||18.16|| ஆத்ம சொரூபம்:
तत्रैवं सति कर्तारमात्मानं केवलं तु य: ।
पश्यत्यकृतबुद्धित्वान्न स पश्यति दुर्मति: ।। १६ ।।
தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய: ।
பச்1யத்யக்ருத பு3த்3தி4த்வாந்ந ஸ பச்1யதி து3ர்மதி: ।। 16 ।।
तत्र एवं सति தத்ர ஏவம் ஸதி அவ்விஷயம் அங்ஙனமிருக்க य: तु ய: து யார் இனி
केवलं கேவலம் முழுமுதற் பொருளாகிய आत्मानं ஆத்மாநம் ஆத்மாவை
अकृत बुद्धित्वात् அக்ருத பு3த்3தி4த்வாத் புத்தி தெளிவடையாமையினால்
कर्तारं கர்தாரம் கர்த்தாவாக पश्यति பச்1யதி பார்க்கின்றானோ
दुर्मति: स: து3ர்மதி: ஸ: அறிவிலியாகிய அவன் न पश्यति ந பச்1யதி பார்க்காதவன்.
அது அங்ஙனமிருக்க, முழுமுதற் பொருளாகிய ஆத்மாவைக் கர்த்தாவாக இனி யார் காண்கிறானோ புத்தி பண்படாத அவ்வறிவிலி மெய் காண்கிறானில்லை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இங்ஙனமிருக்கையில் தனிப் பொருளாகிய ஆத்மாவைத் தொழில் செய்வோனாக எவன் புத்திக் குறைவால் காணுகிறானோ, அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.
விளக்கம்:
கர்ம நடைமுறைக்கும் ஆத்மாவிற்கும் உள்ள தொடர்பு யாது என்று இந்த சுலோகத்தில் பகவான் கூறுகிறார்.
=> அறிவிலி:
‘தத்ர ஏவம் ஸதி’ எனில் இது இப்படி இருக்க என்பது பொருள். எது? அதாவது, மேற்கூறப்பட்ட இவைகள் ஐந்துமே அனைத்து கர்மத்திற்கும் காரணிகளாக இருக்க, என்பது பொருள். இது இவ்விதம் இருக்கும்பொழுது, தன்னை செயல் செய்பவனாகப் பார்ப்பவன் தவறான அறிவை உடையவனாக, அறிவிலியாக இருக்கிறான் — து3ர்மதி. அப்படிப்பட்டவனது மனம், விஷயங்களை உள்ளபடி பார்ப்பதில்லை, மாறாக எல்லாவற்றையும் விபரீத புத்தியுடன் பார்க்கின்றது. கர்மம் மற்றும் கர்ம-பலத்திற்கு உட்பட்டு, பிறப்பு மற்றும் இறப்புக்கு உட்படுமளவுக்கு அவனது மனம் விஷயங்களை மிகவும் தவறாகப் பார்க்கிறது என்கிறார் சங்கரர். வெளிவிஷயங்களை தவறாகப் பார்க்கும்போது பெரிய தீங்கு எதுவும் நேரப்போவதில்லை. ஆனால் தன்னையே தவறாகப் பார்க்கும்போது, அது ஒரு பெரிய பிரச்சனையாகிறது ஏனென்றால் அது மற்ற அனைத்தையும் சிதைத்துவிடுகிறது. சுயம் தூய்மையானது, அது மட்டுமாக இருப்பது, கேவலம். அதாவது அது எந்த செயலையும் செய்வதில்லை, எந்த மாற்றத்திற்கும் ஆளாவதில்லை, எனினும் அதன் முன்னிலையில் அனைத்து செயல்களும் நடைபெறுகின்றன. தவறான அறிவை உடையவனே அப்படிப்பட்ட சுயத்தை கர்த்தாவாகப் பார்க்கிறான். அறியாமையும் விபரீத புத்தியுடனும் கூடியவன் ‘து3ர்மதி’ ஆவான்.
=> பண்படாதவன்:
அவனது விபரீதமான அறிவுக்கு என்ன காரணம்? பண்படாத புத்தியுடையவனாக இருக்கிறான் — அக்ருத பு3த்3தி4த்வாத். ‘க்ருத’ எனில் ‘செய்யப்பட்ட’ என்று அர்த்தம். ‘ஸம்ஸ்க்ருத’ எனில் ‘நன்றாக செய்யப்பட்டது அல்லது (இலக்கணத்தினால்) நன்கு தூய்மையாக்கப்பட்டது’. ‘அக்ருத’ எனில் ‘நன்றாக செய்யப்படவில்லை அல்லது தூய்மையாக்கப்படவில்லை’, அதாவது மனமானது அனைத்து விபரீதங்களிலிருந்தும் தன்னை தூய்மைபடுத்திக் கொள்ளத் தேவையான விசாரத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்பது பொருள். குருவின் மூலம் வேதாந்த உபதேசத்தை முறையாகக் கேட்காத மனம் என்று சங்கரர் இதை கூறுகிறார்.
வேதாந்த-சாஸ்திரத்தைப் படிப்பது ஒருவனது மனதை பண்படுத்தப் போதுமானது. ஏதேனும் தடையோ அல்லது சந்தேகமோ இருக்கும்பட்சத்தில், குருவின் உதவியுடன் அதை களையமுடியும். அறிவானது உட்கிரஹிக்கப்பட்டு தன்மயமாவதற்கு, அதை பகுத்தறிவின் மூலம் சரியான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஒரு புதிரின் தீர்வைக் கண்டறிவதுடன் இதை ஒப்பிடலாம். யாராவது உங்களுக்கு ஒரு வார்த்தை புதிரைக் கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். சிறிதுநேர முயற்சிக்கு பின் நீங்கள் அந்த வார்த்தையைக் கண்டுபிடித்துவிடுகிறீர்கள். ஆனால் உங்களுக்கு அந்த புதிரைக் கொடுத்த நபர் முழு விஷயத்தையும் கலைத்துப்போட்டு, மீண்டும் அதை செய்யச் சொல்கிறார். இப்போது நீங்கள் அதை கண்டுபிடிக்க மூன்று நாட்கள்கூட ஆகலாம், அதை கண்டுபிடிக்கலாம், அல்லது கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். அதற்கு தீர்வு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும், ஆனால் அது உட்கிரஹிக்கப்படாமல் எதேச்சையாக கண்டறியும் பட்சத்தில், அதை எப்படி பெற்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. மாறாக, புதிரை உங்களுக்குக் கொடுத்த அந்த நபர் தீர்வை சரியாகக் கவனித்து, பகுப்பாய்வு செய்து, புரிந்துகொண்டு ஏற்கெனவே உட்கிரஹித்துள்ளார். இப்போது எது எங்கு இருந்தாலும் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவரால் அதை தீர்த்துவிட முடியும். சாஸ்திரத்தின் உட்பொருளை கிரஹித்து தன்மயமாக்கிய வேதாந்த-குருவும் இப்படிப்பட்டவரே. இந்த உட்கிரஹிக்கும் செயல்முறை விசாரம் என்று அழைக்கப்படுகிறது. சங்கரர் சொல்வது போல, இது நம்பிக்கைகுட்பட்ட விஷயம் அல்ல, அறிவிற்குட்பட்ட விஷயம் என்பதால் விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது. இந்த விசாரணை முழுமையடையாதபோது, எதனுடனும் சம்பந்தமில்லாமல் அதுமட்டுமாக இருக்கின்ற ஆத்மாவானது கர்த்தாவாக பார்க்கப்படுகிறது — கேவலம் ஆத்மாநம் கர்தாரம் பச்1யதி.
=> பார்த்தும் பார்க்காதவன்:
உடலின் மரணத்திற்கு பின்பும் ஆன்மா தொடர்ந்து வாழ்கிறது என நம்புவதின் மூலம், ஆத்மா உடலிலிருந்து சுயாதீனமாக இருக்கிறது என்கிற நம்பிக்கையுடன் கூடிய ஆஸ்திகர்களும்கூட ஆத்மாவை கர்த்தாவாகவே பார்க்கின்றனர். இவர்கள் சாஸ்திரத்தை நம்புகின்றனர், ஆனால் ‘ஆத்மா செயலிலிருந்து முற்றிலும் விடுபட்டது’ என்பதை அங்கீகரிக்கவில்லை. பொதுவாக பூர்வ-மீமாம்சகர்கள் என்று அழைக்கப்படுகிற இவர்களும்கூட, வேதங்களில் சிறந்த புலமைமிக்கவர்களாக இருந்தாலும், ஆத்மாவின் தன்னியல்பை அறியாத காரணத்தினால் மனம் முதிர்ச்சியடையாதவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். கற்றலை முறையாக மேற்கொள்ளாதவர்கள் ஆதலால் ‘அக்ருத பு3த்3தி4’ உடையவர்கள் ஆகின்றனர். ஆகவேதான் அவர்கள் ‘து3ர்மதி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆத்மாவின் எதார்த்தத்தையோ அல்லது கர்மத்தின் உண்மைதன்மையையோ அவர்கள் பார்ப்பதில்லை. பட்டியலிடப்பட்ட இந்த ஐந்து காரணிகள்தான் அனைத்து கர்மங்களுக்கும் காரணமாக இருக்கின்றது. அங்கேயே இருந்தும்கூட சாக்ஷியாக மட்டுமே திகழும் ஆத்மா எதிலும் ஈடுபடுவதில்லை, எப்போதும் அகர்த்தாவாகவே இருக்கிறது. அதை அவர்கள் பார்ப்பதில்லை. எனவேதான் சங்கரர், அவன் பார்த்தும் பார்க்காதவன் — பச்1யந் அபி ந பச்1யதி, என்கிறார். அவன் ஆத்மாவை உடலிலிருந்து வேறுபட்ட ஒன்றாகப் பார்த்தாலும், அதை கர்த்தாவாக தவறாகப் பார்ப்பதால், பார்த்தும் பார்க்காதவனாக ஆகிறான். எப்படி கண்புரை நோயால் பாதிக்கப்பட்டவன், ஒரே ஒரு சந்திரன் இருந்தும் ஒன்றுக்கு மேற்பட்ட சந்திரன்களைப் பார்க்கிறானோ அதுபோல என உதாரணம் தருகிறார்.
‘து3ர்மதி’ உடையவர்களை சுட்டிக்காட்டிய பிறகு, அடுத்த சுலோகத்தில் பகவான் தெளிவான மனதைக் கொண்டவர்களை(ஸுமதி) பற்றிப் பேசுகிறார்.
---------------------------------------------------------------------------------------------
||18.17|| ஞானயோக முடிவுரை:
यस्य नाहङ्कृतो भावो बुद्धिर्यस्य न लिप्यते ।
हत्वापि स इमाँल्लोकान्न हन्ति न निबध्यते ।। १७ ।।
யஸ்ய நாஹங்க்ருதோ பா4வோ பு3த்3தி4ர்யஸ்ய ந லிப்யதே ।
ஹத்வாபி ஸ இமால்லோகாந்ந ஹந்தி ந நிப3த்4யதே ।। 17 ।।
यस्य யஸ்ய யாருக்கு अहङ्कृत: भाव: அஹங்க்ருத: பா4வ: நான் கர்த்தா என்ற எண்ணம்
न ந இல்லையோ यस्य யஸ்ய யாருக்கு बुद्धि: பு3த்3தி4: புத்தி
न लिप्यते ந லிப்யதே பற்றுகிறதில்லையோ स: ஸ: அவன்
इमान् लोकान् இமாந் லோகாந் இவ்வுலகத்தாரை हत्वा अपि ஹத்வா அபி கொன்றாலும்
न हन्ति ந ஹந்தி கொல்கிறானல்லன் न निबध्यते ந நிப3த்4யதே பந்தப்படுகிறானல்லன்.
யாருக்கு ‘நான்’ எனும் அஹங்காரமில்லையோ, யாருடைய புத்தி பற்று வைப்பதில்லையோ, அவன் இவ்வுலகத்தாரை கொன்றாலும் கொல்லாதவனே; பந்தப்படாதவனே.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
'நான்' எனுங் கொள்கை தீர்ந்தான், பற்றுதல்கள் அற்ற மதியுடையான். அவன் இவ்வுலகத்தாரை யெல்லாங் கொன்ற போதிலும் கொலையாளியாகான், கட்டுப்பட மாட்டான்.
விளக்கம்:
ஞானியிடம் உள்ள ஞானம் மற்றும் ஞான பலனைக் கூறி ஞானயோக தலைப்பை முடிவுரை செய்கிறார். அறிவிலிகளைப் பற்றி சென்ற சுலோகத்தில் குறிப்பிட்ட பகவான், இங்கு யார் நல்லறிவுடையவர்கள் எனக் கூறுகிறார்.
=> ஆத்மாவுக்கு கர்மம் இல்லை:
குரு மற்றும் சாஸ்திரத்தின் உதவியுடன் சரியான முறையில் கற்றலை மேற்கொண்ட ஒருவனுக்கு ‘நான் செய்பவன், கர்த்தா’ என்கிற எண்ணம் இருப்பதில்லை — அஹங்க்ருத: பா4வ:. அஹங்காரம் இவனுக்கு பொய்பிக்கப்பட்டுவிட்டது. ‘நான் செயல் செய்பவன் அல்ல, அகர்த்தா’ என்று பிரித்துப் பார்க்கிற அறிவை அவன் எவ்விதம் பெற்றான் என்பதை சங்கரர் விளக்குகிறார். உடல், புலன்கள், மனம் போன்ற ஐந்து காரணிகளும் அறியாமை(அவித்3யா) காரணமாக ஆத்மாவின் மீது ஏற்றிவைக்கப்படுகின்றன. இதனால் சுயாதீனமாக விளங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவானது உடல்-புலன்கள்-மனம் ஆகியவற்றுடன் இருப்பதாகத் தோற்றமளிக்கிறது. அனைத்து செயல்களையும் செய்பவர்களாக இந்த ஐந்து காரணிகளுமே விளங்குகின்றன - கு3ணா கு3ணேஷு வர்தந்தே, குணங்கள் குணங்களை நாடிச் செல்கிறது, ‘நான்’ அல்ல. அனைத்து செயல்களுக்கும் நான் சாக்ஷி என்பதை அவன் தெளிவாகப் பார்ப்பவனாக இருக்கிறான்.
அத்தகையவனது புத்தியானது பாதிக்கப்படுவதில்லை — பு3த்3தி4: ந லிப்யதே, என்கிறார் பகவான். அவனுக்கு எந்த வருத்தமோ அல்லது துயரமோ இல்லை. எனவே அவன் தைத்திரீயோபநிஷத்தில்(2-9-1) சொல்லப்பட்டது போல, ‘நான் ஏன் நன்மை செய்யவில்லை? நான் ஏன் தவறு செய்தேன்? - கிம் அஹம் ஸாது3 ந அகரவம் கிம் அஹம் பாபம் கரவம் இதி’ என தன் மீது குறை கூறிக்கொள்வதில்லை. பெரும்பாலான மக்கள் இத்தகைய குற்றவுணர்ச்சியால் அல்லல்படுகின்றனர். இதை செய்திருக்கக் கூடாது, இதை செய்திருக்க வேண்டும் என்று தங்களது சாதனைகளில் தொடங்கி, கல்வி, விளையாட்டு, தொழில் போன்றவைகள் மட்டுமல்லாது இசை உள்ளிட்ட திறன்களை கற்றுக்கொள்ளுதல் வரை பல்வேறு துறைகளில் குறைபட்டுக் கொள்கின்றனர். இவை அனைத்தும் ஒருவனின் சொந்த செயலை அடிப்படையாகக் கொண்டவைகள். ஆனால் ஒரு செயல், குற்ற உணர்வை ஏற்படுத்துவதில்லை; ‘நான்’ என்பதை மையமாகக் கொண்ட செயல் மட்டுமே குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. எனவே குற்றவுணர்வும் ‘நான்’ என்பதும் ஒன்றாகச் செல்கின்றன. ஆனால் உண்மையில் ‘நான்’ என்பது எல்லா செயல்களிலிருந்தும் விடுபட்டது ஆகையால் ஆத்மாவுக்கு நல்லது ஏது? கெட்டது ஏது? இதை அறிந்து, இந்த அறிவை தன்னியல்பாக்கியவனது மனம் எவ்வித துயரங்களாலும், குற்றவுணர்வுகளாலும் பாதிக்கப்படுவதில்லை — தஸ்ய பு3த்3தி4: ந லிப்யதே.
=> ஞானி கொன்றாலும்கூட அவன் கொல்லவில்லை:
இவ்விதத்தில் தெளிவாகப் பார்க்கின்ற இந்த ஞானி, போர்க்களத்தில் கூடியிருக்கும் இந்த மக்களை அழித்தாலும், அழிவுச் செயலைச் செய்வதில்லை - ஹத்வா அபி இமாந் லோகாந் ந ஹந்தி, என்கிறார். ‘கொன்றாலும் கொல்லாதவனே’ என்று எப்படிச் சொல்ல முடியும்? ‘பார்வையாளின் பார்வையிலிருந்து பார்க்கும்போது மட்டுமே அந்த நபர் செயல் செய்ததுபோலத் தெரிகிறது; ஆனால் உண்மையில் ஆத்மா எந்த செயலையும் செய்யவில்லை’ என சங்கரர் இதற்கு விளக்கமளிக்கிறார். எனவே, அவன் எந்த கர்ம விளைவுகளாலும் பந்தப்படாதவன், ந நிப3த்4யதே. ஏனெனில் அது உடல் உள்ளிட்ட ஐந்து காரணிகளிலிருந்து வெளிவந்தது. அங்கு ஆத்மா என்பது சாக்ஷி மட்டுமே, அனைத்து செயல்களின் ஆதாரமாக(அதி4ஷ்டா2ந) இருந்தாலும் அது எந்த செயலையும் செய்யாதது. உதாரணமாக நீதிபதி ஒருவர் குற்றவாளியைத் தூக்கிலிடத் தீர்ப்பளிக்கும்போது, அவரை ஒரு உயிரை எடுக்கும் குற்றவாளி எனச் சொல்ல முடியுமா? இல்லை. சட்டத்தை செயல்படுத்தும் ஒரு கருவியாக மட்டுமே தன்னை பார்ப்பதால் அவருக்கு எந்த குற்றவுணர்வும் இருப்பதில்லை. ‘நான் காரணம்’ என்கிற எந்த அஹங்காரமும் அங்கு இல்லை.
கண்ணாடியில் ஒருவனுடைய பிம்பம் தோன்றி ஆடுகிறது. அத்தோற்றத்துக்கும் ஆட்டத்துக்கும் கர்த்தா கண்ணாடியல்ல. மேலும், அந்த பிம்பம் கண்ணாடியில் பதிந்திருப்பதும் இல்லை. பிம்பத்தை காட்டிக்கொண்டிருக்கும்போதிலும் கண்ணாடி பற்றற்றிருக்கிறது. அதுபோல ஆத்ம-சைதன்யத்தின்மீது பிரக்ருதியின் செயல்களெல்லாம் தோன்றுகின்றன. ஆனால் ஆத்மா ஒரு செயலும் செய்வதில்லை. அப்பேரறிவானது பிரக்ருதியை விளக்குவதால் அது பிரக்ருதியில் பந்தப்பட்டதுமல்ல. தனது நிஜசொரூபமாகிய சைதன்யத்தில் உறுதிபெற்றிருப்பவன் உடலும் புலன்களும் செய்கின்ற செயலில் கட்டுண்டு போவதில்லை. கொல்லுதல் முதலியவை பிரக்ருதியின் செயல்களாகும்.
இந்த சுலோகத்தில் சொல்லப்படுவது கொலைக்கான ஒப்புதல் அல்ல. மிகவும் கடினமான, முறையற்ற செயலை எடுத்துக்காட்டுவதன் மூலம், மற்ற அனைத்து செயல்களும் இங்கு உள்ளடக்கப்பட்டுவிட்டது. இது ப்ரதம-மல்ல-ந்யாய என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக ஒருவன் குத்துச்சண்டை சாம்பியனாக விரும்பினால், தற்போதைய சாம்பியனை மட்டுமே தோற்கடித்தல் வேண்டும். அதேபோல், இங்கே, கொலை செய்யும் செயலைச் சுட்டிக்காட்டுவதன் மூலம், பகவான் மற்ற அனைத்து செயல்களையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆத்மாவை அழியாதது, மாறாதது, பிறவாதது, குறையாதது என்று அறிபவன் எப்படி யாரைக் கொல்வான், யாரைக் கொல்விப்பான்? — வேத3 அவிநாசி1நம் நித்யம் ய ஏனம் அஜம் அவ்யயம் கதம் ஸ புருஷ: பார்த்த3 கம் கா4தயதி ஹந்தி கம், சுலோகம் 2.21-ல் சொல்லப்பட்டது. மேலும் ‘இந்த ஆத்மா கொல்வதுமில்லை, கொல்லப்படுவதுமில்லை — நாயம் ஹந்தி ந ஹந்யதே’ என்று சுலோகம் 2.19-ல் சொல்லப்பட்டது. மேலும் ‘இந்த ஆத்மா பிறவாதது, இறவாதது, தேயாதது, வளராதது. உடலானது கொல்லப்பட்டாலும் இந்த ஆத்மா கொல்லப்படுவதில்லை — அஜோ நித்ய: சா1ச்1வதோऽயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ச1ரீரே’ என்று சுலோகம் 2.20-ல் சொல்லப்பட்டது.
செயல் நடைபெறுவதற்கான ஐந்து காரணிகள் கூறப்பட்டு, பின்னர் அதன் வாயிலாக காயிகம், வாசிகம் மற்றும் மானஸம் என்ற மூன்று வகையான கர்மங்கள் செய்யப்படுகின்றன என்பதைப் பார்த்தோம். இனி, இந்த மூன்று வகைக் கர்மங்களையும் ஒருவன் செய்ய தூண்டுதலாக இருப்பது எது என அடுத்த சுலோகத்தில் கிருஷ்ணர் கூறுகிறார்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
புருஷன் யாதொரு காரியத்தையும் செய்யாது சலனமற்றுக் கிடக்கிறான் என்றும், பிரகிருதியை சகலத்தையும் செய்துவருகின்றதென்றும், புருஷன் வெறும் சாக்ஷி மாத்திரமாகத்தான் இருக்கிறானென்றும் சாங்கியதர்ஷணம் கூறுகின்றது. மேலும், பிரகிருதியும் புருஷனில்லாது எதனையும் செய்யவியலாது என்றும் அது கூறுகின்றது.
---------------------------------------------------------------------------------------------