ஞாயிறு, 17 மே, 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.26 - 18.27

||18.26|| சாத்விக கர்த்தா:

मुक्तसङ्गोऽनहंवादी धृत्युत्साहसमन्वित: ।

सिद्ध्यसिद्द्योर्निर्विकार: कर्ता सात्त्विक उच्यते ।। २६ ।।

முக்தஸங்கோ3ऽநஹம்வாதீ3 த்4ருத்யுத்ஸாஹஸமந்வித: ।

ஸித்3த்4யஸித்3த்4யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே ।। 26 ।।


मुक्त सङ्ग:  முக்த ஸங்க3:  பற்று நீங்கியவன்     अनहंवादी  அநஹம்வாதீ3  அகங்காரமற்றவன்     

धृति उत्साह समन्वित:  த்4ருதி உத்ஸாஹ ஸமந்வித:      உறுதியும் ஊக்கமும் உடையவன்      

सिद्धि असिद्द्यो:  ஸித்3தி4 அஸித்3த்4யோ:  வெற்றி தோல்வியில்      

निर्विकार:  நிர்விகார:  வேறுபடாதவன்     सात्त्विक:  ஸாத்த்விக  சாத்விகமானவனென்று       

कर्ता उच्यते  கர்தா உச்யதே  உரைக்கப்படுகிறது. 


பற்று நீங்கியவன், அகங்காரமற்றவன், உறுதியும் ஊக்கமுமுடையவன், வெற்றி தோல்வியில் வேறுபடாதவன் — இத்தகைய கர்த்தா சாத்விகன் எனப்படுகிறான். 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

நசைகளற்றான், நானென்ப தற்றான் உறுதியுங் களிதரும் ஊக்கமு முடையான், வெற்றி தோல்வியில் வேறுபா டற்றான் - இங்ஙன மாகித் தொழில்க ளியற்றுவோன் ஒளியியல் யுடையானென்ப.

விளக்கம்:

சுலோகம் இருபத்தாறு முதல் இருபத்தெட்டு வரை மூன்று வகையான கர்த்தாக்கள் குறித்து பகவான் பேசுகிறார். இங்கு சாத்விக கர்த்தா எப்படிப்பட்டவன் எனக் கூறுகிறார்.


=> சாத்விகம்:

மனம் சாத்விகமாக இருப்பவனே சாத்விக-கர்த்தாவாக இருக்கிறான். மனம் சாத்விகமாக மாறியவுடன், அறிவு மற்றும் செயல் இரண்டும் அவ்விதமாகவே மாறுகிறது. சாத்விகம் என்பது சிந்தனையிலும் மனப்பான்மையிலும் ஏற்படுகிற மாற்றமாகும். செயலைச் செய்பவன் கர்த்தா எனப்படுகிறான். சாத்விகமான கர்மத்தை செய்பவன் சாத்விக-கர்த்தா ஆகிறான். அவன் எப்படிப்பட்டவன்?


=> பற்று நீங்கியவன்:

சத்வகுணப் பிரதானமான மனதை கொண்டுள்ள சாத்விக-கர்த்தா, பற்றிலிருந்து விடுதலை அடைந்தவனாக இருக்கிறான் — முக்த ஸங்க3. தான் செய்கிற கர்மத்திலும், கர்ம பலனிலும் விருப்பு வெறுப்பு இல்லாதவனாக, பெருமையோ அல்லது அகங்காரமோ அற்றவனாக இருக்கிறான். எனவேதான் அவன் ‘அநஹம்வாதீ3’ எனவும் அழைக்கப்படுகிறான். 


=> கர்வமற்றவன்:

எல்லா வடிவங்களும் ஈசன் சொரூபம்; எல்லாச் செயல்களும் அவனுடையவை என்ற எண்ணத்தில் சாதகன் நிலைத்திருக்கிறான். அதனால் செய்கிற செயலின் பலனை அடைவதற்கான எதிர்ப்பார்ப்புகளும் விருப்பங்களும் அவனுக்கு இல்லை. ஒரு பெரிய தியாகத்தைச் செய்தபோதிலும், ‘நான் மிக மேலானவன்; அதனால் இதை நான் செய்கிறேன்; இது எனக்கு பெயரையும், புகழையும் கொடுக்கும்’ என்றெல்லாம் கர்வம் கொள்வதில்லை. மாறாக, ‘இது எனக்குச் செயல்பட கொடுக்கப்பட்டுள்ளது, எனவே என்னால் இது செய்யப்படுகிறது’ என்கிற மனப்பான்மையைக் கொண்டவனாக இருக்கிறான். கொடுக்கின்ற நிலையில் இருந்தபோதிலும், பெறுகின்ற நிலையிலும் தன்னை வைத்துப் பார்க்கின்ற மனப்பக்குவம் சாத்விக குணத்தினால் அவனுக்கு அமையப்பெற்றிருக்கிறது. அந்த மனப்பான்மை தன்னைப் பற்றி பெருமை பேசாதவனாக அவனை ஆக்குகிறது. இதனால் அவனுக்கு அஹங்காரம் இல்லை — அநஹம்வாதீ3. உடல், மனம், புலன்கள், வளங்கள், உலகம் மற்றும் வாய்ப்புகள் என அனைத்தும் தனக்கு கொடுக்கப்பட்டது என்பதை அவன் அங்கீகரிக்கிறான். இந்த புரிதலுடன் செயல்படும்போது ஒருவன் பணிவுடையவனாக, சாத்விகமானவனாக ஆகின்றான்.  


=> உறுதியுடன் கூடியவன்:

மேலும், சாத்விகமானவனிடம் உறுதிப்பாடு அல்லது விடாமுயற்சி இருக்கிறது — த்4ருதி. பல்வேறு விஷயத்தில் ஒருவனால் உறுதியுடன் இருக்கமுடியும். உதாரணமாக, ஹிட்லரிடம் இருந்த உறுதியும் த்ருதியே ஆகும். ஆனால் அது தவறான சிந்தனையினால் மிகவும் ஆபத்தில் முடிந்தது. எனவே யாருக்கும் உறுதி இருக்கலாம், அது ராஜஸிகமாக அல்லது தாமஸமாக இருக்கலாம். எனில் இங்கு விவாதிக்கப்படும் நபரின் உறுதியானது எப்படிப்பட்டது? அது அவனுக்கும் மற்றவர்களுக்கும் நன்மையை விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. ஏனெனில் அது அவனது சாத்விகமான சிந்தனையிலிருந்து எழுந்த சரியான தீர்மானம் ஆகும். மோக்ஷத்திற்காக மனத் தூய்மையை அடைவதில் உறுதியுடன் இருக்கிறான். அர்ஜுனன் அல்லது தர்மபுத்திரனைப் போல, தர்மசிந்தனைக்கு எதிராக எழாத உறுதி சாத்விகமானது. ‘த்4ருதி’ எனும் இந்த வார்த்தையின் வேர்ச்சொல்லான ‘த்4ர்’ என்பது நிலைநிறுத்துவது எனப் பொருள்படும். எனவே தொடர்ந்து ஒரு விஷயத்தில் நிலைநிற்பதை அது குறிக்கிறது. அதாவது ஏதேனுமொரு விஷயத்தை தொடங்கி, பின்னர் முயற்சி தளர்ந்ததினால் அது கைவிடப்பட்டால் அங்கு எந்த த்ருதியும் இல்லை என்பது பொருள். எனவே தடை வரும்போதும் உறுதியுடன் இருந்து தொடங்கியதை முடிப்பவன் சாத்விகன்.

மேலும், உறுதி இருந்தாலும் உற்சாகத்துடன் செய்யப்படாத ஒன்று பெரும்பாலும் அதன் முடிவை நெருங்குவதில்லை. எனவே சாத்விகமானவன் செய்கிற செயலை ஊக்கத்தோடு முழு மனதுடன் கூடியவனாகச் செய்கிறான். இவ்விதம் முயற்சி மற்றும் உற்சாகத்துடன் தனது தீர்மானத்தில் உறுதியாக இருப்பவன் — த்4ருத்யுத்ஸாஹ ஸமந்வித:, சாத்விகமானவன். 


=> வெற்றி-தோல்வியில் வேறுபடாதவன்:

பற்றுடையவன் வெற்றியின்போது மகிழ்கிறான்; தோல்வியில் துன்பமடைகிறான். ஆனால் இங்கு சொல்லப்படுகிற சாத்விகீ, அனைத்தும் கடவுளுடைய செயல் என்று எண்ணுகிற யோகியாக இருப்பதால், கர்மத்துக்கு கர்த்தாவாக தோன்றுகிறானென்றபோதிலும், மனதினுள் அதை ஈசனின் செயலாகப் பார்ப்பதினால், அவன் வெற்றி தோல்விகளில் நிர்விகாரியாக, அதாவது சமமாக இருப்பவனாக ஆகிறான் — ஸித்3தி4 அஸித்3த்4யோ: நிர்விகார:. வெற்றியோ தோல்வியோ, விளைவு எதுவாயினும் அதை ஈஷ்வரப் பிரசாதமாக ஏற்றுக் கொள்கிறான். இதனால் அவனது மனம் சஞ்சலத்தை அடைவதில்லை. 

ஒரு கர்ம-யோகிக்கு கர்மத்தை செய்து முடிப்பதே வெற்றி; அதில் வருகிற முடிவைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை. இங்கு சொல்லப்படுவதுபோல் வெற்றி தோல்விகளில் சஞ்சலப்படாமல் மனதை சமநிலையில் வைத்திருக்கிற நிலை கர்மயோகத்தைக் குறிக்கிறது. எனவே இங்கு பேசப்படுவதும் கர்ம-யோகம்தான். ஏதேனுமொன்றை அடைய வேண்டுமென்பதற்காக அல்லாமல், தர்மத்திற்கு இணங்க, சாஸ்திரத்திற்கு இணங்க மட்டுமே செயல்களில் ஈடுபடுபவனாக அவன் இருக்கிறான் என்று சங்கரர் மேலும் கூறுகிறார். அத்தகையவன் சாத்விகமானவன் என்று அழைக்கப்படுகிறான்; வேறு வார்த்தையில் கூறுவதானால், அவன் ஒரு கர்ம-யோகி. நாம் இங்கே ஞானியை பற்றிப் பேசவில்லை, கர்த்தாவைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். ஒரு ஞானியின் அணுகுமுறை இதிலிருந்து மிகவும் வித்தியாசமானதாக இருக்கப்போவதில்லை என்றாலும், அது அவனது சொரூபமாகவே இருக்கிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

கள்ளங்கபடமற்ற மனமிருந்தால் ஈஷ்வரனை எளிதில் அடையலாம். கற்கள் இல்லாமல் உழுது பண்படுத்தப்பட்ட மிருதுவான பூமியில் நடப்படும் வித்து எளிதில் முளைத்துக் கிளம்பி, சீக்கிரத்தில் பயன் அளிப்பதைப் போல, கள்ளங்கபடமற்ற மனத்தில் ஆத்மீக உபதேசங்கள் எளிதில் பயன் அளிக்கின்றன. 

————————————————————————————————

||18.27|| ராஜஸ கர்த்தா:

रागी कर्मफलप्रेप्सुलुब्धो हिम्सात्मकोऽशुचि: ।

हर्षशोकान्वित: कर्ता राजस: परिकीर्तित: ।। २७ ।।

ராகீ3 கர்மப2லப்ரேப்ஸுலுப்3தோ4 ஹிம்ஸாத்மகோऽசு1சி: ।

ஹர்ஷசோ1காந்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித: ।। 27 ।।


रागी  ராகீ3  ஆசையுள்ளவன்      कर्मफलप्रेप्सु:  கர்மப2லப்ரேப்ஸு:  வினைப்பயனை விரும்புபவன்      लुब्ध:  லுப்34:  லோபி       हिम्सात्मक:  ஹிம்ஸாத்மக:  துன்புறுத்தும் தன்மையுடையவன்    

अशुचि:  அசு1சி:  சுத்தமில்லாதவன்     हर्ष शोक अन्वित:  ஹர்ஷ சோ1 அந்வித:  மகிழ்வும் சோர்வும் கொள்பவன்     कर्ता  கர்தா  அத்தகைய கர்த்தா       राजस:  ராஜஸ: ராஜஸனென்று     

परिकीर्तित:  பரிகீர்தித:  சொல்லப்படுகிறான்.


ஆசையுள்ளவன், வினைப்பயனை விரும்புபவன், லோபி, துன்புறுத்தும் தன்மையுடையவன், சுத்தமில்லாதவன், மகிழ்வும் சோர்வும் கொள்பவன் — இத்தகைய கர்த்தா ராஜஸனென்று சொல்லப்படுகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

வேட்கையுடையோன், செய்கைப் பயன்களை விரும்புவோன், லோபி, இடர் செய்வோன், தூமையற்றோன், களிக்குந் துயிலுக்கும் வசபட்டோன் இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் ராஜஸ-கர்த்தா எப்படிப்பட்டவன் என பகவான் வரையறுக்கிறார்.


=> பலன்-விரும்பி:

அவன் ஒரு ராகியாக இருக்கிறான் — ராகீ3. அதாவது பற்றுடன் கூடியிருப்பவன்; விஷய போகத்தை முதன்மையாகக் கொண்டவன். லெளகிக கர்மங்கள் அனைத்தையும் அவன் ராக மற்றும் துவேஷத்திற்காக மட்டுமே செய்கிறான். அதேபோல எந்த வகையான வைதிக-கர்மத்தையும் அவன் கர்ம-பலனுக்காக மட்டுமே செய்கிறான். செயல்களினால் வருகிற பலன்களில் குறிப்பிடத்தகுந்த ஆசை இருப்பதால் அவன் ‘கர்மப2லப்ரேப்ஸு’ என்று அழைக்கப்படுகிறான். அத்தகையவன் தனது கடமையையும்கூட பலனைக் கருத்தில் கொண்டே செய்கிறான். அவன் தர்ம, அர்த்த அல்லது காமத்தை மட்டுமே விரும்புகிறான் என்பதால் அவன் கர்ம-யோகியாக அல்லாமல் கர்ம-ப2ல-ப்ரேப்ஸு-வாக, செயலின் பலனை மட்டுமே விரும்புபவனாக இருக்கிறான். 


=> லோபி:

ராஜஸ-கர்த்தா லோபியாக இருக்கின்றான் — லுப்34. லோபியை இரு வகையில் வரையறுக்கலாம். (1) தன் பொருளை மற்றவர்களுக்கு கொடுக்காதவன் - ஸ்வ த்3ரவ்யம் அபரித்யாகி3. கொடுக்க வேண்டிய சூழ்நிலை அமையும்போதும் அவன் அதை செய்வதில்லை. பொதுவாக, இந்தியாவில் புனித யாத்திரைத் தலங்களுக்குச் செல்லும்போது மக்கள் பணத்தை தானமாகக் கொடுப்பது வழக்கம். அதையும்கூட அவன் தனது லோபத்தால் செய்வதில்லை. மேலும் மற்றவர்களுக்கு மட்டுமல்ல தனக்கும்கூட பணத்தை செலவிட இயலாத கஞ்சனாக இருக்கிறான். அவனது மனமானது ஏதோ வங்கியின் சில புள்ளிவிவரங்களிலும், சில நிதிநிலை அறிக்கைகளின் பத்திகளிலும், எங்கோ சில இடங்களில் சொத்தாக முதலீடு செய்வதிலும் இருக்கும். ஆனால் தனக்கென்றோ அல்லது மற்றவர்களுக்கென்றோ செலவு செய்ய மனம் வராது. 

(2) இனியொருவருடைய பொருளுக்கு ஆசைப்படுபவன் - பரத்3ரவ்யே ஸஞ்ஜாத த்ருஷ்ண:. ஏதேனும் ஒரு விதத்தில் பிறர் பொருளை தன்னுடையதாக ஆக்கிக்கொள்ள முயலும் பேராசைக்காரனாக அவன் இருக்கிறான். 


=> ராஜஸன்:

அவனது செயலின் மூலமாக மற்றவர்களை துன்புறுத்துபவனாக இருக்கிறான் — ஹிம்ஸாத்மக. இனியொருவரை காயப்படுத்துவது அவனது இயல்பாக இருக்கிறது, அதில் அவன் மகிழவும் செய்கிறான். அவன் மகிழ்ச்சியில்லாமல் இருப்பதால், வேண்டுமென்றோ அல்லது கவனிக்காமலோ மற்றவர்களது மகிழ்ச்சியையும் குலைக்கிறான். மேலும், அவன் தூய்மையற்றவனாக இருக்கிறான் — அசு1சி. அவனது அகம் மற்றும் புறம் இரண்டும் சுத்தமற்று இருக்கிறது. அவன் எண்ணுவதிலும், பேசுவதிலும், செய்வதிலும், உடலை வைத்துக் கொள்ளும் முறையிலும் சுத்தமில்லை. அகத்தூய்மையற்ற தன்மை என்பது கோபமாக வெறுப்பாக வெளிப்படுகிறது. இனியொருவரை காயப்படுத்தும் தன்மையும் திடம்பெற்ற விருப்பங்களும் இருக்கும்போது, இயல்பாகவே அவனுக்கு அகத்தூய்மை இருக்காது. அதேசமயம் அவனிடம் புறத்தூய்மையும்கூட இருப்பதில்லை.

சென்ற சுலோகத்தில் பார்த்த கர்மயோகியினுடைய மனநிலையான வெற்றி தோல்விகளில் சமமாக இருக்கின்ற தன்மைக்கு நேர் எதிரானவனாக இங்கு விவாதிக்கப்படுபவன் இருக்கிறான் — ஹர்ஷ சோ1க அந்வித:. தனக்கு வேண்டியது நடக்கும்போது மகிழ்ச்சியும், வேண்டாதது வந்தமையும்போது துயரமும் மனச்சோர்வும் கொள்கிறான். ரஜோகுணம் நிறைந்தவனது கர்த்ருத்துவம், அதாவது கர்த்தா என்று உணரும் பான்மை இத்தகையதாக இருக்கிறது.   


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

வீண் கர்வம் பிடித்தவனாயிருப்பது கேவலம் தாழ்ந்த சுபாவம். காக்கையைப் பார். தான் சாமர்த்தியமுள்ள பக்ஷியென அது நினைத்துக் கொண்டிருக்கிறது. ஒருபோதும் அது வலையில் அகப்படுவதில்லை. ஆபத்து வருமென்பதைச் சற்றுத் தெரிந்துகொண்டதும் பறந்தோடி விடுகிறது. வெகு தந்திரமாக ஆகாரத்தைத் திருடுகிறது. என்றாலும் மலம் தின்பதில் மட்டும் அதற்கு அருவருப்பில்லை. அதிகச் சமர்த்தாக இருப்பதின் பலன் இதுதான்.

————————————————————————————————