||18.40|| உலகிலுள்ள அனைத்தும் முக்குண வடிவம்:
न तदस्ति पृथिव्यां वा दिवि देवेषु वा पुन: ।
सत्त्वं प्रकृतिजैर्मुक्तं यदेभि: स्यात् त्रिभिर्गुणै: ।। ४० ।।
ந தத3ஸ்தி ப்ருதி2வ்யாம் வா தி3வி தே3வேஷு வா புந: ।
ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதே3பி4: ஸ்யாத் த்ரிபி4ர்கு3ணை: ।। 40 ।।
प्रकृतिजै: ப்ரக்ருதிஜை: பிரக்ருதியிலிருந்து உதித்த एभि: ஏபி4: இந்த त्रिभि: र्गुणै: த்ரிபி4: கு3ணை: மூன்று குணங்களிலிருந்து यत् मुर्क्तं स्यात् யத் முக்தம் ஸ்யாத் எது முக்தியடைந்திருக்கிறதோ तत् सत्त्वं தத் ஸத்த்வம் அந்த உயிர் पृथिव्यां ப்ருதி2வ்யாம் பூவுலகிலோ वा வா அல்லது पुन: புந: மேலும் दिवि देवेषु தி3வி தே3வேஷு தேவலோகத்தில் தேவர்களுக்கு இடையிலோ न अस्ति ந அஸ்தி இல்லை.
பிரக்ருதியிலிருந்து உதித்த இம் முக்குணங்களினின்று விடுதலையடைந்த உயிர் மண்ணுலகில் அல்லது விண்ணுலகில் வானவர்களுக்குள்ளும் இல்லை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இயற்கையில் தோன்றும் இம் மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை; வானுலத்தில் தேவருள்ளேயுமில்லை.
விளக்கம்:
குண அடிப்படையில் பல்வேறு விஷயங்களின் மூவகை பிரிவுகளைப் பற்றி பேசிய பகவான் இந்த பகுதியை இங்கு முடிவுரை செய்கிறார். உலகிலுள்ள அனைத்தும் முக்குண வடிவமாகவே இருக்கிறது என்கிறார்.
=> குணபேதத்திலிருந்து விடுபட்டவர் எவருமில்லை:
இங்கு ‘ஸத்த்வம்’ எனில் ஒரு உயிரினத்தை, உயிர் வாழும் ஒரு உயிரியைக் குறிக்கிறது. முக்குணங்களிலிருந்து விடுபட்ட எந்தவொரு உயிரும் இல்லை என பகவான் கூறுகிறார். எங்கு? பூமியில், மற்ற உலகங்களில், தேவலோகத்தில் — ப்ருதி2வ்யாம் தி3வி தே3வேஷு. மனிதர்கள் உட்பட பூமியிலுள்ள உயிரினங்கள், சொர்க்கத்திலுள்ள தேவர்கள் என எங்கும் இந்த மூன்று குணத்திலிருந்து விடுபட்ட எந்தவொரு உயிரும் கிடையாது — த்ரிபி4: கு3ணை: முக்தம் ஸ்யாத் ந அஸ்தி. புல் முதல் பிரம்மதேவர் வரை எல்லா உயிர்களும் முக்குண மயமான பிரக்ருதியில் கட்டுண்ட ஆத்மாக்கள் ஆவர். அவர்கள் மக்களாக இருந்தாலும் சரி, தேவர்களாக இருந்தாலும் சரி முக்குணங்களைக் கடக்கும் வரையில் எல்லாரும் பந்தப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அதாவது பிறப்பும் இறப்பும் அவர்களுக்கு மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. குணவேறுபாடுகளுக்கு ஏற்ப அந்த ஜீவர்களின் பிறப்பு மேலானதாகவோ கீழானதாகவோ அமைகின்றது. அனைத்து ஜீவர்களுள் மிகப் பெரியவர் பிரம்மதேவர். அவர் அடைந்திருப்பது ஒரு பதவியேயன்றி முக்தியல்ல. அதாவது முக்குணங்களில் அவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார். முக்குணங்களைக் கொண்டல்லாமல் படைப்புத் தொழில் நிகழாது. பிரக்ருதி லயம் என்பது அவர் பெற்றுள்ள பெரிய பதவியாகும். ஆனால் மற்ற ஜீவர்களுக்கு இருப்பது போல பிரம்மாவுக்கு மேலும் பிறப்பு இல்லை. ஒரு கல்பத்தின் முடிவில் அவர் கிரமமுக்தியடைகிறார். அப்பொழுது அவர் முக்குணங்களைக் கடந்தவர் ஆகிறார்.
எனவே பிரக்ருதியான மாயையிலிருந்து தோன்றிய இந்த சத்வ, ரஜஸ் மற்றும் தமஸிலிருந்து முற்றிலும் விடுபட்ட எந்த உயிரும் இல்லை. சங்கரர் இதை உயிரினமாக எடுத்துக்கொள்கிறார், ஆனால் அதை தோன்றியிருக்கின்ற எந்தவொன்றுக்கும் நீட்டித்துப் பார்க்க முடியும். எதுவும் இந்த குணங்களிலிருந்து விடுபடவில்லை. முற்றிலும் தமஸின் வடிவாக இருக்கின்ற பாறையிருந்து சில வேறுபாடுகளுடன் தமஸை பிரதானமாகக் கொண்ட மரம், செடி, பறவை, விலங்கு போன்றவைகளும் இதில் அடக்கம்.
மனிதர்களிடமும் இந்த மூன்று குணங்களில் ஏதேனும் ஒன்று மேலோங்கி இருக்கலாம். இது நமக்கு நான்கு அடிப்படை சாத்தியக்கூறுகளை அளிக்கிறது, ஆனால் அங்கேயும் லட்சக் கணக்கான வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக குணங்களின் பார்வையிலிருந்தும் கர்மத்தின் அடிப்படையிலும் நான்கு பிரிவுகள் உள்ளன — பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன்.
=> அடுத்த பகுதிக்கான சங்கரரின் அறிமுகம்:
குணம் மற்றும் கர்மத்தின் அடிப்படையில் மனிதர்களை நான்கு பிரிவுகளாகப் பகுப்பதை சங்கரர் பின்வருமாறு அறிமுகப்படுத்துகிறார். செயல், அந்தச் செயலுக்கான காரணங்கள் மற்றும் செயலின் விளைவு ஆகியவற்றால் வகைப்படுத்தபடுகிற பிறவிச் சுழற்சியான சம்சாரம் என்பது, பதினைந்தாவது அத்தியாயத்தில் வேர்கள் மேல்நோக்கிய மரத்தின் (ஊர்த்4வமூலம்) உவமையால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். கர்மத்தின் விளைவினால் ஒரு உடலின் பிறப்பு ஏற்படுகிறது, அதன் காரணமாக மீண்டும் கர்மம் உண்டாகிறது, அந்த கர்மத்திற்கு ஒரு பலன் கிடைக்கிறது, அது மீண்டும் மற்றொரு உடலின் பிறப்பிற்கு வழிவகுக்கிறது. இதுவே சம்சாரம் ஆகும். இந்த சம்சாரத்திலிருந்து விடுபட விரும்பினால், இந்த மூன்று குணங்களிலிருந்தும் விடுபட வேண்டும். ஏனெனில், சம்சாரம் என்பது சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய இந்த மூன்று குணங்களால் ஆனது. அவற்றின் பிடியில் இருக்கும் வரை, சம்சாரத்திலிருந்து விடுபட முடியாது. யாராக இருந்தாலும் ஒன்று சாத்விக கைவிலங்கு எனப்படும் பொன்-விலங்கினாலோ, அல்லது ராஜஸ கைவிலங்கு எனப்படும் வெள்ளி-விலங்கினாலோ, அல்லது தாமஸ கைவிலங்கான இரும்பு-விலங்கினாலோ பிணைக்கப்பட்டிருக்கிறான். மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம் கைவிலங்கை மாற்ற முடியுமே தவிர சம்சாரத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. உதாரணமாக, மனிதன் ஒருவன் அதிக புண்ணியத்தை ஈட்டி தேவனின் வடிவத்தை அடையலாம். ஆனாலும் தேவனும் முக்குணத்திற்கு உட்பட்டவனே ஆவான். எனவே இந்த மூன்று குணங்களைக் கொண்ட சம்சாரத்திலிருந்து எப்படி விடுதலை பெறுவது என்பது கூறப்பட வேண்டும். இதற்காக, ஒரு புதிய பகுதி தொடங்குகிறது.
முழு கீதையின் சாராம்சத்தையும் தொகுத்துக் கூற வேண்டும்; மேலும், மோக்ஷ புருஷார்த்தத்தில் ஆர்வம் கொண்டவர்களால் இது பின்பற்றப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காகவே பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் என்ற பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. இந்தப் பிரிவுகள் நிச்சயமாக குணங்களுடன் தொடர்புடையவை, ஆனால் அதே நேரத்தில் இது ஒரு புதிய தலைப்பு ஆகும்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
ஒருவன் தாழ்ந்த சுபாவத்தோடு நெடுங்காலம் போராடியும் ஆத்ம ஞானத்தின் பொருட்டு இடைவிடாது உழைத்தும் சமாதி நிலையை அடையும்போது அகங்காரம் அடியோடு அகலும். ஆனால் சமாதி நிலையை அடைவது மிகவும் கஷ்டம். முக்குணத்தில் பிறந்த அகங்காரமானது எளிதில் நீங்குவதில்லை. அதனால்தான் நாம் இவ்வுலகில் மறுபடியும் பிறந்து துன்பத்தை அனுபவிக்கிறோம்.
————————————————————————————————
||18.41|| குண அடிப்படையில் நான்கு வர்ணதர்மத்தின் விளக்கம்:
ब्राह्मणक्षत्रियविशां शूद्राणां च परन्तप ।
कर्माणि प्रविभक्तानि स्वभावप्रभवैर्गुणै: ।। ४१ ।।
ப்3ராஹ்மணக்ஷத்ரியவிசா1ம் சூ1த்3ராணாம் ச பரந்தப ।
கர்மாணி ப்ரவிப4க்தாநி ஸ்வபா4வப்ரப4வைர்கு3ணை: ।। 41 ।।
परन्तप பரந்தப எதிரிகளை எரிப்பவனே ब्राह्मण क्षत्रिय विशां ப்3ராஹ்மண க்ஷத்ரிய விசா1ம் பிராம்மண, க்ஷத்ரிய, வைசியர்களுடைய शूद्राणां च சூ1த்3ராணாம் ச சூத்திரர்களுடையவும் कर्माणि கர்மாணி கர்மங்கள் स्वभाव प्रभवै: ஸ்வபா4வ ப்ரப4வை: சுபாவத்திலிருந்து பிறந்த गुणै: கு3ணை: குணங்களுக்கு ஏற்றவாறு प्रविभक्तानि ப்ரவிப4க்தாநி பிரிக்கப்பட்டிருக்கின்றன.
எதிரிகளை எரிப்பவனே, பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய சூத்திரர்களுடைய கர்மங்கள் அவரவர் இயல்பில் உதித்த குணங்களுக்கு ஏற்பப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பரந்தபா! பிராம்மணர் க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி வகுப்புற்றனவாம்;
விளக்கம்:
பொதுவாக வர்ணம் என்று அழைக்கப்படுகிற பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய மற்றும் சூத்திரர்களுடைய கர்மங்கள் அல்லது கடமைகள் குறித்த பிரிவுகள் இங்கு பேசப்படுகிறது. இந்த ஒவ்வொரு பிரிவுகளில் இருப்பர்களின் கடமைகள் மற்றவர்களின் கடமைகளிலிருந்து வேறுபட்டவை. இந்த பேதங்கள் அல்லது பிரிவுகள் ஒருவனின் குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த குணங்கள் சுபாவத்திலிருந்து, அதாவது ஒருவனுடைய இயல்பிலிருந்து பிறந்தவை — ஸ்வபா4வ ப்ரப4வை: கு3ணை:, என்கிறார் பகவான். சுபாவம் என்பதற்கு ஈஷ்வரனுடைய பிரக்ருதி அல்லது மாயை என விளக்கமளிக்கிறார் சங்கரர். அது முக்குணமாயுள்ளது. குணத்துக்கு தகுந்தபடி கர்மம் வேறுபடுகிறது. கர்மத்திலிருந்து பெறப்படுகிற சம்ஸ்காரத்துக்கு ஏற்றவாறு சுபாவம் மாறுகிறது. எனவே கர்மமும் சுபாவமும் இணைபிரியாதவைகள். ஒருவனின் சுபாவம் எப்படியோ அப்படி வர்ணம் மாறுகிறது. ஆகவே, ஒரு மனிதன் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவன் என்பதை அவனுடைய சுபாவத்திலிருந்தும், அதிலிருந்து உண்டாகிற கர்மத்திலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். சுபாவம் என்பது மிக சூக்ஷமமானது. எளிதில் அதை தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒருவன் செய்கிற கர்மத்திலிருந்து அவனுடைய சுபாவம் எத்தகையது என்பது வெளிப்படுகிறது.
=> சுபாவம்:
‘ஸ்வபா4வ’ என்பதற்கு ‘ஒருவனின் இயல்பு’ என இனியொரு பொருளையும் கூறுகிறார் சங்கரர். ஒருவனது இயல்பே அவனது குறிப்பிட்ட செயல்களுக்கு காரணமாகிறது, மேலும் அந்த இயல்புக்குக் காரணமாக இருப்பது முக்குணங்களின் விகிதாச்சாரமே ஆகும். ஒரு பிராமணனின் இயல்பு சத்வ குணத்தின் ஆதிக்கத்தால் பிறக்கிறது. அதே சமயம் ஒரு க்ஷத்ரியனின் இயல்பு ரஜோ குணத்தின் ஆதிக்கத்தாலும், இரண்டாம் நிலையில் சத்வ குணம் துணையாக இருப்பதாலும் ஏற்படுகிறது. ஒரு வைசியனுக்கும் ரஜோ குணத்தின் ஆதிக்கம் இருக்கும், ஆனால் அவனுக்கு இரண்டாவதாக தமோ குணம் இருக்கிறது. மேலும் ஒரு சூத்திரனுக்குத் தமோ குணத்தின் ஆதிக்கமும், ரஜோ குணம் இரண்டாம் நிலையிலும் இருக்கிறது. இதுவே ஒரு பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், அல்லது சூத்திரன் என்பதற்கான உண்மையான வரையறை ஆகும். இந்த பிரிவுகள் ஒரு நபரின் இயல்பை அடிப்படையாகக் கொண்டது, எனவே இது உலகளாவியது.
பிராமணன் —> சத்வ குணம்.
க்ஷத்ரியன் —> ரஜோ குணம், சத்வ குணம்.
வைசியன் —> ரஜோ குணம், தமோ குணம்.
சூத்திரன் —> தமோ குணம், ரஜோ குணம்.
இந்த நான்கு வகையான குணபேதம் கொண்ட மனிதர்கள் இல்லாத சமூகம் எது? ஒருவனிடம் சத்வம், ரஜஸ் அல்லது தமஸ் இவற்றில் எது மேலோங்கி இருக்கிறது என்பதை எப்படி அறியமுடியும்? அந்த நபரின் நடத்தை சில அறிகுறிகளைக் காட்டிக் கொடுக்கும். சத்வம் மேலோங்கி இருக்கும்போது அமைதியும் நிதானமும் இருக்கும்; ரஜஸ் மேலோங்கி இருக்கும் இடத்தில் தலைமைப் பண்பு இருக்கும். ரஜஸ் மேலோங்கியும், சத்வம் இரண்டாவதாகவும் உள்ள ஒருவன் இயல்பாகவே ஒரு சிறந்த அமைப்பாளராக இருப்பான். மேலும் சுயநலம், பேராசை போன்றவை இருக்கும் இடத்தில், ரஜஸ் மேலோங்கியும் தமஸ் இரண்டாவதாகவும் இருக்கிறது. குழப்பம், மயக்கம், மந்தநிலை போன்றவை இருக்கும் இடத்தில் தமஸ் மேலோங்கி இருக்கிறது. எனவே ஒருவனின் சுபாவம் அப்படி இருக்க இந்த குணங்களே காரணங்கள். அவைகளே அவர்களை அந்த குறிப்பிட்ட வகையான செயல்களை செய்யத் தூண்டுகின்றன.
=> மனப்பான்மையில் மாற்றம்:
பிறப்பின் அடிப்படையில் அல்ல, சுபாவத்தின் அடிப்படையிலேயே இந்த வர்ணபேதம் பகவானால் பகரப்படுகிறது. ஒருவன் எந்த சூழ்நிலையில் பிறந்திருந்தாலும், பிராமணனின் குணத்தை அதாவது சத்வ குணப் பிரதானத்தை பெறுவதற்குத் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருவன் கடமையால் க்ஷத்ரியனாக இருக்கலாம், ஆனால் அவனிடம் ரஜோ குணம் மேலோங்கி இருக்க வேண்டிய அவசியமில்லை. செயலில் போர் வீரனாக இருப்பவன் குணத்தால் ஒரு பிராமணனாக இருக்கலாம். இதைத்தான் கிருஷ்ணர் இங்கு அர்ஜுனனிடம் கூறுகிறார். சரியான மனப்பான்மையுடன் உன் கடமையைச் செய், அப்போது நீ ஒரு பிராமணன் ஆகிறாய்; ஆனால் உன் கடமையை மாற்றுவதால் நீ பிராமணன் ஆகிவிடுவதில்லை. நீ எங்கிருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும், அதுவே ஒரு பிராமணனாக ஆவதற்குப் போதுமானது. இட மாற்றமோ அல்லது கடமை மாற்றமோ ஒருவனை மாற்றுவது கிடையாது, மாறாக மனப்பான்மையில் மாற்றம் தேவை. அதுதான் இந்த முழு வாதத்தின் சாராம்சம் ஆகும். அதை நாம் இப்போது காணலாம்.
ஒருவனிடம் சத்வ குணம் மேலோங்கி இருந்தால், அவனுடைய வெளிப்பாடு எப்படி இருக்கும் எனும் கேள்விக்கு கிருஷ்ணர் அடுத்த சுலோகத்தில் பதிலளிக்கிறார்.
————————————————————————————————
