சனி, 12 செப்டம்பர், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.59 - 18.60

||18.59|| பகவானின் எச்சரிக்கை:

यदहङ्कारमाश्रित्य न योत्स्य इति मन्यसे ।

मिथ्यैष व्यवसायस्ते प्रकृतिस्तवां नियोक्ष्यति ।। ५९ ।।

யத3ஹங்காரமாச்1ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே ।

மித்2யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி ।। 59 ।।


अहङ्कारम् आश्रित्य  அஹங்காரம் ஆச்1ரித்ய  அஹங்காரத்தை அடைந்து        न योत्स्य इति  ந யோத்ஸ்ய இதி  போர் புரிய மாட்டேன் என்று     मन्यसे यत्  மந்யஸே யத்  நினைப்பாயாகில்    ते  தே  உன்னுடைய     एष: व्यवसाय:  ஏஷ: வ்யவஸாய:  இந்த துணிவானது     मिथ्या  மித்2யா  பொய்     प्रकृति  ப்ரக்ருதி  உனது இயல்பு    त्वां  த்வாம்  உன்னை      नियोक्ष्यति  நியோக்ஷ்யதி  தூண்டிவிடும்.


அஹங்காரத்தினால் யுத்தம் செய்ய மாட்டேனென்று நினைப்பாயாகில் உன் துணிவு பொய்யாகும். உன் இயல்பே உன்னை யுத்தத்தில் தள்ளிவிடும்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

நீ அகங்காரதிலகப்பட்டு, "இனிப் போர் புரியேன்" என்ற துணிவு பொய்மைப்பட்டுப் போம். இயற்கை உன்னைப் போரிற் பிணிக்கும்.


விளக்கம்:

அஹங்காரத்தினால் விளையும் கேடு யாது என்பதற்கு விடையாக இந்த சுலோகம் வருகிறது.


=> உளவியல் பார்வை:

அர்ஜுனன் போர் புரியாமல் இருக்க தீர்மானித்தால், அந்த நிலைபாடு பொய்யாகிவிடும் என கிருஷ்ணர் அறிவார். ஏனெனில் அது அவனது இயல்புக்கு விரோதமானது. இப்போது அவன் எடுத்துள்ள முடிவு இயற்கையானதாக இல்லாமல் விருப்பத்தின் அடிப்படையில் அமைந்த ஒன்றாக இருக்கிறது. எனவே இது இயல்பினால் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என்பதால் பொய்யானது — மித்2யா. அஹங்காரத்தினால், கடமையைச் செய்ய மாட்டேன் என்று தவறான முடிவை எடுத்துள்ளாய் என்கிறார் பகவான் — அஹங்காரம் ஆச்1ரித்ய

ஒரு முடிவு உண்மையாக இருக்க வேண்டுமெனில் அது ஒருவனது சுபாவத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஆனால் அர்ஜுனனின் தீர்மானம் அப்படிப்பட்டதாக இல்லாததால், போரிலிருந்து விலகுவது எனும் அவனது முடிவு அவனுக்கு உதவியாக இருக்கப் போவதில்லை. ஒருகால் அவன் போர்க்களத்திலிருந்து விலகி, ஒரு சந்யாசி வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அது பின்னர் அவனுக்கே பிரச்சனையாகிவிடும். ஏன்? ‘உனது இயல்பு உன்னைப் பிணைக்கும் — ப்ரக்ருதி: த்வாம் நியோக்ஷ்யதி’, என கிருஷ்ணர் சொல்கிறார். வருங்காலத்தில் பயத்தின் காரணமாக போர்க்களத்தை விட்டு ஓடியதாக மக்கள் அவனை கேலி செய்வார்கள். கருணையின் பொருட்டு அர்ஜுனன் போரிலிருந்து விலகினான் என்று துரியோதனன் மக்களை நம்ப விடமாட்டான். மாறாக தனது படை அமைப்பை கண்டு பயத்தில் விலகிவிட்டதாக அவன் பெருமை பேசுவான். ஏனென்றால் அவன் அரசை ஆளப் போகிறான், எனவே மக்கள் பாண்டவர்களை ஆதரிக்கக் கூடாது என்பதற்காக உண்மையை மறைப்பான். அர்ஜுனன் வெளியேறினால், போர் நிறுத்தப்படும். துரியோதனன் ஒரு அம்பும் எய்தாமல் வெற்றி பெறுவான். மேலும் துரியோதனன் அர்ஜுனனை ஒரு கோழையாக சித்தரிக்கும் பாங்கு நிச்சயமாக அவனை கோபப்படுத்தும். இதனால் அர்ஜுனன் அதை எதிர்த்துப் போராட வேண்டிய நிலைக்கு மீண்டும் தள்ளப்படுவான். எனவே, போரிடுவதில்லை என்கிற அவனது முடிவு பொய்யாகிவிடும், மித்2யா. அர்ஜுனன் இன்னும் ஒரு பிராமணனின் சுபாவத்தை அடையவில்லை. இயல்பினால் அவன் ஒரு க்ஷத்ரியன் என்பதால் தன்னியல்பே அவனை போரிடத் தூண்டும். உண்மையில் பார்க்கப்போனால் அர்ஜுனன் ஒரு க்ஷத்ரியன் என்பது கடமையினால் மட்டுமல்ல, மனப்பான்மையாலும் அவன் ஒரு போர்வீரனே. எனவே, அந்த மனநிலை அவனை யுத்தத்தில் பிணித்துவிடும். 

ஆகையினால் பகவான் அர்ஜுனனிடம் இவ்விதமாக உரைக்கிறார். இன்றுவரை நீ பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் க்ஷத்ரிய சுபாவத்துக்கு ஒத்தது. தீமையை எதிர்த்துப் போராடும் பாங்குடையவனாக நீ இருக்கிறாய். தீமை ஓங்கி வளர்வதைப் பார்த்துக் கொண்டு உன்னால் வினையாற்றாமல் இருக்க முடியுமா? தூங்கும்பொழுதும் நம் உடலைக் கொசுக் கடித்தால் நம் கை தானே கொசுவை அடித்து ஓட்டுகிறது. அதுபோல உனது சுபாவமே போருக்கு எழுந்து நிற்கும். அதற்கு மாறாக தீர்மானிப்பது உனது ஆத்ம சக்தியைக் கெடுப்பதாகும். எண்ணமும் செயலும் மாறுபடுவதைவிட ஒரு மனிதனுக்கு கேடு வேறொன்றுமில்லை. தீமையைக் களைந்தாக வேண்டும் என்ற எண்ணம் உன் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறது. ஆயினும் உடலால் செயல்புரிய மாட்டேன் என்று உன் இயல்புக்கு எதிராக முடிவெடுக்கின்றாய். ரஜோகுணத்தில் உதித்த பயன்படாத அஹங்காரம் அது. அதன் வசப்பட்டு வீணானத் தீர்மானத்தை செய்யாதே. 

இதன் தொடர்ச்சியாக சுபாவத்தை குறித்த ஒரு சாமானிய நியதியை பகவான் அடுத்த சுலோகத்தில் பகர்கிறார். 


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

அஹங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கைகூடா; ஜனன மரணமும் நீங்கா.

————————————————————————————————

||18.60|| பொதுவான நியதியொன்று பகரப்படுகிறது:

स्वभावजेन कौन्तेय निबद्ध: स्वेन कर्मणा ।

कर्तुं नेच्छसि यन्मोहात्करिष्यस्यवशोऽपि तत् ।। ६० ।।   

ஸ்வபா4வஜேந கெளந்தேய நிப3த்34: ஸ்வாந கர்மணா ।

கர்தும் நேச்ச2ஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவசோ1ऽபி தத் ।। 60 ।।


कौन्तेय  கெளந்தேய  குந்தியின் மகனே     मोहात्  மோஹாத்  மோஹத்தினால்      यत्  யத்  எதை     कर्तुं न इच्छसि  கர்தும் ந இச்ச2ஸி   செய்ய விரும்புவதில்லையோ     स्वभावजेन  ஸ்வபா4வஜேந  சுபாவத்தில் பிறந்த     स्वेन कर्मणा  ஸ்வாந கர்மணா  சொந்த கர்மத்தால்      निबद्ध:  நிப3த்34:  கட்டுண்டவனாய்       अवश:  அவச1:  உன் வசமில்லாதவனாய்     तत् अपि  தத் அபி  அதையே      करिष्यसि  கரிஷ்யஸி  செய்வாய்.


குந்தியின் மைந்தா, மோஹத்தால் எதைச் செய்ய மறுக்கிறாயோ, உன் இயல்பில் பிறந்த வினையினால் கட்டுண்டு, உன் வசமிழந்தவனாய், அதையே நீ செய்வாய். 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும், தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.


விளக்கம்:

அஹங்காரத்தின் வசப்பட்டு தனது சொந்த இயல்பிற்கு எதிராக முடிவெடுக்கும்போது அது எங்கு கொண்டுசென்று விடும் என முந்தைய சுலோகத்தில் பகவான் கூறினார். அதன் தொடர்ச்சியாக ஒருவனது சுபாவத்தின் பொதுவான நியதியை இங்கு பகர்கிறார்.


=> உள்ளூற உறைந்து கிடப்பது சுபாவம்:

சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்று குணங்களின் சேர்க்கையால் உருவாகும் ஒருவனின் சுபாவத்திலிருந்து தோன்றுவது ‘ஸ்வபா4வஜ’ என்று அழைக்கப்படுகிறது. வேறுவிதத்தில் சொல்லப்போனால் ஒருவனின் சம்ஸ்காரங்களிலிருந்து தோன்றுகிற செயல்கள் என இதை வரையறுக்கலாம். இதனால் தன்னியல்பில் கட்டுண்டவனாய், தவிர்க்க முடியாதபடி சில செயல்களைச் செய்ய அவன் தள்ளப்படுகிறான் — நிப3த்34. செய்வதற்கு தயாராக இல்லையெனினும் அது அவ்விதமே நடக்கிறது — கர்தும் ந இச்ச2ஸி. தனது இயல்புக்கு ஏற்ற கர்மத்தை ஒருவன் ஏன் செய்ய மறுக்கிறான்? மயக்கத்தின் காரணமாக — மோஹாத். திடீர் உந்துதல், தவறான அனுதாபம், அல்லது குழப்பமான தீர்மானம் போன்றவைகள் மோஹத்தின் வடிவங்கள். அர்ஜுனன் போரை கைவிட விரும்பியதும் இதே காரணத்தினால்தான். கருணை என்பது ஒரு நல்ல குணம்தான். ஆனால் அது இங்கு தவறான இடத்தில் வைக்கப்படுகிறது. ஏனெனில் அநீதி என வரையறுக்கப்படும் அனைத்து குற்றங்களையும் செய்தவன் துரியோதனன். அவனுக்கு இப்போது கருணை தேவையில்லை; அவனை தடுத்து நிறுத்த வேண்டும். உறவினன் என்பதால் தவறாக அவன்மீது அனுதாபம் கொண்டு செயல்பட்டால், அது விவேகமின்மையால் பிறந்த ஒரு செயலே ஆகும் — மோஹாத். உணர்ச்சி வேகத்தால் இப்போது செய்ய விரும்பாத அதே செயலை, பின்னர் நீயே கட்டுப்பாடின்றி செய்ய நேரிடும் — தத் கரிஷ்யஸி அவச1: அபி, என்கிறார் கிருஷ்ணர். மேலும் மனவழுத்தம் குறைந்தபின் இது குறித்து வருந்த நேரிடும், அல்லது பிறர் உன்னை மீண்டும் அதில் ஈடுபடுத்தத் தூண்டுவார்கள். எதுவாயினும், உன் தன்னியல்பு உன்னை முழுவதுமாக ஆட்கொள்ளும்போது, நீ அதற்கேற்ற செயலையே செய்ய வேண்டியிருக்கும். அதிலிருந்து தப்புவதற்கான வழி இல்லை; ஏனெனில் சுபாவத்தை விருப்பத்தால் மாற்ற முடியாது. ஒருவன் தனது விருப்பத்தால் மாற்றத்திற்கு உகந்ததான ஒரு சூழ்நிலையை உருவாக்கலாம். அப்போதுகூட மனநிலையில் மாற்றம் என்பது ஒரே இரவில் நிகந்து விடாது. இங்கு இப்போது அர்ஜுனன் இந்த போர் அனுபவத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் நிற்கிறான். அவன் செய்ய வேண்டியதைச் இப்போது செய்துதான் ஆக வேண்டும். அதை தவிர்ப்பது என்பது அவனது தன்னியல்புக்கு விரோதமானது. இதிலிருந்து, நாம் ஒவ்வொருவரும் நமக்கு உரியதை, நமது இயல்புக்கு விரோதமாக இல்லாததை செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிறர் என்ன செய்கிறார்கள் என்பது நமது செயலுக்கான அளவுகோல் அல்ல.

கர்மத்தை யோகமாக செய்வது எந்த விதத்திலும் மோக்ஷத்திற்கு எதிரானது அல்ல. நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, ஆத்மாவைப் பற்றிய அறியாமையின் விளைவு என்பதால் கர்மம் இயல்பிலேயே மோக்ஷத்திற்கு எதிரானது. ஏனெனில் சில வரையறுக்கப்பட்ட பலன்களைப் பெறுவதற்காக மட்டுமே கர்மம் செய்யப்பட்டால், அந்த சிறு பலன்களையே அவன் பெறுகிறேன். அது மோக்ஷம் அல்ல, பந்தம் ஆகும். ஆனால் கர்மம் குறிப்பிட்ட பலன்களுக்காக அல்லாமல் மோக்ஷத்திற்காகவென யோகமாக செய்யப்படும் போது, அது மோக்ஷத்திற்கானத் தகுதியை உருவாக்கும். தனது மனநிலையை சாத்விகமானதாக மாற்றக்கூடிய ஒரு தளம் கர்மயோகிக்கு கிடைக்கிறது. தடைகள் இல்லாத அறிவை அடைவதற்கு இது அவசியம். அனைத்து தடைகளையும்(ப்ரதிப3ந்த4) நீக்க, ஈஷ்வரார்பணம் மற்றும் பிரசாதபுத்தியுடன் கூடிய கர்மயோக வாழ்க்கையை அவன் மேற்கொள்ள வேண்டும்.  


=> கர்மயோகியும் சந்யாசியும்:

சந்யாசி அடையும் அதே நிலையை, கர்மயோகியும் அடைகிறான் — யத் ஸாங்க்2யை: ப்ராப்யதே ஸ்தா2நம் தத் யோகை3ரபி க3ம்யதே, என ஐந்தாவது அத்தியாயத்தில் பகவான் சுட்டிக்காட்டினார். ஒருவனது மனதின் இயல்பை திடீரென்று விருப்பத்தினால் கட்டாயப்படுத்தி மாற்றிவிட முடியாது. அது அவ்வளவு எளிதாக மாறாது. மாற்றவேண்டும் என்கிற அந்த விருப்பமே, இன்னும் வளர வேண்டிய ஒரு உள் உந்துதலின் வெளிப்பாடாகும். அது காலத்தினால் தான் முதிர்ச்சியடையும். ‘நான் ஒரு சந்யாசியாக வேண்டும்’ என்கிற விருப்பத்தால் எழுந்த தீர்மானம் மட்டுமே ஒருவனுக்கு சந்யாசியின் இயல்பை கொடுத்துவிடாது. கர்மயோக வாழ்க்கை இல்லாமல் சந்யாசியின் மனநிலை பெறுவது எளிதல்ல — ஸந்ந்யாஸஸ்து மஹாபா3ஹோ து3:க2மாப்தும் அயோக3த:. ஆகவே அர்ஜுனா, கர்மயோகமே சிறந்தது — கர்மயோகோ3 விசி1ஷ்யதே, என்கிறார் கிருஷ்ணர். எனவே பக்குவப்பட்டு விடுவதென்பது வேறு, மோஹத்தினால் விடுவது வேறு. இரண்டிற்குமிடையேயான வேறுபாட்டை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

வெள்ளைப் பூண்டின் சாறு வைக்கப்பட்டிருந்த பாத்திரம் எத்தனை தரம் கழுவித் துடைக்கப்பட்ட போதிலும் அது நாற்றத்தை கொடுத்துக்கொண்டிருக்கும். அஹங்காரமானது வெகு பிடிவாதமுள்ள அக்ஞானம். எவ்வளவுதான் சிரமப்பட்ட போதிலும் அதை முற்றிலும் போக்குவது முடியாத காரியம்.

————————————————————————————————