வியாழன், 23 ஏப்ரல், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.18 - 18.19

||18.18|| ஞான விவகாரம் மற்றும் கர்ம விவகாரம்:

ज्ञानं ज्ञेयं परिज्ञाता त्रिविधा कर्मचोदना

करणं कर्म कर्तेति त्रिविध: कर्मसङ्ग्रह: ।। १८ ।।

ஞாநம் ஞேயம் பரிஞாதா த்ரிவிதா4 கர்மசோத3நா

கரணம் கர்ம கர்தேதி த்ரிவித4: கர்மஸங்க்3ரஹ: ।। 18 ।।


ज्ञानं  ஞாநம்  ஞானமும்     ज्ञेयं  ஞேயம்  அறியப்படுபொருளும்     परिज्ञाता  பரிஞாதா  அறிபவனும்    त्रिविधा  த்ரிவிதாமூன்று விதமான        कर्म चोदना  கர்மசோத3நா  கர்மத்தை தூண்டுபவைகள்     करणं  கரணம்  கருவி     कर्म  கர்ம  செய்யப்படுபொருள்     कर्ता  கர்தா  செய்பவன்      

इति  இதி  என       कर्मसङ्ग्रह:  கர்மஸங்க்3ரஹ:  கர்மத்துக்கு இருப்பிடம்       

त्रिविधத்ரிவித4மூன்றுவிதமானவைகள்.


அறிவு, அறியப்படுபொருள், அறிபவன் எனக் கர்மத்துக்குத் தூண்டுதல் மூன்று விதம். கருவி, கர்மம், கர்த்தா எனக் கர்மத்துக்கு இருப்பிடம் மூன்று விதம்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அறிவு, அறியப்படு பொருள், அறிவோன் -- என இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன. கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் சமைப்பு மூன்று பகுதிப் பட்டது.


விளக்கம்:

கர்மத்திற்கு தூண்டுதலாக இருப்பவைகள் குறித்து பகவான் இங்கு கூறுகிறார்.  


=> இரு வகையாக செயல்பாடுகள்:

(1) ஞான விவகாரம்: அறிவை அடைய மேற்கொள்ளும் செயல்கள்

(2) கர்ம விவகாரம்: ஞான விவகாரத்தை தவிர மற்ற அனைத்து செயல்களும் இதில் அடங்கும்.

எப்போதுமே ஞான விவகாரத்தை தொடர்ந்தே கர்ம விவகாரம் நடைபெறுகிறது. முதலில் அறிவு பின் தான் செயல். உதாரணமாக யோகாசனம் எனும் செயல் நடைபெற, முதலில் அது குறித்த அறிவு தேவை. அதை எப்படிச் செய்ய வேண்டும், அதனால் அடையப்படும் பயன் என்ன, அது தனக்கு தேவைப்படுகிற ஒன்றுதானா போன்றவை அறியப்பட்ட பிறகே அச்செயலில் ஒருவன் ஈடுபடுகிறான். எனவே அறிவே கர்மத்திற்கு காரணம் ஆகின்றது. ஞானம் என்பது அங்கம், கர்மம் என்பது அங்கி. ஆனால் ஆத்ம ஞானம் இதிலிருந்து விதிவிலக்கானது; அங்கு ஞானமே பலனைக் கொடுக்கிறது. இனி ஒரு ஞான விவகாரத்துக்கான அங்கங்கள் என்னென்ன எனப் பார்ப்போம்.


=> ஞான விவகாரத்திற்கான அங்கங்கள்:

பொதுவாக, வேதங்களில் ஒரு செயலைச் செய்ய கட்டளையிடும் வாக்கியம்சோத3நாஎன்று அழைக்கப்படுகிறது. இங்குகர்ம சோத3நாஎன்பது ஒருவன் செயலைச் செய்யத் தூண்டுதலாய் இருப்பது என்ற பொருளைத் தருகிறது. இந்த மூன்று விஷயங்கள் மட்டுமே ஒருவனைச் செயல்படத் தூண்டுகின்றனஅறிவு(ஞாநம்), அறியப்படும்பொருள்(ஞேயம்), அறிபவன்(பரிஞாதா). முதலில் ஞானத்தை பற்றிய விசாரம் செய்யலாம்.

(1) ஞாநம் - ஞாயதே அநேந இதி ஞாநம், எதைக் கொண்டு ஒன்றை அறியமுடிகிறதோ அது ஞாநம். இங்கு அது வ்ருத்தியைக் குறிக்கிறது. இது ஸத்யம் ஞாநம் அநந்தம் ப்ரம்ம எனும் வாக்கியத்தில் வருகிற ஞானம் அல்ல. அங்கு அது ஆத்மாவுக்கு ஒத்ததாக இருக்கின்ற சுத்த சைதன்யத்தை, பிரக்ஞையுணர்வைக் குறிக்கிறது. ஆனால் இங்கே அது வெறுமனேவ்ருத்திஎனப்படுகிற எண்ண மாற்றத்தை குறிக்கிறது. இந்த எண்ணங்களின் மூலமாகவே விஷயங்களைப் பற்றிய குறிப்பிட்ட அறிவை ஒருவன் பெறுகிறான். ஒரு பொருளை பற்றி நாம் எப்படி அறிகிறோம்? உதாரணமாக, ஒரு பூவைப் பார்க்கும்போது, அது உங்களது மனதில் பூவைக் குறித்த ஒரு எண்ண வடிவாக தோன்றி அந்த பூ எனும் அறிபடு பொருளைக் காட்டுகிறது. அதுவே இங்கு ஞானம் எனப்படுகிறது. மேலும் ஞானமே கர்மத்திற்கான அடிப்படையாக உள்ளது ஏனெனில் அச்செயலை எப்படி செய்ய வேண்டும், அதனால் என்ன பெறப்படுகிறது போன்ற அந்த குறிப்பிட்ட கர்மத்தைப் பற்றிய அறிவு இல்லாமல் ஒருவனால் அதை எப்படிச் செய்ய முடியும்

(2) ஞேயம் - ‘ஞேயம்என்பது அறியப்படும் பொருளைக் குறிக்கிறது, இது ப்ரமேயம் என்றும் அழைக்கப்படும். நமது அறிவுக்கு பொருளாக இருக்கின்ற இந்த அறிபடுபொருளும், அறிவும் ஏன் இங்கு தனித்தனியாகச் சொல்லப்படுகிறது? ஏனெனில் ஒவ்வொரு அறிபடுபொருளும் பின்னர் அறிவாக மாறுகிறது. அதாவது, உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பொருளானது(ஞேயம்) அறியப்படும் போதுதான் அது விரும்பப்படுகிறது. அதற்கு அங்கு அந்த பொருள் இருக்க வேண்டும். கேட்பதன் மூலமோ அல்லது பார்ப்பதன் மூலமோ அது அறிபடுபொருளாக மாறும்போது, அது அடையப்பட வேண்டுமென்ற எண்ணம் எழுகிறது. அது செயலாக மாறுகிறது. எனவே ஒரு செயல் நடைபெற தூண்டுதலாக அறிபடுபொருள் அமைகிறது.

(3) பரிஞாதா - அறிபவன். இது உபாதியோடு கூடியுள்ள ஜீவனைக் குறிக்கிறது. அறிபவன், அறிபடுபொருள், அறிவு இந்த மூன்றும் சேர்ந்து திரிபுடி எனப்படுகிறது. ஒன்று உள்ள இடத்தில் மற்ற இரண்டும் இருக்கும். அதாவது அறிபவன் ஒருவன் இருந்தால், அறிவு என்னும் இயல்பு அவனுக்குரியதாகிறது. இம்மூன்றும் சேர்ந்து செயலைத் தூண்டும் காரணிகளாக ஆகின்றன.


=> கர்ம விவகாரத்திற்கான அங்கங்கள்:

முன்னதாக, உடல் வாக்கு மற்றும் மனம் என மூன்று விதத்தில் நடைபெறுகிற கர்மங்களுக்கு ஐந்து காரணிகளைப் பார்த்தோம். ஆனால் இங்கே வேறொரு கோணத்தில் கர்மத்திற்கு ஆதாரமாக இருக்கின்ற(கர்மஸங்க்3ரஹ:) மூன்று விஷயங்கள் கூறப்படுகிறது.

(1) கரணம் - செயல் செய்ய பயன்படுத்தப்படும் கருவிகரணம்ஆகும். க்ரியதே அநேந இதி கரணம்எதன் மூலமாக ஒன்று செய்யப்படுகிறதோ அது கரணம், என சங்கரர் விளக்கமளிக்கிறார். கருவியில் அகக்கருவி, புறக்கருவி என இருவகை உண்டு. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவைகள் அந்தக்கரணம் அல்லது அகக்கருவி. மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், மற்றும் கர்மேந்திரியங்கள் ஐந்தும் சேர்த்து புறக்கருவிகளாக ஆகின்றன. இவையனைத்தும் கர்மம் செய்யப் பயன்படுகிற கருவிகள் ஆகின்றன

(2) கர்ம - இது பொதுவாக செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட செயலைக் குறிக்கிறது. ஆனால் இங்கு சங்கரர் இலக்கணப்படி இச்சொல்லை வரையறுக்கிறார் - ‘ஈப்ஸிததம’. அதாவது செயல் செய்பவனால் மிகவும் விரும்பப்படுவதுஈப்ஸிததமஆகும். உதாரணமாக, ஒருவன் ஏதாவது சமைக்க விரும்புகிறான் என வைத்துக் கொள்வோம். அதற்காக அவன் காய்கறிகளை நறுக்குகிறான் எனில் அது அவனது மிகவும் விரும்பப்படும் பொருள் அல்ல. அங்கு சமைத்த உணவுதான் அவனது மிகவும் விரும்பப்படும் பொருள்(ஈப்ஸிததமம்). அல்லது, ஒருவன் நியூயார்க்கிற்குச் செல்ல விரும்பி அதற்காக தனது காரில் ஏறுகிறான். இங்கு அவனதுஈப்ஸிததமம் கர்மஎன்பது கார் அல்ல, நியூயார்க். எனவே ஒரு செயலுக்கு ஒரு இரண்டாம்நிலை பொருளும் ஒரு முதன்மை பொருளும் இருக்கலாம். அதில் முதன்மையான, அல்லது இறுதி பொருளே உண்மையான கர்மம் ஆகின்றது.

(3) கர்தா - இது செயல் செய்பவனைக் குறிக்கிறது. கர்த்தா ஒருவன் இருந்தால், மற்ற அனைத்தும் அங்கு பிந்தொடரும். ஏன் அதைச் செய்கிறான் என ஒருவனிடன் கேட்கும்போது, அவனது பதிலிலிருந்து அவனுக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய அறிவு இருப்பதையும் அதைப் பெற விரும்புவதையும் நாம் பார்க்கமுடியும்

கருவி, கர்மம், கர்த்தாவும் திரிபுடி ஆகும். ஒரு செயலில் வேறு பலவிதமான காரணிகள் நம்மால் பார்க்க முடிந்தபோதிலும், குறைந்தபட்சத் தேவைகளாக இவை மூன்றும் இருப்பதால் இவைகள் ஒரு கர்மத்திற்கு ஆதாரமாக ஆகின்றனகர்மஸங்க்3ரஹ:. உடல், மனம், வாக்கு என எவ்வகை கர்மமாக இருந்தாலும் இவை மூன்றும் அதன் அடிப்படை காரணிகளாய் இருக்கும்.  

ஜீவனின் ஞான விவகாரத்திலும், கர்ம விவகாரத்திலும் உயர்ந்தது, தாழ்ந்தது என்கிற வேறுபாட்டைக் காண்கிறோம். இந்த வேறுபாட்டிற்கு காரணம் யாது என்பதற்கான விடையாக அடுத்த சுலோகம் வருகிறது

---------------------------------------------------------------------------------------------

||18.19|| முக்குண பாகுபாடிற்கான முகவுரை:

ज्ञानं कर्म कर्ता त्रिधैव गुणभेदत:  

प्रोच्यते गुणसङ्ख्याने यथावच्छृणु तान्यपि ।। १९ ।।

ஞாநம் கர்ம கர்தா த்ரிதை4 கு3ணபே43:

ப்ரோச்யதே கு3ணஸங்க்2யாநே யதா2வச்ச்2ருணு தாந்யபி ।। 19 ।।


ज्ञानं  ஞாநம்  ஞானமும்     कर्म   கர்ம   கர்மமும்     कर्ता   கர்தா   கர்த்தாவும்     

गुणभेदत:  கு3ணபே43:  குணபேதத்தினால்     त्रिधा एव  த்ரிதா4 ஏவ  மூவிதம் என்றே    गुणसङ्ख्याने  கு3ணஸங்க்2யாநே  குணங்களைப் பற்றிக் கூறும் சாங்க்ய சாஸ்திரத்தில்      

प्रोच्यते  ப்ரோச்யதே  பகரப்பட்டிருக்கிறது     तानि अपि  தாநி அபி  அவைகளையும்    

यथावत्  யதா2வத்  உள்ளபடி     शृणु  ச்1ருணு  கேள்.


ஞானமும், கர்மமும், கர்த்தாவும் குணபேதத்தினால் மூவகையென்று சாங்க்ய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவைகளையும் உள்ளபடி கேள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

குணங்களை யெண்ணுமிடத்தே, ஞானம், கர்மம், கர்த்தா, இவை குணபேதங்களால் இம்மூன்று வகைப்படும். அவற்றை உள்ளபடி கேள்.


விளக்கம்:

=> மூன்று சாத்தியக்கூறுகள்:

ஒரு செயலில் இருக்கின்ற ஐந்து காரணிகளைக் குறித்து ஆரம்பத்தில் பேசிய பகவான், பின்னர் வேறொரு கோணத்தில் மூன்று காரணிகளை சென்ற சுலோகத்தில் கூறினார். ஒரு செயலும், அதைச் செய்வதில் உள்ள காரணிகளும் மற்றும் அதற்கு கிடைக்கின்ற பலனும் என அனைத்தும் குணங்களின் வடிவத்தில் உள்ளன. குணங்கள் இல்லாமல் எந்த கர்மமும் இல்லை. எப்படி? அனைத்து கர்மங்களும் உடல்-மனம்-புலன்களிலிருந்து பிறக்கின்றன; அதாவது அடிப்படையில் மாயையிலிருந்து பிறக்கிறது. மாயை மூன்று குணங்களைக் கொண்டுள்ளதுத்ரிகுணாத்மிகா. எனவே சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்று குணங்களும் இவை அனைத்திலும் உள்ளன. கர்ம காரணிகள் ஒவ்வொன்றும் எவ்வாறு இம்மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன என்பதற்கான விளக்கம் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.

கர்ம காரணிகளாக இருக்கின்ற, ஞானமும் கர்மமும் கர்த்தாவும் இங்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அவைகள் ஒவ்வொன்றும் குண வேறுபாட்டின் அடிப்படையில் மூன்று வகை எனக் கூறப்படுகிறதுகு3ணபே43: த்ரிதா4 ஏவ ப்ரோச்யதே. இதைத் தவிர வேறு எந்த வகையும் இல்லை என்பதை வலியுறுத்துவதற்காக, ‘மட்டும்என்கிற பொருளைத் தருகிறஏவஎனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என சங்கரர் கூறுகிறார். ஒவ்வொன்றும் சத்வ ஆதிக்கத்திலோ, அல்லது ரஜஸின் ஆதிக்கத்திலோ அல்லது தமஸின் ஆதிக்கத்திலோ தான் இருக்கின்றன. நான்காவது சாத்தியக்கூறு இல்லை. இந்த மூன்று குணங்களின் கலவையில் நூற்றுக்கணக்கான வெவ்வேறு வெளிப்பாடுகளைப் பெறமுடியும், ஆனால் குண ஆதிக்கத்தின் அடிப்படையில் மூன்று சாத்தியக்கூறுகள் மட்டுமே உள்ளன.


=> சாங்க்ய மதம்:

குணங்கள் குறித்த விளக்கங்கத்திற்கான பிரமாணம் குறித்து பகவான் இங்கு கூறுகிறார். எங்கு அது குறிப்பிடப்பட்டுள்ளது? குணங்களைப் பற்றி கூறும் சாங்க்ய சாஸ்திரத்தில்கு3 ஸங்க்2யாநே, என்கிறார். சாங்க்ய-சூத்திரங்களை எழுதிய கபிலரின் சாஸ்திரத்தில் இது தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆறு சாஸ்திரங்களுள் இந்த சாங்க்ய சாஸ்திரம் நான்காவது ஸ்தானம் பெறுகிறது. இவர்கள் வேதங்களைப் பிரமாணமாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பல ஆத்மாக்கள் இருப்பதாகவும், படைப்புக்கு காரணமாக இருப்பது பிரதானம் எனப்படுகிற ஜடமான பிரக்ருதி தத்துவம் என்றும் கூறுகிறார்கள். புருஷன் மற்றும் பிரக்ருதி இரண்டும் ஸத்யம் எனக் கூறுவதால் இது த்வைத மதம் ஆகும். இவைகளை அத்வைதிகளான நாம் ஏற்றுக் கொள்வதில்லை எனினும் அதிலுள்ள குண பாகுபாடு குறித்த தத்துவத்தையும் சிருஷ்டி கிரமத்தையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். கபில-சாஸ்திரத்தை பின்பற்றுபவர்கள், குணங்களின் செயல்பாடுகள் மற்றும் விளைவுகள் முதலியவைகளை விளக்குவதில் நிபணர்களாக உள்ளனர் என்று சங்கரர் குறிப்பிடுகிறார். எனவே அந்த பகுதியில் அவற்றை நாம் ஏற்கிறோம். இதுவே வேதாந்த பாரம்பரியத்தின் சிறப்பிலப்பாகும். சங்கரரிடம் கணினி பொறியாளன் ஒருவன் அதன் இரும மொழி குறித்து பேசினால், அவர் அதை ஏற்றுக் கொள்வார், ஏனெனில் அந்த துறையில் அவன் நிபுணன். நமது அத்வைத கருத்தை எதிர்ப்பவர்களாக இருந்தாலும், அவர்களின் சொந்த துறையில் நிபுணர்களாக இருக்கும்பட்சத்தில் அதை நாம் ஏற்கிறோம். உதாரணமாக யோக சாஸ்திரத்தின்சாதனைகள்எனும் பகுதியை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவர்களின் உலகம் ஸத்யம், மனோ-நாசம் போன்ற கருத்துக்களை நாம் ஏற்பதில்லை. தர்க்க-சாஸ்திரத்தில் பிரமாணம் குறித்த கருத்துக்களை நாம் ஏற்கிறோம். அதுபோல, விஷிஷ்டாத்வைதத்தில்பக்திஎனும் கருத்தை நாம் ஏற்கிறோம்

சங்கரர் தனது ப்ரம்ம-சூத்ர-பாஷ்யத்தின் ஐந்தாவது அதிகாரத்தில் ஐந்தாவது சூத்திரத்திலிருந்து சாங்க்யர்களை எதிர்த்து வாதிடுகிறார். ஆனாலும், பயனுள்ளதாக இருக்கின்ற குணங்களைப் பற்றிய அவர்களின் விளக்கத்தை எப்போதும் ஏற்றுக்கொள்கிறார். பரப்ரம்மத்தை அறிவதற்கு சாங்க்ய சாஸ்திரம் பிரமாணம் அல்ல. அதற்கு வேதாந்த சாஸ்திரமே பிரமாணமாகிறது. முக்குணமயமாயுள்ள இயற்கைத் தத்துவங்களுக்கு சாங்க்ய சாஸ்திரம் பிரமாணமாகிறது.

கிருஷ்ணர் ஏன் கபில-சாஸ்திரத்தை இங்கு குறிப்பிட வேண்டும்? ஏனெனில் அவர் பேசப் போகின்ற தலைப்பை புகழ்வதற்காக. ‘அவைகளை உள்ளபடி கேள்யதா2வத் ச்1ருணுஎனக் கூறி, மூன்று வகையான ஞானம், மூவகை கர்மம் மற்றும் மூவகை கர்த்தாவை பற்றிய விளக்கத்தை தருகிறார்.

---------------------------------------------------------------------------------------------