம் — எங்கும் வியாபித்திருப்பவர் அல்லது விதவிதமாக தோன்றிக் கொண்டிருப்பவர்.
அடுத்த சுலோகத்தில் மேலும் அர்ஜுனன் தொடர்கிறான்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||10.13|| அர்ஜுனன் தொடர்கிறான்:
अाहुस्त्वामृषय: सर्वे देवर्षिर्नारदस्तथा ।
असितो देवलो व्यास: स्वयं चैव ब्रवीषि मे ।। १३ ।।
ஆஹுஸ்த்வாம்ருஷய: ஸர்வே தே3வர்ஷிர்நாரத3ஸ்ததா2 ।
அஸிதோ தே3வலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்3ரவீஷி மே ।। 13 ।।
सर्वे ऋषय: ஸர்வே ருஷய: எல்லா ரிஷிகள் देवर्षि: தே3வர்ஷி: தேவரிஷியாகிய नारद: நாரத3: நாரதர் तथा ததா2 அப்படியே असित: देवल: அஸித: தே3வல: அஸிதர் தேவலர் व्यास: வ்யாஸ: வியாஸர்
त्वां आहु: த்வாம் ஆஹு: உங்களை (மேற்சொன்னபடி) சொல்கிறார்கள்
स्वयं च एव ஸ்வயம் ச ஏவ தாங்களுமே ब्रवीषि मे ப்3ரவீஷி மே எனக்கு சொல்லுகிறீர்.
எல்லா ரிஷிகளும், தேவரிஷி நாரதரும், அப்படியே அஸிதர், தேவலர், வியாஸர் ஆகியோரும் உங்களை (மேற்சொன்னபடி) சொல்கிறார்கள்; தாங்களும் அப்படியே பகர்கின்றீர்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
முனிவரெல்லாரும் மொழிகிறார்; தேவரிஷி நாரதருமங்ஙனே நவில்கிறார். அசிதரும் தேவலரும் வியாசரும் அங்ஙனமே செப்புகிறார். இங்கு நீ நேரே எனக்கு அதை உரைக்கின்றாய்.
விளக்கம்:
=> தனது கருத்துக்கு உடன்படுபவர்களை மேற்கோள் காட்டுதல்:
அர்ஜுனன் தான் புரிந்து கொண்டதைப் பற்றி விவரிப்பது இந்த சுலோகத்திலும் தொடர்கிறது. சென்ற சுலோகத்தில் கூறப்பட்ட தனது கருத்துக்கு உடன்படுபவர்களை அர்ஜுனன் இங்கு மேற்கோள் காட்டுகிறான். அறிந்தவர்கள், பகவானைப் பற்றி இப்படியெல்லாம் கூறிகிறார்கள். நான் கூறியது எனது தனிப்பட்ட அவதானிப்பு மட்டுமல்ல, இந்த விஷயத்தை உண்மையில் அறிந்த முனிவர்களின் கருத்தும் இப்படிப்பட்டதாகவே இருக்கிறது என்கிறான். ரிச்சதி ஜானாதி இதி ரிஷி: — யார் உண்மையை அறிந்துள்ளாரோ அவர் ரிஷி ஆகிறார். மனதையும் இந்திரியங்களையும் அடக்கிப் பரதத்துவத்தை சுவானுபவத்தில் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் ஆவர். ஆகவே பகவானை பற்றிய அவர்களின் கருத்தை அவ்வளவு எளிதில் நிராகரிக்க முடியாது. உதாரணமாக சில ரிஷிகளின் பெயர்களையும் அர்ஜுனன் இங்கு கொடுக்கிறான். தேவரிஷியாகிய நாரதரும் உங்களை பற்றி இவ்விதத்திலேயே கூறுகிறார். அஸிதர், தேவலர் மற்றும் வியாஸர் உள்ளிட்ட முனிவர்களும் உங்களை இவ்விதமே கூறுகின்றனர். இறுதியாக நீங்களும் உங்களை இப்படிப்பட்டவர் என்றே பகர்கின்றீர் — ஸ்வயம் ஏவ ச ப்3ரவீஷி மே, என்கிறான் அர்ஜுனன்.
---------------------------------------------------------------------------------------------------------------------