திங்கள், 11 மே, 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.24 - 18.25

||18.24|| ராஜஸ கர்மம்:

यत्तु कामेप्सुना कर्म साहङ्कारेण वा पुन: ।

क्रियते बहुलायासं तद्राजसमुदाहृतम् ।। २४ ।।

யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹங்காரேண வா புந: ।

க்ரியதே ப3ஹுலாயாஸம் தத்3ராஜஸமுதா3ஹ்ருதம் ।। 24 ।।


तु  து  மேலும்     कामेप्सुना  காமேப்ஸுநா  ஆசையின் வசப்பட்டவனால்     वा  வா  அல்லது      

पुन:  புந:  மேலும்     साहङ्कारेण  ஸாஹங்காரேண  அஹங்காரமுடையவனால்       

बहुल आयासं  3ஹுல ஆயாஸம்  அதிக ஆயாசத்துடன்      यत् कर्म  யத் கர்ம  எக்கர்மம்      

क्रियते  க்ரியதே  செய்யப்படுகிறது     तत्  தத்  அது       राजसम्  ராஜஸம்   ராஜஸமானதென்று       उदाहृतम्  உதா3ஹ்ருதம்  உரைக்கப்படுகிறது.


மேலும் ஆசையின் வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் பெரும் ஆயாசத்துடன் எந்த கர்மம் செய்யப்படுகிறதோ அது ராஜஸமானதென்று உரைக்கப்படுகிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் செய்யப்படும் மிகுந்த ஆயாசத்துக் கிடமான செய்கை ராஜச மெனப்படும்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் பகவான் ராஜஸம் கர்ம எது என வரையறுக்கிறார்.


=> ராஜஸ கர்மம்:

இங்கு ‘து’ எனும் சொல்லானது முந்தைய சுலோகத்தில் விவரிக்கப்பட்ட சாத்விகம் கர்மத்திலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகிறது. இங்கு சொல்லப்படுகிற ‘காமேப்ஸுநா’ எனும் வார்த்தையானது சென்ற சுலோகத்தில் சொல்லப்பட்ட ‘2லப்ரேப்ஸுநா’ எனும் பொருளை ஒத்துள்ளது, அதாவது பலனை விரும்புபவன். ‘காம’ எனில் ஒருவனால் விரும்பப்படுவது; எதன் பொருட்டு ஒருவன் கர்மத்தில் ஈடுபடுகிறானோ அந்த கர்ம-பலனைக் குறிக்கிறது. தனது தற்போதைய நிலைமையிலிருந்து உயர்வை அடைதல் எனும் இகவுலக பலனையோ, அல்லது புண்ணியத்தை அடைந்து வேறு லோகத்திற்கான பலனையோ அடைதல் என்பதை கருத்தில் வைத்து, ஆசையினால் தூண்டப்பட்டுச் செய்யப்படுவது ‘காமேப்ஸுநா’ ஆகும்.  

இந்த சுலோகத்தில் வருகிற ‘புந:’ எனும் சொல்லிற்கு பெரிதான அர்த்தம் எதுவுமில்லை என்றும், சந்தத்தை நிரப்ப மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும், அல்லது அதனுடைய நேரடிப் பொருளான ‘மீண்டும்’ என்பதை எடுத்துக் கொள்ளலாம் என்றும் சங்கரர் பாஷ்யத்தில் கூறுகிறார். இது சுலோகத்தினால் விளக்கப்படுகிற அர்த்தத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. மீண்டும், இந்த வகையான கர்மம் அகங்காரத்துடன் செய்யப்படுவதாக இருக்கிறது. ‘ஸாஹங்காரேண’ என்பது பெருமிதத்துடன் கூடியவனை, அகங்காரம் நிறைந்தவனை, சுயநலவாதியைக் குறிக்கிறது. உதாரணமாக பதவியின் காரணமாக கிடைக்கின்ற செல்வாக்கில் பெருமிதம் கொண்டு மற்றவர்களை அவன் மதிப்பதில்லை. இவ்விதம் செல்வம், அந்தஸ்து, பதவி போன்ற வெளி அடையாளங்களுடன் தன்னை தொடர்புபடுத்தி இறுமாப்புடன் கூடியவனாக செய்யப்படுகிற செயல் ராஜஸம் கர்ம ஆகும்.

அடுத்ததாக, இவ்வகை கர்மங்கள் மிகுந்த துன்பத்துடன், களைப்புடன் செய்யப்படுகிறது — 3ஹுலாயாஸம். ‘ஆயாஸம்’ எனில் மன அழுத்தம், பதற்றம், கொந்தளிப்பு. அதிக பணத்தை நோக்கமாகக் கொண்டு சிலர் மன அழுத்தத்தையும் பொருட்படுத்தாது, அலுவலகத்தில் மிகைநேரப் பணி புரிவார்கள். அந்த களைப்பில் அவர்கள் வீட்டிற்கு வரும்போது, எப்போது வெடிப்பார்கள் எனத் தெரியாத அளவு பொருமிக் கொண்டே இருப்பார்கள். இதனால் வாழ்க்கையே நரகமாகிவிடும்; குடும்பம் நரகமாகிவிடும், பணம் இருக்கிறது, அந்தஸ்து இருக்கிறது; பதவி இருக்கிறது, ஆனால் வாழ்க்கை இல்லை, குடும்பம் இல்லை, நிம்மதி இல்லை, ஆன்மிகம் இல்லை.

மேலும் சிலர் தான் செய்கிற கர்மங்களை மற்றவர்கள் அறிவதற்கேற்ற விரிவான ஏற்பாடுகளைச் செய்வார்கள். இது கர்மத்தைக் காட்டிலும் அதிக களைப்பை அளிக்கக்கூடியதாக இருந்தும் அதை தவறாமல் செய்கிறார்கள். இத்தகைய செயல் ரஜோ குணத்திலிருந்து பிறக்கிறது. இவை ராஜஸ கர்மம் என்றழைக்கப்படுகிறது.  


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

துஷ்ட அஹங்காரம் என்பது யாது? “என்னைத் தெரியாதா? எனக்கு அவ்வளவு செல்வமிருக்கிறது; என்னிலும் மேம்பட்டவர் யார்?” என்று சொல்லுகிற அகங்காரந்தான்.

————————————————————————————————

||18.25|| தாமஸ கர்மம்:

अनुबन्धं क्षयं हिंसामनपेक्षय च पौरुषम् ।

मोहादारभ्यते कर्म यत्तत्तामसमुच्यते ।। २५ ।।

அநுப3ந்த4ம் க்ஷயம் ஹிம்ஸாமநபேக்ஷய ச பெளருஷம் ।

மோஹாதா3ரப்4யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே ।। 25 ।।


अनुबन्धं  அநுப3ந்த4ம்  வினையின் விளைவையும்     क्षयं  க்ஷயம்  நஷ்டத்தையும்       

हिंसाम्  ஹிம்ஸாம்  துன்பத்தையும்     पौरुषम् च  பெளருஷம்   தன் வல்லமையையும்

अनपेक्षय  அநபேக்ஷய  எண்ணிப்பாராது       मोहात्  மோஹாத்  மோகத்தால்      

यत् कर्म  யத் கர்ம  எக்கர்மம்      आरभ्यते  3ரப்4யதே  ஆரம்பிக்கப்படுகிறதோ     तत्  தத்  அது      तामसम् தாமஸம்  தாமஸமென்று      उच्यते  உச்யதே  உரைக்கப்படுகிறது. 


வினையின் விளைவையும், நஷ்டத்தையும், துன்பத்தையும், தன் திறனையும் எண்ணிப்பாராது மயக்கத்தால் எக்கர்மம் தொடங்கப்படுகிறதோ அது தாமஸமெனப்படும். 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

செய்கையின் பின் விளைவையும், அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும் துன்பத்தையும் செய்வானது திறமையையும் கருதாமல், அறிவின்மையால் தொடங்கப்படும் கர்மம் தாமசமெனப்படும்.

விளக்கம்:

இங்கு தாமஸம் கர்ம விளக்கப்படுகிறது. 


=> தாமஸ கர்மம்:

கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை, பொருட்படுத்தாது அல்லது கருத்தில் கொள்ளாது தொடங்கப்படுகிற செயல் தாமஸம் எனப்படுகிறது. 

(1) செய்கிற செயலின் விளைவு என்னவாக இருக்கும் என எண்ணிப்பார்க்காது செய்யப்படுவது(அநுப3ந்த4ம்) தாமஸம் ஆகும். உதாரணமாக திருடுதல் போன்ற செயலில், அதனுடைய விளைவை அவன் பார்ப்பதில்லை. தான் செய்த கர்மத்திலிருந்து விளைவது நன்மையா, கேடா என்பதை சிறிதும் பொருட்படுத்துவதில்லை. 

(2) மேலும் அவனது இழப்புகளை அவன் கருத்தில் கொள்வதில்லை — க்ஷயம். பண நஷ்டம், ஆற்றல் மற்றும் முயற்சியின் இழப்பு, நம்பகத்தன்மை இழக்கப்படுவது, சுயமரியாதை இழக்கப்படுவது போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதா என அவன் எண்ணிப்பார்ப்பதில்லை. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் சூதாட்டம் ஆகும். எப்போதும் தான் வெற்றி பெறப்போவதாகவே ஒரு சூதாட்டக்காரன் நம்புகிறான். இத்தகைய செயல்களில் இழப்புகள் மட்டுமல்ல, வரப்போகிற எதிர்மறையான விளைவுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மேலும் உடலிலுள்ள வலிவு, ஆயுள், நிம்மதி, புண்ணியம் ஆகியவற்றின் நஷ்டத்தையும் பொருட்படுத்தாது செய்கிற செயல்களும் தாமஸம் கர்ம ஆகிறது.

(3) இத்தகையவனது முயற்சி அல்லது செயலானது தனக்கு மட்டுமல்ல மற்றவர்களையும் பாதிப்பதாக இருக்கிறது — ஹிம்ஸா. ஆனால் அதை அவன் கருத்தில் கொள்ளாது செயல்படுகிறான்.

(4) தான் கொண்டுள்ள திறமையானது தான் எடுத்துக் கொண்டுள்ள கர்மத்தைச் சமாளிப்பதற்கு ஏற்றதல்ல என்பதை அம்மனிதன் அறியான். தனது சொந்த வலிமை, திறன், வளம், மற்றும் மனித சக்தி போன்றவற்றை முறையாக அங்கீகரிப்பது, அதாவது ஒரு செயலைச் செய்வதற்கான தகுதி அல்லது வல்லமை தனக்கு இருக்கிறதா(பெளருஷம்) என்பதை புரிந்துகொண்டு அச்செயலை தொடங்குவது அவசியம். ஆனால் தாமஸகுணப் பிரதானமாக இருப்பவன் அவ்விதம் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

மேற்கூறியவைகள் அனைத்தையும் சிறிதும் பொருட்படுத்தாது செய்யப்படுகிற செயல் தாமஸம் கர்ம ஆகிறது. இந்த காரணிகளைக் கருத்தில் கொள்ளாமல் ஏன் ஒருவன் ஒரு செயலைத் தொடங்குகிறான்? ஒருவகையான மோஹத்தினால் அவன் அவ்விதம் செயல்படுகிறான் — மோஹாத். ஒரு விஷயத்தை சரியான விதத்தில் பகுத்தறிய இயலாமல் போவது என்பது ஒரு குறிப்பிட்ட ஆடம்பர மனப்பான்மை அல்லது தவறான நம்பிக்கை ஆகியவற்றின் வெளிப்பாடாக அமைகிறது. இந்த மயக்கத்தை அல்லது குழப்பத்தை நாம் சில சமயம் முட்டாள்தனம் என்றும் அழைக்கிறோம். அப்படிப்பட்ட செயலை மேற்கொள்பவன் தாமஸம் கர்ம எனப்படுகிற ஒரு செயலைச் செய்கிறான்.  

மூன்று வகையான கர்மம் கூறப்பட்டது. இதற்கு முன்னர் மூன்று வகையான ஞானத்தைக் குறித்துப் பார்த்தோம். அடுத்தாக, கர்த்தாவினது ​​மூன்று விதமான பாகுபாட்டைக் குறித்து பகவான் பேச இருக்கிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

மிகுந்த தபசுக்குப் பிறகுதான் மனிதர்கள் கபடமற்றவராகவும் தயாளகுணம் வாய்ந்தவராகவும் ஆகின்றார்கள். கள்ளங்கபடமற்ற மனதையுடையவராயிருந்தால் கடவுள் காட்சி கிடைக்கும். அவ்வித எளிய மனதையுடையவர்கே கடவுள் தம்மைக் காட்டுவிப்பார் என்று பகவான் கூறுவது வழக்கம். ஆனால் எளிமை, உண்மை இவற்றின் பேரால் ஒருவன் ஏமாளியாகிவிடக் கூடாதென்று அஞ்சிப் பின்வருமாறு குறிப்பிடுவதும் உண்டு. “பக்தனாக இருக்க வேண்டும்; ஆனால் அதன்பேரில் மூடனாக இருக்கக் கூடாது. எப்பொழுதும் மெய்ப் பொருளிலிருந்து பொய்ப்பொருளையும், நித்யத்திலிருந்து அநித்யத்தையும் அகற்றுவதற்காக மனதிலே விசாரணை செய்து பார்க்க வேண்டும். பிறகு அநித்யத்தை அகற்றி விட்டு நித்ய வஸ்துவின்மீது மனதை நிறுத்தவேண்டும்”.

————————————————————————————————