புதன், 1 டிசம்பர், 2021

ஞானகர்மஸந்யாஸ யோகம் 4.30 - 4.31

||4.30|| ஆஹார நியம யக்ஞம்:

अपरे नियताहारा: प्राणान् प्राणेषु जुह्वति

सर्वेऽप्येते यज्ञविदो यज्ञक्षपितकल्मषा: ।। ३० ।। 

அபரே நியதாஹாரா: ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி

ஸர்வேऽப்யேதே யஜ்ஞவிதோ3 யஜ்ஞக்ஷபிதகல்மஷா: ।। 30 ।।


अपरे அபரே  சிலர்  नियताहारा:   நியதாஹாரா:  முறையாக உண்பவர்களாய்   

प्राणान्   ப்ராணாந்  பிராணன்களின் செயல்களை   प्राणेषु   ப்ராணேஷு  பிராணன்களில்   

जुह्वति  ஜுஹ்வதி  ஆஹுதியாக கொடுக்கிறார்கள்  यज्ञविद:   யஜ்ஞவித3:  யக்ஞத்தை அறிந்த   

एते सर्वे अपि  ஏதே ஸர்வே அபி  இவர்கள் அனைவரும்   यज्ञ-क्षपित-कल्मषा:   யஜ்ஞ-க்ஷபித-கல்மஷா:  யக்ஞங்களால் பாபத்தை நீக்கியவர்களாகிறார்கள்.


முறையாக உண்பவர்களாய் சிலர் பிராணனில் பிராணனை ஆஹுதி செய்கிறார்கள். யக்ஞத்தை அறிந்த இவர்கள் அனைவரும் யக்ஞங்களால் பாபத்தை நீக்கியவர்களாகிறார்கள்.   


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள். இவ்வனைவரும் வேள்வி நெறியுணர்ந்து வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.


விளக்கம்:

தங்களது உணவு முறையை ஒழுங்குபடுத்துபவர்கள் அல்லது அளந்து உண்பவர்கள்நியதாஹாரா:என்று அழைக்கப்படுகிறார்கள். ‘ஆஹாரஎன்பது வயிற்றுக்குள் செல்லும் எதையும் குறிக்கிறது - ‘ஆஹ்ரியதே இதி ஆஹார:’ — புலன்களால் அனுபவிக்கப்படும் பொருள்கள், அதாவது திட உணவு, பானம் முதலியன.

இவ்வகையான ஆஹார ஒழுக்கத்தை சாதனையாக பின்பற்றுபவர்கள், தங்களது அளவுகளை நிர்வகிக்கும் பொது விதி ஒன்று உள்ளது

पूरयेदशनेनार्धं तृतीयमुदकेन तु

वायो: सज्चरणार्थं तु चतुर्थमवशेषयेत् ।। 

வயிற்றின் பாதி அளவு(50%) திடப்பொருட்களாலும், கால் பகுதி(25%) நீர் முதலிய திரவப் பொருட்களாலும் நிரப்பப்படவேண்டும். மீதமுள்ள கால் பகுதி(25%) காற்றின் இயக்கத்திற்கு காலியாக விடப்பட வேண்டும்; அதாவது வயிற்றின் கொள்ளளவில் நான்கில் ஒரு பங்கு காலியாக இருக்க வேண்டும்



=> உணவுக் கட்டுப்பாடு எனும் சாதனை:

இந்த குறிப்பிட்ட ஒழுக்கம், ஒரு யக்ஞமாகப் பார்க்கப்படுவதற்கு காரணம், உணவு விஷயத்தில் பொதுவாகக் காணப்படும் இருவகைப் போக்கு இங்கு தடுக்கப்படுகிறது. ஒன்று எப்போதும் அளவுக்கு மீறி அதிகமாக சாப்பிடும் ஆர்வமும், இரண்டாவதாக உணவு சுவையாகவோ பிடித்தமானதாகவோ இல்லாத பட்சத்தில் அதை முற்றிலும் உண்ணாமல் புறக்கணிக்கும் பழக்கமும் இங்கு ஒழுங்குபடுத்தப்படுகிறது. இவர்கள் மூன்று விதமான ஆஹார நியமத்தை பின்பற்றுகிறார்கள்:

1. பரிமிதம்(परिमित) - அளவாக சாப்பிடுதல்

2. மேத்4யம்(मेध्य) - தூய்மையானது

3. ஹிதம்(हित) - ஆரோக்கியமானது(நல்லது)

ஆகவே அதிகமாக உண்ணும் அல்லது உண்ணவே விரும்பாத ஆசைகளுக்கு இடம்கொடுக்காமல், அளவிடப்பட்ட உணவை உட்கொள்வதன் மூலம் இது வேள்வியாக மாறுகிறது. இத்தகையவர்கள்நியதாஹாரா:என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பசி மற்றும் தாகத்தை உருவாக்கும் செரிமான அமைப்பிற்கு, உணவு குறித்தான தங்களது ஆசைகளை ஆஹுதியாக வழங்குகிறார்கள்ப்ராணாந் ப்ராணேஷு ஜுஹ்வதி. இன்னும் பசியாக உணர்ந்தாலும், குறிப்பிட்டளவு உட்கொண்ட பிறகு, உட்கொள்ளுதல் நிறுத்தப்படுகிறது. மேலும் உணவுவேளைகளுக்கு இடையில் பசி ஏற்பட்டபோதிலும் தின்பண்டங்கள் மற்றும் சிற்றுண்டி முதலியவைகள் எடுத்துக்கொள்வதும் தவிர்க்கப்படுகிறது. இவ்விதமாக செரிமாணத்தை நிகழ்த்தும் பசி எனும் அக்னிக்கு, உணவு குறித்த ஆசைகள் ஆஹுதியாக வழங்கப்படுகின்றன.   

எந்தவொரு மதம் மற்றும் ஆன்மீக சம்பந்தமான சாதனைகளும்(ஒழுக்கங்கள்) யக்ஞமாகக் கருதப்படும். ஒவ்வொருவரும் அவரவர்களின் தேவைக்கேற்ப ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள்; அத்தகையவர்கள்யஜ்ஞவித3:என்று அழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு பின்பற்றப்படும் சாதனைகளில் பிரார்த்தனை முக்கியத்துவம் பெறுகிறது. பிரார்த்தனையில்லாமல், ஆரோக்கியத்திற்காக மட்டுமே பின்பற்றப்படும் ஒழுக்கம் யக்ஞமாகாது. உதாரணமாக உடல் வியாதியின் காரணமாக பின்பற்றப்படும் உணவுக்கட்டுப்பாடு மற்றும் ஏரோபிக்ஸ், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள் யக்ஞமாகாது.


=> இவ்வித வேள்விகளை மேற்கொள்வதன் பலன்

இந்த சுலோகத்தில் உள்ளகல்மஷா:என்ற சொல்லுக்குஅசுத்தங்கள்என்று பொருள்; எல்லாவிதமான மனதின் குறைபாடுகளும் இதில் அடங்கும், அந்த-கரண-அசுத்தி. விருப்பு-வெறுப்புகள் மற்றும் அதன் அழுத்தங்களின் காரணமாக மனதில் எழும் அனைத்து நிலையற்ற தன்மையும் கல்மஷங்கள். சாதனைகள் எனும் இவ்வகையான யக்ஞங்களின் வாயிலாக இந்த கல்மஷங்கள் அழிக்கப்படுகின்றன, க்ஷபித.

இச்சாதனைகளின் மூலம் பெறப்பட்ட முடிவுகளிலிருந்து இவர்களுக்குயஜ்ஞ-க்ஷபித-கல்மஷா:என்ற பெயர் வழங்கப்படுகிறது; அதாவது மனதின் அசுத்தங்களை யக்ஞத்தினால் அழித்தவர்கள். மேற்கூரிய எந்த வகையான ஒழுக்கத்தை பின்பற்றியும் அந்த-கரண-சுத்தி அடையப்படுகிறது. எந்த ஒன்றும் மற்றதை விட உயர்ந்ததோ அல்லது தாழ்ந்ததோ அல்ல. அவரவர்களின் தேவைக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்றாற்போல தனியொருவனால் சாதனைகள் பின்பற்றப்படுகிறது

இச்சாதனைகள் ஒவ்வொன்றும் கீழ்கண்ட விதத்திலும் ஒருவனை ஒழுங்குபடுத்தி தூய்மைபடுத்துவதாகப் பார்க்கப்படுகிறது.



தூய்மைப்படுத்துவது

யக்ஞம்

அன்னமய கோசம்

ஆஹார நியமம்

பிராணமய கோசம்

பிராணாயாமம்

மனோமய கோசம்

திரவிய யக்ஞம்(தானம்)

விக்ஞானமய கோசம்

சுவாத்யாய யக்ஞம்

அனந்தமய கோசம்

ப்ரம்ம ஞான யக்ஞம்


---------------------------------------------------------------------------------------------------------------------

||4.31|| யக்ஞத்தினால் உண்டாகும் பலன் மற்றும் அதைச் செய்யாதிருப்பதின் விளைவு:

यज्ञशिष्टामृतभुजो यान्ति ब्रह्म सनातनम्

  नायं लोकोस्त्ययज्ञस्य कुतोऽन्य: कुरुसत्तम ।। ३१ ।। 

யஜ்ஞசி1ஷ்டாம்ருதபு4ஜோ யாந்தி ப்3ரஹ்ம ஸநாதநம்

நாயம் லோகோऽஸ்த்யயஜ்ஞஸ்ய குதோऽந்ய: குருஸத்தம ।। 31 ।।


कुरुसत्तम   குருஸத்தம  குருவம்ச சிரேஷ்டனே   

यज्ञ-शिष्ट-अमृतभुज:   யஜ்ஞ-சி1ஷ்ட-அம்ருதபு4:  யக்ஞத்தில் எஞ்சியிருக்கும் அமிர்தத்தைப் புசிப்பவர்கள்  

सनातनम् ब्रह्म   ஸநாதநம் ப்3ரஹ்ம  நித்தியப் பொருளாகிய ப்ரம்மத்தை  यान्ति யாந்தி அடைகிறார்கள்   अयज्ञस्य  அயஜ்ஞஸ்ய  யாகம் செய்யாதவனுக்கு  अयं लोक:  அயம் லோக:  இவ்வுலகம்   

अस्ति   அஸ்தி  இல்லை  अन्य:  அந்ய:  மற்றது  कुत:  குத:  ஏது?    


குருவம்ச சிரேஷ்டனே, யக்ஞத்தில் எஞ்சும் அமுதுண்போர் அழியாப் பொருளாகிய ப்ரம்மத்தை அடைகிறார்கள். யாகம் செய்யாதவருக்கு இவ்வுலகே இல்லையென்றால் அவ்வுலகேது


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர் என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள். வேள்வி செய்யாதோருக்கிவ்வுலகமில்லை. அவர்களுக்குப் பரலோகமேது, குரு குலத்தாரில் சிறந்தோய்?


விளக்கம்:

எந்தவகையான யாகத்திற்கும் பலன் அவசியம் உண்டு. இங்குஅம்ருத’, அமிர்தம் என்பது பிரசாதம், அதாவது பலனைக் குறிக்கிறது. வேள்வியில் மிஞ்சிய, ‘சி1ஷ்ட’, அமிர்தத்தை உண்பவர்கள் இங்குயஜ்ஞசி1ஷ்டாம்ருதபு4:என்று அழைக்கப்படுகிறார்கள். இத்தகைய சமய மற்றும் ஆன்மீக ஒழுக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் என்ன பெறுகிறார்கள்? மனத் தூய்மையும் மன உறுதியும் அடையப் பெறுகிறார்கள். முமுக்ஷுக்களாக இருக்கும் பட்சத்தில் இந்த பலன், அவர்கள் அடைய விரும்பும் சுயத்தைப் பற்றிய அறிவை அடைய உதவுகிறது

இங்கு யாகத்தில் மீதமான உணவு, பொருள் மற்றும் காலத்தை உபயோகிப்பவன் அடையும் பலன் குறித்துப் பேசப்படுகிறது. பொதுவாக ஒரு யாகத்தின் பலனாக கிடைக்கும் புண்ணியம், இப்பிறவியிலோ அல்லது அடுத்த பிறவிகளிலோ பலனைக் கொடுக்கிறது. ஆனால் இந்த யக்ஞங்கள்(3.25-3.30) கர்மயோகத்தை பற்றி பேசுவதாலும், மேலும்யோகிந:என்ற வார்த்தை 3.25-ல் பயன்படுத்தப்பட்டதாலும் இந்த சுலோகங்களினால் குறிப்பிடப்படுபவர்கள் கண்டிப்பாக முமுக்ஷுக்களே. ஆகவே மோக்ஷத்தில் இச்சை கொண்ட இவர்கள், ஆக்கப்பூர்வமாக விசாரிக்கக்கூடிய திடமான மனதைப் பலனாகப் பெறுவார்கள்; அதாவது அவர்களின் ஆத்மஞானத்தை குறித்த விசாரம் பலனளிக்கும். அவர்கள் நித்தியமான ப்ரம்மத்தைப் பெறுவார்கள் - யாந்தி ப்3ரஹ்ம ஸநாதநம் .


=> விசாரம் என்பது காலத்தைக் குறிக்கிறது:

  இங்குயாந்திஎன்ற சொல்லுக்கு, ‘(ப்ரம்மத்திடம்) செல்கிறார்கள் அல்லது (ப்ரம்மனை) அடைகிறார்கள்என்று அர்த்தம். இவ்விரண்டும் காலத்தைக் குறிக்கிறது. அதாவது ப்ரம்ம என்பது ஒருவனின் சொரூபமாக இருந்தாலும், இங்குப்ரம்மனை அடைவான்என்று சொல்லப்படுவதிலிருந்து இது குறித்து விசாரம் செய்யப்பட வேண்டும் என்பதையும் மேலும் அதற்கு தகுதியான காலம் தேவைப்படுகிறது என்பதையும் குறிக்கிறது. சங்கரர் தனது பாஷ்யத்தில் இது குறித்து தெளிவான விளக்கத்தை அளிக்கிறார். அதாவதுஅடைதல்எனும் வினைச்சொல், இங்கு ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதைக் குறிக்கப் பயன்படுகிறது. ஆகவே இது நேரத்தை உள்ளடக்கியது. மேலும் இந்த விசாரணையின் மூலம், முமுக்ஷுக்கள் நித்திய ப்ரம்மனைப் பெறுவார்கள்(யாந்தி ப்3ரஹ்ம ஸநாதநம்) என்பதைக் குறிப்பிடுகிறார்.

   முன் சுலோகங்களில் விளக்கப்பட்ட சாதனைகளை வேள்விகளாக செய்ததன் பலனாக கிடைக்கப்பெற்ற, தூய்மையான மற்றும் நிலையான மனதைக் கொண்டு இவர்கள் விசாரத்தில் ஈடுபட்டு ப்ரம்ம ஞானத்தை அடைகிறார்கள். ஆகவே ஒருவன் ப்ரம்மனிடம்செல்லஅல்லதுஅடையஒரே வழி இதுதான். மேலும் ஆத்மாவே ப்ரம்மனாக இருக்கின்ற காரணத்தினால் ப்ரம்மத்தை அறிந்தவன், ப்ரம்மத்தை அடைந்தவன் ஆகின்றான்.


=> ப்ரம்மத்தை அறிந்தவன் ப்ரம்மத்தை அடைந்தவனாக எங்ஙனம் ஆகிறான்?

ஒரு விஷயத்தை அறிந்தவன் பொதுவாக அந்த விஷயமாக மாறுவதில்லை. உதாரணமாக, நுண்ணுயிரியலை அறிந்தவன் அந்த நுண்ணுயிரிகளாக மாறுவதில்லை. வரலாற்றை அறிந்தவன் வரலாறாகவும், விண்வெளியை பயின்றவன் விண்வெளிக் கோள்களாகவும் மாறுவதில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அறிந்தவன் எப்போதும் தனக்குத் தெரிந்தவற்றிலிருந்து வேறுபடுகிறான். அதேசமயம், புகழ்பெற்ற பத்தாவது மனிதனின் கதையில், பத்தாவது மனிதனை அறிந்தவன் பத்தாவது மனிதனாகிறான்.

கதைச் சுருக்கம்: குருகுலமொன்றில் சில சிஷ்யர்கள் பக்கத்து ஊரை சுற்றிப்பார்க்க விரும்பி தங்கள் குருவிடம் அதற்காக அனுமதி கோருகின்றனர். யாரேனுமொருவர் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்திச் செல்வதாக இருந்தால் அனுமதி அளிப்பதாக குரு கூறுகிறார். சிஷ்யன் ஒருவன் முன்வந்து தான் அப்பொறுப்பை ஏற்பதாக உறுதிமொழியளிக்கிறான். குரு அவர்களை வரிசையில் நிற்கும்படிச் செய்து ஒன்று, இரண்டுஎன எண்ண ஆரம்பித்தார். மொத்தம் பத்து என எண்ணி முடித்தார். தலைமை சிஷ்யனிடம்இந்த பத்து என்ற எண்ணிக்கை குறையாது அனைவரும் குருகுலம் வந்தடைவது உன் பொறுப்புஎன்கிறார். அவனும் அதை ஏற்றுக் கொள்கிறான்.

மறுநாள் அனைவரும் தங்களது பயணத்தை தொடங்கினர். வழியில் அவர்களனைவரும் ஒரு ஆற்றை நீந்திக் கடந்தனர். அக்கரைக்குச் சென்றபின், மேலும் அப்பயணத்தை தொடரும் முன் ஆட்களின் எண்ணிக்கை சரிபார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்து, தலைமை சிஷ்யன் எல்லோரையும் வரிசையாக நிற்கும்படிச் சொன்னான். அனைவரும் வரிசையில் நின்றனர். அவனும் எண்ண ஆரம்பித்தான், ‘ஒன்று, இரண்டுஒன்பது’. ஒன்பது பேர் தான் இருந்தனர். திடுக்கிட்ட அவன் மீண்டும் ஒருமுறை மறுபுறமிருந்து எண்ணிப் பார்த்தான், ‘ஒன்று, இரண்டுஒன்பது’. குரு எண்ணிய போது பத்து பேர் இருந்தனர். ஆனால் இப்போது ஒருவன் குறைகிறான். ஆற்றை நீந்திக் கடக்கும் போது அவன் மூழ்கிவிட்டானோ என்று எண்ணி அனைவரும் பதறினர். சுற்றியும் தேடினர். தலைமை சிஷ்யன் பதட்டத்தில் அழ ஆரம்பித்தான். அப்போது அவ்வழியே வந்த ஒரு பெரியவர் நடந்ததை கேட்டு விஷயத்தைப் புரிந்து கொண்டார். அப்பெரியவர் அனைவரையும் வரிசையில் நிற்குமாறு பணித்தார். வரிசையில் நின்ற அவர்களை எண்ண ஆரம்பித்தார், ‘ஒன்று, இரண்டுஒன்பது, பத்து’. மொத்தம் பத்து பேர் இருந்தனர். ஆச்சரியத்தில் திகைத்த சிஷ்யன் எப்படியென்று வினவினான். அதற்கு அப்பெரியவர், ‘அந்த பத்தாவது மனிதன் நீதான். உன்னைத்தான் நீ தொலைத்தாக எண்ணி தேடிக்கொண்டிருந்தாய்என்றார்.

இக்கதையில் பத்தாவது மனிதனை அறிந்தவனே அந்த பத்தாவது மனிதனாகிறான். ஆகவே இது போன்ற சில நிகழ்வுகளில், அறிபவரும் அறியப்படவேண்டிய பொருளும் ஒன்றாகவே இருக்கும் பட்சத்தில் அப்பொருளை பற்றிய அறிவே அதை அடைவிக்கிறது. ‘நீயே அந்த பத்தாவது மனிதன்என்ற அறிவே அந்த பத்தாவது மனிதனை அடைவிக்கிறது. இங்கு ஒருவனின் சுயமே, ஆத்மாவே ப்ரம்மன். ஆகவே ப்ரம்ம ஞானத்தின் தனித்தன்மை என்னவெனில், ப்ரம்மத்தை அறிந்தவன் ப்ரம்மனாக ஆகிறான்.


=> புகழ்தலும் நிந்தித்தலும்:

கீதை முழுதும் பரவிக் காணப்படும் ஒரு பொதுவான உபதேசமுறை இந்த சுலோகத்திலும் செயல்படுத்தப்பட்டுள்ளதுபுகழ்தலும்(ஸ்துதி) அதைத் தொடர்ந்து விமர்சனமும்(நிந்தா). சுய அறிவும் சாஸ்திரமும் புகழப்படுகிறது. குருவும் மாணவர்களும் புகழப்படுகிறார்கள். மோக்ஷ பலனும் கூட பாராட்டப்பட்டது.

நிந்தனை அல்லது விமர்சனம் செய்யப்படுவதன் நோக்கம் பின்வரும் சில காரணங்களுக்காக மட்டுமேயன்றி யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல. ஆத்மஞானத்திற்கு முரண்பாடான விஷயங்களில் சிஷ்யர்களுக்கு வைராக்கியத்தை உருவாக்கவும், தன்னறிவை அடைவதற்கான சரியான ஆர்வத்தை அதிகப்படுத்தி அதற்கு தேவையான அர்ப்பணிப்பை அளிக்கவும் இவ்வகையான நிந்தனைகள் உதவுகின்றன. மந்தமான உற்சாகத்துடன் பயில வந்தவர்களின் அறியும் ஆவலைத் தூண்ட இந்தஸ்துதி-நிந்தாமுறை பயன்படுத்தப்படுகிறது

இந்த சுலோகத்தில், முதலில் பலனைக் கூறுவதன் மூலம் புகழ்தல் நடந்தது —  ‘அவர்கள் நித்திய ப்ரம்மனை அடைகிறார்கள்’. இதன் பொருள், இத்தகைய சாதனைகள், தியாகங்கள் மற்றும் பிரார்த்தனைகள் போன்றவை ப்ரம்மஞானத்தைப் பெற மறைமுகமாக உதவுகின்றன என்பதாகும். இதனால் இவ்வகைச் சாதனைகளில் ஏற்கனவே சிறிதேனும் ஆர்வமிருப்பவர்கள், இப்பலனை மனதில் கொண்டு அதனுடைய வீரியத்தை அதிகரிப்பார்கள். அதுபோலவே இதைச் செய்யாவிட்டால் அடையப்படும் நிலையை முன்வைப்பதன் மூலமும் அதன் வீரியம் அதிகப்படுத்தப்படுகிறது. இந்த சுலோகத்தின் இரண்டாவது வரியில் இது செய்யப்படுகிறது. முன் சுலோகங்களில் சொல்லப்பட்ட ஒழுக்கங்கள் எதையும் கடைபிடிக்காதவர்களை, ‘அயஜ்ஞ’, யக்ஞத்தை செய்யாதவர்கள், என கூறி அவர்கள் எதையும் பெறுவதில்லை என உரைக்கிறார்.


=> ஒழுக்கம் மற்றும் சரியான பாவனையின் முக்கியத்துவம்:

அனைவராலும் பகிரப்படும் இந்த உலகம், எளிமையான இன்பம் முதல் முதிர்ச்சியான மகிழ்ச்சி வரை கொடுக்கவல்ல சில விஷயங்களைக் கொண்டுள்ளது. ஆனால் ஒழுக்கமும் சரியான எண்ணங்களும் இல்லாத ஒருவனால் இதை முறையாக அனுபவிக்க முடியாதுஅயம் லோக: நாஸ்தி. சரியான அணுகுமுறை இல்லாமல் வாழ்க்கையில் எதிர்வரும் தடங்கல்கள், கசப்பான சூழ்நிலைகள் மற்றும் மோசமான நிகழ்வுகள் போன்றவைகளைக் கடந்து செல்வதென்பது கடினமான ஒன்று. ஒழுக்கமில்லாதவனுக்கு பொருள் சம்பந்தப்பட்ட லெளகீக வெற்றியும் கூட சாத்தியமில்லை. எல்லா இன்பங்களுக்கும் ஒருவித மனம் தேவை. ஒருவனிடம் செல்வமிருந்தபோதிலும் சரியான மனம் இல்லாமல் அதை எப்படி அனுபவிக்க முடியும்? அதேசமயம் பணமில்லாமல் சரியான மனமிருந்தால், அந்த நட்சத்திரங்கள் முதல் பனித்துளி வரை அனைத்தும் மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியதே. எனவே, பொதுவாக இவ்வுலகம் அனைவருக்கும் அளிக்கும் சில சந்தோஷங்கள் கூட, இவர்களுக்கு கிடையாது எனும்போது, வேறு உலகத்துக்கான சாத்தியம்(அந்ய: குத:) எங்கே? அது சாத்தியமில்லை. மீண்டும் அவன் மனிதனாகப் பிறப்பதற்கான உத்திரவாதமுமில்லை.

இந்த உலகம் வழங்குவதை பெறத் தகுதியில்லாதவர்கள், எப்படி வேறொரு உலகத்தை பெற முடியும்? — அந்ய: குத:. பிரார்த்தனை, சிறப்பு தியானங்கள், சிறந்த வாழ்க்கைமுறை, நல்ல செயல்கள் போன்ற ஒழுக்கங்களினால் மட்டுமே சொர்க்கம் முதலிய வேறு உலகங்கள் சாத்தியம். அப்படியிருக்கையில் நித்தியமான ப்ரம்மத்தை அடைவது இவர்களுக்கு இன்னும் அதிக தொலைவில் உள்ளது

---------------------------------------------------------------------------------------------------------------------