||4.9|| முக்திக்கான சாதனம் மற்றும் பலன்:
जन्म कर्म च मे दिव्यंमेवं यो वेत्ति तत्त्वत: ।
त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जन ।। ९ ।।
ஜந்ம கர்ம ச மே தி3வ்யமேவம் யோ வேத்தி தத்த்வத: ।
த்யக்த்வா தே3ஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந ।। 9 ।।
अर्जन அர்ஜுந அர்ஜுனா य: ய: யார் मे மே என்னுடைய दिव्यं தி3வ்யம் திவ்யமான
जन्म कर्म च ஜந்ம கர்ம ச பிறப்பையும் செயலையும் एवम् ஏவம் இங்ஙனம் तत्त्वत: தத்த்வத: உள்ளபடி वेत्ति வேத்தி அறிகிறானோ स: ஸ: அவன் देहं தே3ஹம் தேஹத்தை त्यक्त्वा த்யக்த்வா விட்டு
पुन: புந: மறுபடியும் जन्म ஜந்ம ஜன்மத்தை न एति ந ஏதி அடைகிறதில்லை
माम् एति மாம் ஏதி என்னை அடைகிறான்.
அர்ஜுனா, இங்ஙனம் எனது திவ்யமான பிறப்பையும் செயலையும் உள்ளபடி அறிபவன் உடலை நீத்து மறுபிறப்பெய்துவதில்லை. என்னையே அடைகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.
விளக்கம்:
பொதுவாக ‘தி3வ்ய’ என்பது இவ்வுலக விஷயமல்ல என்ற பொருளில், பரலோக அல்லது மேலான எனப் பொருள் கொண்டது. கிருஷ்ணரின் பிறப்பு வேறெந்த பிறப்பையும் போலல்லாமல் அசாதாரணமானது எனும் விதத்தில் ‘தி3வ்யம் ஜந்ம’ என்று குறிப்பிடப்படுகிறது. சங்கரர் இங்கு ‘ஐஸ்வரம்’ எனும் வார்த்தையை தனது பாஷ்யத்தில் சேர்ப்பதன் மூலம் கண்ணனின் பிறப்பு என்பது ஜீவனின் பிறப்புக்கு சமமானதல்ல; அது ஈஷ்வரனுடையது என தெளிவுபடுத்துகிறார். மேலும் கண்ணனின் செயல்களும் வேறெந்த கர்மத்தையும் போல, தனிப்பட்ட விருப்பத்திலிருந்தோ அல்லது பாப புண்ணியத்தின் காரணமாகவோ உருவானது அல்ல என்றும் இங்கே நமக்குக் கூறப்படுகிறது. அதாவது தி3வ்யம் கர்ம, ஐஸ்வரம் கர்ம.
பகவானின் இந்த மேலான பிறப்பை மித்யா ரூபமாகவும், அதர்மத்தை அழித்து உலகை காக்கும் அவருடைய கர்மத்தையும் உள்ளபடி அறிபவன் மீண்டும் பிறப்பதில்லை. பிறவாத பரம்பொருள், பிறப்பவன் போன்று தனது மாயா சக்தியால் காட்டிக்கொள்கிறான். கர்மமற்ற அவதாரமூர்த்தியானவன் ஸத்-கர்மங்கள் யாவையும் செய்துவருபவனாகத் தென்படுகிறான். இவ்வுண்மையைத் தெளிவாக அறியும் ஆத்மசாதகர்கள் அங்ஙனமே தாங்களும் இவ்வுலகில் வாழ்ந்து பிறவிப் பெருங்கடலை நீந்த வல்லவராகின்றனர்.
=> உள்ளபடி அறிதல்:
‘தத்த்வத:’ - அதை அவ்விதமே அறிதல். மந்த வெளிச்சத்தில் தெரியும் கயிற்றை, பாம்பாக புரிந்து கொள்ளாமல் யதார்த்தமான கயிறாகவே அறிதல். ஈஷ்வரனைக் குறித்த விபரீதமான ஞானத்தினால் பயம் கொள்ளாமல், மெய்ப்பொருளை உள்ளபடி அறிதல். அதாவது ‘மித்யா ரூபத்தை தெளிவாகப் புரிவதன் மூலம் ஜீவ-ஈஷ்வர ஐக்கியத்தை அறிபவர்கள்’ என்பது பொருள்.
இரண்டாவது அத்தியாயத்தில் பகவான் மெய்ப்பொருள், ‘ஸத்(सत्)’, எந்நேரத்திலும் மாறப்போவதோ அல்லது இல்லாமற் போவதோ கிடையாது என்றும் ‘அஸத்(असत्)’, மித்யா, எல்லா நேரத்திலும் இருக்கப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். ஆகவே கிருஷ்ணரின் உடல் வியாவஹாரிகம், அனுபவ ரீதியாக உணரப்படுவதோ அல்லது பிராதிபாசிகம், அகநிலையின் கற்பனைத் தோற்றமோ, இவற்றில் எந்த வகையாக இருப்பினும் அது மித்யா, முற்றிலும் உண்மையானது அல்ல. அதாவது உடலை மித்யா என்றும் ஆத்மாவை சத்தியம் என்றும் தெரிந்தவர், தெளிவாகத் தெரிந்தவர் - தத்த்வத: வேத்தி. அவர் உண்மையான பிறப்பு மற்றும் உண்மையான கர்மம் என எதுவுமில்லை என்பதை அறிந்தவராவர். மேலும் கிருஷ்ணர், ஈஷ்வரன், தன்னிலிருந்து வேறானவர் அல்ல, ‘நானே பரமேஸ்வரனாக இருக்கிறேன்’ என்பதை யதார்த்தத்தில் அறிந்தவன் ஞானி. மெய்ப்பொருளை அறிய ஈஷ்வரனை அறிவதும், அந்த ‘ஸத்’ என்பது ஆத்மாவாகவே இருப்பதால் பரமேஷ்வரனை அறிய தன்னை அறிவதும் அவசியம். உண்மையில் தனது சுயசொரூபத்தை அறிந்து கொள்வதே பரமேஷ்வரனை, ப்ரம்மனை அறிய ஒரே வழி. தன்னறிவை அடைவதன் மூலம் உடல் மீதுள்ள ‘நான்’ என்ற அபிமானத்தை துறந்தவன், மோக்ஷத்தை அடைந்தவனாக மீண்டும் பிறப்பதில்லை. அவன் ஜீவன்முக்தன் என்றழைக்கப்படுகிறான், வாழும்போதே விடுவிக்கப்பட்டவன்(जीवन् सन् मुक्त:). இந்த ஞானி தன்னை கர்த்தா அல்ல என அறிவதால் அவனுக்கு கர்மமில்லை; ஆகவே ஆகாமி கர்மம் உருவாவதில்லை; சஞ்சித கர்மத்திலிருந்தும் விடுபடுவதால், மற்றொரு பிறப்பை தொடங்கத் தேவையான புண்ணியம் மற்றும் பாபம் என எதுவுமில்லை. ஒருவன் தன்னைத்தானே செயல் செய்பவனாக எடுத்துக் கொள்ளும் போதுதான் அது எதிர்வரும் பிறப்புகளுக்கு வழிவகுக்கிறது.
ஞானியின் பிராரப்த கர்மம் என்னவாகிறது? சராசரி மனிதனாக இருந்தாலும் சரி, ஜீவன்முக்தனாக இருந்தாலும் சரி, பிராரப்த கர்மம் என்பது பொதுவானதே. ஆனால் ஜீவன்முக்தனோ உடம்பில் இருந்து வாழ்ந்தபோதிலும், சரீர அபிமானமில்லாமல், தன்னியல்பில் நிலைத்தவனாக, ஸ்திதப்ரஞனாக பிராரப்தத்தை அனுபவித்துக் கடக்கிறான்.
=> மரணத்திற்கு பிறகு ஞானிக்கு என்ன நடக்கிறது?
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பகவான், ‘அந்த ஞானி என்னையே அடைகிறான்; நானாகவே ஆகிறான் — மாம் ஏதி’ என்கிறார். அதாவது பிராரப்தம் முடிந்த பின், உடலானது விடப்பட்டு அவன் விதேஹ முக்தியை அடைகிறான். ஸ்தூல உடல் ஸ்தூல பஞ்ச பூதங்களுடனும், நுண்ணிய உடல் சூக்ஷம பஞ்ச பூதங்களுடனும் கலந்துவிடுவதால், ஆத்மா வேறொரு சூக்ஷம தேஹத்தை பற்றாமல் ப்ரம்மமாகவே இருக்கிறது. ஜீவன் சென்றுவிட்டான்; எஞ்சியிருப்பது ஈஷ்வரன் மட்டுமே. ஈஷ்வரனாக இருக்கும் ப்ரம்மன் மட்டுமே. ஜீவன் மற்றும் ஈஷ்வரன் இரண்டும் இருவேறு தத்துவமல்ல; ஒன்றே என அறியாதவனுக்கு இந்த ஐக்கியம் சாத்தியமல்ல. இறப்பின்போது, அவனது ஸ்தூல உடல் மட்டும் விடப்பட்டு, நுண்ணிய உடலானது வேறொரு சரீதத்தை அடைய, பிறப்புச் சக்கரம் சுழல்கிறது. ஜீவ-ஈஷ்வர ஐக்கியம் கண்டிப்பாக ஞானத்தின் அடிப்படையில் அடையப்படுகிறது. அதன் பலனாக அவன் மறுபிறப்பெய்துவதில்லை — புந: ஜந்ம ந ஏதி, என்கிறார் பகவான்.
‘ஆதியில் இந்த ஞானத்தை எப்படி விவஸ்வானுக்கு நீங்கள் கொடுத்திருக்க முடியும்?’ என்ற அர்ஜுனனின் கேள்வியை பயன்படுத்தி கிருஷ்ணர் இங்கு ஆத்மாவின் தன்மையை மீண்டும் வெளிப்படுத்துகிறார். துக்கத்தின் மூலகாரணம் மற்றும் அதை எவ்வாறு கடப்பது என்பதே கீதையின் மையக்கருத்தாகும். ஒரே தொடர்ச்சியாக மையவிஷயத்தை போதித்த பிறகு, மற்ற பல தலைப்புகளையும் கிருஷ்ணர் விவாதித்தார். இங்கே அர்ஜுனனின் சமீபத்திய கேள்விக்கு பதிலளித்தவராக மீண்டும் அந்த நூலைப் பிடித்து, ‘துயரப்பட தேவையில்லாத ஒன்றிற்காக வருத்தப்படுகிறாய் — அசோ1ச்யாந் அந்வசோ1ச: த்வம்’ என கூறுவதாக ஆத்மஞானத்தை அடைவதற்கான சாதனைகளைப் பற்றிய உபதேசத்தைத் தொடர்கிறார்.
---------------------------------------------------------------------------------------------------------------------||4.10|| சாதனைகளின் படிகள்:
वीतरागभयक्रोधा मन्मया मामुपाश्रिता: ।
बहवो ज्ञानतपसा पूता मद्भावमागता: ।। १० ।।
வீதராக3ப4யக்ரோதா4 மந்மயா மாமுபாச்1ரிதா: ।
ப3ஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்3பா4வமாக3தா: ।। 10 ।।
वीत-राग-भय-क्रोधा: வீத-ராக3-ப4ய-க்ரோதா4 ஆசை, அச்சம், கோபம் நீங்கியவனாய்
मन्मया: மந்மயா என் மயமானவர்கள் माम् उपाश्रिता: மாம் உபாச்1ரிதா: என்னை சரணடைந்தவர்களாய் ज्ञान-तपसा ஜ்ஞாந-தபஸா ஞானம் எனும் தவத்தினால் पूता: பூதா: தூய்மையடைந்தவர்களாய்
बहव: ப3ஹவ: பலர் मद्भावम् மத்3பா4வம் என் இயல்பை अागता: ஆக3தா: அடைந்தார்கள்.
ஆசை, அச்சம், கோபம் நீங்கியவனாய், என் மயமாய், என்னை சரணடைந்தவர்களாய், ஞானம் எனும் தவத்தினால் தூய்மையடைந்து பலர் என் இயல்பை அடைந்தார்கள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய், என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து ஞானத்தவத்தால் தூய்மை பெற்று என்னியல்பு எய்தினோர் பலர்.
விளக்கம்:
=> சாதனைகளின் படிகள்:
என்ன சாதனம் செய்து, ஞானியர் ஈஷ்வரனைத் தெரிந்து கொள்ள வல்லவர்களானார்கள் என்பதற்கான விடையாக பகவான் இந்த சுலோகத்தைப் பகர்கிறார்.
* வீத-ராக3-ப4ய-க்ரோதா4 — ஆசை, அச்சம், சினம் முதலிய அழுக்குகளை நீக்குதல் முதல்படி.
‘ராக’ - இன்பத்தைக் கொடுக்கும் பொருளிடத்திலுள்ள பற்று மற்றும் அதையடையும் ஏக்கம்; அதில் ஒட்டிக்கொள்ளுதல். விருப்பம் குடிகொண்ட இடத்தில் கூடவே வெறுப்பு எனும் குணமும் வந்துவிடும். இயற்கையிலேயே இவையிரண்டும் பந்தப்படுத்தும் சக்தியுடன் கூடியவை.
‘பய’ - விரும்பும் பொருள் அழிந்துவிடுமோ என பற்றுள்ள இடத்தில் வரும் அச்சம்; இது ஆசையின் விளைவு. ஒவ்வொரு ஆசையும் விரும்பத்தகாத மற்றும் அறியப்படாத பயத்துடன் கைகோர்த்துள்ளது. நாம் எதிர்பார்ப்பதுபோல விஷயங்கள் நடக்காது என தெளிவாக தெரிவதால் தோல்வி பயம் எப்போதும் இருக்கிறது.
‘க்ரோத:’ - விருப்பமான ஒன்றிற்கு தடையாக இருப்பவர்களிடம் வரும் கோபம்.
இவைமூன்றும் நீங்கிய மனம்தான் முதல்படி. கர்மயோகம் என்ற சாதனையின் பலனாக இந்த மனத்தூய்மை கிடைக்கிறது. தார்மீக ஜீவனம் - தர்மப்படி வாழ்வதால் கிடைக்கும் பயன் இந்த சித்த-சுத்தி. விருப்பு-வெறுப்பின் மீது கவனம் செலுத்தி அதை சரியான அணுகுமுறையுடன் கையாளும் போது, ஒருவன் ஒப்பீட்டளவில் அதிலிருந்து விடுபடுகிறான்.
* மந்மயா — என் மயமாக இருப்பவர்கள்; மாம் உபாச்1ரிதா: — என்னை சரணடைந்தவர்கள். பக்தி மற்றும் உபாசனை எனும் சாதனையின் மூலம் பகவானிடம் நமக்குள்ள உறுதியையும் நம்பிக்கையையும் மேம்படுத்துதல் இரண்டாம் படி. அதன்மூலம் ஈஷ்வரனைச் சரணடைதல்.
* ஜ்ஞாந-தபஸா பூதா: — ஞானம் எனும் தவத்தினால் தூய்மையடைதல். அறியாமையை மனதில் வைத்துக்கொண்டு அடையும் மனத்தூய்மை அதிக காலம் நிலைக்காது. கர்மயோகத்தினால் அத்தீய-குணங்கள் சிறிது அமைதிப்படுத்தப்பட்டிருக்கும் அவ்வளவே. ஆகவே அறியாமையிலிருந்து விடுதலை அடைவதே முழுமையான தூய்மை.
பூதா: — சு1த்3த4(शुद्ध). சுயசொரூபமே பரமாத்மா. ஜீவனுக்கும் ஈஷ்வரனுக்கும் உண்மையில் எவ்வித வேறுபாடுமில்லை; உபாதியினால் வேறுபாடு இருப்பதை போலத் தெரிகிறது. இந்த ‘போல’ என்பது மித்யாவையும், வேறுபாடு இல்லாதது ஸத்-தையும் குறிக்கும். வேறுபாடு இல்லாத இந்த பார்வை, ஜீவேஷ்வர அடையாளம், அபேத-புத்தி எனப்படும். ‘நீயே அதுவாக இருக்கிறாய் - தத்வமஸி(तत्वमसि)’ எனும் உபநிஷத் வாக்கியம், ஜீவ-ஈஷ்வர ஐக்கியத்தை பிரதிபலிக்கிறது. குரு உபதேசத்தின் வாயிலாக இந்த ஞானத்தை அடைதல் சிரவணம் என்றும், பகுப்பாய்வு செய்து சந்தேகம் நீக்குதல் மநநம் என்றும் மற்றும் சிந்தனையின் மூலம் இந்த அறிவில் நிலைத்தல் நிதித்யாசனம் என்றும் அழைக்கப்படும். இது முயற்சியினாலும் தியாகத்தினாலும் சாத்தியமாகிறது. அதாவது சிரவணம், மநநம் மற்றும் நிதித்யாசனம் எனும் சாதனை இங்கு ஞானதபஸ் என கூறப்படுகிறது. அறிவெனும் அக்னியின் மூலம் தூய்மையடைதலை குறிக்கிறது.
* ப3ஹவ: மத்3பா4வம் ஆக3தா: — பலர் என் இயல்பை அடைந்தார்கள். இந்த அறிவு புதிதான ஒன்றல்ல; ஆரம்பத்திலிருந்தே இருந்தது; பரம்பரையாக வந்துகொண்டிருப்பது; பலர் அவரை இந்த முறையில் அடைந்தார்கள் என கிருஷ்ணபகவான் கூறுகிறார். கர்மயோகம் என்ற சாதனையினால் மனத்தூய்மையை அடைந்து, உபாசனம் மூலம் பகவானை எப்போதும் நினைத்துக் கொண்டு, சரணடைந்து, ஞானயோகம் மூலம் அறியாமையை நீக்கி ஈஷ்வரனுடன் ஐக்கியம் ஆகின்றான்.
=> மந்மயா, மாம் உபாச்1ரிதா: — இவ்விரு சொற்களையும் வேறொரு கோணத்தில் பொருள்படுத்தலாம். ஈஷ்வரனும் நானும் வேறல்ல என்ற ஐக்கிய உபாசனை மூலம் தன் மனதை வலுப்படுத்தி(மந்மயா), சிரவணத்தின் மூலம் ஞானத்தை அடைந்து(ஜ்ஞாந-தபஸா), ஞான நிஷ்டையை அடைந்தவர்களாக(மாம் உபாச்1ரிதா:) என் சொரூபத்தை எய்தினர்(மத்3பா4வம் ஆக3தா:). ஆகவே சம்சாரத்தில் சிக்கி உளன்று கொண்டிருக்கும் ஒரு ஜீவன் சாதனைகளின் மூலம் தன்னை படிப்படியாகத் தூய்மைப்படுத்தி ஈஷ்வரனுடன் ஒன்றாகின்றான்.
=> பூரணமான தூய்மைக்கும் ஒப்பீட்டளவிலான சுத்திக்கும்(शुद्धि) உள்ள வேறுபாடு:
ஒப்பீட்டளவிலான(relative) தூய்மை என்பது வளர்ச்சி மற்றும் மனமுதிர்ச்சிக்கான ஒரு செயல்முறை. இதில் ஒழுக்கம், விழிப்புணர்வு, அர்ப்பணிப்பு மற்றும் பிரார்த்தனை ஆகியவை அடங்கும். அத்தகைய சுத்திகரிப்பு வாழ்க்கை ஒரு செயல்முறையாக இருப்பதால், அந்நிலையை அடைய ஒரு குறிப்பிட்ட காலம் எடுக்கும். மாறாக பூரணமான சுத்திகரிப்பு என்பது ஒரு செயல்முறையாக இருக்க முடியாது, ஏனெனில் தூய்மையற்றதை எந்த நடைமுறைக்கு உட்படுத்தியும் தூய்மையானதாக மாற்ற முடியாது. சுயம் என்பது ஏற்கனவே பூரணமான தூய்மையுடன் கூடியது.
இங்கு தூய்மை என்பது விருப்பு-வெறுப்பிலிருந்தும், புண்ணிய-பாபத்திலிருந்தும் உண்மையில் எல்லாவற்றிலிருந்தும் சுதந்திரமடைவது. இத்தூய்மை ஆத்மாவின் இயல்பாகும். ஆத்மா எல்லா தன்மையிலிருந்தும் விடுபட்டதாக, நிர்குணமாக, அனைத்துவிதமான செயல்களிலிருந்தும் விடுபட்டதாக, அகர்த்தாவாக இருப்பதால் அது எப்போதும் தூய்மையானது. முழுமையான தூய்மையுடன் கூடியது. நித்தியமான ஆத்மனின் இத்தன்மையை அறிந்தவர்களும் அவ்வண்ணமே நித்தியமான பூரணத் தூய்மையை அடைந்தவர்கள், பூதா:. அத்தகையவர்கள் — மத்3பா4வம் ஆக3தா: — அவர்கள் மீண்டும் என்னையே வந்தடைகிறார்கள், என்னிடமே திரும்புகிறார்கள்.
=> எல்லோருமே ஈஷ்வரனை அடைகிறார்களா?
இங்கு கிருஷ்ணர் ‘ப3ஹவ: - பலர்’ என்ற வார்த்தையை உபயோகிப்பதிலிருந்து, அனைவருமே பகவானை அடைவதில்லை. சிலர் மட்டுமே அவரிடம் திரும்பி வருகிறார்கள் என்று அர்ஜுனன் கருதலாம். ‘பலர்’ எனும் சொல் பன்மையாக இருப்பதால் மூன்றிலிருந்து தொடங்கி எத்தனை ஜீவர்களையும் குறிக்கலாம். சமஸ்கிருத மொழியில் மூன்று வகையாக எண்ணிக்கை குறிக்கப்படும். ஒருமை, இரட்டை மற்றும் பன்மை. பன்மை மூன்று மற்றும் மூன்றை விட அதிகமானதைக் குறிக்கும். உண்மையில் மூன்றோ, லட்சமோ, கோடியோ அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தாலும், அது ஒரு வரையறுக்கப்பட்ட எண் என்பது இங்கு புரிந்துகொள்ளப்பட வேண்டியது. ஆகவே அனைவரையும் தன்னிடம் வர அனுமதிக்காதது ஏன் என அர்ஜுனன் கேட்பானாகில் அதற்கு கண்ணனின் பதிலாக வருவது அடுத்த சுலோகம்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
ஈஷ்வரனிடம் வித்தை, அவித்தை என்ற இரண்டும் உள்ளன. வித்யாமாயையானது மனிதனை ஈஷ்வரனிடம் சேர்க்கும். அவித்யாமாயையோ அவனை ஈஷ்வரனிடமிருந்து புறம்பே போகச்செய்யும். ஞானம், பக்தி, வைராக்யம், பூததயை இவையெல்லாம் வித்யாமாயையின் தோற்றங்களாம். இவைகளின் உதவியைக் கொண்டுதான் ஒருவன் ஈஷ்வரனை அடையமுடியும்.
-------------------------------------------------------------------------------------