||18.43|| க்ஷத்ரியர்களின் சுபாவம்
शौर्यं तेजो धृतिर्दाक्ष्यं युध्दे चाप्यपलायनम् ।
दानमीश्वरभावश्च क्षात्रं कर्म स्वभावजम् ।। ४३ ।।
செளர்யம் தேஜோ த்4ருதிர்தா3க்ஷ்யம் யுத்4தே3 சாப்யபலாயநம் ।
தா3நமீச்1வர பா4வச்1ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபா4வஜம் ।। 43 ।।
शौर्यं செளர்யம் சூரனாக இருப்பது तेज: தேஜ: துணிவு धृति: த்4ருதி: உறுதி
दाक्ष्यं தா3க்ஷ்யம் சாதுர்யம் युध्दे च अपि अपलायनम् யுத்4தே3 ச அபி அபலாயநம் போரில் புறங்காட்டாமை दानम् தா3நம் கொடை ईश्वरभाव: च ஈச்1வரபா4வ: ச தலைமை பொறுப்பு स्वभावजम् ஸ்வபா4வஜம் இயல்பினால் உண்டான क्षात्रं कर्म க்ஷாத்ரம் கர்ம க்ஷத்ரியருடைய கர்மங்களாம்.
சூரனாக இருப்பது, துணிவு, உறுதி, சாதுர்யம், போரில் புறங்காட்டாமை, கொடை, தலைமை பொறுப்பு ஆகியவைகள் இயற்கையில் உண்டாகிய க்ஷத்ரிய கர்மங்களாம்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை; இறைமை -- இவை இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாம்.
விளக்கம்:
ரஜோ குணம் மேலோங்கியும், சத்வ குணம் இரண்டாம்பட்சமாகவும் இருக்கின்ற ஒரு க்ஷத்ரியனுடைய சுபாவங்கள் என்னென்ன என்பதை பகவான் இங்கு பட்டியலிடுகிறார்.
=> க்ஷத்ரியனின் குணங்கள்:
(1) சூரத் தன்மை — செளர்யம். தைரியமுடையவனாக சூரனாக இருப்பது க்ஷத்ரிய குணமாகும். போர்க்களத்திலோ அல்லது எந்தவொரு ஆபத்தான சூழ்நிலையிலும் மிகுந்த திறமையும் வீரமும் உடையவனாக அவன் இருப்பான். அறம் அல்லது தர்மத்தை முதன்மையாகக் கொண்டவன் க்ஷத்ரியன் ஆகிறான். சமூகத்தினுடைய வாழ்க்கையை ஒழுங்குபடுத்துதல் அவனது வாழ்க்கைக் கடமையாக ஆகிறது. க்ஷத்ரியன் என்பதன் பொருள் உடலில் காயம்பட்டவன் என்பதாகிறது. நலத்தை நிலைநாட்டுவதற்காக உடல் வாழ்க்கையை அவன் ஒப்படைக்கிறான். அந்த பெரும் முயற்சியின் விளைவாக உடல் அடிக்கடி புண்பட்டாலும் அல்லது சிதைக்கப்பட்டாலும் அதை அவன் பொருட்படுத்துவதில்லை. தர்மத்திற்காக மரணமடையவும் தயாராக இருப்பவனாக இருக்கிறான். அனைவரும் அரசன் ஆக முடியுமா என்கிற கேள்வி எழலாம். நாடு ஆளும் அரசனாக எல்லாரும் ஆகவேண்டியதில்லை. ஆனால் சமுதாயத்தில் மேலான பொறுப்பை ஏற்று நடத்தும் விதத்தில், பலபேர் அரசனாக ஆகலாம். நல்லவன் ஒருவன் தீமையை உண்டாக்குகிற கேடுடைய மனிதனை எப்போதும் எதிர்க்கக் கடமைப்பட்டிருக்கிறான். பயிர்களுக்கிடையில் உள்ள களைகளைக் களைய விவசாயிகள் கடமைபட்டிருப்பது போல சமுதாயத்தில் அறம் பிறழ்பவர்களை அடக்கவும், ஒடுக்கவும், வெல்லவும், ஒழிக்கவும் அறவாளன், அதாவது க்ஷத்ரியன் கடமைப்பட்டிருக்கிறான்.
(2) துணிவு — தேஜஸ். மனோதைரியம் அல்லது அச்சத்தை அறியாத மனநிலை தேஜஸ் ஆகும். எதிரியின் பலத்தால் நிலைகுலையாமல் இருப்பது, அச்சுறுத்தலுக்கு ஆளாகாமல் இருப்பது, அல்லது எதிரியை வெல்லும் ஆற்றலை கொடுப்பதாக இருப்பது இந்த துணிவு. தன்னப்பிக்கையிலிருந்து பிறக்கின்ற ஒளி என சங்கரர் இதை வரையறுக்கிறார்.
(3) மனஉறுதி — த்4ருதி. நீடித்த உற்சாகம் அல்லது எவ்வளவு உழைத்தாலும் களைப்பை அடையாத மனநிலை உறுதி எனப்படுகிறது. சாதகமற்ற விஷயங்கள் நிகழ்கின்ற சமயங்களிலும் பகைமையான சூழ்நிலைகளிலும் உறுதியுடன் இருக்கின்ற மனிதனாக க்ஷத்ரியன் இருக்கிறான்.
(4) சாதுர்யம் — தா3க்ஷ்யம். காலம், தேசம், நடப்பு நிலைமை அறிந்து வல்லமையோடு எதிரியைத் தாக்கக்கூடிய நிலைக்குச் சாதுர்யம் என்று பெயர். பகைவன் திடீரென்று வந்து தாக்கும்போதிலும் மனம் தளராது உடனடியாக செயல்படும் திறன் சாதுர்யமாகிறது. தனது திட்டத்திற்கு மாறாக நடக்கும்போதும், குழப்பம் கொள்ளாது மாற்றத்திற்கு தயாராக இருப்பதுவும், தனது வளங்களைத் திரட்டி, எண்ணங்களை முழுமையாக சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி, வருவதை அப்படியே எதிர்கொள்ளும் திறனை இது குறிக்கிறது. சில சமயம் சற்று பின்னோக்கிச் சென்று, பின்பு எதிரியை வளைத்துப் பிடிப்பதும் சாதுர்யம் எனக் கூறப்படுகிறது.
(5) போரில் புறங்காட்டாமை — யுத்4தே3 அபலாயநம். போரிட வேண்டிய சூழ்நிலையில் பின்வாங்காமல் இருப்பது ஒரு க்ஷத்ரியனின் மற்றொரு கடமை அல்லது குணமாக இருக்கிறது. இது யுத்த தர்மம் ஆகும். பகைவனுக்கு பயந்து போர்க்களத்தினின்று புறங்காட்டியோடிப் பிழைக்க நினைப்பவன் க்ஷத்ரியன் அல்ல. பகைவனுக்கு அடிமைப்படுவதைவிட வீரத்துடன் எதிர்த்து நின்று அடிபட்டு உயிர் விடுவது மேல் என அவன் எண்ணுகிறான். தர்மத்தைக் காக்க வேண்டிய அறவீரனாகவும், நீதியின் செங்கோலை ஏந்த வேண்டிய ஆட்சியாளனாகவும் இருப்பதால் அவன் பின்வாங்கக்கூடாது. சங்கரர் இதை ‘முதுகைக் காட்டாமல் இருப்பது’ எனக் குறிப்பிடுகிறார். ஒரு போரில் இது மிகவும் முக்கியமான விஷயமாகிறது. ராஜஸ்தானில் போர்க்களத்திலிருந்து காயமடைந்த வீரர்களை வரவேற்கும் ராஜபுத்திரப் பெண்கள், காயம் முதுகில் இருக்கிறதா அல்லது முன்னால் இருக்கிறதா என்று முதலில் பார்ப்பார்கள். காயம் முன்னால் இருந்தால், அவன் வீட்டில் ஏற்றுக்கொள்ளப்படுவான். அதுவே முதுகில் இருந்தால், அவன் விரட்டியடிக்கப்படுவான். எந்தவொரு போராட்டத்திலிருந்தும் பின்வாங்காமல் இருப்பது ஒரு க்ஷத்ரியனின் முக்கிய பண்பாகும்.
(6) கொடை — தா3நம். குடிகளை முறையாக ஓம்புதல் தானம் எனப்படுகிறது. ஆட்சியாளன் ஒருவன் அனைத்து வகையான மக்களுக்கும் மானியங்களை வழங்க வேண்டும். பண்டைய காலங்களில் அனைத்து கலைஞர்களும் அந்நாட்டு வேந்தனால் ஆதரிக்கப்பட்டனர். விஞ்ஞானிகளுக்கும், கல்வி புகட்டும் குருமார்களுக்கும் அவர்களின் உள்கட்டமைப்பு, குருகுலங்கள் போன்றவற்றிற்காக மானியங்கள் வழங்கப்பட்டன. க்ஷத்ரியர்கள் குருகுலத்திற்குச் சென்று தேவையானவற்றை வழங்குகிற வழக்கம் இருந்தது. அறிவியல், கலைகள், கலாச்சாரம் என எல்லாவற்றையும் அவர்கள் ஊக்குவித்தனர்.
இங்கு தானத்தைப் பற்றி சங்கரர் ஒரு அழகான விளக்கத்தைத் தருகிறார். கொடுக்கப்பட வேண்டிய பொருட்களின் விஷயத்தில் தாராள மனப்பான்மையுடன் இருப்பது என அவர் அதை வரையறுக்கிறார் — தே3யத்3ரவ்யேஷு முக்தஹஸ்ததா. பொதுவாக தானம் கொடுக்கின்ற விஷயத்தில், நாம் ஏற்கனவே பார்த்ததைப்போல பல காரணிகள் அடங்கியுள்ளன. சரியான நேரம், இடம், தகுதியான நபர்கள் என சாத்விக தானம் எனும் பகுதியில் பல்வேறு காரணிகளைப் பார்த்தோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவனின் கைகள் கட்டப்பட்டிருக்கக் கூடாது. தாராள மனதுடன் எந்த நிபந்தனையும் இல்லாமலும், எந்தவிதமான பற்றுதலாலும் கட்டுப்படாமலும், தயக்கமின்றி கொடுப்பது க்ஷத்ரியனின் பண்பாகும்.
(7) தலைமை பொறுப்பு — ஈச்1வரபா4வ. சுயநலம் கருதாது காரியத்தை நிர்வகிப்பவனும் அதை வெற்றிகரமாகக்கொண்டு சாதிப்பவனும் தலைவன் ஆகிறான். க்ஷத்ரியன் ஒருவன் இயல்பிலேயே தலைமைப் பண்பை உடையவனாக இருக்கிறான். இப் பண்பு, ஆளப்படுபவர்களுக்கு தனது அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது என்று சங்கரர் கூறுகிறார். அதாவது, ஒரு ஆட்சியாளனாகத் தான் பொறுப்பில் இருக்கிறேன் என்பதை அவன் தெளிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், தனது நோக்கங்கள் இன்னதென்று புரிந்துகொள்ளப்படுவதையும் அவன் உறுதி செய்ய வேண்டும். ரஜோ குணம் மேலோங்கியும், சத்வ குணம் இரண்டாவதாகவும் இருக்கும்போது, ஆட்சி செய்வது அவனது இயல்பான போக்காக இருக்கும். அவனிடம் சத்வ குணம் இருப்பதால், அவன் சுயநலவாதியாக, தனது நலத்தில் முனைப்பு கொண்டவனாக இருக்க மாட்டான், மாறாக அது ஒரு சமூக முனைப்பாகவோ அல்லது ஒரு சித்தாந்ததை நோக்கிய முனைப்பாகவோ இருக்கும். அந்த சித்தாந்தத்தை நிறைவேற்றுவதற்காகத் தனது குடும்பத்தையும் தனது சொந்த சுகபோகங்களையும் தியாகம் செய்ய அவன் தயாராக இருப்பான். எந்தவொரு இலட்சியவாதியும் தனது சித்தாந்தத்தின்படி செயல்பட்டால், அவன் ஒரு க்ஷத்ரியனே. அந்த இலக்கிற்கு அப்பால் பார்க்கத் தவறியவனாக, அதையே அனைத்துமாக நினைப்பதே அவனிடமிருக்கும் பிரச்சனையாக இருக்கிறது. சத்வ குணத்தால் அவனது சிந்தனையில் ஒரு மேன்மை இருக்கிறது, ஆனால் ரஜோ குணத்தின் இருப்பு காரணமாக அது முழுமையானதாக இல்லை.
இவையனைத்தும் க்ஷத்ரியனின் சுபாவத்திலிருந்து தோன்றும் கர்மங்கள் ஆகின்றன, சுபாவஜம். இனி வைசிய மற்றும் சூத்திரனின் சுபாவம் மற்றும் கர்மம் கூறப்படுகிறது.
————————————————————————————————
||18.44|| வைசிய மற்றும் சூத்திரனின் சுபாவம்:
कृषिगौरक्ष्यवाणिज्यं वैश्यकर्म स्वभावजम् ।
परिचर्यात्मकं कर्म शूद्रस्यापि स्वभावजम् ।। ४४ ।।
க்ருஷிகெள3ரக்ஷ்யவாணிஜ்யம் வைச்1யகர்ம ஸ்வபா4வஜம் ।
பரிசர்யாத்மகம் கர்ம சூ1த்3ரஸ்யாபி ஸ்வபா4வஜம் ।। 44 ।।
कृषि गौरक्ष्य वाणिज्यं க்ருஷி கெள3ரக்ஷ்ய வாணிஜ்யம் உழவு, பசு கரத்தல், வர்த்தகம்
स्वभावजम् ஸ்வபா4வஜம் இயல்பாயுண்டாகிய वैश्य कर्म வைச்1ய கர்ம வைசிய கர்மங்களாகும் शूद्रस्य अपि சூ1த்3ரஸ்ய அபி சூத்திரனுடையவும் स्वभावजम् ஸ்வபா4வஜம் இயற்கையில் உண்டான कर्म கர்ம கர்மமானது परिचर्य आत्मकं பரிசர்ய ஆத்மகம் உடல் உழைப்பு புரிவது.
உழவும், கால்நடை காத்தலும், வாணிகமும் இயல்பாயுண்டாகிய வைசிய கர்மங்களாம். உடல் உழைப்பு புரிவது சூத்திரனுக்கு இயல்பாயுண்டாகிய கர்மம்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
உழவு, பசுக் காத்தல், வாணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசிய கர்மங்களாம். தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.
விளக்கம்:
=> வைசிய கர்மம் மற்றும் சுபாவம்:
‘க்ருஷி’ எனில் பயிர் சாகுபடி தொடர்பான எந்தவொரு செயலையும் குறிக்கும். ‘கெள3ரக்ஷ்ய’ எனில் பசுக்களைப் பாதுகாத்தல் என்பது பொருள். பசு வளர்ப்பு என்று கூறாமல், பசுப் பாதுகாப்பு என்று பகவான் கூறக் காரணம் என்ன? இக்காலத்தில் கால்நடை வளர்ப்பு என்ற பெயரில் இறைச்சிக்காகக் கால்நடைகளை வளர்ப்பதும், அதன் பொருட்டு அவற்றின் உடல் எடையை அதிகரிக்க சில கொடூரமான விஷயங்களுக்கு உட்படுத்துவதும் நடைபெறுகிறது. பசுக்களை பாதுகாத்தல் எனும் வெளிப்பாட்டில் அப்படி இல்லை. நாம் ஒன்றை பாதுகாக்கும்போது அது நம்மைத் திருப்பிப் பாதுக்காக்கும் என்கிற கோட்பாடு உள்ளது. உதாரணமாக, தர்மம் பாதுகாக்கப்பட்டால், அது உங்களைப் பாதுகாக்கும் — தர்மம் ரக்ஷதி ரக்ஷித:. அதேபோல ஒரு பசு பாதுகாக்கப்பட்டால், அது நம்மை பாதுகாக்கும். ஒரு விவசாயிக்கு கால்நடைகளின் உதவி நிறையவே தேவைப்படுகிறது, எனவே அவற்றைப் பாதுகாப்பது அவனது அன்றாடப் பணிகளில் ஒரு பகுதியாகிறது.
வைசியனின் மற்றொரு கடமை வர்த்தகம் — வாணிஜ்யம். அனைத்து வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், தொழிலதிபர்கள் போன்றோர் வைசியக் கர்மத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பயிர்த்தொழில் புரிதல், ஆடுமாடுகளை வளர்த்துப் பாதுகாத்தல், வியாபாரம் செய்தல், தொழிற்சாலைகளை நிறுவுதல் ஆகிய இவையாவும் செல்வத்தை உண்டாக்கும் தொழில்களாகும். சுதந்திர வாழ்க்கை வாழ்ந்து பணத்தைப் பெருக்குபவர்களெல்லாம் வைசியர்கள். உலக வாழ்க்கைக்குத் தேவையான தன தானியங்களை விருத்தி செய்வதும், மூலப்பொருள்களைச் சேகரிப்பதும், அவைகளைப் பண்படுத்திப் பயன்படுகிற பொருள்களாக மாற்றியமைப்பதும், வாணிகத்தின் மூலம் பொருள்களை நாலாபக்கங்களிலும் பங்கிட்டுக் கொடுத்தலும் வைசிய தர்மமாகும். கஞ்சா, மதுபானம் உள்ளிட்ட போதை பொருட்கள் மக்களின் நல்வாழ்வைக் கெடுக்கின்றன. அத்தகைய பொருள்களை உற்பத்தி செய்வதும், அவைகளை வர்த்தகம் செய்வதும் வைசிய தர்மம் ஆகாது.
இந்த கர்மங்களும் குணத்திலிருந்து பிறந்தது, எனவே இது இயல்பானது, சுபாவஜம். க்ஷத்ரியனைப் போலவே வைசியனுக்கும் ரஜோ குணம் மேலோங்கி இருக்கும். ஆனால் இரண்டாமிடத்தில் சத்வ குணத்திற்கு பதிலாக, தமோ குணமே உள்ளது. எனவே அவன் இயல்பாகவே சுயநலவாதியாக இருப்பான்; ஆனால் அவன் தனது செயல்களைக் கடமைகளாக மாற்றினால், அவனால் சத்வ குணத்தை வளர்த்துக் கொள்ள முடியும்.
=> சூத்திரனின் கர்மம் மற்றும் சுபாவம்:
தமோ குணம் மேலோங்கியும், ரஜஸ் இரண்டாவதாகவும் கொண்டவனாக சூத்திரன் இருக்கிறான். அவனுடைய செயல்பாடு உடல் உழைப்பின் வடிவில் இருக்கிறது. தானே திட்டமிட்டு எதையும் செய்ய இயலாதவனாக, இனியொருவன் கொடுக்கின்ற வேலையை செய்து முடிப்பவனாக அவன் இருக்கிறான். அதாவது, பிறருக்கு செயல் செய்து அதில் சம்பளம் ஏற்று ஜீவிப்பவனாக சூத்திரன் இருக்கிறான் — பரிசர்ய ஆத்மகம். இதில் பொதுவாக அதிக அலைச்சல் இருக்கும். ஒவ்வொரு சமூக அமைப்பிலும், பல்வேறு செயல்பாடுகளுக்குப் பின்னால் பெருவாரியான உழைப்பை வழங்கியவர்களாக இந்த மக்கள் இருக்கின்றனர்.
இப்பகுதியில் பார்க்கப்பட்ட நான்கு வர்ணங்களும் மனபரிபாகத்தைப் பொருத்தவைகள். உலகெங்கும் உள்ள ஜன சமூகங்களில் இந்த குண-கர்ம பேதங்கள் இயல்பாய் அமைந்திருப்பதைக் காணலாம். ஒரே குடும்பத்தில் பிறந்துள்ள நான்கு சகோதர்களுக்கிடையில் ஒவ்வொருவனும் ஒரு வர்ணத்தைச் சேர்ந்தவனாயிருக்கலாம்.
இனி, ஒருவனின் சுபாவத்தைப் பொறுத்து அமைந்த அந்த செயல்பாடு எதுவாக இருந்தாலும், அது ஒரு கடமையாக மாற்றப்பட வேண்டும். அதுதான் இங்குள்ள முக்கிய விஷயம். கடமைகளைச் சரியாகப் பின்பற்றியவர்கள் மரணத்திற்கு பின், தங்கள் கடமை நிறைந்த வாழ்வின் பலனாக சொர்க்கத்தை அடைகிறார்கள் என்று சுருதி கூறுகிறது. ஆனால் இங்கு கீதையில் இது கூறப்பட்டதற்கு காரணம், சொர்க்கத்தை அடைவது எப்படி என்பதை காட்டுவதற்காக அல்ல. பொதுவாக ஒரு கடமையை வெவ்வேறு விதங்களில் செய்ய முடியும், அதன் காரணமாக வெவ்வேறு பலன்கள் கிடைக்கும். ஒரு செயலை, சிறந்த பிறவிக்காகவோ, சொர்க்கம் செல்வதற்காகவோ, அல்லது பின்னர் எப்போதோ அனுபவிக்கக்கூடிய ஒன்றை பெறுவதற்காகவோ செய்வதை விடுத்து, அதைச் செய்வதனால் இந்த வாழ்க்கையில், இப்போது என்ன நன்மை கிடைக்கும் என்பதற்காகவெனச் செய்து, அந்த கர்மத்தை யோகமாக மாற்ற முடியும். அதைப்பற்றித்தான் பகவான் இப்போது பேசப் போகிறார்.
————————————————————————————————
