சனி, 5 செப்டம்பர், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.57 - 18.58

||18.57|| ஆகையால் அர்ஜுனா நீ வாழவேண்டிய விதமாவது:

चेतसा सर्वकर्माणि मयि सन्न्यस्य मत्पर: ।

बुद्धियोगमुपाश्रित्य मच्चित्त: सततं भव ।। ५७ ।।    

சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர: ।

பு3த்3தி4யோக3முபாச்1ரித்ய மச்சித்த: ஸததம் ப4வ ।। 57 ।।


चेतसा  சேதஸா  விவேகத்தால்     सर्वकर्माणि  ஸர்வகர்மாணி  அனைத்து கர்மங்களையும்     

मयि सन्न्यस्य  மயி ஸந்ந்யஸ்ய  என்னிடத்து சமர்ப்பித்து     मत्पर:  மத்பர: என்னைக் குறியாகக் கொண்டு       बुद्धियोगम्  பு3த்3தி4யோக3ம்  கர்மயோகத்தை     उपाश्रित्य  உபாச்1ரித்ய  சார்ந்திருந்து      सततं  ஸததம்  எப்பொழுதும்     मच्चित्त:  மச்சித்த:  சித்தத்தை என்பால் வைத்தவனாக       

भव  4  ஆகக்கடவாய்.


விவேகத்தினால் கர்மத்தையெல்லாம் என்பால் ஒப்படைத்து, என்னைக் இலக்காகக் கொண்டு, கர்மயோகத்தைச் சார்ந்திருந்து, எப்பொழுதும் சித்தத்தை என்பால் வைப்பாயாக.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

அறிவினால் செயல்களையெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.


விளக்கம்:

ஆகையால் அர்ஜுனா நீ கர்மயோகத்தை ஏற்று வாழ்க்கையை வழிநடத்துவாயாக என பகவான் இந்த சுலோகத்தில் கூறுகிறார். 


=> என்னையே சிந்தித்திரு:

எப்பொழுதும் என்னையே சிந்திப்பவனாக இரு — மச்சித்த: ஸததம் ப4, என்று கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அறிவுறுத்துகிறார். சிலருடைய மனதில் எப்போதுமே இறை சிந்தனை இருப்பதில்லை. சிலருக்கு அமாவாசை, சிவராத்திரி, பிரதோஷம், ஏகாதசி போன்ற மாதத்தின் ஒரு சில நாட்களில் உபவாசம் அல்லது பூஜை போன்ற செயல்களின் வழியாக இறை சிந்தனை இருக்கும். வேறு சிலருக்கு வெள்ளி போன்ற வாரத்தில் ஏதேனுமொரு நாள், சிலருக்கு காலை அல்லது மாலை போன்ற குறிப்பிட்ட பிரார்த்தனை நேரங்களில் மட்டும் ஈஷ்வரனை பற்றிய எண்ணம் இருக்கிறது. மற்ற நேரங்களில் இருப்பதில்லை. ஆனால் இங்கு பகவான் அர்ஜுனனிடம் எப்போதும் மனம் என்னில் இருக்கட்டும் எனக் கூறுகிறார். இதன் அர்த்தம் என்ன? இறைவனைத் தவிர வேறு எந்த எண்ணமும் அவனுக்கு இருக்கக்கூடாதா? அவன் எப்போதும் ஈஷ்வரனை நினைத்துக்கொண்டே தன் கடமைகளை எப்படி செய்ய முடியும்? முழுவுலகும் ஈஷ்வரனே எனும் புரிதலால் மட்டுமே இது சாத்தியமாகும். இவ்விதம் உணர்ந்த ஒருவன் எதை செய்யும்போதும் அல்லது எதையும் செய்யாமல் இருக்கிறபோதும் அவன் ஈஷ்வரனை ஒருபோதும் தவறவிடுவதில்லை. ஏனெனில் அவன் பார்க்கும் அனைத்தும் ஈஷ்வரனின் வடிவமே ஆகும்.


=> அனைத்துச் செயலையும் எனக்கர்ப்பணி:

மனதளவில் அனைத்து கர்மங்களையும் எனக்கு அர்ப்பணித்து விட்டு செய் — சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய, என்கிறார் கிருஷ்ணர். இங்கு ‘சேதஸா’ என்பது விவேக புத்தியுடன் கூடிய மனதை குறிக்கிறது. எது சரி மற்றும் எது தவறு என்பதை பிரித்தறியும் திறன் கொண்ட மனம். அந்த அறிவினாலும் பாவனையினாலும் செயலை சமர்ப்பித்தல் இங்கு கூறப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் இரு வகை பலன் உண்டு எனப் பார்த்துள்ளோம். (1) த்3ருஷ்ட பலன் - உடனே அனுபவிக்கப்படுகிற, கண்ணுக்குப் புலப்படுகிற பலன். (2) அத்3ருஷ்ட பலன் - கண்ணுக்கு புலப்படாத பலன். உதாரணமாக, தானம் செய்யும்போது ஏற்படுகிற திருப்தி என்பது கண்ணுக்கு புலப்படுகிற பலன். மேலும் அதனால் கிடைக்கக்கூடிய புண்ணியம் எனப்படும் ஒரு கண்ணுக்குத் தெரியாத பலனும் உள்ளது, இது பின்னர் விரும்பத்தக்க சூழ்நிலையை கொடுக்கும் ஒன்றாக வெளிப்படும். இவ்விதம் செய்யப்பட வேண்டிய கடமைகள், பூஜை, சடங்குகள் என உடல் மனம் மற்றும் வாக்கினால் செய்யப்படுகிற அனைத்து கர்மங்களையும் பகவானுக்குகாகவென செய்து, அதனால் உண்டாகிற விளைவை அவரின் பிரசாதமாக எடுத்து கொள்ளுதல் வேண்டும். இந்த கருத்து ஒன்பதாவது அத்தியாயம் இருபத்தேழாவது சுலோகத்தில், ‘எதைச் செய்யினும் எனக்கு அர்ப்பணமாகச் செய் — யத் கரோஷி தத் குருஷ்வ மத3ர்பணம், எனக் கூறப்பட்டது. 


=> என்னையே இலக்காகக் கொள்:

இறுதி இலக்காக என்னையே கொள்வாயாக — மத்பர:, என்கிறார் கிருஷ்ணர். இங்கு பகவானால் விளக்கப்படும் இந்த நபருக்கு ஈஷ்வரனே பிரதானமானவர். சிறிய இலக்குகளையும், அன்றாட பலன்களையும் பெறுவதற்காக அல்லாமல் அவனது ஒரே குறியாகவும், முடிவான இலக்காகவும் இருப்பது பரமேஷ்வரனே. சிறிய பலன்களைப் பெற பகவானின் அருளைப் பயன்படுத்துவதில் தவறேதுமில்லைதான். அப்படிப்பட்டவனையும் பக்தன் எனும் வகைப்பாட்டில், ‘அர்தா2ர்தீ2’ எனும் பெயரில் நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். ஆனால் இங்கு நாம் பேசுவது ஜிக்ஞாசு பக்தனைப் பற்றி. அவனது விருப்பம் ஈஷ்வரனாகவே இருப்பதால் அவனது அடைக்கலமும் ஈஷ்வரனைத் தவிர வேறில்லை. ஆகையினால் இங்கு கிருஷ்ணர், புத்தியோகம் என அழைக்கப்படுகிற கர்மயோக வாழ்க்கையை எடுத்துக் கொள் — பு3த்3தி4யோக3ம் உபாச்1ரித்ய, எனக் கூறுகிறார். 

கர்மயோகம் என்பது முற்றிலுமாக ஒரு தர்மநெறி சார்ந்த வாழ்க்கையாகும். பக்தியில்லாமல் கர்மயோகம் இல்லை. மனதின் உறுதியான தீர்மானம் என்று புத்தியோகத்தை சங்கரர் விளக்குகிறார். இரண்டாம் அத்தியாயத்தில்(2.41) பார்த்ததுபோல், மோக்ஷமே ஒரே புருஷார்த்தம் என்று தெளிவாக அறிந்தவனது மனம் உறுதியானது — வ்யவஸாயாத்மிகா பு3த்3தி4. இலக்கு தெளிவாக இல்லாதவனின் மனம் சிதறியதாக இருக்கிறது. தெளிவான இலக்கு இல்லையெனில், இலக்குகள் முடிவற்றவைகளாகத் தொடர்கின்றன. மாறாக லட்சியம் தெளிவாக இருந்தால், அவனது ஒரே திட்டம் — ஈஷ்வரனுடனானத் தனது ஐக்கியத்தைப் புரிந்து கொள்ளும் வரையில், அதற்காக தன்னைத் தயார்படுத்திக் கொள்வதாக மட்டுமே இருக்க முடியும். அந்த நோக்கத்திற்காகவே அனைத்தும் செய்யப்படுவதால் அங்கு ஒவ்வொரு செயலும் அர்த்தமுள்ளதாகிறது. எவ்வளவு காலம் ஆனாலும், எத்தனை ஆண்டுகள் எடுத்தாலும், அது ஒரு பொருட்டல்ல. ஏனெனில் தீர்மானமும் அர்ப்பணிப்பும் மோக்ஷமே இலக்கு என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது. அதனால் கர்மம் அனைத்தும் யோகம் ஆகிறது.

இனி, ஒருவனின் மனம் எப்போதும் ஈஷ்வரனில் நிலைபெற்றிருந்தால் என்ன நடக்கிறது? அடுத்த சுலோகத்தில் விடை வருகிறது. 


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பகவானைக் காணும் பாக்கியம் உனக்குக் கிடைத்தால் நீ அவரிடம் என்ன கேட்பாய்? வைத்திய சாலைகள், குளங்கள், பாட சாலைகள், அன்னச் சத்திரங்கள் — இவைகள் வேண்டுமென்று இறைஞ்சுவாயா? இவைகளெல்லாம் நாம் கடவுளைக் காணும் வரையில் உண்மையாகத் தோன்றும். ஆனால் கடவுளை நேருக்கு நேர் கண்டதும் இவையனைத்தும் நிலையில்லாதனவாகக் கனவில் காணப்படுவன போலத் தோன்றும். ஆகையால் அவனிடம் அன்பு வேண்டியும் அறிவு வேண்டியும் பிரார்த்திப்போம். அவனிடம் அன்பு செலுத்துவதால் மனிதத் தன்மையிலிருந்து நாம் தெய்வத் தன்மைக்கு உயர்த்தப்படுவோம். அறிவுக்கும் ஆனந்தத்திற்கும் உறைவிடம் பகவான் என்பதை அந்த அன்பிலிருந்து நாம் அறிவோம். நாம் அவருடைய புதல்வர்கள் என்பதும் அப்பொழுது நமக்கு விளங்கும்.

————————————————————————————————

||18.58|| புத்தியோகத்தால் விளையும் நன்மை யாது? 

मच्चित्त: सर्वदुर्गाणि मत्प्रसादात्तरिष्यसि ।

अथ चेत्त्वमहङ्कारान्न श्रोष्यसि विनङ्क्ष्यसि ।। ५८ ।। 

மச்சித்த: ஸர்வது3ர்கா3ணி மத்ப்ரஸாதா3த்தரிஷ்யஸி ।

அத2 சேத்த்வமஹங்காராந்ந ச்1ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி ।। 58 ।।


त्वम्  த்வம்  நீ      मच्चित्त:  மச்சித்த:  சித்தத்தை என்பால் வைத்து       मत्प्रसादात्  மத்ப்ரஸாதா3த்  எனது அனுக்கிரகத்தால்     सर्वदुर्गाणि  ஸர்வது3ர்கா3ணி  எல்லா இடைஞ்சல்களையும்      

तरिष्यसि  தரிஷ்யஸி  தாண்டிச் செல்வாய்      अथ  அத2  அன்றி      अहङ्कारात्  அஹங்காராத்  அஹங்காரத்தால்      न श्रोश्यसि चेत्  ந ச்1ரோஷ்யஸி சேத்  நீ கேளாவிட்டால்      

विनङ्क्ष्यसि  விநங்க்ஷ்யஸி  அழிவடைவாய்.


சித்தத்தை என்பால் வைத்து எனதருளால் இடைஞ்சல்களையெல்லாம் தாண்டிச் செல்வாய். அன்றி நீ அஹங்காரத்தால் கேளாவிட்டால் கேடு அடைவாய்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

என்னை சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய், அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயெனில் பெரிய நாசத்தை அடைவாய்.


விளக்கம்:

கர்மயோகத்தின் பலனாக ஒருவன் அடைவது என்னவென்று பகவான் இங்கு கூறுகிறார்.


=> இடர்பாடுகளைக் கடப்பாய்:

து3ர்க3’ எனில் கடப்பதற்கு கடினமானது என்று பொருள். ஒரு மலைச்சிகரம் அல்லது கடப்பதற்கு கடினமான ஒரு குறுகிய பாதை ‘து3ர்க3’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு மிகுந்த சிரமத்துடன் மட்டுமே கடக்கக்கூடிய விஷயங்கள் சொல்லப்படுகின்றன. இதனை சம்சாரத்திற்கு காரணம் என சங்கரர் கூறுகிறார். இந்த கர்மங்களே புண்ணிய-பாபத்தை உருவாக்கி, புதிய பிறவிகளுக்குக் காரணமாக அமைகின்றன. ‘நான் செய்கிறேன்’ என்ற அகந்தை(கர்த்ருத்வம்) மற்றும் அறியாமையிலிருந்து(அக்ஞாநம்) இவை பிறக்கின்றன; இவை யாவும் கடப்பதற்கு மிகவும் கடினமானவை. அவித்3யா காம கர்ம — அறியாமை மற்றும் அதன் விளைவாக உண்டாகிற ஆசைகள் மற்றும் அதை அடைய செய்யப்படுகிற செயல்கள் போன்ற தடைகளை கடப்பதென்பது மிகவும் கடினம். ஆனால், கர்மயோக வாழ்க்கையில் உன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் என்பதால், கடக்க முடியாத இவை அனைத்தையும் நீ எளிதாகக் கடந்து விடுவாய் — ஸர்வது3ர்கா3ணி தரிஷ்யஸி.

உலக அனுபவத்தில் இரு பகுதிகள் உண்டு. ஒன்று புறவுலகம், மற்றது அகவுலகம். தடைகளும் இடைஞல்களும் வெளியுலகிலும் உண்டு; அகவுலகாகிய மனதிலும் உண்டு. புறவுலக இடர்பாடுகளை இக்காலத்து நவீன கண்டுபிடிப்புகளின் துணைகொண்டு அகற்றிவிடலாம். நீரில்லாத இடத்தில் நீர் கொண்டு வருதல், வெப்பம் அதிகமாக இருக்கிற இடத்தில் வெப்பத்தை குறைத்தல், நோய் வரக்கூடிய இடத்தை நோயற்ற இடமாக மாற்றுதல் என அனைத்தும் வெளிக்கருவிகள் கொண்டு சாத்தியபடுத்தலாம். ஆனால் அதனால் மட்டுமே உலகம் இன்பமாக மாறிவிடாது. வெளியுலகைத் திருத்தியமைப்பதைவிட மனதைத் திருத்தியமைக்கத் தெரியாதவனுக்குப் புறவுலகம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது இன்பம் தராது. புறவுலகம் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் மனதைத் திருத்தியமைத்துக் கொண்டவனுக்கு அது துன்பத்தை கொடுக்காது. இடைஞ்சல்கள் உண்மையில் வெளியுலகிலில்லை; மனிதனுடைய மனநிலையில்தான் இருக்கின்றன. மனதை ஈஷ்வரனிடம் வைத்தவர்களுக்கு உலகம் தரும் இடர்பாடுகளும்கூட ஈசனது செயலாகவே தோன்றும். கர்மயோக வாழ்க்கையின் மூலம் பகவானிடம் சரணடைந்தவனாக கர்மத்தில் ஈடுபடுபவன் அவரது அனுகிரகத்தினால் அத்தகைய இடர்பாடுகளை கடக்கிறான். ஆனால் மனதில் அகந்தை இருப்பவனுக்கு துன்பங்கள் அனைத்தும் அதிலிருந்தே வருகின்றன.  


=> இலக்கிலிருந்து வீழ்வாய்:

‘இப்போது ஒருவேளை நான் சொல்வதை நீ கேட்கவில்லையெனில் — அத2 ந ச்1ரோஷ்யஸி சேத்’ என்று கூறி கிருஷ்ணர் ஒரு எச்சரிக்கையை அளிக்கிறார். சொல்லப்படுவதை கேட்காமல் போவதற்கானக் காரணம் என்னவாக இருக்கக்கூடும்? அஹங்காரம் — அஹங்காராத். ‘எனக்கு எல்லாம் தெரியும், எல்லாவற்றையும் நானே பொறுப்பேற்று நடத்திவிடுவேன், நீங்கள் கூறுவதை நான் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை’ என்று உனது சொந்த அகந்தையினால் நீ நினைக்கலாம். அறியாமையால் பிறந்த அந்த ஆணவத்தினால், நான் உனக்குச் சொல்லிக் கொண்டிருப்பதை நீ புரிந்து கொள்ளாமல் போகலாம். அப்படி இருக்குமானால், நீ கேட்டை அடைவாய் — விநங்க்ஷ்யஸி, என்கிறார் பகவான். அதாவது, நீ எதை விரும்புகிறாயோ அதை உன்னால் சாதிக்க முடியாது; இலக்கிலிருந்து வீழ்ந்துவிடுவாய்; புருஷார்த்தத்திலிருந்து நஷ்டத்தை அடைவாய்.

இரு வகையான பலம் உள்ளது. ஒன்று அஹங்கார பலம், இதை என்னால் செய்து கொள்ள முடியும் என நினைப்பது. இதன் பக்கவிளைவாக உண்டாவது கர்வம் ஆகும். இரண்டாவது வகையில், தன்னால் இதை செய்துவிட இயலாது என்ற அறிவுடன் பகவானிடம் சரணடைந்து அவரின் அனுகிரகத்தினால் உண்டாகிற பலம்; இதில் கர்வம் இல்லை. 

ஆகவேதான் பகவான் அர்ஜுனனிடம் ஒருகால் அஹங்கார பலத்தினால் நீ என்னை புரிந்து கொள்ளவில்லையெனில், நீ தேடுகின்ற அந்த நன்மைகள்(ச்1ரேயஸ்) உனக்கு மறுக்கப்படும், ஏனெனில் நீ அதற்குத் தயாராக இல்லை. சந்யாசத்திற்குத் தயாராகாமல் கர்மத்தை கைவிடும்போது, நீ ஒரு சந்யாசியாகவும் இருக்கமாட்டாய்; கர்மயோகியாகவும் இருக்கமாட்டாய். எனவே, நீ தேடும் அந்த இலக்கை அடைய முடியாது என்கிற அர்த்தத்தில் நீ அழிவடைவாய் எனக் கூறப்படுகிறது. அர்ஜுனன் தன்னை சரியாகப் புரிந்துகொண்டானா என்பதை உறுதிப்படுத்தவே கிருஷ்ணர் இதை சொல்லுகிறார். ஏனெனில் பின்னர் சுலோகம் அறுபத்திமூன்றில் (18.63), அவனுக்குப் பிடித்ததை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முழு சுதந்திரத்தை அர்ஜுனனுக்கு அவர் வழங்கப் போகிறார் — யதா2 இச்சஸி ததா2 குரு. ஆகையினால், இப்போது தான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டோம் என்பதை அவர் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்.

தான் செய்யவேண்டிய இந்த கடமை இப்போது மகிழ்ச்சி தருவதாக இல்லை என நினைத்து அர்ஜுனன் அதை கைவிட்டால், பிறகு இதைவிடவும் விரும்பத்தகாத ஒரு செயலை அவன் செய்ய வேண்டியிருக்கும் என்று கிருஷ்ணர் கூறுகிறார். ஏனெனில் அவனது இயல்பு அவனை அவ்வாறு செய்யத் தூண்டும். போர்களத்திலிருந்து ஓடிவிட்டதற்காக மக்கள் அவனை நிந்திக்கும்போது, அவனது சுபாவத்தினால் அவன் மிகுந்த கோபமடைந்து அவர்களுடன் சண்டையிடுவான். ஏனெனில் எவராலும் தனது இயல்பை முழுமையாகக் கைவிட முடியாது. எனவேதான் அர்ஜுனனின் மனநிலை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்தது. அவனுக்கு அறிவு இருந்தது உண்மைதான் எனினும், இப்போது பகவான் அர்ஜுனனிடம் சொல்வதிலிருந்தும், அந்த அறிவில் சில தடைகள் இருந்ததை நாம் புரிந்து கொள்கிறோம். அவை சரி செய்யப்பட வேண்டியவை.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

என்னதான் முயன்றாலும் ஈஷ்வரனுடைய கிருபை மட்டும் இல்லாது போனால் உனக்கு ஒன்றும் லபிக்காது. நீ ஈஷ்வரனை அடையமாட்டாய். ஆனால் இந்தக் கிருபை எளிதில் கிடைத்துவிடும் என்று நம்பாதே. உனது ஹிருதயத்திலிருந்து அஹங்காரம் முழுவதும் நீங்க வேண்டும். ‘நான் கர்த்தா’ என்ற எண்ணம் உன் மனதிலிருந்தால் நீ ஒருபோதும் ஈஷ்வரனைக் காணமாட்டாய். ‘நானே கர்த்தா’ வென்று எவன் நினைக்கின்றானோ அவன் உள்ளத்தில் ஈஷ்வரன் ஒருபோதும் தோன்றுவதில்லை.

————————————————————————————————