வியாழன், 3 ஜூன், 2021

கர்மயோகம் 3.20 - 3.22

 ||3.20|| அத்தகையவர்களுக்கு உதாரணம்:

कर्मणैव हि संसिद्धिमास्थिता जनकादय:  

लोकसङ्ग्रहमेवापि सम्पश्यन्कर्तुमर्हसि ।। २० ।। 

கர்மணைவ ஹி ஸம்ஸித்3தி4மாஸ்தி2தா ஜநகாத3:

லோகஸங்க்3ரஹமேவாபி ஸம்பச்1யந்கர்துமர்ஹஸி ।। 20 ।।


जनकादय:  ஜநகாத3:  ஜனகர் முதலியவர்கள்   कर्मणा एव हि   கர்மணா ஏவ ஹி கர்மத்தாலேயே   

संसिद्धिम्   ஸம்ஸித்3தி4ம்  மோக்ஷத்தை   अास्थिता   ஆஸ்தி2தா  அடைந்தார்கள்  

लोकसङ्ग्रहम् एव अपि  லோகஸங்க்3ரஹம் ஏவ அபி   உலகத்தின் நன்மைக்காகவாவது   

सम्पश्यन्   ஸம்பச்1யந்  நன்குணர்ந்து   कर्तुम्  கர்தும்   கர்மத்தைச் செய்ய  

अर्हसि  அர்ஹசி  கடமைப்பட்டிருக்கிறாய்.

    

ஜனகர் முதலியவர்கள் கர்மத்தாலேயே மோக்ஷத்தை அடைந்தார்கள். உலகத்தின் நன்மையை நன்குணர்ந்தாவது கர்மத்தைச் செய்ய கடமைப்பட்டிருக்கிறாய்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஜனகன் முதலியோர் செய்கையாலேயே சித்தி பெற்றார்கள். உலக நன்மையைக் கருதியும் நீ தொழில் புரிதல் தகும்.


விளக்கம்:

=> சந்யாச ஆஸ்ரமத்திற்கு செல்லாமல் முக்தியடைந்தவர்கள்:

ஜனகர், அஷ்வபதி முதலிய ராஜரிஷிகள், அரசாளுதலோடு நின்றுவிடவில்லை. சந்யாச ஆஸ்ரமத்தை மேற்கொள்ளாமல் கர்மயோக மார்க்கத்துடன் கூடிய ஞான கர்ம சந்யாசத்தை பின்பற்றியே முக்தியடைந்தவர்கள். இவர்களைப் போன்ற ஞானியர்கள் கர்மத்தில் ஈடுபடுதலில் இனியொரு சிறப்புண்டு. ஞானமுடையவர்கள் கர்மத்தைத் தவறுதலின்றிச் செய்யவல்லவர் ஆவர். கர்மம் செய்தே முன்னேற்றம் அடைந்தாகவேண்டிய உலக மக்களை நல்வழியில் நடத்துதல் அவர்களால் இயலும். ஆகவே, அப்பொறுப்பை எண்ணிப்பார்க்குமிடத்து, கர்மம் செய்வது அவசியமாகிறது.

=> யார் செயலில் ஈடுபட வேண்டும்?

அனைவரும் கர்மத்தை செய்தே தீர வேண்டும் என கிருஷ்ணர் கூறவில்லை. மோக்ஷத்தை அடைய இச்சை கொள்ளும் முமுக்ஷுக்கள், மனத் தூய்மைக்காக கர்மத்தை கர்மயோகமாக செய்ய வேண்டும். ‘நான் அகர்த்தாஎன்னும் அறிவை ஏற்கனவே அடைந்த ஞானி, ‘செய்பவன்(कर्ता)’ எனும் அந்தஸ்தை ஞானத்தால் அழித்துவிடுவதால், அவனுக்கு செய்தாக வேண்டிய கர்மம் எதுவுமில்லை. இதுவரையில் பகவான் கூறியதை தொகுத்துப் பார்த்தால், முமுக்ஷுவும் ஞானமற்றவனும்(அவிவேகி) செயலில் ஈடுபடத்தான் வேண்டும்

=> அவிவேகி:

இங்கு அவிவேகி என்பது ஞானமற்றவர்களை, அதாவது ஆத்மாவை பற்றிய உண்மையை அறியாதவர்களாகப் பிறந்திருக்கிறோம் என்ற அறிவோ, அந்த ஞானத்தை அடைய வேண்டும் என்ற விருப்பமோ அற்றவர்களைக் குறிக்கிறது. இவர்கள் தங்களது ராக-த்வேஷத்தினால் தூண்டப்பட்டவர்களாக, அதை நிறைவேற்றிக் கொள்வதை தவிர வேறு வழியற்றவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக கர்மம் செய்தே ஆக வேண்டும். ஆனால் அது தர்மத்திற்குட்பட்டதாக இருத்தல் வேண்டும். அதர்மத்தின் வழியில் செல்பவர்கள் விரும்பத்தகாத பலனை உடனடியாகவோ அல்லது எதிர்வரும் காலங்களிலோ அடைய நேரிடும். தர்மத்தைப் பற்றிய அறிவுடன் செயல்பட முமுக்ஷுவாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் எது சரி, எது தவறு என்ற அறிவுடன் முறையாக செயல்படுதல் சிறந்தது.

மறுபுரம், ஒரு முமுக்ஷு தனது ராக-த்வேஷத்திற்காக மட்டுமே வினையாற்றுவதில்லை. அவனுடைய சூழ்நிலையில், அவன் எதைச் செய்தாக வேண்டுமோ அதைச் செய்கிறான். ஒருவேளை விருப்பு வெறுப்பினால் செயல் செய்ய நேர்ந்த போதும், வருகின்ற பலனை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்கிறான்.    

ஜனகர் முதலானோர் கர்மத்தை துறக்காமலேயே ஞானத்தை அடைந்துள்ளார்கள் என சாஸ்த்திரம் கூறுகிறது. கர்மம் மோக்ஷத்தை கொடுக்காத போதிலும், கர்மம் மோக்ஷத்திற்கு எதிரானதல்ல என்பதை இதன் மூலம் அறியலாம். விருப்பு வெறுப்பிற்காக மட்டுமே செயல் செய்யப்படும் போதே அது பந்தப்படுத்தும் கர்மமாக மாறுகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இங்கு கர்மயோகமாக செய்யப்படும் செயலை பகவான் குறிப்பிடுகிறார்

மேலும் இந்த சுலோகத்தில் பகவான் கடமையைச் செய்தாக வேண்டியதற்கான மேலும் சில வாதத்தை கொடுக்கிறார்


=> பிராரப்தம்(விதிப்பயன்):

மனத் தூய்மைக்காக கர்மத்தை செய்கிறோம் எனில், ஞானத்தை அடைந்த பிறகும் ஏன் ஜனகர், அசுவபதி  முதலியோர் தொடர்ந்து செயலில் ஈடுபட்டனர்? ஞானத்திற்கு பின் ஒருவன் கர்மத்தை விட்டே தீர வேண்டுமென்ற கட்டாயமில்லை. ஜனகர் ராஜாவாக இருந்ததனால் ஞானத்திற்கு பின்னும் அப்படியே தொடரலாம். அல்லது அனைத்தையும் துறந்து சந்யாசியாகவும் சென்றிருக்கலாம். இது அவரவர்களுடைய பிராரப்தத்தை பொறுத்தது. ஞானி தன்னை செயல் செய்பவனாக(கர்த்தாவாக) எடுத்துக் கொள்வதில்லையாகையால், இப்பிறவி அமைய காரணமாக அமைந்த ஏற்கனவே செய்த வினைப்பயனின் படி, அதாவது பிராரப்தத்தின் படி அவன் செயலைத் தொடர்கிறான்

பொதுவாக வினைப்பயன், மனிதனுக்கே உரிய தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்துடன்(free will) சேர்ந்தே வருகிறது. இந்த தேர்ந்தெடுக்கும் சுதந்திரமானது, பிராரப்த கர்மத்தை பின்வரும் வழிகளில் குறுக்கிடலாம்பிராரப்தத்தை மாற்றலாம், சரி செய்யலாம், எதிராக வேலை செய்யலாம். இப்படி பிராரப்தம் மற்றும் தேர்ந்தெடுக்கும் உரிமை இரண்டும் கலந்ததாகவே ஒருவனுடைய சூழ்நிலை அமைகிறது. எங்கு வினைப்பயன் முடிந்து எங்கு தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் தொடங்குகிறது என ஒருவராலும் கூற முடியாது. மேலும் இவ்விரண்டில் எது ஒருவனை அந்த குறிப்பிட்ட சூழ்நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது என்பதையும் கணிக்க இயலாது

இங்கு அர்ஜுனனின் வினைப்பயன் அவனை யுத்தகளம் வரை கொண்டுவந்துள்ளது. துரியோதனனை எதிர்த்துப் போர் புரிய வேண்டுமென்பது அர்ஜுனனின் விருப்பம் கிடையாது. அவன் போரை விரும்பவில்லை. எனினும் பிராரப்தம் அவனை இச்சூழலில் நிறுத்தியிருப்பதோடு மட்டுமின்றி அவனளவில் சில முக்கிய பங்களிப்பை அளிக்க வேண்டிய நிர்பந்தத்திலும் விட்டுள்ளது. ஒருவேளை அர்ஜுனன் சிறந்த வில்லாளனாக, படைத் தலைவனாக இல்லாமல் ஒரு சாதாரண சிப்பாய் வீரனாக இருந்திருந்தால் கிருஷ்ணர் கர்மயோகத்தை பற்றி இவ்வளவு விளக்கங்கள் கூறாமல், அவனுடைய சந்யாச விருப்பத்திற்கு சம்மதித்திருக்கலாம். ஆனால் ஒரு தலைவனாக, மக்களுக்கு சரியான முன் மாதிரியாக திகிழ வேண்டிய இடத்தில் நின்றுகொண்டிருக்கிறான். ஆகவே இங்கு பகவான் இரண்டு கருத்தை கூற முற்படுகிறார்

(1) ஒருவன் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வதன் மூலமே ஞானத்தை அடைகிறானே தவிர அதை விட்டுவிட்டு ஓடுவதால் அல்ல. (2) நீ ஞானத்தை அடைந்தவனாக இருந்த போதிலும், உனக்கு வழங்கப்பட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு எது செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்.

* பிராரப்தம்(விதிப்பயன்) = ஈஷ்வர இச்சா; விதிப்பயனாக வந்தமைவதை செய்துதான் ஆக வேண்டும். முழுமையாக ஏற்றுக் கொள்வதால் மனப் போராட்டத்தை தவிர்க்கலாம்.

=> அப்யுபேத்ய வாதம்

உண்மையில் அவ்விதமாக இல்லாத ஒன்றை, வாதத்திற்காக அவ்விதமாகவே எடுத்துக் கொண்டு வாதிடுவது, தர்க்க சாஸ்த்திரத்தில் அப்யுபேத்ய வாதம் என்றழைக்கப்படுகிறது. அதை இச் சுலோகத்தில் பகவான் பிரயோகித்திருக்கிறார்.

ஒருகால், அர்ஜுனா நீ ஞானி என வைத்துக்கொண்டாலும்உலக நன்மைக்காக’,  ‘உன் விதிப்பயன் உன்னை இங்கு நிறுத்தியிருப்பதற்காக’, இதைச் செய்.

----------------------------------------------------------------------------------------------------------------------

||3.21|| எதற்காக லோகஸங்க்ரஹம்? யார் அதைச் செய்ய முடியும்?

यद्यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जन:

यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते ।। २१ ।। 

யத்3யதா3சரதி ச்1ரேஷ்ட2ஸ்தத்ததே3வேதரோ ஜந:

யத்ப்ரமாணம் குருதே லோகஸ்தத3நுவர்ததே ।। 21 ।।


श्रेष्ठ:   ச்1ரேஷ்ட2:   மேலோன்   यत् यत्   யத் யத்  எதை எதை   अाचरति   ஆசரதி  செய்கிறானோ   

इतर: जन:   இதர: ஜன:   மற்ற மனிதன்   तत् तत् एव   தத் தத் ஏவ  அதையையே(செய்கிறான்)  

:   :   அம்மேலோன்   यत् प्रमाणं कुरुते    யத் ப்ரமாணம் குருதே   எதை பிரமாணமாக நிர்ணயம் செய்கிறானோ   तत्   தத்  அதை   लोक:   லோக:  உலகம்   अनुवर्तते    அநுவர்ததே  அனுசரிக்கிறது.


மேலோன் எதைச் செய்கிறானோ அதையையே மற்ற மனிதர்களும் பின்பற்றுகின்றனர். அம்மேலோன் எதைப் பிரமாணமாக நிர்ணயம் செய்கிறானோ அதையே உலகம் அனுசரிக்கிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள். அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.


விளக்கம்:

=> ஒரு மனிதனுடைய வாழ்க்கை லக்ஷியம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது

    (1) ச்1ரேயஸ் (நன்மையை நாடுதல்) - மோக்ஷம்

    (2) ப்ரேயஸ் (இன்பத்தை நாடுதல்) - இன்பம், அர்த்தம்(பொருள்), காமம்.

இவையிரண்டிற்கும் பொதுவானது தர்மப்படி வாழ்தல். இன்பத்தை அடைவதற்கும் கூட தர்ம வாழ்க்கை மிக அவசியம். ஏனெனில் சாஸ்த்திரப்படி தர்ம வாழ்க்கையே புண்ணியத்தைக் கொடுக்கும். புண்ணியத்தின் பலனினால்தான் ஒருவனுடைய உடல், நல்ல சூழ்நிலைகள், போகத்திற்கான பொருள் என அனைத்தும் கிடைக்கும். இதே புண்ணியத்தை சித்த சுத்திக்காக பயன்படுத்தும் போது மோக்ஷம் கிடைக்கிறது. பாவனையில் வேறுபாடே தவிர தர்மத்தில் வேறுபாடு கிடையாது

 => எது தர்மம் என எதனடிப்படையில் நிச்சயம் செய்வது?

விருப்பு வெறுப்புகள் தர்மத்தை நிர்ணயம் செய்வதில்லை. இந்த சுலோகத்தில் ப்ரமாணம் எனும் சொல் எது சரி? எது தவறு? என்பதை அளவிடும் கருவியைக் குறிக்கும். பொதுவாக பின்வரும் மூன்று பிரமாணங்கள் தர்மத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

1. சுருதி(श्रुति) - வேதம்

2. ஸ்மிருதி(स्मृति) - ரிஷிகளால் இயற்றப்பட்ட கிரந்தங்கள், நூல்கள்

3. சி1ஸ்டாசார:(शिष्टाचार:) - தர்மப்படி வாழும் மகான்களின் வாழ்க்கை.  

சி1ஸ்ட:(शिष्ट:) -நன்கு உபதேசிக்கப்பட்டவர்கள்

ஆசார:(अाचार:) - வாழ்க்கை முறை

சில தர்மத்தை அநுஷ்டானம் செய்யும் முறை காலத்திற்குக் காலம் மாறி வரும். எவ்வளவு தூரம் மாற்றலாம், எவ்விதத்தில் அதைச் செய்யலாம் என்பதை நிர்ணயிக்கும் அளவுகோலாக இந்த மகான்களின் வாழ்க்கை முறை மற்றும் உபதேசம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது

இங்குசி1ஸ்டாசார:’ எனும் பிரமாணத்தைப் பற்றி பகவான் பேசுகிறார். இந்த சுலோகத்தில் ச்1ரேஷ்ட2: என்னும் சொல், சமுதாயத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களால் முக்கியமானவர்களாக மதிக்கப்படும் ஒருவனைக் குறிக்கிறது. உதாரணமாக அக்காலத்தில் அரசன், இளவரசன் போன்றோரும் இக்காலகட்டத்தில் தலைவர்கள், நீதிபதி, அதிகாரி அல்லது விளையாட்டு பிரபலங்கள் போன்றோரையும் சொல்லலாம். ஒருவனுக்கு எது சரி? எது தர்மம்? எப்படி வாழ வேண்டும்? இவைகள் பற்றிய அறிவு, கேட்பதனாலோ அல்லது படிப்பதனாலோ வருவதை விட பார்ப்பதனாலேயே புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக ஒரு குழந்தை தனது பெற்றோரின் சொல்படி நடப்பதை விட அவர்களின் செயல்களைக் கவனித்து கற்றுக் கொள்வதே அதிகம். ஆகவே ஒரு குழந்தையின் வளர்ச்சியில் சிஸ்டாசாரர்களாகத் திகழ்வது தாய், தந்தை மற்றும் குரு. அதற்கு பிறகுதான் நண்பர்கள், தலைவர்கள், மகான்கள் என தொடர்கிறது. ஆசரதி எனும் சொல், அவன் எப்படி வாழ்கிறான், செயல்படுகிறான், அன்றாட வாழ்வின் வெவ்வேறு சூழ்நிலைகளை எவ்விதம் எதிர்கொள்கிறான் என்பதைக் குறிக்கிறது.

இதன்படி அர்ஜுனன் தலைவனாக, மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கின்ற காரணத்தினால் அவனது பொறுப்பு மிகப் பெரியது. அவனது எண்ணமும் செயலும் நேர்முகமாக அல்லது மறைமுகமாக சமூகத்தை பாதிக்க வல்லவவை. ஆகவே விருப்பு வெறுப்பிற்கு இடம் தராமல், மற்றவர்களின் பொருட்டு அவனது கடமையில் ஈடுபடத்தான் வேண்டும். ஆகவே கிருஷ்ணர், ‘நீ ச்1ரேஷ்டனாக, தலைவனாக, முக்கியமானவர்களில் ஒருவனாக இருப்பதனால், நீ எதைச் செய்கிறாயோ அதையையே மற்றவர்களும் அப்படியே பின்பற்றுவார்கள் அர்ஜுனாஎன்கிறார். கடமையைச் செய்பவன் உண்மையில் எதையும் இழப்பதில்லை என முன்னமே உறுதிப்படுத்தியிருந்தார். ஒருவேளை ஞானியாக இருந்தால் பிராரப்தத்தின் பொருட்டு செய்யப்படும் செயல் எந்தச் சிக்கலையும் கொடுக்காது என்றும், ஒருவேளை அக்ஞானி எனில் கடமையின் பொருட்டு கண்டிப்பாக செயலில் ஈடுபடத்தான் வேண்டும் என்றும் உதாரணங்களின் மூலம் தெளிவுபடுத்திவிட்டார். இனி செயல் செய்யும் விஷயத்தில் பகவான் தன்னையே சுட்டிக்காட்டி வாதத்தை தொடர்கிறார்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஒருவன் வியாதியால் அவஸ்தைப்படும் தன் குழந்தையைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு ஸாதுவிடம் மருந்து கேட்கச் சென்றான். ஸாது அவனை மறுநாள் வரும்படி சொன்னார். அப்படியே அவன் மறுநாள் வந்தபொழுது உன் குழந்தைக்குச் சர்க்கரைப் பண்டங்களைக் கொடுக்காதே; சீக்கிரத்தில் குணமுண்டாகும் என்றார் ஸாது. அதைக்கேட்ட மனிதன் ஸ்வாமி! இதைத் தாங்கள் நேற்றே சொல்லியிருக்கலாமே என்றான். அப்பா! நான் சொல்லியிருக்கலாம். ஆனால் நேற்று என் முன்னால் சர்க்கரை வைக்கப்பட்டிருந்தது. அதை உன் குழந்தைப் பார்த்து, இந்த ஸாது அயோக்கியன் போலிருக்கிறது. சர்க்கரையைப் பிறர் சாப்பிடக்கூடாதென்று சொல்லுகிறான். தான் மட்டும் சாப்பிடுகிறான் என்று அது நினைக்கக் கூடும் என்று ஸாது சொன்னார். உலகுக்கு வழிகாட்டுபவர்களது பொறுப்பு மிக முக்கியமானது.

-------------------------------------------------------------------------------------

||3.22|| சிஸ்டாசாரனுக்கு அல்லது ச்ரேஷ்டனுக்கு உதாரணம்:

मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किञ्चन

नानवाप्तमवाप्तव्यं वर्त एव कर्मणि ।। २२ ।।

மே பார்தா2ஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந  

நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ கர்மணி ।। 22 ।।


पार्था  பார்தா2  பார்த்தா  मे   மே  எனக்கு   कर्तव्यं   கர்தவ்யம்  செய்ய வேண்டியது  

अस्ति   அஸ்தி   எதுவுமில்லை   त्रिषु लोकेषु   த்ரிஷு லோகேஷு  மூன்று லோகங்களிலும்  

अनवाप्तम्   அநவாப்தம்  இன்னும் அடையாததாய்  अवाप्तव्यं  அவாப்தவ்யம்  இனி அடையப்போவதாய்   

किञ्चन   கிஞ்சந  சிறிதேனும்       இல்லை       ஆயினும்   

कर्मणि एव  கர்மணி ஏவ  கர்மத்திலேயே   वर्त   வர்த பிரவிருத்திருக்கிறேன்.


பார்த்தா, மூவுலகிலும் எனக்கு செய்ய வேண்டிய கடமை எதுவுமில்லை. அடையாத ஒன்றை இனி அடைந்தாக வேண்டும் என்பதும் இல்லவே இல்லை. ஆயினும் நான் கர்மம் செய்துகொண்டே இருக்கிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பார்த்தா, மூன்றுலகத்திலும் எனக்கு யாதொரு கடமையுமில்லை. நான் பெற்றிராத பேறுமில்லை. எனினும் நான் தொழிலிலேதான் இயங்குகிறேன்.


விளக்கம்:

ஒருவன் தன் சொந்த இயல்புக்கு, சுயத்திற்கு விழித்திருந்தால் அவன்அகர்த்தாஎனும் செயலற்ற தன்மையை அடைந்திருப்பான். செயலற்ற தன்மை என்பது செயல்பாடு இல்லாததை குறிப்பதல்ல. உயிருடன் இருக்கும் வரை செயலற்ற தன்மை சாத்தியப்படாது என ஏற்கனவே பார்த்தோம். சந்யாசியோ, கர்மயோகியோ அல்லது கர்மியோ(कर्मिन्) யாராக இருப்பினும் ஏதேனும் ஒரு காரியத்தை செய்வதென்பது இன்றியமையாதது. கர்மத்தை முழுவதுமாக துறத்தல், தனது மெய்மையை பற்றிய ஞானத்தினால் மட்டுமே சாத்தியம்.   

இந்த சுலோகத்தில் கிருஷ்ணர், செயல் செய்யும் விஷயத்தில் உதாரணமாக தன்னையே முன் நிறுத்துகிறார். மூன்று உலகம்(த்ரிஷு லோகேஷு) எனும் சொல் இங்கு பூலோகம், சொர்க்கம் மற்றும் வேறு எந்த உலகிலும் என்ற அர்த்தத்தில் அனைத்து சிருஷ்டியையும் குறிக்கும்; இந்த சிருஷ்டியில் அவரால் சிறிதேனும் அடையப்பட வேண்டியது எதுவுமில்லை

ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அடைய, அதற்கான காரியத்தில் ஈடுபடுதல் வேண்டும். செயல்படாமல் அதை அடையமுடியாது, அடையாமல் திருப்தி கிடைக்காது. இவ்விதத்தில்தான் ஆசையில் சிக்கிக்கொண்டு, ஒன்றை அடைவதனால் பெறப்படும் திருப்திக்காக சம்சாரிகளாய் கர்மத்தில் கட்டுண்டுள்ளோம். ஆனால் அவரே அனைத்துமாக இருக்கிறார் என்பதை அறிந்த ஶ்ரீ கிருஷ்ணனுக்கு அடையப்பட வேண்டியது என எதுவுமில்லை

* ஈஷ்வரனாக எண்ணிப்பார்க்குமிடத்து அண்டம் முழுதும் நீக்கமற நிறைந்திருந்து அனைத்தையும் இயக்குகிறான்.

* ஓர் அவதார மூர்த்தியாக பார்க்கும் போதும் மகாபாரத யுத்தத்தில் ஶ்ரீ கிருஷ்ணனுக்கு வருகிற லாப நஷ்டம் ஒன்றுமில்லை. எனினும் மற்றவர்களையெல்லாம்விட அதிகமாக செயலில் ஈடுபட்டவர் கிருஷ்ணபகவான் ஒருவரேயாம்

* கிருஷ்ணனாக பார்க்குமிடத்தும் அவர் சாதாரண மனிதன் கிடையாது. துவாரகாபுரியின் ராஜா அவர். இருப்பினும் தன்னை தேரோட்டியாக இருக்குமாறு அர்ஜுனன் கூறிய போது அதை மனமுவந்து ஒப்புக் கொண்டார். போருக்கு முன் துரியோதனனுக்கும் பாண்டவர்களுக்கும் மத்தியஸ்தராகவும், பின்னர் பாண்டவர்களின் சார்பில் தூதராகவும் செயல்பட்டார். தற்போது அர்ஜுனனுக்கு உபதேசத்தை அளித்துக் கொண்டிருக்கும் குரு என அவர் முழுவதும் செயல்களுக்குள்தான் இருக்கிறார்

ஆகவே மூவுலகிலும் எனக்கு கடமையேதுமில்லை. ஆயினும் நான் கர்மம் செய்துகொண்டே இருக்கிறேன்என்கிறார் பகவான். ஏன் இவ்விதம் கர்மத்திலேயே இருக்கிறேன்? என கேட்குமிடத்து பின்வரும் சுலோகத்தில் பதிலுரைக்கிறார்.

-------------------------------------------------------------------------------------