||18.34|| ராஜஸமான உறுதி:
यया तु धर्मकामार्थान् धृत्या धारयतेऽर्जुन ।
प्रसङ्गेन फलाकाङ्क्षी धृति: सा पार्थ राजसी ।। ३४ ।।
யயா து த4ர்மகாமார்தா2ந் த்4ருத்யா தா4ரயதேऽர்ஜுந ।
ப்ரஸங்கே3ந ப2லாகாங்க்ஷீ த்4ருதி: ஸா பார்த2 ராஜஸீ ।। 34 ।।
पार्थ பார்த2 பார்த்தா तु து மற்று यया धृत्या யயா த்4ருத்யா எந்த உறுதியினால்
धर्म काम अर्थान् த4ர்ம காம அர்தா2ந் தர்மம், காமம், அர்த்தம் ஆகியவைகளை
धारयते தா4ரயதே காக்கின்றானோ प्रसङ्गेन ப்ரஸங்கே3ந பெரும் பற்றுதலால்
फलाकाङ्क्षी ப2லாகாங்க்ஷீ பயனை விரும்புபவனாகிறானோ अर्जुन அர்ஜுந அர்ஜுனா
सा धृति: ஸா த்4ருதி: அந்த உறுதியானது राजसी ராஜஸீ ராஜஸீகமானது.
மற்று, எந்த உறுதியினால் அர்ஜுனா, அறம் பொருள் இன்பங்களை ஒருவன் காக்கின்றானோ, பற்றுதலால் பயனை விரும்புகின்றவன் ஆகிறானோ அந்த உறுதியானது பார்த்தா, ராஜஸமானது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பார்த்தா! பற்றுத லுடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம் பொருளின்பங் களைப் பேணுவதில் செலுத்தும் உறுதி ராஜச உறுதியாம்.
விளக்கம்:
இங்கு பகவான் ராஜஸமான உறுதியை வரையறுக்கிறார்.
=> ராஜஸ உறுதி:
எந்த உறுதியானது, இன்பத்திற்காகவும்(காம), வாழ்க்கைக்கு தேவைப்படுகிற பொருளை அடையும்பொருட்டும்(அர்தா2ந்) செய்யப்படுகிற புண்ணிய கர்மத்தை(த4ர்ம) நோக்கி ஒருவனை செலுத்துகிறதோ அது ராஜஸமானது. தர்மம்(அறம்), அர்த்தம்(பொருள்), காமம்(இன்பம்), மோக்ஷம்(வீடு) எனும் நான்குவகை புருஷார்த்தம் சாஸ்திரத்தில் பேசப்படுகிறது. சாத்விக திருதி மோக்ஷத்தை நாடுகிறது. தர்மம், அர்த்தம், காமம் ஆகியவைகள் பிரபஞ்ச வாழ்க்கையின் முக்கிய பகுதிகளாகிய இவ்வுலக வாழ்க்கைக்கும் சொர்க்க வாழ்க்கைக்கும் உதவுகின்றன. இங்கு பேசப்படும் நபரின் மனம், புலன்கள் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட அனைத்து செயல்பாடுகளும் தர்ம, அர்த்த மற்றும் காம நோக்கம் கொண்டவைகளாகவே இருக்கின்றது. அதிக புண்ணியத்தை எப்படிப் பெறுவது மற்றும் அதை எவ்வாறு எளிதாகப் பெறுவது என திட்டமிடுவதில் தனது நேரத்தை செலவிடுகிறான். அவன் புண்ணியத்தை நாடுவது, மோக்ஷத்திற்கு தேவைப்படுகிற சித்த சுத்தியை கொடுக்கும் என்பதற்காக அல்ல, மாறாக அர்த்த மற்றும் காமத்தை அது கிடைக்கச் செய்யும் என்பதற்காக.
மேலும் அதிக பற்றுதலின் காரணமாக அவன் சம்பந்தப்பட்ட பலனை விரும்புகிறான் — ப்ரஸங்கே3ந ப2லாகாங்க்ஷீ. ஒவ்வொரு வாய்ப்பையும் தனக்கு நன்மை தருகிற ஒன்றாக மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறான். போகத்தில் ஆசை கொண்டு சுயநலவாதியாகவும் சந்தர்ப்பவாதியாகவும் செயல்பட்டு, அமைகின்ற சூழலை தனது சொந்த நோக்கங்களுக்கு என உபயோகப்படுத்துகிறான். தர்ம, அர்த்த மற்றும் காமத்தைப் பெறுவதற்கான எந்த வாய்ப்பையும் தவறவிடாத கழுகுப் பார்வை கொண்டவனாக இருக்கிறான்.
கழுகு எவ்வளவு உயரமாகப் பறந்தபோதிலும், அதன் கண்கள் இறந்ததைத் தேடும் பொருட்டு எப்போதும் தரையை நோக்கியே இருக்கும். உயரமாகப் பறப்பதால் அது பூமியில் என்ன நடக்கிறது என்பதைப் பொருட்படுத்தாததுபோல தெரிகிறது. ஆனால் திடீரென்று எங்காவது இறந்த சடலம் தென்படும்போது, அதையே தேடிக்கொண்டிருக்கும் கண்களை உடைய கழுகானது தனது உயரத்திலிருந்து கீழே இறங்குவதைக் காணலாம். ராஜஸ-திருதி உடையவனும் கழுகின் கண்களைக் கொண்டவனாக, வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறான். சாதகமான சூழ்நிலை அமையும்போது, தர்ம, அர்த்த மற்றும் காமம் உள்ளிட்ட பலன்களை அடையவிரும்புகிறான் — ப2லாகாங்க்ஷீ. இவைகளிலிருக்கின்ற இந்த அசைக்க முடியாத உறுதிப்பாடு ராஜஸத்திலிருந்து பிறந்தது என்பதால் இது ‘ராஜஸீ’ எனப்படுகிறது.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
தாபஜுரத்தால் பிதற்றுகிறவன் சமீபத்தில் குளிர்ந்த ஜலத்தையும் இனிமையான தின்பண்டங்களையும் வைத்திருந்தால் அவன் அத்தண்ணீரை அருந்தாமலும் தின்பண்டங்களை ருசிபார்க்காமலும் இருப்பானா? அதுபோல காமஜுரத்தினால் வாதைப்பட்டுச் சிற்றின்பங்களில் ஆசைவைத்த உலகப்பற்றுள்ளவன் ரூபலாவண்யங்களின் வனப்பினிடையும் செல்வத்தின் கவர்ச்சியின் மத்தியிலும் இருந்தால் அவனால் ஆசையை அடக்கமுடியாது. அவன் பக்திமார்க்கத்தை விட்டுப் புறம்பே போவது நிச்சயம்.
————————————————————————————————
||18.35|| தாமஸமான உறுதி:
यया स्वप्नं भयं शोकं विषादं मदमेव च ।
न विमुञ्चति दुर्मेधा: धृति: सा पार्थ तामसी ।। ३५ ।।
யயா ஸ்வப்நம் ப4யம் சோ1கம் விஷாத3ம் மத3மேவ ச ।
ந விமுஞ்சதி து3ர்மேதா4: த்4ருதி: ஸா பார்த2 தாமஸீ ।। 35 ।।
पार्थ பார்த2 பார்த்தா दुर्मेधा: து3ர்மேதா4: புத்தி கெட்டவன்
यया யயா எதனால் (எந்த உறுதியால்) स्वप्नं ஸ்வப்நம் தூக்கத்தையும் भयं ப4யம் பயத்தையும் शोकं சோ1கம் துயரத்தையும் विषादं விஷாத3ம் மனக் கலக்கத்தையும்
मदं एव च மத3ம் ஏவ ச செருக்கையும் न विमुञ्चति ந விமுஞ்சதி விடுவதில்லையோ
सा धृति: ஸா த்4ருதி: அந்த உறுதியானது तामसी தாமஸீ தாமஸமானது.
பார்த்தா, தூக்கத்தையும், அச்சத்தையும், துயரத்தையும், மனக்கலக்கத்தையும், செருக்கையும் விடாது பிடிக்கும் அறிவிலியின் உறுதியோ தாமஸமானது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பார்த்தா, உறக்கத்தையும், அச்சத்தையும், துயரத்தையும், ஏக்கத்தையும், மதத்தையும் மாற்றத் திறமையில்லாத மூட உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.
விளக்கம்:
இங்கு பகவான் தாமஸமான உறுதியை வரையறுக்கிறார். விவேகமின்மையின் காரணமாக உண்டான விபரீத புத்தியினால் தாமஸ உறுதி ஏற்படுகிறது.
=> தாமஸ உறுதி:
மிக உறுதியான தீர்மானத்தினால் அவன் கீழ்கண்ட சில விஷயங்களை எக்காரணத்திற்காகவும் விட்டுக் கொடுப்பதில்லை — ந விமுஞ்சதி.
(1) அதிக உறக்கம்: என்ன நடந்தாலும், எத்தகைய தேவை ஏற்பட்டாலும் தனது அதிகப்படியான தூக்கத்தை அவன் விடுவதில்லை. இங்கு பகவான் ‘ஸ்வப்நம்’ என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். இது உறக்கத்தை போலவே, பகற் கனவையும் குறிக்கிறது. அதிகம் பகற் கனவை காண்பவனாக, மனோ-ராஜ்ஜியத்தின் கற்பனையில் திளைக்கிறான். அத்தகையவன் விழித்திருக்கும்போது செய்கிற செயலும் தூக்கத்தில் சொப்பனம் காண்பது போல உறுதியற்றது. அவன் புரியும் செயல்கள் உலகுக்கு பயன்படாதவைகளாகின்றன. ஆறாவது அத்தியாயத்தில் அதிகப்படியான உறக்கம் கொள்பவர்களுக்கு யோகம் இல்லை எனப் பார்த்தோம். யோகமே துயரத்தை போக்குகின்றது. ஆனால் இங்கு விவாதிக்கப்படுகிறவன் தாமஸ-திருதியைக் கொண்டவனாதலால் அவனுக்கு யோகம் இல்லை. ஏனென்றால், அவன் விழித்திருக்கும்போது அவனுக்கு எப்போதும் ஏதாவது ஒரு பயம் இருக்கிறது.
(2) பயம்: ஏதேனுமொரு விஷயத்தில் இருக்கின்ற பயத்தை(ப4யம்), விடாமல் உறுதியாகப் பிடித்திருக்கும் பான்மை தமோகுண உறுதியை குறிக்கிறது. மரண பயம், பணம் மற்றும் தனது பிற வளங்களை இழக்க நேரிடும் என்ற பயம், பதவி பறிபோய்விடுமோ எனும் பயம், ஏதேனும் தவறு நேர்ந்துவிடுமோ எனும் பயம், நோய் குறித்த பயம் என ஏதேனுமொன்றை உறுதியாகப் பற்றிக் கொண்டிருத்தல் இங்கு பேசப்படுகிறது. அவனால் அந்த பயத்தை கைவிட முடியாது, ஏனெனில் அதை அகற்ற அவன் எந்த முயற்சியும் செய்வதில்லை. தனது அச்சத்தை நீக்க ஏதாவது செய்ய வேண்டும் என முன்வரவும்கூட ஒரு குறிப்பிட்ட வகையான உறுதிப்பாடு தேவை. அது அவனுக்கு இருப்பதில்லை.
(3) துயரம்: அவனால் சோகத்தை விட முடிவதில்லை — சோ1கம். தனக்கு நெருங்கியவரின் மரணம், எப்போதோ நேர்ந்த அவமானம், தனக்கு ஏற்பட்ட ஏதேனுமொரு இழப்பு, சஞ்சலம், குழப்பம் என ஏதேனுமொன்றை உறுதியாகப் பிடித்துக் கொண்டு துயரப்பட்டுக் கொண்டிருப்பான். அவன் தனது சோகத்தை நீக்குகின்ற எதையும் செய்வதில்லை. நாம் அவனிடம் இரண்டு நிமிடங்கள் பேசினால், அவன் நம்மையும் சோகத்துக்கு உள்ளாக்கிவிடுவான். அவனருகில் செல்லும் யாரையும் பாதிக்குமளவுக்கு சோகம் ஒரு தொற்றாக அவனிடம் இருக்கிறது. அதை அவன் கைவிட மாட்டான் என்பது மட்டுமல்லாமல், அதை நியாயப்படுத்த சில தத்துவங்களையும் அவன் வைத்திருக்கிறான்.
(4) கலக்கம்: மனக்கலக்கத்துக்கு இங்கு ‘விஷாத3ம்’ எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. கீதையின் முதல் அத்தியாயத்தின் தலைப்பு அர்ஜுன விஷாத யோகம் என்பதாகும். அதாவது அர்ஜுனனுக்கு தற்காலிகமாக மனம் கலங்கிற்று. தமோகுணத்தில் உதித்த உறுதியுடையவனுக்கோ மனம் ஓயாத கலக்கத்தில் இருக்கிறது. வாழ்க்கையில் ஏதேனுமொரு சூழ்நிலையில் குழப்பம் உண்டாவது சகஜம்தான். ஆனால் அவனுக்கு எல்லா சூழ்நிலைகளிலும் இதை செய்யலாமா? அதை செய்யலாமா? என்ற சஞ்சலம் இருக்கிறது. அந்த இயல்பை விடாமல் பிடித்துவைத்திருப்பதும் தாமஸத்தையே குறிக்கிறது.
(5) செருக்கு: இத்தனை தீய குணங்களுக்கிடையில் தன்னை குறித்துப் பெருமை பாராட்டும் செருக்கு அவனை விட்டு அகலுவதில்லை — மத3ம். மற்றவர்களின் சாதனைகளை துச்சமாகக் காட்டும் அதே நேரத்தில் அவன் தனது சொந்த சாதனைகளை பெரிதாகக் காட்டிக் கொள்கிறான். வீண் தற்பெருமையில் சிக்கிக்கொண்ட அவன், தனது சொந்த தாழ்வு மனப்பான்மையுடன் போராடுவதால் இந்த மேலமை மனநிலையை வெளிப்படுத்துகிறான். இதன் காரணமாக அவன் யாருக்கும் கீழ்ப்படிவதில்லை. இந்த ஆணவம் அவனது அறியாமையின் வெளிப்பாடாகும்.
விவேகமில்லாத காரணத்தினால் அவன் சிந்திக்கும்போது, அவனுடைய எண்ணங்கள் சரியாக இருப்பதில்லை — து3ர்மேதா4. தனது துஷ்டமான புத்தியினால் ஆகாரம், பூஜை, தவம் மற்றும் தானம் போன்றவற்றில் தாமஸமானதையே தேர்ந்தெடுக்கிறான். விபரீத அறிவினால் சிதைந்த சிந்தனை கொண்ட ஒருவனின் இந்த உறுதி, தாமஸ-திருதி என்று அழைக்கப்படுகிறது.
=> உதாரணம்:
தமோகுண உறுதிக்கு தக்க சான்று திருதராஷ்டிர மன்னன் ஆவான். அவன் பிறவியிலேயே பார்வையற்றவனாவான். தெளிந்த அறிவும் நல்ல விவேகமும் இல்லாமைக்கு அவன் பார்வையற்றிருப்பது புறச் சின்னமாகிறது. இந்த அரசனுக்கு ராஜ்ஜியத்தில் பெரும் பற்றுதல் இருந்தது. துரியோதனன் உள்ளிட்ட தன் புதல்வர்களின் கையைவிட்டு அது ஒருவேளை போய்விடுமோ என்ற அச்சம் அவன் உள்ளத்தில் அடிக்கடி உண்டாயிற்று. புதல்வர்கள் புரிந்த தீய செயல்களை அரசன் கேள்வியுற்றுத் துயரத்தை அடைந்தான். என்றாலும் அவர்கள் மீது அவன் தீவிரமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தனது புகழுக்கே பங்கம் வந்துகொண்டிருந்ததைக் குறித்து அரசன் மனம் கலங்கினான். ஆனால் பீஷ்மர், துரோணர், கிருஷ்ணர் போன்றவர்களின் புத்திமதியைக் கேட்க அவன் தயாராக இல்லை. எப்படியிருந்தாலும் தானே பேரரசன் என்ற செருக்கும் அவனுடைய உள்ளத்தில் நிறைந்திருந்தது. விவேகவில்லாத அவ்வேந்தன் விடாமல் பிடித்துக் கொண்டிருந்த அந்த திருதியானது தமோகுணத்திலிருந்து உதித்தது ஆகும்.
————————————————————————————————