||18.42|| பிராமணர்களின் சுபாவம்:
शमो दमस्तप: शौचं क्षान्तिरार्जवमेव च ।
ज्ञानं विज्ञानमास्तिक्यं ब्रह्मकर्म स्वभावजम् ।। ४२ ।।
ச1மோ த3மஸ்தப: செள1சம் க்ஷாந்திரார்ஜவமேவ ச ।
ஞாநம் விக்ஞாநமாஸ்திக்யம் ப்3ரஹ்மகர்ம ஸ்வபா4வஜம் ।। 42 ।।
शम: ச1ம: மனக்கட்டுப்பாடு दम: த3ம: புலனடக்கம் तपस् தபஸ் தவம் शौचं செள1சம் தூய்மை क्षान्ति: க்ஷாந்தி: பொறுமை आर्जवम् एव च ஆர்ஜவம் நேர்மை ज्ञानं ஞாநம் ஞானம் विज्ञानम् விக்ஞாநம் ஏவ ச புரிந்துகொள்ளப்பட்ட ஞானம் आस्तिक्यं ஆஸ்திக்யம் ஈஷ்வர நம்பிக்கையும் स्वभावजम् ஸ்வபா4வஜம் சுபாவத்தில் உண்டாகிய ब्रह्म कर्म ப்3ரஹ்ம கர்ம பிராம்மண கர்மங்களாகின்றன.
மனக்கட்டுப்பாடு, புலனடக்கம், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, சாஸ்திர ஞானம், புரிந்துகொள்ளப்பட்ட ஞானம், ஈஷ்வர நம்பிக்கை — இவையாவும் பிராம்மண இயல்பாயுண்டாகிய கர்மங்களாகின்றன.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அகக் கரணத்தை யடக்குதல், புறக் கரணத்தை யடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், கல்வி, ஆத்திகம் -- இவை இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.
விளக்கம்:
இந்த சுபாவத்தை உடையவன் பிராமணன் என பகவான் இங்கு கூறுகிறார்.
=> பிராமணனின் கடமைகள்:
உண்மையில் இந்த விளக்கத்தில் குறிப்பிட்ட கர்மம் எதுவும் சொல்லப்படவில்லை என்பதை கவனிக்கலாம். குணநலன்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக லெளகிகத்தில் பிறந்த குடியை வைத்து ஒருவனை பிராமணன் எனக் கூறும் வழக்கம் இருக்கிறது. ஆனால் மனபரிபாகத்தையும் வாழ்க்கைமுறையையும் பார்த்து ஒருவனை பிராமணன் என்கிறது வேதாந்தம். எந்த சமூகத்தில் எந்தக் குடியில் எக்காலத்தில் வேண்டுமானாலும் பிராமணன் தோன்றலாம். ஏனென்றால் பிறப்பு உரிமையில் பொருள் ஒன்றுமேயில்லை. மனபரிபாகமே முக்கியமானது.
சாஸ்திரத்தின் பார்வையில் ஒவ்வொருவரும் குணத்தால் பிராமணனாக ஆக வேண்டும். சாஸ்திரத்தின் நோக்கம் கர்மங்களை வரையறுப்பது அல்ல, மாறாக ஒரு மனிதன் வளர்ச்சியை அதாவது மனமுதிர்ச்சியை அடைய உதவுவதே ஆகும். ஒவ்வொருவரும் அவரவர் கர்மங்களை ஒரு குறிப்பிட்ட மனப்பான்மையுடன் செய்வதன் மூலம் குணத்தால் பிராமணனாக முடியும் என்பதே அதன் பார்வை. இந்த அத்தியாயத்தின் நாற்பதைந்தாவது சுலோகத்தில் கிருஷ்ணர், ‘தனது சூழ்நிலையில் செய்ய வேண்டியதை மகிழ்ச்சியுடன் செய்பவன் மனபரிபாகத்தை அடைகிறான் — ஸ்வே ஸ்வே கர்மண்யபி4ரத: ஸம்ஸித்3தி4ம் லபதே நர:’, எனக் கூறுகிறார். எந்த சூழ்நிலையில் ஒருவன் பிறந்துள்ளானோ, அங்கு அவனுக்கு அளிக்கப்பட்ட கர்மமே அவனை முதிர்ச்சி அடையச் செய்யப் போதுமானது. ஒருவன் பணம் சம்பாதிக்கவோ அல்லது குறிப்பிட்ட பதவிகளைப் பெறவோ விரும்பினால், அதை அடைய அவன் சூழ்நிலையை மாற்ற வேண்டியிருக்கும். ஆனால் ஒருவன் மனமுதிர்ச்சியை விரும்பினால், அங்கு அவனது நோக்கம் அகமாற்றம் என்பதால் அது அவன் இருக்கின்ற இடத்திலேயே கிடைக்கின்றது.
இந்த முதிர்ச்சியை அடைய சுருதியானது உலகளாவிய அளவில் ஒரு பொதுவான முறையை வழங்குகிறது. அதுவே கர்மயோகமாகும். அதாவது எதை செய்யும்போதும் அதை ஒரு சரியான மனப்பான்மையுடன் மனத்தூய்மைக்காகவென ஈஷ்வர அர்ப்பணமாகச் செய்யவேண்டும். இதை அனுசரிக்கும் கர்மயோகி மனமுதிர்ச்சியை அடைகிறான், ஏனெனில் அவனுடைய விருப்பு வெறுப்புகள் அனைத்தும் அவனது கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இதனால் அவன் ஒரு பிராமணனாக ஆகிறான். அதை அடைவதற்காக ஒருவன் அனுசரிக்க வேண்டியவைகள் என்னென்ன என்பது இந்த சுலோகத்தில் ‘ப்3ரஹ்ம கர்ம’ என்ற பெயரில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் பொருள் பிராமணனுக்குரியது, ஒருவனை பிராமணனாக்குவது என்பதைக் குறிக்கிறது. ஒரு பிராமணனாக ஆக ஒருவன் வளர்த்துக் கொள்ளவேண்டிய குணநலன்கள் அதுவே. மேலும் இவை அனைத்தும் அவனுடைய இயல்பிலிருந்து, அதாவது சுபாவத்திலிருந்து பிறக்கின்றன — ஸ்வபா4வஜம்.
=> பிராமணனின் சுபாவம்:
(1) மனக்கட்டுப்பாடு அல்லது மனவடக்கம் — ச1ம. இது ஒருவனின் சிந்தனையின் மீதுள்ள ஆளுமையைக் குறிக்கிறது. நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, நமது எண்ண வடிவங்களுக்கும் நமது சொந்த புரிதலுக்கும் இடையில் போதுமான அளவு இடைவெளியை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதனால் எந்தவொரு குறிப்பிட்ட உணர்ச்சியாலோ அல்லது மயக்கத்தாலோ நாம் எளிதில் இழுத்துச் செல்லப்பட மாட்டோம். அந்த இடைவெளியை அனுபவிக்கும் ஒருவன் மனக்கட்டுப்பாடு உடையவன் ஆகிறான். மனக்கட்டுப்பாடு என்பது எண்ணத்தை முற்றிலுமாக நீக்குவது அல்ல — அது அவசியமும் இல்லை, சாத்தியமும் இல்லை. சிந்தனைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும், ஆனால் அவன் ஒரு குறிப்பிட்ட எண்ண ஓட்டத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், அதன் மீது செயல்படுவதா வேண்டாமா என்று தேர்ந்தெடுக்கும் நிலையில் நிதானமாக இருந்தால், அவன் ‘ச1ம’ எனும் குணத்தை உடையவனாகிறான். முதலில் அந்தக் குணத்தை ஒருவன் பயிற்சி செய்து அனுபவிக்கத் தொடங்கும்போது, பின் அதுவே அவனுடைய சொந்த இயல்பாக, அதாவது சுபாவமாக மாறுகிறது.
(2) புலனடக்கம் — த3ம. புலன்களின் தூண்டுதல்களில் கடைபிடிக்கப்பட வேண்டிய நிதானம், அல்லது இந்திரிய ஒழுக்கம் உடையவன்.
(3) தவம் — தபஸ். ஆடம்பரமற்ற ஒரு எளிமையான வாழ்க்கையை இது குறிக்கிறது. வசதிகளும் உடைமைகளும் குறைந்தபட்சமாக வைத்து வாழுகின்ற ஒரு சிக்கனமான வாழ்க்கைமுறைப் பேசப்படுகிறது. மேலும் வாக்கு மற்றும் செயலில் கடைபிடிக்கப்படுகிற ஒழுக்கமுறை தவம் ஆகும்.
(4) தூய்மை — செள1சம். புறத்தூய்மை மற்றும் அகத்தூய்மை இரண்டும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அகத் தூய்மை என்பது வெறுப்பு மற்றும் துன்பமான பிற உணர்வுகளுக்கு எதிரான உணர்வையோ அல்லது குணத்தையோ மனதிற்குக் கொண்டு வருவதன் மூலம் அவற்றை நடுநிலைப்படுத்துவதாகும். இதுவும் ஒரு பிராமணனால் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இவை தினமும் செய்யப்பட வேண்டிய விஷயங்கள். உடலை தினமும் சுத்தம் செய்வது போலவே, மனதையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
(5) பொறுமை — க்ஷாந்தி. புறவுலகிலிருந்து வருகிற இடர்பாடுகள் மற்றும் நெருக்கடிகளின் போது பிராமணன் பொறுமையே வடிவெடுத்தவனாக இருக்கிறான். துன்புறுத்துபவன் யாரையும் அவன் நொந்துகொள்வதில்லை.
(6) நேர்மை — ஆர்ஜவம். சிந்தனையிலும் சொல்லிலும் செயலிலும் அவன் நேர்மையைக் கடைபிடிக்கிறான். அதாவது இது எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகியவற்றில் இருக்கின்ற நேர்கோட்டைக் குறிக்கிறது. அதற்காக ஒருவன் நினைக்கின்ற அனைத்தும் சொல்லப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் சொல்லப்படுபவை அவனது மனதின் எண்ணங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதேபோல, செய்யப்படுகிற செயல், அவன் செய்வதாகச் சொன்னதற்குச் சரியாகப் பொருந்த வேண்டும்.
(7) ஞானமும் விக்ஞானமும் — ஞாநம் விக்ஞாநம் ஏவ ச. அறிவும், அது புரிந்து கொள்ளப்பட்டு தனது அனுபவமாக ஆக்கப்பட்டதும்(சுவானுபவம்) பிராமணனின் சுபாவத்திலிருந்து பிறக்கும் குணநலன்கள் ஆகும். இது இரு நிலையில் பார்க்கப்படுகிறது.
(i) தர்மத்தின் அடிப்படையில்:
இங்கு ஞானம் என்பது சாஸ்திரங்களிலிருந்து பெறப்பட்ட சரி மற்றும் தவறு(தர்ம-அதர்ம) பற்றிய அறிவு ஆகும். நம் அனைவருக்கும் விழுமியங்களைப் பற்றிய அறிவு இருக்கிறது, ஆனால் வெறும் அறிவு மட்டும் போதாது. அது உள்வாங்கப்பட்ட அறிவாக, விக்ஞானமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது ஒருவனிடமிருந்து பிரிக்க முடியாததாக ஆகிறது. இல்லையெனில் அது வெறுமனே மற்றவர்கள் நம்மிடம் இவ்விதம் ஒழுக்கமானவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிற ஒரு வெற்று அறிவாக மட்டுமே இருக்கிறது. அது உள்வாங்கப்படும்போதே தனது நடத்தையில், வாழ்க்கைமுறையில் அது மாற்றத்தை உண்டுபண்ணுகிறது.
(ii) ஆத்மாவின் அடிப்படையில்:
சிருஷ்டியின் படைப்பிற்கு காரணமாக விளங்குவது ப்ரம்மம் என்றும், மேலும் அந்த ப்ரம்மமே ‘நான்’ எனப்படும் இந்த ஆத்மா என்றும் சுருதிகள் கூறுகின்றன. இந்த பரோக்ஷ-ஞாநம் இங்கு ஞாநம் எனக் கூறப்படுகிறது. அறிவு என்பது அறியப்பட்ட ஒரு தகவலாக இல்லாமல் அது தெளிவாக புரிந்துகொள்ளப்பட்டதாக, நேரடி-அறிவாக, தன்மயமாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் — அபரோக்ஷ-ஞாநம். சிரவணத்தினால் அறியப்பட்ட ஞானம், சிரத்தையின் துணையுடன் மநநம் மற்றும் நிதித்யாசன நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தன்மயமாக்கப்பட வேண்டும். இந்த தெளிவான அறிவு ‘விக்ஞாநம்’ என்று அழைக்கப்படுகிறது.
தர்மத்தின் அடிப்படையிலும் சரி, ஆத்மாவின் அடிப்படையிலும் சரி அறிவைப் பெறுவதற்கும்(ஞானம்), அதை ஆழ்ந்த அறிவாக (விக்ஞானமாக) மாற்றுவதற்கும் தேவையான அனைத்தையும் ஒரு பிராமணன் செய்ய வேண்டும். சாஸ்திரத்தின் உட்கருத்தையும் பிரபஞ்சத்தில் உயிர் வாழ்க்கையின் தத்துவத்தையும் அவனே உள்ளபடி அறிய வல்லவனாகிறான்.
(7) இறை நம்பிக்கை — ஆஸ்திக்யம். ஈஷ்வர நம்பிக்கையுடன் கூடியவர்கள் மற்றும் சாஸ்திரத்தில் நம்பிக்கை உடையவர்கள் ஆஸ்திகர்கள் ஆவர். இந்த பௌதிக உடலின் மரணத்திற்குப் பிறகும் நிலைத்திருக்கும் ஒரு ஆத்மா உண்டு என்றும், புண்ணியம் மற்றும் பாவம் என்ற வடிவத்தில் ஒவ்வொரு செயலுக்கும் அதிருஷ்ட-பலன் என்ற கண்ணுக்குப் புலப்படாத ஒரு விளைவு உண்டு என்றும் நம்புபவர்கள் ஆஸ்திகர்கள். இந்த அதிருஷ்ட-பலனானது மற்றொரு பிறவியில் தனக்கு வந்து சேரும் என்ற புரிதலும் அவனுக்கு இருக்கிறது. இதுவும் ஒரு நல்ல தொடக்கம்தான், ஏனென்றால் இதன் காரணமாக அவன் ஒரு நெறிமுறைமிக்க வாழ்க்கையை வாழ முக்கியத்துவம் கொடுக்கிறான். அது அவனுக்கு தன்னைப்பற்றிய இயல்பை ஆராய்வதற்கு தேவையான முதிர்ச்சியைக் கொடுக்கிறது.
இதுவரை நாம் விவாதித்த இந்த குணாதிசயங்கள் அனைத்தும் ஒரு பிராமணனுக்கு உரியவை. ஏன் ஒரு பிராமணன் வேதாந்தத்திற்குத் தகுதியானவனாகக் கருதப்படுகிறான் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடியும். மேலும் இந்த சுபாவமே ஒரு பிராமணனை தீர்மானிக்கின்றதே தவிர வேறு எதுவும் இல்லை என்பதையும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். சுருதியில் கூறப்பட்டுள்ளது போல, ஒரு பிராமணனாக இருப்பவன் பொதுவான லௌகீகச் செயல்களின் மீது பற்றின்மை கொண்டவனாக இருக்கிறான். செயல்களின் மூலம் பெறப்பட்ட அனுபவங்களை கவனமாக ஆராய்ந்த பிறகு, படைக்கப்படாத ஒன்றை செயலின்மூலம் அடைய முடியாது என்பதை அவன் புரிந்துகொள்கிறான். தான் தேடுவது, தான் செய்துகொண்டிருப்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை நன்கு உணர்கிறான். ஒரு பிராமணனின் அனைத்துச் செயல்களும் இந்த புரிதலை உருவாக்குவதற்காகவே அமைந்துள்ளன. ஒவ்வொருவரும் இந்த நிலையை அடைய வேண்டும்.
இனி க்ஷத்ரியனின் சுபாவம் எப்படிப்பட்டது என்பதை அடுத்த சுலோகத்தில் பார்க்கலாம்.
————————————————————————————————
