ஞாயிறு, 12 டிசம்பர், 2021

ஞானகர்மஸந்யாஸ யோகம் 4.32 - 4.33

||4.32|| இவ்வித யக்ஞங்களுக்கு வேதமே மூலம்:

एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे। 

कर्मजान्विद्धि तान्सर्वानेवं ज्ञात्वा विमोक्ष्यसे ।। ३२ ।।

ஏவம் 3ஹுவிதா4 யஜ்ஞா விததா ப்3ரஹ்மணோ முகே2 ।।

கர்மஜாந்வித்3தி4 தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே ।। 32 ।।


ब्रह्मण:   ப்3ரஹ்மண:  வேதத்தின்   मुखे  முகே2  வாயிலில்   एवं   ஏவம்  இப்படிப்பட்ட   

बहुविधा: यज्ञा:   3ஹுவிதா4 யஜ்ஞா:  விதவிதமான சாதனைகள்/பலவித யாகங்கள்  

वितता:   விததா:  விவரிக்கப்பட்டிருக்கின்றன   तान् सर्वान्   தாந் ஸர்வாந்  அவையாவும்   

कर्मजान्   கர்மஜாந்   கர்மத்திலிருந்து உண்டானவைகளென்று   विद्धि   வித்3தி4  அறிக   

एवं ज्ञात्वा  ஏவம் ஜ்ஞாத்வா  இவ்விதம் அறிந்து   विमोक्ष्यसे    விமோக்ஷ்யஸே மோக்ஷமடைவாய்.


இவ்விதம் வேதத்தில் பலவித யாகங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. அவை யாவும் கர்மத்திலிருந்து உண்டானவைகளென்று அறிந்து மோக்ஷமடைவாயாக.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பிரம்மத்தின் முகத்தில் இங்ஙனம் பலவித வேள்விகள் விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் தொழிலிலே பிறப்பனவென்றுணர். இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்.


விளக்கம்:

இப்பகுதியில் விளக்கப்பட்ட பல்வேறு யாகங்களைப் பற்றி இங்கு தொகுத்துக் கூறுகிறார் பகவான். முந்தய ஆறு சுலோகங்களிலும் சாதனைகள் என்று அழைக்கப்படும் ஒழுக்கங்களை, வேள்விகளாக விவரித்திருந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த சுலோகத்தில் பகவான், இவைகள் அனைத்தும் கர்ம சொரூபம் என்கிறார்.

இந்த சுலோகத்திலுள்ளப்ரம்மஎன்ற சொல் வேதத்தைக் குறிக்கிறது. முற்பகுதியில் கூறப்பட்ட அனைத்து சாதனைகளுக்கும் வேதமே மூலம். வேதத்தில் இவைகள் குறித்த விரிவான விளக்கத்தைக் காண முடியும். இவைகள் அனைத்தும் கர்ம சொரூபமானது, அதாவது கர்மத்திலிருந்து உண்டாவதுதாந் ஸர்வாந் கர்மஜாந் வித்3தி4, என்கிறார் பகவான். உடல் ரீதியாக செய்யப்படும் செயல்களாக(காயிக-கர்ம) இருந்தாலும், வாய்வழியாக(வாசிக-கர்ம) அல்லது மனதினால் செய்யப்படுவதாக(மானஸ-கர்ம) இருந்தாலும் இவைகளனைத்தும் செயல் செய்பவனிடமிருந்து ஒரு குறிப்பிட்ட செயலாகப் பிறந்தவைகள்காயிக வாசிக மானஸ கர்ம ஜென்யாம். இதனாலேயே இதுகர்மஜாந்என அழைக்கப்படுகிறது


=> ஆத்மா செயல் செய்யும் கர்த்தாவாக முடியுமா?

கர்மஜாந்எனில் யார் இங்கு கர்த்தா, செயல் செய்பவன்? ஒழுக்கங்கள் கர்மத்திலிருந்து பிறந்தவைகள்(கர்மஜா) எனப் பார்த்தோம்; அதாவது ஆத்மாவிலிருந்து பிறவாதவை( ஆத்மஜா). இதன் பொருள் இவைகளனைத்தும் கரணங்களிலிருந்து(கருவிகள்) மட்டுமே தோன்றியவைகள்அந்தகரணாமாகிய மனம், பேச்சு உறுப்பாகிய வாய் எனும் புலன்(வாக் இந்திரியம்) மற்றும் செயலுறுப்பாகிய கர்மேந்திரியங்களிலிருந்து தோன்றியவைகள். மனம் மற்றும் மனம் சார்ந்து இயங்கும் மற்ற செயலுறுப்புகளிடமிருந்து உருவானதால் இங்கு கர்த்தா என்பது உடலும் மனமுமே(body-mind-sense complex) — காரிய-கரண-சங்கா3. இதையறிவதன் மூலம் ஒருவன் மோக்ஷத்தை அடைவதாக கிருஷ்ணர் இங்கு கூறுகிறார். எப்படி இது சாத்தியம்? இதனாலேயே இந்த சுலோகம் மிக சுவாரஸ்யமான ஒன்றாக மாறுகிறது. அதாவது வேதத்தில் கூறப்பட்டுள்ள இந்த கர்மங்களனைத்தும் உடல் உறுப்புகள், பேச்சின் உறுப்பு அல்லது மனதால் செய்யப்படும் பல்வேறு செயல்களால் பிறக்கின்றன என்பதை புரிந்துகொள்வதன் மூலம் ஒருவன் எப்படி முக்தியை அடைகிறான்?

இங்கு தெளிவாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய கருத்து என்னவெனில், இக்கர்மங்கள் அனைத்தும் ஆத்மாவிலிருந்து தோன்றவில்லை என்பதாகும். சுலோகம் 4.18-ல் சொல்லப்பட்டகர்மணி அகர்ம : பச்யேத்என்ற வாக்கியத்தை நினைவில் கொண்டுவந்து இந்த கேள்விக்கு விடை காண வேண்டும். இந்த விஷயத்தை தெளிவுபடுத்த சங்கரர் தனது பாஷ்யத்தில்கர்மஜாந்என்ற வார்த்தையைஅனாத்மஜாந்எனக் கூறி மெருகேற்றுகிறார். அனைத்து கர்மங்களும் அனாத்மாவிலிருந்து தோன்றியவைகள்தாந் ஸர்வாந் அனாத்மஜாந் வித்3தி4. உடல், மனம் மற்றும் இந்திரியங்கள் அனாத்மா. எனவேதான் சங்கரர் இங்குஅனாத்மஜாந்என்ற வார்த்தையை பிரயோகிக்கிறார். ஆத்மாவாகிய அறிபவனுக்கு, இந்த உடல் மனம் மற்றும் புலன்கள் அறியப்படும் பொருளாக இருப்பதால் இவைகளனைத்தும் அனாத்மா. எனவே இந்த ஒழுக்கங்கள் அனாத்மாவிலிருந்து தோன்றியவைகள் என்பதை அறிவதே இவைகள் ஆத்மாவிலிருந்து தோன்றவில்லை என்பதற்கு சான்றாக இருக்கிறது. இந்தப் பார்வையேகர்மணி அகர்ம தர்ஷணம்’, செயலிலும் செயலின்மையை பார்த்தல் என அழைக்கப்படுகிறது


=> செயல்பாடு, செய்பவன், மற்றும் செயலின் விளைவு:

செயல் செய்பவன் எனும் நிலை மறுக்கப்படும் போது, அந்தச் செயலும் அதனால் விளையும் பலனும் தானாகவே நீக்கப்படுகிறது. ஆத்மாவாகிய சுயத்தை செயலற்றவனாக(அகர்த்தா) அறிந்து, உடல் மற்றும் மனதை செயல் செய்பவனாக அறிந்து, ஒருவன்அசுபம்என கூறப்படும் கர்ம மற்றும் கர்ம பலத்திலிருந்து விடுபடுகின்றான். அசுபம் என்றால் மங்களமற்றது, நன்மையற்றது என்று பொருள். ஆகவே ஒருவன் புண்ணியம் மற்றும் பாபத்தை உள்ளடக்கிய இந்த மங்களமற்ற கர்மபலத்திலிருந்து விடுதலையடைகிறான்அசுபாத் கர்ம-பலாத் விமோக்ஷ்யஸே, என சங்கரர் இந்த சுலோகத்திற்கான தனது பாஷ்யத்தில் உரைக்கிறார். கர்ம-பலனே ஒருவனின் பிறப்பிற்கு காரணமாகிறது. பிறப்பினால் மீண்டும் கர்மம், கர்மத்தினால் மீண்டும் கர்ம-பலன், கர்ம-பலனினால் மீண்டும் பிறப்பு என சுழற்சி தொடர்கிறது. தன்னை செயல் செய்யாதவனாக அறிந்த ஒருவன் இச்சுழற்சியிலிருந்து விடுபடுகிறான்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||4.33|| சாதனைகள் பற்றிய தலைப்பை முடிவுரை செய்கிறார்:

श्रेयान्द्रव्यमयाद्यज्ञाज्ज्ञानयज्ञ: परन्तप  

सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते ।। ३३ ।। 

ச்1ரேயாந்த்3ரவ்யமயாத்3யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ: பரந்தப

ஸர்வம் கர்மாகி2லம் பார்த2 ஜ்ஞாநே பரிஸமாப்யதே ।। 33 ।। 


परन्तप  பரந்தப  எதிரிகளை வாட்டுபவனே  द्रव्यमयात् यज्ञात्   த்3ரவ்யமயாத் யஜ்ஞாத்  திரவியமயமான யாகத்தைவிட   ज्ञानयज्ञ:   ஜ்ஞாநயக்ஞ:  ஞானவேள்வி  श्रेयान्  ச்1ரேயாந்  மேலானது   पार्थ  பார்த2  பார்த்தா   सर्वं अखिलं कर्म   ஸர்வம் அகி2லம் கர்ம  எல்லா கர்மங்களும்/சாதனைகளும்    ज्ञाने   ஜ்ஞாநே  ஞானத்தில்    परिसमाप्यते   பரிஸமாப்யதே  முற்றுப்பெறுகிறது.


பரந்தபா, பொருளைக் கொண்டு செய்யும் யாகத்தை காட்டிலும் ஞானவேள்வி மேலானது. பார்த்தா, எல்லா கர்மங்களும் ஞானத்தில் முற்றுப்பெறுகிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பரந்தபா, திரவியத்தைக் கொண்டு செய்யப்படும் வேள்வியைக் காட்டிலும் ஞானவேள்வி சிறந்தது. பார்த்தா, கர்மமெல்லாம், முற்றிலும், ஞானத்தில் முடிவு பெறுகிறது.


விளக்கம்:

சாதனைகளைப் பற்றிய தலைப்பை இந்த சுலோகத்தில் முடிவுரை செய்கிறார். ஞானயக்ஞத்தை புகழ்வதன் மூலம் திரவிய யக்ஞத்தின் இயலாமையைச் சுட்டுகிறார். லெளகீகத்திலும்கூட ஓரளவுக்குமேல் செல்வம் ஒருவனுக்கு பயன்படாது. ஞானம் பெறுகின்றவளவு சாந்தியும் மோக்ஷமும் கைகூடும். ஆகவே எல்லா கர்மங்கள் மற்றும் சாதனைகளைக் காட்டிலும் ஆத்மஞானமே உயர்ந்தது. ஏனெனில் இந்த ஞானமும் இதன் பலனும் நித்தியமானது; மேலானது. ஏன் மேலானது? எனில், இந்த ஞானத்தினால் அனைத்தும் அடையப்படுகிறது. அதேசமயம், பந்தத்திற்குக் காரணமான அஹங்காரம், கர்த்ருதுவம்(செய்பவன் எனும் பாவனை),  போக்த்ருதுவம்(அனுபவிப்பவன் எனும் பாவனை) ஆகியவற்றை நீக்குகிறது.

எனவேதான் இங்கு பகவான் திரவிய யக்ஞத்தைக் காட்டிலும் ஞான-யக்ஞம் மேலானது(ச்1ரேயாந்) என்கிறார். எங்கெல்லாம் மேலானது என்ற சொல் உபயோகிக்கப்படுகிறதோ அங்கு உடனே ஒரு கேள்வி எழும், ‘எதை விட மேலானது?’. ஆனால் இங்கு உண்மையான ஒப்பீடு இல்லை. அதற்கு பதிலாக கிருஷ்ணர், இங்கு ஞான-யக்ஞம் என்றால் என்ன என்பதை சுட்டுவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.


=> ஞானம் என்பது ஒப்பீட்டு வரம்பினுள் வராதது:

இந்த சுலோகம் ஞான-யக்ஞத்தை மற்ற யக்ஞங்களோடு ஒப்பிடுவதாகக் கூறுவது பொருத்தமானதல்ல. ஏனெனில், ஞானம் கர்த்தா என்ற பாவனையை நீக்குவதன் மூலம் கர்மத்தையும், அதனால் விளையும் கர்ம-பலனையும் விழுங்கிவிடுகிறது. ஒன்றை இனியொன்றுடன் ஒப்பிட, அங்கு ஏதேனும் ஒன்று இருந்தாக வேண்டும். ஆனால் ஞானமோ கர்மத்தின் உண்மைத்தன்மையை நீக்கிவிடுவதால், திரவிய-யக்ஞமாக சொல்லப்பட்ட கர்மத்தை விட ஞான-யக்ஞம் மேலானது என எப்படிச் சொல்ல முடியும்

ஒப்பிடும் இரண்டு விஷயங்களும் ஒப்பீட்டு வரம்பிற்குள் இருக்கும்போதுதான் அனைத்து ஒப்பீடுகளும் சாத்தியமாகும். ஆனால் இங்கு ஞானமும் கர்மமும் இரண்டு வெவ்வேறு சத்தியத்தை சார்ந்தது. ஞானம் பாரமார்த்திக சத்தியத்தை கையாள்கிறது. கர்மமோ இந்த ஞானத்தினால் முழுவதுமாக விழுங்கப்படுகிறது. மேலும் முடிவான பலனின் அடிப்படையிலும் ஒப்பீடு சாத்தியமில்லை. கர்மங்களின் முடிவு வரையறைக்குட்பட்டது; ஞானத்தினால் அடையப்படுவது வரம்பற்ற நிலை. இருப்பினும், மொழிவரம்பின் காரணமாகவும், வேறுவிதமான சிறந்த வெளிப்பாடு இல்லாததாலும் இங்கு ஒப்பீட்டுக்காக பயன்படுத்தப்படும்ச்1ரேயாந்எனும் சொல் பிரயோகிக்கப்பட்டுள்ளது என கூறலாம்.

 

=> கர்மத்தின் முழுமையான அழிவு:

அனைத்திலும் உயர்ந்தது ஞான-யக்ஞம், ஏனெனில் ஞானம் எல்லா கர்மங்களையும் அழித்துவிடுகிறது; தீர்த்துவிடுகிறதுஸர்வம் அகி2லம் கர்ம ஜ்ஞாநே பரிஸமாப்யதே. இங்குஸர்வம் அகி2லம் கர்மஎன்பது மீதமில்லாமல் அனைத்து கர்மமும்; அதாவது ஞானத்திற்கு பின் அங்கு எதுவும் எஞ்சியிருக்கவில்லை என்பது பொருள். எந்தத் தடயமுமின்றி அனைத்து கர்மமும் இல்லாமற் போய்விட்டன. அனைத்தும் ஞானத்தில் கரைந்துவிட்டனஜ்ஞாநே பரிஸமாப்யதே. இது கர்மத்தின் கோணத்தில் விசாரிக்கப்பட்டது.

இதையே ஞானத்தின் அடிப்படையில் விசாரித்தால், ஆத்மா கர்மத்திற்குட்பட்டது அல்ல; அகர்த்தா. இந்த அறிவினால், சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம் மற்றும் ஆகாமி கர்மம் முதலிய எல்லா கர்மங்களும் ஞானத்தினால் கரைந்துவிடுகின்றன; தீர்க்கப்பட்டு விடுகின்றன. ‘நான் கர்மத்திற்குட்பட்டவன் அல்லஎன ஒருவன் புரிந்துகொள்ளும் போது, கணக்கில் திரட்டப்பட்ட அனைத்து சஞ்சித கர்மங்களிலிருந்து விடுதலையடைகிறான். ‘நான் அகர்த்தாஎன்ற அறிவினால் புதிய கர்மங்களும்(ஆகாமி) அவனுக்கு இல்லாமற் போகிறது. ‘நான் அபோக்தா; அனுபவிப்பவன் அல்லஎன புரிந்து, பிராரப்த கர்மத்திலிருந்தும் விலகிவிட்டான். உடல், மனம் மற்றும் புலன்களின் அடிப்படையில் பார்ப்பதற்குச் செயல் நடந்துகொண்டிருப்பதைப் போலத் தெரிந்தாலும், உண்மையில் அது அவனிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.   


=> கீழ்கண்ட கோணத்திலும் பொருள்விளக்கம் கொடுக்கப்படுகிறது:

சிலர் திரவிய யக்ஞமாக விளக்கப்பட்ட தியானம், யோகம், பிராணாயாமம், ஒழுக்க நியமங்கள் மற்றும் பூஜை போன்றவற்றையே இறுதி லக்ஷியமாக(சாத்4_ साध्य) கொள்கின்றனர். இவைகளனைத்தும் வரையறைக்குட்பட்ட பலன்களையே கொடுக்கவல்லவை; ஞானத்திற்காக மனதை தயார்ப்படுத்த வல்லவை. ஆனால் ஆத்மஞான யக்ஞம் என பகவானால் 4.24-ல் கூறப்பட்ட ஆத்மாவைப் பற்றிய சரியான அறிவே, மனித லக்ஷியமான முக்தியை அடைவிக்கக் கூடியது. ஆகவே அனைத்து சாதனைகளும் ஞானத்திற்கு வந்த பின்னரே இறுதிமுடிவை அடைகிறது


சாதனைகளின் வரிசையில் ஒரு படியிலிருந்து அடுத்ததிற்கு செல்லும்போது குற்ற உணர்வு தேவையில்லை. ஞானத்திற்காக முன்படியை விடுவதில் தவறில்லை. உதாரணமாக, ஒவ்வொரு மாதமும் பிரதோச பூஜைக்கு செல்வதை வழக்கமாக சிலர் கொண்டிருக்கலாம். பகவத் கீதை வகுப்பு கேட்க ஆரம்பித்தவுடன், ஒருகால் இவ்விரண்டும் ஒரே நேரத்தில் வந்தமைந்தால், ஞானத்திற்காக பூஜையை விடுவதில் தவறில்லை


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பணம் எவனுக்கு அடிமையோ அவன்தான் வாஸ்தவமான மனிதன். பணத்தை எப்படி உபயோகிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாதவர்கள் மனிதர்கள் என்ற பெயருக்கு அருகரல்லர்.

---------------------------------------------------------------------------------------------------------------------