சனி, 14 நவம்பர், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.74 - 18.76

||18.74|| சஞ்ஜயனின் முடிவுரை:

सञ्जय उवाच 

इत्यहं वासुदेवस्य पार्थस्य च महात्मन: ।

संवादमिममश्रौषमद्भुतं रोमहर्षणम् ।। ७४ ।। 

ஸஞ்ஜய உவாச

இத்யஹம் வாஸுதே3வஸ்ய பார்த2ஸ்ய ச மஹாத்மந: ।

ஸம்வாத3மிமமச்1ரெளஷமத்3பு4தம் ரோமஹர்ஷணம் ।। 74 ।।


सञ्जय  उवाच   ஸஞ்ஜய உவாச   சஞ்ஜயன் சொன்னது

इति  இதி  இங்ஙனம்    वासुदेवस्य  வாஸுதே3வஸ்ய  வாசுதேவருக்கும்    

महात्मन: पार्थस्य च  மஹாத்மந: பார்த2ஸ்ய ச  மகாத்மாவான பார்த்தனுக்கும்     इमम्  இமம்  இந்த    रोमहर्षणम्  ரோமஹர்ஷணம்  மயிர்க்கூச்சை உண்டுபண்ணுகிற    अद्भुतं  அத்3பு4தம்  அற்புதமான      संवादम्   ஸம்வாத3ம்  சம்வாதத்தை    अहं  अश्रौषं  அஹம் அச்1ரெளஷம்  நான் கேட்டேன்.


சஞ்ஜயன் சொன்னது

இங்ஙனம் வாசுதேவருக்கும் மகாத்மாவான பார்த்தனுக்கும் இடையில் நிகழ்ந்த மயிர்க்கூச்சு உண்டுபண்ணும் அற்புதச் சம்பாஷணையை நான் கேட்டேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

சஞ்ஜயன் சொல்லுகிறான்: இப்படி நான் வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும் நிகழ்ந்த அற்புதமான -- புளகந் தரக்கூடிய -- அந்த சம்பாஷணையைக் கேட்டேன்.


விளக்கம்:

சுலோகம் எழுபத்தி நான்கு முதல் எழுபத்தெட்டு வரை சஞ்ஜயனின் முடிவுரை வருகிறது. எனவே, இப்போது காட்சி போர்க்களத்திலிருந்து அரண்மனைக்கு மாறுகிறது. போர்க்களத்தில் நிகழ்வனவற்றையும், கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான முழு உரையாடலையும், சஞ்சயனிடமிருந்து நூறு தார்தராஷ்டிரர்களின் தந்தையும் பார்வையற்ற அரசனுமான திருதராஷ்டிரன் கேட்டு அறிந்து கொண்டிருந்தான். முதல் சுலோகத்தில், ‘சஞ்ஜயா, தர்ம க்ஷேத்திரமாகிய குருக்ஷேத்திரத்தில் யுத்தம் செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள்? — த4ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ: மாமகா: பாண்ட3வாச்1சைவ கிமகுர்வத ஸஞ்ஜய’ என்று அவன் கேட்பதிலிருந்தே கீதை தொடங்குகிறது. அதற்கான சஞ்ஜயனின் பதில்தான் முழு கீதையாக அமைந்தது. அவர் முதலில் சூழலை விவரித்து, பின்னர் கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடலை எடுத்துரைத்தார். இறுதியில், சஞ்ஜயன் மீண்டும் திருதராஷ்டிரனை நேரடியாகப் பார்த்துப் பேசுகிறார்.


=> மஹாத்மா:

இங்கே சஞ்ஜயன் கிருஷ்ணரை ‘வாஸுதே3வ’ என்று குறிப்பிடுகிறார். இந்த சொல்லைப் பிரித்துப் பார்க்கும்போது, ‘வாஸு’ எனில் எந்தவொன்றில் அனைத்தும் நிலைபெற்றுள்ளதோ அது, மற்றும் ‘தே3வ’ எனில் ஒளிமயமானவர், அனைத்தையும் அறிதவர் எனப் பொருள்படுகிறது. அல்லது நேரடியாக எடுத்துக்கொள்ளும்போது, வசுதேவரின் மகன் என்ற எளிய பொருளைத் தருகிறது. அதேபோல, பிருதையின் மகன் என்ற பொருளில் அர்ஜுனன், ‘பார்த2’ என்று அழைக்கப்படுகிறான். 

இங்கு ‘மஹாத்மா’ எனும் அடைமொழி கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனன் இருவருக்கும் பொருந்தும். ‘ச’ என்ற சொல்லின் காரணமாக, ‘மஹாத்மந:’ என்ற சொல் வாசுதேவர் மற்றும் பார்த்தன் ஆகிய இருவருடனும் தொடர்புடையது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இச்சொல் ‘உன்னதமான மனதை உடையவன்’ என்ற பொருளைக் கொடுக்கிறது. முன்பு அர்ஜுனன் உலகியல் பற்றுகளுடன் கூடிய ஒரு சம்சாரி-ஆத்மாவாக இருந்தான். ஆனால் இப்போது, ​​‘எனது மயக்கம் நீங்கிவிட்டது — நஷ்டோ மோஹ:’ என்று கூறியிருப்பதால், அவனது ஆத்மா பரப்ரம்மம் ஆகிவிட்டது. எனவேதான் அவன் மேலானவன், சிறந்தவன் என்று பொருள்படுகிற சொல்லால் ‘மஹாந்’ என்று சஞ்ஜயனால் குறிப்பிடப்படுகிறான். மேலும், அவன் பகவான் கிருஷ்ணரிடமிருந்து நேரடியாக உபதேசத்தைப் பெற்றிருப்பதால் நிச்சயமாக அவன் ஒரு பாக்கியசாலி ஆவான்.

=> மெய்சிலிர்ப்பு:

ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையிலான இந்த உரையாடல் தன்னை மெய்சிலிர்க்க வைப்பதாக சஞ்ஜயன் கூறுகிறார் — ரோமஹர்ஷணம். உள்ளத்தில் பேருணர்ச்சி உண்டானால் மயிர்க்கூச்செடுக்கிறது. நல்லது கெட்டது இரண்டும் உடல் ரோமத்தை சிலிர்க்கச் செய்யும். பொதுவாக நல்ல விஷயம்தான் நல்லவர்களுக்கு புளகாங்கிதம் உண்டாகும்படிச் செய்யும். பேசுபவராகிய கிருஷ்ணன், பேசப்படுபவனாகிய அர்ஜுனன், பேசும் விஷயமாகிய கீதா தத்துவம் ஆகிய இம்மூன்றும் சேர்ந்து சஞ்ஜயனிடம் அச் சிலிர்ப்பை உண்டாக்கியதில் வியப்பில்லை என்றே கூறலாம். ஆனால் திருதராஷ்டிரனுக்கு அது எவ்வளவு தூரம் பயன்பட்டது என்பதற்குச் சரித்திரமே சான்றாயிருக்கிறது. 

  இது ஒரு அற்புதமான உரையாடல் — அத்3பு4தம் ஸம்வாத3ம், என்கிறார். அற்புதம் எனில் முன்னெப்போதும் நிகழாத அதிசயமான ஒன்று. அபூர்வமான, இதற்குமுன் கேட்டறியாத விஷயம், அதாவது சுலபமாக கிடைக்காத அறிவு எனப் பொருள்படும். இந்த சம்வாதம் முழுமையான வேதாந்த சாஸ்திரம் மட்டுமல்லாது யோகத்தையும் உள்ளடக்கியுள்ளது. இவ்விதம் இதில் எதுவும் விடுபடவில்லை என்பதால் இது ஒரு முழுமையான சாஸ்திரம். ‘இதை நான் கேட்டேன் — அஹம் அச்1ரெளஷம்’ என்று சஞ்ஜயன் கூறுகிறார். 

தொலைவில் போர்க்களத்தில் நிகழ்ந்த இந்த உரையாடலைக் கேட்க சஞ்ஜயனுக்கு எப்படி முடிந்தது என்ற கேள்வி எழலாம். அதற்கான விடை அடுத்த சுலோகத்தில் வருகிறது.

————————————————————————————————

||18.75|| வியாச பகவானுக்கு நன்றி செலுத்துதல்:

व्यासप्रसादाच्छ्रुतवानेतद्गुह्यमहं परम् ।

योगं योगेश्वरात्कृष्णात्साक्षात्कथयत: स्वयम् ।। ७५ ।। 

வ்யாஸப்ரஸாதா3ச்ச்2ருதவாநேதத்3கு3ஹ்யமஹம் பரம் ।

யோக3ம் யோகே3ச்1வராத்க்ருஷ்ணாத்ஸாக்ஷாத்கத2யத: ஸ்வயம் ।। 75 ।। 


अहं  அஹம்  நான்     व्यासप्रसादात्  வ்யாஸப்ரஸாதா3த்  வியாச பகவான் அனுக்கிரகத்தால்     

एतत् गुह्यम्  ஏதத் கு3ஹ்யம்  இந்த ஆழ்ந்த      परम् योगं  பரம் யோக3ம்  மேலான யோகத்தை     

स्वयम्  ஸ்வயம்  தாமே    कथयत:  கத2யத:  சொல்பவராகிய     योगेश्वरात् कृष्णात्  யோகே3ச்1வராத் க்ருஷ்ணாத்  யோகேஷ்வரனாகிய கிருஷ்ணரிடமிருந்து     साक्षात्  ஸாக்ஷாத்  நேரே      श्रुतवान्  ச்1ருதவாந்  கேட்பவனானேன்.


வியாசர் அருளால், இந்த மேலாம் ஆழ்ந்த யோகத்தை தாமே சொல்லலுற்ற யோகேசுவரன் கிருஷ்ணரிடமிருந்து நான் நேரே கேட்டேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

யோகக் கடவுளாகிய கண்ணன் இந்தப் பரம ரகசியமான யோகத்தைத் தான் நேராகவே சொல்லும்போது நான் அதை வியாசனருளால் கேட்டேன்.


விளக்கம்:

போர் தொடங்குவதற்கு முன்பே, ஓரிடத்தில் நடப்பதை இனியொரு இடத்திலிருந்து பார்க்கின்ற திவ்யமான கண்களை(தி3வ்ய சக்ஷு) வியாசர் சஞ்ஜயனுக்கு வழங்கியிருந்தார் என்பது நமக்கு மகாபாரதத்தின் மூலம் ஏற்கனவே தெரியும். எனவே, தான் எங்கு இருந்தாலும் போர்க்களத்தில் நடக்கின்ற அனைத்தையும் தன்னால் காண முடிந்தது என்பதை அவர் இந்த சுலோகத்தில் எடுத்துரைக்கிறார்.


=> வியாசனின் அருள்:

சஞ்ஜயனுக்கு ஞானக்கண்களை வழங்கியவர் வியாசர். அதன்மூலமாகவே சஞ்ஜயனால் குருக்ஷேத்திரத்தில் என்ன நடந்தாலும் அதைக் காணவும் கேட்கவும் முடிந்தது. ஆகையினால்தான் கிருஷ்ணருடைய திவ்ய தரிசனத்தைப் பெறவும், விஷ்வரூப தரிசனத்தைப் பார்க்கவும், அவர் பகர்ந்ததையெல்லாம் அப்படியே கேட்கவும் இயன்றது. நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பயன்படுவதுபோல, தான் பெற்ற பேறு என்ன, அது யாருடைய அனுகிரகத்தினால் நடந்தது என்பதை சஞ்ஜயன் தெரிவிக்கிறார் — வ்யாஸப்ரஸாதா3த்.

இதன் உட்பொருள் இனியொரு விஷயத்தையும் குறிப்பால் உணர்த்துகிறது. சாதாரண கண்களால் புலனுணர்வுக்கு கிடைக்கக்கூடியதை மட்டுமே நாம் பார்க்க முடியும். ஆனால் ஞானக்கண்கள் மற்றும் ஆயத்தமான மனதுடன் கூடியவன் புலனுணர்வுக்கு அப்பாற்பட்டதைப் பார்க்க முடியும். இல்லையெனில் கிருஷ்ணரின் உபதேசத்தை சஞ்ஜயன் எப்படி புரிந்து கொள்ள முடியும்? ஆத்மாவே ப்ரம்மம் என்பதை அவரது மனம் தயார்நிலையிலிருந்த காரணத்தினால்தான் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.


=> மேலான ரகசியம்:

சஞ்ஜயன் எதைக் கேட்டார்? ‘இந்த மேலான ஆழ்ந்த யோகத்தை கேட்பவனானேன் — ஏதத் கு3ஹ்யம் பரம் யோக3ம் ச்1ருதவாந்’, என்கிறார். யோகத்தைப் பற்றிய அனைத்தையும் அவர் கேட்டார். உபநிஷத்துக்களைப் பற்றிய நூல் ‘உபநிஷத்’ என்றே அழைக்கப்படுவதைப் போல, யோகத்தைப் பற்றிப் பேசும் சாஸ்திரமும் ‘யோகம்’ என்றே அழைக்கப்படுகிறது. இந்த யோகம் ஞானயோகம் மற்றும் கர்மயோகம் என இருவகைப்படும். இது மோக்ஷத்தை அருளும் வல்லமை கொண்டதால் ஆழ்ந்தது, ரகசியமானது(கு3ஹ்யம்) என்றும், மேலானது, உன்னதமானது(பரம்) என்றும் அழைக்கப்படுகிறது. 


=> யோகேஷ்வரன்:

சஞ்ஜயன் இதை யாரிடமிருந்து கேட்டார்? யோகேஷ்வரனாகிய கிருஷ்ணரிடமிருந்து நேரடியாகக் கேட்டேன் — ஸாக்ஷாத் யோகே3ச்1வராத் க்ருஷ்ணாத். இங்கு இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு என குரு-சிஷ்ய பரம்பரை வழியாக வரவில்லை. மாறாக, அதற்கு ஆதாரமான பகவானிடமிருந்தே நேரடியாக(ஸாக்ஷாத்) பெறப்பட்டது என்பதை சங்கரர் வலியுறுத்துகிறார். அர்ஜுனன் இந்த உபதேசத்தைக் கேட்டு, அதை வேறொருவரிடம் சொல்லி, அவர் இன்னொருவரிடம் சொல்லி, இப்படியே அது தொடர்வதாக வைத்துக்கொள்வோம். அதுவே பரம்பரை எனப்படுகிறது. அந்த முறையில் இது உங்களை வந்தடையும்போது, ​​சில விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது சில விடுபட்டிருக்கலாம். இதனால் உங்களுக்குக் கிடைப்பது ஒரு திருத்தப்பட்ட வடிவமாகவோ, அல்லது சில சமயங்களில் சிதைக்கப்பட்ட வடிவமாகவோ இருக்கலாம். ஆனால் இங்கே, இது ஆதாரமான மூலத்திலிருந்தே நேரடியாக வருகிறது. பகவான் அவரே தன்னைப் பற்றிப் பேசுகிறார். அவரே அனைத்து யோகங்களுக்கும் தலைவரான யோகேஷ்வரர், ஞானயோகம் மற்றும் கர்மயோகம் ஆகிய இரண்டையும் தொடங்கிவைத்தவரும் அவரே.

இதை பற்றி நான்காம் அத்தியாயத்தின் முதல் சுலோகத்தில் அவரே குறிப்பிடுகிறார். ‘அழிவற்ற இந்த யோகத்தை நான் விவஸ்வானுக்குப் பகர்ந்தேன். விவஸ்வான் மனுவுக்கு மொழிந்தான். மனு இக்ஷ்வாகுவுக்கு உரைத்தான் — இமம் விவஸ்வதே யோக3ம் ப்ரோக்தவாந் அஹம் அவ்யயம்  விவஸ்வாந் மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவே அப்3ரவீத்’. ஆகவேதான் யோகிகளின் தலைவராக அவர் ‘யோகே3ச்1வர’ என்று அழைக்கப்படுகிறார். மேலும், கர்ம-காண்டம் மற்றும் ஞான-காண்டம் ஆகியவற்றின் வாயிலாக அடையப்பட வேண்டியவரும் அவரே. ஏனெனில், ‘அனைத்து வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே — வேதை3ச்1ச ஸர்வைரஹமேவ வேத்3ய:’ என்று சுலோகம் 15.15 - ல் அவரே கூறுகிறார். இவ்விதம் இருவகையான இந்த யோகத்தைத் தொடங்கி வைத்தவரும் அவரே. அதே வேளையில், இந்த யோகத்தின் மையப் பொருளும் அவரே ஆவார்.

இந்த உபதேசத்தை சஞ்ஜயன் புல்லாங்குழல் வாசிக்கும், மலையைத் தூக்கும், வெண்ணெய் உண்ணும், ஆடு மாடுகளை பராமரிக்கும் இடையனான கிருஷ்ணரிடமிருந்து அல்லாமல், ஆசிரியராக விளங்கிய கிருஷ்ணர் தாமே சொல்லிக் கேட்டார் — ஸ்வயம் கத2யத: க்ருஷ்ணாத். இங்கு கீதையில் கிருஷ்ணர், ‘நீயே ப்ரம்மம்; இவை அனைத்தும் மாயை’ என்று ஓரிரு வாக்கியங்களை மட்டும் கூறவோ அல்லது ஏதேனுமொரு சாதாரண அறிவுரையை வழங்கவோ இல்லை. மாறாக, பதினேழு அத்தியாயங்களில் விரிவாகவும் ஆழமாகவும் உபதேசித்தார். ‘கூறிய’ அல்லது ‘உரைத்த’ என்கிற பொருளில் வந்துள்ள ‘கத2யத:’ என்ற சொல்லை சஞ்ஜயன் பயன்படுத்தும்போது, ​​அங்கே வெறும் சாதாரணப் பேச்சுவார்த்தை மட்டும் நடைபெறவில்லை, மாறாக ஒரு முறையான உபதேசம் நிகழ்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.

————————————————————————————————

||18.76|| அது பெரும்பேறு என்பதற்கு அத்தாட்சி மேலும் வருகிறது:

राजन् संस्मृत्य संस्मृत्य संवादमिममद्भुतम् ।

केशवार्जुनयो: पुण्यं हृष्यामि च मुहुर्मुहु: ।। ७६ ।।

ராஜந் ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாத3மிமமத்3பு4தம் ।

கேச1வார்ஜுநயோ: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு: ।। 76 ।।


राजन्  ராஜந்  அரசே      केशवार्जुनयो:  கேச1வார்ஜுநயோ:  கேசவனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த      इमम्  இமம்  இந்த       अद्भुतम्  அத்3பு4தம்  அற்புதமும்       पुण्यं  புண்யம்  புண்ணியமுமான     संवादम्   ஸம்வாத3ம்  சம்வாதத்தை      संस्मृत्य संस्मृत्य  ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய  நினைத்து நினைத்து       मुहु: मुहु:  முஹு: முஹு:  திரும்பத் திரும்ப                  हृष्यामि च  ஹ்ருஷ்யாமி ச  மகிழ்வடைகிறேன்.


வேந்தே, கேசவனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த வியப்புக்குரிய இப்புண்ணிய சம்வாதத்தை நினைத்து நினைத்து நான் மீண்டும் மீண்டும் மகிழ்வடைகிறேன். 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

அரசனே! கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய புண்ய சம்பாஷணையை நினைத்து நினைத்து, நான் மீண்டும் மீண்டும் களிப்பெய்துகிறேன்.


விளக்கம்:

சஞ்ஜயன் தனது மனநிலையை இங்கு வர்ணிக்கிறார். திருதராஷ்டிரனை ஒரு பேரரசனாக, ஓ ராஜனே! என அழைத்து, தான் பெற்ற பெரும்பேறு என்ன என்பதை பகிர்கிறார். நினைவுகூர்தல் எனும் அர்த்தத்தைக் கொடுக்கிற ‘ஸம்ஸ்ம்ருத்ய’ எனும் சொல் இங்கு இருமுறை பயன்படுத்தப்பட்டிருப்பது, அந்த முழு உரையாடலின் ஒவ்வொரு வார்த்தையையும் அவர் ஒவ்வொரு கணமும் இடைவிடாமல் நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. 

அது எத்தகைய உரையாடலாக இருக்கிறது? அது அனைத்து பாவங்களையும் மற்றும் பந்தத்திற்கான அனைத்துக் காரணங்களையும் அழித்து, ஒருவனுக்கு மோக்ஷத்தை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. இத்தகைய மேலான பலனையும் நன்மையையும் தரக்கூடியதான அது புண்ணியம் மிக்கது — புண்யம். அர்ஜுனனின் கேள்விகளையும் அதற்கான கிருஷ்ணரின் பதில்களையும் மனதிலிருத்தி, அதை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்ப்பதால் நான் மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியடைகிறேன் — முஹு: முஹு: ஹ்ருஷ்யாமி, என்று சஞ்ஜயன் தனது மனநிறைவை வெளிப்படுத்துகிறார்.

சஞ்ஜயன் அடைந்த மகிழ்வு சாஸ்திரத்தின் மஹிமையைக் குறிக்கிறது. நலத்தை அடையப்பெற்ற நல்லவர்கள் அந்த நலத்திலிருந்து உலப்பில்லாத ஆனந்தத்தை அடைவது இயல்பு.

————————————————————————————————