சனி, 30 மே, 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.30 - 18.31

||18.30|| சாத்விகமான புத்தி:

प्रवृत्तिं च निवृत्तिं च कार्याकार्ये भयाभये ।

बन्धं मोक्षं च या वेत्ति बुद्धि: सा पार्थ सात्त्विकी ।। ३० ।।   

ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே ப4யாப4யே ।

3ந்த4ம் மோக்ஷம் ச யா வேத்தி புத்3தி4: ஸா பார்த2 ஸாத்த்விகீ ।।30।।


पार्थ  பார்த2  பார்த்தா      प्रवृत्तिं च  ப்ரவ்ருத்திம் ச  கர்ம மார்க்கத்தையும்

निवृत्तिं च  நிவ்ருத்திம் ச  சந்யாச மார்க்கத்தையும்      कार्य-अकार्ये  கார்ய-அகார்யே  செய்யத் தகுந்ததையும் தகாததையும்     भय-अभये  4ய-அப4யே  பயத்தையும் பயமின்மையையும்     

बन्धं  3ந்த4ம்  பந்தத்தையும்      मोक्षं च  மோக்ஷம் ச  மோக்ஷத்தையும்    या  யா  எது    वेत्ति  வேத்தி  அறிகிறதோ      सा बुद्धि:  ஸா புத்3தி4:  அந்த புத்தி      सात्त्विकी  ஸாத்த்விகீ  சாத்விகமானது.


பார்த்தா, கர்ம மார்க்கத்தையும், சந்யாச மார்க்கத்தையும், செய்யத் தகுந்ததையும் தகாத காரியத்தையும், பயத்தையும் பயமின்மையையும், பந்தத்தையும் மோக்ஷத்தையும் அறியும் புத்தி சாத்விகமானது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

தொழிலெது, ஒழிவு யாது, செய்யத் தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தமெது, விடுதலையெது -- என்பவற்றைப் பகுத்தறியும் புத்தியே, பார்த்தா! சாத்விக புத்தியாம்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் பகவான் சாத்விகமான புத்தியைப் பற்றிக் கூறுகிறார். வெளியிலிருக்கிற விஷயமும், புத்தியில் எழுகிற வ்ருத்தியும் நேர்கோட்டில் இருப்பது சாத்விகம் ஆகும். அதாவது, சரியானதை சரி என்றும், தவறானவற்றை தவறு என்றும் உள்ளபடியே புரிந்து கொள்ளுதல் சரியான அறிவைக் குறிக்கிறது. அவ்விதத்தில் கீழ்கண்ட சில விஷயங்களை அறிந்த புத்தியே சாத்விகமானது:


=> பிரவ்ருத்தியும் நிவ்ருத்தியும்:

பிரபஞ்சத்தில் ஜீவனைப் பந்தப்படுத்தி பிறப்பு இறப்பைப் பெருக்கிக் கொண்டேபோகிற கர்மம் பிரவ்ருத்தி எனப்படும். மாறாக, அந்த செயல் கர்ம-யோகமாகச் செய்யப்படும்போது, ​​அதுவே மோக்ஷத்திற்கு ஏதுவான கர்மமாக ஆவதால் அது நிவ்ருத்தி எனப்படுகிறது. இதையே அகர்மம் என்றும் சந்யாசம் என்றும் சொல்லலாம். ஏனெனில் கர்மத்தைக் கடப்பதற்கு அது உறுதுணையாகிறது. மேலும் அது செயலின் பலனைத் துறத்தல் எனும் கர்ம-பல2-த்யாகத்தை உள்ளடக்கியுள்ளது. இங்கு ஒருவன் பல செயல்களில் ஈடுபட்டிருந்தபோதிலும் அது உண்மையில் பிரவ்ருத்தி அல்ல. ஈஷ்வர அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் மன சுத்திகரிப்புக்காக(அந்த-கரண-சுத்3தி4) இந்த செயல்கள் செய்யப்படும்போது, அதன் விளைவாக கிடைக்கின்ற மோக்ஷம் எனும் பலனானது உண்மையில் ஒரு கர்ம-பலன் அல்ல. ஒவ்வொரு மனமும் இயற்கையில் ஏற்கனவே தூய்மையானதாக இருப்பதால், அதிலுள்ள அசுத்தங்களை நீக்குவதை மட்டுமே நாம் மன-சுத்திகரிப்பு, அல்லது மனத் தூய்மை என்கிறோம். அதனால்தான் ஒவ்வொருவரிடமும் அந்த-கரணத்தின் தூய குணங்களான கருணை, அனுதாபம், அன்பு போன்றவை வெவ்வேறு அளவைகளில் இருப்பதை காண்கிறோம்.   

எனவே இங்கு நாம் எதையும் உருவாக்க வேண்டியதில்லை. உண்மையில் விருப்பு மற்றும் வெறுப்பை அகற்ற மட்டுமே செய்கிறோம். பழி, மனக்கசப்பு, கோபம், பகைமை போன்ற அனைத்து அசுத்தங்களையும் நீக்குதல் என்பதும் ஒருவிதமான தியாகத்தைக் குறிக்கிறது. சந்யாச மார்க்கம் என்பது நிவ்ருத்தியைக் குறிக்கிறது. ஆனாலும் கர்ம-யோகியும்கூட ஒன்றை அடைவதற்காகவோ, புண்ணியத்திற்காகவோ அல்லது சொர்க்கத்திற்காகவோ என செயல்களைச் செய்யவில்லை. மோக்ஷத்தை இறுதி இலக்காகக் கொண்டிருக்கின்ற அவனது புத்தியானது பகுத்து அறியும் திறனைக் கொண்டதாக இருப்பதால் அது சாத்விகமான புத்தி ஆகிறது. அவனது புருஷார்த்தமான(இலக்கு) ஆத்ம-அறிவை எப்படிப் பெறுவது என்பது அவனுக்குத் தெரிகிறது.


=> செய்யத் தகுந்ததும் தகாததும்:

பிரவ்ருத்தி மற்றும் நிவ்ருத்தியை ‘செய்ய வேண்டியவை’ மற்றும் ‘செய்யக்கூடாதவை’ என்று நாம் ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது? அதுவும் சரியான அர்த்தம்தான் என்றாலும் இங்கே அதை அவ்விதம் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் கிருஷ்ணர் அதை தனித்தனியாகக் கூறியுள்ளார் — கார்ய-அகார்யே. கால தேச வர்தமானத்தை அனுசரித்து எதைச் செய்தால் மனிதனுக்கு நன்மை உண்டாகுமோ அது செய்யத் தகுந்த கர்மம்(கார்ய) ஆகும். இது ஸ்வதர்மத்தையும், விஹித-கர்மம் எனக் கூறப்படுகிற விதிக்கப்பட்ட கர்மங்களையும் குறிக்கிறது. எதை செய்தால் கேடு உண்டாகுமோ அது தகாத கர்மம்(அகார்ய) ஆகும். தடை செய்யப்பட்ட செயல்கள், மற்றும் பரதர்மம் என்று கூறப்படுகிற பிறருடைய செயலைச் செய்தலை இது குறிக்கிறது. போக்குவரத்து விதிகள், அரசாங்க வரிச் சட்டங்கள், சமூக விதிமுறைகள் போன்ற லெளகிக ரீதியான செய்ய வேண்டிய-செய்யக்கூடாத விதிகளும், மேலும் துன்புறுத்தாமை, திருடாமை, உண்மை பேசுதல் போன்ற உலகளாவிய ஒழுக்கமுறைகளும் இதில் அடங்கும். இதற்கும் ஒழுக்கமுறைகளைக் குறித்த சரியான கல்வி அவசியம். அது இல்லாவிட்டால், ஒருவன் சரியானதைச் செய்து தவறானவற்றைத் தவிர்க்கிறான் என்றபோதிலும், அது சரியான சிந்தனை அல்லது சரி-தவறு பற்றிய உறுதிப்பாடு காரணமாக அல்லாமல், அவன் பிடிபட்டுவிடுவான் என்ற பயத்தால் மட்டுமே அதைச் செய்கிறான். மேலும் அரசாங்கம் விதிக்கின்ற நியதிகள் சில சமயம் காலத்தை பொறுத்து மாறுபடுகிறது. ‘ஹிம்ஸாம் ந குர்யாத்’, யாருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்று சாஸ்திரமும் கூறுகிறது, எந்தவொரு அரசாங்கங்கமும் அதையே கூறுகின்றது. ஆனால் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வேட்டைப் பருவத்தில், மான்களின் அதிக எண்ணிக்கை காரணமாக மூன்று மாதங்களுக்கு மான்களை வேட்டையாட அரசாங்கம் உரிமம் அளிக்கிறது. இவ்வாறு உலகியல் ரீதியான விதிகள் பல காரணிகளைக் கருத்தில் கொண்டதாக, காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப வளைந்து கொடுப்பதாக இருக்கிறது. ஆனால் மனதில் சத்வத்தின் ஆதிக்கம் பிரதானமாக இருக்கும் ஒருவனுக்கு ‘கார்ய-அகார்யம்’ பற்றிய அறிவு, சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும் மிகவும் தெளிவானதாகவும் இருக்கும். 


=> அச்சமும் அச்சமின்மையும்:

எதற்கு பயப்பட வேண்டும், மற்றும் எதற்கு பயங்கொள்ளத் தேவையில்லை என்று சரியாக புரிந்த மனதைக் கொண்டவன் சாத்விகமானவன் — 4ய-அப4யே. பாபத்தை, அதர்மத்தை அல்லது தகாத காரியத்தைச் செய்ய மனிதன் பயப்பட வேண்டும். பெயரளவில் பயம் என்று கூறப்பட்டாலும் உண்மையில் அது வீரத்தின் தோற்றமாகும். மோக்ஷத்தை இலக்காகக் கொண்ட சாத்விகன் போகத்தை கண்டு பயப்படுதல் வேண்டும். அதே சமயத்தில் உண்மையை உரைக்க பயப்படக் கூடாது. மேலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலைகளில் முட்டாள்தனமாக இருக்கக்கூடாது. விஷப்பாம்பு அல்லது புலியை எதிர்கொள்வது போன்ற ஆபத்தான சூழ்நிலையில் இருக்கும்போது, ​​‘எனக்கு கவலையில்லை, எனக்கு பயமில்லை’ என்று சொல்லக்கூடாது. மடத்தனமாகப் பாதுகாப்பு இன்றி அவற்றின் அருகில் செல்லலாகாது. தானாக வந்தமைகிற மரணத்துக்குப் பயப்படலாகாது. பிசாசு, பூத கணங்கள் முதலியவைகளை பற்றிப் பயப்படுவதில் பொருளில்லை. அவைகளைப் பற்றிய பயமெல்லாம் அக்ஞானத்தால் வருவது. இல்லாததை இருப்பதாகக் கோழைத்தனமான நெஞ்சம் கற்பித்துக் கொண்டு அஞ்சுகிறது. 

எது சரி, எது முறையற்றது, எதற்கு அஞ்ச வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், எதைப் பின்பற்ற வேண்டும் என்பதை அறியும் சிந்தனைத் திறன்(புத்தி), சாத்விகமான புத்தியாகும்.


=> பந்தமும் மோக்ஷமும்:

மேலும் எது பந்தம், எது விடுதலை என்பதை அறிந்தவனாக அவன் இருக்கிறான் — 3ந்த4ம் மோக்ஷம் யா வேத்தி. பிரவ்ருத்தியும், தகாத கர்மமும், பயமும் பந்தத்தை உண்டுபண்ணுகின்றன. நிவ்ருத்தியும், தக்க கர்மமும், அபயமும் மோக்ஷத்தை தருகின்றன. மக்கள் பெரும்பாலும் வேலை, வீடு, மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பது பந்தம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அறியாமையே பந்தம் என்பதை அறிந்த புத்தியுள்ள ஒருவன் இங்கே பேசப்படுகிறான். சுய-அறியாமையின் காரணமாக பிறந்த சம்ஸார வாழ்க்கையே, விடுதலையை அடைய விரும்புபவனது பந்தம் ஆகும். எனவே மோக்ஷம் என்பது சுய-அறிவைக் குறிக்கிறது. அக்ஞானத்தினால் பந்தம் ஏற்படுகிறது; தன்னறிவு எனும் ஞானத்தினால் மோக்ஷம் விளைகிறது. இதை அறிந்த புத்தியானது, சாத்விகமானது என்று அழைக்கப்படுகிறது — ஸா புத்3தி4: ஸாத்த்விகீ.

சரியான உணவுப் பழக்கம், கர்ம-யோக வாழ்க்கை, சேவை போன்றவை சாத்விக புத்தியை கொடுக்கும் உபாயம் ஆகும். இனி, ராஜஸமான புத்தி என்பது என்ன எனப் பார்ப்போம்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

இவ்வுலகம் அநித்யமா? நீ ஈஷ்வரனை அறியாமலிருக்கும் வரையில் அது அநித்யந்தான். ஏனெனில், நீ ஒவ்வொரு பொருளிலுமுள்ள ஈஷ்வரனைக் காண்பதில்லை. ஆகவே, ‘நான்’ ‘எனது’ என்ற மனோபாவம் உன்னிடம் ஆழ்ந்துகிடக்க, நீ உலக வசத்தவனாகிறாய். இவ்விதம் அக்ஞானத்தினால் மதிமயங்கிய நீ, விஷயப் பொருள்களையே கருதுபவனாகி, மாயையாகிய சமுத்திரத்தில் மேலும் ஆழமாக மூழ்கிக்கொண்டேயிருக்கிறாய். வழி நேராக இருப்பினும் சம்ஸாரத்தினின்று கரையேறவொண்ணாதபடி மாயையானது மனிதர்களுடைய கண்களை முற்றிலும் குருடாக்கி வருகின்றாது. சம்ஸாரம் எவ்வளவு அநித்யமென்பது உனக்கே தெரியும். நாம் வசிக்கிற வீட்டைப் பற்றிச் சற்று யோசனை செய்வோம். எத்தனை பேர்கள் அதில் பிறந்து இறந்து போயிருக்கின்றனர்! உலகப்பொருள்கள் ஒரு நிமிஷத்தில் நம் முன்னர் தோன்றி, அடுத்த நிமிஷத்தில் மறைந்து போகின்றன. பந்துக்கள் என யாரை நீ கருதுகிறாயோ அவர்கள் நீ கண்மூடிய பிறகு உனக்குப் பந்துக்கள் ஆகிறதில்லை. அப்படியிருந்தும் லெளகிகனுடைய பற்று எவ்வளவு பலமானது! குடும்பத்தில் அவனுடைய பராமரிப்பை எதிர்ப்பார்ப்பவர் ஒருவருமில்லாத காலத்தில் கூட அவனுக்குக் காசிக்குப் போய்வரச் சந்தர்ப்பப்படுவதில்லை. பக்தி சாதனம் செய்ய அவனுக்கு அவகாசம் கிடைப்பதில்லை. “பேரன் ஹரீசன் என்ன செய்வான்?” என்ற விசாரம் அவனை உலகத்தோடு பிணிக்கின்றது. மீன்பறியின் வாய் எப்போதும் திறந்திருக்கிறது; என்றாலும் மீன்கள் வெளியே ஓடிப்போவதில்லை. வண்ணாத்திப் புழு தான் இழைத்த கூண்டிலேயே கிடந்து சாகின்றது. அப்படிப்பட்ட சம்ஸாரம் அநித்யமென்றும் அழிந்து போகக்கூடியதென்றும் ஏற்படவில்லையா?  

————————————————————————————————

||18.31|| ராஜஸமான புத்தி: 

यया धर्ममधर्मं च कार्यं चाकार्यमेव च ।

अयथावत् प्रजानाति बुद्धि: सा पार्थ राजसी ।। ३१ ।।

யயா த4ர்மமத4ர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச ।

அயதா2வத் ப்ரஜாநாதி புத்3தி4: ஸா பார்த2 ராஜஸீ ।। 31 ।।


पार्थ  பார்த2  பார்த்தா     यया  யயா  எதனால்     

धर्मम् अधर्मं च  4ர்மம் அத4ர்மம்   தர்மமும் அதர்மமும்      कार्यं च  கார்யம் ச  தகுந்த காரியமும்       अकार्यम् एव च  அகார்யம் ஏவ ச  தகாத காரியமும்      अयथावत्  அயதா2வத்  உள்ளபடியல்லாது     प्रजानाति  ப்ரஜாநாதி  அறிகிறதோ       सा बुद्धि:  ஸா புத்3தி4:  அந்த புத்தி       

राजसी  ராஜஸீ  ராஜஸமானது. 


பார்த்தா, தர்மத்தையும் அதர்மத்தையும், தகுந்த காரியத்தையும் தகாத காரியத்தையும் தாறுமாறாக எந்த புத்தி அறிகிறதோ அது ராஜஸமானது. 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

தர்மத்தையும் அதர்மத்தையும் காரியத்தையும் அகாரியத்தையும் உள்ளபடி அறியாத புத்தி ராஜச மெனப்படும், பார்த்தா!


விளக்கம்:

அசைகின்ற நீரில் பிம்பம் உள்ளபடி தெரிவதில்லை. அதுபோல ராஜஸ புத்தியில் தர்மமும் செய்யப்பட வேண்டிய காரியங்களும் உள்ளபடி தென்படுவதில்லை. திரிவுபட்டே தென்படுகின்றன. உதாரணமாக, சூதாடுதல் எனும் தகாத காரியத்தை தகுந்த காரியமாக துரியோதனன் எண்ணி தர்மராஜனை அதில் இணைத்துவிட்டான். மேலும் தனக்குரியதாக இல்லாத ராஜ்யத்தை உரிமையுடன் பற்றிக்கொண்டு பாண்டவர்களைப் போரில் தூண்டியது அதர்மச் செயல். ஆயினும் அவன் அதை சரியானதென்றே எண்ணினான்.

=> அரைகுறை ஞானம்:  

மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது, தர்மம் மற்றும் அதர்மம், செய்யத் தகுந்த காரியம் மற்றும் செய்யத் தகாத காரியம் போன்ற புத்தி அறியவேண்டிய விஷயங்கள் குறித்து சென்ற சுலோகத்தில் சொல்லப்பட்ட அதே பட்டியலை, பகவான் இங்கும் திரும்பச் சொல்லியிருப்பதைப் போலத் தெரியும். ஆனால் இரண்டாவது வரியில் சொல்லப்பட்ட அந்த ஒரு வார்த்தையில், அவர் முழு விஷயத்தையும் மாற்றுகிறார். இவை அனைத்தையும் ஒருவன் எப்படி அறிகிறான்? உள்ளபடியல்லாது அறிகிறான் — அயதா2வத். ‘யதா2வத்’ எனில் உள்ளதை உள்ளபடியே அறிவதாகும்; ‘அயதா2வத்’ எனில் தாறுமாறாக அறிவது. தவறாகப் புரிந்து கொள்வதை, அரைகுறை அறிவை, சந்தேகத்துடன் கூடிய புத்தியை இது குறிக்கிறது. அவன் சாஸ்திரத்தை அரைகுறையாக படித்து, தவறாக மேற்கோள் காட்டி, தனது வசதிக்கேற்ப விளக்குகிறான். சாஸ்திரம் எதை குறித்துப் பேசுகிறது என்பதை முழுமையாகக் கண்டறியாமல் விளக்குகிறான் என சங்கரர் கூறுகிறார். மேலும் தவறாக அறியப்பட்ட அந்த விஷயத்தையும் அவன் அறிந்தவனாக(ஜாநாதி) அல்லாமல், உறுதியாக அறிந்தவனாக(ப்ரஜாநாதி) எண்ணுகிறான்.


=> ராஜஸமானவனின் நடத்தை: 

ரஜோகுணத்திலிருந்து பிறந்த புத்தியுடையவனிடம் பெருமிதமான உழைப்பு இருக்கிறது. ஆனால் அந்த உழைப்பில், நேர்மையைக் காணமுடியாது. உதாரணமாக இரு நபர்கள் விவசாயமோ, வர்த்தகமோ, கைத்தொழிலோ செய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அவர்களுள் ரஜோகுண வ்ருத்தியுடையவன் தனது ஆற்றலையும் அறிவையும் ஓயாது உபயோகப்படுத்துவான். ஆனால் அம்முயற்சி ஆக்கப்பூர்வமானதாக இருக்காது. இனியொருவன் சம்பாதித்ததை தான் அபரிகரித்துக்கொள்ள அவன் எத்தனிப்பான்; அல்லது இரண்டாமானவனுக்கு நலம் செய்வது போல வெளிப்படையில் காட்டிக்கொண்டு, மறைமுகமாக அவனைக் கெடுக்க முயற்சிப்பான்; வெளிப்படையாக அவனோடு போட்டி போட்டும் அவனை அழிப்பான். தன்னருகில் அமைதியாக வாழ்ந்திருக்க அவன் யாரையும் விடமாட்டான்; ஏதேனுமொரு விதத்தில் இரண்டாமானவனை அல்லல்படும்படி செய்வான். வழக்குத் தொடுப்பதில் ரஜோகுணம் உடையவனுக்கு நிகரானவனைக் காணமுடியாது. காலமெல்லாம் நீதிமன்றங்களில் வழக்குகளும், சண்டைகளும், வில்லங்கங்களும் தோன்றிக்கொண்டே இருக்கும். மெய்யை பொய்யாக்குதலிலும் பொய்யை மெய்யாக்குதலிலும் அவன் வல்லவனாக இருக்கிறான். முறை தவறிய முயற்சியிலேயே அவன் பெருமகிழ்ச்சி அடைகிறான். நேர்மையாக நடந்து கொள்பவர்களை ஒன்றுக்கும் உதவாத அப்பாவிகள் என்று அவன் ஏளனம் செய்கிறான். நற்குணமுடையவர்களின் அருகில் அவன் ஒருநாளும் செல்லமாட்டான். பாரமார்த்திக வாழ்வு சம்பந்தமான பேச்சு அவனுக்கு கசப்பாக இருக்கும். பிழைக்கத் தெரியாதவர்களது போக்கு அத்தகையது என்று அவன் அனுதாபம் காட்டுகிறான் அல்லது அலட்சியமாய் இருக்கிறான். கெட்ட வழியில் சம்பாதிக்கும் அவனது செல்வம் கெட்ட காரியத்துக்கே ஓயாது போய்க்கொண்டிருக்கும். நல்ல காரியத்துக்குச் செல்வத்தைச் சிறிதேனும் தருவதில்லை. ரஜோகுணத்தில் உதித்த அறிவு செய்யும் செயல்கள் இவ்விதமாக இருக்கின்றன. 

————————————————————————————————