ஞாயிறு, 24 மே, 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.28 - 18.29

||18.28|| தாமஸ கர்த்தா:

अयुक्त: प्राकृत: स्तब्ध: शठो नैष्कृतिकोऽलस: ।

विषादी दीर्घसूत्री च कर्ता तामस उच्यते ।। २८ ।।

அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்34: ச1டோ2 நைஷ்க்ருதிகோऽலஸ: ।

விஷாதீ3 தீ3ர்க4ஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே ।। 28 ।।


अयुक्त:  அயுக்த:  யோகத்துக்கு ஒவ்வாத மனதுடையவன்    

प्राकृत:  ப்ராக்ருத:  அறிவு வளரப்பெறாதவன்     स्तब्ध:  ஸ்தப்34:  முரடன்     शठ:  12:  வஞ்சகன்     नैष्कृतिक:  நைஷ்க்ருதிக:  பழிகாரன்    अलस:  அலஸ:  சோம்பேறி      

विषादी  விஷாதீ3  துயருறுவோன்     दीर्घसूत्री च  தீ3ர்க4ஸூத்ரீ ச  காலம் நீட்டிப்பவனும்    कर्ता  கர்தா  அத்தகைய கர்த்தா         तामस:  தாமஸ:  தாமஸனென்று       उच्यते  உச்யதே உரைக்கப்படுகிறான்.


யோகத்துக்கு ஒவ்வாத மனதுடையவன், அறிவு வளரப்பெறாதவன், முரடன், வஞ்சகன், பழிகாரன், சோம்பேறி, துயருறுவோன், காலம் நீட்டிப்பவன் — இத்தகைய கர்த்தா தாமஸன் எனப்படுகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

யோக நிலை பெறாதோன், அநாகரிகன், முரடன், வ்ஞ்சகன், பொறாமை யுடையோன், சோம்பேறி, ஏக்கம் பிடித்தவன், காலத்தை நீடித்துக் கொண்டே போவோன் -- இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையர் எனப்படுவான்.


விளக்கம்:

இங்கு தாமஸ-கர்த்தா எப்படிப்பட்டவன் எனக் கூறுகிறார் கிருஷ்ணர்.


=> தாமஸமானவன்:

அயுக்த’ எனில் ‘ஒன்றாக இல்லாத ஒருவனை’, கலக்கமடைந்தவனைக் குறிக்கிறது. அவன் ஒன்றில் பொருந்தாதவனாக, ஆர்ஜவம் அற்றவனாக, அதாவது மனம், வாக்கு, சொல் இவற்றில் நேர்கோட்டுடன் இல்லாதவனாக இருக்கிறான். அடக்கமும், ஒடுக்கமும், சாதனமும் உடைய மனம் யோகத்துக்கு உரியது. அத்தகைய நல்லியல்பு எதுவுமில்லாத மனது, யோகத்துக்கு ஒவ்வாத மனது என இங்கு உரைக்கப்படுகிறது. சரியாகப் பயன்படுத்த முடியாத மனதைக் கொண்டவனாதலால் அவனது சிந்தனையும் நடத்தையும் முறையற்றதாக இருக்கிறது. 

மேலும் அவன் முதிர்ச்சியற்ற மனதை உடையவனாக இருக்கிறான் — ப்ராக்ருத. அறிவு வளரப் பெறாத பாமரன் போல, பாலனைப் போல நடந்துகொள்கிறான். உதாரணமாக நாற்பதுகளில் இருந்தாலும், போதுமான கல்வி ஒழுக்கமும் சிந்தனை ஒழுங்குமுறையும் பெறாததால் அவனது மனம் ஒரு சிறுவனின் மனதைப் போலவே இருக்கிறது. இப்படிபட்ட நிலைமையில் ஒருவன் இருக்கும்போது, ​​மிகவும் பணிவான இயல்புடையவனாக இருத்தல்வேண்டும். ஆனால் மாறாக அவன் பணிவு அற்றவனாக, முரடனாக இருக்கின்றான் — ஸ்தப்34. ‘ஒரு குச்சியைப் போல வளையாதவனாக இருக்கிறான், யாரையும் வணங்குவதில்லை — 3ண்ட3வத் ந நமதி கஸ்மைசித்’, என்கிறார் சங்கரர். சரணடைதல் என்ற கேள்விக்கே இடமில்லாது, வணங்கவேண்டிய இடத்திலும் வளைந்து கொடுக்காமல் பணிவற்று நடந்துகொள்கிறான். 

  மேலும் அவன் ஒரு வஞ்சகனாக இருக்கிறான் — 12. செயல் செய்யும் திறனிருந்தும், செய்தற்கு விருப்பமில்லாது தனது வல்லமையை மறைக்கும் ஏமாற்றுக்காரனாக இருக்கிறான். மேலும், அவன் திட்டமிட்டு மற்றவர்களின் வாழ்க்கையை நாசம் செய்யும் பழிகாரனாக, நம்பிக்கை துரோகம் செய்பவனாக இருக்கிறான் — நைஷ்க்ருதிக. உதாரணமாக, சீட்டுநிதி என்கிற பெயரில் உழைக்கும் மக்களிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு ஊரை விட்டு ஓடுகின்ற கொடூரனாக இருக்கிறான். அதுமட்டுமல்லாமல், பிறருக்கிடையில் வேண்டுமென்றே பகைமையை உண்டுசெய்பவனாகவும் இருக்கிறான். மேலும், சோம்பேறியாக இருப்பவன் தாமஸமானவன் — அலஸ. செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யும் திறனில்லாது, கடமையையும் செய்யாது காலம் தள்ளும் சோம்பேறியாக அவன் இருக்கிறான். 

எப்போதும் சோகத்தில் மூழ்கியிருப்பவனாக இருக்கிறான் — விஷாதீ3. போதுமென்ற மனமற்றவனாக, திருப்தியற்றவனாக இருப்பதால் அவனிடம் இந்த மனநிலை காணப்படுகிறது. மேலும் மனதில் எதையோ நினைத்து எப்போதும் துயரப்பட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு பிரச்சினையை நிவர்த்தி செய்யும் வரை துயரப்படுவது என்பது தவறான விஷயம் அல்ல. ஆனால் அதை தீர்ப்பதற்கான வழியேதும் காணாமல் அப்படியே இருப்பவனிடம் தமோகுணம் ஓங்கி இருக்கிறது என்று அர்த்தம். எப்போதும் மனச்சோர்வுடனே இருப்பது, யாராவது அதை தீர்க்கின்ற உபாயத்தை கூறினாலும் அதை செய்யாமல் தள்ளிப்போடுவது அவனது இயல்பாக இருக்கிறது. ஏனெனில் அவன் காலம் நீட்டிப்பவனாக இருக்கிறான் — தீ3ர்க4ஸூத்ரீ. ஒரே நாளில் முடிக்க வேண்டிய வேலையை ஒரு மாதத்துக்கு நீட்டிக்கொண்டு போகிறவன் காலத்தை வீணே கடத்துபவன் ஆகிறான். நாளை, அடுத்து நாளை மறுநாள் என காலவரையின்றி ஒத்திவைப்பவனாக எப்போதும் ஒரு மந்தமான மனநிலையில் இருப்பவன் தாமஸ-கர்த்தா என்று அழைக்கப்படுகிறான். 

மூன்று வகையான கர்ம, கர்த்தா மற்றும் மூன்று வகையான ஞானத்தைப் பற்றி பேசிய பகவான், இப்போது அந்த ஞானம் எனும் திறனைப் பற்றி, அதாவது எங்கு ஞானம் உற்பத்தி ஆகின்றதோ அந்த புத்தியை மூன்று வகையாகப் பாகுபடுத்திக் காட்டப்போகிறார். முன்னதாக, சாத்விக-கர்த்தாவின் குணங்களைக் குறித்து பார்க்கும்போது அங்கு உறுதி(த்ருதி) என்கிற ஒரு குணத்தை குறித்து அவர் குறிப்பிடிருந்தார். உறுதிதான் என்றாலும் அது சாத்விகமானதாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்றும், அது ராஜஸமாகவோ அல்லது தாமஸமாகவோ இருக்கலாம் என்றும் அங்கு பார்த்தோம். எந்த தீர்மானத்தில் இருக்கின்ற உறுதிப்பாடு என்பதை பொறுத்து அது எவ்வகையைச் சார்ந்தது எனத் தீர்மானிக்கப்படுகிறது. இந்த சுலோகங்களில் நாம் நமது மனதிற்குள் நுழைந்து, கருத்து மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் மனதினுடைய செயல்பாட்டை, பல்வேறு முடிவுகளை, அதன் அறிவை, சிந்தனை முறைகளை பார்க்கிறோம். பதினாறு மற்றும் பதினேழாம் அத்தியாயத்திலும், மேலும் இங்கே பதினெட்டாம் அத்தியாயத்திலும் சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ள பல்வேறு சாத்தியக்கூறுகளை ஆராய்ந்துபார்த்தால், அது பல்வேறு மனப்பான்மைகள் மற்றும் அவற்றின் விளைவுகளைப் குறித்த ஒரு அழகான பகுப்பாய்வாக இருக்கும். அதாவது, எது நல்ல சிந்தனை, எது தவறான சிந்தனை, சிந்திக்காதது என்றால் என்ன, போன்றவற்றை பற்றிய தெளிவு கிடைக்கும். இனி, புத்தி மற்றும் உறுதிப்பாட்டின் பாகுபாட்டைக் குறித்து பகவான் விளக்கயிருக்கிறார். 


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஒரு செம்படவன் ஆற்றில் வலையை வீசி அநேக மீன்களைப் பிடித்தான். சில மீன்கள் வலைக்குள் அசைவற்றிருந்து வெளியே போகக் கொஞ்சமேனும் பிரயத்தனப்படாமலிருந்தன. வேறு சில மீன்கள் பிரயத்தனப்பட்டுத் துள்ளிக் குதித்தன. ஆனால் வெளியே போக முடியவில்லை. இன்னும் சில மீன்கள் எப்படியோ வலையை விட்டுத் தப்பித்துக் கொண்டு போய்விட்டன. உலகத்திலுள்ள மனிதர்களும் இவ்வாறு மூவகையினராக இருக்கின்றனர்:- [1] முக்தியடையப் பிரயத்தனப்படாது பந்தப்பட்டிருப்பவர்கள் [2] பிரயத்தனப்படும் முமுக்ஷுக்கள் [3] விடுதலையடைந்த முக்தர்கள். 

————————————————————————————————

||18.29|| புத்தியும் உறுதியும் பெறுகிற படித்தரங்கள் விளக்கப்படுகின்றன: 

बुद्धेर्भेदं धृतेश्चैव गुणतस्त्रिविधं शृणु ।

प्रोच्यमानमशेषेण पृथक्त्वेन धनञ्जय ।। २९ ।। 

புத்3தே4ர்பே43ம் த்4ருதேச்1சைவ கு3ணதஸ்த்ரிவித4ம் ச்1ருணு ।

ப்ரோச்யமாநமசே1ஷேண ப்ருத2க்த்வேந த4நஞ்ஜய ।। 29 ।।


धनञ्जय  4நஞ்ஜய  தனஞ்ஜயா     बुद्धे:  புத்3தே4:  புத்தியினுடையவும்     

धृते: च एव  த்4ருதே: ச ஏவ  அங்ஙனமேயுள்ள உறுதியினுடையவும்     गुणत:  கு3ணத:  குணங்களுக்கேற்ற     त्रिविधं  த்ரிவித4ம்  மூன்றுவிதமான     भेदं  பே43ம் வேற்றுமையை     

पृथक्त्वेन  ப்ருத2க்த்வேந  தனித்தனியாய்     अशेषेण  அசே1ஷேண  பாக்கியில்லாமல்

प्रोच्यमानम्  ப்ரோச்யமாநம்  பகரப்படுவதை     शृणु  ச்1ருணு  கேள்.

       

புத்தியினுடையவும், மன உறுதியினுடையவும் ஆகிய மூவகை வேற்றுமையைக் குணங்களுக்கேற்பப் பாகுபடுத்திப் பாக்கியில்லாமல் பகர்கின்றேன் கேள், தனஞ்ஜயா.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

குண வகையால் மூன்று விதமாகிய புத்தியின் வேற்றுமைகளையும், மிச்சமின்றிப் பகுத்துரைக்கிறேன் தனஞ்ஜயா! கேள்.


விளக்கம்:

அடுத்ததாக எதைப் பற்றி பேச இருக்கிறார் என்பதை கூறும் ஒரு அறிமுக சுலோகம் இது. இங்கே பகவான் அர்ஜுனனை ‘4நஞ்ஜய’ என்று அழைக்கிறார், அதாவது ஏராளமான செல்வங்களை வென்றவன். திக்விஜயம் செய்தபொழுது அர்ஜுனன் தேவலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள செல்வங்களை ஜெயித்தான் ஆதலால் அவன் தனஞ்ஜயன் என்ற பெயர் பெற்றான். யாருக்கும் பயன்படாமல் ஓரிடத்தில் அடைபட்டுக் கிடக்கும் செல்வத்தைப் பயன்படுகிற இடத்துக்கு மீட்டெடுத்துக்கொண்டு வருவது அரசனுடைய கடமையாகும். இவ்வாறு அர்ஜுனனை அழைத்து பகவான் கிருஷ்ணர், இப்போது பகரப்படுவதைக் கேள் — ப்ரோச்யமாநம், என்கிறார். புத்தியினுடைய மூன்று வேற்றுமைகள் சொல்லப்பட இருக்கிறது — புத்3தே4: பே43ம் த்ரிவித4ம்.

செய்யத்தக்கது எது, தகாதது எது என்று முடிவுகட்டும் தன்மையானது அறிவு என்றும் புத்தி என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அறிவு(ஞானம்) எவ்வாறு மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டது என சுலோகம் 18.20 - 18.22 வரை கண்டோம். இப்போது புத்தியும் அவ்விதம் பிரிக்கப்படுகிறது. பொதுவாக புத்தி என்பது அறிவு என்றே பார்க்கப்படுவதால், இங்கே ஒரு சந்தேகம் எழலாம் — இந்த வேறுபாடு ஏற்கனவே சொல்லப்படவில்லையா? எனில் புத்திக்கும் அறிவிற்கும் உள்ள வேறுபாடு என்ன? சங்கரர் இதை நமக்கு தெளிவுபடுத்துகிறார். புத்தி என்பது சிந்திக்கும் திறன், அதே நேரத்தில் ஞானம் அல்லது அறிவு என்பது புத்தியில் இருக்கின்ற உள்ளபடியான எண்ண மாற்றம்(வ்ருத்தி). வ்ருத்தி இல்லாமல் புத்தி இல்லை, புத்தி இல்லாமல் வ்ருத்தி இல்லை என்றாலும், பொதுவாக ஒரு சிந்திக்கும் ஆற்றல் ஒன்று உள்ளது. ஆகவே நாம் இந்த வேறுபாட்டைச் செய்கிறோம். அதாவது புத்தியில் அறிவானது அடையப்படுகிறது, அதே சமயத்தில் அறிவானது எண்ண வடிவத்தில் புத்தியில் இருக்கிறது.

அடுத்ததாக, திருதியின் மூவித பாகுபாடுகள் விளக்கப்படுகின்றன — த்4ருதி. செய்யவேண்டிய காரியத்தைத் தளர்வுறாமல் திட்பத்துடன் செய்வது உறுதி அல்லது திருதி என்று பெயர் பெறுகிறது. இதுவும் புத்தியில் எழுகிற ஒருவித வ்ருத்தியாகும். 

புத்தி மற்றும் உறுதி எனும் இந்த இரண்டு விஷயங்களும் குணத்தின்(கு3ணத:) அடிப்படையில் மூன்று படித்தரங்களைக் கொண்டதாக இருக்கின்றது. அதை நான் தனித்தனியாய் பாக்கியில்லாமல், அதாவது முழுமையாகத் தெளிவாக கூறப்போகிறேன் — ப்ருத2க்த்வேந அசே1ஷேண


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

உப்பினாலும் துணியினாலும் கல்லாலும் செய்யப்பட்ட மூன்று வகைப் பதுமைகள் இருக்கின்றன. அவைகளைத்  தண்ணீரில் அமிழ்த்தினால் முதலாவது பதுமை கரைந்து தன் உருவத்தை இழந்துவிடும். இரண்டாவது தன் உருவத்துடனிருந்தே நிறையத் தண்ணீரைத் தன்னுள் கிரகித்துக்கொள்ளும். மூன்றாவதில் தண்ணீரே நுழையாது. முதல் பதுமை பரமாத்மாவிடம் சேர்ந்து அதனோடு ஒன்றி ஐக்கியமாய்விடும் மனிதனைக் குறிக்கும். அவன் முக்தபுருஷன். இரண்டாவது பதுமை திவ்யானந்தத்தையும் திவ்ய ஞானத்தையுமுடைய வாஸ்தவமான பக்தனைக் குறிக்கும். மூன்றாவதோ, ஞானமானது கொஞ்சமேனும் நுழையாத ஹிருதயத்தையுடைய உலகப் பற்றுள்ளவனைக் குறிக்கும். 

————————————————————————————————