வெள்ளி, 12 நவம்பர், 2021

ஞானகர்மஸந்யாஸ யோகம் 4.25 - 4.26

** 4.25 - 4.30 ==> 6 சுலோகங்களில் 12 சாதனைகளைப் பேசுகிறார்

||4.25|| விதவிதமான யக்ஞங்கள்:

दैवमेवापरे यज्ञं योगिन: पर्युपासते

ब्रह्माग्नावपरे यज्ञं यज्ञेनैवोपजुह्वति ।। २५ ।। 

தை3வமேவாபரே யஜ்ஞம் யோகி3: பர்யுபாஸதே

ப்3ரஹ்மாக்3நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி ।। 25 ।।


अपरे योगिन:  அபரே யோகிந:  சில யோகிகள்/கர்ம யோகிகள்  दैवं एव  தை3வம் ஏவ  தேவதைகளுக்கே  

यज्ञं   யஜ்ஞம்  யக்ஞத்தை   पर्युपासते  பர்யுபாஸதே  செய்கிறார்கள்  अपरे  அபரே இன்னும் சிலர்   

ब्रह्माग्नौ   ப்3ரஹ்மாக்3நௌ   ப்ரம்மமாகிய அக்னியில்  यज्ञेन एव  யஜ்ஞ ஏவ ஆத்மாவினாலேயே   

यज्ञं  யஜ்ஞம்  ஆத்மாவை   उपजुह्वति   உபஜுஹ்வதி  அர்ப்பணம் செய்கிறார்கள்.


கர்ம யோகிகள் தேவதைகளுக்கு யாகத்தை செய்கிறார்கள். இன்னும் சிலர் ப்ரம்மமாகிய அக்னியில் ஜீவாத்மாவைக் கொண்டு ஜீவாத்மாவினால் அர்ப்பணம் செய்கிறார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

சில யோகிகள் தேவருக்குச் செய்யப்படும் வேள்வியை வழிபடுகிறார்கள். வேறு சிலர் பிரம்மத் தீயில் வேள்வியையே ஆகுதி செய்து வேட்கின்றனர்.


விளக்கம்:

=> இனிவரும் ஆறு சுலோகங்களின் பாங்கு:

இனி, சுலோகம் 25 முதல் 30 வரை, கிருஷ்ணபகவான் விதவிதமான யாகத்தின் மூலம் 12 வகையான சாதனைகளைப் பேசுகிறார். இங்கு மோக்ஷத்தை லக்ஷியமாக கொண்ட, சாதனைகளை இரண்டு கூறுகளாகப் பிரிக்கிறார்:

(1) ஞானம் - மோக்ஷத்திற்கான நேரடியான சாதனை

(2) ஞாநாய சாதனம் - ஞானத்திற்கு தகுதிப்படுத்தும் மற்ற அனைத்து சாதனைகள்.

இத்தகைய சாதனைகளின்(ஞாநாய சாதனம்) மூலம் இருவித தகுதிகளை அடைய முடியும். ஒன்று, ஒரு குறிப்பிட்டளவு மனஅமைதி, மனவுறுதி மற்றும் ஸ்திரத்தன்மை. இனியொன்று, ஒருவனை பிணைக் கைதிகளாக வைத்திருக்கும் அவனுடைய விருப்பு-வெறுப்புகளிருந்து விடுபடும் மனமுதிர்ச்சி. ஆகவே, பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகளினால் வளர்க்கப்படும் ஒரு சில மனப்பாங்குகள், ராகத்வேஷத்தின் கைகளிலிருந்து ஒருவனை விடுவிக்க உதவுகிறது. இவ்வகை சாதனைகள் மோக்ஷத்திற்காகவோ அல்லது குறைந்தபட்சம் மன அமைதியை பெறுவதற்காகவோ பயிற்சி செய்யப்படலாம். யார் எந்தச் சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதில் எந்த விதியும் இல்லை. அவரவர்களின் தேவையைப் பொறுத்து தெரிவு செய்யலாம்.


  இங்கு அனைத்து சாதனைகளும் யக்ஞமாக உருவகிக்கப்பட்டு, அந்த குறிப்பிட்ட சாதனை எனும் வேள்விக்கு படையலாக அர்ப்பணிக்கப்படும் பொருளும் (ஹவிஸும்), அதற்கான அக்னியும் பேசப்படுகிறது. இந்த சுலோகத்தில் இரண்டு சாதனைகள், தெய்வ யக்ஞம் மற்றும் ப்ரம்ம ஞான யக்ஞம் விளக்கப்படுகிறது

* தெய்வ யக்ஞம் - எந்த வேள்வியின் மூலம் தேவதைகளும் தெய்வங்களும் பூஜிக்கப்படுகின்றவோ அது

 * ப்ரம்ம ஞான யக்ஞம் - ப்ரம்ம ஞானத்தை வேள்வியாக உருவகிக்கிறார்.

=> கர்மயோகியும் சந்யாசியும்:

மூன்றாவது அத்தியாயத்தின் தொடக்கத்தில், உலகிற்கு இரண்டு வகையான வாழ்க்கை முறைகள்(நிஷ்டா) தன்னால் வழங்கப்பட்டதாக கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறினார்ஒன்று அர்ப்பணிப்பு உணர்வுடன் அறிவை மட்டுமே பின்தொடரும் சந்யாச வாழ்க்கை முறை. மற்றொன்று கர்மயோக வாழ்க்கை முறை; செயல்பாட்டை பாதையாகக் கொண்ட இம்முறையில், அறிவைப் பின்தொடர்வது கர்மத்துடன் இணைக்கப்படுகிறது. இரு வாழ்க்கை முறைகளும், முக்தியெனும் விடுதலையின் பொருட்டு உள்ளன என்பதையும் பகவான் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்த சுலோகத்தில், கர்மயோகியும் சந்யாசியும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். கர்மத்தோடு இணைந்துள்ள கர்மயோகிகளைப்(அபரே யோகிந:) பொறுத்தவரை, அச்செயல்கள் அவர்களின் அந்த-கரண-சுத்திக்காக மட்டுமே தவிர, வேறு எந்த பலனிற்காகவும் அல்ல. மோக்ஷம் எனும் ஞானத்தை அடையும் தகுதியுடையதாக மனதை தயார்படுத்துவது போன்ற அனைத்தையும் நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

கர்மயோகிகள் சடங்குகளைச் செய்யும்போது(​​யஜ்ஞம் பர்யுபாஸதே), எப்போதும் இறைவனை நேரடியாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் வடிவத்திலோ வைத்து பிரார்த்தனை செய்கிறார்கள். இந்திரன், அக்னி, ஆதித்யன் என எந்தவொரு தேவதையையும் முன்னிலைப்படுத்தி செய்யப்படும் அனைத்தும்தெய்வஎன்று அழைக்கப்படுகிறது. இத்தெய்வங்களின் அருள்வேண்டி செய்யப்படும் செயல்கள்தெய்வம் கர்ம’. அனைத்தையும் ப்ரம்மமாகப் பார்க்கும் சந்யாசியைப் போலல்லாமல், ஒரு கர்மயோகியின் பிரார்த்தனை என்பது இவ்விதத்திலேயே உள்ளது. ஆனால் அவர்கள் இந்த தெய்வ வழிபாட்டை மனத்தூய்மையை அடைவதற்காக மட்டுமே செய்கிறார்கள். இந்த சுலோகத்தில் கூறப்படும் இந்த வழிபாடுகள், அந்த-கரண-சுத்திக்காக அன்றி செல்வம், பதவி, புத்திர பாக்கியம் மற்றும் சொர்க்கம் போன்ற வேறு பலன்களுக்காக சடங்குகளைச் செய்பவர்களைக் குறிக்கவில்லை என்பதை நாம் அறிவோம். ஏனென்றால் இந்த சுலோகத்தில் செயலைச் செய்பவர்கள், யோகிகள்(யோகிந:) என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்த வழிபாடுகள் உன்னிப்பாக, முழுநம்பிக்கையுடனும் (சிரத்தை) விதிகளை கவனமாக பின்பற்றுதல் போன்ற விழிப்புணர்வுடனும் செய்யப்படுகின்றன. ‘உபாஸதேஎன்ற வினைச்சொல்லுடன்பரிஎனும் முன்னொட்டு, தெய்வங்களின் அருளைத் தூண்டுவதற்காக செய்யப்படும் வேள்விகளின் நுணுக்கத்தின் அளவை வெளிப்படுத்துகிறது(பரி + உபாஸதே = பர்யுபாஸதே).


=> ஞானத்தீக்கு தன்னை அர்ப்பணித்தல்:

ப்3ரஹ்மாக்3நௌஎனும் வெளிப்பாட்டில், நெருப்பு(அக்3நௌ) என்பது அறிவைக் குறிக்கிறது, ப்ரம்மத்தைப் பற்றிய அறிவு. ‘யஜ்ஞம்என்ற சொல்லுக்கு வேள்வி மற்றும் ஒழுக்கம் என்ற முதன்மைப் பொருளுக்கு பிறகு, ஆத்மா அதாவது சுயம் என்றும் பொருள் உள்ளது. அந்தப் பொருள் இங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஞானத்தை பின்தொடர்பவர்களிடம் ஒரு தியாகம் இருப்பதால், ஞானத்தையும் யாகமாகவே கருதலாம். எனவே இது ஞான-யக்ஞம் என அழைக்கப்படுகிறது.

எந்தவொரு வேள்வியிலும் எஜமானன் இருப்பதைப்போல இந்த ஞான-யக்ஞத்தில், ஞானத்தேடலில் உள்ள ஒரு முமுக்ஷு அல்லது தன்னறிவை அடைய விரும்பும் ஒரு ஜிக்ஞாசு எஜமானனாக உள்ளான். அவன் தன்னையே வேள்விக்கு அர்ப்பணமாகத் தருவதாக சுலோகம் சுட்டிக்காட்டுகிறது. தன்னால் தன்னையே அர்பித்தல் - யக்ஞம் யக்ஞேன உபஜுஹ்வதி. இங்கு யக்ஞம் = சுயம், ஆத்மா.

ஜீவாத்மாவை ஜீவாத்மாவினால் பரப்ரம்ம எனும் நெருப்பில் ஆஹுதியாக சமர்பிக்கிறார்கள் என்பது பொருள். அதாவது,  

சாதனை = ப்ரம்ம ஞானம்

அக்னிபரமாத்மா

ஹவிஸ் = ஜீவாத்மா எனும் அஹங்காரம்

ஜீவாத்மாவானவன், ஜீவாத்மாவை ஜீவாத்மாவினால் பரமாத்மாவிடம் சமர்பிக்கிறான். ப்ரம்ம என்கிற நெருப்பில் அஹங்காரம் போடப்பட்டு பஸ்பம் ஆகிறது. சம்சாரமற்றவனாக ப்ரம்மனிடம் சென்று அமர்கிறான். இதுவே ஞானிகள் செய்யும் ஞான யக்ஞம்.

அடுத்த சில சுலோகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யக்ஞங்கள் வெறும் சடங்குகள் அல்ல; ஆனால், அவை அந்த-கரண-சுத்தியை அடைவித்து, மோட்சத்தை எய்துவதற்கான சாதனைகள் ஆகையால் அவை யக்ஞகளாக கருதப்படுகின்றன

------------------------------------------------------------------------------------------------------------------

||4.26|| இந்திரிய சம்யம யக்ஞம் மற்றும் விஷய கிரஹண யக்ஞம்:

श्रोत्रादीनीन्द्रियाण्यन्ये संयमाग्निषु जुह्वति  

शब्दादीन्विषयानन्य इन्द्रियाग्निषु जुह्वति ।। २६ ।। 

ச்1ரோத்ராதீ3நீந்த்3ரியாண்யந்யே ஸம்யமாக்3நிஷு ஜுஹ்வதி

1ப்3தா3தீ3ந்விஷயாநந்ய இந்த்3ரியாக்3நிஷு ஜுஹ்வதி ।। 26 ।।


अन्ये  அந்யே  சிலர்   संयम-अग्निषु  ஸம்யம-அக்3நிஷு  கட்டுப்படுத்துதல் எனும் நெருப்பில்   

श्रोत्रादीनि   ச்1ரோத்ராதீ3நி  செவி முதலிய  इन्द्रियाणि   இந்த்3ரியாணி  புலன்களை  

जुह्वति   ஜுஹ்வதி  அர்ப்பணம் செய்கிறார்கள்  अन्ये  அந்யே  மற்றும் சிலர்  

शब्दादीन्   1ப்3தா3தீ3ந்  சப்தம் முதலிய  विषयान्  விஷயாந்  விஷயங்களை   

इन्द्रियाग्निषु   இந்த்3ரியாக்3நிஷு  புலன்கள் எனும் அக்னியில்   जुह्वति  ஜுஹ்வதி ஆஹுதி செய்கிறார்கள்.


கட்டுப்படுத்துதல் எனும் நெருப்பில் சிலர் செவி முதலிய இந்திரியங்களை அர்ப்பணம் செய்கிறார்கள். மேலும் சிலர் சப்தம் முதலிய விஷயங்களை புலன்கள் எனும் தீயில் சமர்பிக்கிறார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

வேறு சிலர் உட்கரணத்தை யடக்குதலாகிய சம்யமம் என்ற தீயில் செவி முதலிய இந்திரியங்களை ஆகுதி செய்கிறார்கள். வேறு சிலர் இந்திரியங்களாகிய தழல்களில் ஒலி முதலிய விஷயங்களைச் சொரிகிறார்கள்.


விளக்கம்:

இங்கு இரு வகையான வேள்விகள் பேசப்படுகின்றன. ஒன்று, இந்திரிய ஸம்யம யக்ஞம். மற்றொன்று, விஷய கிரஹண யக்ஞம்.


=> இந்திரிய ஸம்யம யக்ஞம் (3 யக்ஞம்):

இந்த சுலோகத்தில் விவரிக்கப்பட்டுள்ள முதல் யக்ஞம், காது கண் முதலிய உணர்வு உறுப்புகளோடு தொடர்புடையது, ச்1ரோத்ராதீ3நி. ‘ச்1ரோத்ராஎன்றால் காது மற்றும்ஆதி3என்ற பின்னொட்டு, ‘முதலியனஎன்பதைக் குறிக்கிறது. அதாவது கண்கள், மூக்கு, நாக்கு மற்றும் தோல்(தொடு உணர்வு) ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த ஐந்து உணர்வு உறுப்புகள் மூலம் கேட்டல், பார்த்தல், நுகர்தல், சுவைத்தல் மற்றும் தொடுதல் போன்றவை உணரப்பெறுகின்றன. இங்கே இப்புலன்கள் அனைத்தும், அடக்கி ஆள்தல் எனும் நெருப்பிற்கு ஆஹுதியாக வழங்கப்படுகின்றன

சம்யமம் செய்தல் என்றால் அடக்குதல் அல்லது கட்டுப்படுத்துதல் என்று பொருள்படும். ஆகவே புலனடக்கமே இந்திரிய சம்யமம் ஆகும். புலன்கள் அவையவைகளின் விஷயங்களில் பற்றுதலோடு செல்லுதல் அவைகளின் இயல்பு. அடங்காத இந்திரியங்கள் இந்திரியார்த்தங்களைப் போகத்திற்கு உரியவைகளாகப் பொருள்படுத்தி அவைகளின் பின் செல்கின்றன. இவ்விதம் செல்லாது கட்டுப்படுத்துதல் ஒருவித யாகம். அதாவது தவறானதை பார்க்காமலிருத்தல், கேட்காமலிருத்தல் முதலியன இங்கு சம்யம யக்ஞம்

புலன்கள் ஒன்றிற்கு மேற்பட்டவையாக இருப்பதால், தீ அதன் பன்மை வடிவத்தில் இங்கே தோன்றுகிறது. மேலும் இங்கு ஆஹுதியாக வழங்கப்படுவது செயல்பாடுகளே அன்றி, புலன்கள் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அனைத்து கற்பனையான மற்றும் இயந்திரதனமான நடவடிக்கைகள், கட்டுப்பாடு எனும் நெருப்பிற்கு வழங்கப்படுகின்றன; அதாவது ஒருவரின் அனைத்து செயல்களும் விழிப்புடனும் முழு கவனத்துடனும் தேவைகுறித்து செய்யப்படுபவை. இதுவே கட்டுப்பாட்டின் பொருள்.


சாதனை = இந்திரிய ஸம்யம யக்ஞம்(புலனடக்கம்)

அக்னிகட்டுப்படுத்துதல்/அடக்குதல்

ஹவிஸ் = ஐந்து ஞானேந்திரியங்கள்(மெய், வாய், கண், செவி, மூக்கு)


=> விஷய கிரஹண யக்ஞம்:

விஷயங்களை அனுபவித்தல் எனும் சாதனை பேசப்படுகிறது. அதாவது இந்திரியங்களை விஷயங்களில் பொருந்தும்படி செய்தல் இங்கு மற்றொருவித யாகமாக பகரப்படுகிறதுநல்ல விஷயங்களைக் கிரஹித்தல் மற்றும் ஈஷ்வர சம்பந்தமான விஷயத்தை பொருள்படுத்துதல் முதலிய பழக்கங்களை இது குறிக்கிறது

இந்த்3ரியாக்3நிஷுஎன்ற சொல்லை சங்கரர் தனது பாஷ்யத்தில்இந்த்ரியாணி ஏவ அக்நய:என விளக்குகிறார். அதாவது இங்கு, புலன்களே அக்நி. இந்திரியங்கள் எனும் நெருப்புகளுக்கு அதற்கான விஷயங்கள் வழங்கப்படுகின்றன. விஷயங்களை அனுபவித்தல் எவ்விதத்தில் சாதனையாக முடியும்? அதைதானே அனைவரும் வாழ்நாள் முழுதும் செய்கின்றனர் எனும்போது சங்கரர் அதை தெளிவுபடுத்துகிறார்

ஒரு தாய் தன் குழந்தைக்கு பக்குவம் வரும் வரை, அக்குழந்தை எதை உண்ண வேண்டும், எவ்வளவு மற்றும் எப்போது உட்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கிறாள். இது அக்குழந்தைக்கு நாளடைவில் ஒரு ஒழுக்கமாக மாறுகிறது. அதுபோலவே ஒரு யோகி, சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை தனது புலன்களுக்கு விதித்து அதை ஒழுங்குப்படுத்துகிறான். எவ்வளவு பார்க்க வேண்டும், எவ்வளவு கேட்க வேண்டும், எவ்வளவு பேச வேண்டும், எவ்வளவு நடக்க வேண்டும், மற்றும் பல. உதாரணமாக, இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு பின், இன்னும் கொஞ்சம் சேர்த்து உட்கொள்ள மனதில் ஆசை எழுந்தாலும் அதை அவன் பொருட்படுத்துவதில்லை. இவ்விதம் யோகி இந்திரிய மற்றும் மன ஒழுக்கத்தை கடைபிடித்து அதர்மத்தை முற்றிலும் விலக்கி தர்மத்தை பின்பற்றுகிறான். தனது புலன்களுக்கு எப்போதும் எல்லாவிதத்திலும் சரியான உணவையே அளிக்கிறான், அவிருத்34(अविरुद्ध). ‘அவிருத்34என்பது ஒருவனின் நாட்டத்திற்கு எதிரானதாக இல்லாமலும் அல்லது அவனின் நலனுக்கு உகந்ததாகவும் இருப்பது.

ஜுஹ்வதிஎன்பதையும் சரியாக புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. இது வெறுமனே புலன்களுக்கு உணவளிப்பது அல்லது எதையாவது தியாகம் செய்வது என்று அர்த்தமல்ல. இங்கு சாதகனால் அர்ப்பணம் நடைபெறுகிறது. அதாவது சாதகனிடம் துருப்புச் சீட்டு உள்ளது; அவன் புலன்களை தங்களைத் தாங்களே உணவு எடுத்துக்கொள்ள விடுவதில்லை. தனக்கு பரிசாக கிடைத்த அனைத்து சாக்லேட்டுகளையும் ஒரே நாளில் சாப்பிடத்துடிக்கும் குழந்தைக்கு, அதை மறுத்து நாளுக்கு ஒன்று என தாய் ஒழுங்குபடுத்துகிறாள். குழந்தை அழுது புரண்டாலும் தாய் தனது உறுதிப்பாட்டிலிருந்து மாறுவதில்லை. இங்கே, சாதனையில் ஈடுபடும் சாதகனும் அவ்வாறே செய்கிறான். தனது புலன்களுக்கு தானே தாயாக மாறுவதன் மூலம் புலன்களின் கற்பனைகளின் கோரிக்கைகளை ஒழுங்குபடுத்தி புலனடக்கதை பழகுகிறான்.

சாதனை = விஷய கிரஹண யக்ஞம்

அக்னிஐந்து ஞானேந்திரியங்கள்(மெய், வாய், கண், செவி, மூக்கு)

ஹவிஸ் = நல்ல விஷயங்கள்.


இவ்விரண்டு வேள்விகளிலும் புலன்கள் பேசப்பட்டிருப்பினும், அவைகளுக்கிடையேயான வேறுபாட்டை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். முதலாவதில், புலன்களை தவறான மற்றும் அதர்ம விஷயங்களில் செல்லாமல் தடுத்தல் எனும் சாதனை பேசப்படுகிறது. இரண்டாவதில், சரியான விஷயங்களை மட்டும் கொடுத்தலும் அதில் பொருந்தியிருத்தலும் பேசப்படுகிறது. இவ்விரண்டுமே ஞானத்திற்கு தகுதிப்படுத்தும் சாதனைகளின்(ஞாநாய சாதனம்) கீழ் வருபவைகள்.

--------------------------------------------------------------------------------------------------------------