ஞாயிறு, 20 ஜூன், 2021

கர்மயோகம் 3.27 - 3.30

||3.27|| பற்றிற்குப் பிறப்பிடம் எது?

प्रकृते: क्रियमाणानि गुणै: कर्माणि सर्वश:  

अहङ्कारविमूढात्मा कर्ताहमिति मन्यते ।। २७ ।।

ப்ரக்ருதே: க்ரியமாணானி கு3ணை: கர்மாணி ஸர்வச1: ।।

அஹங்காரவிமூடா4த்மா கர்தாஹமிதி மந்யதே ।। 27 ।।


प्रकृते:   ப்ரக்ருதேமாயையின்(அனாத்மாவின்)  गुणै:  கு3ணை: குணங்களால்   

सर्वश:   ஸர்வச1:  எல்லா விதத்திலும்   कर्माणि   கர்மாணி   செயல்கள்   क्रियमाणानि  க்ரியமாணானி  செய்யப்படுகின்றது   अहङ्कार विमूढात्मा  அஹங்கார விமூடா4த்மா  அஹங்காரத்தால் மோகமடைந்தவன்    अहम् कर्ता  அஹம் கர்தா  நான் கர்த்தா  इति   இதி   என்று   मन्यते  மந்யதே   நினைக்கிறான்.


பிரகிருதியின் குணங்களினால் எப்பொழுதும் செயல்கள் செய்யப்படுகின்றது. அஹங்காரத்தால் மோகமடைந்தவன்நான் கர்த்தாஎன்று நினைக்கிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன. அகங்காரத்தால் மயங்கியவன், “நான் செய்கிறேன்என்று நினைக்கிறான்.


விளக்கம்:

ஒவ்வொரு தனிநபரும் இரண்டு அம்சங்களுடன் கூடியுள்ளனர்

1. புருஷ: (पुरुष:) - ஆத்மா, சுயம், சைத்தன்யம், பிரக்ஞை

2. ப்ரக்ருதி: (प्रकृति:) - மாயை, அவித்யை.

இந்த பிரகிருதி புரிந்துகொள்ளப்பட வேண்டிய வஸ்துவானபுருஷ’-னை முற்றிலும் சார்ந்துள்ளது

சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களின் சேர்க்கையாக உள்ள மாயை(ப்ரக்ருதி) அல்லது இயற்கை, கர்ம சொரூபமானது. * சாம்ய அவஸ்தா(साम्य अवस्था) - இம்மூன்று குணங்களும் சமமாக உள்ள போது எதுவும் வெளித்தோற்றத்திற்கு வராமல் இருக்கும் நிலை சாம்ய அவஸ்தா. இக்குணங்களில் மாற்றம் வரும் போது சிருஷ்டி தோன்றுகிறது. மாயையின் விகாரமே இந்த உலகம். ஒவ்வொருவரின் உடல், மனம் மற்றும் புலன்கள் உட்பட அனைத்தும் பிரகிருதியின் விகாரங்களே. ஆகையினால் தோன்றிக்கொண்டிருக்கும் அனைத்திலும் சத்வ ரஜஸ் மற்றும் தமஸின் சேர்க்கையே உள்ளது. மாயையைச் சார்ந்த இந்த குணங்களே கர்மங்களைச் செய்கின்றன.

பிரகிருதி வேறு, ஆத்மா வேறு என அறியாதவன் அக்ஞானி. தனக்குப் புறம்பான ஒன்றைத் தன் மயமாகக் கருதுதல் அஹங்காரம்பிரகிருதியை ஆத்மாவென்று அஹங்கரித்து, குணரூபமான சரீரத்தில்நான்என்ற புத்தியுடையவனாக அக்ஞானி குழப்பத்தை அடைகிறான். இவ்விதம் மோஹமடைந்தவனை பகவான், ‘அஹங்கார விமூடா4த்மா’  என சுட்டுகிறார். இந்த கூட்டுச் சொல்லின் பொருளை சங்கரர் தனது பாஷ்யத்தில் பின்வருமாறு நிர்ணயிக்கிறார்.

 अहङ्कार विमूढात्माकार्यकरणसङ्घाते आत्मप्रत्यय: अहङ्कार: तेन विविधं, नानाविधं मूढ: आत्मा - अन्त: करणं यस्य :  

நான்எனும் புத்தியை காரிய-கரண-சங்கா4தத்தில் வைத்தல் அஹங்கார:. இதனால் எவனொருவன் ஆத்மா மற்றும் அந்தக்கரணத்தை பல்வேறு வழிகளில் தவறாக ஏற்றிவைத்துள்ளானோ அவன்அஹங்கார விமூடா4த்மா’.  

காரிய - ஸ்தூல உடல்; கரண - மனம் மற்றும் புலன்கள். உடல், மனம் மற்றும் புலன்களைநான்என புரிந்துகொண்டவன்விமூட’. இதனால்நான் பிறந்துள்ளேன்’, ‘நான் மரணத்திற்குட்பட்டவன்போன்ற நூற்றுக்கணக்கான தவறான புரிதல்கள், இந்தநான்என்னும் அஹங்காரத்துடன் சேர்ந்துவிடுகிறது. பிறந்த குழந்தை, ‘நான் தமிழன், திராவிடன், ஆரியன்என்றெல்லாம் நினைப்பதில்லை. வளரும் காலங்களில் அக்குழந்தை தன்னுடைய அடையாளமாக இவற்றை எடுத்துக்கொள்கிறது. ஒருவன் தனது முழு வாழ்க்கையும் இதுபோன்ற தவறான அடையாளங்களை தன் மீது ஏற்றிக்கொள்வதையே, மோஹமடைதல், ‘விமூடஎன இங்கு கூறப்படுகிறது. இப்படிப்பட்ட மயங்கிய மனதுடன், உடல் மனம் மற்றும் புலன்களை நான் என ஏற்று, ‘நானே செயல் செய்பவன்என நினைக்கின்ற காரணத்தினால் அவன் பந்தப்படுகிறான். சுயத்தை குறித்த தெளிவான அறிவு அவனிடம் இல்லை. ஒருவன் கர்மம் செய்யக்கூடாது என சாஸ்த்திரத்தில் எப்பொழுதும் சொல்லப்பட்டதில்லை. ‘நீ செயல் செய்பவன் அல்லஎன்றே உபதேசிக்கிறது. இதை மெய்மையை அறிவதே மோக்ஷம்

----------------------------------------------------------------------------------------------------------------------------------

||3.28|| ஞானியின் மனநிலை:

तत्त्ववित्तु महाबाहो गुणकर्मविभागयो:  

गुणा गुणेषु वर्तन्त इति मत्वा सज्जते ।। २८ ।।  

தத்த்வவித்து மஹாபா3ஹோ கு3ணகர்மவிபா43யோ:   

கு3ணா கு3ணேஷு வர்தந்த இதி மத்வா ஸஜ்ஜதே ।। 28 ।।


तु   து  ஆனால்  महाबाहो  மஹாபா3ஹோ   பெருந்தோளுடையவனே   

गुण-कर्म-विभागयो:  கு3-கர்ம-விபா43யோகுணம் கர்மம் இவைகளின் பிரிவுகளைப் பற்றிய   

तत्त्ववित्त्   தத்த்வவித்  தத்துவ ஞானி   गुणा:   கு3ணா:  குணங்கள்  गुणेषु   கு3ணேஷு  குணங்களில்  

वर्तन्ते   வர்தந்த  பிரவர்த்திக்கின்றன(இருக்கின்றன)   इति मत्वा   இதி மத்வா  இங்ஙனம் அறிந்து   

सज्जते    ஸஜ்ஜதே   பற்றுவைப்பதில்லை.


ஹே பெருந்தோளுடையவனே, குணம் கர்மம் இவைகளினுடைய வேறுபட்ட தன்மையை அறிந்த தத்துவ ஞானி, குணங்கள் குணங்களிடத்தில் இருக்கின்றது என அறிந்து பற்றுவைப்பதில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின் உண்மையறிந்தோன், ‘குணங்கள் குணங்களில் இயலுகின்றனஎன்று கருதி பற்றற்றிருப்பான்.


விளக்கம்:

=> ஞானியின் மனநிலை

இந்த சுலோகத்தில் கிருஷ்ணபகவான் ஞானியை முந்தய சுலோகத்தில் குறிப்பிட்டுள்ள அக்ஞானியுடன் ஒப்பிடுகிறார். அதில் விளக்கப்பட்டது போல், அக்ஞானி காரிய-கரண-சங்கா4தத்தை(உடல்-மனம்-புலன்களின் தொகுப்பை) தன்னியல்பாக எடுத்துக் கொள்கிறான். இந்த தவறான அஹங்காரத்தினால், உடல் மனம் மற்றும் புலன்களின் இயல்புகளான மாற்றம், தேய்வு போன்றவற்றை தனக்குரியதாக எடுத்துக்கொண்டு துயரப்படுகிறான். சுயத்தின் மெய்மையை, இவ்வுலகம் மற்றும் இறைவனின் உண்மைத்தன்மையை அறிந்த ஞானி, இங்குதத்த்வவித்என்றழைக்கபடுகிறான். இதையறியாதவன்அதத்த்வவித்’.

* குண விபாகம் - மாயையின் விகாரத்திலிருந்து தோன்றிய உடல், மனம், புத்தி முதலிய குணங்கள் ஆத்மாவிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட தன்மையுடையது என்ற அறிவு

* கர்ம விபாகம் - இந்த கர்மத்தை நான் செய்யவில்லை. நான் அகர்த்தா என்ற அறிவு

* தத்வ - தத்+த்வ - அதனுடைய உண்மைத்தன்மை(that-ness) அல்லது சாராம்சம் - तस्य भाव:(தஸ்ய பா4:); 

ஆகவே குணம் மற்றும் கர்மத்தின் தன்மையை நன்கறிந்த ஞானி, இந்திரியங்களாகிய குணங்கள், விஷயங்களாகிய குணங்களை நாடிச் செல்கிறது என புரிந்தவனாக இவைகளோடு ஒட்டுவதில்லை

அறிபவன்(த்ரஷ்டா) வேறு. அறியப்படும் பொருள்(த்ருஷ்யம்) வேறு. மாயையின் விகாரமே இந்த அகிலப்பிரபஞ்சம் என சென்ற சுலோகத்தில் பார்த்தோம். அனுபவத்தின் மூலம் அறியப்படுகின்ற தன்மையையுடைய இந்த உலகம், உடல், மனம் மற்றும் புலன்கள் முதலிய அனைத்து அனாத்மாக்களையும் ஒரே வகையினத்தில்தான் வைத்தல் வேண்டும். ஆனால் நாம் அதை அனுபவிப்பவன்(உடல், மனம், புலன்கள்) மற்றும் அனுபவிக்கப்படும் பொருள்(உலகம்) என இரண்டு வகையாகப் பிரித்து பெரிய துவைதத்தை, இருமையை உருவாக்கிவிட்டோம். அறிபொருளாக உள்ள எதுவும்நான்அல்ல. எதை நாம் அறிகிறோமோ, அதிலிருந்து நாம் வேறுபட்டு இருக்கிறோம். மற்ற சரீரங்களை எப்படி உன்னிலிருந்து வேறானாதாக, அறியப்படும் பொருளாகப் பார்க்கிறாயோ அதே போல் உன் சரீரத்தையும் த்ருஷ்யமாக உன்னிலிருந்து வேறாக பார்த்தல் மோக்ஷம். அப்படியே ஞானியானவன் பார்க்கின்றான்

இந்ததத்வவித்’, கர்மத்தின் இயல்பையும் ஆத்ம சொரூபத்தையும் முழுமையாக அறிந்தவன். இவ்விரண்டிற்குமிடையேயான வேறுபாட்டையும், பிரகிருதியின் தன்மையையும் புரிந்தவன். மாயையின் விகாரமாகிய கரணமாக விளங்கும் உடல்-மனம்-புலன்கள், மாயையின் விகாரமாகிய இவ்வுலக செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றன என அறிந்து இவைகளின் மீது பற்றுவைப்பதில்லை

உடல் என்னும் குணம், உலகம் என்னும் குணத்தை நாடிச் செல்கிறது. உதாரணமாக பஞ்ச பூதமான உடல், பஞ்ச பூதமான உலகை நாடிச் செல்கிறது. இக்குணத்திலிருந்துநான்வேறானவன் என கண்டுகொண்ட ஞானி எதனோடும் பந்தப்படுவதில்லை

-----------------------------------------------------------------------------------------------------------------

||3.29|| அக்ஞானியின் மனநிலை:

प्रकृतेर्गुणसम्मूढा: सज्जन्ते गुणकर्मसु  

तानकृत्स्नविदो मन्दान् कृत्स्नविन्न विचालयेत् ।। २९ ।। 

ப்ரக்ருதேர்கு3ணஸம்மூடா4: ஸஜ்ஜந்தே கு3ணகர்மஸு

தாநக்ருத்ஸ்நவிதோ3 மந்தா3ந்க்ருத்ஸ்நவிந்ந விசாலயேத் ।। 29 ।।


प्रकृते:   ப்ரக்ருதே: பிரகிருதியினுடைய   र्गुणसम्मूढा:   கு3ணஸம்மூடா4:   குணங்களால் மோஹமடைந்தவர்கள்   गुणकर्मसु   கு3ணகர்மஸு  குணத்திலும் அதன் கர்மத்திலும்   

सज्जन्ते   ஸஜ்ஜந்தே  பற்றுவைக்கின்ற  तान्  தாந்  அந்த   अकृत्स्नविदஅக்ருத்ஸ்நவித3  முழுதும் அறியாத    मन्दान्   மந்தா3ந்  மந்த புத்தியினரை  कृत्स्नवित्   க்ருத்ஸ்நவித்  தெளிந்த அறிவுடையோர்   

विचालयेत्  விசாலயேத்  கலங்கும்படி செய்யலாகாது.


பிரகிருதியினுடைய குணங்களால் மோஹமடைந்து குணத்திலும் கர்மத்திலும் பற்றுவைக்கின்ற மந்த புத்தியினரை முழுதுணர்ந்த ஞானி கலங்கும்படி செய்யலாகாது


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள் குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள். சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை முழுதுணர்ந்த ஞானி உழல்விக்கக் கூடாது.


விளக்கம்:

=> அக்ஞானி-ஞானியின் நிலைபாட்டை ஒப்பிடுகிறார்:

மாயையின் மாறுபாடுகளான உடல், மனம் மற்றும் புலன்களாகிய குணங்களை தன் சொரூபமாக எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கை மோஹம் என்கிறோம். இவ்விதம் மோஹமடைந்தவர்களை இங்குப்ரக்ருதே: கு3ணஸம்மூடா4:என்ற சொல் குறிக்கிறது. தனது மெய்மையை குறித்த அறியாமையினால் இவர்கள் தங்களை செயல் செய்பவர்களாகப் பார்க்கிறார்கள். எனவே குணங்களாகிய உடல்-மனம்-புலன்கள் மற்றும் அவற்றினுடைய செயல்பாடுகளினால் பந்தப்படுகிறார்கள்(ஸஜ்ஜந்தே). இதன் மூலம், ‘இந்த பலனுக்காக இக்கர்மத்தை நான் செய்கிறேன்என்ற பாவனை வெளிப்பட்டு, அதனுடைய வெற்றி தோல்விகளினால் பிணைக்கப்படுகிறார்கள். இப்படிபட்டவர்களைமந்தா3ந்(ஸ்)என கூறுவதன் மூலம் அவர்களின் விவேகமற்ற தன்மையை இச் சுலோகம் சுட்டுகிறது. ‘மந்தத்வஎனில் மந்தமான தன்மை. உதாரணமாக, அஜீரண கோளாறு இருக்கும் போது ஒருவனுக்கு சாப்பிடவோ அல்லது வேறெதுவும் செய்யவோ விருப்பமிருக்காது. இந்த அசெளகரியம் உள்ள வரை இந்த மனநிலையே நீடிக்கும். இப்படிப்பட்ட மந்தத் தன்மை சிந்தனையில் ஏற்பட்டால், ‘மந்தா3என்பவனது வரையறை நமக்குக் கிடைக்கிறது. அத்தகையவனின் மூளையில் எந்த நெருப்பும் தீயை பற்ற வைக்காது. அவனைச் சுற்றி சூழ்நிலைகள் பலவிதமாக வெளிபட்ட போதிலும் அவன் அதிலிருந்து எதையும் ஒருங்கிணைப்பதோ அல்லது கற்றுக் கொள்வதோ கிடையாது. இந்த மந்தத்துவம் எனும் சொல் மனதினுடைய நிலைக்கு வரையறையாக மட்டுமே இங்கு பயன்படுத்தப்படுகிறதே தவிர யாரையும் தனிப்பட்டு விமர்சிக்க அல்ல. இது ஆத்மாவையும் அனாத்மாவையும் பகுத்தறியாத ஒருவனை குறிப்பதாக உள்ளது.       


=> ஞானிகளுக்கு ஓர் அறிவுரை:

ஞானமுடையவனுக்கும் அக்ஞானிக்கும் உள்ள வேறுபாட்டை பகவான் மேலும் இரண்டு சொற்களைக் கொண்டு இங்கு ஒப்பிடுகிறார். அதாவது, ஆத்ம-அனாத்மாவை குறித்த முழுமையான(க்ருத்ஸ்ந) ஞானத்தைக் கொண்ட சான்றோன்க்ருத்ஸ்நவித்’, மற்ற அனைவரும்அக்ருத்ஸ்நவித்’. அக்ஞானிகளில் சிலர், அனாத்மாவான உடல்-மனம் வினையாற்றுவதாக புரிந்து கொண்டாலும், ஆத்மாவை தன்னிலிருந்து வேறான ஒன்றாக, அறியப்படும் பொருளாக எண்ணுகிறார்கள். இது போன்ற முழுமையற்ற, அரைகுறையான அறிவு அக்ருத்ஸ்நவித்-வை குறிக்கிறது. எதுவுமே அறியாத ஒருவனுக்கு எந்த பிரச்சினையும் இருக்கப் போவதில்லை. முழுமையான அறியாமை, சிலர் சிலாகிப்பதைப் போல பேரின்பமாக இருக்கலாம். ஆழ் உறக்கநிலையில் உள்ள ஒருவன் தன்னை கர்த்தா, போக்தா என்றெல்லாம் நினைப்பதில்லை. தெளிவற்ற அரைகுறை அறிவே குழப்பத்திற்கு காரணம். ஆத்ம-அனாத்ம விஷயத்தில் மந்த புத்தியுடன் பகுத்தறியும் விவேகமற்ற இவர்களை, ஞானியானவன் கர்மம் மோக்ஷத்தை கொடுக்காது என கூறி குழப்பக்கூடாது( விசாலயேத்). ‘கர்மம், பந்தத்தை கொடுக்கக்கூடியது. கடமையோ, பிரார்த்தனையோ, கோயிலுக்கு செல்லுதலோ, ஜபம் செய்தலோ முட்டாள்தனமானது. ஞானம் மட்டுமே மோக்ஷத்தை கொடுக்கவல்லது’. இதுபோன்ற கருத்துக்கள் அக்ஞானிகளை கலக்கமுற செய்யுமே தவிர அவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்காது. ஆகவே அவர்களின் விருப்பத்தை தர்மத்திற்குட்பட்டு நிறைவேற்றிக் கொள்ளும் அறம் சார்ந்த அறிவுரையை பகர்வதே சிறந்தது.  

------------------------------------------------------------------------------------------------------------------

||3.30|| கர்மயோகத்தின் சாரம்:

मयि सर्वाणि कर्माणि सन्न्यस्याध्यात्मचेतसा

निराशीर्निर्ममो भूत्वा युध्यस्व विगतज्वर: ।। ३० ।। 

மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ்யாத்4யாத்மசேதஸா

நிராசீ1ர்நிர்மமோ பூ4த்வா யுத்4யஸ்வ விக3தஜ்வர: ।। 30 ।।


सर्वाणि कर्माणि  ஸர்வாணி கர்மாணி  எல்லா கர்மங்களையும்   मयि  மயி   என்னிடத்தில்    

सन्न्यस्य  ஸந்ந்யஸ்ய  அர்ப்பணம் செய்து  अध्यात्म-चेतसा  அத்4யாத்ம-சேதஸா  ஆத்மாவில் வைக்கப்பட்ட சித்தத்தோடு  निराशी:   நிராசீ1:  ஆசையற்றவனாய்   निर्मम: भूत्वा  நிர்மம: பூ4த்வா   மமகாரம் இல்லாதவனாய்    विगतज्वर:  விக3தஜ்வர:  மனக்கொதிப்பற்றவனாய்   युध्यस्व   யுத்4யஸ்வ   யுத்தம் செய்.


எல்லா செயல்களையும் என்னிடத்தில் அர்ப்பணம் செய்து, ஆத்மாவில் வைக்கப்பட்ட சித்தத்தோடு, ஆசையையும், எனது என்ற எண்ணத்தையும் அகற்றி, மனக்கொதிப்பற்றவனாய் யுத்தம் செய்வாயாக.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எல்லாச் செய்கைகளையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணமாகத் துறந்துவிட்டு, ஆசை நீங்கி, எனது என்பது அற்று, மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்ப் போர் செய்யக் கடவாய்.


விளக்கம்:

=> கர்மயோகத்தின் சாராம்சம்:

அர்ஜுனனின் யதார்த்த நிலைக்கு மீண்டும் வந்து இங்கு பகவான் உபதேசத்தை தொடர்கிறார். ‘ஒருவேளை நீ ஞானியாக இருந்தால்…’ என அர்ஜுனனை ஞானியாகக் கொண்டு செய்யப்பட்ட அப்யுபேத்ய வாதத்திற்கு(சுலோகம் 3.20) பின், மனத்தூய்மைக்காக கடமை செய்யப்பட வேண்டும். அதற்கு கர்மயோகம் அவசியம். ஆகவே கர்மயோகத்தை மேற்கொள்ளத் தேவைப்படுகிற விவேகத்தை இங்கு சுருக்கமாக உபதேசிக்கிறார்.


ஐந்து வித பாவனையுடன் கர்மயோகத்தில் ஈடுபட வேண்டும்:

    [1] அத்4யாத்ம-சேதஸாசேதஸ் - ஞானம்; ஆத்ம சம்பந்தமான அறிவுடன் கூடியவனாக கர்மயோகம் செய்ய வேண்டும். தன்னைப் பற்றிய சரியான அறிவே, செய்யத்தக்கது எது, தகாதது எது என்ற விவேகத்தையும் கொடுக்கிறது. இந்த திறன் விவேக புத்தி எனப்படும். உதாரணமாக,

* செயல் பந்தப்படுத்தாது; பாப புண்ணியத்தைக் கொடுக்காது. அச்செயலுக்குப் பின் உள்ள பாவனையே பந்தப்படுத்துகிறது என்ற அறிவு. உயிரைக் காப்பாற்றும் பொருட்டு மருத்துவரால் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் நோயாளி உயிரிழக்கிறான். நகையை அபகரிக்கும் திருடன் அதன் உரிமையாளரை கொலை செய்கிறான். இவ்விரு செயலிலும் உயிரிழப்பு பொதுவானதாக இருந்தாலும், பாவனையின் காரணமாக மருத்துவர் புண்ணியத்தையும்(நன்மதிப்பு), குற்றம் செய்தவனாக திருடன் பாபத்தையும்(தண்டனை) அடைகிறான்.

* செய்யப்பட வேண்டிய கடமைகளை செய்துதான் ஆக வேண்டும் என்ற புத்தி. கர்மயோகத்தை கடமையாகச் செய்து மனத்தூய்மையை அடைதலின் மூலம் ஞானத்திற்கானத் தகுதி கிடைக்கிறது எனும் அறிவு.

* கர்மத்தை செய்யும் உரிமை மட்டுமே என்னுடையது. அதனுடைய பலனில் எனக்கு அதிகாரம் கிடையாது என்ற ஞானம். கர்மபலனை கொடுப்பவர் ஈஷ்வரன். ஆகவே அவருடைய பிரசாதமாக பலனை ஏற்றுக் கொள்ளுதல்.

    [2] ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய ஈஷ்வரனிடத்தில் எல்லா செயல்களையும் அர்ப்பணித்தவனாய்

* மன்னனின் அடிபணிந்த சேவகன் எவ்விதம் எந்த கேள்வியுமின்றி அவனது பல்வேறு காரியங்களையும் முனைப்புடன் செய்கிறானோ, அவ்விதமே கர்மயோகியானவன் வினையாற்ற வேண்டும் என சங்கரர் தனது பாஷ்யத்தில் உதாரணம் கொடுக்கிறார். ‘இந்த குறிப்பிட்ட செயலுக்காக, நான் இச்சூழலில் வைக்கப்பட்டுள்ளேன். இவ்விதம் செயலாற்ற விதிக்கப்பட்டுள்ளதால் அவ்விதத்திலேயே இயங்குகிறேன்’. இதுவே அர்ப்பணிப்புக்கான பாவனை.  

    [3]  நிராசீ1: ஆசையற்றனாய்; பலனில் பற்றற்றவனாய்

* ஒருவன் தனது கடமைகளினால் வருகின்ற உரிமையைத் தியாகம் செய்தவனாக வினையாற்ற வேண்டும். அதாவது, கடமையை செய்தபின், அதற்காக அவர்கள் இதைச் திருப்பிச் செய்ய வேண்டும் என  பதிலுக்கு எதிர்ப்பார்க்காமலிருத்தல். உதாரணமாக தனது குழந்தையை படிக்க வைத்தல் பெற்றோரின் கடமை. அதற்கு பதிலாக அவர்கள் தங்களைப் பேண வேண்டும் என்பதைப் பலனாக பெற்றோர்கள் எதிர்ப்பார்க்கக் கூடாது. இறைவன் தனக்கு அளித்த இனிய கட்டளையாகக் கடமையில் ஈடுபட வேண்டும்.

* எதிர்கால திட்டங்கள், குறிக்கோள்கள், பிரம்மாண்டமான ஆசைகள், முன்னுரிமைகள் ஆகியவை நிகழ்கால செயலுக்கு தடையாக இருக்கும். எதிர் வரும் காலத்திலேயே மனதை வைத்தவன் தற்கால நிகழ்வை கோட்டை விடுகிறான். ஆகவே எதிர்காலக் கனவில் மூழ்காதவனாய், நிகழ்காலத்தில் செய்யப்பட வேண்டியதை உணர்ந்தவனாய் வினையாற்ற வேண்டும்.

    [4]  நிர்மம:மமகாரத்தை, எனது என்ற எண்ணத்தை தியாகம் செய்தனாய்,

* ஒருவனுடைய மனமுதிர்ச்சிக்கு பெரிய தடையாக இந்தஎன்னுடையதுஅல்லதுமமத்தவம்என்ற பாவனை நிற்கிறது.

* இவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் என்ற பாவனையிலோ, இப்பொருள் என்னுடையது என்ற எண்ணத்திலோ செயல்படாமல், மமகாரத்தை தியாகம் செய்தவனாய், எது தர்மமோ அதைச் செய்ய வேண்டும்

    [5] விக3தஜ்வர:மனக்கொதிப்பற்றவனாய்; வேறுபாடில்லாமல் சமமாக இருப்பவனாய்,

* சூழ்நிலையால் ஏற்படுகின்ற விரக்தி(ஜ்வர:) மற்றும் கோபம் போன்றவை ஒருவனை கடமையிலிருந்து விலக்குகிறது. இதனால் புகார் கூறிக்கொண்டும், முணுமுணுப்புடனும் அக்காரியத்தை செய்ய வைக்கிறது. இது கர்மயோகத்திற்கு எதிரான நிலைபாடாகும்.

* குழப்பமில்லாமல், மன அமைதியுடனும், சமத்துவத்துடனும் செயலாற்ற வேண்டும்.

மேற்கூரிய இந்த ஐந்து பாவனையுடன் கூடியவனாக அர்ஜுனா உனது ஸ்வதர்மத்தை(யுத்4யஸ்வ) செய்வாயாக என கிருஷ்ணபகவான் கர்மயோகத்திற்கான சாரத்தை தொகுத்துக் கூறுகிறார். இங்குயுத்4யஸ்வஎன்பது ஒருவனுடைய தன்னறத்தை(ஸ்வதர்மத்தை) குறிக்கிறது. ‘கர்தவ்யம் கர்ம(कर्तव्यं कर्म)’ - செய்யப்பட வேண்டிய கடமை. அர்ஜுனன் தற்போது போரை எதிர்நோக்கி யுத்தகளத்தில் நிற்பதால்போர் புரிஎன்கிறார்

ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

இரண்டு வேளைகளில் ஈஷ்வரன் புன்னகை புரிகிறான். முதலாவது ஒருவன் கொடும் நோயால் வருந்திச் சாகும் தருவாயில் இருக்கும் போது, வைத்தியன் உள்ளே வந்து நோயாளியின் தாயைப் பார்த்து, ‘பயப்பட வேண்டாம்; உன் மகனுடைய உயிரைக் காப்பாற்ற நான் இருக்கிறேன்என்று சொல்லும் போது. இரண்டாவது, இரண்டு சகோதரர்கள் தங்களுடைய நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ள அளவுகோலைக் கையில் எடுத்துக்கொண்டு கோடு கிழித்துஅந்தப் பக்கம் உன்னுடையது, இந்தப் பக்கம் என்னுடையதுஎன்று சொல்லும்போது.

------------------------------------------------------------------------------------------------------------------