செவ்வாய், 7 ஜூன், 2022

ஸந்யாஸ யோகம் 5.29

||5.29|| தியான பலன்:

भोक्तारं यज्ञतपसां सर्वलोकमहेश्वरम्

सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिमृच्छति ।। २९ ।।

போ4க்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேச்1வரம்

ஸுஹ்ருத3ம் ஸர்வபூ4தாநாம் ஜ்ஞாத்வா மாம் சா1ந்திம்ருச்ச2தி ।। 29 ।।


यज्ञतपसां  யஜ்ஞதபஸாம்  யக்ஞம் தவம் இவைகளை   भोक्तारं   போ4க்தாரம்  அனுபவிப்பவன் என்றும்   

सर्व लोक महेश्वरम्   ஸர்வ லோக மஹேச்1வரம்  எல்லா லோகங்களுக்கும் ஈஷ்வரன் என்றும்   

सर्व-भूतानां   ஸர்வ-பூ4தாநாம்  எல்லா உயிர்களினுடைய   सुहृदं   ஸுஹ்ருத3ம்  நண்பன் என்றும்   

माम्  மாம் என்னை ज्ञात्वा  ஜ்ஞாத்வா அறிந்து शान्तिम्  சா1ந்திம்  சாந்தியை   ऋच्छति ருச்ச2தி  அடைகிறான்.


யக்ஞம் தவம் இவைகளை அனுபவிப்பவனும், உலகனைத்துக்கும் ஈசனும், உயிர்களுக்கெல்லாம் நண்பனும் நான் என்று அறிபவன் சாந்தியடைகிறான்.



சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

வேள்வியுந் தவமும் மிசைவோன் யானே;

உலகுகட்கெல்லாம் ஒரு பேரரசன்;

எல்லா உயிர்கட்கு நண்பன் யான்என்

றறிவான் அமைதி யறிவான்.


விளக்கம்:

=> ஈஷ்வர ஞானத்தின் பலன்:

ஈஷ்வரனிடத்து மனதைத் திருப்புகிற முனி, ஈஷ்வரனை எங்ஙனம் கருத வேண்டுமென்பதற்கான விடையாக அல்லது அவனது தியானத்தின் பலனைக் கூறுவதாக இந்த சுலோகம் அமைகிறது

நான்’, மாம், என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது கிருஷ்ணர் இங்கே ஈஷ்வரனாகப் பேசுகிறார். ‘என்னை அறிபவன் என்னை அடைகிறான்ஜ்ஞாத்வா மாம் சா1ந்திம் ருச்ச2திஎன்கிறார். இங்கு சாந்தியை பெறுவது என்பது ஈஷ்வரனை அடைவது; மோக்ஷத்தை அடைவது. தனக்கும் ஈஷ்வரனுக்கும் உள்ள ஐக்கியத்தை புரிந்துகொள்வதன் மூலம் ஒருவன் ஈஷ்வரனாக ஆகின்றான்.

பொதுவாக, ஒன்றை அறிவதனால் அந்த விஷயமாக யாரும் மாறுவதில்லை. அப்பொருளைத் தெரிந்துகொள்வதன் மூலம், அதை அறியலாம்; அது விருப்பு வெறுப்பிற்கான விஷயமாக மாறலாம் அவ்வளவே. ஆனால் அந்த பொருளாகவே யாரும் மாற இயலாது. இங்கே கிருஷ்ணர், அவரை அறிவதன் மூலம் அவர் சொரூபமாக ஆகிறான் என்பதை, ஒருவனின் தன்னியல்பாகிய முழுமையான அமைதியை(சா1ந்தி) அடைகிறான் எனக் கூறுகிறார்.

​​இங்கு பகவான் பிரயோகிக்கும்நான்என்பது யார்? தேவகியின் மகன் கிருஷ்ணனா? எனில் இல்லை. ‘நான்என்பதன் விளக்கமாக, ‘சடங்குகள் மற்றும் ஒழுக்கங்களை நிலைநிறுத்துபவனாக, அனைத்து உலகங்களுக்கும் இறைவனாக, மற்றும் அனைத்து உயிரினங்களின் நண்பனாக இருப்பவன்என சுலோகம் கூறுகிறது.

யஜ்ஞதபஸாம்என்ற கூட்டுச் சொல்லில் உள்ளயக்ஞஎனும் வார்த்தை, வேதங்களில் கூறப்பட்டுள்ள சடங்குகள் உட்பட ஒருவனால் செய்யப்படும் அனைத்துவித செயற்பாடுகளையும் குறிக்கிறது. மேலும் தபஸ் என்பது அனைத்து வகையான தியானம் மற்றும் ஒழுக்கத்தின் வடிவங்களையும் குறிக்கிறது


=> ஜீவ-ஈஷ்வர ஐக்கியம்:

யக்ஞம் உள்ளிட்ட செயல்களைச் செய்து அதை அனுபவிப்பவன் போக்தா என அழைக்கப்படுகிறான். யார் இவைகளின் பலனை அனுபவிப்பவன்? பொதுவாக ஒரு ஜீவனே, செயல் செய்யும் கர்த்தாவாகவும் மற்றும் அதை அனுபவிக்கும் போக்தாவாகவும் இருக்கிறான். ஆனால் இங்கு, எல்லா உலகங்களுக்கும் இறைவனாக விளங்குபவர் போக்தா என கூறப்படுகிறது.

இந்த சுலோகத்தில்மஹேச்1வரம்என்பது ஒரு முக்கியமான சொல்லாகிறது; ஏனெனில்ஈஷ்வரஎனும் சொல் ஒப்பீட்டளவில் ஒரு தலைவனைக் குறிக்கிறது. எந்தவொரு முதலாளியும் தனது சொந்த தளத்தில் தலைவனாகிறான்; ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் எஜமானன் முதல் ஒரு தேவனோ, ராஜாவோ, பிரதமரோ என அந்த குறிப்பிட்ட தளத்திற்கு தலைவனாக விளங்குபவன் ஈஷ்வரன். மஹேச்1வர என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது, ​​இதுபோன்ற தலைவர்கள் தவறாகக் கருதப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகிறது. ‘மஹேச்1வரஎனில், தனக்கு சமமான அல்லது உயர்ந்தவன் என யாரும் இல்லாதவன் என்பது பொருள்.

மஹத்மற்றும்ஈஸ்வரஎனும் இரு வார்த்தைகளும் ஒரே பொருளுக்கு வழங்கப்படுவதால், அது எதனோடும் ஒப்பிட முடியாததாக அமைகிறது. இறைவன் ஈஷ்வரனே எல்லா உலகங்களுக்கும், இங்குள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மகேஸ்வரனாக இருக்கிறார். இவரே செயல் செய்பவர், கர்த்தா; இவரே அனைத்து கர்மங்களையும் அனுபவிப்பவர், போக்தா; அதாவது ஜீவன் என்ற ஒன்று இல்லை; கர்த்ருதுவம் மற்றும் போக்த்ருதுவம் பொய்.


=> பலனை எதிர்பாராத நட்பு:

இந்த சுலோகத்தில் மஹேஷ்வரனானநான்அனைத்து உயிரினங்களின் நண்பன்ஸுஹ்ருத3ம் ஸர்வ-பூ4தாநாம் என்கிறார். பொதுவாக நண்பன் என்றவுடனேயே உதவி செய்பவன் என்பது பிம்பமாகத் தெரியும். செய்யப்பட்ட உதவியின் அடிப்படையில் நட்பை இரு வகைப்படுத்தலாம். ஒன்று, பதிலுக்கு ஏதாவது எதிர்பார்த்து செய்யும் உதவிஎளிமையான நன்றி அல்லது வேறு ஏதேனும் நன்றியுணர்வின் வெளிப்பாடு, அல்லது ஒருவருக்கு உதவுவதினால் கிடைக்கும் இனிமையான உணர்வு என தனது அகமுதிர்வைப் பொருத்து அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்

இரண்டாவது, எந்தவித பலனையும் எதிர்பாராமல் செய்யும் உதவி. எந்த நட்பும் அல்லது பாசமும் இல்லாமல், ஏன் ஒரு அறிமுகம் கூட இல்லாமல் அனுதாபத்தின் காரணமாக ஒருவருக்கு உதவலாம். இவ்விதம் எதையும் எதிர்பாராமல் உதவுபவன்ஸுஹ்ருத்3என்றழைக்கப்படுகிறான். இவன், நட்புக்காக உதவி செய்யும் நண்பனிடமிருந்து(மித்ர) வேறானவன். இறைவனான மஹேஷ்வரன் இங்குஸுஹ்ருத்3என்றும் அழைக்கப்படுகிறார். எல்லா உயிர்களுக்கும் நண்பராகவும், செயலின் பலன்களைக் கொடுப்பவராகவும்(கர்ம-பல-தா3தா) இருக்கிறார். ஒருவனின் செயலுக்கான பலனை, அவர் அதில் ஈடுபடாமல் கொடுக்கிறார். செய்யும் செயலுக்கேற்ப பலனைக் கொடுப்பது அவருடைய இயல்பு.


=> ஆத்மா எதையும் எதிர்ப்பதில்லை:

ஆத்மா எப்போதும் எதையும் எதிர்ப்பதில்லை. ஒருவன் சிந்திக்க விரும்பினால், சிந்திக்கலாம். தூங்க விரும்பினாலோ அல்லது பகல் கனவு காண விரும்பினாலோ, அதையும் செய்யலாம். அது ஒருபோதும்இல்லைஎன கூறுவதில்லை. ஒருவனது மனமும் கூட சில சமயம், ‘இல்லை!’ எனக் கூறும். யோசிக்க முடிவு செய்யும்போது, ‘இல்லை, தூங்கப் போவோம்என்று மனம் சொல்லலாம்! சாப்பிட வேண்டுமென்றால் வயிறு, ‘இனி சாப்பிட முடியாது!’ என்றும் நடக்க வேண்டுமென்றால் கால்கள், ‘இல்லை, போதும்!’ என்றும் கூறலாம். ஆனால் ஆத்மா என்றுமே எதையுமேஇல்லைஎன மறுப்பதில்லை. தன்னைப் பற்றிய அறியாமையை வைத்திருக்க வேண்டுமென்றாலும், இது வெறுமனே அறியாமையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

உண்மையில், எல்லா மனிதர்களும் இறுதியில் இந்த ஈஷ்வரனையே தேடுகிறார்கள். இந்த ஈஷ்வரனை அறிவதன் மூலம் ஒருவன் சாந்தியை அடைகிறான் என சுலோகம் கூறுகிறது. இங்கு சாந்தி என்பது சாதாரணமான அமைதியைக் குறிக்கவில்லை. எல்லாவிதமான சம்சாரங்களும் நிறைவின்மையும் முற்று பெறும் புள்ளி அது.

எந்தவொன்று இல்லாமல் எந்த செயலும் சாத்தியமில்லையோ, எந்த பலனையும் அனுபவிக்க முடியாதோ அது ஆத்மா. ஆத்மா இல்லாமல், செய்பவன் மற்றும் அனுபவிப்பவன் இல்லை; ஆனால் ஆத்மா எதையும் செய்வதோ அனுபவிப்பதோ கிடையாது. இங்கு மகேஷ்வரனை போக்தா என சுலோகம் கூறுகிறது. ஆகவே அனுபவிப்பவனாக இருப்பவன் பரமேஷ்வரனே; அதேசமயம் பரமேஷ்வரன் அனுபவிப்பவன் அல்ல. இவ்விதம் ஜீவ மற்றும் ஈஸ்வரன் இடையே ஒரு சமன்பாடு உள்ளது. இந்த சமன்பாட்டை புரிந்துகொள்வதன் மூலமும், தனிமனிதன் ஜீவனுக்கும் இறைவன் ஈஷ்வரனுக்கும் இடையே உள்ள ஐக்கியத்தை அடையாளம் காண்பதன் மூலமும் ஒருவன் சாந்தியை அடைகிறான்; சம்சாரத்தை கறைக்கிறான். இந்த ஐக்கியத்தை பற்றிய அறிவின் பலன் மோக்ஷம்


சுவாமி சித்பவானந்தர்:

யாகம், தபசு இவைகளைச் செய்விக்கும் கர்த்தாவாயிருப்பவரும், இவைகள் வாயிலாக யோகியால் அடையப்பெறும் தெய்வமாயிருப்பவரும் நாராயணனே. உலகம் முழுவதையும் அவர் ஆளுகிறார். அப்படிச் செய்வதால் அவரிடத்து அன்பு இல்லாதுபோய்விடவில்லை. கைம்மாறு கருதாது எல்லா உயிர்களுக்கும் நன்மையே செய்கிறார் அவர். எல்லாருடைய உள்ளத்திலும் மனசாக்ஷியாக வீற்றிருந்து அவரவர் கர்மத்துக்கு ஏற்ற பலனை அவர் எடுத்து வழங்குகிறார். செயலிக்குத் தலைவனாயிருப்பது போன்று அறிவுக்கும் அறிவாய் இலங்குகின்றார் அவர். இவ்வுண்மையை அறிகின்றவர்களுக்கு மனச்சஞ்சலம் இல்லை. சாந்தி தானே வந்தமையும்.

——————————————————————————————————————————————————

ऒं तत्सत् इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे 

श्रीकृष्णार्जुनसंवादे कर्मसंन्यासयोगो नाम पञ्चमोऽध्याय: ।।

ஓம் தத் ஸத் ।  இதி ஶ்ரீமத்343வத்3கீ3தாஸு உபநிஷத்ஸு ப்3ரஹ்மவித்3யாயாம் யோக3சா1ஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே3 கர்மஸந்யாஸயோகோ3 நாம பஞ்சமோऽத்4யாய: ।।

ப்ரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஶ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத் கீதை என்னும் உபநிஷத்தின்கண் கர்மஸந்யாஸயோகம் என்ற ஐந்தாம் அத்தியாயம்.


————————————————————————————————————————————————————


ஸந்யாஸ யோகம் - சாரம்:

(1) அர்ஜுனனின் கேள்வி; உயர்ந்தது எது[1]

(2) பகவானின் பதில்: கர்மயோகம் உகந்தது [2]

(3) பதிலின் விளக்கம் [3 - 7]

(4) ஞானி அகர்த்தா [8 - 9]

(5) கர்மயோக லக்ஷணம் [10 - 12]

(6) ஞானியின் நிலை(ஸ்திதி) [13]

(7) ஆத்ம சொரூபம் [14 - 15]

(8) ஞான சாதனம், அந்தரங்க சாதனைகள் [16 - 17]

(9) ஆத்ம ஞான சொரூபம் [18]

(10) ஞான பலன் [19, 24 -26]

(11) ஞானியின் லக்ஷணம் [20]

(12) வைராக்கியத்தின் பெருமை [21 - 23]

(13) தியாந யோக முகவுரை [27 - 29]

————————————————————————————————————————————————————