||5.16|| எதனால் அறியாமை நீக்கப்படுகிறது:
ज्ञानेन तु तदज्ञानं येषां नाशितमात्मन: ।
तेषामादित्यवज्ज्ञानं प्रकाशयति तत्परम् ।। १६ ।।
ஜ்ஞாநேந து தத3ஜ்ஞாநம் யேஷாம் நாசி1தமாத்மந: ।
தேஷாமாதி3த்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாச1யதி தத்பரம் ।। 16 ।।
तु து ஆனால் आत्मन: ஆத்மந: ஆத்மாவைப் பற்றிய ज्ञानेन ஜ்ஞாநேந ஞானத்தினால்
येषां யேஷாம் யாருடைய तत् अज्ञानं தத் அஜ்ஞாநம் அந்த அக்ஞானமானது
नाशितम् நாசி1தம் நாசமாக்கப்படுகிறதோ तेषाम् தேஷாம் அவர்களுக்கு ज्ञानं ஜ்ஞாநம் ஞானம்
आदित्यवत् ஆதி3த்யவத் சூரியனைப் போன்று तत् परम् தத் பரம் அந்த பரம்பொருளை
प्रकाशयति ப்ரகாச1யதி பிரகாசிக்கச் செய்கிறது.
யாருடைய அக்ஞானம் ஆத்ம ஞானத்தால் அழிக்கப்படுகிறதோ, அவர்களுக்கு அந்த ஞானம் சூரியனைப் போல பரம்பொருளை விளக்குகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அந்த அஞ்ஞானத்தை ஆத்ம ஞானத்தால் அழித்தவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்ப் பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.
விளக்கம்:
=> அக்ஞானத்தின் தன்மைகள்:
(i) அநாதி - அதன் தோற்றத்தை சொல்ல முடியாது.
(ii) ஞான விரோதி - ஞானத்தினால் அழிக்கப்படக் கூடியது.
(iii) ஆவரண சொரூபம் - இருளைப் போன்று, இருக்கின்ற ஒன்றை மறைக்கும் சக்தி கொண்டது.
(iv) மோஹ காரணம் - மோஹத்திற்கும் அத்யாசத்திற்கும் காரணமாக இருப்பது.
அனைவரும் பிறக்கும் போதே, தங்களைப் பற்றிய அறியாமையுடன் சேர்ந்தே பிறக்கிறோம். ஆகவேதான் இது அநாதி; தோற்றத்தை சொல்ல முடியாது. மறைக்கின்ற சக்தியுடன் கூடிய இந்த அறியாமை, ஆத்மாவை மறைப்பதால் உடல் மற்றும் மனதை ஆத்மாமீது ஏற்றிவைக்கிறோம்; அவைகளை ‘நான்’ எனக் கொள்கிறோம்.
அக்ஞானம் என்பது அறியாமையைக் குறிக்கிறது. இங்கு அக்ஞானம் என்பது ‘அறிவு இல்லாதது’ என்பதைவிட அறிவிற்கு எதிரானது எனும் பார்வையே சரியானதாக இருக்க முடியும். அதாவது இந்த அறியாமையின் இருத்தல் எனும் நிலை, அறிவால் நீக்கப்படும் வரை மட்டுமே நீட்டிக்கிறது. ஆகவே அக்ஞானம் எனும் வார்த்தையை ‘அறிவு இல்லாமை’ என பொருள்படுத்தக் கூடாது; ஏனெனில் இல்லாமை, அபா4வ, என்பது சிக்கல்களை ஏற்படுத்துவதில்லை. ஏதேனுமொன்று இருக்கும்போதுதான், பா4வ, அது தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதும் சிக்கல்கள் உண்டாவதும் நேர்கின்றது. உதாரணமாக கயிற்றைக் குறித்த அறியாமையே, பாம்பைத் தவறாக உருவாக்கி அதன்மூலம் பயத்தை கொடுக்கிறது.
=> அறியாமை எப்பொழுது நீங்கும்?
சூரியன் உதிக்கும்போது இருள் தானே மறைந்துபோகிறது. அதுபோல ஞானம் உதிக்கும்போது அக்ஞானம் அழிந்துபோகிறது. எந்த ஞானத்தினால் இந்த அறியாமை அழிக்கப்படுகிறது? எவ்விதம் ஒரு பானையைப் பற்றிய அறியாமையானது பானை-அறிவினால் நீக்கப்படுகிறதோ, துணியைப் பற்றிய அறிவினால் நீக்கப்படுவதில்லையோ அவ்விதம் ஆத்மாவைக் குறித்த அக்ஞானமானது ஆத்மஞானத்தினால் மட்டுமே அழிக்கப்படும். ஆத்ம ஞானமும் ப்ரம்ம ஞானமும் ஒன்றே.
இங்கு ஆத்மஞானத்தை கிருஷ்ணர் சூரியனுடன் ஒப்பிடுகிறார். சூரியன் உதிக்கும்போது இருள் விலகுகிறது. சூரியன் இருளைப் போக்குவது மட்டுமல்லாமல், இருக்கின்ற அனைத்தையும் ஒளிரச் செய்கிறது. அதுபோல, தன்னறிவானது அறியாமையை அழிப்பதோடு மட்டுமல்லாமல், சுயத்தை ப்ரம்ம என முன்பு அறியப்படாத ஓர் உண்மையை காட்டிக் கொடுக்கிறது, தத் பரம் ப்ரகாச1யதி.
இங்கு ஞானத்திற்கும் சூரியனுக்கும் உள்ள ஒப்புமை சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அதாவது ஞானமானது சுயத்தை ஒளிரச் செய்வதில்லை. மாறாக ஞானம், சுயத்தைப் பற்றிய அறியாமையை போக்குகிறது; அதனால் முன்பு அறியப்படாத ‘நான் ப்ரம்மமாக இருக்கிறேன்’ என்ற உண்மை வெளிப்படுத்தப்படுகிறது. ஞானம் ஒருவனின் சுயத்தை ஒளிரச் செய்வதில்லை; சுயமே பிரகாச சொரூபம்; தானாக ஒளிர்வது. ஞானமானது அக்ஞானத்தை அழித்து சுயத்தின் தன்மையை வெளிக்காட்டுகிறது அவ்வளவே.
சாஸ்திர உபதேசத்திலிருந்து பிறக்கும் இந்த அறிவினால், ‘நான் ப்ரம்மமாக இருக்கிறேன்’ என்று தன்னை அடையாளம் கண்டுகொண்ட ஒருவன், அனைத்து உண்மைகளின் உண்மையான, இறுதி உண்மையை அடைகிறான்.
—---------------------------------------------------------------------------------------------------------------------------
||5.17|| ஞானத்திற்குப் பின் மனதில் நடக்கும் மாற்றங்கள்:
तद्बुद्धयस्तदात्मानस्तन्निष्ठास्तत्परायणा: ।
गच्छन्त्यपुनरावृत्तिं ज्ञाननिर्धूतकल्मषा: ।। १७ ।।
தத்3பு3த்3த4யஸ்ததா3த்மாநஸ்தந்நிஷ்டா2ஸ்தத்பராயணா: ।
க3ச்ச2ந்த்யபுநராவ்ருத்திம் ஜ்ஞாநநிர்தூ4தகல்மஷா: ।। 17 ।।
तद्बुद्धय: தத்3பு3த்3த4ய: அதிலேயே(ப்ரம்மத்திடம்) புத்தியை வைத்தவர்கள்
तदात्मान: ததா3த்மாந: அதையே தங்கள் ஆத்மசொரூபமாகக் கொண்டவர்கள்
तन्निष्ठा: தந்நிஷ்டா2: அதிலேயே உறுதியாக இருப்பவர்கள்
तत्परायणा: தத்பராயணா: அதையே புகலிடமாகக் கொண்டவர்கள்
ज्ञाननिर्धूतकल्मषा: ஜ்ஞாநநிர்தூ4தகல்மஷா: ஞானத்தினால் பாபங்களை நீக்கியவர்கள்
अपुनरावृत्तिं அபுநராவ்ருத்திம் மீண்டும் பிறவாத நிலையை गच्छन्ति க3ச்ச2ந்தி அடைகிறார்கள்.
ப்ரம்மத்தில் புத்தியை வைப்பவர்கள், அதையே தங்களது ஆத்மசொரூபமாகக் கொண்டவர்கள், அதிலேயே உறுதியாயிருப்பவர்கள், அதையே புகலிடமாகக் கொண்டவர்கள், ஞானத்தினால் பாபங்களை நீக்கியவர்கள் திரும்பவும் பிறவாத நிலையை அடைகிறார்கள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர், தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடைகிறார்கள்.
விளக்கம்:
=> அந்தரங்க பரிபாகம்:
நாம் புரிந்துகொண்ட ஓர் அறிவிற்கு தடைகள் இருந்தால் அந்த அறிவு நமக்கு பயன்படாமல் போகும். அத்தடைகள் நீங்குவதை ஞானத்தில் பரிபாகம் நடைபெறுகிறது; அதாவது ஞானபலன் வருகிறது என்கிறோம். பரிபாகம் என்பது முதிர்வு அல்லது பக்குவத்தை நோக்கி நிகழும் மாற்றத்தைக் குறிக்கிறது. ரயில்வண்டி புறப்படும் நேரம் பற்றிய அறிவிருந்தும் அதில் சந்தேகமிருந்தால், அதை வைத்து நாம் ரயில் நிலையத்திற்குச் செல்லமாட்டோம்; சந்தேகம் எனும் தடை நீங்கும்போதே அந்த அறிவானது நமக்கு முழுமையான பலனை அளிக்கும்; பயணத்தை மேற்கொள்ள உதவும். ஆகவே ஞானப் பரிபாகம் என்பது தடை நீங்க நீங்க ஞானத்தின் பிரகாசம் கூடுவதைக் குறிக்கிறது. இவ்விஷயத்தில் தடை என்பது அந்தகரண தோஷத்தை, சித்த அசுத்தியைக் குறிக்கிறது. மனமானது தூய்மை அடைய அடைய, ஆத்மஞானத்தின் பலனான ஜீவன் முக்தி, விதேஹ முக்தி அடையப்படுகிறது.
முந்தய சுலோகத்தில் கிருஷ்ணர் ஞானமானது, ‘ஆத்மா ப்ரம்ம’ என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது எனக் கூறினார். அந்த ப்ரம்மமே, இந்த சுலோகத்திலுள்ள கூட்டுச் சொற்களில் வரும், ‘தத்_அந்த’ என்ற பிரதிபெயர்ச்சொல்லின் பொருள் — தத்3பு3த்3த4ய:, ததா3த்மாந:, தந்நிஷ்டா2:, தத்பராயணா:. யத் பரம் ஞானம் ப்ரகாசிதம் தத் ப்ரம்ம.
இந்த ஞானத்தின் காரணமாக, சான்றோர்கள் தத்3பு3த்3த4ய:, ததா3த்மாந:, தந்நிஷ்டா2: மற்றும் தத்பராயணா: ஆகிவிடுகிறார்கள். இந்த அறிவானது அவர்களின் அனைத்து அசுத்தங்களையும் நீக்கிவிடுவதால் அவர்கள் மீண்டும் திரும்புவதில்லை; அதாவது பிறவா பெருநிலையை, விதேஹ முக்தியை எய்துகிறார்கள். இந்த சுலோகத்தில் பகவான், ஞானமானது எப்படிப்பட்ட படிகளைத் தாண்டி ஒருவனை விதேஹ முக்திக்கு அழைத்துச் செல்கிறது என்பதை விளக்குகிறார்.
=> தத்3பு3த்3த4ய:, ப்ரம்மத்திடம் புத்தியை வைத்தவர்கள்:
யாருடைய புத்தியானது ப்ரம்மத்தில் வேறூன்றி இருக்கிறதோ, அவனுடைய புத்தி ப்ரம்மன் என்ற அறிவில் விழித்திருக்கிறது, தத்3பு3த்3த4ய:, என்று பொருள். முன்பு புத்தியானது, தானெனும் அஹங்காரத்தில், அனாத்மாவில் விழித்திருந்தது. அனாத்மாவில் புத்தி இருக்கும் வரை, அது எப்போதும் பாதுகாப்பு(அர்த்த) மற்றும் இன்பம்(காம) ஆகியவற்றில் மட்டுமே அக்கறை செலுத்தி தனது அஹங்காரத்தை வருடிக் கொடுக்கும் வேலையில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்.
ஆனால் இப்போது, ப்ரம்மத்தை ‘நான்’ என புரிந்துகொண்டவனாக தத்3பு3த்3தியுடையவன், அனைத்தையும் ப்ரம்மனாகவே அறிகிறான். ஆகையால் உடல் ப்ரம்மம்; மனம் மற்றும் புத்தி ப்ரம்மம்; அனைத்தும் ப்ரம்மம். அவனது புத்தி எப்போதும் ப்ரம்மத்திடமிருந்து விலகுவது கிடையாது. புத்தியானது அவன் சொல்லும் விஷயத்தில் அசையாமல் நிற்கிறது.
=> ததா3த்மாந:, ப்ரம்மத்தையே ஆத்மசொரூபமாகக் கொண்டவர்கள்:
ப்ரம்ம புத்தியுடன் தனது சுயத்தையே, ஆத்மாவையே ப்ரம்ம சொரூபமாக பார்க்கும் இவர்கள் ததா3த்மாந: என்று அழைக்கப்படுகிறார்கள். முன்பு உடல், மனம், புத்தி மற்றும் ஞாபகங்கள் போன்றவைகள் ஆத்மாவாக இருந்தன. தனது சுய-வரலாறும், உடலமைப்பும், கூந்தலும் தோலும்கூட ஆத்மாவாகின. ‘நான் செல்வந்தன்’, ‘நான் ஏழை’ என செல்வம் ஆத்மாவாக இருந்தது. ‘நான் சோகமாக இருக்கிறேன்’, ‘பதட்டமாக இருக்கிறேன்’, ‘இளமையுடன் இருக்கிறேன்’, ‘நான் இந்தியன்’ என மனதின் உளவியலும், உடலின் வயதும், வசிக்கும் தேசமும் என அனைத்தும் ‘நான்’ என்பதற்குப் பொருளாக இருந்தது.
ஆனால் இப்போது, மேற்கூரிய அனைத்தையும் முற்றிலும் நிராகரித்தவனாக, மனதை அனாத்மாவிடமிருந்து எடுத்து ப்ரம்மத்திடம் வைத்தவனாக, எந்த வகையிலும் வரையறுக்க முடியாத தூய பிரக்ஞையை தனது சுயமாகக் கொண்டவனாக, ததா3த்மாந: இருக்கின்றான்.
=> தந்நிஷ்டா2:, ப்ரம்மத்திலேயே உறுதியாக இருப்பவர்கள்:
நிஷ்டா என்பது உறுதியை, அர்ப்பணிப்பை, ஒன்றில் முழுமையாக தன்னை ஒப்படைத்தலைக் குறிக்கிறது. மூன்றாவது அத்தியாயத்தில் இதற்கான சில எடுத்துக்காட்டுகளை ஏற்கனவே பார்த்துள்ளோம். ஜப பயிற்சியில் உறுதியாயிருப்பவர்கள் ஜப-நிஷ்டர்கள் என்றும், தவம் உள்ளிட்ட ஆன்மிக பயிற்சியில் தன்னை அர்ப்பணித்தவர்களை தபோ-நிஷ்டர்கள் எனவும் பார்த்தோம். இங்கு ப்ரம்மத்தில் நிஷ்டையடைந்தவர்களைக் குறித்துப் பேசுகிறார்.
ப்ரம்ம ஞானத்தில் உறுதியாக இருக்கும் தந்நிஷ்டா2: சாதிப்பதற்கு என வேறெதுவுமில்லை; அனைத்தையும் ப்ரம்மமாக அறிவதால் ப்ரம்மத்தை தவிர அங்கு அடைய அவர்களுக்கு எதுவுமில்லை. ஆகவே அவர்கள் முழு அர்ப்பணிப்போடு எப்பொழுதும் ப்ரம்ம-நிஷ்டையிலேயே உறுதியாக இருக்கின்றனர். அவர்களது ஞானம் அசைக்கமுடியாததாய் உறுதிபெறுகிறது.
துயரம் வரும்போதுதான் எந்த அளவிற்கு ஞானம் உள்சென்றுள்ளது என்பதை ஒருவன் அறியமுடியும். நிஷ்டைக்கு தடை விளைவிக்கும் விதமாக, ஞானத்தை அசைப்பதற்கு பிராரப்தம் வந்தமையலாம். மனித உடல் என்பது சம அளவு பாபம் மற்றும் சம அளவு புண்ணியத்தின் வெளிப்பாடு. ஆகவே எந்தவொரு சுகத்தின்போதும், இதற்கு தகுந்த துக்கத்தை நான் அனுபவிப்பேன் எனும் அறிவுடன் இருத்தல் அந்த சுகத்தின் மீதான வைராக்கியத்தை குறிக்கிறது. ஞானியானவன் அனைத்தையும் சமமாகப் பார்ப்பவன். சுகத்தின்போது சந்தோஷமடைவதோ, துக்கத்தின்போது நொந்து கொள்வதோ கிடையாது. ஆகையினால், நித்ய-அநித்ய வஸ்து விவேகம், காரண-காரிய விவேகம் போன்றவைகளில் நிஷ்டையிருக்கும்போதே ஞான நிஷ்டை சாத்தியமாகிறது.
=> தத்பராயணா:, ப்ரம்மத்தையே புகலிடமாகக் கொண்டவர்கள்:
‘பராயண’ என்பது இறுதி அடைவை, புகலிடத்தை குறிக்கிறது. எவர்களுக்கு ப்ரம்ம(தத்) இறுதியான உறைவிடமாக ஆகிறதோ அவர்கள் தத்பராயணா: எனப்படுகிறார்கள். ப்ரம்மனை ஆத்மாவாக அறிவதே அவர்களின் இலக்கு. இப்போது அது அடையப்பட்டுவிட்ட காரணத்தினால், அவர்களுக்கு இலக்கு எதுவுமில்லை.
பொதுவாக மக்கள் இம்மையில் பாதுகாப்பு(அர்த்த) மற்றும் இன்பம்(காம) போன்றவற்றையும் மறுமையில் சொர்க்கம் போன்றவற்றையும் குறிக்கோள்களாகக் கொண்டுள்ளனர். ஆனால் ஞானிகளுக்கு ப்ரம்மத்தை தவிர, ஏற்கனவே ப்ரம்மமாக இருக்கின்றேன் என்ற அறிவை அடைவதைத் தவிர வேறு குறிக்கோள் எதுவுமில்லை. எனவே அவர்கள் தத்3பு3த்3த4ய:, ததா3த்மாந:, தந்நிஷ்டா2: மற்றும் தத்பராயணா: -வாக இருக்கிறார்கள் என பகவான் கூறுகிறார். இதன் பொருள், அவர்களின் இலக்கானது அடையப்பட்டு விட்டதையும், இனி அவர்களுக்கு அடைய வேறெதுவுமில்லை என்பதையும் காட்டுகிறது.
=> ஒருவனின் அனைத்து அசுத்தங்களையும் தன்னறிவு நீக்குகிறது:
இத்தகையவர்களை கிருஷ்ணர் இங்கு, ஜ்ஞாந-நிர்தூ4த-கல்மஷா:, அசுத்தங்கள்(கல்மஷா:) அனைத்தையும் ஞானத்தினால் நீக்கியவர்கள் என விவரிக்கிறார். விருப்பு-வெறுப்புகள், அறியாமை, பாப-புண்ணியம், சுக-துக்கம் போன்றவை அனைத்தும் இங்கே அழுக்குகள், அசுத்தங்கள் என்கிறார். இவைகளனைத்தும் ஞானத்தினால் நீக்கப்படுகின்றன.
இப்படிப்பட்டவர்கள் மரணத்தை அடையும்போது, அவர்கள் திரும்புவதில்லை, அதாவது மீண்டும் பிறப்பதில்லை — அபுநராவ்ருத்திம் க3ச்ச2ந்தி. வாழும்போதும் ப்ரம்மத்தில் பொருந்தியவர்களாக, அசுத்தங்களிலிருந்து விடுபட்டவர்களாக, ஜீவன்-முக்தர்களாக இருக்கிறார்கள். ப்ரம்மமாகவே இருப்பதால் இறக்கும்போதும், அவர்கள் பிணைக்கப்படாத நிலையை, திருப்பாத நிலையை, விதேஹ முக்தியை அடைகிறார்கள். ப்ரம்மம் வந்து போவதில்லை. எப்போதுமிருப்பது; சாசுவதம். பிரபஞ்சமாகவும் ஈஷ்வரனாகவும் இருக்கும் பிரம்மம் மட்டுமே உள்ளது; இருமை என எதுவுமில்லை. இப்படிப்பட்ட ப்ரம்மமாக சுயத்தை அறிந்தவர்கள் திரும்ப முடியாத இறுதியை அடைகிறார்கள். வேறொரு உடலுடன் இனி எந்த தொடர்பும் உண்டாவதில்லை.
யுக்தியினால் பெறப்படும் ஞானம் ஒருவகையானது என்பதையும், தியானத்தினால் வரும் ஞானம் முற்றிலும் வேறானதென்பதையும், ஈசுவர தரிசனத்தால் அதைவிட முற்றிலும் வேறான ஞானம் உதயமாகிறதென்பதையும் நான் தெரிந்துகொண்டிருக்கிறேன்.
—--------------------------------------------------------------------------------------------------------------------------------