சனி, 24 அக்டோபர், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.69 - 18.70

||18.69|| சாஸ்திரங்களின் உட்கருத்தை உபதேசிப்பவனை பகவான் எப்படிப் பொருள்படுத்துகிறார்:

न च तस्मान्मनुष्येषु कश्चिन्मे प्रियकृत्तम: ।

भविता न च मे तस्मादन्य: प्रियतरो भुवि ।। ६९ ।।  

ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கச்1சிந்மே ப்ரியக்ருத்தம: ।

ப4விதா ந ச மே தஸ்மாத3ந்ய: ப்ரியதரோ பு4வி ।। 69 ।।


मनुष्येषु  மநுஷ்யேஷு  மனிதர்களுள்     तस्मात्  தஸ்மாத்  அவனைவிட     मे  மே  எனக்கு     

प्रियकृत्तम:  ப்ரியக்ருத்தம:  விருப்பமான செயல்புரிபவன்     न कश्चित्   ந கச்1சித்  யாரும் கிடையாது     च  ச  மேலும்      भुवि  பு4வி  பூமியில்     तस्मात्  தஸ்மாத்  அவனைவிட     मे प्रियतर:  மே ப்ரியதர:  எனக்கு பிரியமானவன்      अन्य:  அந்ய:  வேறு யாரும்      न भविता   ந ப4விதா  இருக்க மாட்டார்கள். 


எனக்குப் பிரியமானவற்றைச் செய்யும் மனிதர்களுள், அவனைத் தவிர சிறந்தவன் வேறு எவரும் இல்லை. மேலும், இவ்வுலகில் அவனைவிட எனக்கு அதிகப் பிரியமானவன் வேறு எவரும் இருக்கப்போவதும் இல்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

மானுடருக்குள்ளே, அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன் வேறில்லை. உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு உகந்தவன் வேறெவனுமாகான்.


விளக்கம்:

சாஸ்திரங்களின் உட்கருத்தை தகுதியானவர்களுக்கு உபதேசிப்பவனை பகவான் எப்படிப் பொருள்படுத்துகிறார் என்கிற கேள்விக்கு விடையாக இந்த சுலோகம் அமைகிறது. 


=> பிரியமானச் செயல்புரிபவன்:

அனைத்து செயல்களும் இறைவனுடைய செயல்கள்தான். இயற்கை விளக்குவதெல்லாம் இறைவனுடைய மகிமையைத்தான். அவ்விளக்கங்கள் அனைத்திலும் பகவத் கீதையின் விளக்கமானது தனிப்பெருமை பெற்றுள்ளது. இயற்கையின் சிறப்பை விளக்குகிறது, அதே சமயத்தில் வாழ்க்கையின் தத்துவத்தையும் அது விவரித்துச் சொல்கிறது. அனைத்துக்கும் மூலப்பொருள் எது என்பதை அது எடுத்துரைக்கிறது. பரவித்யை மற்றும் அபரவித்யை ஆகிய இரண்டும் கீதையில் அடங்கியிருக்கின்றன. அதாவது கடவுளை அடைவதற்கான வழியும், இவ்வுலக வாழ்க்கையை நன்கு நடத்துவதற்கான வழியும் கீதையினால் பகரப்படுகிறது. அதன் போதனையைக் கேட்டு அதன்படி நடப்பவன் விரைவில் நற்குணமுடையவன் ஆவது நிச்சயம். அவ்விதத்தில் தகுதியுடையவனுக்கு கீதா தத்துவத்தைப் புகட்டுவதற்கொப்பான செயல் வேறு எதுவுமில்லை — ப்ரியக்ருத்தம:. அப்படி புகட்டுபவனைப் போல கடவுளுக்கு சொந்தமானவனும் வேறு யாருமில்லை. கடவுளின் மகிமை அவன் மூலம் நன்கு வெளியாவதே அதற்குக் காரணமாகிறது. 


=> இப்பொழுதும் எப்பொழுதும் ஞானியே பிரியமானவன்:

பல வகையான பக்தர்கள் இருக்கின்றனர். சிலர் பூஜை செய்கின்றனர், சிலர் வேத சடங்குகளைச் செய்கின்றனர் மற்றும் சிலர் யாத்திரை செல்கின்றனர். ஆனாலும் எவ்வித திரவியங்களோ, பொருட்களோ அல்லது அக்னியோ இல்லாவிட்டாலும், இந்த அனைத்துவித பக்தர்களிலும் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவனாக இந்த ஞானத்தை உபதேசிப்பவனே இருக்கிறான். ஏன்? ஞானி என் ஆத்ம சொரூபமே ஆவான் — ஞாநீ து ஆத்மைவ மே மதம், என்று சுலோகம் 7.18-ல் பகவான் கூறினார். அதாவது, என்னை அறிபவனான ஞானி நானே ஆவான் என்கிறார். யாரொருவனுக்கும் சுயம் என்பதே மிகவும் பிரியமானதாகும். அதன் இயல்பு என்பது வரம்பற்ற தன்மையும் ஆனந்தமும் ஆகும். இது அனுபவ ரீதியாக ‘மகிழ்ச்சி’ என உணரப்படுகிறது. எவருடைய அன்புக்கும் உரிய பொருளாகத் திகழ்வது அதுவேயாம். ஆத்மாவை அறிந்தவன் அந்த ஆனந்த சொரூபத்தை போதிக்கிறான். மேலும், அவன் அந்த ஆனந்த சொரூபத்திலிருந்து வேறானவன் அல்ல. ஆகையினால் இந்த ஞானத்தை உபதேசிப்பவனை விடப் பிரியமானவன் வேறு எவருமில்லை.

ஒருவேளை இப்போது அத்தகையவன் யாரும் இல்லாமலிருக்கலாம், ஆனால் வருங்காலத் தலைமுறை அவனைவிட சிறந்ததொரு பக்தனை உருவாக்கக்கூடும் எனத் தோன்றலாம். அதற்கு, இல்லை வருங்காலத்திலும் இவ்வுலகில் அவனைவிட அதிக அன்பிற்குரியவனாகத் திகழப்போகும் நபர் யாருமில்லை என்கிறார் பகவான் — மே ப்ரியதர: தஸ்மாத் அந்ய: பு4வி ந ச ப4விதா. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள ‘ச’ எனும் சொல், நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் இணைப்பதற்குப் பயன்படுத்தலாம். அல்லது, கடந்தகாலத்திலோ, நிகழ்காலத்திலோ அல்லது வருங்காலத்திலோ இவனைவிட அதிக அன்பிற்குரிய பக்தன் ஒருபோதும் இருந்ததில்லை என்பதனை அது சுட்டிக்காட்டக்கூடும்.

இவ்வாறு இவ்வுபதேசத்தை எவன் போதிக்கிறானோ அவனே தனக்கு மிகவும் பிரியமானவன் என்று பகவானே கூறுகிறார். இனி, கீதையை பயில்பவனை அல்லது இதனை பாராயணம் செய்பவனையும் அடுத்த சுலோகத்தில் பகவான் புகழ்கிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

வீட்டுக் கூரையின் மேலிருந்து விழும் மழை ஜலம் புலித்தலை போன்ற குழாயின் மூலமாகக் கீழே தரையில் விழும்போது, பார்வைக்குப் புலித்தலையினின்றும் விழுவதாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் அது ஆகாயத்திலிருந்து விழுகிறது. அதுபோல, தெய்விகம் வாய்ந்த மனிதர்கள் கூறும் உபதேசமொழிகள் பார்வைக்குக் கேவலம் மனிதர்களிடமிருந்து வருவனவாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் ஈஷ்வர சன்னிதியினின்றே வருகின்றன. 

————————————————————————————————

||18.70|| கீதையை கற்பது, கேட்பது உயர்ந்த வழிபாடு:

अध्येष्यते च य इमं धर्म्यं संवादमावयो: ।

ज्ञानयज्ञेन तेनाहमिष्ट: स्यामिति मे मति: ।। ७० ।।

அத்4யேஷ்யதே ச ய இமம் த4ர்ம்யம் ஸம்வாத3மாவயோ: ।

ஞாநயக்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: ।। 70 ।।


च  ச  மேலும்     य:  ய:  யார்     आवयो:  ஆவயோ:  நமது      इमं धर्म्यं   இமம் த4ர்ம்யம்  இந்த தர்மம் நிறைந்த     संवादम्  ஸம்வாத3ம்  சம்வாதத்தை     अध्येष्यते  அத்4யேஷ்யதே  கற்றறிகிறானோ     तेन  தேந  அவனால்      अहं  அஹம்  நான்      ज्ञानयज्ञेन  ஞாநயக்ஞேந  ஞான யக்ஞத்தால்      इष्ट: स्याम्  இஷ்ட: ஸ்யாம்   ஆராதிக்கப்பெற்றவன் ஆவேன்      इति मे मति:  இதி மே மதி:  இது எனது கருத்து.

தர்மம் நிறைந்த நமது இந்த சம்பாஷணையை இன்னும் யார் கற்றறிகிறானோ, அவனால் ஞானயக்ஞத்தால் நான் ஆராதிக்கப்படுபவன் ஆவேன். இது எனது கருத்து.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

நம்முடைய இந்தத் தர்மமயமான சம்பாஷணையை எவன் படிப்பானோ, அவன் செய்யும் அந்த ஞான யக்ஞத்தால் நான் திருப்தி பெறுவேன்; இஃதென் கொள்கை.


விளக்கம்:

சென்ற சுலோகத்தில் கீதையை கற்பிப்பவன் அடையும் பலனைப் பற்றி பேசிய பகவான், இங்கு கீதையை கற்பவன் அடைகிற நன்மையைப் பகர்கிறார். 


=> ஞான யக்ஞம்:

ப்ரம்ம ஞானமும் கர்மயோகமும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த உரையாடலை கற்பவன் அல்லது ஓதுபவன் இந்த சுலோகத்தில் போற்றப்படுகிறான். ‘ஸம்வாத3ம்’ எனில் சம்பாஷணை அல்லது உரையாடல். கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்குமிடையில் நடக்கின்ற இந்த சம்வாதம், தர்மத்தை தனது மையப்பொருளாகக் கொண்டுள்ளதால் தார்மீகமானது — த4ர்ம்யம், அதாவது தர்மத்திற்கு முரணற்றது. இங்கு ‘தர்மம்’ என்பதை சார்பு நிலை மற்றும் முழுமை நிலை என இருவகையிலும் புரிந்துகொள்ளலாம். சார்பு நிலையில் பார்க்கும்போது, ​​இந்த விவாதம் தர்மத்தை கர்மயோகம் என்ற வடிவத்தில் கையாளுகிறது. முழுமை நிலையில் பார்க்கும்போது, ​​இது ப்ரம்மஞானத்தை வழங்குகிறது. கீதையின் இந்த உரையாடலைப் பயிலும் மாணவனைக் குறித்து பகவான் ‘நான் ஆராதிக்கப்படுகிறேன், நான் வழிபடப்படுகிறேன்’ என்று கூறுகிறார். அது எவ்வாறு? அவன் கீதையை மட்டுமே பயில்கிறான்; ஆயினும், ஞானம் எனும் வேள்வியின் மூலம் அவன் ஈஷ்வரனை வழிபட்டவனாகிறான் — அஹம் ஞாநயக்ஞேந இஷ்ட: ஸ்யாம். ‘இஷ்ட:’ எனும் சொல் ‘யஜ்’ எனும் மூலச்சொல்லிலிருந்து(தா4து) வந்துள்ளது. ஆராதிக்கப்பட்டவன் — யஜதி, என்பது பொருள். எந்த வடிவத்திலான வேள்வியும் ஒரு வகையான வழிபாடே ஆகும். இங்கு குறிப்பிடப்படும் வேள்வியானது, பொருட்களைத் தீயில் இட்டுச் செய்யும் திரவிய-யக்ஞமோ, ஒழுக்கநெறி வாய்ந்த தவங்களை மேற்கொள்ளும் தபோ-யக்ஞமோ, மந்திரங்களை ஓதும் ஜப-யக்ஞமோ அல்ல. மாறாக, ஞான-யக்ஞம் எனப்படும் அறிவு வடிவிலான வழிமுறையின் மூலமாகச் செய்யப்படும் வழிபாடாகும். 

=> நால்வகை யக்ஞங்கள்:

சங்கரர் தனது பாஷ்யத்தில் இங்கு நான்கு வகையான வேள்விகளைக் குறிப்பிடுகிறார். 

(1) விதி4 யக்ஞ — திரவியங்கள் மற்றும் அக்னியை உள்ளடக்கிய வேதங்களால் விதிக்கப்பட்ட வேள்வி. 

(2) ஜப யக்ஞ — மந்திரங்களை வாய்விட்டு ஓதும் வடிவத்திலான ஜபம் அல்லது வேள்வி.

(3) உபாம்சு1 யக்ஞ — சத்தமாக அல்லாமல் மந்திரங்களை மிக மெல்லிய குரலில், பிறருக்குக் கேட்காதவாறு ஓதும் வடிவத்திலான ஜபம். 

(4) மாநஸ யக்ஞ — மந்திரங்களை முற்றிலும் மனதிற்குள்ளேயே ஓதும் வடிவத்திலான ஜபம்.

இவற்றுள் மானஸ-யக்ஞம் எனப்படும் மன ரீதியான வேள்வியே மிகவும் பயனுள்ளது என்று கருதப்படுகிறது. ஏனெனில் ஒரு செயலை உடல் மூலமாகவோ அல்லது வாய் மூலமாகவோ செய்யும்போது, ​​மனம் வேறெங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந்தாலும் அச்செயலானது நிற்காமல் இயந்திரத்தனமாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். மாறாக மனம் மட்டுமே ஒரு செயலைச் செய்யும்போது, ​​மனம் அங்கிருந்து விலகிச் சென்றால் அச்செயலும் நின்றுவிடுகிறது. அப்போது ​​மனம் விலகிச் சென்றுவிட்டது என்பதை அவன் உணர்ந்து மனத்தைத் திரும்பக் கொண்டுவந்து, அச்செயலைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியும். இங்கும் கீதையில் இடம்பெற்றுள்ள இந்த உரையாடலை ஆழ்ந்து பயில்வது என்பது ஞான வேள்வியாக அமைகிறது. இயல்பாகவே இது முற்றிலும் மன ரீதியானது, அறிவாற்றல் சார்ந்த செயல் என்பதாலேயே இதுவே மிகவும் பயனுள்ளது என்றும் உயர்ந்த வழிபாடு என்றும் போற்றப்படுகிறது. மேலும் ஒருவன் கீதையை ஆழ்ந்து பயிலாவிட்டாலும், அதை வெறும் பாராயணம் (ஓதுதல்) மட்டுமே செய்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை விஷயமாகக் கொண்டு மனதால் செய்யப்படும் உபாசனையின் மூலம் கிடைக்கும் அதே பலனை அவன் பெறுவான் என்று சங்கரர் குறிப்பிடுகிறார். இதுவே இங்கு கீதைக்கு அளிக்கப்படும் புகழாரமாகும் — வித்3யா ஸ்துதி.


=> உயர்ந்த வழிபாடு: 

இந்த கீதையை கற்பவனும் ஈஷ்வரனை வழிபடுபவனே என்றும், அவன் பிற வகையான வழிபாடுகளைச் செய்யவில்லையே என்று கவலைப்படத் தேவையில்லை என்றும் நாம் இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். இது பலருக்கும் பொதுவாக எழும் ஒரு ஐயமாகும். பிரதோஷ பூஜைக்கு செல்லாமல் இங்கு கீதை வகுப்பில் அமர்ந்துள்ளேனே என்று குற்றவுணர்வு கொண்டவர்களை நாம் எதார்த்தத்தில் பார்க்கமுடியும். மக்கள் பக்தியைச் செயலாகவே செய்ய விரும்புகிறார்கள். தாங்கள் வெறும் சாஸ்திரத்தைப் படித்துக்கொண்டிருக்கிறோமே தவிர, உண்மையான பக்தியைச் செய்யவில்லை என்று அவர்கள் சில சமயங்களில் நினைக்கிறார்கள். எனவே இந்த சாஸ்திரத்தைப் பயிலும் ஒருவன் ஈஷ்வரனை வழிபடுவதாகவே ஆகிறது என்று ஈஷ்வரனே இங்கு உரைக்கிறார். அக்னியும் இல்லை ஆஹுதியும் இல்லை என்றாலும், சாஸ்திரத்தைப் பயில்வது ஈஷ்வரனை ஆராதிப்பதாகவே அமைகிறது. ஏனெனில் இந்த முழுசாஸ்திரத்தின் மையப்பொருளே ஈஷ்வரன்தான். 

ஏழாவது அத்தியாயம் பதினாறாவது சுலோகத்தில்(7.16), நான்கு வகையான பக்தர்கள் இருப்பதாக கிருஷ்ணர் கூறியிருந்தார். முதலாவது, துன்பத்தில் இருப்பவன் — ஆர்த. இரண்டாவதாக, தனது லௌகீக விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள பகவானின் உதவியை நாடுபவன் — அர்தா2ர்தீ2. அடுத்து, ஈஷ்வரனைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவன் — ஜிஜ்ஞாஸு. இவன் என்ன செய்கிறான்? சாஸ்திரங்களைப் பயில்கிறான். கிருஷ்ணரின் சொந்த வார்த்தைகளின்படி பார்க்கும்போதே இவனும் பக்தனே ஆவான். ஞான-யக்ஞமே, அதாவது சாஸ்திரத்தைப் பயில்வதே இவனது வழிபாட்டு முறையாகும். இறுதியாக, ஈஷ்வரனை முழுமையாக அறிந்தவன் — ஞாநீ, நான்காவதான பக்தன். ஈஷ்வரனிடமிருந்து தான் வேறானவன் அல்ல என்பதை உணர்ந்த அந்த பூரணத்துவம் பெற்ற பக்தனே, ஈஷ்வரனுக்கு மிகவும் பிரியமானவன் ஆவான். ஆகையால், ஈஷ்வரனைப் பற்றிய ஞானத்தைத் தேடுவதும் ஒரு யக்ஞமே(வழிபாடு) ஆகும். ‘ஞானம் எனும் அந்த வேள்வியின் வாயிலாக நான் வழிபடப்படுகிறேன். இதுவே எனது உறுதியான முடிவாகும் — ஞாநயக்ஞேந அஹம் இஷ்ட: ஸ்யாம் இதி மே மதி:,’ என்று கீதையைப் பயிலும் ஒருவனை பகவான் கிருஷ்ணர் இங்கே உற்சாகமூட்டுகிறார்.

பொதுவாக ஒரு சாஸ்திரத்தின் இறுதியில், அந்த சாஸ்திரத்தைக் கேட்பதனால் விளையும் பயன் எடுத்துரைக்கப்படுகிறது — ப2லச்1ருதி. அந்த சாஸ்திரத்திற்கானப் புகழாரமாகக் கருதப்படும் அது சமஸ்க்ருதத்தில் ‘ப்ரசா1ம்ஸா’ என்று அழைக்கப்படுகிறது. மரபுசார் இலக்கியங்களின் பாணியும் இதுவேயாகும். இந்த சம்வாதத்தைப் பயில்பவனை பாராட்டிய பகவான் அடுத்த சுலோகத்தில் இந்த கீதையை கேட்பவருக்குக் கிடைக்கும் பலனை எடுத்துரைக்கிறார்.

————————————————————————————————