வெள்ளி, 5 ஜூன், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.32 - 18.33

||18.32|| தாமஸமான புத்தி:

अधर्मं धर्ममिति या मन्यते तमसावृता ।

सर्वार्थान् विपरीतांश्च बुद्धि: सा पार्थ तामसी ।। ३२ ।।

அத4ர்மம் த4ர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா ।

ஸர்வார்தா2ந் விபரீதாம்ச்1ச புத்3தி4: ஸா பார்த2 தாமஸீ ।।32 ।।


पार्थ  பார்த2  பார்த்தா      तमसा आवृता  தமஸா ஆவ்ருதா  அக்ஞான இருளால் மூடப்பெற்று      

अधर्मं 4ர்மம்  அதர்மத்தை      धर्मम् इति  4ர்மம் இதி  தர்மம் என்று

सर्व-अर्थान् च  ஸர்வ-அர்தா2ந் ச எல்லா விஷயங்களையும்     विपरीतान्  விபரீதாந்  விபரீதமாகவும்    

या  யா  எது      मन्यते  மந்யதே  நினைக்கிறதோ      

सा बुद्धि:  ஸா புத்3தி4:  அந்த புத்தியானது      तामसी  தாமஸீ  தாமஸமானது.


பார்த்தா, அக்ஞான இருளால் மூடப்பெற்ற எந்த அறிவானது அதர்மத்தை தர்மமாகவும், விஷயங்களையெல்லாம் விபரீதமாகவும் நினைக்கிறதோ அது தாமஸமானது. 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

பார்த்தா! இருளால் கவரப்பட்டதாய், அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும் எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாகக் காண்பதும் ஆகிய புத்தி தாமச புத்தியாம்.


விளக்கம்:

சென்ற சுலோகத்தில் சொல்லப்பட்ட ராஜஸ புத்தி உடையவர்களுக்கு, தெரியும் ஆனால் சரியாகத் தெரியாது; அதாவது அரைகுறையாகப் புரிந்து கொள்ளப்பட்ட அறிவு அங்கு பேசப்பட்டது. அவனுக்கு விழுமியங்களைப் பற்றித் தெரிந்திருக்கலாம்; ஆனால் அதன் மதிப்பு தெரியாது. உண்மையைப் பேசுவதன் மதிப்பு முழுமையாகத் தெரியாமலிருப்பதால் அவன் அதை சமரசம் செய்கிறான். ஆனால் இந்த சுலோகத்தில் விவாதிக்கப்படுபவன் விஷயங்களை நேர்மாறாக அறிகிறான். அனைத்தையும் தவறாகப் புரிந்து கொள்கிறான். அவன் அதர்மத்தை தர்மம் என்று வாதிடுகிறான். ‘இந்த விஷயங்களைச் செய்யாவிட்டால் இந்த உலகில் வாழ முடியாது; ஆக்ரோஷமாக நீ இதைச் செய்’ என்று கூறுகிறான். அதர்மம் என்பது அவனுக்கு ஒரு நல்லொழுக்கமாகவே தெரிகிறது. ‘பொய் சொல்ல வேண்டும். இப்படி உலக ஞானம் இல்லாமல் இருந்தால் எப்படி? விவேகத்துடன் பொய் சொல்’ என்று மற்றவர்களுக்கு கற்பிக்கிறான். இவ்விதம் அதர்மமான செயல்களை தர்மமாக புரிந்துகொள்ளும் புத்தி தாமஸமானது — தாமஸீ. செய்யக்கூடாதது செய்யப்படுகிறது; முறையற்றது சரியானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், எல்லா விஷயங்களையும் அவன் விபரீதமாகப் புரிந்துகொள்கிறான். உலகில் அறியப்பட வேண்டிய அனைத்துப் பொருட்களும், விஷயங்களும் (ஸர்வ-அர்தா2ந்), அவை என்ன என்பதற்கு நேர்மாறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன — விபரீதாந். அதாவது அவற்றுக்கு கொடுக்கப்பட வேண்டிய மதிப்பை விட அதிக மதிப்பு தரப்படுகிறது. ஏன் அனைத்தும் இப்படி தலைகீழாகப் புரிந்துகொள்ளப்படுகிறது? ஏனென்றால் மனம் மந்தமான தன்மை அல்லது அறியாமையால் மூடப்பட்டிருக்கிறது — தமஸா ஆவ்ருதா.


=> தாமஸமானவனின் நடத்தை:

நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் நினைப்பது விபரீத புத்தி. மந்தமான புத்தியுடைய மாணவன் ஒருவன் பள்ளிக்கு ஒழுங்காகப் போவதில்லை; துஷ்டப் பிள்ளைகளுடன் கூடி ஊர்சுற்றி காலத்தை வீணே கழிக்கிறான். அவனுக்கு பள்ளிகூடம் செல்வது கெட்டதாகத் தோன்றுகிறது. கூடா நட்பு கொள்வதை நன்மையானதென்று எண்ணுகிறான். மக்களில் பலருக்கு கடவுள் வழிபாடு, பாரமார்த்திக விஷய ஆராய்ச்சி போன்றவைகள் மனக்கசப்பை உண்டாக்குகிறது. வேதாந்த விசாரம் செய்தற்கு இப்பொழுது அவசரம் ஒன்றுமில்லை. கிழவனாகும்போது அதை பார்த்துக்கொள்ளலாம் என்று சாக்குச் சொல்லுகின்றனர். ஊரார் விஷயங்களைப் பற்றி வீண்பேச்சுப் பேசுவது, அவர்களிடத்துள்ள குணத்தைக் குற்றமாகவும், குற்றத்தைக் குணமாகவும் எடுத்துக் கொள்ளுதல் போன்றவை தமோகுணப் பிரதானமாக இருப்பவர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் நல்ல விளையாட்டுகளை அவர்கள் விளையாட மாட்டார்கள். சூதாடுதல் போன்றவற்றில் வீண்காலம் கழிப்பார்கள். இலவசமாக உணவு கிடைக்கக்கூடிய இடங்களில் அவர்கள் அழைப்பின்றியே வந்து கூடிக் கலந்துகொள்வார்கள். 

=> முக்குண விசாரத்தின் நோக்கம்:

சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என மூன்று வகையான அந்த-கரணங்கள் இங்கு பேசப்பட்டன. ஆனால் அவை நிரந்தரமாக அக்குணத்தில் மட்டுமே இருக்கின்றன எனப் புரிந்து கொள்ளக்கூடாது. எனவே அதை முயற்சியின் மூலம் மாற்றமுடியும். தாமஸ புத்தி உள்ளவனை முதலில் ராஜஸ நிலைக்கு கொண்டு வர வேண்டும். சோம்பேறியாக இருக்கின்ற தாமஸகாரனுக்கு அதிக வேலை கொடுத்தல், விளையாட்டில் ஈடுபட வைத்தல், ஓடுதல் அல்லது ஒரு குறிப்பிட்ட கிலோமீட்டர் நடத்தல் என சுறுசுறுப்புடன் செயல்பட வைத்தல் வேண்டும். கொஞ்சம் கல்வி, கொஞ்சம் ஒழுக்கம் கொண்டுவரப்படும்போது தமஸ் சென்றுவிடும். அதன் பின்னர் சத்வத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்தலாம். ஏற்கனவே பார்த்ததுபோல, சரியான உணவுமுறை, கர்ம-யோக வாழ்க்கை, நல்லொழுக்கங்களைக் கடைப்பிடிப்பதில் தீவிரம், சேவை முதலியவை ஒருவனுக்கு சாத்விக புத்தியைக் கொடுக்கும். இந்த வகையான பாகுபாடுகள் என்பது மற்றவர்களை மதிப்பீடு செய்வதற்காக அல்ல, மாறாக ரஜஸ் என்றால் என்ன, தமஸ் என்றால் என்ன, சத்வம் என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொள்வதற்காகவே இங்கு சொல்லப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் இந்த மூன்று குணங்களின் கலவையாகவே இருக்கிறோம். இங்கும் அங்கும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். ஒருவரிடம் பிரச்சனை இருக்கிறது எனில் அங்கு மாற்றத்திற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது பொருள். எவ்விதத்தில் மாற்றத்தை அடையவேண்டுமென்ற அறிவு இதன்மூலம் கொடுக்கப்படுகிறது. 

————————————————————————————————

||18.33|| சாத்விக உறுதி:

धृत्या यया धारयते मन:प्राणेन्द्रियक्रिया: ।

योगेनाव्यभिचारिण्या धृति: सा पार्थ सात्त्विकी ।। ३३ ।।

த்4ருத்யா யயா தா4ரயதே மந: ப்ராணேந்த்ரியக்ரியா: ।

யோகே3நாவ்யபி4சாரிண்யா த்4ருதி: ஸா பார்த2 ஸாத்த்விகீ ।। 33 ।।


पार्थ  பார்த2  பார்த்தா     योगेन  யோகே3  ஒருமை மனதைக்கொண்டு       

अव्यभिचारिण्या यया धृत्या  அவ்யபி4சாரிண்யா யயா த்4ருத்யா  பிறழாத எந்த உறுதியால்    

मन: प्राण इन्द्रिय क्रिया:  மந: ப்ராண இந்த்ரிய க்ரியா:  மனம் பிராணன் இந்திரியங்களின் செயல்கள்

धारयते  தா4ரயதே  (ஒருவன்) காக்கின்றானோ     सा धृति:  ஸா த்4ருதி:  அந்த உறுதியானது      सात्त्विकी  ஸாத்த்விகீ  சாத்விகமானது.


பார்த்தா, யோகத்தைக்கொண்டு பிறழாத எந்த உறுதியால் மனம்-பிராணன் - இந்திரியங்களின் செயல்களை ஒருவன் காக்கின்றானோ அந்த உறுதி சாத்விகமானது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களைப் பிறழ்ச்சியில்லாத யோகத்துடன் தரிக்க வல்லதாகிய மன உறுதியே சாத்விகமாவது, பார்த்தா!


விளக்கம்:

சுலோகம் முப்பத்திமூன்று முதல் முப்பத்தைந்து வரை மூன்று வகையான உறுதிப்பாடு விளக்கப்படுகிறது. முதலில் சாத்விக திருதி.


=> பிறழாத உறுதி:

த்4ருதி’ என்னும் சொல் உறுதி என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மனதினுள் அமைகின்ற திட்பம் என்பதும் அதுவே. அறிவும் ஆற்றலும் ஒன்றுபட்ட அந்தக்கரணத்தின் நிலை திருதி என்பதாகிறது. சாத்விகமான திருதி என்பது நிலையானது, மாற்றத்திற்கு உட்பட்டது அல்ல. தடைகள் வரும்போதும் அச்செயலில் உறுதியாக இருப்பதைக் குறிக்கிறது — அவ்யபி4சாரிண்யா த்4ருத்யா. அசைக்க முடியாத உறுதியுடன், மனதின் செயல்கள், உடலியல் செயல்பாடுகள், இந்திரியங்களின் செயல்களை ஒருவன் நிலைநிறுத்துகிறான் — மந: ப்ராண இந்த்ரிய க்ரியா: தா4ரயதே. அதாவது இவைகளின் செயல்பாடுகளை சில எல்லைகளுக்குள் வைத்து ஒழுங்குபடுத்தியவனாக அவன் இருக்கிறான். அந்த எல்லைகள் தர்மமான வாழ்க்கை முறையைக் குறிக்கின்றது. இதை செய்வதற்கு ஒருவித உறுதிப்பாடு தேவை, அது சாத்விக உறுதி எனப்படுகிறது. ஆன்மிகம், தர்மம், நற்பண்புகளுடன் இருத்தல் முதலிய சாத்விகமான சாதனங்களில் இருக்கின்ற உறுதி சாத்விகமானது.  ஏனெனில் தர்மத்திற்கு எதிரான விஷயங்களை செய்யும் போக்கு மனிதனுக்கு மிகவும் இயல்பானது — ஸ்வாபா4விக. அதுபோல, சரியான புரிதல் இருக்கும்போது சரியானதை செய்யும் போக்கும் இயல்பானதே ஆகும் — ஸ்வாபா4விக. ஆரம்ப காலகட்டத்தில் குழந்தைகள் சமுதாயத்தில் அப்பாவித்தனமாக வளரும்போது, ​​மனிதனின் அடிப்படை இயல்புக்கு எதிரான சில போக்குகளை இயல்பாக தனக்குள் எடுத்துக்கொள்கின்றன. சிறிது காலத்திற்குப் பிறகு, அவை இயற்கையானவைபோல தோன்றவும் செய்கின்றன. ஆனால் எது சரி எனும் அறிவானது ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே உலகளாவிய ஒழுக்கமுறையாகவும் பேசப்படுகிறது. 

எனவே, தர்மத்தை பின்பற்ற வைக்கும் இயற்கையான ஒன்று, மற்றும் அதர்மத்தை பின்தொடர வைக்கும் மற்றொன்று என எப்போதும் இரு போக்குகள் ஒன்றுக்கொன்று போரிட்டுக் கொண்டே இருக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து புராண இலக்கியங்களிலும், சரி மற்றும் தவறை முன்வைத்து தெய்வங்களுக்கும் அசுரர்களுக்கும் இடையேயான போர் பேசப்படுகிறது. எனவே தர்மத்தின் எல்லைக்குள் இருப்பதா அல்லது அவற்றைக் கடப்பதா என்கிற மோதலை அனைவரும் எதிர்கொள்கிறார்கள். அந்நிலையில் தர்மத்தின் எல்லைக்குள் இருப்பதற்கான உறுதி ஆரம்பத்தில் மிக அவசியமாகிறது. சரியானது மற்றும் முறையற்றது குறித்த ஒருவனின் புரிதலிலிருந்து பிறக்கின்ற இந்த உறுதியும், ஒழுக்கங்கள் மற்றும் அணுகுமுறை குறித்து மன ஒருமுகப்பாட்டுடன் செய்கிற பயிற்சியும்(யோகே3) அவனை தர்மத்தின் எல்லைக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதில் கர்ம-யோகமும் தியானமும் அடங்கும். திருதி படைத்த யோகியின் மனதும், பிராணனும், இந்திரியங்களும் திருத்தமாகவும் அழுத்தமாகவும் வேலைசெய்ய வல்லவைகளாகின்றன. இந்த செயல்களெல்லாம் பரமாத்மாவினுடைய சேவைக்கென்றே ஒப்படைக்கப்படுகின்றன. அதாவது மனதில் உண்டாகிற உணர்ச்சியும், பிராணன் உயிர்பிடித்திருப்பதும், கர்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் அதனதன் வேலைகளைச் செய்வதும் ஆகிய இவையெல்லாம் விதவிதமான ஈஷ்வர வழிபாடுகளாகின்றன. காந்த ஊசி எப்போதும் வடதிசையையே நோக்கி நிற்பது போல யோகியின் திருதி எப்பொழுதும் பரமாத்மாவுக்கென்றே ஒப்படைக்கப்பட்டதாகிறது. அந்த உறுதிப்பாடு சாத்விகமானது, அது மனிதனை மேலோனாக ஆக்குகிறது. 

முமுக்ஷுத்வம், பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவை சாத்விகமான உறுதிக்கு உபாயம் ஆகின்றன.

————————————————————————————————