||18.67|| சாஸ்திர மரபின் நியதி:
इदं ते नातपस्काय नाभक्ताय कदाचन ।
न चाशुश्रूषवे वाच्यं न च मां योऽभ्यसूयति ।। ६७ ।।
இத3ம் தே நாதபஸ்காய நாப4க்தாய கதா3சந ।
ந சாசு1ச்1ரூஷவே வாச்யம் ந ச மாம் யோऽப்4யஸூயதி ।। 67 ।।
इदं இத3ம் இந்த கீதா உபதேசம் अतपस्काय அதபஸ்காய தவமில்லாதவனுக்கு ते தே உன்னால் कदाचन கதா3சந ஒருபோதும் न वाच्यं ந வாச்யம் சொல்லத்தக்கதல்ல न अभक्ताय ந அப4க்தாய பக்தியில்லாதவனுக்கு அல்ல न च अशुश्रूषवे ந ச அசு1ச்1ரூஷவே கேட்க விருப்பமில்லாதவனுக்கு அல்ல य: ய: யார் मां மாம் என்னை अभ्यसूयति அப்4யஸூயதி நிந்திக்கிறானோ அவனுக்கும் न च ந ச சொல்லலாகாது.
தவமில்லாதவனுக்கும், பக்தியில்லாதவனுக்கும், கேட்க விருப்பமில்லாதவனுக்கும், என்னை இகழ்பவனுக்கும் இக்கோட்பாட்டை நீ இயம்பாதே.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும், என்பால் பொறாமை யுடையோனுகும் சொல்லாதே.
விளக்கம்:
=> சம்பிரதாயவிதி:
‘கோழைத்தனத்தை அகற்று; ஆண்மையுடன் எழுந்திரு; உன் கடமையைச் செய்’ என்ற கருத்துடன் கீதாசாரியர் கீதையை துவங்கினார். ‘உன் கடமைகளையெல்லாம் நீத்துவிட்டு எனது அகண்ட ஸத்-சித்-ஆனந்த சொரூபத்தில் திளைத்திருப்பாயாக’ என்று முடிவு கூறினார். இடையில் பகர்ந்துள்ள யாவும் கர்மத்தை கடப்பதற்கு உற்ற உபாயங்கள் ஆகும். இத்தகைய கீதா சாஸ்திரத்தைப் படித்தும் அனுஷ்டித்தும் பயன் அடையவல்ல அதிகாரி யார் என்னும் கேள்விக்கு பதிலாக இந்த சுலோகம் வருகிறது. இந்த சாஸ்திரத்தை கற்பிக்கும் ஆசிரியர் இந்த உபதேசத்தை யாருக்கு அளிக்க வேண்டும்? அந்த தகுதியை கொண்ட அதிகாரி யார்?
இங்கு, ‘இது’ எனும் அர்த்தத்தைக் கொடுக்கிற ‘இத3ம்’ எனும் சொல்லானது கீதா சாஸ்திரத்தைக் குறிக்கிறது. கீதையில் பகவான் இரண்டாம் அத்தியாயத்தின் இரண்டாவது சுலோகத்திலிருந்து பேசத் துவங்கியபோதிலும், உபதேசமானது உண்மையில் பதினோராவது சுலோகத்திலிருந்தே துவங்குகிறது. எனவேதான் சங்கரர் தனது பாஷ்ய உரையை அச் சுலோகத்திலிருந்து துவங்குகிறார். காரணமின்றி நீ துயருறுகிறாய் — அசோ1ச்யாந் அந்வசோ1சஸ்த்வம் எனத் தொடங்கி, துயருறாதே — மா சு1ச: என முடிகிற இந்த பகவத் கீதையின் முழு உபதேசமும் உனக்கு(தே) சொல்லப்பட்டது என்கிறார் பகவான். மேலும் இந்த சாஸ்திரம் குறிப்பிட்ட சிலருக்கு உபதேசிக்கப்படலாகாது எனக் கூறுகிறார் — ந வாச்யம். இதை யாருக்கு உபதேசிக்கக்கூடாது என்று கூறுவதன் மூலம், மறைமுகமாக இது யாருக்கு உபதேசிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் உணர்த்துகிறார். துயரத்தை கடக்கத் தேவையான வாழ்க்கை தத்துவங்கள் அடங்கப் பெற்றது பகவத்கீதை. அதை முறையாக எல்லார்க்கும் எடுத்து வழங்க வேண்டுமென்பதே பகவானது கருத்து. இந்த அறிவு பரவுமளவு வாழ்க்கை திருந்தியமையும். ஆனால் இதை யாருக்குப் புகட்டலாகாது என்கிற எச்சரிக்கையை பகவான் இங்கு கொடுக்கிறார். கண்ணில்லாதவர்களுக்கு சித்திரம் பயன்படாதது போல இவர்களுக்கு கீதோபதேசம் பெரும் பயன் அளிக்காது.
=> யாருக்கு இது சொல்லத்தக்கதல்ல?
(1) தவமில்லாதவன்:
தவம் அல்லது நெறியான வாழ்க்கை இல்லாதவனுக்கு, தர்மத்தை பின்பற்றாதவனுக்கு — அதபஸ்காய, இதை உபதேசிக்கக் கூடாது. மேலும் ‘தபஸ்’ என்பது அறிவு அல்லது அறிவைத் தேடுதல் என்றும் கருதப்படுகிறது. தைத்திரீயோபநிஷத்தில் ப்ருகுவிடம் அவரது தந்தை, ‘தவத்தால் நீ ப்ரம்மத்தை அறிவாயாக — தபஸா ப்3ரஹ்ம விஜிக்ஞாஸஸ்வ’ என்று கூறுகிறார். அங்கே, தபஸ் என்பது முழுக்க முழுக்க ஒரு விசாரணையைக் குறிக்கிறது. ஆனால் இங்கே, தபஸ் உடையவன் என்றால் இந்த அறிவைப் பெறத் தன்னைத் தயாராக்கிக் கொள்ளும் உறுதியும், அதற்காக முயற்சி செய்யும் மனப்பக்குவமும் உடையவன் என்று சொல்லலாம். இது இல்லாதவருக்கு(அதபஸ்காய) இந்த அறிவை வழங்கக் கூடாது.
(2) பக்தியில்லாதவன்:
வெறும் தவம் மட்டும் போதாது. அது பக்தியோடு கூடியதாக இருக்கவேண்டும். எனவே பக்தியில்லாத ஒருவனுக்கு(அப4க்தாய) இந்த உபதேசம் வழங்கப்படக்கூடாது என்கிறார். பக்தியே தவத்தை தூயதாக்குகிறது. இந்தப் பக்தி குருவின் மீதும், இறைவனின் மீதும் ஒருங்கே அமைந்திருக்க வேண்டும். அதாவது, மோக்ஷத்தைப் பெறுவதற்கு சிரத்தையும், ஈஷ்வரன் குறித்த ஒரு குறிப்பிட்ட அளவிலான விழிப்புணர்வும் அவசியமாகும். சம்ஸாரத்திலிருந்து விடுதலை அடைவதற்கு ஈஷ்வரனின் அருளை வேண்டுவது எவ்வளவு அவசியம் என்பதை இத்தகைய பக்தன் நன்கு உணர்ந்திருப்பான். ஞானத்தைத் தேடுபவனாக இருக்கின்ற ஜிக்ஞாசு-பக்தன் இங்கு குறிப்பிடப்படுகிறான். பரமேஷ்வரன் மீது அவனுக்குப் பக்தி இருப்பதால், குருவின் மீதும் அவரின் உபதேசத்தின் மீதும் அவனுக்கு ஆழ்ந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் இருக்கும். இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், ஒருவன் இந்த ஞானத்தைப் பெறுவதற்காக எத்துணைப் பெரிய அர்ப்பணிப்பையோ அல்லது தவத்தையோ மேற்கொண்டிருந்தாலும், அவனிடம் பக்தி எனும் பண்பு இல்லையென்றால் இந்த ஞானம் அவனுக்கு வழங்கப்படலாகாது.
மேலும், இத்தகையவர்களுக்கு எப்போது இந்த உபதேசம் வழங்கப்படக்கூடாது? என்கிற கேள்விக்கு, ‘ஒருபோதும் இல்லை — ந கதா3சந’ என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார் பகவான். பலவிதச் செருக்கும், தேகாத்ம புத்தியும் உடையவர்கள் கீதையின் உட்கருத்தை அறிந்துகொள்ள மாட்டார்கள். அத்தகையவர்களுக்கு அதைப் புகட்டுவது பயன்படாது.
(3) கேட்க விருப்பமில்லாதவன்:
கேட்க விரும்பாதவனுக்கு இக்கருத்துக்களை எடுத்துரைக்கக் கூடாது — அசு1ச்1ரூஷவே. தன்னைப் பற்றிப் பெரிதாக நினைத்துக்கொண்டோ அல்லது வேறு எக்காரணத்தை முன்னிட்டோ ஊக்கத்தோடு கேட்க மனமில்லாதவனுக்கு இதை உபதேசிக்கலாகாது. அத்தகைய ஒருவன் வேதாந்த வகுப்பிற்கு வந்தாலும் கூட, அவனது மனம் வேறெங்கோ அலைபாயும்; அல்லது உறக்கத்தை அடைவான். கேட்பதற்கான ஆழ்ந்த விருப்பம் கொண்டவன் ‘சு1ச்1ரூஷு’ என அழைக்கப்படுகிறான். சாஸ்திரங்களைக் கேட்பதில் அவனுக்குப் பேரன்பு இருக்கும்; அதற்காக அவன் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டிருப்பான். அத்தகைய ஒருவனுக்கே இக்கல்வி கற்பிக்கப்பட வேண்டுமே தவிர, எவ்வித அக்கறையுமின்றி இருப்பவனுக்கு அல்ல. மேலும் இக்கல்வி குறித்து ஒருவன் குறிப்பாகக் கேட்டுப் பெறாதவரை, அதனை அவனுக்குக் கற்பிக்கக் கூடாது என்பது ஆசிரியருக்கான ஒரு விதியாகும் — ந அப்ருஷ்ட: கஸ்யசித் ப்3ரூயாத். அதாவது, ஒருவன் இக்கல்வியை வேண்டிப் பெறாதவரை, அது அவனுக்கு வழங்கப்படலாகாது. வருண பகவானின் மகனாக இருந்தபோதிலும் ப்ருகு முனிவர் அவரிடமே இக்கல்வியை கேட்டுப் பெற வேண்டியிருந்தது; அவர் கேட்கும்வரை வருணர் அதனை அவருக்கு வழங்கவில்லை. எனவே, ஒருவன் ‘சு1ச்1ரூஷு’வாகத் திகழ வேண்டும். அதாவது, வகுப்பில் அமர்ந்து சாஸ்திரங்களைக் கேட்பதில் உண்மையான அன்பு இருக்க வேண்டும்.
(4) நிந்தனை செய்பவன்:
கீதை அல்லது கிருஷ்ணரிடம் குற்றம் காண்பவனுக்கும் இகழ்பவனுக்கும் இது அளிக்கப்படக்கூடாது. உதாரணமாக, ஒருவன் கிருஷ்ணரை அகந்தை கொண்டவராகக் கருதக்கூடும், ஏனெனில் கீழ்கண்ட பல வாக்கியங்களை கீதை முழுதும் அவர் கூறுகிறார்: எனக்கு மேலானது வேறெதுவும் இல்லை — மத்த: பரதரம் நாந்யத் கிஞ்சித3ஸ்தி. நீ என்னையே சரணடைய வேண்டும் — மாம் ஏகம் ச1ரணம் வ்ரஜ. உனது மனம் என்னிலேயே நிலைத்திருக்கட்டும் — மந்மநா ப4வ. எனது பக்தனாக இரு — மத்3ப4க்தோ ப4வ. என் பொருட்டே அனைத்து வழிபாடுகளையும் செய்வாயாக — மத்3யாஜீ ப4வ. என்னை வணங்கு — மாம் நமஸ்குரு. இவ்விதமாக ஒரு நபர் தன்னைப்பற்றி(தன்மை-பயன்பாடு) அதிகமாகப் பேசினால், மக்கள் அவரை கர்வம் கொண்டவர் என்று கருதக்கூடும். ஆனால் இங்கே, கிருஷ்ணர் பரமேஷ்வரனாகப் பேசுகிறார்; அவரை ஈஷ்வரனாக நோக்கினால் மட்டுமே, இவ்வுபதேசம் பயனுள்ளதாக அமையும். சாஸ்திரங்களை அறிந்து கற்பிக்கும் எவரும் ‘சாஸ்திரவித்’ ஆவர்; ஆனால் கிருஷ்ணரோ ‘சாஸ்திரக்ருத்’, சாஸ்திரத்தை உருவாக்கியவர். அதாவது சாஸ்திரங்களை இயற்றியவரும் அவற்றை வெளிப்படுத்தியவரும் அவரே ஆவார். கீதை எனும் சாஸ்திரம் இறைவனிடமிருந்தே நேரடியாக வெளிவந்தது என்று ஒருவன் கருதினால், அவனது சிரத்தை தனித்துவமானதாக அமையும்; அது அவனுக்கு நன்மையையும் அருளையும் பயக்கும். மாறாக, கிருஷ்ணரிடம் எவ்விதக் குற்றமும் இல்லாத நிலையிலும், ஒருவன் அவரிடம் குற்றம் காண்பானேயானால் அது ‘அஸூயை’ ஆகும். அது ‘கு3ணேஷு தோ3ஷ-த3ர்ச1ந’ எனப்படும், அதாவது நற்பண்புகளிலேயே குற்றங்காணும் மனப்பான்மை. பகவான் கிருஷ்ணர் அனைத்து நற்பண்புகளையும் முழுமையாகக் கொண்ட ‘ஸர்வ-கு3ணவாந்’ ஆகத் திகழ்கிறார்; அத்தகையவரிடம் குற்றம் காண்பது என்பது, நற்பண்புகள் மட்டுமே நிறைந்திருக்கும் இடத்தில் குறைபாடுகளைத் தேடுவதாகும். கிருஷ்ணரே ஈஷ்வரன் என்பதை அறியாதவனே அவரிடம் குற்றம் காண்கிறான் என்று ஆதிசங்கரர் குறிப்பிடுகிறார். அத்தகைய ‘அஸூயை’ கொண்டவனுக்கு இவ்வுபதேசத்தைக் கற்பிக்கக்கூடாது – அப்4யஸூயதி. ஏன்? ஏனெனில் அத்தகைய மனப்பான்மை கொண்டவனுக்கு செய்யப்படும் உபதேசம் ஒருபோதும் பயனுள்ளதாக அமையாது.
=> கீதையின் அதிகாரி யார்?
இந்த உபதேசம் யாருக்கு அளிக்கப்படக்கூடாது என்பதை விவரிக்கும்போது, அது யாருக்கு அளிக்கப்பட வேண்டும், யார் அதை அறியத்தக்க அதிகாரி(தகுதியுடையவன்) என்பது அங்கு தெளிவாகிறது. தவமுடையவன், பக்தியுடையவன், இத்தத்துவத்தை செவிகொடுத்துக் கேட்கும் ஆழ்ந்த விருப்பம் கொண்டவன், மற்றும் சாஸ்திரத்தை உபதேசிப்பவரிடம் குறை காணாத ஒருவனுக்கே இது போதிக்கப்பட வேண்டும்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
மழைத்தண்ணீர் மேட்டுநிலத்தில் தங்கிநிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு ஓடிவந்துவிடுகிறது. அதுபோல ஈஷ்வர கிருபையானது தற்பெருமையும், கர்வமுமுள்ளவர்களுடைய உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை. பணிவுள்ளவர்களின் உள்ளத்தில்தான் அது தங்கி நிற்கும்.
————————————————————————————————
||18.68|| கீதையை உபதேசிப்பவன் அடையும் நன்மை யாது?
य इमं परमं गुह्यं मद्भक्तेष्वभिधास्यति ।
भक्तिं मयि परां कृत्वा मामेवैष्यत्यसंशय: ।। ६८ ।।
ய இமம் பரமம் கு3ஹ்யம் மத்3ப4க்தேஷ்வபி4தா4ஸ்யதி ।
ப4க்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ச1ய: ।। 68 ।।
य: ய: யார் परमं गुह्यं इमं பரமம் கு3ஹ்யம் இமம் மிக ஆழ்ந்த இத்தத்துவத்தை मद्भक्तेषु மத்3ப4க்தேஷு என் பக்தர்களிடத்து अभिधास्यति அபி4தா4ஸ்யதி போதிக்கிறானோ मयि மயி என்னிடத்து परां भक्तिं பராம் ப4க்திம் மேலான பக்தி कृत्वा க்ருத்வா செலுத்தி असंशय: அஸம்ச1ய: சந்தேகமில்லாது माम् एव மாம் ஏவ என்னையே एष्यति ஏஷ்யதி அடைவான்.
மிக ஆழ்ந்த இத்தத்துவத்தை என் பக்தர்களிடத்து உபதேசித்து, என்னிடத்து மேலான பக்தியை செலுத்துகிறவன் ஐயமின்றி என்னையே அடைவான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இந்தப் பரம இரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்வேன். என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான்; ஐயமில்லை.
விளக்கம்:
இந்த சாஸ்திரத்தை உபதேசிக்கும் ஆசிரியன் அடையும் நன்மை என்ன என்பதற்கு பதில் கூறும் விதமாக இந்த சுலோகம் அமைகிறது. இதை வித்யா ஸ்துதி என்றும் கூறலாம்.
=> ஆசிரியன்:
‘அபி4தா4ஸ்யதி’ எனில் கற்பிப்பவன், எடுத்துரைப்பவன், போதிப்பவன் என்று பொருள். யார் இந்த சாஸ்திரத்தை கற்பிக்கிறார்களோ அந்த ஆசிரியர்களுக்கெல்லாம் இங்கு கூறப்பட்டிருக்கும் பலன் பொருந்தும் என்று பகவான் கூறுகிறார். இந்த சாஸ்திரம் இரு அடைமொழிகளுடன் இங்கு சுட்டப்படுகிறது. ஒன்று, மேலானது — பரமம். அதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொள்வது மோக்ஷத்தை அளிக்கும் என்பதால் இது மிக மேலானது.
இரண்டாவதாக, இது ரகசியமானது — கு3ஹ்யம். கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையேயான உரையாடல் வடிவில் அமைந்துள்ள இந்த சாஸ்திரமானது, மிகவும் புனிதமானது, ஆழ்ந்தது மற்றும் ரகசியமானது. தீர்வை தேடுபவனின் சொந்த இயல்பாகவே இது இருப்பதாலும், மேலும் புலன்கள் உள்ளிட்ட பிரமாணங்களுக்கு புலப்படாத காரணத்தினாலும் இது ரகசியமாகவே இருக்கிறது. மேலும் இது கற்பிக்கப்பட்ட போதிலும், உரிய தகுதிகள் இல்லாது கேட்பவனுக்கு இது எதையும் உணர்த்தாது என்பதாலும் இது ரகசியமானது. ஒருவன் வழிமுறைகளைப் பயன்படுத்தி சில இலக்குகளை அடைவதில் நாட்டம் கொண்டிருப்பானாகில் அத்தகையவனுக்கு இது ரகசியமாகவே இருக்கும். ஏனெனில் இங்கே வழிமுறைகளும் இல்லை, இலக்கும் இல்லை. ஆத்மாவை அறிவது மட்டுமே உள்ளது, அது மிகவும் நுண்மையானது(அதிசூக்ஷம), ஆகையால் அது புறவயப்படுத்தலுக்குக் கிடைக்காது. ஆனால் இது சாஸ்திரத்தினுடைய சொற்களின் வழியாக, உட்கருத்தை குறிப்பினால் உணர்த்தும் உள்ளார்ந்த அர்த்தத்தின்(லக்ஷ்யார்த2) மூலம் வெளிப்படுகிறது. ஆகவே இது ரகசியமானது — கு3ஹ்யம்.
=> பக்தன்(ஜிக்ஞாசு):
இப்படிப்பட்ட இந்த மேலான ரகசியமான உபதேசம் யாருக்கு வழங்கப்படுகிறது? எனது பக்தர்களுக்கு — மத்3ப4க்தேஷு, அதாவது பரமேஷ்வரனிடம் பக்தி செலுத்துபவர்களுக்கு. பொதுவாக, பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் இன்பம் (அர்த2-காம) ஆகியவற்றை அடைவதிலேயே ஈடுபாடு கொண்டுள்ளனர். அந்த இலக்குகளை அடைவதற்காக மட்டுமே அவர்கள் இறைவனின் உதவியை நாடுகின்றனர். ஆனால் இங்கு குறிப்பிடப்படும் பக்தர்கள் பரமேஷ்வரனைப் பற்றிய ஞானத்தையே விரும்புகின்றனர். அவர்கள் ஏதோ ஒன்றைப் பெறுவதற்காக அவரிடம் செல்வதில்லை. மாறாக, பரமேஷ்வரனை மட்டுமே அடைவதற்காக அவரிடம் செல்கின்றனர். மோக்ஷம் ஒன்றே அவர்களின் ஒரே குறிக்கோள் என்பதால் அவர்கள் ஜிக்ஞாசு-பக்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இத்தகைய தகுதி வாய்ந்தவர்களுக்கே இந்த ஞானம் வழங்கப்படுகிறது. இந்த உபதேசம் இத்தகைய பக்தர்களுக்கே அளிக்கப்படுகிறது என்று கூறுவதன் மூலம் கிருஷ்ணர் இங்கு பக்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். ஒருவன் ஒழுக்கநெறி(தபஸ்) கொண்டவனாகவும், சாஸ்திரங்களைக் கேட்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவனாகவும்(சு1ச்1ரூஷு) இருக்க வேண்டியது அவசியமே என்றாலும், இங்கு இறை-பக்திக்கே முக்கியத்துவம் அதிகம் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.
=> மேலான பக்தன்(ஞானி):
கீதையைப் உபதேசிப்பவன் மேலான சிறந்த பக்தன் என்று கூறுகிறார் கிருஷ்ணர், என்னிடம் மிக உயர்ந்த பக்தியை செலுத்துகிறார்கள் — ப4க்திம் மயி பராம். உபதேசிக்கும்போது அவன் பகவானை வெளிப்படுத்துகிறான், அதுவே பகவானுக்கு அவன் செய்யும் சேவையாகும். அவ்வாறு செய்வதற்கு, அவன் ஈஷ்வரனைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். பகவான் யாரை தனக்கு சமமானவனாகக் கருதுவதாகக் கூறினாரோ(ஞாநீ து ஆத்மைவ மே மதம்(சுலோகம் 7.18)) அந்த ஞானியே இதைச் செய்ய முடியும். இதுவே பரம-பக்தி எனப்படும். ஏனெனில் இறைவனுக்கும் பக்தனுக்குமிடையே இங்கு எவ்வித வேறுபாடும் இருப்பதில்லை. இந்த ஞானத்தின் மையப்பொருளே பகவான் என்பதாலும், மேலும் இங்குள்ள அனைத்தும் பகவானே எனும் உண்மையின் அடிப்படையிலும், இந்த ஞானத்தை உபதேசிக்கும் ஆசிரியன் பகவானிடமிருந்து வேறானவன் அல்ல. தனது ஞானத்தின் விளைவாக அவனது அகங்காரம் கரைந்துவிடுகிறது. எனவே அவன் கற்பிக்கும்போது, அது நேரில் பகவானே போதிப்பது போன்றே அமைகிறது. பரமேஷ்வரனுடன் ஒன்றிணைந்த நிலையை அடைந்த அவன் ஒரு ஞானி-பக்தன் ஆவான். மேலும் கற்பிப்பதன் வாயிலாக, அவன் தொடர்ந்து பரமேஷ்வரனுக்குச் சேவை செய்து வருகிறான்.
இந்த சாஸ்திரத்தை பிறர்க்கு எடுத்துரைக்கும் இந்த செயலை இனியொரு கோணத்தில் பின்வருமாறும் விளக்கலாம். கற்பவர்களுள் கற்பவனைவிடப் பிறர்க்குப் பயன்படுமாறு புகட்டுவதற்குக் கற்பவன் நன்கு கற்கிறான். பிறர்க்குப் புகட்டும்பொழுதெல்லாம் தனது அறிவு தெளிவடைகிறது. பிறர்க்கு ஒரு விஷயத்தை விளங்கச் செய்யுமளவு தனக்கே அது நன்கு விளங்குகிறது. கிணற்றில் நீர் இறைக்குமளவு நீர் ஊறுவது போல கல்வியைப் புகட்டுமளவு ஒருவனிடம் கல்வி வளர்கிறது. பகவத் விஷயங்களைப் பக்தர்களிடத்தில் பக்தி விசுவாசத்தோடு எடுத்துரைப்பதே பகவத் சேவையாகிறது. தன்னை ஓர் ஆசாரியன் என்று அத்தகையன் அகங்கரிப்பதில்லை.
=> பலன்:
அத்தகையவனுக்கு என்ன நிகழ்கிறது? அவன் என்னை மட்டுமே வந்தடைகிறான் — மாம் ஏவ ஏஷ்யதி. இப்போதே, இவ்வுலக வாழ்விலேயே அவன் விடுதலையைப் பெற்றவனாகிறான் — அதாவது அவன் ஒரு ஜீவன்முக்தன் ஆகிறான். இந்த ஞானத்தில் நிலைபெறுவதில்(நிஷ்டையில்) அவனுக்கு ஏதேனும் தடை இருக்குமாயின், பிறர்க்கு எடுத்துரைப்பதன் வாயிலாகவே அவன் அந்த நிலையை அடைகிறான். ஜீவனின் தன்மையும் ஈஷ்வரனின் தன்மையும் ஒன்றே என்பதால், இவ்வுலக வாழ்விலேயே தான் பரமேஷ்வரனிடமிருந்து வேறானவன் அல்ல என்பதை அவன் உணர்ந்துகொள்கிறான். இரண்டாவதாக, மரணத்திற்குப் பின்னரும் அவன் பரமேஷ்வரனையே சென்றடைகிறான். ஏனெனில், அவனது பிராரப்த கர்மங்கள் முழுமையாகத் தீர்ந்தொழிந்த பிறகு, எஞ்சி நிற்பது பரமேஷ்வரன் மட்டுமே.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
பகவான், பாகவதம்(சாஸ்திரங்கள்), பக்தர்கள் இவையாவும் ஒன்றேயாம்.
————————————————————————————————