||5.18|| ஞானியின் பார்வை:
विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गवि हस्तिनि ।
शुनि चैव श्वपाके च पण्डिता: समदर्शिन: ।। १८ ।।
வித்3யாவிநயஸம்பந்நே ப்3ராஹ்மணே க3வி ஹஸ்திநி ।
சு1நி சைவ ச்1வபாகே ச பண்டி3தா: ஸமத3ர்சி1ந: ।। 18 ।।
पण्डिता: பண்டி3தா: பண்டிதர்கள் विद्याविनयसम्पन्ने வித்3யாவிநயஸம்பந்நே கல்வியும் பணிவும் பொருந்திய ब्राह्मणे ப்3ராஹ்மணே பிராம்மணனிடத்திலும் गवि க3வி பசுவினிடத்தும்
हस्तिनि ஹஸ்திநி யானையினிடத்தும் शुनि च சு1நி ச நாயினிடத்திலும்
श्वपाके एव च ச்1வபாகே ஏவ ச நாயை சமைத்து உண்ணும் புலயனிடத்தும்
समदर्शिन: ஸமத3ர்சி1ந: சமமான பார்வையுடன் இருக்கிறார்கள்.
கல்வியும் பணிவும் பொருந்திய பிராம்மணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்திலும், நாயினிடத்திலும், நாயை சமைத்து உண்ணும் புலயனிடத்திலும் ஞானிகள், சமமான பார்வையுடன் இருக்கிறார்கள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலையனிடத்தும், பண்டிதர் சமப் பார்வையுடையோர்.
விளக்கம்:
=> ஞானியின் பார்வை:
இந்த சுலோகத்தில் பகவான் ஒரு ஞானியானவன் தத்துவத்தை எப்படிப் பார்க்கிறான் என்பதை, ஆத்மஞான சொரூப லக்ஷணத்தை விளக்குகிறார். அவர்கள் சம தர்ஷணத்தை உடையவர்களாக ஆகிறார்கள் என்கிறார். மாறுதலுக்குட்படாத ப்ரம்மதையே, ஸம, எங்கும் எதிலும் காண்கிறார்கள். அதாவது புண்ணிய பாபத்தினாலும், விதவிதமான ஸம்ஸ்காரங்களினாலும் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத அல்லது கறைபடாத ப்ரம்மத்தை அவர்களால் எல்லா இடங்களிலும் அடையாளம் காண முடிகிறது.
இதை விளக்கும் விதமாக சில எடுத்துக்காட்டுகளை இந்த சுலோகத்தில் கிருஷ்ணர் சுட்டிக்காட்டுகிறார். முதலில் அறிவு மற்றும் பணிவுடன் கூடிய பிராமணர், வித்3யாவிநயஸம்பந்நே, எடுத்துக் கொள்ளப்படுகின்றார். இப்படிப்பட்ட பிராமணனிடத்தில் எங்ஙனம் ஒரு ஞானியானவன் ப்ரம்மத்தை பார்க்கின்றானோ அங்ஙனமே பசு(க3வி), யானை(ஹஸ்திநி), நாய்(சு1நி) மற்றும் நாயை உண்பவனிடத்திலும் (ச்1வபாகே) பார்க்கின்றான்.
பொதுவாக இருவகையான திருஷ்டி பேசப்படுகிறது; த்வைய திருஷ்டி. (1) வியவஹாரத்தின் அடிப்படையில் கண்ணின் திருஷ்டி (2) புத்தியின் அடிப்படையில் அறிவின் திருஷ்டி.
வியவஹாரத்தில் சில சிக்கல்களைத் தவிர்க்க யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்குதான் வைக்க வேண்டும். தவறு செய்பவர்களிடம் அதை சுட்டிக் காட்டுதலும் அவர்களின் செயல்களை நிராகரித்தலும், நற்காரியங்களில் ஈடுபடுபவர்களை உயர்த்திப் பேசுதலும் ஆதரவளித்தலும் வியஹாரத்தில் இருக்கவேண்டிய ஒன்றுதான். அதை இங்கு பகவான் குறிப்பிடவில்லை. புத்தியிலிருக்க வேண்டிய திருஷ்டை பற்றி பேசுகிறார். அறிவு திருஷ்டியை இரண்டாகப் பிரிக்கிறோம்.
(i) ப்ரதீதி திருஷ்டி - நாமரூப அம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்த்தல்.
(ii) சொரூப திருஷ்டி - அதிஷ்டானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்த்தல்.
உதாரணமாக, மரத்தினால் செய்யப்பட்ட யானை பொம்மையை எடுத்துக் கொண்டால், அதை யானையாக பார்த்தல் ப்ரதீதி திருஷ்டி; பொம்மைக்கு ஆதாரமாக இருக்கும் மரமாகப் பார்த்தல் சொரூப திருஷ்டி. இந்த உலகமானது சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் என்ற பேதத்தையுடைய மாயையின் காரியமாகும். இம்மூன்று குணங்களும் ஆத்மாவின் மீது ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. அதாவது மாறிக்கொண்டேயுள்ள நிலையற்ற இந்த நாமரூபங்கள் அனைத்தும், நித்தியமான ப்ரம்மத்திடம் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. எனவே இங்கும் மேற்கூரிய இருவகையான திருஷ்டி எப்போதும் தெரிவுக்கு உள்ளது.
(i) ப்ரதீதி திருஷ்டி - அதிஷ்டானமான ப்ரம்மத்தை விட்டுவிட்டு, நாமரூபமான இந்த உலகத்தை சத்தியமாகப் பார்த்தல். இதில், இந்திரியங்களைக் கவரும் மாயையின் முக்குணங்களை சத்தியமாகக் கொண்டு அதன்பின் செல்லும் புத்தியானது, அதன் விளைவாக உண்டாகும் ராக-த்வேஷம், லோபம், மோஹம் போன்ற சம்சாரத்துடன் வாழ்தல் நடைபெறுகிறது.
(ii) சொரூப திருஷ்டி - வியவஹாரத்தில் உலகம் முக்குண வேற்றுமைகளுடன் கூடியதாக இருப்பினும் வேறுபாடில்லாத, இரண்டற்ற ப்ரம்மத்திடம் இவைகளனைத்தும் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது என்ற அதிஷ்டான தர்ஷணம்.
இங்கு பகவானால் ‘பண்டி3தா:’ என்றழைக்கப்படும் ஞானிகள் எப்பொழுதும் அதிஷ்டானத்தை பார்க்கும் புத்தியுடையவர்களாய், ப்ரம்ம தர்ஷணத்துடன் இருக்கிறார்கள். இதனால் வெளித்தோற்றத்திற்கு தென்படும் வேற்றுமைகள் அனைத்தையும் கடந்தவர்களாய் சமமான தர்ஷணத்துடன் இருக்கிறார்கள். அதாவது எங்கும் ப்ரம்மத்தையே பார்க்கிறார்கள்.
சூரிய வெளிச்சம் எல்லாப் பொருள்கள் மீதும் சமமாகவே படுகிறது. இது கங்கை, இது சாக்கடையென்று சூரியன் பேதம் பாராட்டுவதில்லை. அதுபோல ப்ரம்ம ஞானி ப்ரம்மத்தையே எங்கும் காண்கிறான்.
வெறும் புத்தகங்கள் பல படித்தவன் பண்டிதன் அல்லன். கர்வம் மற்றும் அஹங்காரம் போன்றவை பண்டிதத்துடன் சேர்ந்தே வருகின்ற ஒரு தோஷம்; பக்க விளைவு. முயற்சியுடன் இந்த தோஷங்களை நீக்கியவர்கள், ப்ரம்ம தர்ஷணத்திற்கானத் தகுதியை அடைகிறார்கள். ப்ரம்ம சாக்ஷாத்காரம் அடைந்தவனே பண்டிதன்.
=> குழந்தை மற்றும் ஞானியின் சம திருஷ்டி:
பொதுவாக குழந்தையும் ஞானியும் சம திருஷ்டியை உடையவர்களாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் இதில் முக்கிய வேறுபாடொன்றை பொதுமக்கள் அறிவதில்லை. ஒரு குழந்தையின் சம திருஷ்டி அதிஷ்டானத்தையும் பார்ப்பதில்லை; நாமரூப திருஷ்டியுமில்லை. அதாவது நாமரூபத்தை பார்க்குமளவு இன்னும் அறிவு வளர்ச்சி ஏற்படவில்லை. ஆகவே அது அதிருஷ்டி எனப்படும்.
ஆனால் ஒரு ஞானியின் சம திருஷ்டி என்பது நாமரூப பேதத்தை நீக்கி, அதிஷ்டானத்தை மட்டும் பார்ப்பதால் ஏற்படுகிறது.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
பேத புத்தியைத் தருவது அக்ஞானம்; ஐக்கிய புத்தியைத் தருவது ஞானம்.
—---------------------------------------------------------------------------------------------------------------------------
||5.19|| இவ்வுலகில் இருப்பவர் இத்தகைய சமநிலையை அடைய முடியுமா?
इहैव तैर्जित: सर्गो येषां साम्ये स्थितं मन: ।
निर्दोषं हि समं ब्रह्म तस्माद् ब्रह्मणि ते स्थिता: ।। १९ ।।
இஹைவ தைர்ஜித: ஸர்கோ3 யேஷாம் ஸாம்யே ஸ்தி2தம் மந: ।
நிர்தோ3ஷம் ஹி ஸமம் ப்3ரஹ்ம தஸ்மாத்3 ப்3ரஹ்மணி தே ஸ்தி2தா: ।। 19 ।।
येषां யேஷாம் யாருடைய मन: மந: மனமானது साम्ये ஸாம்யே சமநிலையில்(ப்ரம்மனிடத்தில்)
स्थितं ஸ்தி2தம் உறுதியாக இருக்கிறதோ तै: தை: அவர்களால் इह एव இஹ ஏவ இம்மையிலேயே
सर्ग: ஸர்க3: ஜென்மமானது जित: ஜித: வெல்லப்பட்டது हि ஹி உண்மையில் ब्रह्म ப்3ரஹ்ம ப்ரம்மம்
निर्दोषं நிர்தோ3ஷம் தோஷமற்றது समं ஸமம் சமமானது तस्मात् தஸ்மாத் ஆகையினால்
ते தே அவர்கள் ब्रह्मणि ப்3ரஹ்மணி ப்ரம்மனிடத்தில் स्थिता: ஸ்தி2தா: நிலைபெறுகிறார்கள்.
மனதை சமநிலையில் உறுதிப்படுத்தியவர்களால் இம்மையிலேயே ஜென்மமானது வெல்லப்படுகிறது. ப்ரம்மம் தோஷமற்றது; சமநிலையுடையது. ஆகையினால் அவர்கள் ப்ரம்மத்தில் நிலைத்திருக்கிறார்கள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
மனம் சமநிலையில் நிற்கப் பெற்றோர் இவ்வுலகத்திலேயே இயற்கையை வென்றோராவர். பிரம்மம் மாசற்றது. சமநிலையுற்றது. ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.
விளக்கம்:
=> சமநிலையிலிருக்கும் ஞானி அடையும் பலன்:
நகைகளின் ஆதாரமாயிருப்பது தங்கம் எனத் தெரிந்தபோதிலும், மனமானது அதனுடைய வடிவமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும். அதுபோல சில சமயம் அறிவினால் வேற்றுமையின்மையை(நாமரூப அபேதத்தை) அடைந்தாலும், மனதின் பார்வை வேற்றுமையிலிருந்து மீளாமலிருக்கும். இந்த சுலோகத்தில் அந்தகரணமான மனதையும் ப்ரம்மத்தில் உறுதியாக வைத்தவர்கள் அடையும் பலனை பகவான் கூறுகிறார். அவர்களின் பிறப்பு இறப்பு எனும் சம்சாரம் வெல்லப்படுகிறது; இயற்கையை வென்றவர்களாகின்றனர் என்கிறார்.
அசுத்தமாக இருக்கும் கண்ணாடியினால் பார்க்கும்போது பார்க்கப்படும் பொருட்களனைத்தும் மங்கலாகத் தெரியும். தூய்மையான கண்ணாடி மெய்க்காட்சிக்கு தடையாவதில்லை. மனது விருத்தி என்னும் வேகத்தோடு கூடியிருந்தால் பிறப்பு இறப்புக்கு ஏதுவான பிரபஞ்சத்தை அது காண்கிறது. ஓடிக்கொண்டேயிருக்கும் மனதை பயிற்சியினால் அறிவு சொன்ன இடத்தில் வைத்துப் பழகியவர்கள் இங்கு பேசப்படுகிறார்கள். இவர்கள் மனதை சமநிலையில் உறுதிப்படுத்துவதால் பொருளை உள்ளபடி காண்கிறார்கள். மெய்ப்பொருளுக்கு ப்ரம்ம எனும் பெயருண்டு. இந்த ப்ரம்மத்திடம் அசைவொன்றும் இல்லையாதலால் அது எப்போதும் சமமாயுள்ளது. சுத்த சைத்தன்யம் விகாரப்படுவதில்லை. கூடுதல், குறைதல், மாறுதல் போன்றவை அதனிடத்தில்லை. ஆகையால் அது தோஷமற்றது; துக்கமற்றது; கேடில்லாதது அது ஒன்றே. சமநிலையில் நிலைத்திருப்பவர் அதன் காட்சி கண்டு அதனிடத்தே நிலைத்திருப்பவர் ஆகின்றனர். கேடின்மை ப்ரம்ம ஞானிகளிடத்தும் வந்தமைகிறது.
=> ஜீவன் முக்தி மற்றும் விதேஹ முக்தி:
‘ஸர்க3:’ எனும் சொல்லுக்கு பிறப்பு என்று பொருள்; இது அக்ஞானிகள் சிக்கிக் கொள்ளும் பிறப்பு மற்றும் இறப்புகளின் சுழற்சியை, சம்சாரத்தைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட சம்சாரம் ஞானிகளால் வெல்லப்படுகின்றது — ஸர்க3: ஜித:. அதாவது இனி அவர்களுக்கு பிறப்பில்லை; விதேஹ முக்தியை அடைகிறார்கள் என்பது பொருள். மேலும் ஒருவன் உயிருடன் இருக்கும் பொழுதே, இந்த வாழ்க்கையில், இந்த உடலில், இந்த நேரத்தில், இங்கேயே, இப்போதே இந்த வெற்றியை அடைகிறான் — இஹ ஏவ. அதாவது, சம்சாரத்திலிருந்து விடுதலை, மோக்ஷம் என்பது மரணத்திற்குப் பின் உண்டாவதில்லை; இங்கேயே இப்பொழுதே அடையப்படுகிறது, இது ஜீவன் முக்தியைக் குறிக்கிறது. அறிவின் மூலம் அடையப்படும் அத்தகைய விடுதலை உண்மையில் சாத்தியம் என்பதை இவர்கள் அடையும் இந்த வெற்றி நிரூபிக்கிறது.
உண்மையில் ஆத்மா எப்போதும் முக்தனாகவே இருக்கிறது. பிணைப்பு, சம்சாரம் என்பது உண்மையானதாக இருந்தால், அதை கடவுளாலும் கூட அகற்றமுடியாது. ஒருகால் அது பொய்யானதாக இருக்கும் பட்சத்திலும் அப்பொழுதும்கூட அதை நீக்கமுடியாது. ஏனெனில் நீக்குவதற்கு என அங்கு எதுவுமில்லை. ஆனால் கயிற்றில் பார்க்கும் பாம்பைப் போல, இல்லாத ஒன்றை இருப்பதாக பார்க்கும்போதுதான் அது அறிவின் மூலம் நீக்கப்பட வேண்டியிருக்கிறது.
=> குணங்களற்றது ஆத்மா:
காலத்திற்குட்படாதது ஆகையால் ப்ரம்மம் எந்த மாற்றத்தையும் அடைவதில்லை. மேலும் எந்த குணங்களும் ப்ரம்மனிடத்து இல்லை என்பதாலும் அங்கு மாற்றமடைய எதுவுமில்லை. பொதுவாக ஒரு பொருள் அதற்கேயுரிய குறிப்பிட்ட குணத்துடன் கூடியதாக இருக்கும். ஆகவே அதனுடன் சில குணங்களைச் சேர்ப்பதன் அல்லது எடுப்பதன் மூலமோ, அல்லது காலத்தினாலோ அது மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் எந்த மாற்றமும் அடையாத ஒரேயொரு வஸ்துவாக ஆத்மா, அதாவது ப்ரம்மம் மட்டுமே உள்ளது. ஆகவே அதற்கு இறப்பு கிடையாது.
எந்தவொன்றும் அதனுடைய இருப்புக்கு முற்றிலும் ஆத்மாவையே சார்ந்திருப்பதால் அவைகள் அனைத்தும் மித்யா என்றழைக்கப்படுகிறது. மாறாக ஆத்மா சுய இருப்புடன், சுயமாக பிரகாசிப்பதால் சத்யம் என்றழைக்கப்படும். ஆத்மாவே எல்லாவற்றின் யதார்த்தமாகவும் இருக்கிறது. காலத்திற்குட்படாத இந்த சத்ய-ஆத்மா மாற்றத்திற்கோ மரணத்திற்கோ உட்படாதது; ஆகையால் இது எப்பொழுதும் சமநிலையில் இருப்பதாக ஆகிறது. அனைத்தின் சுயசொரூபமாக இருந்தபோதிலும் புண்ணிய-பாபத்தினாலும், முக்குணங்களினாலும் தீண்டப்படாதாய் இருப்பதாலும் ஆத்மா இங்கு ஸமம் எனப்படுகிறது.
=> ஆத்மா பாபமற்றது, சுத்தமானது:
‘ஸமம்’ ப்ரம்மத்தை பகவான் இங்கு நிர்தோஷம் என்றும் விவரிக்கிறார். ‘தோஷ’ என்பது குறைபாட்டை அல்லது கறையை குறிக்கும். குணங்களற்ற காரணத்தினால் ப்ரம்ம தோஷமற்றது; சுத்தமானது. இப்படிப்பட்ட ப்ரம்மமே ஆத்மாவாக இருப்பதால் ஞானிகள், ப்ரம்மனிடத்திலேயே எப்போதும் நிலைத்திருக்கிறார்கள் — ப்3ரஹ்மணி ஸ்தி2தா:.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
மாயையும் பிரம்மமும் முறையே ஓடும் பாம்பையும், சலனமற்றுக் கிடக்கும் பாம்பையும் ஒக்கும். கிரியா சக்தி மாயையாகும்; நிஷ்கிரியா சக்தி பிரம்மம்.
—---------------------------------------------------------------------------------------------------------------------------