செவ்வாய், 6 ஜூன், 2023

அக்ஷரப்ரஹ்ம யோகம் 8.9 - 8.10

||8.9|| பரப்ரம்ம லக்ஷணம்:

कविं पुराणमनुशासितारमणोरणीयांसमनुस्मरेद्य:

सर्वस्य धातारमचिन्त्यरूपमादित्यवर्णं तमस: परस्तात् ।। ।।

கவிம் புராணமநுசா1ஸிதாரமணோரணீயாம்ஸமநுஸ்மரேத்3:

ஸர்வஸ்ய தா4தாரமசிந்த்யரூபமாதி3த்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் ।। 9 ।।


कविं  கவிம்  முற்றும் உணர்ந்தவனை    पुराणम् புராணம்  புராதணமானவனை   

अनुशासितारम्  அநுசா1ஸிதாரம் அனைத்தையும் ஆளுபவனை    

अणो: अणीयांसम्  அணோ: அணீயாம்ஸம்  அணுவிலும் நுண்மையனை   

सर्वस्य धातारम्  ஸர்வஸ்ய தா4தாரம்  அனைத்தையும் தாங்குபவனை   

अचिन्त्यरूपम्  அசிந்த்யரூபம்  சிந்தனைக் கெட்டாத வடிவுடையோனை  

दित्यवर्णं  ஆதி3த்யவர்ணம்  கதிரவனைப் போன்று ஒளிர்பவனை   

तमस: परस्तात्  தமஸ: பரஸ்தாத்  இருளுக்கு அப்பாற்பட்டவனை   :  :  யார்   

अनुस्मरेत्  அநுஸ்மரேத்   நினைக்கிறானோ [அவன் இப்படிப்பட்ட ப்ரம்மத்தை அடைகின்றான்]


முற்றும் உணர்ந்தவனை, புராதணமானவனை, அனைத்தையும் ஆளுபவனை, அணுவிலும் நுண்மையனை, அனைத்தையும் தாங்குபவனை, சிந்தனைக் கெட்டாத வடிவுடையோனை, கதிரவனை போன்று ஒளிர்பவனை, இருளுக்கு அப்பாற்பட்டவனை, யார் நினைக்கிறானோ [அவன் ப்ரம்மத்தை அடைகின்றான்]. 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

கவியை, பழையோனை, ஆள்வோனை, அணுவைக் காட்டிலும் அணுவை, எல்லாவற்றையும் தரிப்பவனை எண்ணுதற்கரிய வடிவுடையோனை, இருளுக்கப்பால் கதிரோனது நிறங்கொண்டிருப்பானை, எவன் நினைக்கின்றானோ,...


விளக்கம்:

: அநுஸ்மரேத், எனில் முறையாகச் சிந்திப்பவன், தியானிப்பவன். ‘ஸ்மரணஎனில் நினைவுகூர்தல், திரும்பச் சிந்தித்தல் எனப்படும். நினைவுபடுத்திக் கொள்ளுதல் எனும்போதே ஏற்கனவே தெரிந்த ஒன்றைத் தான் நினைவுக்கு கொண்டுவர முடியும். இங்கு உபயோகிக்கப்படும்அநுஸ்மரணஎனும் சொல்லும் ஏற்கனவே தெரிந்ததை அடிப்படையாகக் கொண்டு தியானிப்பதைக் குறிக்கின்றது. அதாவது சிரவணம் மற்றும் மநநத்திற்கு பிறகு தியானம் செய்பவனை இந்த வாக்கியம் குறிக்கிறது. அவன் யாரை தியானிக்கின்றான்? என்பதற்கு விடையாக சில லக்ஷணங்கள் கொடுக்கப்பட்டு, இப்படிப்பட்ட பரமேஷ்வரனை அவன் தியானிக்கின்றான் என்கிறார் பகவான். அல்லது முன் சுலோகத்தில் கூறியபடி யார் தியானிக்கின்றானோ அவன் இப்படிப்பட்ட பரமேஷ்வரனை அடைகின்றான்(யாதி) எனவும் விளக்கம் கூறலாம்.


=> கவி:

பொதுவாக கவி என்ற சொல்லுக்கு கவிஞர் அல்லது புலவர் என்று பொருள். ஒன்றின் உள்ளே பார்ப்பவன் கவி; சாதாரணமாக கண்ணில் படுவதைக் காட்டிலும் அதனூடாக மேலான ஒன்றை பார்ப்பவன் என்பதால் இவ்விதம் அழைக்கப்படுகிறான். இங்கு பகவான் கவி என்றழைக்கப்படுகிறார். ஏனெனில் கடந்தது நிகழ்வது எதிர் வரவிருப்பது என அனைத்தையும் அறியும் மேலான பார்வைக் கொண்ட சர்வக்ஞன் ஆகையால் கவி எனப்படுகிறார். இங்கு கவி என்றால் அனைத்தையும் அறிபவன் என்று பொருள்.


=> புராண:

புராண:தொன்மையானவர், பழமையானவர். அதாவது பரமாத்மாவுக்கு முன்னவன் யாருமில்லை. புரா அபி நவம் புராண:பழையதாக இருந்தாலும் புதியது. ஆகவே பழமையானவராக இருந்தாலும் என்றும் புதியவர். உண்மையில் நித்தியமானவர் என்பது பொருள்.


=> அநுசா1ஸிதாரம்:

அநுசா1ஸிதாரம்முழு படைப்பையும் ஆள்பவர், உலக நடைமுறை என்ன போக்கில் இருக்கவேண்டுமென்று ஆணையிடுபவர். இந்த சிருஷ்டியில் எந்தவொன்றும் இறைவனின் நியதிப்படியே நடைபெறுகின்றது. அனைத்துயிர்களும் இறை நியதிக்கு கட்டுப்பட்டே நடந்தாக வேண்டும் என்பதால் அநுசாஸிதாரம்.


=> அணோ: அணீயாந்:

அணோ: அணீயாம்ஸம் அணுவைக் காட்டிலும் அணுவானது; சூக்ஷமத்திலும் மிக சூக்ஷமமானது; நுணுக்கரிய நுண்மையன். ஒருவன் கற்பனை செய்யக்கூடிய எதுவும், நுட்பமான கருத்தும் கூட, சிந்தனையின் ஒரு பொருளாகத் தான் இருக்கின்றது. ஆனால் இங்கே அவரால்தான் அந்த சிந்திக்கப்படும் நுட்பமான எண்ணங்களும் அறியப்படுவதால் நுண்மையன்.

=> ஸர்வஸ்ய தா4தா:

ஸர்வஸ்ய தா4தாரம்அனைத்திற்கும் ஆதாரமானவர், தோன்றிய யாவுக்கும் இருப்பிடமாயிருப்பவர். கானல்நீருக்குக் கானல் இருப்பிடமாவது போன்று, அவரிடத்துத் தோன்றிய உலகுக்கு அவரே இருப்பிடமாகின்றார். இந்த காரண-காரிய சம்பந்தத்தை நிலைநிறுத்துபவராகவும் எல்லா செயல்களின் பலனையும் கொடுக்கும் கர்மபல தா4தா-வாகவும் இருப்பவர் ஈஷ்வரன்.


=> அசிந்த்யரூபம்:

அசிந்த்யரூபம்சிந்தனைக் கெட்டாத வடிவுடையவர்; மனதினால் கிரஹிக்க முடியாதவர்; மனதிற்கு ஒரு பொருளாக இருக்க மாட்டார். சில சமயங்களில், சிந்திக்க முடியாத ஒன்று இல்லாததாகவும் இருக்கலாம்; ஆனால் இங்கு இருத்தலாகவே இருப்பவர் அவர். அனைத்து அறிவாக எங்கும் வியாப்பித்துள்ள ஒருவரை எப்படி ஒருவனால் சிந்திக்க முடியும்? மனம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றை மட்டுமே சிந்திக்கும் திறன் கொண்டது. மனித மனத்தால் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கற்பனை செய்வது சாத்தியமில்லை


=> ஆதி3த்யவர்ணம்:  

ஆதி3த்யவர்ணம்கதிரவனை போன்று ஒளிர்பவர், சைத்தன்ய சொரூபமானவர். சூரியன் ஒளி வடிவமானது; அது உதிப்பதுமில்லை, அஸ்தமனம் ஆவதுமில்லை; எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் அது எல்லாவற்றையும் பாரபட்சமின்றி ஒளிரச் செய்கிறது. அதுபோல பரமாத்மா சைத்தன்ய வடிவானவர், அவருடைய சைத்தன்யத்தில் கூடுதல் குறைதல் போன்ற எந்த மாறுதலும் ஏற்படுவதில்லை. சூரியனின் ஒளியைப் போலவே எந்தவொரு இலக்கோ அல்லது உள்நோக்கமோ இல்லாது சொரூபமாகவே ஒளிரும் தன்மை கொண்டவர். எவ்விதம் சூரியன் தானாக ஒளிர்ந்து தனக்கு முன்னுள்ள அனைத்தையும் ஒளிரச் செய்கின்றதோ அதுபோலவே சுயமாக பிரகாசிக்கும் ஆத்மா இந்த முழு படைப்பையும் பிரகாசிக்கின்றது. அனைத்தும் அதன் சைத்தன்யத்தினால் விளங்கிக் கொண்டுள்ளன. மேலும் அது சூரியனைப் போலவே அசங்கமானது, அதன் வெளிச்சத்தில் நடக்கும் எதுவும் அதைத் தொடுவதோ பாதிப்பதோ இல்லை


=> தமஸ: பரஸ்தாத்:

தமஸ: பரஸ்தாத் இருளைக் கடந்திருப்பவர். இங்கு இருள் என்பது அக்ஞானத்தைக் குறிக்கின்றது. ஆகவே அறியாமைக்கு அப்பாற்பட்டவர் என்பது பொருள். எந்த தத்துவம் ஒளி மற்றும் இருள் இரண்டையும் பிரகாசப்படுத்துகிறதோ, அறிவையும் அறியாமையையும் அறிந்து கொண்டுள்ளதோ அந்த ஆத்ம தத்துவமாக இருப்பவர். மேகம் சூரியனை ஒருநாளும் மறைப்பதில்லை. அதுபோல அக்ஞான இருள் ஆத்ம சைத்தன்யத்தை பாதிப்பதில்லை

இப்படிப்பட்ட தத்துவத்தை அடைகின்றான் எனும்படியாக, ‘யாதிஎன்ற வினைச்சொல் சென்ற சுலோகத்திலிருந்து இங்கு கொண்டு வரப்படுகின்றது. இந்த சுலோகத்திலுள்ள மற்ற அனைத்துச் சொற்களும் சகுண மற்றும் நிர்குண ப்ரம்ம லக்ஷணத்தை, தியானப் பொருளை, மற்றும் தியானிப்பவன் எப்படிப்பட்ட தத்துவத்தை அடைகின்றான் என்பதைக் குறிக்கின்றது. நிதித்யாசன தியானத்தில் தியானப் பொருளுக்கும் அதனால் அடையப்படும் பலனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; பரம-புருஷனை தியானிப்பவன் பரம-புருஷனையே அடைகிறான்

-------------------------------------------------------------------------------------------------------------------------

||8.10|| மரணத்தின் போது இருக்கவேண்டிய மனநிலை:

प्रयाणकाले मनसाचलेन भक्त्या युक्तो योगबलेन चैव

भ्रुवोर्मध्ये प्रणमावेश्य सम्यक् तं परं पुरुषमुपैति दिव्यम् ।। १० ।।

ப்ரயாணகாலே மநஸாசலேந 

4க்த்யா யுக்தோ யோக33லேந சைவ

ப்4ருவோர்மத்4யே ப்ராணமாவேச்1 ஸம்யக் 

தம் பரம் புருஷமுபைதி தி3வ்யம் ।। 10 ।।


प्रयाण काले  ப்ரயாண காலே  மரண காலத்தில்   अचलेन मनसा   அசலேந மநஸா  உறுதியான மனதோடும்    भक्त्या युक्त:   4க்த்யா யுக்த:   பக்தியோடும்    योगबलेन एव  யோக33லேந ஏவ  யோக பலத்தோடும்   भ्रुवो: र्मध्ये  ப்4ருவோ: மத்4யே  புருவத்தின் மத்தியில்    

प्रणम् वेश्य  ப்ராணம் ஆவேச்1  பிராணனைக் கொண்டு வந்து   

सम्यक्  ஸம்யக்  நன்கு நிறுத்தி   :  :  அவன்    

तं परं पुरुषं दिव्यम्   தம் பரம் புருஷம் தி3வ்யம்  அந்த திவ்ய பரமபுருஷனை   उपैति  உபைதி   அடைகிறான்.


மரண காலத்தில், பக்தியோடும் உறுதியான மனதோடும் யோக பலத்தோடும் கூடியவனாக புருவத்தின் மத்தியில் பிராணனைக் கொண்டு வந்து நிறுத்தியவனாக அவன் அந்த திவ்ய பரமபுருஷனை அடைகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இறுதிக் காலத்தில் அசைவற்ற மனத்துடன், புருவங்களிடையே உயிரை நன்கேற்றி, பக்தியுடனும், யோக பலத்துடனும், எவன் நினைக்கிறானோ அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான்.


விளக்கம்:

ஒரு யோகியின் மரணகாலம் இந்த சுலோகத்தில் வர்ணிக்கப்படுகின்றது. ப்ரயாண காலே எனில் பயணம் அல்லது புறப்படும் நேரத்தில் என்பது பொருள், இங்கு அது மரணகாலத்தைக் குறிக்கின்றது. இனி அவனுடைய மனநிலை கூறப்படுகின்றது. அசலேந மநஸாஅசையாத உறுதியான மனதோடு கூடியவனாக, விருப்பு வெறுப்புக்கு அடிமைப்படாத மனதுடன் என்பது பொருள். மேலும் 4க்த்யா யுக்த:, தான் தியானிக்கும் புருஷனிடம் பக்தியுடன் கூடியவனாக உள்ளான். நமக்கு பிரியமான விஷயத்தில் மனம் முயற்சியில்லாமல் செல்லும்; இங்கு அவன் தியானிக்கும் ஆத்மாவின் மீது மிகுந்த அன்பு கொண்டவனாக, வேறு எந்தவிதமான பிரியமுமில்லாமல் இருக்கின்றான்.  

இனி அவன் எப்படி வேண்டுமென்றே தனது பிராணனை நிறுத்துகிறான்? யோக33லேநஅவனது யோக பலத்தினால். தியானத்தில் லயித்துப் பழகியதால் உருவான மன உறுதி மற்றும் அஷ்டாங்க-யோக பயிற்சியின் உச்சக்கட்டம் என யோக பலத்தை சங்கரர் விளக்குகிறார். தியானப் பொருள் மனதில் ஒரு சம்ஸ்காரத்தை உருவாக்குகின்றது; தொடர் பயிற்சியினால் இது இன்னும் ஆழமாகின்றது. யோக பலமாக அது மாறுகின்றது


=> கிரம-முக்தி:

தனது வாழ்நாள் முழுவதும் அறிவு வேட்கையோடு யோகப் பயிற்சியை மேற்கொண்ட அவனால் மரணகாலத்தில், ப்4ருவோ: மத்4யே ப்ராணம் ஆவேச்1 இரு புருவங்களுக்கு மத்தியில் பிராணன் கொண்டு வரப்படுகின்றது. பிராணனை வலையாகக் கொண்டு மனதைப் பிடிக்கலாம் என்கிறார் ரமணர். இங்கு பிராண நியமனம் செய்யப்படுகின்றது. நம் உடலிலுள்ள ஐந்து வகைப் பிராணன்களில் உதானன் என்பது வாந்தி தும்மல் போன்ற மேல் நோக்கிச் செல்லும் மற்றும் வெளியில் செல்லும் தன்மையுடைய பிராணன். உடலைவிட்டு உயிர் பிரிந்து செல்லும்போது உதவிபுரியும் உயிர் சத்தாகவும், பத்தொன்பது அங்கங்களுடன் கூடிய சூக்ஷம சரீரத்தை ஸ்தூலத்திலிருந்து வெளித்தள்ளும் சக்தியாகவும் இந்த உதானன் உள்ளது. இப்படிப்பட்ட உதானப் பிராணனை யோகபலத்தினால் கட்டுக்குள் கொண்டு வந்து, இரு புருவங்களுக்கு மத்தியில் நன்கு நிறுத்தி(ஸம்யக்), சுசும்நா நாடி எனும் நாடி வழியாக, முறையாக உடலை விட்டு வெளியேறுகின்றான். அவன் அந்த திவ்ய பரமபுருஷனை அடைகின்றான்பரம் புருஷம் தி3வ்யம் உபைதி, என்கிறார் பகவான். இந்த வெளிப்பாட்டிலிருந்து அவன் ஒரு வித்வான் மற்றும் ஒரு யோகி என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.

அவன் உயிருடன் இருந்தபோது தனது ஸத்-சித்-ஆனந்த-ஆத்ம சொரூபத்தை அறிந்தவனாக இருந்தாலும், அவன் தனது விருப்பத்தை மரணத்திற்கு பயன்படுத்தியதால் அவனிடம் இன்னும் கர்த்ருதுவம் எஞ்சியுள்ளது. ஆகவே பிரம்ம லோகத்திற்குச் சென்று, பிரம்மதேவரால் உபதேசம் அடையப் பெற்று மோக்ஷத்தைப் பெறுகிறான். இது க்ரம-முக்தி எனப்படும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------