வியாழன், 13 ஜூலை, 2023

அக்ஷரப்ரஹ்ம யோகம் 8.18 - 8.19

||8.18|| பிரளயம் மற்றும் சிருஷ்டி விளக்கப்படுகிறது:

अव्यक्ताद्व्यक्तय: सर्वा: प्रभवन्त्यहरागमे

रात्र्यागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्तसंज्ञके ।। १८ ।।

அவ்யக்தாத்3வ்யக்தய: ஸர்வா: ப்ரப4வந்த்யஹராக3மே  

ராத்ர்யாக3மே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே ।। 18 ।।


अह:गमे  அஹ: ஆக3மே  பகல் வரும்பொழுது   अव्यक्तात्  அவ்யக்தாத்   தோன்றாநிலையிலிருந்து   

सर्वा: व्यक्तय:  ஸர்வா: வ்யக்தய:  எல்லாத் தோற்றங்களும்   प्रभवन्ति  ப்ரப4வந்தி  வெளிப்படுகின்றன   

रात्रि गमे   ராத்ரி ஆக3மே  இரவு வரும்பொழுது   

अव्यक्तसंज्ञके  அவ்யக்தஸம்ஜ்ஞகே   ஒடுங்கியது என்று சொல்லப்படுகின்ற   

तत्र एव  தத்ர ஏவ  அதனுள்ளேயே   प्रलीयन्ते  ப்ரலீயந்தே  மறைகின்றன.


(பிரம்மாவின்) பகல் வரும்பொழுது தோன்றாநிலையிலிருந்து தோற்றங்கள் யாவும் வெளிப்படுகின்றன. இரவு வரும்பொழுது ஒடுக்கம் என்பதனுள் அவைகள் மறைகின்றன.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அவ்யக்தம்,அதாவது, மறைவுபட்ட உலகத்தினின்றும் தோற்றப் பொருள்கள் வெளிப்படுகின்றன. இரவு வந்தவுடன் அந்த மறைவுலகத்துக்கே மீண்டும் கழிந்துவிடுகின்றன.


விளக்கம்:

=> தோற்றம்:

ஒவ்வொரு ஜீவனும் உறங்கப்போகும்போது அவனது உலகம் அவனது உள்ளத்தில் ஒடுங்குகிறது; விழித்து எழும்போது அவனது உலகம் விரிகிறது. அதேபோல பிரம்மாவின் உறக்க விழிப்பில் அகிலாண்டங்களும் மறையவும் தோன்றவும் செய்கின்றன. இத்தோற்றமும் ஒடுக்கமும் சிருஷ்டி, சம்ஹாரம் எனவும் பெயர் பெறுகின்றன. பிரம்மாவின் பகல் வரும்பொழுது தோன்றாநிலையிலிருந்து தோற்றங்கள் யாவும் வெளிப்படுகின்றனஅவ்யக்தாத் ஸர்வா: வ்யக்தய: ப்ரப4வந்தி. தனித்தனியான ஜீவராசிகள் முதல், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், அசைகின்ற மற்றும் அசையாத, ஜடமான மற்றும் உணர்வுடைய அனைத்தும் தோன்றுகின்றன.

எல்லாமே ஈஷ்வரன் எனும்போது பிரம்மாவும் ஈஷ்வரனே. படைப்பின் நோக்கிலிருந்து தான் பிரம்மவாவிடமிருந்து அனைத்தும் தோன்றியிருக்கிறது என்று சொல்கிறோம். மற்றபடி பிரம்மதேவர் பரமேஷ்வரனிடமிருந்து வேறாரனவர் அல்ல; ஆகவேதான் உண்மையில் ஈஷ்வரனிடமிருந்து அனைத்தும் தோன்றியுள்ளது என்கிறோம்


=> ஒடுக்கம்:

அதேபோல பிரம்மாவின் இரவு வரும்பொழுது, அதாவது நானூற்றி முப்பத்தி இரண்டு கோடி ஆண்டுகளுக்கு பிறகு ஒடுக்கத்தை அடைகின்றன, ராத்ரி ஆக3மே ப்ரலீயந்தே. எங்கு? பிரம்மாவின் உறக்கம் எனும் மூலகாரணத்திற்குள் அவைகள் மறைகின்றன, அவ்யக்தஸம்ஜ்ஞகே. அவ்யக்தம் என்பது வெளித்தோற்றத்திற்கு வராத மாயையைக் குறிக்கின்றது. சிருஷ்டி அனைத்தும் அவ்யக்தத்திலிருந்து தோன்றி அவ்யக்தத்திற்குள் ஒடுங்குகின்றன. இந்த ஒடுக்கம் ஒரு கல்பம், அதாவது நானூற்றி முப்பத்தி இரண்டு கோடி ஆண்டுகள் நீடிக்கின்றது; பிரம்மாவின் விழிப்பில் மீண்டும் சிருஷ்டி வெளிப்படுகின்றது. இந்த சுழற்சி முப்பத்தி ஆறாயிரம் முறை நடைபெறுகிறது. பிறகு பிரம்மாவின் ஆயுள் முடிந்து அவர் கிரம-முக்தியடைகிறார். அப்போது பிரம்மலோகம் உட்பட அனைத்து உலகங்களும் அழிகின்றன; மஹா-பிரளயம் உண்டாகின்றது; ஆனால் பரமேஷ்வரன் மட்டும் இருக்கின்றார். அந்த பரமேஷ்வரன் நானாக இருக்கின்றேன், என்கிறார் பகவான். எனவே ஒருவன் ஸத்-சித்-ஆனந்தமான என்னை அடைந்தால் மீண்டும் இந்த சுழற்சியில் நுழைவதில்லை

மேலும் பிரம்மலோகம் உள்ளிட்ட வேறு லோகங்களுக்குச் செல்ல ஒருவன் அதிக முயற்சி செய்யவேண்டும். விரிவான கர்மங்கள் மற்றும் சிக்கலான உபாசனைகளைப் பின்பற்ற வேண்டும். இவ்விதம் அடையப்பெற்றும் இந்த லோகங்கள் மறுபிறப்புடையவைகள்; அங்கு செல்பவர்கள் புண்ணியம் முடிந்தவுடன் இனியொரு பிறவியை எடுத்துக் கொள்ளும் பொருட்டு திரும்பி வருகிறார்கள். மறுபுறம், தனது சுயத்தின் இயல்பாகவே உள்ள ப்ரம்மத்தை அடைவது எளிதானது. ஒப்பிடுகையில், மிக எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றை விட்டு விலகி ஏன் கடினத்துடன் லோகங்களை அடைய முயற்சி செய்கிறீர்கள்?

என்ற நோக்கில் பகவான் இங்கு சிருஷ்டி லயத்தை பற்றிய விவரணைகளைத் தருகிறார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||8.19|| மோக்ஷம் அடையும் வரையில் சிருஷ்டி சக்கரம் தொடரும்:

भूतग्राम: एवायं भूत्वा भूत्वा प्रलीयते

रात्र्यागमेऽवश: पार्थ प्रभवत्यहरागमे ।। १९ ।।

பூ4தக்3ராம: ஏவாயம் பூ4த்வா பூ4த்வா ப்ரலீயதே  

ராத்ர்யாக3மேऽவச1: பார்த2 ப்ரப4வத்யஹராக3மே ।। 19 ।।


एव अयम्   ஏவ அயம்  அதே இந்த   भूतग्राम:  பூ4தக்3ராம:   உயிர்த்தொகை/ஜீவராசிகளின் கூட்டம்  अवश:  அவச1:  தன்வசமின்றி   भूत्वा भूत्वा  பூ4த்வா பூ4த்வா  பிறந்து பிறந்து   

रात्रि आगमे   ராத்ரி ஆக3மே  இரவு வரும் பொழுது   प्रलीयते  ப்ரலீயதே  ஒடுங்குகிறது   पार्थ  பார்த2   பார்த்தா   अह: आगमे   அஹ: ஆக3மே  பகல் வரும்பொழுது   प्रभवति  ப்ரப4வதி தோன்றுகிறது.


பார்த்தா, அதே இந்த உயிர்த்தொகை பிறந்து பிறந்து இரவு வரும் பொழுது தன்வசமின்றி ஒடுங்குகிறது; பகல் வரும்பொழுது தோன்றுகிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இந்த பூதத் தொகுதி ஆதியாகித் தன் வசமின்றியே இரவு வந்தவுடன் அழிகிறது. பார்த்தா, பகல் வந்தவுடன் இது மீண்டும் பிறக்கிறது.


விளக்கம்:

மோக்ஷத்தை அடையும் வரையில் இந்த சிருஷ்டி சக்கரத்திலிருந்து ஒருவனுக்கு விடுதலை இல்லை என்பதை கூறுகிறார்

பூ4தக்3ராம:என்பது ஜீவராசிகளின் கூட்டம், முழு உயிரினங்களின் தொகுதி, அதாவது அசையும் மற்றும் அசையாத அனைத்து உயிர்த்தொகையையும் குறிக்கின்றது. அதே இந்த என்பதைக் குறிக்கும் நோக்கில்:மற்றும்அயம்ஒன்றாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது முந்தைய கல்பத்தில் எந்த உயிர்க்கூட்டம் பிரளயத்தில் ஒடுக்கத்தை அடைந்தனவோ, அதே கூட்டம் அடுத்த சுழற்சியில் மீண்டும் தோன்றுகிறது என்பதைக் குறிக்கின்றது. ‘பூ4த்வாஎனும் சொல் இருமுறை கூறப்படுவது, கல்பங்களின் சுழற்தன்மையைக் காட்டுவதாகவும் மேலும் அதே உயிர்க்கூட்டங்கள் வந்து, பிரளயத்திற்குள் சென்று, மீண்டும் திரும்பி வருகின்றன என்பதை சுட்டுவதாகவும் அமைகிறது

ராத்ரி ஆக3மே அவச1: ப்ரலீயதேபிரம்மாவின் இரவு வரும்பொழுது தன்வசமின்றி ஒடுக்கத்தை அடைகின்றன. இங்கு தன்வசமின்றி என்ற சொல், ஜீவர்களின் வசமின்றி வலுக்கட்டாயமாக ஒடுக்கத்தினுள் தள்ளப்படுகிறார்கள் என்பதைக் குறிக்கின்றது. பிறகு, பிரம்மாவின் பகல் வரும்பொழுது ஒட்டுமொத்த உயிரினங்களும் மீண்டும் தோன்றுகிறதுஅஹ: ஆக3மே ப்ரப4வதி.

இதிலிருந்து பகவான், பிரளயம் முடிந்து சிருஷ்டி காலத்தில் அதே ஜீவராசிகள் அதே பாப புண்ணியத்துடன் மீண்டும் பிறக்கிறார்கள் எனக் கூறுகிறார். அதாவது பிரளயத்தின்போது ஜீவர்களின் பாப புண்ணியங்கள் அழிவதில்லை; அழிவு என்பது வேறு, ஒடுக்கம் என்பது வேறு


=> மூன்றுவித தோஷங்கள்:

ஒருகால் ஒருவன் பிரளயத்தின்போது அனைத்து பாப புண்ணியங்கள் அழிவதாகவும், முழு படைப்பும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, முற்றிலும் புத்தம் புதியதொரு சிருஷ்டி உருவாகிறது என நினைப்பதாகவும் வைத்துக் கொள்வோம். இந்த கோட்பாட்டில் மூன்று தோஷங்கள் இருப்பதாக சங்கரர் தனது பாஷ்யத்தில் விசாரம் செய்கிறார். அவைகள்:

(1) க்ருத விப்ரநாசஉருவாக்கப்பட்ட ஒன்றின் மொத்த அழிவு; அதாவது ஜீவர்கள் தனது கர்மங்களினால் உருவாக்கிய பாப புண்ணியங்கள் அதனுடைய பலனைக் கொடுக்காமல் அழிவை அடைகின்ற தோஷம் ஏற்படும்

(2) அக்ருத அப்4யாக3உருவாக்கப்படாத ஒன்று வருவது. பிரம்மாவின் உறக்கத்தின்போது அனைத்தும் முற்றிலும் அழிந்துவிட்டால் புதிய ஜீவர்களுக்கென எந்த பாப புண்ணியமும் இல்லாமல் போகின்றது. எனில் அடுத்த சிருஷ்டியில் எதன் அடிப்படையில் புதிய ஜீவர்களுக்கு உடல் கொடுப்பது? அப்படி கொடுக்கப்படுகின்றது என வைத்துக்கொண்டால் ஒருவன் செய்யாத பாப புண்ணியத்திற்கு பலன் அனுபவிப்பது என்ற தோஷம் உண்டாகின்றது. பகவான் தனது சொந்த பொழுதுபோக்கிற்காக அல்லது எந்த காரணமும் நோக்கமும் இல்லாமல் புதிய ஜீவாத்மாக்களை உருவாக்குகிறார் என்ற தோஷம் உண்டாகின்றது. ஈஷ்வரனுக்கு ராக-த்வேஷம் வந்ததாக ஆகின்றது.

(3) சாஸ்திரத்தின் நிஷ்பலத்துவம்சாஸ்திரம் நோக்கமற்றதாக பலனற்றதாக ஆவது மூன்றாவது தோஷம். இது செய்யப்பட வேண்டிய கர்மம், இது தடைசெய்யப்பட்ட கர்மம் என விதி-நிஷேத சாஸ்திரம் உள்ளது. தடைசெய்யப்பட்ட கர்மத்தைச் செய்யும்போது பாபமும், செய்யவேண்டிய கர்மங்களைச் செய்யும்போது புண்ணியமும் உண்டாவதாகக் கூறுகிறது. மேலும் கர்மங்களினால் பந்தம் மற்றும் ஞானத்தினால் முக்தி என விளக்கும் மோக்ஷ-சாஸ்திரம் உள்ளது. ஒருகால் பிரளயத்தில் ஜீவாத்மாக்கள் முற்றிலுமாக மறைந்து விட்டால், அவர்கள் செய்த பாப புண்ணிய பலன்களை அவர்கள் அனுபவிக்க மாட்டார்கள். மேலும் ஒருவன் முக்தி பெறவேண்டுமெனில் கல்பம் முடிவடையும் வரை காத்திருந்தால் போதுமானது என்பதால் எந்த ஞானமும் இல்லாமல் அவர்கள் மோக்ஷத்தை பெறுவார்கள். இதனால் விதி-நிஷேத சாஸ்திரம் மற்றும் மோக்ஷ-சாஸ்திரம் அர்த்தமற்றதாக ஆகிறது

இந்த சுலோகத்தில் பகவான், முந்தைய கல்பத்தில் எந்த உயிர்க்கூட்டங்கள் ஒடுக்கத்தை அடைந்தனவோ, அதே ஜீவராசிகள் மீண்டும் சிருஷ்டிக்கு வருகின்றன எனக் கூறுவதிலிருந்து இந்த மேற்கூரிய தோஷங்களைக் களைகிறார்


=> முக்தனின் கர்ம நாசம்:

மோக்ஷகாலத்தில் முக்தனுக்கு க்ருத நாசம் வருவதில்லையா? அதாவது, அங்கு பாப புண்ணியங்கள் பலனைத் தராமல் முற்றிலுமாக அழிகின்றவே என ஒருவன் கேட்கலாம். ஆம், மோக்ஷத்தில் க்ருத நாசம் நடக்கின்றது. ஏனெனில் பாப புண்ணிய கர்மங்களைச் செய்தது ப்ரம்மனோ ஆத்மாவோ அல்ல; தானெனல் எனும் அஹங்காரமே செயல்செய்து கர்மபலனை உண்டாக்கியது. ஒரு ஞானி ஞானத்தின்மூலம் அந்த அஹங்காரத்தை நீக்கிவிடுவதால் அதைச் சார்ந்துள்ள கர்மபலன்களும் அழிந்துவிடுகின்றன. கர்மவினையின் அதிஷ்டானமாக அஹங்காரமே உள்ளது


=> கர்மத்தின் கோட்பாடு:

எல்லாம் ப்ராரப்தம்எனும்போது அங்கு சுயமுயற்சி என்பது இல்லாமல் போய்விடுவதாகச் சிலர் கருதுகிறார்கள். கர்மத்தின் கோட்பாடுகள் நமக்கு எதை போதிக்கின்றது? ப்ராரப்தத்தின் பயன்தான் என்ன

(1) பொறுப்பு: நம் வாழ்க்கையின் அனைத்து சுக துக்கத்திற்கும் நாம்தான் காரணம்; வேறு யாருமல்ல என்பதை கர்ம-கோட்பாடுகளின் மூலம் அறிகிறோம். ஒருவன் வாழ்க்கையில் அவன் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையும், ஒவ்வொரு மனிதனும் அவனது கர்மபலன். இதை உணர்வதால் மற்றவர்களைக் குறை சொல்லுதல் மற்றும் வெறுத்தல் முதலிய மனப்பான்மை நீங்குகிறது

(2) ஏற்றுக் கொள்ளுதல்: நான்தான் செய்தேன் எனும்போது ஏற்றுக் கொள்ளுதல் எனும் பாவனை வருகின்றது. உடல், பெற்றோர், சூழ்நிலை, உறவினர்கள் என அனைத்தையும் முழு மனதுடன் ஏற்கிறோம்.

(3) பிரயத்னம்: இன்று ஒருவன் இப்படி இருப்பது நேற்று அவன் செய்த செயலின் விளைவு. எனில், நாளை அவனது வாழ்க்கை இன்று அவன் செய்யும் செயலினால் அமைகிறது என்பதால் முழு முயற்சியுடன் ஒன்றைச் செய்கிறான். செயலின் தீவிரத்தன்மை அதிகரிக்கின்றது.

-------------------------------------------------------------------------------------------------------------------------