வெள்ளி, 11 ஜூன், 2021

கர்மயோகம் 3.23 - 3.26

 ||3.23|| சிஸ்டாசாரர்கள் அல்லது ச்ரேஷ்டர்கள்(சான்றோர்கள்) இல்லையெனில் உண்டாகும் விளைவு:

यदि ह्यहं वर्तेयं जातु कर्मण्यतन्द्रित:

मम वर्त्मानुवर्तन्ते मनुष्या: पार्थ सर्वश: ।। २३ ।। 

யதி3 ஹ்யஹம் வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்3ரித:

மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த2 ஸர்வச1: ।। 23 ।।


पार्थ  பார்த2  பார்த்தா   अहं   அஹம்  நான்   जातु   ஜாது  எப்பொழுதும்  अतन्द्रित:   அதந்த்3ரித:  சோர்வின்றி   कर्मणि  கர்மணி  கர்மத்தில்   वर्तेयं यदि  வர்தேயம் யதி3 ஈடுபடாவிட்டால்   हि  ஹி   நிச்சயமாக  

मनुष्या:   மநுஷ்யா:  மனிதர்கள்   मम   மம  என்னுடைய   वर्त्म   வர்த்ம   வழியை    

सर्वश:   ஸர்வச1:  எல்லா விதத்திலும்   अनुवर्तन्ते  அநுவர்தந்தே  பின்பற்றுவார்கள்


ஹே பார்த்தா, நான் சோர்வின்றி எப்பொழுதும் கர்மத்தில் ஈடுபடாவிட்டால், மனிதர்கள் என் வழியையே எல்லா விதத்திலும் பின்பற்றுவார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

நான் சோம்பலில்லாமல் எப்போதும் தொழில் கொண்டிராவிடின், பார்த்தா, எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.


விளக்கம்:

நன்மை கடைபிடித்தல், ஓயாது உழைத்தல் முதலிய நல்வழிகளில் பெரியோர்களைப் பின்பற்றுதல் உலகில் மிகக் குறைவு. ஆனால் சோம்பித்திரிதல், முயற்சி குன்றுதல் முதலியன மேலோரிடத்தும் இருக்கின்றதென சாக்குச் சொல்லி, செயலில் ஈடுபடாதிருத்தல் பெரும்பாலோரது போக்காகும். இதையையே கிருஷ்ணபகவான் அர்ஜுனனிடம், எப்போதாவது அவர் செயலற்றவராக மாறினால் உலக மக்கள் அவரது பாதையை பின்பற்ற தயங்கமாட்டார்கள். ஏனெனில் எதுவும் செய்யாமலிருப்பது எப்போதும் எளிதானது போலத் தெரியும்முயற்சி அதிகம் தேவைப்படுகிற அல்லது வலி நிறைந்த காரியத்தை ஒத்திப்போடுதலும், மனதிற்குகந்த செளகரியமான காரியத்தில் மட்டும் ஈடுபடுதலும் மக்களின் போக்கு. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் விரும்பத்தகாத, துன்பம் தருகிற கடமைகளிலிருந்து விலக இது போன்ற உதாரணத்தை மக்கள் தேடுவார்கள். ஆகவேதான் செயல் செய்யும் விஷயத்தில் கிருஷ்ணர், துவாரகை அரசர், அவதாரமாக போற்றப்பட்டவர், முன்மாதிரியாக திகழ்வது அவசியமாகிறது.   

------------------------------------------------------------------------------------------------------------------

||3.24||ச்ரேஷ்டர்கள் இல்லையெனில் உண்டாகும் கேடு

उत्सीदेयुरिमे लोका कुर्यां कर्म चेदहम्

सङ्करस्य कर्ता स्यामुपहन्यामिमा: प्रजा: ।। २४ ।।

உத்ஸீதே3யுரிமே லோகா குர்யாம் கர்ம சேத3ஹம் 

ஸங்கரஸ்ய கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா: ।। 24 ।। 


अहम् அஹம்  நான்  कर्म  கர்ம கர்மத்தை   कुर्यां चेत्   குர்யாம் சேத்     செய்யாவிட்டால்   

इमे लोका:   இமே லோகா:  இந்த உலகங்கள்   उत्सीदेयु:  உத்ஸீதே3யு:  அழிந்து போகும்   

सङ्करस्य     ஸங்கரஸ்ய   குழப்பத்திற்கு   कर्ता स्याम्   கர்தா ஸ்யாம்   காரணமாகி விடுவேன்   

इमा:  இமா:  இந்த   प्रजा:  ப்ரஜா:  பிரஜைகளை   उपहन्याम्   உபஹந்யாம்  கெடுத்தவன் ஆவேன்.


நான் கர்மத்தை செய்யாவிட்டால், இவ்வுலக மக்கள் நாசத்தை அடைவார்கள். அவர்களின் குழப்பத்திற்கு நான் காரணமாகி விடுவேன். இந்த மக்களை நானே அழித்தவனாவேன்.  


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

நான் தொழில் செய்யாவிட்டால், இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள்; குழப்பத்தை நான் ஆக்கியோன் ஆவேன்; இந்த மக்களை யெல்லாங் கொல்வோனாவேன்.


விளக்கம்:

=> வினை வழுவுவதினால் வரும் கேடு:

ஒருகால் கிருஷ்ணபகவான் செயலில் ஈடுபட்டிருக்காவிட்டால் மக்கள் அவரை பின்பற்றியிருப்பார்கள். அவர்கள் பின்பற்றட்டுமே இதனால் என்ன தவறு நேரப்போகிறது எனில், அவர்கள் தங்களையே அழித்துக் கொள்வார்கள் என்கிறார் பகவான். எண்ணற்ற விருப்பு வெறுப்புகளை மனதில் சுமந்து அதை அடைவதற்கான காரியத்தில் ஈடுபடாவிட்டால் என்னவாகும்? விவேகமும், பகுத்தறியும் அறிவும் இல்லாத காரணத்தால் குழப்பமடைந்தவர்களாக அவர்கள் பித்துப்பிடித்த நிலைக்கு சென்றுவிடுவார்கள். தொழிலேதும் செய்யாமல் வெறுமனே உடலை மட்டும் வளர்த்துக் கொள்ளும் இந்த  பைத்தியக்கார நிலையே மனித சமூகத்தின் அழிவுநிலை என்கிறார் பகவான். பொதுவாகலோகா:என்பது உலகைக் குறிக்கும். ஆனால் இங்கு உலகில் வாழும் மக்களைக் குறிக்கிறது. ஆகவே வினையாற்றாவிடில் மக்கள் அவர்களையே அழித்து கொண்டவர்களாகிறார்கள். மேலும் பகவான் கர்மத்தில் இல்லாவிட்டால், அவரே குழப்பத்திற்கு கர்த்தாவாக ஆகிவிடுவார் என்கிறார். அர்ஜுனன், தான் இப்போரில் சண்டையிட்டால், சமுதாயத்தில் குழப்பம் விளைவித்தவனாக பாபத்தை அடைவேன். ஆகவே யுத்தம் செய்ய மாட்டேன் என முதல் மற்றும் இரண்டாம் அத்தியாயத்தில் கூறியிருந்தான். ஆனால் இப்போது கிருஷ்ணபகவான், அர்ஜுனன் யுத்தம் செய்யாவிடில், மக்களும் அவனைப் பின்பற்றி செயல் புரியாமலிருக்க தூண்டப்பட்டவகளாக, குழப்பத்தை அடைவார்கள் என்கிறார்.   

ஒருவனுடைய புத்தியானது நாசத்தை அடைந்தால் அவனே நாசமடைந்தவனாகிறான்(புத்தி-நாசாத் ப்ரணச்யதி) என பகவான் முன்னமே 2.63 ல் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த அழிவு உடல் ரீதியானது அல்ல; இது புத்தி-நாச, இருத்தல் மற்றும் இல்லாமையை பாகுபடுத்திப் பார்க்கும் திறனும், தர்க்க அறிவும் நாசமடைந்துவிடும். மனிதனை மிருகத்திடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் இத்திறமை அழிவதன் மூலம் அவன் மனித நிலையிலிருந்து கீழிறங்குகிறான். அழிவை அடைகிறான்

மனிதர்கள் கண்டிப்பாக அவர்களது கடமையை ஆற்றுதல் வேண்டும். அது அவர்களுக்கு அதிக மகிழ்ச்சியை தராது போகலாம், ஆனால் செயல் செய்யாதிருப்பது மிக மோசமான விளைவையே உண்டாக்கும். வெகுஜன சோம்பல் என்னும் பெரிய நோயினால் சமூகம் பீடிக்கப்பட்டதாகும். இதனால் மனித சமுதாயத்தின் மேன்மை குன்றிப் போகும். முறையாக தத்தம் தொழில்புரியும் பொழுது அதன் மூலம் அவரவர் மேன்மை மிளிரும்

------------------------------------------------------------------------------------------------------------------

||3.25|| ஞானிகளுக்கான அறிவுரை[25&26]:

सक्ता: कर्मण्यविद्वांसो यथा कुर्वन्ति भारत  

कुर्याद्विद्वांस्तथासक्तश्चिकीर्षुर्लोकसङ्ग्रहम् ।। २५ ।। 

ஸக்தா: கர்மண்யவித்3வாம்ஸோ யதா2 குர்வந்தி பா4ரத

குர்யாத்3வித்3வாம்ஸ்ததா2ஸக்தச்1சிகீர்ஷுர்லோகஸங்க்3ரஹம் ।। 25 ।।


भारत   பா4ரத  பாரதா   कर्मणि   கர்மணி   கர்மத்தில்   सक्ता:   ஸக்தா:   பற்றுள்ளவர்களாய்    

अविद्वांस:   அவித்3வாம்ஸ:   அக்ஞானிகள்   यथा   யதா2  எப்படி   कुर्वन्ति  குர்வந்தி  செயல் செய்கிறார்களோ   तथा   ததா2  அப்படி  विद्वान्    வித்3வாந்   ஞானி    असक्त:   அஸக்த:  பற்றில்லாதவனாய்    

लोकसङ्ग्रहम्    லோகஸங்க்3ரஹம்   உலக நன்மையை    चिकीर्षु:   சிகீர்ஷு:   விரும்பியவனாக  

कुर्यात्    குர்யாத்  கர்மம் செய்ய வேண்டும்.


ஹே பாரதா, பற்றுள்ளவர்களாய் அக்ஞானிகள் கர்மம் செய்வது போல் பண்டிதர் பற்றில்லாதவனாய் உலக நன்மையைக் கருத்தில் கொண்டு கர்மத்தில் ஈடுபட வேண்டும்.



சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பாரதா, அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய் எப்படித் தொழில் செய்கிறார்களோ அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி உலக நன்மையை நாடித் தொழில் செய்ய வேண்டும்.


விளக்கம்:

=> வினையாற்றுதலில் விவேகிக்கும் மற்றவர்களுக்குமுள்ள வேறுபாடு:

கிருஷ்ணபகவான் தன்னை சர்வ-ஆத்மா, அனைத்துமாக இருப்பவன் என அறிந்த காரணத்தால் மூவுலகிலும் அவரால் அடையப்படவேண்டியது என எதுவுமில்லை. இருப்பினும் மானுடர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் வண்ணம் தொடர்ந்து செயலில் மூழ்கி இருப்பதாக கூறியிருந்தார். இங்கும் பகவான் அர்ஜுனனைஆத்ம-வித்’, மெய்மையை அறிந்தவனாகவே வைத்துக் கொண்டு வாதத்தைத் தொடர்கிறார். அவனது வழியைப் பின் தொடர காத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக, அவர்களை நல்வழிப்படுத்தும் பொருட்டு, செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். இதை மனதில் கொண்டு கிருஷ்ணர் இங்கு அர்ஜுனனை இரண்டு அர்த்தங்களுடன் கூடியதான பாரதாஎனும் பெயரில் அழைக்கிறார். ஒன்று, பரத வம்சத்தில் பிறந்தவனைக் குறிக்கிறது. இரண்டாவது, ‘பா4(भा)’ எனில் பிரம்ம வித்யா, பிரம்மத்தைப் பற்றிய ஞானம். ‘தஸ்யாம் : ரமதே(तस्याम् : रमते)’, அதில் மகிழ்ந்திருப்பவன்; பிரம்ம ஞானத்தில் மகிழ்பவன் பா-ரதா. தற்சமயம் அர்ஜுனன் பிரம்மத்தை பற்றிய போதனையைப் பெற்று அதில் மகிழ்ந்துகொண்டிருக்கும் நோக்கிலும் அவனைபாரதாஎன்றழைக்கிறார்

கர்மப் பலனை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையானது பாமரரைக் செயலில் தூண்டுகிறது. ஆனால் ஞானிக்கோ ஆசையெதுவும் கிடையாது. இருப்பினும் அவன் ஓயாது வினையாற்ற வேண்டும் என பகவான் அறிவுறுத்துகிறார். ஆத்ம ஞானத்தை உடையவன்வித்வான்(வித்3வாந்)’ என்றும் இதையறியாதவன்அவித்வான்என்றும் இச் சுலோகத்தில் கூறப்படுகிறது. தங்களைச் செயலாற்றுபவர்களாக எடுத்துக் கொள்கிற அவித்வான்கள், ஆத்ம அறிவற்றவர்கள், ‘இதைச் செய்வதனால் இதை அடைகிறேன்என்ற பாவனையில் செயல்படுவதால் கர்மத்தினால் பந்தப்படுகிறார்கள். பலனின் மீதுள்ள ஆர்வத்தினாலேயே, அவர்கள் உற்சாகம், பதட்டம் மற்றும் கவலை ஆகியவற்றின் கலவையுடன் பல நேரங்களில் செயல்களை மேற்கொள்கின்றனர். இங்கு பகவான் என்ன சொல்கிறார் எனில், பலன்களுக்காக மட்டும் செயலைச் செய்பவனின் அதே உற்சாகத்துடன் வித்வான், ஞானி செயலைச் செய்யட்டும். பலனில் பற்றில்லாத காரணத்தினால் பதட்டமோ, எதிர்நோக்கும் பயன் கிடைக்குமா என்ற கவலையோ ஞானியிடம் இல்லை. முடிவு வரும்போது, ​​அது அவனால் சமநிலையுடன் சந்திக்கப்படுகிறது. எனவே, ஞானி மற்றும் அக்ஞானி இவ்விருவருக்குமிடையே உற்சாகம் ஒரு பொதுவான காரணியாகட்டும் என்கிறார். சிகீர்ஷு: -> கர்தும் இச்சு:(कर्तुं इच्छु:) - செயலாற்ற விரும்புபவன்.

உலகை ஆசீர்வதிக்க, உலகிற்கு ஒரு முன்மாதிரியாக திகழ, ஞானிகள் வினையாற்றுகிறார்கள். இதில் ஞானிக்கு எந்த ஆதாயமும் இல்லை என்பது உண்மைதான், ஆனால் அதில் தவறில்லை. இவர்கள் ஒழுக்கம் எனும் உலக நியதி மற்றும் தர்மத்தை பாதுகாப்பதன் மூலம் மக்களைப் பாதுகாக்கிறார்கள். சான்றோரைப் பின்பற்றி உலகம் நல்வழிக்கு வருதலெனும்(லோகஸங்க்3ரஹம்) சீரிய பயன் இதனால் விளைகிறது.


=> விவேகி செயலாற்றும் விதம்:

வேதாந்த சிரவணத்தினால் ஆத்ம ஞானத்தை அடைந்த ஒருவன் செயலினால் உண்டாகும் எதிர்வினையை ஏற்றுக்கொள்கிறான். விரும்பத்தகாத விளைவிற்கு அஞ்சி அவன் செயலிலிருந்து விலகுவதில்லை. இது இவ்விதமாக நடக்கக்கூடாது என்ற எதிர்பார்ப்பும் அவனிடம் இருப்பதில்லை

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை விதிப்பயனால் வரலாம். ஆனால் அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பது விதிப்பயன் அல்ல. அது புருஷார்த்தம். வேதாந்த ஞானம் அந்த பக்குவத்தை நமக்கு கொடுக்கிறது. ஆகையால் உலக மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு ஞானி வினையாற்றுகிறான்.

------------------------------------------------------------------------------------------------------------------

||3.26|| சொல்லாலும் செயலாலும் ஞானி எதைச் செய்யலாகாது

बुद्धिभेदं जनयेदज्ञानां कर्मसङ्गिनाम्  

जोषयेत्सर्वकर्माणि विद्वान्युक्त: समाचरन् ।। २६ ।। 

பு3த்3தி4பே43ம் ஜனயேத3ஜ்ஞாநாம் கர்மஸங்கி3நாம்  

ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்3வாந்யுக்த: ஸமாசரந் ।। 26 ।।


कर्मसङ्गिनाम्   கர்மஸங்கி3நாம்  கர்மத்தில் பற்றுள்ளவர்களுக்கு  अज्ञानां  அஜ்ஞாநாம்  அக்ஞானிகளுக்கு  बुद्धिभेदं   பு3த்3தி4பே43ம்  மனக்கலக்கத்தை   विद्वान्   வித்3வாந்  ஞானியானவன்   

जनयेत्   ஜனயேத்  உற்பத்தி செய்யக் கூடாது   युक्त:  யுக்த:  ஞானத்தில் நிலைப்பெற்றவனாக   

सर्वकर्माणि   ஸர்வகர்மாணி  எல்லா கர்மங்களையும்   समाचरन्    ஸமாசரந்  நன்கு ஆற்றிக்கொண்டு  

जोषयेत्    ஜோஷயேத்  உற்சாகப்படுத்த வேண்டும்.


ஞானியானவன் கர்மத்தில் பற்றுள்ள அக்ஞானிகளிடத்தில் மனக் குழப்பத்தை உற்பத்தி செய்யக் கூடாது. ஞானத்தில் நிலைப்பெற்றவனாக எல்லா கர்மங்களையும் உற்சாகத்துடன் நன்கு ஆற்ற வேண்டும்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

  அறிவுடையோன் தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது. அவன் யோகத்தில் நின்று தொழில் செய்து எல்லாத் தொழில்களையும் கவர்ச்சியுடையவனாக்க வேண்டும்.


விளக்கம்:

=> ஞானிகளுக்கான அறிவுரை:

இச் சுலோகத்தில் வைராக்கியம் மற்றும் நிலையாமை முதலிய வேதாந்த கருத்துக்களை கர்மத்தில் பற்றுடைய அக்ஞானிகளுக்கு உபதேசிப்பதன் மூலம் அவர்களுக்கு மனக் குழப்பத்தை உண்டுபண்ணக் கூடாது என்கிறார் கிருஷ்ணபகவான்.

   பொதுவாக மனிதர்களை நான்கு விதமாக வகைப்படுத்தலாம்.

1. பாமரா:(पामरा:) - பாமரர்கள்; உணவு மற்றும் உறக்கத்தை விரும்புபவர்கள்.

2. விஷயிந:(विषयिन:) - போகத்தை விரும்புபவர்கள்

3. முமுக்ஷுக்கள்(मुमुक्षु:) - மோக்ஷத்தை அடைய விரும்புபவர்கள்

4. பரமஹம்சா:(परमहंसा:) - முக்தர்கள்

* இவர்களில் (1) மற்றும் (4) ஆகியோரிடம் வேதாந்தம் பேசக் கூடாது

* இரண்டாவது வகையைச் சார்ந்தவர்களிடம் தர்மத்தைப் பற்றியும், அதைப் பின்பற்றுவதினால் கிடைக்கும் புண்ணிய பலன்(நல்லூழ்) குறித்தும் பேசலாம். ஆனால் இவர்களிடமும் வேதாந்தம், வைராக்கியம், கர்மமற்ற நிலை, பரத்வம் குறித்து பேசுதலை தவிர்த்தல் வேண்டும். இது அவர்களின் புத்தியைச் சலனப்படுத்தி மனக் கலக்கத்தை உற்பத்தி செய்துவிடும். நிஷ்காமிய கர்மத்தின் தத்துவத்தை புரிந்து கொள்ளும் தகுதியற்றவர்களாக, பண்டிதரைப் போன்று பாசாங்கு செய்து கர்மத்தை கடைப்பிடியாது இகவாழ்க்கையை இழந்துவிடுவார்கள்

* மூன்றாவதாக வகைப்படுத்தப்பட்டுள்ள முமுக்ஷுக்களுக்கு மட்டுமே வேதாந்தம் உபதேசிக்கப்பட வேண்டும். ஒரு சாதகனுக்கு உலக இன்பங்களில் வைராக்கியம் என்பது தானாகவே வந்திருக்க வேண்டுமே தவிர உபதேசத்தினால் அது வருவதில்லை. குரு, சாஸ்த்திர விசாரம் முதலியவை ஏற்கனவே உருவான வைராக்கியத்தைதான் வளர்த்த முடியும்

வியாஸபகவான் தனது பிரம்மசூத்திரத்தில் வேதாந்த விசாரத்தை மேற்கொள்ள தகுதியுடைய அதிகாரிகள் யார் என்பதை முதல் சூத்திரத்திலேயே நிலை நாட்டுகிறார். அதன்படி, விவேகம், வைராக்கியம் உள்ளிட்ட சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவர்களே பிரம்மவித்யைக்கு தகுதியானவர்கள். தவிர ஜாதியோ, இனமோ, ஆண் பெண் முதலிய பேதமோ இதற்கு தடையாவதில்லை. மோக்ஷத்தை அடைய விரும்பும் முமுக்ஷுக்கள் சாஸ்த்திர சிரவணத்திற்காக குருவை நாடிச் செல்ல வேண்டுமென கூறுகிறார்


=> முன்மாதிரியாக திகழ்தலே லோகஸங்க்3ரஹம்:

இங்குவித்வான்என்பதைக் குறிக்கும் மற்றுமொரு சொல்யுக்த:’, ஞானத்தில் பொருந்தியவன், ஞானேந யுக்த:(ज्ञानेन युक्त:). இவர்கள் சாதிக்க எதுவும் இல்லை மற்றும் எதையும் இழக்கவில்லை என்றாலும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என ஞானிகளை கண்ணன் அறிவுறுத்துகிறார். தனது பொறுப்பற்ற நடவடிக்கைகளால் அக்ஞானிகளை குழப்பக்கூடாது(பு3த்3தி4பே43ம் ஜனயேத்). அவர்களுக்கு அறத்தை போதிக்கும் பொருட்டு உற்சாகத்துடன் நன்கு செயல்படுதல் வேண்டும்(ஜோஷயேத் ஸமாசரந்). உதாரணமாக, ஆலயத்தைக் கடந்து செல்லும் போது, தானே அனைத்துமாக இருப்பவன் என உணர்ந்திருந்த போதிலும் ஞானியானவன் ஆலயத்தினுள் நுழைந்து, நமஸ்கரித்து பிரார்த்தனை செய்கிறான். சந்யாசியாக இருக்கும் ஞானி, சந்யாச தர்மத்தை செவ்வனே கடைபிடிக்கிறான்.  

கிரஹஸ்த ஆஸ்ரமத்தில் இருக்கும்வித்வான், அதற்குரிய கடமையை, சமுதாயத்திற்கு, பெற்றோருக்கு, தேவதைகளுக்கு, மற்ற உயிரினங்களுக்கு செய்யும் பஞ்ச மஹா யக்ஞத்தை(சுலோகம் 3.13) செவ்வனே செய்வதன் மூலம் முன்மாதிரியாக இருந்து தர்மத்தை போதிக்க வேண்டும் என்கிறார் கிருஷ்ணபகவான்.  

------------------------------------------------------------------------------------------------------------------