திங்கள், 12 ஜூன், 2023

அக்ஷரப்ரஹ்ம யோகம் 8.11 - 8.13

||8.11|| மோக்ஷத்தின் ஸ்துதி:

यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद्यतयो वितरागा:

यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये ।। ११ ।।

யத3க்ஷரம் வேத3விதோ3 வத3ந்தி 

விச1ந்தி யத்3யதயோ வீதராகா3:  

யதி3ச்ச2ந்தோ ப்3ரஹ்மசர்யம் சரந்தி 

தத்தே பத3ம் ஸங்க்3ரஹேண ப்ரவக்ஷ்யே ।। 11 ।।


वेदविद:  வேத3வித3:  வேதத்தை அறிந்தவர்கள்    

यत् अक्षरं वदन्ति  யத் அக்ஷரம் வத3ந்தி  எதை அழிவற்றது என்கின்றனர்   वितरागा:  வீதராகா3:  பற்று நீங்கிய   यतय:  யதய:  முயற்சி செய்பவர்கள்/சந்யாசிகள்   यत् विशन्ति  யத் விச1ந்தி  எதனுள் புகுகின்றனர்   

यत् इच्छन्त:  யத் இச்ச2ந்த:  எதை விரும்பி    ब्रह्मचर्यं चरन्ति  ப்3ரஹ்மசர்யம் சரந்தி  பிரம்மசரியத்தை கடைப்பிடிக்கின்றனரோ   तत् पदं  தத் பத3ம்  அந்த நிலையை   संग्रहेण   ஸங்க்3ரஹேண  சுருக்கமாக   

ते प्रवक्ष्ये  தே ப்ரவக்ஷ்யே  உனக்கு சொல்லுகிறேன்.


வேதத்தை அறிந்தவர்கள் எதை அழிவற்றது என்கின்றனரோ, பற்று நீங்கிய துறவிகள் எதனுள் புகுகின்றனரோ, எதை விரும்பி பிரம்மசரியத்தை கடைப்பிடிக்கின்றனரோ, அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.  


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எந்த நிலையை வேதமுணர்ந்தோர் அழிவற்ற தென்பர், விருப்பமற்ற முனிகள் எதனுட் புகுவர். எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் காக்கப்படும், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.


விளக்கம்:

இந்த சுலோகத்திலுள்ள முதல் கால்பகுதி ப்ருஹதாரண்யக உபநிஷத் மந்திரம் 3-8-8 - ஒத்ததாகவும், மீதிப் பகுதி கடோபநிஷத்திலுள்ள மந்திரம் 1-2-15 போன்றும் உள்ளது. ‘அனைத்து வேதங்களும் எதைப் பற்றிப் பேசுகின்றனவோ, எதை விரும்பியவர்களாக மக்கள் ஒழுக்கநெறியைப் பின்பற்றும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அந்த ஒன்றை நான் உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்லப் போகிறேன். அதுதான் ஓம்’. பகவான் அந்தக் கருத்தை இங்கு மூன்று சுலோகங்களில் சொல்லப் போகிறார்.


=> அழிவற்றது:

வேத3வித3: எனில் வேதத்தை அறிந்தவர்கள், வெறுமனே பாராயணம் செய்ய மட்டுமல்ல அதன் அர்த்தத்தையும் அறிந்தவர்கள். வேதம் ஓதுதலை அத்யயநம் என்கிறோம். ரிக், சாம, யஜுர் மற்றும் அதர்வ வேதத்தில் தங்களுக்கான வேதத்தை கற்றுக் கொள்ளவேண்டும் என்கிற ஒரு வழிமுறை உண்டு. ஓதக் கற்றுக்கொண்ட பிறகு, முழு சாஸ்திரத்தையும், குறிப்பாக வேதாந்த சாஸ்திரத்தைப் புரிந்து கொள்ளும்வரை அதை விசாரம் செய்யவேண்டும் என்ற ஒரு நியதி உள்ளது. நான் ப்ரம்மமாக இருக்கின்றேன்அஹம் ப்ரஹ்ம அஸ்மிஎன்பதை அறிந்துகொள்ளும் வரை இவ்விதி பூர்த்தி அடைவதில்லை. ஆகவே, வேதத்தின் அர்த்தத்தை அறிந்தவன் வேதவித் என அழைக்கப்படுகின்றான்

யத் அக்ஷரம் வத3ந்தி, ப்ரம்மம் அக்ஷரம். வேதத்தை அறிந்தவர்கள் ப்ரம்மத்தை அழிவற்றது, காலத்தால் கட்டுப்படாதது என்கிறார்கள்.  

யத் இச்ச2ந்த: ப்3ரஹ்மசர்யம் சரந்தி, இதை அறிய விரும்பியவர்களாக மக்கள் பிரம்மச்சரிய வாழ்க்கையை, குருவின் முன்னிலையில் வாழும் ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையைப் பின்பற்றுகிறார்கள். குருகுலத்தில் பின்பற்ற வேண்டிய நியமங்களாக போகங்கள் இல்லாமை, முழு நேரமும் சாஸ்திரத்தை கற்கவும் அறிவை அடையவும் பயன்படுத்துதல், தியானம், மந்திர ஜபம் போன்றவைகள் உள்ளன. அதிக இந்திரிய போகங்களை அனுபவிக்கும்போது மனம் மந்தமானதாக மாறிவிடும். மந்தமான மனதினால் அறிவை அடைய முடியாது. ஆகவே சாஸ்திர ஞானத்தை பெறுதலில் புலனடக்கம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

யத் யதய: வீதராகா3: விச1ந்தி யதிகள்(யதய:) என்றால் சரியான முயற்சியில் ஈடுபடுபவர்கள் என்று பொருள். இந்த ஆத்ம-ஞானத்திற்குத் தேவையான முக்கிய விஷயங்களில் ஒன்று, துறத்தல். எனவே மற்ற எல்லா முயற்சிகளையும் விட்டுவிட்டு, இந்த நோக்கத்திற்காக மட்டுமே தனது வாழ்க்கையை அர்ப்பணிப்பவன் யதி ஆகிறான், சந்யாசி ஆகிறான். இப்படிப்பட்ட துறவிகள் பாதுகாப்பு மற்றும் இன்பத்தில் ஆர்வமில்லாத காரணத்தினால் அனைத்து சக்திவாய்ந்த விருப்பு வெறுப்புகளிலிருந்தும் விடுபட்டுள்ளனர். அவர்கள் மோக்ஷத்தில் உறுதியாக உள்ளனர்.


=> மோக்ஷத்தின் பெருமை:

தத் தே பத3ம் ஸங்க்3ரஹேண ப்ரவக்ஷ்யே அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன். பத3ம் எனில் அடையப்பட வேண்டிய முடிவு அல்லது நிலையைக் குறிக்கின்றது. மேலும் அது வணக்கத்திற்குரியது என்றும் பொருள்படும். இங்கு, அடையப்பட வேண்டிய நிலையாகவும், வழிபாடு மற்றும் வணக்கத்திற்குரியதாகவும் இருக்கின்ற அந்த பதம் மோக்ஷம் ஆகும். ஆகவே இந்த சுலோகத்தை மோக்ஷத்தின் பெருமையை கூறுவதாக கீழ்கண்டவாறும் விளக்கம் அளிக்கலாம்

எந்த மோக்ஷத்தை வேதத்தை அறிந்தவர்கள் பேசுகின்றார்களோ, எந்த மோக்ஷத்தை பற்றில்லாதவர்கள் மற்றும் சரியான முயற்சியில் ஈடுபடுபவர்கள் அடைகிறார்களோ, எந்த மோக்ஷத்தை விரும்பியவர்களாக அவர்கள் பிரம்மசர்யத்தை கடைப்பிடிக்கிறார்களோ, அந்த அழியாத பதத்தை உனக்குச் சுருக்கமாகச் சொல்லப்போகிறேன்

-------------------------------------------------------------------------------------------------------------------------

||8.12|| உபாசகர்கள் மரணகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய நியமங்கள்:

सर्वद्वाराणि संयम्य मनो हृदि निरुध्य

मूर्ध्न्याधायात्मन: प्राणमास्थितो योगधारणाम् ।। १२ ।।

ஸர்வத்3வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி3 நிருத்4

மூர்த்4ந்யாதா4யாத்மந: ப்ராணமாஸ்தி2தோ யோக3தா4ரணாம் ।। 12 ।।


सर्वद्वाराणि  ஸர்வத்3வாராணி  இந்திரியத் துவாரங்கள் எல்லாவற்றையும்  संयम्य  ஸம்யம்ய  அடக்கி    

मन:  மந:  மனதை   हृदि निरुध्य   ஹ்ருதி3 நிருத்4   ஹிருதயத்தில் நிறுத்தி   

त्मन: प्राणम्  ஆத்மந: ப்ராணம்  தன் பிராணனை   मूर्ध्नि धाय  மூர்த்4நி ஆதா4  உச்சந்தலையில் வைத்து  योग धारणाम्  யோக3 தா4ரணாம்  யோக தாரணையில்   स्थितஆஸ்தி2:  நிலைபெற்று


அனைத்து இந்திரியங்களையும் அடக்கி, மனதை ஹிருதயத்தில் நிறுத்தி, தன் பிராணனை உச்சந்தலையில் வைத்து, யோக தாரணையில் நிலைபெற்று, … 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனத்தை உள்ளத்தில் நிறுத்தி, உயிரைத் தலையின் உச்சியில் நிலையுறுத்தி யோக தாரணையில் உறுதி பெற்று,


விளக்கம்:

இந்த மற்றும் அடுத்த சுலோகத்தில் பகவான், உபாசகர்கள் மரண காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சில நியமங்களைக் கூறுகிறார். இந்த கருத்துக்குச் செல்லும்முன், இந்த இரு சுலோகங்களின் அறிமுக உரையில் சங்கரர் ஓம் எனும் ப்ரணவத்தை பற்றி விவாதிக்கிறார். பகவத் கீதையில் முதன்முதலாக ஓம் எனும் சொல் வருகிற காரணத்தினால் அதைப் பற்றிய சிறிய விளக்கம் கொடுக்கப்படுகிறது


=> ஓங்காரத் தியானம்:

ஓம் என்பது ப்ரம்மனைக் குறிக்கும் சொல் ஆகும். பொதுவாக ஒரு வார்த்தையைக் கேட்டவுடன் அதற்கான பொருள் நம் மனதில் தோன்றும். அதுபோலவே ஓம் என்ற வார்த்தைக்கான அர்த்தம் தெரிந்திருந்தால் அந்தச் சொல்லை கேட்டவுடனேயே அதன் பொருள் நினைவுக்கு வரும். அப்போது, ஓம் என்பதுவாசக_वाचकஎன்றும் அதன் பொருளான ப்ரம்மவாச்ய_वाच्यஎன்றும் அழைக்கப்படும்

பொதுவாக, ஒரு வார்த்தைக்கும் அதன் பொருளுக்கும் இடையே ஒரு நிரந்தர இணைப்பு இருக்கும், வாச்ய-வாசக-ஸம்பந்த. உதாரணமாக ஆப்பிள் எனும் வாச்யத்திற்கும்(சொல்லிற்கும்), வாசகமான அந்த பொருள் ஆப்பிளுக்கும் நிரந்தரமான இணைப்பு உண்டு, ஆப்பிள் என்றவுடன் அந்த பொருள் மனதிற்கு வரும். ஆனால் செந்தில் என்ற ஒரு மனிதனின் பெயர், அந்த பெயரையுடைய யாரையும் குறிக்கலாம். எனவே அந்த பெயரில் உங்களுக்கு யாரைத் தெரியுமோ அந்த நபர் உங்கள் மனதில் வருவதால் இந்த விஷயத்தில் நிரந்தமான வாச்ய-வாசக-ஸம்பந்தம் இல்லை

அதுபோலவே, சாஸ்திரம் ப்ரம்மத்திற்கு ஓம் என்ற பெயரைக் கொடுக்கின்றது. மேலும் பிரக்ஞை வடிவமான ஆத்மா ப்ரம்ம என்றும் அந்த ப்ரம்ம ஓம் என்றும் கூறுகின்றது. எனவே சாஸ்திரம் படித்த ஒருவன், அனைத்திற்கும் ஆதாரமான தனது சுயத்தையே ஓம் என்பதன் பொருளாகத் தியானிக்கின்றான். இதுவே நிதித்யாசனம். ஒருகால், ஓம் எனும் அர்த்தமாக ஈஷ்வரனை தியானிக்கும்போது அது சகுண-ப்ரம்ம-உபாசனை ஆகின்றது

இவ்வகை தியானத்தில் இரண்டு வகையான குறியீடுகள் உள்ளன. ஒன்று வாய்மொழி, ப்ரதீக, மற்றொன்று உடல் வடிவம், ப்ரதிமா. இந்த இரு குறியீடுகளின் மீதும் ஈஷ்வரனை பரோக்ஷ தத்துவமாக ஏற்றிவைத்து அதை ஈஷ்வரனாக வழிபடலாம், தியானிக்கலாம். ஓம் என்பது ஒலி வடிவமாக, ப்ரதீகமாக எடுத்துக் கொள்ளும்போது அது அபரம் ப்ரம்மத்தைக் குறிக்கின்றது. இந்த உபாசனையை மேற்கொள்ளும் உபாசகன் அதன் பலனாக ப்ரம்ம-லோகத்தை அடைகிறான். அவன் ஒரு முமுக்ஷுவாக போதிய புண்ணியம் இருக்கின்ற பட்சத்தில் பிரம்மதேவரால் உபதேசிக்கப்பட்டு, சென்ற சுலோகத்தில் பார்த்த கிரம-முக்தியை அடையலாம். இல்லையெனில் மீண்டும் மனித பிறப்பெடுத்து பயணத்தைத் தொடரலாம்.

ப்ரச்னோபநிஷதத்தில், ஓங்காரத் தியானம் செய்யும் ஒருவன் எந்த லோகத்தை அடைகின்றான் என்று சத்யகாம தனது குருவைக் கேட்கின்றான். அங்கு குரு, ஓங்காரம் என்பது பரம் ப்ரம்ம மற்றும் அபரம் ப்ரம்ம இரண்டையும் குறிக்கின்றது என்கிறார். அதை பரோக்ஷமான ஈஷ்வரனை தியானிக்கும் ப்ரதீகமாக பயன்படுத்தும்போது அது அபரம். அதையையே பிரத்யகாத்மாவுடன் ஒத்திருக்கும் பரமாத்மாவாக நிதித்யாசனம் செய்யும்போது அது பரம்.  

கீதையில் இந்த அத்தியாயம் மரண காலத்திற்கான பல்வேறு வகையான புறப்பாடுகளைப் பற்றி பேசுவதால், ஓங்காரத்தை தியானிப்பவனின் புறப்பாடு இந்த இரு சுலோகங்களில் விவாதிக்கப்படுகிறது


=> ஓங்காரத்தை தியானிக்கும் யோகி:

ஸர்வத்3வாராணி  ஸம்யம்ய அனைத்து வாயில்களையும் மூடியவனாக, அடக்கியவனாக என்பது பொருள். இங்கு துவாரங்கள் அல்லது வாயில்கள் என்பது வெளியுலகம் ஒருவனுக்குள் நுழைவதற்கான வழிகளாக உள்ள கண், செவி, மூக்கு போன்ற புலன்களைக் குறிக்கின்றது. இந்த யோகி இறக்கும் தருவாயில் தனது புலன்கள் அனைத்தையும் வெளிவிஷயத்திலிருந்து விலக்கிக் கொண்டு தளர்வான நிலையில் அமர்ந்திருக்கிறார்.

மந: ஹ்ருதி3 நிருத்4 மனதை உள்நோக்கி எடுத்துச் செல்வது, மனதை அதனுடைய இருப்பிடமான(கோலகம்) ஹிருதயத்தில் ஒடுக்குவதைக் குறிக்கின்றது. கோலகம்(गोलक) எனில் இந்திரிய சக்தி செயல்படும் அல்லது வெளிப்படும் இடம் ஆகும். மனதின் கோலகம் ஹிருதயம். அனைத்து புலன்களும் மனதும் வெளிப் பொருளிலிருந்து விலகி, அதனது இருப்பிடத்தில் இருத்தல் வேண்டும். பின்னர் தனது பிராணனை உச்சந்தலையில் வைத்துஆத்மந: ப்ராணம் மூர்த்4நி ஆதா4. அதாவது சுசும்நா நாடி முடியும் இடமான உச்சந்தலையில் உதானப் பிராணன் வைக்கப்படுவதைக் குறிக்கிறது. யோக தாரணையில் நிலைத்தவனாகயோக3 தா4ரணாம் ஆஸ்தி2:, மன ஒருமுகப்பாட்டுடன் கூடியவனாக என்பது பொருள்

இனி அவன் என்ன செய்கின்றான் என்பதை அடுத்த சுலோகத்தில் தொடர்கிறார் பகவான்

-------------------------------------------------------------------------------------------------------------------------

||8.13|| உபாசகனின் மரணகாலம் குறித்த சென்ற சுலோகத்தின் தொடர்ச்சி

ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन्मामनुस्मरन्

: प्रयाति त्यजन्देहं याति परमां गतिम् ।। १३ ।।

ஓமித்யேகாக்ஷரம் ப்3ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந்  

: ப்ரயாதி த்யஜந்தே3ஹம் யாதி பரமாம் 3திம் ।। 13 ।।


ओम् इति एक अक्षरं  ஓம் இதி ஏக அக்ஷரம்  ஓம் எனும் ஒற்றையெழுத்தாகிய   ब्रह्म  ப்ரம்ம  ப்ரம்மத்தை   

व्याहरन्  வ்யாஹரந்  உச்சரித்துக் கொண்டு   माम् अनुस्मरन्  மாம் அநுஸ்மரந்  என்னை நினைத்துக் கொண்டு   देहं त्यजन्   தே3ஹம் த்யஜந்  உடலை நீத்து   : प्रयाति  : ப்ரயாதி  யார் போகிறானோ   :  :  அவன்   

परमां गतिम् याति   பரமாம் 3திம் யாதி  மேலான நிலையைப் பெறுகிறான்.


ஓம் எனும் ஒற்றையெழுத்தாகிய ப்ரம்மத்தை உச்சரித்துக் கொண்டு, என்னை நினைத்துக் கொண்டு, யார் இந்த உடலை நீத்துப் போகிறானோ அவன் பரம கதியைப் பெறுகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய் உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகிறான்.


விளக்கம்:

ஓம் எனும் ஏகாக்ஷரமாகிய ப்ரம்ம மந்திரத்தை மனதிலோ அல்லது வாக்கிலோ உச்சரித்தவனாக, ஈஷ்வரனான என்னை நினைத்துக் கொண்டவனாய், அவனது உதானப் பிராணனை உச்சந்தலையில் வைத்து, மன ஒருமுகப்பாட்டுடன் கூடியவனாக யார் உடலை நீத்துப் போகிறானோ அவன் மேலான நிலையை அடைகின்றான்

மரணம் என்பது உடலுக்கு மட்டுமே, ஜீவனுக்கு அல்ல. ஒரு ஜீவன், தான் நித்தியமான ஆத்மா என்பதை அறியும் வரை பயணித்துக் கொண்டே இருக்கிறான். உண்மை அறியப்படும்போது ஆத்மாவின் மேல் ஏற்றிவைக்கப்பட்டுள்ள ஜீவத்துவம் இறக்கின்றது அவ்வளவே. மற்றபடி ஜீவன் ஆத்மாவாகவே இருப்பதால் ஜீவனுக்கு எப்பொழுதும் இறப்பில்லை.

இந்த சுலோகத்தில் கூறியபடி உடலை விட்டுச் செல்பவன் மிக உயர்ந்த நிலைக்குச் செல்கிறான். ‘ப்ரயாதிஎன்ற சொல் பயணத்தைக் குறிக்கின்றது. சென்ற சுலோகத்தில் பார்த்ததுபோல அவன் ப்ரம்ம-லோகத்தை அடைகிறான். பிரம்மதேவரால் ஆத்ம-ஞானம் உபதேசிக்கப்பட்டு அவன் விடுதலை அடைகிறான். ‘பரமா 3திஎன்பது சுயத்தை ப்ரம்ம என அறிவது; ப்ரம்ம-லோகத்தில் கிடைக்கப் பெறுகின்ற இந்த மோக்ஷம் க்ரம-முக்தி என ஏற்கனவே பார்த்தோம்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஜீவனானது இவ்வுலகத்தைவிட்டுப் போகும் தருணத்தில் கடைசியாக எதைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்குமோ அதற்குரிய உடலில் மறுபடியும் வந்து பிறக்கின்றது. ஆதலால் பக்தி சாதனை மிகவும் அவசியமெனத் தோன்றுகிறது. இடையறாத அனுஷ்டானத்தினால் உலகப் பொருள்களைப் பற்றிய எண்ணம் மனதில் உண்டாக மாட்டாது. ஈஷ்வரனைப் பற்றிய சிந்தனையே ஆத்மாவினிடம் குடிகொள்ளும். சாகும் தறுவாயிலும்கூட அந்தச் சிந்தனை நீங்குவதில்லை.

-------------------------------------------------------------------------------------------------------------------------