||18.52|| நிதித்யானத்திற்கானத் தகுதிகளின் தொடர்ச்சி:
विविक्तसेवी लघ्वाशी यतवाक्कायमानस: ।
ध्यानयोगपरो नित्यं वैराग्यं समुपाश्रित: ।। ५२ ।।
விவிக்தஸேவீ லக்4வாசீ1 யதவாக்காயமாநஸ: ।
த்4யாநயோக3பரோ நித்யம் வைராக்3யம் ஸமுபாச்1ரித: ।। 52 ।।
विविक्तसेवी விவிக்தஸேவீ தனித்திருப்பவனாய் लघ्वाशी லக்4வாசீ1 குறைத்து உண்பவனாய் यत वाक् काय मानस: யத வாக் காய மாநஸ: வாக்கு, உடல், மனதை அடக்கியவனாய் नित्यं நித்யம் எப்பொழுதும் ध्यान योग पर: த்4யாந யோக3 பர: தியான யோகத்தில் விருப்பமுள்ளவனாய் वैराग्यं வைராக்3யம் வைராக்கியத்தை समुपाश्रित: ஸமுபாச்1ரித: அடைந்தவனாய்;
தனித்திருந்து, குறைத்து உண்டு, மனம் மொழி மெய்யை அடக்கி, எப்பொழுதும் தியானயோகத்தில் திளைத்திருந்து, வைராக்கியம் பூண்டவனாய்;
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
தனி இடங்களை நாடுவோனாய், ஆசைகள் குன்றி வாக்கையும் உடம்பையும் மனத்தையும் வென்று தியான யோகத்தில் ஈடுபட்டு, எப்போதும் பற்றின்மையை நன்கு பற்றியவனாய்,
விளக்கம்:
ப்ரம்ம ஞானத்தில் நிலைபெறுவதற்கானத் தகுதியை பகவான் இங்கு மேலும் தொடர்கிறார்.
=> தனித்திருத்தல்:
‘விவிக்தஸேவீ’ என்பது தனிமையை எடுத்துக் கொள்ளுதலைக் குறிக்கிறது. மக்கள் நடமாட்டம் இல்லாத, ஆகவே சத்தம் இல்லாத இடம் ‘விவிக்த-தே3ச1’ எனப்படும். அது ஒரு காடாகவோ, ஆற்றின் மணல் கரையாகவோ, மலையாகவோ அல்லது குகையாகவோ இருக்கலாம் என்று சங்கரர் கூறுகிறார். அது ஒரு அமைதியான இடமாக இருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம். அத்தகைய இடத்தில் வாழும் மனப்பாங்கு கொண்டவன், அதை நடைமுறைப்படுத்துபவன் ‘விவிக்த-ஸேவீ’ எனப்படுகிறான். அவன் எப்போதும் தியானம் மற்றும் ஆத்ம சிந்தனையில் ஈடுபடுபவனாக இருக்கிறான்.
விஷயப் பற்றுடன் கூடிய லெளகிக புத்தியுடைய ஒருவன், பலருடன் சேர்ந்திருந்து காலத்தை கழிக்க விரும்புகிறான். இத்தகையவன் பேச்சுக்கு ஆள் இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்தவன் போல ஆகிறான். ஆனால் ஆத்ம சாதகனோ தனித்திருக்குமளவு அதிக மகிழ்ச்சியை அடைகிறான். புதிதாகத் தனித்திருந்து பழகுபவனுக்கு, மனதை புரிந்துகொள்ளத் தேவையான நேரத்தை இச்சூழல் அளிக்கிறது. எப்படி உணவானது உடலைப் பேணுகிறதோ அதுபோல தனித்திருத்தல் மன பரிபாகத்துக்குப் பயன்படுகிறது. மனிதர்களிடமிருந்து விலகி இருத்தலும், கண் மற்றும் காது வழியாக தேவையற்ற விஷயங்களை உள்ளே போடாமலிருத்தலும் தனிமையை எடுத்துக் கொள்வதை குறிக்கிறது. மனதுக்கு உணவாக நாம் எதை உள்ளே போட்டோமோ, அதுவே தியானத்தின்போது வெளிவருகிறது. எனவே தேவையில்லாத விஷயங்களைப் பேசாமல் கேட்காமல் இருத்தல் தியானத்திற்குச் சிறந்தது.
=> குறைத்து உண்ணுதல்:
ஆத்ம நிஷ்டைக்காக தியானத்தில் அதிக காலம் ஈடுபடும்போது, நிறைய ஆற்றல் செலவாவதில்லை. ஆகையினால் அவன் குறைந்த உணவு உட்கொள்ளும் ‘லக்4வாசீ1’ — ஆக இருக்கிறான். அவன் அதிகமாக உண்பதில்லை, அதே சமயம் எப்போதும் விரதமும் இருப்பதில்லை. இந்த இரண்டுமே தியானத்திற்கு உகந்தவை அல்ல. அவன் மிதமாக உண்ணுபவனாக இருக்கிறான். தூக்கம் போன்ற தியானத்திற்குத் தடையாக இருக்கும் விஷயங்களைத் தவிர்ப்பதற்காக மிதமாக சாப்பிட வேண்டும் என்று சங்கரர் கூறுகிறார். ஒருகால் அவன் அதிகமாகச் சாப்பிட்டால், செரிமானத்திற்கு அதிக இரத்தம் பயன்படுத்தப்படுகிறது, மனதிற்குப் போதுமான இரத்தம் கிடைப்பதில்லை. எனவே தியான வாழ்க்கை வாழ்பவனுக்குக் குறைந்த அளவு உணவு உட்கொள்வது மிகவும் அவசியம். உடல் ரீதியான வேலை இல்லாதபோது தூங்கும் எண்ணம் ஏற்படும். தியானம் செய்வதற்கு ஒருவனுக்குப் புத்துணர்ச்சியுடனும், தியானத்தில் ஈடுபடும் தன்மையுடனும் கூடிய ஒரு தெளிவான மனம் தேவை. தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்கிறார் வள்ளலார்.
=> மனம், மொழி, மெய்யை அடக்குதல்:
ஞானநிஷ்டையுடன் கூடிய வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் கட்டாயமாக தனது பேச்சு, கர்மேந்திரியங்கள் மற்றும் மனம் ஆகியவற்றின் மீது ஆதிக்கம் பெற்றிருக்க வேண்டும். அதாவது ‘யத வாக் காய மாநஸ’ - ஆக இருக்க வேண்டும். இந்த கட்டுப்பாடு தொடர்ந்த பயிற்சியால் மட்டுமே சாத்தியமாகும். இத்தகையவனுக்கு கர்மேந்திரியங்களில் வீண் அசைவுகள் மற்றும் விழிப்புணர்வற்ற இயந்திரத்தனமான செயல்கள் இருப்பதில்லை. பௌத்த துறவிகள் இதை கடைப்பிடிப்பதில் மிகவும் விடாமுயற்சியுடன் இருப்பதை பார்க்கமுடியும். தங்களது அனைத்து உறுப்புகளின் அசைவுகளிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். தனது அசைவுகள் குறித்த இந்த விழிப்புணர்வு ஒரு சாதகனுக்கு முக்கியமான ஒழுக்கமாகும்.
மேலும் ஆத்மசாதகன் மிகைப்பட பேசுவதில்லை. பயன்படாத புன்மொழிகள் அவன் வாக்கிலிருந்து வருவதில்லை. ஆத்ம சிந்தனையில் இருப்பவனுக்கு பேச்சிலும் கட்டுப்பாடு அவசியம். அவனே தனிமையான இடத்தில்(விவிக்தஸேவீ) வாழும் தகுதிகொண்டவனாக இருக்கிறான். இல்லையெனில் பேச வேண்டுமென்ற உள்ளார்ந்த அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் தன்னிடமோ, மரங்களிடமோ, மலைகளிடமோ என அவன் பேசத் தொடங்கிவிடுவான்.
அதேபோல, மனமும் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். யோகியின் ஆணைக்கு உட்பட்ட சித்த விருத்திகளே அவனது உள்ளத்தில் எழுகின்றன. மனம் அடங்கியிருப்பதற்கு அதுவொரு அறிகுறியாகும்.
=> தியானத்தை விரும்புதல்:
அத்தகையவன் முழுமையாகத் தன்னை தியானத்தில் அர்ப்பணித்துக் கொண்டவனாக இருக்கிறான் — த்4யாந யோக3 பர. இந்த கூட்டுச்சொல்லிற்கு இரு வழிகளில் விளக்கமளிக்கலாம்.
(1) தியானம் நிறைந்த வாழ்க்கையை, தியானயோகத்தையே முக்கியமாகக் கொண்டவனாக இருப்பவன் ‘த்4யாந யோக3 பர’ என்று அழைக்கப்படுகிறான்.
(2) தியானம் என்பது ஆத்மாவின் இயல்பு பற்றிய சிந்தனை என்றும், யோகம் என்பது ஆத்மாவை மட்டுமே கவனத்தின் ஒரே குவியமாக ஆக்குவது என்றும் சங்கரர் கூறுகிறார். வேதாந்த சாஸ்திரத்தின் உதவியால் புரிந்துகொண்ட வார்த்தைகளை மனதில் நிலைநிறுத்தி, அவற்றின் அர்த்தத்தை ‘நான்’ என்று உணருதல் இங்கு பேசப்படுகிறது. உதாரணமாக, இந்த அனைத்தும் ஆத்மா — ஆத்மா இத3ம் ஸர்வம், இந்த ஆத்மா முழுமையானது — அயம் ஆத்மா பூர்ண:, ஆத்மா தூய்மையானது — ஆத்மா சு1த்3த4:, ஆத்மா எப்போதும் முக்தன் — ஆத்மா நித்ய முக்த:, ஆத்மா எல்லையற்ற பரப்ரம்மம் — ஆத்மா பரம் ப்3ரஹ்ம. இந்த ச1ப்3த3-அநுவித்3த4-ஸவிகல்ப-சமாதி4, தியானம் என்று அழைக்கப்படுகிறது. முழு வேதாந்த சாஸ்திரமும் ஆத்மாவைப் பற்றியே பேசுகிறது. அதன் பார்வைக்கு ஒருவனின் மனதை அர்ப்பணிப்பது தியானம் ஆகிறது. அந்த சிந்தனையில் ஆழ்ந்து போவது யோகம் ஆகிறது. ஆத்ம தத்துவத்தையே நினைத்து கொண்டிருத்தல் தியானம், மனதை மீண்டும் மீண்டும் அந்த புள்ளிக்குக் கொண்டு வருதலில் இருக்கின்ற அர்ப்பணிப்பு அல்லது மன ஒருமுகப்பாடு யோகம் ஆகும்.
பகவான் இங்கு எப்பொழுதும் எனப் பொருள்படுகிற ‘நித்யம்’ எனும் சொல்லை இதற்கு அடைமொழியாகக் கொடுக்கிறார். இவ்வகையான வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சாதகன் வேறு எந்த முக்கியமான செயலையும் செய்வதில்லை. அதாவது தியானயோகம் மட்டுமே அவனது முக்கிய அர்ப்பணிப்பாக உள்ளது. எல்லா நேரங்களிலும் ஆத்ம சிந்தனையில் இருக்கிறான். உலக வியவகாரம் செய்வது சாதாரண மனிதனுக்கு எவ்வளவு இயல்பானதோ ஆத்ம சாதகனுக்கு தியானம் செய்வது அவ்வளவு இயல்பானது.
=> வைராக்கியத்தை அடைதல்:
‘வைராக்3யம்’ எனில் பற்றின்மை. இம்மையிலும் மறுமையிலும் உள்ள விஷய இன்பங்களில் பற்று வைக்காதிருப்பது யோகத்துக்கு உற்ற உபாயம் ஆகிறது. விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுபட்ட இந்த வைராக்கிய நிலை இருக்கும்போது மட்டுமே மேற்கூறியவைகள் அனைத்தும் சாத்தியமாகும். தெரிந்த மற்றும் தெரியாத சூழ்நிலைகள் மற்றும் பொருள்கள் மட்டுமல்லாமல் சொர்க்கமும்கூட அவனுக்கு எந்தவித ஈர்ப்பையும் ஏற்படுத்துவதில்லை. அந்த மனநிலையே வைராக்கியம் என்று அழைக்கப்படுகிறது. அது இல்லாமல், ஒருவன் அமைதியான இடத்தில் தங்கி, தியானயோகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், அவனது மனம் நிலைத்திருக்காது. ஆனால் இந்த வகையான வைராக்கியத்தை அடைந்த சாதகன், ஆத்ம-தியானம் செய்வதைத் தவிர வேறென்ன அவனால் செய்துவிட முடியும்!
————————————————————————————————
