சனி, 21 நவம்பர், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.77 - 18.78

||18.77|| மேலும் விஷ்வரூப தரிசனத்தைக் குறித்த தனது மகிழ்ச்சியையும் பகர்கிறார்:

तच्च संस्मृत्य संस्मृत्य रूपमत्यद्भुतं हरे: ।

विस्मयो मे महान् राजन् हृष्यामि च पुनः पुनः ।। ७७ ।।

தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்3பு4தம் ஹரே: ।

விஸ்மயோ மே மஹாந் ராஜந் ஹ்ருஷ்யாமி ச புந: புந: ।। 77 ।।


च  ச  மேலும்     हरे:  ஹரே:  ஹரியினுடைய     तत् अत्यद्भुतं रूपम्  தத் அத்யத்3பு4தம் ரூபம்  அந்த அற்புதமான வடிவத்தை    संस्मृत्य संस्मृत्य  ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய  எண்ணியெண்ணி      

मे  மே  எனக்கு    महान् विस्मय:  மஹாந் விஸ்மய:  பெரும் வியப்புண்டாகிறது      राजन्  ராஜந்  அரசே     पुनः पुनः  புந: புந:  மேலும் மேலும்     हृष्यामि च  ஹ்ருஷ்யாமி ச  களிப்பும் அடைகிறேன்.


அரசே, ஹரியின் அந்த அதிசய வடிவத்தை இன்னும் எண்ணியெண்ணி எனக்குப் பெருவியப்புண்டாகிறது. மேலும் மேலும் களிப்புமடைகிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

அரசனே! ஹரியின் மிகவும் அற்புதமான அந்த ரூபத்தை நினைத்து நினைத்து எனக்குப் பெரிய ஆச்சரிய முண்டாகிறது! மீண்டும் மீண்டும் களிப்படைகிறேன்.


விளக்கம்:

விஷ்வரூபத்தை தரிசிக்க நேர்ந்ததை எண்ணி தான் எவ்விதம் மகிழ்வதாக இந்த சுலோகத்தில் கூறுகிறார் சஞ்ஜயன்.

இங்கு கீதையில் அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல் மட்டுமல்லாமல், முழுப் பிரபஞ்சமாகவும் திகழும் கிருஷ்ணரின் திருவுருவ வர்ணனையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பதினொன்றாவது அத்தியாயத்தில், அர்ஜுனனின் வேண்டுகோளுக்கிணங்க கிருஷ்ணர் தனது விஷ்வரூபத்தைக் காட்டினார். அதில் காலம், பஞ்சபூதங்கள், யமதர்மன் மற்றும் அனைத்து தேவர்கள் என எல்லாவற்றையும் அர்ஜுனனால் காண முடிந்தது. அர்ஜுனன் கண்ட அனைத்தையும் சஞ்ஜயனும் கண்டார். அந்த திருவுருவத்தில் அனைத்தையும் காண முடிந்த நிலையில், அதுவே இறைவனின் மிக அற்புதமான வடிவம் என்று சஞ்ஜயன் கருதினார் — ஹரே: அத்யத்3பு4தம் ரூபம். அதை மீண்டும் மீண்டும் நினைவுகூர்ந்தபோது அவருக்கு பெருவியப்பு ஏற்பட்டது — மஹாந் விஸ்மய:. அந்த உரையாடல் எத்துணை அற்புதமானதோ, அந்த திருவுருவமும் அத்துணை அற்புதமானதாகும். எனவே, அந்த சம்வாதத்தை நினைத்து மகிழ்வதைப் போலவே, கிருஷ்ணரின் விஷ்வரூபத்தை நினைவுகூர்வதிலும் சஞ்ஜயன் மகிழ்ச்சி அடைகிறார் — ஹ்ருஷ்யாமி ச புந: புந:.

பல யோகிகளுக்கும் பக்தர்களுக்கும் காண்பதற்கரிய விஷ்வரூப தரிசனத்தைத் தற்செயலாய் சஞ்ஜயன் கண்டார். சூழ்நிலையால் சிலருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் இது மிகப் பெரியது. விஷ்வரூப தரிசனத்தின் ஒரு சிறு பகுதியைக் காணாத ஜீவன் ஜகத்தில் இல்லை. வியப்புக்குரியதும் மனதை மேல் நிலைக்குக் கொண்டுபோகக் கூடியதும் எதுவானாலும் அது இறைவனுடைய மஹிமையே ஆகும். ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தகைய காட்சிகள் கிடைக்கின்றன. பெரும்பாலோருக்கு அவைகளைப் பயன்படுத்தும் வழி தெரிவதில்லை. திரும்பத் திரும்ப அக்காட்சிகளைப் பற்றி நினைப்பது ஒருவித தியானமாகும். மனது அதனால் நன்கு பண்படுகிறது. தனது மனதை உயர் நிலைக்கு கொண்டுபோன காட்சி எதுவென்று சாதகன் ஒருவன் நினைத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதை பக்தியுடன் ஞாபகத்துக்குக் கொண்டு வரவேண்டும்.  

இப்போது சஞ்ஜயன், கிருஷ்ண பகவான் மீதான தனது பக்தியையும், போரின் முடிவு குறித்த தனது உறுதியான கருத்தையும் வெளிப்படுத்தித் தனது உரையை அடுத்த சுலோகத்துடன் நிறைவு செய்கிறார்.

————————————————————————————————

||18.78|| இறுதிச் சுலோகம்:

यत्र योगेश्वर: कृष्णो यत्र पार्थो धनुर्धर: ।

तत्र श्रीर्विजयो भुतिर्ध्रुवा नीतिर्मतिर्मम ।। ७८ ।। 

யத்ர யோகே3ச்1வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ2 த4நுர்த4ர: ।

தத்ர ஶ்ரீர்விஜயோ பூ4திர்த்4ருவா நீதிர்மதிர்மம ।। 78 ।।


यत्र  யத்ர  எங்கு     योगेश्वर: कृष्ण:  யோகே3ச்1வர: க்ருஷ்ண:  யோகேஷ்வரனாகிய கிருஷ்ணன்     यत्र  யத்ர  எங்கு     पार्थ: धनुर्धर:  பார்த2 த4நுர்த4ர:  தனுசைத் தாங்கிய பார்த்தன்     तत्र  தத்ர  அங்கு      श्री:  ஶ்ரீ  திரு      विजय:  விஜய:  வெற்றி      भुति:  பூ4தி:  பெருக்கு         ध्रुवा नीति:  த்4ருவா நீதி:  நிலைத்த நியாயமும் உள(என்பது)     मम मति:  மம மதி:  என்னுடைய கொள்கை.


யோகேஷ்வர கிருஷ்ணரும் தனுசைத் தாங்கிய பார்த்தனும் எங்குளரோ ஆங்கு திருவும், வெற்றியும், பெருக்கும், நிலைத்த நீதியும் உளவென்பது என் கொள்கை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

கண்ணன் யோகக் கடவுள், எங்குமுளன், வில்லினையேந்திய விஜயன் தன்னோடும், அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும் நிற்கும், இஃதென் மதம்.


விளக்கம்:

இது கீதையின் இறுதிச் சுலோகம்.


=> சஞ்ஜயனின் அபிப்பிராயம்:

எங்கு கிருஷ்ணரும் அர்ஜுனனும் இருக்கிறார்களோ, அங்கு ஐஸ்வர்யமும்(ஶ்ரீ) வெற்றியும்(விஜய:) உண்டு என சஞ்ஜயன் கூறுகிறார்.  இங்கு அர்ஜுனன், வில்லை ஏந்தியிருப்பவன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறான் — த4நுர்த4ர. எங்கு கிருஷ்ணர் இருக்கிறாரோ என்று இங்கு கூறப்படுவது உண்மையில், ​​யாருடைய உள்ளத்தில் கிருஷ்ணர் இருக்கிறாரோ எனப் பொருள்படுகிறது. அவ்விதம் பகவான் இருக்கும் இடத்தில் சகலவிதமான செல்வங்களும் இருக்கும் ஏனெனில், லக்ஷ்மிதேவி கிருஷ்ணனை விட்டுப் பிரியாதவள். இங்கு ஐஸ்வர்யம் என்பது அறம் சார்ந்த செல்வம், பொருள் செல்வம், ஆன்மிகச் செல்வம் என அனைத்து வகையான செல்வங்களையும் குறிக்கிறது. கிருஷ்ணரையும் அர்ஜுனனையும் தங்கள் இதயத்தில் கொண்டிருப்பவர்களுக்கு இவை அனைத்தும் கிடைக்கும் என்பது உறுதி. அங்கு தோல்விக்கே இடமில்லை. மேலும் நீதியும் நிச்சயம் அங்கு நிலைத்திருக்கும் — த்4ருவா நீதி:. அதாவது தர்மத்தின் அடிப்படையில் ஒழுங்கும், முறையான ஆட்சியும் அங்கு அமையும். திருதராஷ்டிரனின் கோபத்திற்கு ஆளாக விரும்பாத சஞ்ஜயன், இது எனது கருத்து — மம மதி:, என்று கூறுகிறார். துரியோதனன் வெற்றி பெறுவான் என்ற குருட்டு நம்பிக்கை ஏதேனும் திருதராஷ்டிரனுக்கு இருந்தால், அதை அவன் கைவிட வேண்டும் என்பதையே சஞ்ஜயன் இங்கே உண்மையில் உணர்த்துகிறார். கிருஷ்ணரும் அர்ஜுனனும் எங்கு இருக்கிறார்களோ, அங்கு என்றுமுள்ள செல்வம், அழியா வெற்றி மற்றும் நிலைத்த நீதி ஆகியவை நிச்சயம் இருக்கும். இவ்வகையில் சஞ்ஜயன் அந்த உரையாடலை நிறைவு செய்கிறார்.


=> இறையருள்:

இங்கு சஞ்ஜயன் அர்ஜுனனை, வில்லேந்திய பார்த்தன்(த4நுர்த4ர) என்றழைக்கக் காரணம் என்ன என்று பார்ப்போம். வெறும் அர்ஜுனன் இருப்பதால் மட்டும் வெற்றி கிடைக்காது. அவன் தனது கடமையைச் செய்யத் தயாராக இருத்தல் வேண்டும். அப்போதுதான் வெற்றி சாத்தியமாகும். ‘த4நுர்த4ர’ என்று அழைப்பதன் மூலம் சஞ்சயன் தன் கடமையைச் செய்ய ஆயத்தமாக இருக்கும் ஒருவனாக அர்ஜுனனை சுட்டிக்காட்டுகிறார். கிருஷ்ணரை ஒருவன் அறியும்போது, அந்த செயல் யோகமாக மாறுகிறது; இல்லையெனில், அது வெறும் கர்மம் மட்டுமே. 

ஒருவன் கிருஷ்ணரை உணர்ந்து தன் கடமையைச் செய்யத் தயாராக இருக்கும்போது உள்ளத் தூய்மை(அந்தக்கரண சுத்தி) ஏற்பட்டு, அதன்பின் ஞானம் உண்டாகிறது. எனவே இங்கே ‘ஶ்ரீ’ என்பதை ஞானம் மற்றும் பொருள் செல்வம் ஆகியவைகளாக எடுத்துக்கொள்ளலாம். அத்தகையவனுக்கு அனைத்தும் கிடைக்கும், ஏனெனில் அவன் வெறுமனே உட்கார்ந்து வருந்திக்கொண்டிருப்பதில்லை. அனைத்துச் செயல்களின் பலன்களையும் அளிப்பவர்(கர்ம-பல2-தா3தா) தனக்குத் துணையாக இருக்கிறார் என்பதை அவன் அறிந்து செயல்புரிகிறான் என்பதே அதற்கு காரணம். அத்தகைய தெய்வீகத் துணை கிடைத்துவிட்டால், முயற்சியின் பலனைக் கெடுக்கும் அந்த அறியப்படாத காரணி, இனி அறியப்படாததாகவோ அல்லது நமது முயற்சியின் பலனைப் பாழாக்குவதாகவோ இருக்காது. ஈஷ்வரனை நினைவுகூர்வதன் மூலம் அந்த அறியப்படாத காரணி கட்டுப்படுத்தப்படுகிறது. ஈஷ்வரனை மனதில்கொள்வதே உண்மையான கட்டுப்படுத்தும் சாதனமாக அமையும். எல்லாச் சூழல்களையும் அல்லது காரணிகளையும் ஒருவனால் கட்டுப்படுத்த முடியாது; ஆனால் அனைத்தையும் கட்டுப்படுத்துபவரைத் துணையாகக் கொண்டு சரணாகதி அடைந்தால், அந்த மனப்பான்மை அவனது வாழ்க்கையை எளிதாக்குகிறது. அப்போது கர்மமானது யோகமாக மாறுகிறது. அதனால் எது வந்தாலும் அதை நன்றியுணர்வுடன் இறைவனின் அருளாகக் கருதி ஏற்கும் பிரசாத புத்தி உண்டாகிறது. இந்த மனநிலையினால் தோல்வி என்பதே இல்லை, எப்போதும் வெற்றிதான்.

தன்னிடம் மிகப்பெரிய படைகளும் வெல்ல முடியாத பல வீரர்களும் இருந்ததால், போரின் போக்கு முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் இருப்பதாக துரியோதனன் கருதினான். ஆனாலும் அவன் போரில் தோல்வியையே தழுவினான். கிருஷ்ணர் இல்லையென்றால், அர்ஜுனன்கூட எமலோகத்தை அடைந்திருப்பான். கிருஷ்ணர் அவனது தேரோட்டியாக அமர்ந்திருந்ததால்தான், அவன் வெற்றியை நோக்கி முன்னேற முடிந்தது. அந்த தேரோட்டி இல்லையென்றால் அர்ஜுனனிடம் எத்துணை ஆயுதங்களும் திறமைகளும் இருந்தபோதிலும், அவன் போரிட்டிருக்கவே மாட்டான். போரின் தொடக்கத்தில், கடமைக்கும் பாசத்திற்கும் இடையே எதைத் தேர்ந்தெடுப்பது என்ற இக்கட்டான சூழலில் அவன் சிக்கியிருந்தான். அவன் போரைத் தொடங்கவே முடியாதவனாக குழப்பத்தில் துயருற்றிருந்தான். ஆனால் கிருஷ்ணர் அங்கிருந்ததால் வெற்றி சாத்தியமானது.

பகவான் இருக்குமிடத்தில் நிச்சயமாக நீதி(நீதி) மற்றும் செழிப்பு(பூ4தி) இருக்கும். ‘பூ4தி’ எனும் சொல் தனியாகக் குறிப்பிடப்படுவதால், இங்கு ‘ஶ்ரீ’ என்பதை அறிவு(வித்3யா) என்றும் எடுத்துக்கொள்ளலாம். இவைகளனைத்தும் இருக்கும். தனிநபருக்கும் சரி, சமூகத்திற்கும் சரி இது அப்படியே உண்மை என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். நீதி இருக்கும் இடத்தில் ஒவ்வொருவரும் அவரவர் வேலையைச் செய்கிறார்கள் என்பதால் சமூகம் செழிப்பானதாக இருக்கிறது. இவ்வாறு பகவத்கீதையின் பதினெட்டாம் அத்தியாயம் முடிவடைகிறது.


சுவாமி சித்பவானந்தரின் விளக்கம்:

இது சஞ்ஜயனின் சொந்த அபிப்பிராயம் என்றாலும் சிறந்த கீதா தத்துவங்களில் இதுவும் ஒன்றாகும். கண்ணன் யோகேஷ்வரனாதலால் புருஷார்த்தங்களெல்லாம் அவன் மூலம் நிறைவேறுகின்றன. தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்கில் ஜீவாத்மாவுக்கு எது வாய்க்கப்பெற்றாலும் அது யோகமாகிறது. அவைகளுள் சிறப்பாயுள்ள மோக்ஷத்தை கிருபை கூர்ந்து வழங்க வல்லவன் கிருஷ்ணன், முதல் அத்தியாயத்தில் தனுசைத் தூர எறிந்து விட்டவனாக அர்ஜுனன் காட்சி கொடுத்தான். முயற்சியற்ற அல்லது முயற்சி குன்றிய வாழ்க்கையை அது எடுத்துக் காட்டுவதாகும். இப்பொழுது காண்டீவம் என்னும் வில்லை ஏந்திய அர்ஜுனன் காட்சி கொடுக்கிறான். கிருஷ்ணனுடைய யோக வல்லமையும், பார்த்தனுடைய பராக்கிரமமும் சேர்ந்து ஆகாத காரியத்தை ஆக்குவிக்கும். இதைக் கேட்ட பிறகாவது திருதராஷ்டிரனுக்கு மனது மாறியிருக்க வேண்டும்! அதாவது தன் பிள்ளைகளுக்கு வெற்றியுண்டாகாது; உயிர் நஷ்டமும், பொருள் நஷ்டமும் ஏற்படுவது உறுதி. அதைத் தடுக்க ஒருவிதத்தில் சமாதானம் செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும். ஆனால் அவிவேகமே வடிவெடுத்திருப்பவனுக்கு அது ஒன்றும் விளங்காது. கடவுளே அருகிலிருந்து கொண்டு செய்கிற செயலும் அவனுக்குப் புலப்படாது.

தெய்வத்தின் சகாயமும் மனிதனுடைய நேர்மையான முயற்சியும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும். மனிதனுக்கு ஆக வேண்டியதை எல்லாம் தெய்வம் செய்துவைக்கும் என்று நினைத்துக் கொண்டு தன் முயற்சியை நிறுத்திவிடலாகாது. பிறகு துரியோதனன் கூட்டம் செய்தது போல ஈஷ்வரனது திட்டத்தைப் புறக்கணித்துவிட்டுத் தனது சொந்த முயற்சியால் எல்லாம் நடந்துவிடும் என்று கருதி வினையாற்றலாகாது. எப்பொழுதும் கடவுளைச் சார்ந்திருந்து தன் கடமையைக் கடவுள் பொருட்டு முழுமனதுடன் செய்ய வேண்டும். 


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

சூரிய வெளிச்சம் எங்கும் சமமாய் வீழ்கிறது. ஆனால் ஜலம், கண்ணாடி, மெருகிட்ட உலோகம் இவைபோன்ற வஸ்துக்களில் அவ்வெளிச்சம் நன்றாகப் பிரதிபலிக்கின்றது. அதுபோலத்தான் தெய்விக ஒளியும். அது எல்லாரிடத்தும் சமமாயும் பாரபக்ஷமின்றியும் வருகின்றது, என்றாலும் நல்லாருடைய தூய மனமும், சாதுக்களுடைய இருதயமுமே அவ்வொளியை நன்றாகப் பிரதிபலிக்கச் செய்கின்றன.

பகவத் பக்திகொண்ட பரிசுத்த பக்தர்களுக்காகவே பகவான் உலகத்தில் அவதாரம் செய்கின்றார். அவதார புருஷரோடு வருபவர்கள் நித்தியமுக்தர்களாவார்கள்; அல்லது கடைசி ஜன்மம் எடுத்தவர்களாவார்கள். 

————————————————————————————————

ऒं तत् सत् । इति श्रीमहाभारते शतसाहस्र्यां संहितायां वैयासिक्यां 

भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे 

श्रीकृष्णार्जुनसंवादे मोक्षसन्न्यासयोगो नाम अष्टादशोऽध्याय: ।।


ஓம் தத் ஸத்।  இதி ஶ்ரீ மஹாபா4ரதே ச1தஸாஹஸ்ர்யம் ஸ்ம்ஹிதாயாம் வையாஸிக்யாம் பீ4ஷ்மபர்வணி ஶ்ரீமத்3ப4க3வத்3கீ3தாஸூபநிஷத்ஸு ப்3ரஹ்மவித்3யாயாம் யோக3சா1ஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே3 மோக்ஷஸந்ந்யாஸயோகோ3 நாம அஷ்டாத3சோ1ऽத்4யாய: ।।


வியாசர் இயற்றிய ஒரு லக்ஷம் சுலோகங்களையுடைய மஹாபாரதத்தில், பீஷ்மபருவத்தில், ப்ரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஶ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷத்தின்கண் மோக்ஷ சந்யாச யோகம் என்ற பதினெட்டாம் அத்தியாயம்.

——————————————————————————————————

மோக்ஷ சந்யாச யோகம் - சாரம்:

(1)  அர்ஜுனனின் கேள்வி [1]

(2)  பகவானின் பதில் [2 - 12]

(3) ஞானயோகத்தின் ஸாரம் [13 - 17]

(4) ஆறு விதமான தலைப்பை மூன்றாகப் பிரிக்கிறார் பகவான் [18 - 19]

(5) மூவித ஞானம் [20 - 22]

(6) மூன்று விதமான கர்மம் [23 - 25]

(7) மூவித கர்த்தா [26 - 28]

(8) மூன்று விதமான புத்தி [29 - 32]

(9) மூவித உறுதிப்பாடு [33 - 35]

(10) மூன்று விதமான சுகம் [36 - 39]

(11) வர்ண விபாகம் [41 - 44]

(12) கர்மயோக ஸாரம் [45 - 48]

(13) ஞானயோக ஸாரம் [49 - 54]

(14) பக்தி [55 - 63]

(15)  முழு சாஸ்திரத்தின் ஸாராம்சம் [65 - 66]

(16) உபதேசம் பற்றிய சில கருத்துக்கள் [67 - 72]

(17) அர்ஜுனன் தனது மனநிலையைக் கூறல் [73]

(18) சஞ்ஜயனின் முடிவுரை [74 - 78]

——————————————————————————————————