||3.13|| வாழ்க்கைக்கு தக்கது எது? தகாதது எது?
यज्ञशिष्टाशिन: सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषै: ।
भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात् ।। १३ ।।
யஜ்ஞசி1ஷ்டாசி1ந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பி3ஷை: ।
பு4ஞ்ஜதே தே த்வக4ம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத் ।। 13 ।।
यज्ञशिष्टाशिन: யஜ்ஞசி1ஷ்டாசி1ந: யாகத்தில் மிஞ்சியதை உண்கிற सन्त: ஸந்த: சான்றோர் सर्वकिल्बिषै: ஸர்வகில்பி3ஷை: எல்லா பாபங்களிலிருந்தும் मुच्यन्ते முச்யந்தே விடுபடுகிறார்கள்
तु து ஆனால் ये யே யார் अात्म-कारणात् ஆத்ம-காரணாத் தங்கள் பொருட்டு
पचन्ति பசந்தி சமைக்கிறார்களோ ते पापा: தே பாபா: அந்த பாவிகள் अघं அக4ம் பாவத்தை
भुञ्जते பு4ஞ்ஜதே உண்கிறார்கள்.
யாகத்தில் எஞ்சியதை புசிப்பவர்கள் எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். ஆனால் தங்கள் பொருட்டு சமைக்கும் பாபிகள் பாபத்தை புசிக்கிறார்கள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர் எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள். தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள் பாவத்தை உண்ணுகிறார்கள்.
விளக்கம்:
இங்கு யக்ஞம் என்பது கர்மயோகத்தை குறிக்கிறது. யாகங்கள், வழிபாடுகள், பிரார்த்தனைகள் அல்லது ஒருவனின் கடமைகள் என அனைத்து செயல்களும் எப்படி வேள்வியாக மாறுகிறது என பார்த்தோம். அடுத்த அத்யாயத்தில் இக்கருத்தை பகவான் மேலும் விளக்க இருக்கிறார்.
பேரண்டத்தின் கூறுகளாக விளங்கும் பல்வேறு சக்திகள் தனித்தனியாக எடுத்துக்கொள்ளப்படும் போது கடவுளர்களாக அல்லது தேவர்களாக, ஈஷ்வரனின் அம்சமாக பார்க்கப்படுகிறது. முந்தய சுலோகத்தில் இப்படிப்பட்ட தேவதைகளை வழிபடுவதன் மூலம் இஷ்டமான போகத்தை அடைவீர்களாக என கூறப்பட்டது. கைம்மாறு செய்யாமல் சுகிப்பவன் திருடன் அல்லது ஏமாற்றுக்காரன் என்றார் பகவான். இங்கு எப்படிப்பட்டவன் திருடன் ஆவதில்லை என்பதை விளக்குகிறார்.
நம் அன்றாட வாழ்வில் மற்றவர்களுக்கு தீங்கிழைக்காத கர்மங்கள் சாத்தியமில்லை. உயிர் வாழத் தேவையான செயல்களில் ஈடுபடும் போது, குறைந்த பட்சம் உணவு உண்ணவும் கூட மற்ற உயிரினங்களுக்கு கெடுதல்களைச் செய்ய வேண்டியிருக்கும். நம்மை பாதுகாத்துக் கொள்ளுதல், தூய்மைப்படுத்துதல், நடத்தல் வாயிலாக தாவரங்கள், விலங்குகள், பூச்சி வகைகள் முதலியவற்றை அழிக்க நேரிடலாம். நம் நலனுக்காகச் செய்யப்படும் இவ்வித செயல்களில் ஒரு குறிப்பிட்ட அளவு அதர்மம் இருக்கத் தான் செய்கிறது. இவ்வாறு தெரிந்தோ தெரியாமலேயோ நடந்த பாபங்களுக்கு பலனாக துக்கம் வரலாம். இதை சமன்படுத்தும் விதத்தில் பஞ்ச மஹா யக்ஞங்கள் செய்யப்படுகின்றன.
=> பஞ்ச மஹா யக்ஞம்:
இரண்டு வகையான வாழ்க்கை முறையை, ப்ரவ்ருத்தி மார்க்கம், நிவ்ருத்தி மார்க்கம் என பார்த்தோம். நிவ்ருத்தி மார்க்கத்தை மேற்கொள்ளும் சந்யாசிகள் புலனடக்கம், மன அடக்கம், மெளனம், விரதம் முதலிய தர்மங்களைப் பின்பற்றுகின்றனர். ப்ரவ்ருத்தி மார்க்கத்தில் இருப்பவர்கள், கர்மயோகிகள். இவர்கள் பஞ்ச மஹா யக்ஞத்தை முக்கிய தர்மமாகப் பின்பற்றுகின்றனர்.
(1) தேவ யக்ஞம்:
கடவுள் வழிபாடு; இஷ்ட தேவதையை முறைப்படி நாள்தோறும் வணங்குதல் வேண்டும். ஒவ்வொரு நாளும் பிரார்த்தனையுடன் தொடங்கி பிரார்த்தனையுடன் முடிய வேண்டும். இதன் பலனாக மன அமைதி, தோல்வியை தாங்கும் சக்தி, இறைவனிடம் நம்பிக்கை ஆகியவைகள் அதிகரிக்கிறது. இறைவனிடம் கொள்ளும் நம்பிக்கையே ஈஷ்வரனிடமிருந்து வந்த வேதத்திலும், குருவிடமும் சிரத்தையை மேம்படுத்தும்.
(2) பிரம்ம யக்ஞம் / ரிஷி யக்ஞம்:
உலக நன்மையின் பொருட்டு சான்றோர்கள், ரிஷிகள் சிறந்த சாஸ்திரங்களை இயற்றி வைத்திருக்கின்றனர். அவர்கள் கொடுத்த தெய்வநெறி நூல்களை முறையாக ஆராய்வதும், மற்றவர்களுக்கு எடுத்து ஓதுவதும் ரிஷி யக்ஞம். வேதம் ஓதுவது என்ற அத்யயனமே பிரம்ம யக்ஞம் ஆகிறது.
(3) பித்ரு யக்ஞம்:
நம் முன்னோர்களை நினைவு கூர்வதும், அவர்களுக்கான தர்ப்பணம் முதலிய கடமைகளைச் செய்தல் பித்ரு யக்ஞம். அவர்கள் எவ்வுலகில் எந்நிலைமையில் இருப்பினும் இன்புற்றிருப்பார்களாக, என்று அவர்களைக் குறித்து நித்தமும் நல்லெண்ணம் எண்ணுதல் வேண்டும். உயிரோடிருக்கும் பெற்றோர்களுக்கு நாள்தோறும் பணிவிடை செய்வதும் பித்ரு யக்ஞமே.
(4) மனுஷ்ய யக்ஞம்/ நரயக்ஞம்:
நம்மை நாடிப் பசித்து வந்தோர்க்கு செய்யும் விருந்தோம்பல், மற்ற மனிதர்களுக்கு செய்யும் உதவி, அவர்களது பிணியை நீக்குதல், கல்வி அளித்தல், பணம் பொருள் அறிவு காலம் இவற்றில் நம்மால் இயன்றதைக் கொடுத்து அவர்களின் வாழ்க்கையைப் பண்படுத்த உதவுதல் போன்றவை மனுஷ்ய யக்ஞத்தில் அடங்குகின்றன.
(5) பூத யக்ஞம்:
மனிதர்களல்லாத மற்ற உயிரினங்களுக்கும், பிராணிகளுக்கும் தன்னிடமுள்ள உணவு பொருள்களை சிறிதளவாவது சுயநலமின்றி தியாக மனப்பான்மையுடன் கொடுத்து உதவுவது, மரம் செடிகொடிகளைப் பாதுகாப்பது போன்றவை பூத யக்ஞம்.
=> கர்ம யோகி அடையும் பயன்?
இவ்விதமாக பஞ்ச மஹா யக்ஞத்தின் வாயிலாக பிறருக்கு பகிர்ந்த பின் எஞ்சியதை உண்பவர்கள் கர்மயோகிகள். இதன் மூலம் பாபத்திலிருந்து, அதாவது மோக்ஷத்தை அடைய தடையாக உள்ளவற்றிலிருந்து விடுதலை அடைகின்றான்.
தனது விருப்பத்திற்காக மட்டும் சமைத்து, மற்றவர்களுக்கு பகிராமல் புசிப்பவனை இங்கு பாவி(பாபா:) என்கிறார் பகவான். அதாவது மனத் தூய்மைக்கான கர்மத்தில் ஈடுபடாத அவன், மோக்ஷத்திற்கு வாய்ப்பில்லாமல் சம்சாரத்திலேயே இருப்பான் என்று பொருள்.
=> பாவனையின் முக்கியத்துவம்:
இங்கு குறிப்பிடப்படும் யஜ்ஞசி1ஷ்டாசி1ந: என்பது யாகத்தில் மிஞ்சியதை உண்பவனைக் குறிக்கிறது. இன்றளவில் அன்றாட வேள்விகள் நடைமுறையில் இல்லையெனினும் இறைவனுக்காக படைக்கும் பாவனை தொடர்கிறது. உண்பதற்கு முன் ‘ப்ரம்மார்ப்பணம் ப்ரம்மஹவி: …’ என உணவை பிரார்த்தனையுடன் கடவுளுக்கு படைத்து பிறகு அது பிரசாதமாக உண்ணப்படுகிறது. இது யாகத்தில் எஞ்சியதை புசிப்பவனுக்குச் சமமாகிறது. இதனால் அன்றாடம் இழைக்கும் எல்லா விதமான சிறிய பாவங்களிலிருந்து (ஸர்வகில்பி3ஷை:) ஒருவன் விடுபடுகிறான்(முச்யந்தே). ஆகவே பாவனையே முக்கியத்துவம் பெறுகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------||3.14|| பிரவிருத்தி சக்கரம்:
अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भव: ।
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञ: कर्मसमुद्भव: ।। १४ ।।
அன்னாத்3ப4வந்தி பூ4தாநி பர்ஜந்யாத3ன்னஸம்ப4வ: ।
யஜ்ஞாத்3ப4வதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்3ப4வ: ।। 14 ।।
अन्नात् அன்னாத் அன்னத்திலிருந்து भूतानि பூ4தாநி உயிர் வகைகள்(ஸ்தூல சரீரம்)
भवन्ति ப4வந்தி உண்டாகின்றன पर्जन्यात् பர்ஜந்யாத் மழையிலிருந்து
अन्न-सम्भव: அன்ன-ஸம்ப4வ: உணவு தோன்றுகிறது यज्ञात् யஜ்ஞாத் யக்ஞத்திலிருந்து
पर्जन्य: பர்ஜந்ய: மழை भवति ப4வதி உண்டாகிறது यज्ञ: யஜ்ஞ: யக்ஞம்
कर्म-समुद्भव: கர்ம-ஸமுத்3ப4வ: கர்மத்திலிருந்து உண்டாகிறது.
உணவிலிருந்து உயிர்கள் உண்டாகின்றன. மழையிலிருந்து உணவு தோன்றுகிறது. யக்ஞத்திலிருந்து மழை உண்டாகிறது. யக்ஞம் கர்மத்திலிருந்து உண்டாகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அன்னத்தால் உயிர்கள் சமைகின்றன. மழையால் உணவு தோன்றுகிறது. மழை வேள்வியால் ஆகிறது. வேள்வி செய்கையினின்று பிறப்பது.
விளக்கம்:
=> ஜகத் சக்கரம்:
அன்னத்திலிருந்து உயிர்கள் உண்டாகின்றன என்பதை நேரடியாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆகவே ‘மனிதர்களால் உட்கொள்ளப்பட்ட உணவிலிருந்து(भुक्तात्-பு4க்தாத் அன்னாத்)’ எனும் பொருளில் சங்கரர் தனது பாஷ்யத்தில் குறிப்பிடுகிறார். உணவு மழையினால் உண்டாகிறது. மழை யக்ஞத்தினால் உண்டாகிறது.
இங்கு யக்ஞம் என்பது முறைப்படி கர்மம் செய்தலால் அல்லது கர்மயோகத்தினால் உண்டாகும் புண்ணியத்தைக் குறிக்கிறது. அறச் செயல்புரிந்து வருபவர் நல்லார் ஆகின்றனர். சுயநலமின்றி செய்யப்படும் அவர்களின் கர்மங்களினால் உண்டான பலன் சூக்ஷம வடிவெடுக்கிறது. இதை அதிருஷ்ட பலன் அல்லது அபூர்வம் என அழைப்பர். இத்தகைய புண்ணிய கர்மங்களினால் மழை உண்டாகிறது. அறத்துப்பாலுக்கு முகப்பில் வான்சிறப்பை வள்ளுவர் வைத்ததின் உட்கருத்து இதுவே. நல்ல மனமுடையவர் மழை வேண்டுமென்று விரும்பினால் மழை பெய்யும். சிலரினுடைய நற்செயல்களின் பலனினாலும், வழிபாடுகளாலும் மழை அனைவருக்கும் கிடைக்கிறது. வழிபாடு நடைபெறவில்லையெனில் மழை வராது என்பது இங்கு பொருளல்ல. நிபந்தனையின்றி இயற்கையானது எப்பொழுதும் தனது கடமையை செவ்வனே செய்யும். ஆனால் முன் சுலோகங்களில் பார்த்தது போல ஈஷ்வரனின் அங்கமாக திகழும் இவ்வளங்களை அங்கீகரிக்காமல் உபயோகிப்பது திருட்டுக்கு ஒப்பானது. ஆகையால் நம் கடமையை செவ்வனே செய்வதனால் உண்டாகும் புண்ணியத்தினால் சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான அளவு மழை பொழிகிறது. முறையாக மழை பொழியும்போது அதிலிருந்து உணவு தோன்றுகிறது. உணவிலிருந்து உயிரினங்களின் ஸ்தூல உடல் தோன்றி வளர்கிறது. உடலிலிருந்து செயல் உருவாவதால் இது ஒரு சக்கரமாக மாறுகிறது.
** உடல் —> கர்மம்(செயல்) —> யக்ஞம்(புண்ணியம்) —> மழை —> உணவு —> உடல்
----------------------------------------------------------------------------------------------------------------------||3.15|| எப்படிப்பட்ட கர்மம் புண்ணியத்தைக் கொடுக்கிறது:
कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम् ।
तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम् ।। १५ ।।
கர்ம ப்3ரஹ்மோத்3ப4வம் வித்3தி4 ப்3ரஹ்மாக்ஷரஸமுத்3ப4வம் ।
தஸ்மாத்ஸர்வக3தம் ப்3ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டி2தம் ।। 15 ।।
कर्म கர்ம கர்மம் ब्रह्मोद्भवं ப்3ரஹ்மோத்3ப4வம் வேதத்திலிருந்து உதித்ததாக
विद्धि வித்3தி4 தெரிந்து கொள் ब्रह्म ப்3ரஹ்ம வேதம் (பிரம்மா)
अक्षर-समुद्भवम् அக்ஷர-ஸமுத்3ப4வம் அழிவில்லாததாகிய பரமாத்மாவிடமிருந்து உண்டானது
तस्मात् தஸ்மாத் ஆகவே सर्वगतं ஸர்வக3தம் எங்கும் நிறைந்துள்ள ब्रह्म ப்3ரஹ்ம வேதம்
नित्यं நித்யம் எப்பொழுதும் यज्ञे யஜ்ஞே யக்ஞத்தில் प्रतिष्ठितम् ப்ரதிஷ்டி2தம் நிலைபெற்றது.
கர்மம் வேதத்திலிருந்து தோன்றியதென அறிந்து கொள். வேதம் பரமாத்மாவிடமிருந்து உண்டானது. ஆகையால் எங்கும் நிறைந்துள்ள வேதம் எப்பொழுதும் யக்ஞத்தில் நிலைபெற்றுள்ளது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர். பிரம்மம் அமிர்தத்தில் தோன்றுவது. ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம் எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.
விளக்கம்:
கர்மத்தைப் பற்றிய அறிவு(கர்ம), அதாவது எது புண்ணியத்தை கொடுக்கும் கர்மம், எது பாபத்தை கொடுக்கும் கர்மம் என்னும் அறிவு, வேதத்திலிருந்து தோன்றியது(ப்3ரஹ்மோத்3ப4வம்). இங்கு ப்ரம்ம எனும் சொல் பரப்ரம்மத்தை குறிப்பதாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? ஏனெனில் சுலோகத்தில் இந்த ப்ரம்ம, அழியாத அதாவது பிறப்பு மற்றும் இறப்பை கடந்த ஒன்றிடமிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஆகவே ப்ரம்ம எனும் சொல் பரப்ரம்மத்தை குறிக்கமுடியாது. மேலும் ப்ரம்ம என்பதற்கு வேதம் என்ற பொருளும் இருப்பதை எந்தவொரு சமஸ்கிருத அகராதியிலும் காணலாம்.
=> வேதம் அபெளருஷேயம்:
வேதமானது பரமாத்மாவாகிய ஈஷ்வரனிடமிருந்து(அக்ஷர) தோன்றியது. அபெளருஷேயம்(अपौरुषेय) -> மனிதர்களுடைய புத்தியிலிருந்து தோன்றாதது; குறையற்றது என்பது இதன் பொருள்.
=> மனிதனின் புத்தியிலிருந்து வரும் பொழுது உண்டாகும் குறைகள்(பெளருஷேய தோஷங்கள்):
1. ப்4ரம:(भ्रम:) - அவரவரின் புத்தியிலுள்ள தவறான நிச்சயங்கள்
2. ப்ரமாத3:(प्रमाद:) - கவனக் குறைவாக இருப்பது
3. கரண அபாடவ:(करण अपाटव:) - மனம், புத்தி இயற்கையாகவே தோஷத்துடன் கூடியது.
4. விப்ரலிப்ஸா(विप्रलिप्सा) - திட்டமிட்டே ஏமாற்றும் புத்தி
மனிதனின் புத்தியிலிருந்து வெளிப்படும் போது அந்த அறிவானது மேற்கூரிய இந்த நான்கு குறைகளில் ஏதேனும் ஒன்றைக் கொண்டதாக இருக்கும். வேத சாஸ்திரம் இறைவனிடமிருந்து தோன்றிய காரணத்தினால் குறையற்றது. அபெளருஷேயம்.
வேதமானது மனிதனின் முக்கிய குறிக்கோளாக விளங்கும் நான்கு புருஷார்த்தத்தைப் பற்றிய அறிவைக் கொடுக்கிறது; பொருள் - அர்த்த(अर्थ), இன்பம் - காம(काम), அறம் - தர்ம(धर्म), வீடுபேறு - மோக்ஷம்(मोक्ष). இவ்வாறு மனிதனுக்கு தேவையான அனைத்து அறிவையும் பகர்வதால் வேதமானது சர்வக்ஞனாக, அனைத்தையும் அறிந்ததாக, எங்கும் நிறைந்ததாகக் கருதப்படுகிறது.
सर्वार्थप्रकाशकत्वात् ब्रह्म = वेद: सर्वगतम् ।
எப்பொழுதும் நம் வழிபாட்டில் செயலில்(யஜ்ஞே) இருப்பதனால், வேதமானது எங்கும் பரவியிருக்கிறது(ஸர்வக3தம் ப்3ரஹ்ம).
=> வேதம் = இயற்கை,
இங்கு ப்ரம்ம அல்லது வேதம் என்பது முக்குணமயமாய், கால தேச வர்த்தமான மயமாய் உள்ள இயற்கையே என சுவாமி சித்பவானந்தர் தனது உரையில் கூறுகிறார். தோன்றியுள்ள அனைத்தும் இயற்கையின் கூறுபாடுகளாதலால் அதை எங்கும் நிறைபொருள் என்கிறார். சர்வக்ஞனாகிய பரமாத்மாவிடமிருந்து இந்த வேதம் அல்லது இயற்கையானது உதித்துள்ளது. பிரபஞ்சம் முழுவதும் கர்மசொரூபமாக இருப்பதால் கர்மம் இந்த இயற்கையினிடமிருந்து வந்ததாகிறது. இனி, இக்கர்மத்தை சிறந்த முறையில் கையாளுமிடத்து இது யக்ஞம் என்ற பெயர் பெறுகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------||3.16|| கர்ம யோகத்தின் முடிவுரை:
एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयतीह य: ।
अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति ।। १६ ।।
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய: ।
அகா4யுரிந்த்3ரியாராமோ மோக4ம் பார்த2 ஸ ஜீவதி ।। 16 ।।
पार्थ பார்த2 பார்த்தா य: ய: யார் इह இஹ இகத்தில்/இங்கு एवं ஏவம் இவ்விதம்
प्रवर्तितं ப்ரவர்திதம் பிரவர்த்திக்கப்பட்டுள்ள चक्रं சக்ரம் சக்கரத்தை
न अनुवर्तयति ந அநுவர்தயதி பின்பற்றவில்லையோ स: ஸ: அவன்
अघायु அகா4யு பாபவாழ்க்கையுடையவன் इन्द्रियाराम: இந்த்3ரியாராம: புலன்களில் பொருந்தியவனாய் मोघं மோக4ம் பயனற்றதாய் जीवति ஜீவதி ஜீவிக்கிறான்.
இவ்விதம் இகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சக்கரத்தை பின்பற்றாதவன், ஓ பார்த்தா, பாப வாழ்க்கையுடையவனாய், புலன்களில் பொருந்தியவனாய், வீணே வாழ்கிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இங்ஙனம் சுழலும் வட்டத்தை இவ்வுலகில் பின்பற்றி ஒழுகாதோன் பாப வாழ்க்கையுடையான்; புலன்களிலே களித்தான்; பார்த்தா, அவன் வாழ்க்கை விழலேயாம்.
விளக்கம்:
=> இயற்கைச் சக்கரம்:
உயிர்களைப் பேணி உயர்த்துவதற்கு இயற்கைச் சக்கரம் இறைவனால் இயக்கப் பெற்றுள்ளது. இவ்வுலகுக்குள் மக்கள் வந்துள்ளது இந்திரிய சுகங்களை அனுபவித்து காலத்தைக் கழிப்பதற்கென அல்ல. ஜகத் பிரவிருத்தி சக்கரத்தில் கலந்துகொண்டு, யாகங்களைச் செய்து, இயற்கை நடைமுறையை இனியதாக்கி, தம் வாழ்க்கையைப் பண்படுத்துவற்கென்றே மக்கள் இங்கு வந்துள்ளனர். அப்பெருநோக்கத்தைப் புறக்கணித்துவிட்டுச் சிற்றின்ப வாழ்க்கையில் புகுபவர் பிறந்தும் பிறவாதவர் ஆகின்றனர்.
எப்போதெல்லாம் கீதையில் இதுபோன்ற விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றனவோ அப்போதெல்லாம் அது நமக்கு நேரடியாக என்ன செய்யப்பட வேண்டும் என்ற அறிவிற்கு முக்கியத்துவம் தருவதைக் குறிக்கும். இயந்திரத்தின் சுழற்சிக்கு துணைபுரியும் பற்முனை போல, இந்த ஜகத் சக்கரத்தை சுழலச் செய்வதில் ஒவ்வொருவரின் பங்கும் முக்கியமானது.
=> கர்மயோக தலைப்பின் கீழ் இதுவரைப் பார்த்தது:
2.47 - மனத்தூய்மை அடையும் வரை கர்மத்தை துறக்க அதிகாரமில்லை. கர்ம பலனில் இச்சை கூடாது. [கர்மயோக முகவுரை]
2.48 - சிந்தனையில், பேச்சில், செயலில் சமமாக இருத்தல் கர்மயோகம்.
2.50 - பந்தப்படுத்தும் இயல்பையுடைய செயலை பந்தத்தை நீக்க பயன்படுத்துவதே திறமை(கெளசலம்).
2.52 - கர்மயோக பலன் -> விவேகம், வைராக்யம்.
3.8 - கர்மயோகம் ஆரம்பிக்கப்பட்டது.
3.9 - எப்படிப்பட்ட பாவனை கர்மயோகமாகிறது -> இறைவனுக்காக எனும் பாவனை.
3.10 - கர்மயோக வாழ்க்கையின் பலன்
3.11 - எந்தப் பலனையும் முயற்சியுடன்தான் அனுபவிக்க வேண்டும்
3.12 - காம்ய கர்மத்தில் இருக்க வேண்டிய பாவனை -> பிரஸாத புத்தி, பகிர்தல்
3.13 - பஞ்ச மஹா யக்ஞம்; கர்மிக்கும், கர்மயோகிக்குமுள்ள வேறுபாடு
3.14 & 3.15 - ஜகத் சக்கரம்
3.16 - முடிவுரை
----------------------------------------------------------------------------------------------------------------------