சனி, 11 ஏப்ரல், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.14 - 18.15

||18.14|| ஐந்து காரணிகள்:

अधिष्ठानं तथा कर्ता करणं पृथग्विधम्

विविधाश्च पृथक्चेष्टा: दैवं चैवात्र पञ्चमम् ।। १४ ।। 

அதி4ஷ்டா2நம் ததா2 கர்தா கரணம் ப்ருத2க்3வித4ம்

விவிதா4ச்1 ப்ருத2க்சேஷ்டா: தைவம் சைவாத்ர பஞ்சமம் ।। 14 ।।


अधिष्ठानं  அதி4ஷ்டா2நம்  இருப்பிடமாகிய உடல்      तथा  ததா2  அப்படியே      

कर्ता  கர்தா  கர்த்தா      करणं पृथग्विधम्  கரணம் ப்ருத2க்3வித4ம்  வெவ்வேறு விதமான இந்திரியங்கள்     विविधा:    விவிதா4:  பல விதமான      पृथक्  ப்ருத2க்  வேறுபட்ட      

चेष्टा:  சேஷ்டா:  செயல்கள்     अत्र  அத்ர  இவற்றினுள்    पञ्चमम्  பஞ்சமம்  ஐந்தாவது     

दैवं एव  தைவம் ஏவ  தெய்வமுமே.     


உடல், கர்த்தா, வெவ்வேறு விதமான இந்திரியங்கள், பலவிதமாக வேறுபட்ட செயல்கள் இவற்றிற்கு ஐந்தாவதாக தெய்வமும் காரணங்களாகின்றன


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அவை இடம், கர்த்தா, பலவிதக் கரணங்கள், வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள், இயற்கை என ஐந்து.


விளக்கம்:

ஒரு செயல் நம்மிடமிருந்து தோன்றுவதற்கு அடிப்படையாகவுள்ள ஐந்து காரணிகள் இங்கு கூறப்படுகிறது:


=> (1) உடல்:

இங்குஅதி4ஷ்டா2நம்என்பது ஸ்தூல சரீரத்தைக் குறிக்கிறது. செயலின் மூலம் விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய இடம் அதிஷ்டானம் ஆகும். உலகின் அனுபவங்களைப் பெற நாம் செயல்படுகிற இடமாகவும், மேலும் இன்பத்தை அனுபவிப்பதற்கான இருப்பிடமாகவும்(போ43 ஆயதநம்) இருப்பது உடல். இந்த உடலில்தான் அனைத்து செயலுறுப்புகளும் வைக்கப்பட்டுள்ளன, எனவே இது அனைத்து செயல்களுக்கும் மையமாக இருக்கிறது. பொதுவாகஅதி4ஷ்டா2நம்எனும் சொல், ஆதாரம் என்கிற பொருளில் மித்யாவான இந்த உலகிற்கு அடித்தளமாக விளங்கும் ஸத்ய-வஸ்துவான ஆத்மாவைக் குறிக்கப் பயன்படுத்தப்படும். ஆனால் இங்கு விவாதத்திற்குரிய விஷயமாக கர்மம் இருப்பதால், ‘அதி4ஷ்டா2நம்என்பது செயல் செய்வதற்கான ஆதாரமாக இருக்கின்ற உடலை குறிக்கிறது. விருப்பு-வெறுப்பு, இன்பம்-துன்பம், ஞானம் ஆகியவற்றின் வெளிப்பாட்டிற்கு அடித்தளமாக உடல் இருப்பதாக சங்கரர் விளக்கமளிக்கிறார். ஆசையானது அதை நிறைவேற்றிக் கொள்வதற்கான முயற்சியின் வடிவத்தில் வெளிப்படுகிறது; வெறுப்பு என்பது எதிர்த்து விலகும் செயலாக வெளிப்படுகிறது; சுகம் மற்றும் துக்க அனுபவமானது அனைத்து புலனுறுப்புகளும் கொண்டு வருகிற தரவைப் பொறுத்து அமைகிறது; ஒவ்வொரு புலனுறுப்பும் இந்த ஸ்தூல உடலில் அதற்கான உடற்கூறியல் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கேட்டல் எனும் செயலுக்கு அடிப்படையாக இருக்கின்ற செவிப்பறை என்பது முற்றிலும் ஸ்தூல விஷயமாக இருக்கிறது. இவ்விதம் ஒவ்வொரு புலனுணர்வுக்கும், அதற்கு தொடர்புடைய புலனுறுப்பு செயல்படக்கூடிய ஒரு ஸ்தூல இடம் இருக்க வேண்டும். அது இந்த உடலில் மையம் கொண்டுள்ளது. அடுத்ததாக, அறிவு உண்டாக புலனுணர்வு அவசியம், மேலும் அந்த உணர்வு உடலில் வைக்கப்பட்டுள்ள புலனுறுப்புகள் வழியாக மட்டுமே நடைபெறுகிறது. இவ்விதம் அனைத்து அனுபவத்திற்கும் இருப்பிடமாக ஸ்தூல உடல் இருக்கின்றதுஅதி4ஷ்டா2

=> (2) கர்த்தா:

செயலைச் செய்வது யார்? கர்த்தா(கர்தா). ஒரு செயலைச் செய்து அதற்கான பலனாக, இன்ப-துன்பங்களாகிய விளைவுகளை ஏற்றுக்கொண்டு அவைகளை அனுபவிக்கும் அஹங்காரமே கர்த்தா எனப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன்(ஸங்கல்ப) செயல் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுபவனும், செயலைச் செய்து அதை சொந்தமாக்கிக் கொள்பவனும் கர்த்தா ஆகிறான். ஒரு செயல் நடைபெறுவதற்கான காரணிகளில் இரண்டாவது இடத்தை கர்த்தா வகிக்கிறது. செயல் செய்பவனாக அவன் கர்த்தாவாகவும், பலனை அனுபவிப்பவனாக அவன் போக்தாவாகவும் ஆகிறான்


=> (3) கரணம்:

மூன்றாவதாக குறிப்பிடப்படுவது கரணம், அதாவது செயல் செய்ய பயன்படுத்தப்படும் கருவி, அல்லது எதனால் செயல் செய்யப்படுகிறதோ அது. இங்கு அது ஐந்து செயலுறுப்புகள்(கர்மேந்திரியங்கள்), ஐந்து புலனுறுப்புகள்(ஞானேந்திரியங்கள்) மற்றும் மனதைக் குறிக்கிறது. ஒருவன் முதலில் ஒன்றை ஆசைப்பட்டு, பிறகு அதை செய்ய முடிவெடுத்த பின்னர் கண்கள், கை கால்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி அச்செயலைச் செய்கிறான். இந்த கரணங்கள் ஒவ்வொன்றும் பன்முகத்தன்மை கொண்டதாகவும், மற்றும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டதாகவும் இருக்கின்றதுப்ருத2க்3வித4ம்.


=> (4) பிராணன்:

செயல் உண்டாவதற்கு நான்காவது அத்தியாவசிய காரணியாக இருப்பது பிராணன் ஆகும்விவிதா4: ப்ருத2க் சேஷ்டா:. இதுவே அனைத்து செயல்பாடுகளையும் சாத்தியமாக்குகிறது. ஏனெனில் பிராணன் இல்லாது உடலால் அனைத்து கரணங்களின் செயல்பாட்டு அம்சமாக விளங்குகிற சூக்ஷம உடலை தக்கவைத்துக் கொள்ள முடியாது. இந்த பிராணனின் செயல்பாடுகள்(சேஷ்டா), வேறுபட்டதாகவும், ஒவ்வொன்றும் அதனது சொந்த பணிகளைக் கொண்டவைகளாகவும் இருக்கின்றன. மூச்சை உள்ளிழுத்தல் மற்றும் வெளிவிடுதல் ஆகிய செயல்களை செய்கிற சுவாசம்(ப்ராண) மற்றும் கழிவுகளை வெளியேற்றுதல்(அபாந), இரத்தஓட்டத்தை சீராக்குதல்(வியாந), உணவு செரிமானத்திற்கு உதவுதல்(ஸமாந), மேல் நோக்கி நகரும் சக்தி(உதாந) ஆகிய ஐந்து பிராண சக்திகள் உள்ளன. எந்தவொரு செயல் செய்வதற்கும் ஆற்றல் தேவைப்படுகிறது, அது பிராணனால் வழங்கப்படுகிறது. எனவே பிராணன் இல்லாமல் எந்த செயலும் இருக்க முடியாது


=> (5) தெய்வம்:

மேற்கூறிய அனைத்து விஷயங்களின் ஒழுங்கான செயல்பாடுக்கு காரணமாக இருக்கின்ற தெய்வம் இங்கு ஐந்தாவது காரணியாக ஆகிறது. ஒரு விஷயம் ஒழுங்காக நடக்கிறது எனில் அது ஒரு நியதிப்படி செயல்படுகிறது என்று பொருள். உதாரணமாக, கண்கள் ஏன் பார்க்க வேண்டும்? காதுகள் ஏன் பார்க்கக் கூடாது? அல்லது கண்கள் ஏன் கேட்கின்ற வேலையையும் சேர்த்து செய்யக் கூடாது? இதெற்கெல்லாம் அடிப்படை காரணமாக ஒரு நியதி இருக்கவேண்டும். மேலும் அந்த நியதியானது, எனது கண்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவரின் கண்களுக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். அதனால்தான் கண் மருத்துவம் என்கிற விஷயம் சாத்தியமாகிறது. ஒவ்வொரு கண்ணின் செயல்பாடும் மாறாத சில விதிகளைப் பின்பற்றுகிறது. அதாவது கண்களின் வடிவத்திலும், கண்களை நிர்வகிக்கிற நியதிகளின் வடிவத்திலும் ஈஷ்வரன் அங்கு இருக்கிறார். அதேபோல கேட்டல், நுகர்தல், சுவைத்தல், சிந்தித்தல் போன்ற அனைத்தையும்கூட நிர்வகிக்கும் ஒரு தெய்வம் இருக்கிறது. இவை எல்லாமும் முற்றிலும் தர்க்கரீதியானவை. இல்லையெனில் உளவியல் என்ற துறையும் அல்லது உடலை மையமாகக் கொண்ட வேறு எந்த அறிவுத் துறையும் இருக்க முடியாது. ‘இது இப்படி இருக்கும்போது அதன் விளைவு இப்படிப்பட்டதாக இருக்கிறதுஎன்கிற பொதுமைப்படுத்துதல் இத்துறைகளில் சாத்தியமாவதிலிருந்து, எந்தவொன்றும் ஒரு குறிப்பிட்ட நியதியின்கீழ் செயல்படுகின்றன என்பது புலனாகிறது. உடல், பிராணன்கள், புலனுறுப்புகள், மனம் ஆகிய அனைத்தும் குறிப்பிட்ட விதிகளுக்குட்பட்டே செயல்புரிகின்றன. இவைகளின் செயல்பாடுகளை நிர்வகிக்கும் இந்த நியதிகள் தெய்வம் ஆகும்


=> இனியொரு வகையான பொருள்விளக்கம்:

ஒரு செயல் நம்மிடமிருந்து தோன்றக் காரணமாக இருக்கின்ற இந்த ஐந்து காரணிகளை கீழ்கண்ட விதத்திலும் விளக்கலாம்:

(1) ஸ்தூல சரீரத்தை குறிக்கின்றஅதி4ஷ்டா2நம்என்பது அன்னமய கோஷம்

(2) விதவிதமான செயல்பாடுகளைக் கொண்ட பிராணன்கள், பிராணமய கோஷம்.

(3) மனம் உட்பட செயல் செய்வதற்குத் தேவையான விதவிதமான கருவிகளை உள்ளடக்கியகரணம்என்பது மனோமய கோஷம்.

(4) புத்தியுடன் சேர்த்துநான்எனும் அஹங்காரத்தை குறிக்கின்றகர்தாஎன்பது விக்ஞானமய கோஷம்.

(5) அந்தராத்மாவாகிய(சிதாபாசனாகிய ஜீவாத்மா) தெய்வம் அந்தந்த இந்திரியத்துக்கு அதிஷ்டான தெய்வமாகிச் செயல்புரிகிறது

ஒவ்வொரு செயலுக்கும் சாமானிய காரணமாக ஈஷ்வரனும்(5), விஷேச காரணமாக சம்ஸ்காரங்களும்(1, 2, 3 & 4) இருக்கின்றன.

இவ்விதமாக, எந்தவொரு செயல் நடைபெறுவதற்கும் இவைகள் ஐந்தும் காரணிகளாகின்றன. என்னென்ன வகையான செயல்களை இவைகள் செய்கின்றன என்பது அடுத்த சுலோகத்தில் விளக்கப்படுகிறது

---------------------------------------------------------------------------------------------

||18.15|| எப்படிப்பட்ட செயல்கள் செய்யப்படுகின்றன?

शरीरवाङ्मनोभिर्यत्कर्म प्रारभते नर:

न्याय्यं वा विपरीतं वा पञ्चैते तस्य हेतव: ।। १५ ।। 

1ரீரவாங்மநோபி4ர்யத்கர்ம ப்ராரப4தே நர:

ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ: ।। 15 ।।


नर:  நர:  மனிதன்       शरीर वाङ् मनोभि:   1ரீர வாங் மநோபி4:  உடலால், வாக்கினால், மனதினால்   न्याय्यं वा  ந்யாய்யம் வா  நியாயமான அல்லது      विपरीतं वा  விபரீதம் வா  விபரீதமான     

यत् कर्म  யத் கர்ம  எந்த கர்மத்தை    प्रारभते  ப்ராரப4தே  தொடங்கினாலும்      

एते पञ्च  ஏதே பஞ்ச  இவைகள் ஐந்தும்     तस्य  தஸ்ய  அதற்கு      हेतव:  ஹேதவ:  காரணங்கள்


உடலால், வாக்கினால், மனதினால் மனிதன் நியாயமாக அல்லது அநியாயமாக எந்த கர்மத்தைச் செய்தாலும் இவ்வைந்துமே அதற்குக் காரணங்களாம்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

மனிதன் உடம்பாலும், வாக்காலும், மனத்தாலும் எந்தச் செயலைத் தொடங்கினாலும், அது நியாயமாயினும், விபரீதமாயினும், இவ்வைந்துமே அச்செயலின் ஏதுக்களாம்.


விளக்கம்:

ஒரு செயல் நடைபெறுவதற்கு எப்படிப்பட்ட காரணங்களாக மேற்கூறப்பட்ட ஐந்தும் விளங்குகின்றன என பகவான் இங்கு கூறுகிறார்


=> மூவகை கர்மங்கள்:

சொற்பிறப்பியலின் படிநரஎனும் சொல்லுக்கு மரணிக்காதவன் என்று பொருள் ரீயதே இதி நர:. கர்மங்களைச் செய்வதன் மூலம், தன்னை நிலைநிறுத்திக் கொள்வதால் இங்கு அச்சொல் மனிதனைக் குறிக்கிறது. இந்த மனிதன் பல்வேறு வகையான செயல்களை மேற்கொள்கிறான், கர்ம. செயல்புரிய அவன் பயன்படுத்தப்படும் கருவிகளின் அடிப்படையில் அது மூன்று குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றது. உடலினால் செய்யப்படுகிற செயல், காயிக, பேச்சு உள்ளிட்ட வாக்கினால் செய்யப்படுகிற செயல், வாசிக, மற்றும் மனதினால் செய்யப்படுகிற கர்மம், மானஸ.


=> இருவகை செயல்கள்

இந்த மூவிதமான கர்மங்களும் மேலும் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. தர்மத்திற்கு உட்பட்டு செய்யப்படுகிற நியாயமான செயல்கள்ந்யாய்யம் கர்மஎன்றும், அதர்மமான முறையில் செய்யப்படுகிற அநியாயமான செயல்கள்விபரீதம் கர்மஎன்றும் அழைக்கப்படுகிறது

வெவ்வேறு பாகங்கள் பூட்டப்பட்ட மோட்டார் வண்டியைக் கொலை, திருட்டு போன்ற செயல்களுக்கு ஒரு சாரார் உபயோகிக்கலாம். ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டிருப்பவர்களை மீட்டெடுப்பதற்காக இன்னொரு சாரார் அவ்வண்டியைச் செலுத்தலாம். நோயாளிக்கு விரைவில் சிகிச்சை செய்வதற்கு அது உதவுகிறது. களியாட்டத்தில் வீண்பொழுது போக்குவதற்கும் அது பயன்படுகிறது. வெவ்வேறு இடங்களுக்குச் சென்று அறிவை பெருக்குவதற்கும் அதே வாகனம் உதவுகிறது. கிட்டதட்ட அதே முறையில் உடலை நாம் பயன்படுத்துகிறோம்.

உடல், வாக்கு மற்றும் மனம் எனும் மூன்று விதமான கரணங்கள் வழியாகவும் நியாயமான கர்மம் மற்றும் விபரீதமான கர்மம் ஆகிய இந்த இருவகை செயல்களைச் செய்யலாம். உதாரணமாக, வாய்மொழியாக ஒருவனை திட்டினாலோ, அல்லது நிந்தனை செய்தாலோ அது விபரீதம் கர்ம. அதே நேரத்தில் சரியான சொற்களை உபயோகிப்பதன் மூலம் வார்த்தைகளை முறையாகப் பயன்படுத்துதல் நியாயம் கர்ம. திருடுதல், அடித்தல் போன்று பிறரை காயப்படுத்தும் செயல்கள் உடல் ரீதியாக செய்யப்படுகிற விபரீதம் கர்ம. மற்றொரு நபரை பற்றி தவறாக நினைப்பதும்கூட மனதளவில் செய்கிற அநியாயமான செயல் ஆகும். சாஸ்திரத்தினால் அனுமதிக்கப்படும் கர்மங்கள் நியாயம் கர்ம என்றும், தடை செய்யப்பட்ட கர்மங்கள் விபரீதம் கர்ம என்றும் சங்கரர் கூறுகிறார். எந்தவகை கர்மமானாலும் அதற்கு இந்த ஐந்துமே காரணிகள் ஆகும்பஞ்ச ஏதே தஸ்ய ஹேதவ:.

இது ஏன் இங்கே சொல்லப்படுகிறது என்பதை பார்க்கும்போது, உண்மையில் கர்மத்தின் இயல்பை புரிந்துகொள்வது இதன் நோக்கமல்ல. மாறாக இச்செயல்களில் ஆத்மாவாகியநான்எதையும் செய்வதில்லை என்பதை உணர்த்துவதே இதன் நோக்கம்தாத்பர்ய. அதாவதுநான்எனும் மெய்யுணர்வானது எல்லா செயல்களிலிருந்தும் விடுபட்டுள்ளது. கர்மத்தின் இயல்பு வரையறுக்கப்படும்போது, ​​ஆத்மா எந்த வகையிலும் அங்கு சேர்க்கப்படவில்லை, ஏனெனில் அது எந்த செயலுக்கும் காரணமாகவோ அல்லது அங்கமாகவோ அல்லது செய்விப்பவனாகவோ இல்லை. அனைத்திற்கும் சாக்ஷியாக இருக்கின்ற சைத்தன்ய சொரூபம் இந்த ஆத்மா.

---------------------------------------------------------------------------------------------