புதன், 16 மார்ச், 2022

ஸந்யாஸ யோகம் 5.12 - 5.13

||5.12|| கர்மயோக பலன்:

युक्त: कर्मफलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकीम्  

अयुक्त: कामकारेण फले सक्तो निबध्यते ।। १२ ।। 

யுக்த: கர்மப2லம் த்யக்த்வா சா1ந்திமாப்நோதி நைஷ்டி2கீம்  

அயுக்த: காமகாரேண 2லே ஸக்தோ நிப3த்4யதே ।। 12 ।।


युक्त:  யுக்த:  கர்மயோகத்தில் பொருந்தியவன்   कर्मफलं त्यक्त्वा   கர்மப2லம் த்யக்த்வா  கர்மபலனை துறந்து   नैष्ठिकीम्  நைஷ்டி2கீம்  யோக நிஷ்டையிலிருந்து வருகின்ற   

शान्तिम् प्नोति  சா1ந்திம் ஆப்நோதி  சாந்தியை அடைகிறான்   अयुक्त:  அயுக்த: கர்மயோகம் செய்யாதவன் कामकारेण   காமகாரேண  காமத்தால் தூண்டப்பட்டு   फले सक्त:  2லே ஸக்த:  பலனில் ஆசை வைத்தவனாக   निबध्यते   நிப3த்4யதே   நிச்சயமாக பந்தத்தை அடைகிறான்.   


கர்மயோகத்தில் பொருந்தியவன் பற்றற்று, யோக நிஷ்டையிலிருந்து வருகின்ற சாந்தியை அடைகிறான். யோகம் செய்யாதவன் ஆசை வசப்பட்டு பலனில் பற்று வைத்தவனாக நிச்சயமாக பந்தத்தை அடைகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான். யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப் பயனிலே பற்றுதல் கொண்டு தளைப்படுகிறான்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் பகவான், கர்மயோகி அடையும் பலனையும் கர்ம யோகி அல்லாதவனின் நிலையையும் வர்ணிக்கிறார். யோகியானவன் மனத்தூய்மைக்காக மட்டுமே வினையாற்றுவதாக சென்ற சுலோகத்தில் பார்த்தோம். அத்தகைய மனத்தூய்மையை பகவான் இங்குசாந்திஎன்ற சொல்லின் மூலம் விளக்குகிறார். எந்த அளவு ஒருவனது மனமானது தூய்மையானதாக உள்ளதோ அந்த அளவு அது அமைதியுடன் இருக்கும்.

கர்மயோக வாழ்க்கையின் காரணமாக பெறப்பட்ட, விருப்பு-வெறுப்பின் பிடியிலிருந்து அடைந்த ஒரு குறிப்பிட்டவளவு சுதந்திரம், இந்த சாந்தியை அடைவிக்கிறது. எது வந்தபோதும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் பிரசாத-புத்தி எனப் பார்த்தோம். நடப்பவை அனைத்தையும் பிரசாதமாக ஏற்கும் புத்தியினால், யோகி நிகழ்கால நிகழ்வுகளை சரியான முறையில் அணுகுகிறான். கடந்தகாலக் குறைபாடுகளையும் இழப்புகளையும் தன்மீது சுமத்திக் கொள்வதுமில்லை. ஆகவே அவன் சாந்தியை அடைகிறான்.

ஒருவன் கர்மயோகத்தில் பொருந்தியவனாகயுக்த:’, ஈஷ்வரனினுடைய தர்மத்தை அல்லது ஈஷ்வரனிடமிருந்து வேறானதாக இல்லாத தர்மத்தை பின்பற்றி வினையாற்றுகிறான். இதனுடைய விளக்கத்தை 5.10 -ல் விரிவாகப் பார்த்துள்ளோம். தர்மத்திற்கு எதிராகச் செயல்படுதல் இல்லாததால் திருப்தியும் ஒருவித இணக்கமும் மனதில் நிலவுவதைப் பார்க்கலாம். அதாவது மனதினுள் எவ்வித மோதலும் ஏற்படுவதில்லை. இந்த முரண்பாடற்ற நிலை சாந்தி எனப்படும். அதேசமயம், தனது ராக-த்வேஷத்திற்காக தர்மத்திற்கு எதிராக செயல்படும் ஒருவன் அசாந்தியை, முரண்களை பலனாகப் பெறுகிறான்.   

=> ஒப்பீட்டளவிலான சாந்தி மற்றும் முழுமையான சாந்தி:

நைஷ்டி2கீம்என்ற சொல்லினால் கிடைக்கும்நிஷ்டாஎன்ற சொல்லை பொருள்படுத்துவதன் மூலம், இங்கு கூறப்படும் சாந்தி என்பது ஒப்பீட்டளவிலான அமைதியா அல்லது முழுமையான அமைதியா என்பதை புரிந்துகொள்ளலாம். ‘நிஷ்டாஎன்பது கர்மயோகத்தில் பொருந்திய வாழ்க்கையான யோக-நிஷ்டையையோ அல்லது அறிவில் நிலைத்த ஞான-நிஷ்டையையோ குறிக்கலாம். இதில் யோக-நிஷ்டையிலிருந்து பெறப்படும் சாந்தி ஒப்பீட்டளவிலானது, அதாவது ஒருவனுக்கு ஞானத்தை அடைய தேவையான அளவு மனவமைதியை கொடுக்கிறது. இது அந்த-கரண-சுத்தியின் பலனாக வாய்ப்பது. ஞான-நிஷ்டையடைந்த ஒரு ஞானி அதன் பலனாக பரா சாந்தி எனப்படும் முழு அமைதியை, நிறைவை அடைகிறான். ஆகவே யோக-நிஷ்டையை தொடர்ந்து ஞான-நிஷ்டை என்பது சரியான வரிசைக்கிரமமாகச் சொல்லப்படுகிறது.

சங்கரர் தனது பாஷ்ய விசாரத்தில் இந்த கிரமத்தை விளக்குகிறார். முதலில் அந்த-கரண-சுத்தி அல்லது சத்வ-சுத்தியின் மூலம் சாந்தி பெறப்படுகிறது. ‘சத்வஎன்பது மனதைக் குறிக்கும் மற்றுமொரு வார்த்தையாகும். சத்வ சுத்தியின் பலனாக ஒருவன் தன்னறிவை அடைகிறான்ஆத்மஞான ப்ராப்தி. இந்த ஞானத்தின் பலனாக சர்வ-கர்ம-சந்யாசத்தை, அனைத்து கர்மங்களையும் ஞானத்தினால் துறத்தலை அடைகிறான். இதுவே ஞான-நிஷ்டா. தன் சொரூபத்தை பற்றிய இந்த அறிவை உடையவன் சொரூப சாந்தியை, முழு நிறைவை அடைகிறான். இவ்விதத்தில் வரிசைக் கிரமமானது அமைகிறது.

கர்மயோகத்தினால் கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட அளவிலான சாந்தியிலிருந்து தன் சொரூப அறிவினால் பெறப்படும் பூரண சாந்திக்கு செல்ல பல படிகளை பகவான் 5.7-ல் ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளார்விசு1த்3தா4த்மா, விஜிதாத்மா அங்கு எல்லா ஜீவராசிகளின் ஆத்மாவாக தன் ஆத்மாவைப் பார்ப்பவனை ஸர்வபூ4-ஆத்மபூ4-ஆத்மா என குறிப்பிட்டார். இந்த அறிவினால் ஓப்பீட்டளவிலான சாந்தி, சொரூப சாந்தியாக மாற்றப்படுகிறது.


=> கர்மயோகி அல்லாதவனின் நிலை:

கீதையில் சில இடங்களில் பகவான் தனது உபதேசத்தின் நேர்மறைப் பொருளை வலியுறுத்துவதற்காக, அதைத் தொடர்ந்து எதிர்மறையைக் கூறுவார். இந்த சுலோகம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது. ஒருவன் கர்மயோக வாழ்க்கையில் ஈடுபடும்போது எதை அடைகிறான் என்பதை முதல் வரி வெளிப்படுத்துகிறது. கர்மயோகத்தின் மதிப்பை வலியுறுத்த, ஒருவன் இந்த வாழ்க்கைமுறையை பின்பற்றாத போது என்ன நடக்கிறது என்பதை இரண்டாவது வரி கூறுகிறது. அப்படிப்பட்டவனை பகவான் இங்குஅயுக்த:’, கர்மயோகம் செய்யாதவன் என அழைக்கிறார். இவன் தர்மத்தையும் மேற்கூரிய வரிசைக்கிரமத்தையும் முற்றிலுமாக மறந்தவனாக, ஆசையினால் உந்தப்பட்டு வினையாற்றுகிறான். ராக-த்வேஷத்தின் பொருட்டு பலனுக்காக செயல் செய்பவன், சரி மற்றும் தவறு போன்ற கட்டமைப்பை உதறிவிட்டு அதில் ஈடுபடுகிறான். இதனால்அயுக்த’, கர்ம மற்றும் கர்மபலனில் கட்டுண்டு பந்தத்தில் உழல்கிறான். சேகரித்த பாப புண்ணியத்தின் விளைவாக பிறப்பு மற்றும் இறப்புச் சுழற்சியை தொடர்கிறான். வரப்போகிற பிறப்பு ஒருபுறமிருக்கட்டும்இந்த வாழ்க்கையிலேயும் கூட சுக-துக்கத்தினால் பிணைக்கப்பட்டவனாக அசாந்தியை, மனநிறைவின்மையை அடைகிறான். ஆகையால், இங்கு கிருஷ்ணர் அர்ஜுனனிடம், ‘நீ கர்மயோகியாக ஆகுக. இதனால் அடையப்பெற்ற சாந்தி உன்னை ஞான-நிஷ்டைக்கு இட்டுச் செல்லும்எனக் கூறுகிறார்.

—------------------------------------------------------------------------------------------------------------

||5.13|| ஞானத்தில் நிலைத்தவனது பான்மை எத்தகையது:

सर्वकर्माणि मनसा सनन्यस्यास्ते सुखं वशी

नवद्वारे पुरे देही नैव कुर्वन्न कारयन् ।। १३ ।। 

ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே ஸுக2ம் வசீ1

நவத்3வாரே புரே தே3ஹீ நைவ குர்வந்ந காரயந் ।। 13 ।।


वशी देही  வசீ1 தே3ஹீ  (அந்தக்கரணத்தை) வசப்படுத்திய தேகியானவன் सर्वकर्माणि   ஸர்வகர்மாணி   எல்லாக் கர்மங்களையும்   मनसा सनन्यस्य   மநஸா ஸந்ந்யஸ்ய  விவேகத்தினால் விலக்கிவிட்டு   

एव कुर्वन्    ஏவ குர்வந்  ஒன்றும் செய்யாதவனாக   कारयन्   காரயந்  ஒன்றையும் செய்விக்காதவனாக   

नवद्वारे पुरे   நவத்3வாரே புரே  ஒன்பது துவாரங்களையுடைய தேகத்தில்  

सुखं स्ते   ஸுக2ம் ஆஸ்தே  சுகமாக வீற்றிருக்கிறான். 


தன்னை வசப்படுத்திய தேகியானவன் எல்லாக் கர்மங்களையும் விவேகத்தால் விலக்கிவிட்டு ஒன்றும் செய்யாதவனாகவும் செய்விக்காதவனாகவும் ஒன்பது வாயிலையுடைய உடலெனும் நகரில் இன்புற்றிருக்கிறான்.



சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

தன்னை வசங்கொண்ட ஆத்மா எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து, எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி, ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில் இன்புற்றிருக்கிறான்.


விளக்கம்:

இங்கு, அனைத்து கர்மங்களையும் அறிவினால் துறந்த சந்யாசியை முன்வைப்பதன் மூலம் ஞான-நிஷ்டையானது விவாதிக்கப்படுகிறது. நாம் சந்யாசத்திற்கான இரு அர்த்தங்களையும் முன்பே பார்த்துள்ளோம், ஒன்று வைராக்கியத்தின் விளைவாக சந்யாச வாழ்க்கையை எடுத்துக்கொண்டு செயலைத் துறத்தல்; மற்றொன்று அறிவினால் செயலைத் துறத்தல். இந்த சுலோகத்தில் பிந்தயது, அறிவினால் துறப்பது விளக்கப்படுகிறது.

இந்த அறிவானது மனதில் ஏற்படுவதால், இங்குமனஸ்எனும் வார்த்தை அறிவு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனரீதியாக, ஒருவர் அனைத்து கர்மங்களையும் விட்டுவிடுகிறார். எப்படி? அறிவினால், விவேகத்தினால். ஆகையால்மனஸாஎன்பது ஞாநேந என்ற பொருளில், விவேகத்தினால்ஆத்மாவாகிய நான் செயல் செய்வதில்லை என அறிவதன் மூலம் துறத்தல்.

இப்படிப்பட்ட அறிவைக் கொண்ட ஒருவன், இங்கேவசீ1என அழைக்கப்படுகிறான். ‘வசஎனில் கட்டுப்படுத்துதல் எனப் பொருள். பணம், பதவி அல்லது ராஜ்ஜியம் போன்ற எந்த சக்தியையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது வசீகரணம் எனப்படும். இங்கு தனது உடல், மனம் மற்றும் புலன்களை தன் வசப்படுத்தியவனை பகவான், வசீ என்றழைக்கிறார்.


=> உடலில் வசிப்பவன்:

வசீ என்பதை சுபாவமாக மாற்றிக்கொண்ட ஞானியை, இங்கு கிருஷ்ணர்தேஹி’, உடலில் வசிப்பவர் என்றும் குறிப்பிடுகிறார். உடலையும் மனதையும் வசப்படுத்தியவனாதலால் தன்னிடத்தில் இருப்பது பளுவாகத் தெரியாமல், ஒன்பது கதவுகளையுடைய நகரமாக கருதப்படும் உடலில், தேஹியான ஞானி மகிழ்ச்சியாக இருக்கின்றான் என்கிறார்.

அனைவரும் அவரவர்களது உடலில் வசிப்பதால் ஞானியை மட்டும் பகவான் ஏன் இவ்வாறு கூறுகிறார் என ஒருவன் இதை ஆட்சேபிக்கலாம். காரணம் என்னவெனில், அக்ஞானிகளுக்கு அவர்கள் உடலில் வசிக்கிறார்கள் என்பது தெரிவதில்லை. எங்கே இருக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்கும்போது, ‘நான் இந்த ஊரில், இந்த தெருவில், இந்த வீட்டில் வசிக்கிறேன்என்று சொல்வார்கள். அவர்கள் தங்களையே உடலாக நினைப்பதால், உடல் வசிக்கும் இடத்தை தங்களின் வசிப்பிடமாகக் கொள்கிறார்கள். தனது சுயம் வாழும் இடம் உடல் என்பதும், உடல் தனது சுயம் அல்ல என்பதும் அவர்களுக்குத் தெரிவதில்லை

இதை தெளிவுபடுத்தும் விதமாக கிருஷ்ணபகவான் இங்கு, உடலை ஒரு நகரமாகக் கொண்டு அங்கு வசிப்பவனாக ஞானியை வரையறுக்கிறார். ஒன்பது வாசல்களையுடைய உடல் ஓர் ஊராகக் கருதப்படுகிறது. அரசன் போன்று ஆத்மா அதில் கர்மம் ஒன்றும் செய்யாது வீற்றிருக்கிறது. அதனுடைய பிரதிநிதிகளாகப் அகங்காரம், மனம், புத்தி, பிராணன், இந்திரியங்கள் முதலியன தொழில் புரிகின்றன. பிராரப்த கர்மம் முடிவடையும் வரையில் இவ்விதத்தில் செயல்கள் நடைபெறுகின்றன. செயலுக்கு நான் கர்த்தா என்ற எண்ணம் யோகியினிடத்து இல்லை.


=> இரு விதமான கர்த்ருத்வம்:

கர்த்ருத்வம் என்பது நான் செயல் செய்கிறேன் என்ற பாவனையைக் குறிக்கிறது. இது பொதுவாக இரு வகைப்படும்.

(1) கர்த்தா - ஒருவன் அவனாக ஒரு காரியத்தை செய்வது.

(2) ஹேது கர்த்தா/காரயிதா - ஒருவன் மற்றொருவனை ஒரு காரியத்தை செய்விக்கத் தூண்டுவது.

ஒரு ஞானியானவன், பெரிய திட்டமிட்டு செயலைச் செய்வதில்லை. அகங்காரமில்லாமல், பலனை எதிர்பாராமல், கர்த்ருத்வமில்லாமல், உலக நன்மைக்காக மற்றும் உடலைக் கொண்டு செல்லுமளவு மட்டும் வினையாற்றுகிறான். மேலும் அவன் பொருட்டு மற்றவர்களை செயல் செய்யத் தூண்டும் காரயிதாவாகவும் அவன் இருப்பதில்லை

 

=> ஆத்மாவின் தன்மை:

யாரொருவனும் எல்லா செயல்களையும் முழுமையாக விட்டுவிட முடியாது என்பதை மூன்றாவது அத்தியாயத்தில்(3.5) பார்த்தோம் - ஹி கச்1சித்க்ஷணமபி ஜாது திஷ்ட2த்ய அகர்மக்ருத். ஆழ்ந்த உறக்கத்திலும் கூட சில அனிச்சை செயல்கள் உடல் மூலமாக செய்யப்படுகிறது. பதினெட்டாம் அத்தியாயத்திலும்(18.11), உடலுடைய ஒருவனுக்கு அனைத்து கர்மங்களையும் முழுமையாக விடுவதென்பது இயலாத ஒன்று என பகவான் கூறுவார். உயிரோடிருக்கும் வரை கர்மம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்

எனில், இங்கே ஒரு ஞானியானவன் அனைத்து கர்மங்களையும் துறக்கிறான் என ஏன் கூறுகிறார்? எல்லா செயல்களையும் முற்றிலுமாக கைவிட முடியாதெனில், ஞானி அதை எவ்விதம் செய்கிறான்? அதற்கான பதிலையும் பகவான் இங்கே கூறுகிறார்மனதளவில் கைவிடப்பட்டதாக, மநஸா ஸந்ந்யஸ்ய. ‘மநஸாஎனும் வார்த்தை அறிவினால் துறத்தல் எனும் அர்த்தத்தை, ஆத்மா எந்தச் செயலையும் செய்வதில்லை என்ற அறிவின் மூலம் துறத்தலை இங்கே தெளிவுபடுத்துகிறது. ஆத்மா ஒரு செயலையும் செய்வதில்லை சரி, ஒருவேளை உடல், மனம் மற்றும் புத்தி போன்றவற்றை செயலை செய்விக்கத் தூண்டுகிறது என ஒருவன் நினைக்கலாம். ஆனால் ஆத்மா செயலை செய்வதுமில்லை கரோதி, எதையும் செயல் செய்ய வழிநடுத்துவதும் இல்லை காரயதி. ஒரு ஞானி அறிவினால் அனைத்து செயலையும் துறந்தார் என கூறுவதன் பொருள் இதுவே. இந்த அறிவினால் அவன் தனது சொரூபமான பூரணத்தில், மகிழ்ச்சியில் நிறைவில் நிலைத்திருக்கிறான்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------------