||18.61|| லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
||18.61|| லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 செப்டம்பர், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.61 - 18.62

||18.61|| ஈஷ்வர சொரூபம்:

ईश्वर: सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति ।

भ्रामयन्सर्वभूतानि यन्त्रारूढानि मायया ।। ६१ ।।

ஈச்1வர: ஸர்வபூ4தாநாம் ஹ்ருத்3தே3சே1ऽர்ஜுந திஷ்ட2தி ।

ப்4ராமயந்ஸர்வபூ4தாநி யந்த்ராரூடா4நி மாயயா ।। 61 ।।


अर्जुन  அர்ஜுந  அர்ஜுனா       ईश्वर:  ஈச்1வர:  ஈஷ்வரன்     मायया  மாயயா  மாயையினால்      यन्त्र आरूढानि  யந்த்ர ஆரூடா4நி  இயந்திரத்திலேற்றிய     सर्वभूतानि  ஸர்வபூ4தாநி  எல்லா உயிர்களையும்     भ्रामयन्  ப்4ராமயந்  இயக்கிக்கொண்டு      सर्वभूतानां  ஸர்வபூ4தாநாம்  எல்லா உயிர்களினுடைய      हृद्देशे  ஹ்ருத்3தே3சே1  ஹிருதயத்தில்     तिष्ठति  திஷ்ட2தி  வீற்றிருக்கிறார்.


அர்ஜுனா, ஈஷ்வரன் அனைத்துயிர்களின் மனதினுள் வீற்றிருந்து, மாயையினால் அவன் எல்லா உயிர்களையும் இயந்திரத்தைபோல ஆட்டிப் படைக்கிறான்.   


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

அர்ஜுனா! எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான்; மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.


விளக்கம்:

ஈஷ்வரன் யார், எங்கே இருப்பவன், எவ்வாறு செயல்பட வைக்கிறான் என ஈஷ்வரனின் சொரூபம் இங்கு பகரப்படுகிறது. 


=> அர்ஜுனன் என்பதன் பொருள்:

இந்த சந்தர்ப்பத்தை தேர்ந்தெடுத்து ‘அர்ஜுனன்’ என்ற பெயரின் பொருளை, ‘சுத்தமான மனநிலை கொண்டவன்’ என்று சங்கரர் விளக்குகிறார். அவனுக்கு தூய்மையான மனம் இருக்கிறது. அர்ஜுனன் என்ற சொல்லுக்கு தெளிவு, பிரகாசம் என்கிற அர்த்தம் ரிக்வேதத்திலும் காணப்படுகிறது. அஹச்1ச க்ருஷ்ணம் அஹரர்ஜுநம் ச — ரிக் சம்ஹிதா 6.1.1. பகல் முதலில் மேகமூட்டத்துடன் இருண்டு(க்ருஷ்ண) இருந்தது என வர்ணிக்கப்படுகிறது. உடனே அதே பகல் அர்ஜுந என்று கூறப்படுகிறது, மேகமில்லாமல் மிகவும் தெளிவானதாக இருக்கிறது. ஆகவே மேகமில்லாத வெளிச்சமான பகல் போலத் தூய்மையான மனம் கொண்டவன் அர்ஜுனன். அதற்காக அவன் கோபப்படுவதில்லை என்று அர்த்தமல்ல, ஆனால் எந்த வஞ்சகமும் இல்லை. உள்ளம் தூய்மையானதாக இருப்பதால், அவனுக்கு இரக்கம் இருக்கிறது. அதே நேரத்தில், அவனுக்கு நியாயமான கோபம் போன்ற பிற தடைகளும் இருக்கின்றன.


=> ஈஷ்வர சொரூபம்:

மனம் புலன்கள் போன்றவை தத்தம் விதத்தில் செயல்படுவதும், முழு பிரபஞ்சமும் தன் இயல்பில் இயங்குவதும் ஈஷ்வர சன்னிதானத்தினாலேயே ஆகும். அந்த ஈஷ்வரன் புத்தியின் இருப்பிடமாகவுள்ள ஹிருதயத்தில் தங்கியிருப்பவன் என இங்கு கூறப்படுகிறது — ஹ்ருத்3தே3சே1 திஷ்ட2தி. எந்த வடிவத்தில் அங்கு அவன் வீற்றிருக்கிறான்? சாக்ஷி சைதன்ய ரூபமாக அங்கே தங்கியிருக்கிறான்; அதாவது சாக்ஷியாக இருக்கின்ற தூய அறிவு சொரூபம் அவன். எதற்கு சாக்ஷி? சிந்தனைகள் இருப்பதற்கும் இல்லாததற்கும் சாக்ஷி. ஒவ்வொரு எண்ணமும் நமக்குத் தெரிகிறது; எண்ணமின்மையும் நமக்குத் தெரிகிறது. இதை அறியச் செய்கிற அந்த அறிவாக, பிரக்ஞையுணர்வாக ஈஷ்வரன் ஹிருதயதேசத்தில் வீற்றிருக்கிறான். அங்குதான் பிரக்ஞையுணர்வு வெளிப்படுகிறது; அங்குதான் முழு உலகமும் அனுபவிக்கப்படுகிறது; அங்குதான் ஆத்மாவின் இருப்பு உணரப்படுகிறது. மேலும் நீங்கள் அங்குதான் ‘நான் இருக்கிறேன்’ என்பதை அறிகிறீர்கள். இது அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான உண்மை — ஸர்வபூ4தாநாம்


=> ஈஷ்வரனின் வேலை என்ன?

அங்கு நிலைபெற்றிருக்கின்ற ஈஷ்வரன் என்ன செய்கிறார்? அனைத்துயிர்களையும் இயக்குகிறார் — ஸர்வபூ4தாநி ப்4ராமயந். ஹிருதயத்தில் தங்கி ஒவ்வொரு ஜீவராசியையும் உயிரோடு செயல்படச் செய்கிறார். ஏனெனில் உடல் என்பது தன்னளவில் உயிருள்ளதல்ல; அது ஒரு ஜடப் பொருள். மரணத்திற்கு பிறகு நாம் காண்பது அதையையே; சிதைவடைகிற ஸ்தூலப்பொருள் அது. மனதிற்கும் தனிச் சைதன்யம் இல்லை; புலன்களும் சூக்ஷமப் பொருளால் ஆனவை; அவற்றிற்கும் தனியாகச் செயல்படும் சக்தியில்லை. ஆனால் இவை அனைத்தும் இப்போது உயிரோடும், உணர்ச்சியோடும் செயல்படுகின்றன. ஏனெனில் அவை சைதன்யத்தை கடன் வாங்கியுள்ளன. அளிக்கப்பட்டிருக்கிறது எனில், அதை யாரோ ஒருவர் அளித்திருக்க வேண்டும். அந்த சைதன்யத்தை வழங்குபவர், உடலுக்கும் மனதுக்கும் புலன்களுக்கும் உயிரூட்டும் அந்த அறிவுச் சன்னிதி, அதுவே ஆத்மா; அதுவே ஈஷ்வரன். 

அங்கு அவரது சுத்தமான இருப்பு மட்டுமே போதுமானது; எந்த செயற்பாடும் அவரால் தனியாக செய்யப்பட வேண்டியதில்லை. அவரது சன்னிதான விசேஷத்தினால் மட்டுமே, மனம் மனமாகச் செயல்படுகிறது; புத்தி புத்தியாகச் செயல்படுகிறது; கண்கள் கண்களாகப் பார்க்கின்றன; காதுகள் காதுகளாகக் கேட்கின்றன. அவரது இருப்பு மட்டுமே மனதையும், புலன்களையும், உலகத்தையும் இயக்குகிறது. அடித்தளத்தில் ஆத்ம தத்துவத்தின் இருப்பு இல்லையெனில் எதற்கும் இருப்பு இல்லை; எதுவும் ‘இருக்கிறது’ எனச் சொல்ல முடியாது. ஆத்மா தனது இருப்பையும் சைதன்யத்தையும் அனைத்திற்கும் கொடுத்து, தானோ மறைந்தபடி இருக்கிறது.  

இவ்விதம் அனைத்து ஜீவராசிகளையும் அவரவர் இயல்புகளின்படி இயக்கி, தத்தம் துறைகளில் வெளிப்படச் செய்கிறவன் ஈஷ்வரன்; அவர் மனதினுள் சாக்ஷியாக, புத்தியின் இருப்பிடமான ஹிருதயதேசத்தில் தங்கியிருக்கிறார்.


=> ஈஷ்வரன் எவ்வாறு செயல்படுத்துகிறார்?

ஜீவராசிகள் அனைத்தையும் ஈஷ்வரன் எப்படி இயக்குகிறார் என்பதற்கு இங்கு ஒரு சுவாரஸ்யமான உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் பொருத்தப்பட்ட உருவங்கள் மாயையாகச் சுழல்வதைப் போல — ப்4ராமயந் யந்த்ராரூடா4நி மாயயா இவ. வேர்ச்சொல்லான ‘ப்4ரம்’ என்பது ‘நகர்தல்’ என்றும் ‘சுழலுதல்’ என்றும் இரு அர்த்தங்களைக் கொடுக்கும். மேலும் இங்கு சங்கரர், ‘போல’ எனும் அர்த்தத்தை கொடுக்கின்ற ‘இவ’ எனும் சொல்லை சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். 

யந்த்ர’ என்பது பொதுவாக ஒரு கருவியைக் குறிக்கிறது; நமக்காக ஒரு செயலைச் செய்யும் எந்தவொரு உபகரணமும் எந்திரம் ஆகும். இங்கு அது ஒரு குறிப்பிட்ட கருவியைச் சுட்டுகிறது. பலவிதமான பொம்மைகள் பொருத்தப்பட்ட ராட்டினம் போன்ற ஒரு சுழலும் அமைப்பைக் குறிக்கிறது. பொதுவாக விழாக்களில் ராட்டினங்கள் சுற்றப்படும்போது அங்கு நாம் காண்பது சுழற்சியை மட்டும்தான்; அதை சுழற்றும் நபரை நாம் காண்பதில்லை. ஆண்கள், பெண்கள், விலங்குகள் போன்ற பலவகையான மர உருவங்கள், பின்னால் மறைந்திருக்கும் ஒருவரால் சுழற்றப்படும்போது, ​​அவை மந்திரத்தால், மாயையாகத் தாமே இயங்குவது போலத் தோன்றுகின்றன — மாயயா. ராட்டினத்தைச் சுழற்றுபவன் கண்ணுக்குத் தெரியாமல் எவ்வாறு மறைந்தபடி நிற்கிறானோ, அவ்வாறே ஈஷ்வரன் அனைத்து ஜீவராசிகளின் ஹிருதயதேசத்தில் தங்கி அவர்களை இயக்குகிறான், ப்4ராமயந். இக்காலத்து உதாரணமாக பேட்டரி சாவி பொருத்தப்பட்ட பொம்மையை சற்று சுழற்றிவிடும் போது, அது நடக்கும், பேசும், பல செயல்களைச் செய்யும். அவற்றுக்குத் தனியாக உயிரில்லை; ஆனால் உள்ளே இருக்கும் சக்தி காரணமாக அவை செயல்படுகின்றன. அவ்வாறே உடல்களுக்கும் தனியாக உயிரில்லை; அவை ஈஷ்வரன் வழங்கும் சைதன்யத்தால் செயல்படுகின்றன. பகவான் இந்த செயல்களை எப்படி செய்கிறார்? அதற்கு காரணம் அவரின் மாயாசக்தி — மாயயா. தனது மாயையினால் உலகத்தையும் உடல்களையும் உருவாக்குவது மட்டுமல்லாமல், அவற்றை உயிரூட்டி செயல்படுத்தவும் செய்கிறார். 

=> ஏன் அது மறைக்கப்பட்டுள்ளது?

அது மறைக்கப்பட்டுள்ளதை போல இருப்பது ஏன்? ஏனெனில் அது ஆத்மா. ஆத்மா என்பது ஒரு பொருள் அல்ல; அது தூய அறிவு சொரூபம் என்பதால் பிற அறியப்படுகிற விஷயங்களைப் பார்ப்பதைப் போல பிரமாணங்களால்(அறிய உதவும் கருவி) அதை காண முடியாது. ஆனால் தனது இருப்பினால் மட்டுமே மனதை அதன் செயல்களில் ஈடுபடுத்துகிறது. 

இதை இனியொரு கோணத்தில் பார்த்தால், கர்மவிதி இறைவனிடத்திருந்து வேறானது அல்ல. அதனால் ப்ராரப்த-கர்மமே ஒவ்வொருவரையும் அவரவர் செய்ய வேண்டிய செயல்களில் ஈடுபடுத்துகிறது. அவரவர்களின் சுபாவத்திற்கேற்ப அவர்களைச் செயல்பட வைக்கிறது. ஆகையினால், நீங்கள் எதையும் ‘செய்கிறீர்கள்’ என உரிமை சொல்ல முடியாது. அனைத்தும் ஈஷ்வரனின் செயல்பாடே ஆகும். அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில் அது செய்யப்பட வேண்டியிருக்கிறது; அதனால் அது செய்யப்படுகிறது. அதில் ‘நான் செய்கிறேன்’ என்று அஹங்கரித்துக் கொள்ளத் தேவையில்லை. இறைவனே அனைத்தையும் நடத்துகிறான் என்பதை ஏற்றுக்கொண்டு, செய்ய வேண்டியது எதுவோ அதை செய்யுங்கள். 


=> தவறான புரிதல் கூடாது:

இங்கு இனியொன்று மிகச் சரியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். சொந்த விருப்பத்திற்காக அதர்மமான ஒரு செயலை செய்யத் தலைபட்டு அதை பகவான்தான் செய்தார் என சொல்வது சரியல்ல. அது இங்கு சொல்லப்படும் கருத்து அல்ல. நமது கர்மபலனினால் விளைந்த சூழ்நிலையை அனுபவிக்கும்போது, யாராலோ இயக்கப்படுகிற இயந்திரத்தை போல அதை அனுபவித்துதான் ஆக வேண்டும், அதில் நமக்கு வேறு வழியில்லை. ஆனால் ஒரு கர்மத்தை செய்வதற்கு முன் நமக்கு தேர்ந்தெடுக்கிற உரிமை இருக்கிறது. ப்ராரப்தம், சுபாவம், குண அமைப்பு, வெளிப்புற சூழ்நிலை, உடல் மற்றும் மனம் இயங்கும் விதம் ஆகியவற்றில் நமக்கு தேர்வு இல்லை. இவை அனைத்தும் ஈஷ்வரன் அல்லது கர்மவிதியால் நிர்ணயிக்கப்பட்டவை. ஆனால், நமது மனநிலை, நமது அணுகுமுறை, நமது விழிப்புணர்வு, நமது சிந்தனைத் திசை, மாற்றத்திற்கான முயற்சியில் ஈடுபடுதல் இவை அனைத்திலும் நமக்கு தேர்வு(free will) உண்டு. எனவே கிருஷ்ணர் அர்ஜுனனிடம், ‘செய்ய வேண்டியது செய்யப்படட்டும். அஹங்காரத்தை விடு; நீ செய்பவன் அல்ல; ஆனால் மாற்றத்தை தொடங்குவது உன் தேர்வு’ என்கிறார். ஈஷ்வரன் அனைத்தையும் இயக்குகிறான் என்ற உண்மை அறிப்படும்போது, ‘நான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும்’ என்ற அழுத்தம் குறையும். ‘நான் செய்கிறேன்’ என்ற அஹங்காரம் கரையும். ‘நான் மாற்ற முடியாது’ என்ற மனச்சோர்வு நீங்கும். ‘நான் செய்ய வேண்டியதை மட்டும் செய்கிறேன்’ என்ற தெளிவு கிடைக்கும்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பாம்புக்குப் பல்லில் விஷமிருந்தபோதிலும் அவ்விஷத்தால் அது தீமையை அடைவதில்லை. ஆனால் அது பிறரைக் கடித்தால் அவ்விஷம் கடியுண்டவனுக்கு மரணத்தைத் தரும். இதைப்போல ஈஷ்வரனிடத்திலும் மாயை உள்ளது. ஆனால் அது அவரைப் பந்தப்படுத்தாது. ஜகத் முழுதையும் அவர் தனக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்.

————————————————————————————————

||18.62|| கடவுள் ஆட்டுவிக்கிறார் என்ற கருத்தில் வரும் பயன் இனி விளக்கப்படுகிறது:

तमेव शरणं गच्छ सर्वभावेन भारत ।

तत्प्रसादात्परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतं ।। ६२ ।।

தமேவ ச1ரணம் க3ச்ச2 ஸர்வபா4வேந பா4ரத ।

தத்ப்ரஸாதா3த்பராம் சா1ந்திம் ஸ்தா2நம் ப்ராஸ்யஸி சா1ச்1வதம் ।। 62 ।। 


भारत  பா4ரத  பரதகுலத்துதித்தவனே     सर्वभावेन  ஸர்வபா4வேந  எல்லாப் பாங்கிலும்     तम् एव  தம் ஏவ  அவனையே     शरणं गच्छ  1ரணம் க3ச்ச2  சரணமடை     तत् प्रसादात्  தத் ப்ரஸாதா3த்  அவனுடைய கருணையினால்    परां शान्तिं  பராம் சா1ந்திம்  மேலான சாந்தியையும்      शाश्वतं स्थानं  சா1ச்1வதம் ஸ்தா2நம்  என்றுமுள்ள நிலையையும்      प्राप्सयसि  ப்ராஸ்யஸி  அடைவாய்.


அர்ஜுனா, எல்லாப் பாங்கிலும் அவனையே சரணடை. அவனருளால் மேலாம் சாந்தியும் நிலைத்துள்ள வீடுபேறும் பெறுவாய்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

பாரதா! எல்லா வடிவங்களும் அவனையே சரணெய்து. அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.


விளக்கம்:

எல்லாம் ஈசன் செயல் என்று வினையாற்றுவதால் வருகிற பலன் யாது என இங்கு சொல்லப்படுகிறது.


=> முழுமையாக ஏற்றல்:

அந்த ஈஷ்வரனிடம் முழுமையாக சரணடைவாயாக — தம் ஏவ ஸர்வபா4வேந ச1ரணம் க3ச்ச2, என்கிறார் கிருஷ்ணர். இங்கு ‘ஸர்வபா4வேந’ எனில் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளுதலை, எல்லா விதத்திலும் தஞ்சமடைதலைக் குறிக்கிறது. நமது வாழ்க்கையின் மீது ஓரளவுக்கு நமக்கு கட்டுப்பாடு இருப்பது உண்மை; ஆனால் அதை முழுமையாக நாம் தான் நடத்துகிறோம் என்று ஒருவன் கருதினால் அது தவறு. உடல், மனம், புலன்கள் என அனைத்தும் நமக்கு கொடுக்கப்பட்டவை. ‘நான் தான்’ என்று நினைக்கின்ற அந்த அஹங்காரமும்கூட நமக்கு கொடுக்கப்பட்டதே ஆகும். நாம் இயல்பாகவே நம் மனதில் எழும் எண்ணங்களுக்கு ஏற்பவே செயல்படுகிறோம். கைவிட வேண்டுமென்று மனதில் தோன்றினால் கைவிடுகிறோம்; செய்ய வேண்டுமென்று மனம் கருதினால் அதைச் செய்கிறோம். ஆனால் சற்று விலகி நின்று, ‘செயல்களின் மீது மட்டுமே நமக்கு அதிகாரம் உண்டு; அவற்றின் விளைவுகளின் மீது ஒருபோதும் அதிகாரம் இல்லை — கர்மணி ஏவ அதி4கார: தே மா ப2லேஷு கதா3சந’, என்பதை உணரும்வரை அங்கு விவேகம் செயல்படாது போகிறது. 

மேலும், நமக்கு கிடைத்த அனைத்தும் நமது ப்ராரப்த-கர்மத்திற்கேற்ப, நமது உள்ளத்தில் வீற்றிருக்கும் ஈஷ்வரனால் அளிக்கப்பட்டவை. அந்த ப்ராரப்த-கர்மத்தின்படியே நிகழ்வுகள் அனைத்தும் அரங்கேறுகின்றன. அவற்றை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம் என்பதே இங்கு கேள்வி! ஈஷ்வரனுக்கு சொந்தமானவற்றை அவரிடமே முழுமையாக ஒப்படைத்துவிடுவதுதான் சாலச் சிறந்தது. கடலில் அலை இருப்பதுபோல ஜீவாத்மாக்கள் பரமாத்மாவில் இருக்கின்றன. அலைக்குச் சொந்தமான நீர் கிடையாது; ஜீவனுக்குச் சொந்தமான சரீரம் கிடையாது. அலைக்கு இருக்கின்ற வடிவம் வேளைக்கு ஒன்று; தேகத்துக்கு இருக்கின்ற வடிவமும் அத்தகையது. அலையின் செயலோ உண்மையில் கடலின் செயல். கடலுக்கு அன்னியமாக அலை இருக்கமுடியாது. ஜீவனுடைய செயல்களெல்லாம் உண்மையில் ஈசனது செயல்கள். ஈஷ்வரனுக்கு அன்னியமாக ஜீவர்கள் இல்லை. இப் பேருணர்ச்சியில் நிலைபெற்றிருப்பது தஞ்சமாகும்.

எனவே செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யுங்கள்; மற்றவைகளை அவர் பார்த்துக்கொள்வார். தனிமனிதன் என்கிற நிலையில் நின்று பார்க்கும்போதும், இறையாகிய ஈஷ்வரனின் அனைத்து விதிமுறைகளையும் தீர்மானிக்கும் அதிகாரம் நம்மிடமில்லை. அப்படியிருக்கையில், நமக்குச் சொந்தமில்லாத பொறுப்புகளை நாம் ஏன் சுமக்கவேண்டும்?

=> வரம்புகளின்மீதான புரிதல்:

நமது வரம்புகளைப் புரிந்துகொண்டு, அதை ஏற்றுக் கொள்வதென்பது மிகவும் முக்கியமான ஒன்று. நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் எண்ணிலடங்காதவை. உதாரணமாக, அர்ஜுனன் எதிர்கொள்ளும் இந்த போரை எடுத்துக் கொள்ளுங்கள். அது அவனது அதிகாரத்தில் இருந்திருந்தால் அவன் நிச்சயமாக அதை தவிர்த்திருப்பான். ஆனால் சில சூழ்நிலைகள் தவிர்க்க முடியாதவை; அப்போது அதை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஏனெனில் தவிர்க்க முடியாத சூழ்நிலையைத் தவிர்ப்பது அறிவின்மை. அதை எதிர்கொண்ட பிறகு, அதை முட்டாள்தனமாகவோ அல்லது புத்திசாலித்தனமாகவோ கையாளலாம். ஒரு சூழ்நிலையை அறிவுடன் எதிர்கொள் என்பதே கீதையின் உபதேசம் ஆகும். அர்ஜுனன் இந்த போர் சூழலை எதிர்கொள்ள விரும்பவில்லை, ஏனெனில் அவன் அனுதாபத்தால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறான். எனவே, கிருஷ்ணர் அர்ஜுனனைத் தன்னிடம் சரணடையுமாறு கேட்கிறார், தம் ஏவ ச1ரணம் க3ச்ச2. இங்கு சரணாகதி என்பது இவ்வுலக அனுபவங்களை பெறும்பொழுது போக்தாவாக அதை முழுமையாக ஏற்பதைக் குறிக்கிறது. எதற்காகவும் யாரையும் குறை கூறக்கூடாது. வருவதை மறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். ப்ராரப்த-கர்மமாக வெளிப்படும் ஈஷ்வரனிடம் உங்கள் சுபாவத்தைச் சரணடையும்போது, ​​நடக்க வேண்டியது நடக்கும் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள். இது மிகவும் அழகான உண்மை; இதை முழுமையாக உள்வாங்கிக்கொள்வது எளிதல்ல. நடக்க வேண்டியது நடக்கும், நான் செய்ய வேண்டியதை மட்டுமே செய்கிறேன்.


=> கடமையின்மீதான புரிதல்:

எல்லா பாங்கிலும் ஈசனையே தஞ்சமடைதல் என்பது செயற்கரிய செயலாகும். அதற்காக கர்மவிதியின் வடிவாகவே திகழ்பவராக அவரை நாம் அங்கீகரிக்க வேண்டும். இந்த படைப்பு என்பது ஒரு பிரம்மாண்டமான யாகம் போல, ஒரு பெரிய இயந்திரம் போல நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதில் ஒவ்வொருவரும் முக்கியமான அங்கமாகும். ஒரு பெரிய இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு சிறிய போல்ட் திருகு, தனது பணி வெறும் இறுக்கமாகப் பொருந்தியிருப்பது மட்டுமே என்றும், தான் வேறு எதையும் செய்வதில்லை என்றும் கருதி, தனது பணியை முக்கியமற்றதாக நினைக்கக்கூடும். ஆனால், அவ்வாறு இறுக்கமாகப் பொருந்தியிருப்பது மிக மிக முக்கியமானது; ஏனெனில், அது அவ்வாறு இல்லாவிட்டால் அந்த முழு இயந்திரத்தின் இயக்கம் நின்றுவிடும். அதுபோல நமக்கு வழங்கப்பட்ட எந்தவொரு பாத்திரமும் பார்ப்பதற்கு சிறியது போலத் தோன்றினாலும் அது அங்கு முக்கியமானது. அதனால்தான் நாம் அந்த இடத்தில் இருக்கிறோம். 

ஆகவே, அர்ஜுனன் ஈஷ்வரனிடம் சரணடையுமாறு அறிவுறுத்தப்படுகிறான். ‘சம்சாரத்தின் துயரத்தை நீக்க, ஈஷ்வரனிடம் சரணடைவாயாக’ என்று சங்கரர் கூறுகிறார். இது நமது மனச்சுமையை நீக்குகிறது. கடந்த காலத்தை விட்டுவிட்டு, ஒவ்வொரு நாளும் நம் முன் விரியும் நிகழ்வுகளை அவ்விதத்திலேயே ஏற்றுக்கொள்ளத் துணைபுரிகிறது. இயல்பான ஓட்டத்தில் இணைத்துக்கொண்டு, நம்மால் இயன்றதைச் செய்யும்போது கிடைக்கின்ற மனநிம்மதி சாதாரணமானதல்ல. 


=> சரணாகதியின் பலன்:

ஈசனிடம் தஞ்சமடைந்தபின் என்ன நிகழ்கிறது? அவர் அருளால்(தத் ப்ரஸாதா3த்) அவனுக்கு அந்தக்கரண-சுத்தி கிடைக்கிறது. இந்த மனத்தூய்மையின் விளைவாக முதலில் அவன் ஒரு ஒப்பீட்டளவிலான அமைதியை அடைகிறான் — சா1ந்திம் ப்ராப்ஸ்யஸி. மனம் அமைதியாக இருந்தால்தான் ஞானயோக சாதனையை மேற்கொள்ள முடியும். சிரவணம், மநநம் மற்றும் நிதித்யாசனத்தை உள்ளடக்கிய இந்த ஞானயோகமே ஜீவன்முக்தியை அளிக்கிறது. ஆகையினால், காலப்போக்கில் முழுமையான அமைதியை அடைகிறான் — பராம் சா1ந்திம் சா1ச்1வதம் ஸ்தா2நம் ப்ராப்ஸ்யஸி. நித்தியமான மாறாத அமைதியை அடைகிறான். இந்த சாந்தி என்பது மனதின் ஒரு நிலையல்ல; இது சுயத்தின் சொந்த இயல்பாகவே திகழ்கிறது. இறைவனிடம் சரணடைதல் எனும் மனப்பான்மையினால் உண்டாகும் எளிய அமைதியிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. எதையும் சார்ந்திராமல் சுயத்தின் உள்ளார்ந்த இயல்பாகவே அமைந்திருப்பதால் இது நித்தியமான நிலை ஆகும் — சா1ச்1வதம் ஸ்தா2நம். அதாவது, அங்கிருந்து மீண்டும் வருதல் இல்லை. மீண்டும் திரும்ப வேண்டிய தேவை இல்லாத ஒரு நிலைத்த இருப்பிடமாக இது திகழ்கிறது. இதுவே மோக்ஷம் ஆகும். இதுவே அனைத்து உயிர்களின் உள்ளத்திலும் வீற்றிருக்கும் அந்த ஈஷ்வரன் ஆவார்— ஸர்வபூ4தாநாம் ஹ்ருத்3தே3சே1 திஷ்ட2தி. ‘நான் அங்கு(உள்ளத்தில்) இருக்கிறேன்’ என்பதாக நீங்கள் நினைத்தால் அது தவறு. உங்கள் ‘அஹங்காரம்’ என்பது வெறும் ஒரு நிலையே ஆகும். அங்கே உண்மையில் இருப்பது பரமாத்மா மட்டுமே. அங்கே தனித்த ‘நான்’ எனும் அஹங்காரம் எதுவுமில்லை; இருப்பது ஈஷ்வரன் மட்டுமே. அந்த ஈஷ்வரனை புரிந்து கொள்ள முயலுங்கள்; அவரை சரணடையுங்கள் — தம் ஏவ ச1ரணம் க3ச்ச2. அப்போது நீங்கள், முதலில் ஒப்பீட்டளவிலான சாந்தியையும், பின்னர் பரம சாந்தியான மோக்ஷத்தையும் பெறுவீர்கள்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஶ்ரீ ராதை தன் கற்பு நிலையை நிரூபிப்பதற்கு ஆயிரம் துவாரங்கள் உள்ள ஒரு பாத்திரத்தில் ஜலங் கொண்டுவரும்படி கட்டளையிடப்பட்டாள். ஒரு துளி ஜலங்கூடக் கீழே விழாமல் அவள் கொண்டு வந்தவுடன், அங்கிருந்தவர்கள் எல்லாரும் இவளைப் போல் கற்புடைய ஸ்திரீ ஒருத்தி இதுவரையில் இருந்ததுமில்லை. இனி இருக்கப் போவதுமில்லை என்று வெகுவாகச் சிலாகித்தனர். அப்போது ராதை, “ஏன் என்னை சிலாகிக்கிறீர்கள்? கீர்த்தியெல்லாம் கிருஷ்ணனுடையதே என்று சொல்லுங்கள். நான் கேவலம் அவனுடைய பணிப்பெண்” என்றாள். 

————————————————————————————————