வியாழன், 2 ஏப்ரல், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.12 - 18.13

||18.12|| ‘சந்யாசம்தலைப்பின் முடிவுரை

अनिष्टमिष्टं मिश्रं त्रिविधं कर्मण: फलम्

भवत्यत्यागिनां प्रेत्य तु संन्यासिनां क्वचित् ।। १२ ।।  

அநிஷ்டமிஷ்டம் மிச்1ரம் த்ரிவித4ம் கர்மண: 2லம்

4வத்யத்யாகி3நாம் ப்ரேத்ய து ஸம்ந்யாஸிநாம் க்வசித் ।। 12 ।।


अत्यागिनां  அத்யாகி3நாம்  தியாகம் பண்ணாதவர்களுக்கு     प्रेत्य  ப்ரேத்ய  மரணத்துக்குப் பிறகு    अनिष्टं  அநிஷ்டம்  இஷ்டமில்லாதது     इष्टं  இஷ்டம்  இனியது    

मिश्रं   மிச்1ரம்   இரண்டும் கலந்தது என         त्रिविधं  த்ரிவித4ம்  மூன்று விதமாக   

कर्मणफलम्  கர்மண: 2லம்  கர்மத்தின் பயன்     भवति  4வதி  உண்டாகிறது     तु  து  ஆனால்        संन्यासिनां  ஸம்ந்யாஸிநாம்  தியாகிகளுக்கு     क्वचित्  க்வசித்  ஒருபொழுதும் இல்லை.      


தியாகிகள் அல்லாதார்க்கு மரணத்துக்குப் பிறகு இன்னாதது, இனியது, இவ்விரண்டும் கலந்தது என மூன்றுவிதமான வினைப்பயன் விளைகிறது; தியாகிகளுக்கோ ஒருபொழுதுமில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்களைத் தியாகிகளல்லாதோர் இறந்த பின்னர் எய்துகின்றனர். சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.


விளக்கம்:

சந்யாசிகளுக்கானப் பலன் எது என்பதை கூறி இந்த தலைப்பை பகவான் இங்கு முடிவுரை செய்கிறார்.


=> மூன்றுவிதமான வினைப்பயன்:

மூன்று விதமான கர்மபலன் சாத்தியமாகிறது:

(1) இன்னாதது: ‘அநிஷ்டம்எனில் விரும்பத்தகாதது என்று பொருள். அதாவது விரும்பாத பலன் விளைகிறது. நரகத்தை அடைதல், விலங்கு இனமாகவோ அல்லது மனித பிறப்பைக் காட்டிலும் கீழான சில உயிரின வடிவத்திலோ பிறப்பது அனிஷ்ட கர்மபலனாகிறது.

(2) இனியது: ‘இஷ்டம்எனில் விரும்பத்தக்கது. சொர்க்கப் பிராப்தியும் பித்ருலோக பிராப்தியும், அல்லது தேவன், கந்தர்வன், தேவதைகள், கடவுள் போன்ற மனிதனை விட உயர்ந்த வடிவத்தில் பிறப்பது இஷ்ட கர்மபலனாகும். தைத்திரீய உபநிஷத்தில், ஆனந்த மீமாம்சை என்கிற பகுதியில், இந்த வடிவங்களின் பட்டியல் ஏறுவரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றை விட சிறந்தது, ஏனெனில் அது நூறு மடங்கு அதிக மகிழ்ச்சியை அனுபவிக்கிறது என அங்கு கூறப்படுகிறது. அந்த வரிசையில் பிரம்மதேவர் மற்றும் பிரம்மலோகத்தில் இருப்பவர்கள் கடைசியாகக் குறிப்பிடப்படுகிறார்கள். இதன் அர்த்தம், சம்சாரத்திற்குள் அதுவே மேலான இடமாகக் கருதப்படுகிறது. அங்கு சென்றுவிட்டால் ஒருவனால் க்ரம-முக்தியை அடையமுடியும் என்பதால் அவன் மீண்டும் சம்சாரத்திற்குத் திரும்பாமல் போவதற்கான வாய்ப்பு உள்ளது.

(3) கலவையானது: ‘மிச்1ரம்எனில் கலந்தது என்று பொருள். பூவுலக பிராப்தியும், மனிதனாகப் பிறப்பதும் கலப்புக் கர்மத்தின் பயனாகும். இன்னாதது மற்றும் இனியது இரண்டும் சேர்ந்தது கலப்புக் கர்மம்; பாபம் மற்றும் புண்ணியம் இரண்டும் சமமாகக் கலந்தது இது. எனவேதான் மனிதவாழ்வு இன்பமும் துன்பமும் கலந்ததாக இருக்கிறது. உயர்ந்த இடத்தில் இருப்பவன் எப்போதும் இன்பத்தை அனுபவிப்பதும் இல்லை; ஏழ்மையில் உழல்பவன் எப்போதும் துன்பத்தை அனுபவிப்பதும் இல்லை.    

இவ்வாறாக, மூன்று விதமான வினைப்பயன் சாத்தியமாகிறதுத்ரிவித4ம். உண்மையில் ஒரு கர்மத்திற்கு பாபம் மற்றும் புண்ணியம் என இரு முடிவுகள் மட்டுமே இருந்தாலும், பிறப்புகளின் அடிப்படையில் ஒருவனுக்கு மேற்கூறிய இந்த மூன்று விளைவுகளில் ஒன்று வந்தமைய வாய்ப்புள்ளது. இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று எப்படிப்பட்டவர்களுக்கு அமைய இருக்கிறது?

=> கர்மபலனைப் பெறுபவர்கள் யார்?

தியாகம் செய்யாதவர்கள் இவை மூன்றில் ஒன்றை அடைகிறார்கள்அத்யாகி3நாம். அதாவது அக்ஞானிகள் மரணத்திற்கு பிறகு(ப்ரேத்ய), தாங்கள் இருக்கின்ற உடலை விட்டு வெளியேறி, இந்த மூன்று வகையான கர்மபலன்களில் ஒன்றை அனுபவிக்க வேறு உடல் எடுக்க வேண்டியதாக ஆகிறது. கர்ம-பல-தியாகம் செய்யாமல் அதில் பற்று வைக்கிறவர்களுக்குப் இத்தகைய பிறவிகள் மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றன. அவைகளின் வாயிலாக சுக துக்கங்களுக்கு அவர்கள் ஆளாக வேண்டும். ஆனால் கர்மபலனில் பற்று வைக்காத தியாகிகளுக்கு, துறவிகளுக்கு இது நிகழ்வதில்லை. தன்னை அகர்த்தாவாக புரிந்துகொண்டு ஸர்வ-கர்ம-சந்யாசியாக மாறிய இந்த தியாகிகளுக்கு எந்த கர்மபலனும் இல்லை

கர்ம-பலன் எவ்வாறு உருவாகிறது என்பது குறித்து சங்கரர் இந்த இடத்தில் ஒரு குறிப்பைத் தருகிறார். கர்ம-பலனானது செயலிலிருந்தும், மற்றும் செயல் செய்பவனான கர்த்தா, செயல்படும் பொருள்(கர்ம), செயல் செய்யப் பயன்படுத்தப்படும் கருவி(கரணம்) உள்ளிட்ட கர்மம் செய்வதற்கு தேவையான பல காரணிகளிலிருந்து உருவாகின்றது. இவைகளனைத்தும் அறியாமையிலிருந்து பிறக்கிறது. அந்த அறியாமையே அனைத்து செயலுக்கும் வேராக இருப்பது ஆகும். ஆகையினால் இயல்பாகவே செயலின் விளைவான கர்மபலனும் அறியாமையினாலேயே அமைக்கப்படுகிறது. சங்கரர் இதை மாயாஜாலத்தைப் போன்றது எனக் கூறுகிறார், ஏனெனில் அங்கு அது உண்மையில் இல்லை, ஆனால் இருப்பதைப் போன்ற ஜாலத்தை உருவாக்குகிறது. அதுபோலவே இந்த கர்மபலனும் உள்ளார்ந்த சுயமாகவுள்ள பிரத்யகாத்மாவை பிணைப்பதைப் போல காட்சியளிக்கிறது அவ்வளவே. எளிதில் அழுகும் தன்மை கொண்டதால் பழங்கள்2என்ற சொல்லின் மூலம் குறிக்கப்படுகிறது. அதுபோலவே விரைவில் அழிந்துவிடும் இயல்புடையதால் கர்மத்தின் விளைவும்2என அழைக்கப்படுகிறது


=> யார் கர்மபலனைப் பெறுவதில்லை?

உண்மையான சந்யாசிகள் கர்மபலத்தைப் பெறுவதில்லைஸம்ந்யாஸிநாம் க்வசித். ஆனால் ஒரு கர்ம-பல-தியாகி இன்னும் தன்னை ஒரு கர்த்தாவாக நினைப்பதால் அவனுக்கு கர்மபலம் இருக்கிறது. இருந்தாலும் மோக்ஷத்தை குறித்த தனது பயணத்தை அவன் தொடங்கிவிட்டதால், சுலோகம் 6.40-ல் சொல்லப்பட்டதை போல அவன் ஒருகல்யாணக்ருத்’, அதாவது மேலான செயலை செய்தவன் என்பதால், அடுத்த வாழ்க்கையில் அவன் அந்த பயணத்தின் நூலை, விட்ட இடத்திலிருந்து எடுத்துக் கொண்டு தொடர்கிறான். கர்மயோகியானவன் ஒரு முமுக்ஷு என்பதால் அவனுக்கு பின் செல்லுதல் கிடையாது. இந்த வாழ்க்கையில் இல்லையென்றாலும் பின்னர் அவன் அறிபவனாக ஆவான்

தியாகியானவன் ஸர்வ-கர்ம-சந்யாசியாக மாற வேண்டும் என்பதை குறிக்கும் விதமாக இந்த சுலோகத்தில், தியாகி என்கிற சொல்லிற்கு பதிலாக சந்யாசி எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சங்கரர், உண்மையில் சந்யாசியாக இல்லாத, ஆனால் கர்மயோகியாக இருக்கின்ற ஒரு அபரமார்த்த-சந்யாசிக்கும், தன்னை செயல் செய்கிற கர்த்தாவாக எடுத்துக் கொள்ளாத ஸர்வ-கர்ம-சந்யாசியான பரமார்த்த-சந்யாசிக்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக் காட்டுகிறார். இருமையற்ற ஆத்ம-அறிவில் அவனது அர்பணிப்பு இருப்பதால், அவனுக்கு கர்மபலன் இல்லை. ஆத்மாவைப் பற்றிய தெளிவான பார்வை அவனது அனைத்து சம்சாரத்தையும் முற்றிலுமாக நீக்குகிறது. எனவே அவனுக்கு பிரபஞ்ச சம்பந்தமான இன்பமுமில்லை; துன்பமுமில்லை. பிறப்பும் இறப்பும் உண்டாவதில்லை. அவன் முக்தியை அடைகிறான்.   


=> நான்கு வகையான கதி:

இறப்பிற்கு பின்னர் மனிதன் அடைகின்ற கதியானது, ஒரு கோணத்தில் நான்கு வகையாகப் பேசப்படுகிறது.

(1) ஊர்த்4 3தி - சொர்க்கம் முதலிய மேலான கதி.

(2) மத்4யம 3தி - மனித லோகம்.

(3) அதோ4 3தி - நரகம், விலங்கு பிறப்பு முதலியவை.

(4) அக3தி - கதியில்லை. ஞான நிஷ்டை அடைந்தவர்களுக்கு மரணத்திற்கு பிறகு பிறப்பில்லை, ஆகவே அவர்களுக்கு கதி என ஒன்று இல்லை.

தூங்கி விழிப்பது போன்றது மரணம். தூங்குகிற மனிதன் அதே சரீரத்தில் எழுகிறான். மரணித்தவன் புதிய சரீரத்தில் புதிய இடத்தில் எழுகிறான். உறங்கப்போகும்போது கெட்டவனாயிருந்தவன் விழித்தெழும்போதும் அங்ஙனமே விழிக்கிறான். உறங்கச் செல்கிற நல்லவன், விழிக்கும்போது நல்லவனாய் விழித்தெழுகிறான். இங்கு இந்த உலகத்தில் இருக்கும்போதே நரகத்தில் இடர்படுபவன் உண்டு; விலங்கு போன்று வாழ்பவன் உண்டு. சொர்க்க வாழ்க்கையை இங்கேயே காண்பவன் உண்டு. இவ்விரண்டுக்கும் இடையே உள்ள மனித நிலையில் இருப்பவனும் உண்டு. இதே அமைப்பு சரீரத்தை மாற்றும்பொழுதும் தொடர்ந்து வருகிறது. ஆக, இயல்புக்கு ஏற்ற உடல் அமைப்பு உண்டாகிறது

எனவே கர்மத்துக்கு தன்னை கர்த்தாவென்று நினைக்கிறவனுக்கு கர்ம பலன் உண்டாகிறது. அவன் சுக துக்கங்களுக்கு ஆளாகிறான். உண்மையில் மனிதன் கர்மத்துக்கு கர்த்தாவா? இக்கேள்விக்கான விடை அடுத்த சுலோகத்தில் வருகிறது

---------------------------------------------------------------------------------------------

||18.13|| எது கர்மத்திற்கு காரணங்களாக இருக்கின்றது?

पञ्चैतानि महाबाहो कारणानि निबोध मे

साङ्ख्ये कृतान्ते प्रोक्तानि सिद्धये सर्वकर्मणाम् ।। १३ ।।

பஞ்சைதாநி மஹாபா3ஹோ காரணாநி நிபோ34 மே

ஸாங்க்2யே க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்34யே ஸர்வகர்மணாம் ।। 13 ।।


महाबाहो  மஹாபா3ஹோ  பெருந்தோளுடையவனே    

साङ्ख्ये कृतान्ते  ஸாங்க்2யே க்ருதாந்தே  கர்ம காண்டத்தின் முடிவில் காட்டப்படும் சாங்க்ய சாஸ்திரத்தில்    सर्वकर्मणाम्  ஸர்வகர்மணாம்  எல்லா கர்மங்களினுடைய

सिद्धये  ஸித்34யே  தோற்றத்திற்கு       प्रोक्तानि  ப்ரோக்தாநி  பகரப்பட்டுள்ள     

एतानि  पञ्च कारणानि  ஏதாநி பஞ்ச காரணாநி   இந்த ஐந்து காரணங்களையும்     

मे  மே  என்னிடமிருந்து      निबोध  நிபோ34  அறிந்துகொள்.


பெருந்தோளாய், கர்ம காண்டத்தின் முடிவில் காட்டப்படும் சாங்க்ய சாஸ்திரத்தில் அனைத்து கர்மங்களின் சித்திக்கென்று பகரப்பட்டுள்ள இந்த ஐந்து காரணங்களையும் என்னிடம் அறிந்துகொள்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்குரிய காரணங்கள் சாங்கிய சாஸ்திரத்தில் ஐந்தாகக் கூறப்பட்டன. அவற்றை என்னிடம் கேட்டுணர், பெருந்தோளாய்!


விளக்கம்:

சுலோகம் பதிமூன்று முதல் பதினேழு வரை ஞானயோகத்தின் சாரமான ஆத்ம-அனாத்ம விவேகம் சொல்லப்படுகிறது


=> கர்மத்தின் ஹேதுக்கள்:

பகவான் அர்ஜுனனை தோள் வலிவுடையவனே என அழைத்து, ‘தயவு செய்து புரிந்துகொள்நிபோ34எனும் விதமாக அர்ஜுனனின் கவனத்தை ஈர்க்கிறார். இது கவன ஈர்ப்புக்கு என்பதாக மட்டுமல்லாமல், உபதேசத்தின் உட்கிடைப்பொருள் இப்போது சற்று மாறுகிறது என்பதையும் குறிக்கிறது. கண்டிப்பாக இது போதனையின் கருப்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை, எனினும் ஓட்டத்தில் ஒரு சிறு திருப்பமாக கர்மத்தின் ஹேது குறித்து கொஞ்சம் விளக்கம் அளிக்கப்படுகிறது

வேதத்தில் சொல்லப்படுகிற வைதிக கர்மமோ அல்லது உலகியல் ரீதியான லெளகிக கர்மமோ எதுவாயினும், அனைத்து வகையான செயல்களும் நிறைவேறுவதற்குரிய, ஸர்வகர்மணாம் ஸித்34யே, காரணங்கள் இவைகள் ஐந்து எனக் கூறப்பட்டுள்ளது என்கிறார் பகவான். ஒவ்வொரு செயலும் உற்பத்தியாக இவை ஐந்தும் ஹேதுக்கள் அதாவது காரணிகளாகின்றன. எவை ஐந்தும் என்பதை அடுத்த சுலோகத்தில் பகவான் விளக்க இருக்கிறார். மேலும் இங்கு அவர், ‘சொல்லப்பட்டுள்ளது - ப்ரோக்தாநிஎனக் கூறுகிறார். எனில், எங்கு சொல்லப்பட்டுள்ளது? வேதாந்த சாஸ்திரத்தில்ஸாங்க்2யே க்ருதாந்தே


=> அனைத்து கர்மங்களின் முடிவு:

இங்குஸாங்க்2என்பது கபில முனியின் சாங்கிய மதத்தை குறிக்கவில்லை. இது வேதாந்த சாஸ்திரத்தைக் குறிக்கிறதுஸாங்க்2யம் = ஸம்யக் க்2யாயதேமிகத் தெளிவாக விளக்கப்படுகின்றது. அதாவது, எதில் ஆத்ம தத்துவம் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதோ அது சாங்க்யம் ஆகும். கீதையின் இரண்டாம் அத்தியாயத்தின் தலைப்பானஸாங்க்2 யோக3ம்என்பது ஆத்ம தத்துவத்தை விளக்கும் அத்தியாயம் எனப் பொருள்படுகிறது. சாஸ்திரத்தை குறிக்கின்ற இந்த சாங்க்யம் எனும் சொல் இங்கு ஒரு பெயரடையுடன் குறிப்பிடப்படுகிறதுக்ருதாந்தே

   (1) எது செய்யப்படுகிறதோக்ருத’, அது கர்ம என்று அழைக்கப்படும். அதன் முடிவுஅந்தம்என்பதுக்ருதாந்தம்ஆகும். கர்மத்தின் இறுதியில், கர்மத்தைப் பேசி முடித்த பிறகு, அதாவது வேதத்தில் கர்ம காண்டத்தின் முடிவில் தொடங்குகிற ஞான காண்டத்தை இது குறிக்கிறது.  

   (2) ‘க்ருதாந்தம்எனில் ஆத்மஞானம் உபதேசிக்கும் பகுதி. எந்த ஞானத்தினால் கர்மம் அனைத்தும் முடிவை அடைகிறதோ, கர்ம ஸமாப்தி. அல்லது, கர்மம் உச்சத்தை அடையும் இடம்க்ருதாந்த’. அனைத்து கர்மங்களும் ஆத்மா அகர்த்தா எனும் ஞானத்தில் முடிவை அடைகின்றன. இனியொரு விதத்தில் சொல்வதானால், அனைத்து செயல்களும் அந்த-கரண-சுத்தியை அளிப்பதன் மூலமாக ஒடுக்கத்தை அடைகின்றன

அனைத்து கர்மங்களும் எவ்விதம் அறிவில் ஒடுக்கத்தை அடைகின்றன? இதற்கு சுலோகம் 2.46 - சங்கரர் மேற்கோளாகக் காட்டுகிறார். ‘யாவாநர்த2 உத3பானே ஸர்வத: ஸம்ப்லுதோத3கே

தாவான் ஸர்வேஷு வேதே3ஷு ப்3ராஹ்மணஸ்ய விஜாநத:வெள்ளத்தால் எங்கும் தண்ணீர் இருக்கும்போது ஒரு கிணறு ஒருவனுக்கு எவ்வளவு பயன்படுகிறதோ, அதே அளவுக்கு ஞானத்தையுடைய ப்ரம்ம நிஷ்டனுக்கு வேதங்கள் பயன்படுகின்றன. வெள்ளத்தினால் பரவிக் கிடக்கின்ற தண்ணீருக்கு அடியில் கிணறு இருக்கும்போது, ​​அதனால் என்ன பயன்? மூன்று வேதங்களிலும் உள்ள கர்மங்களும் ஞானிக்கு அப்படிபட்ட பயனையே அளிக்கிறது. ஏதேனுமொரு விதத்தில் தனக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்பதற்காகவே ஒருவன் எந்தவொரு கர்மத்தையும் செய்கிறான். ஆனால் உண்மையில் மகிழ்ச்சி என்பது தனது சொந்த இயல்பாகவே இருக்கிறது என்பதை ஞானி கண்டுகொண்டுவிட்டான். இனி, மேலும் பெற என எதுவும் இல்லை. செய்ய வேண்டிய அனைத்தும் அவனால் செய்யப்பட்டுவிட்டன, ஏனென்றால் ஆத்ம-ஞானம் பிறக்கும்போது அனைத்தும் அடையப்பட்டுவிடுவதால், எல்லா கர்மங்களும் அவனது ஞானத்தில் ஒடுக்கத்தை அடைகின்றன. எனவே, அனைத்து கர்மங்களின் முடிவாக இருப்பதால் வேதாந்தம்க்ருதாந்தம்என்று அழைக்கப்படுகிறது.

ஒரு செயல் செய்வதற்கும் அதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் தேவையானதென ஐந்து காரணிகள் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. இந்த காரணிகளிலிருந்து மட்டுமே கர்மங்கள் வெளிப்படுகின்றன என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் எல்லா செயல்களிலும் நேரடியாகத் தொடர்புடைய காரணிகள் எவை என்பது அறியப்படும்போது, ஆத்மா அகர்த்தாவாக தனித்து நிற்கும். ஆத்மா அவற்றில் ஒன்று அல்ல, அவைகள் அனைத்திலிருந்தும் அது சுயாதீனமானது என்பதை குறிப்பிடுவதற்காக மட்டுமே, கர்மத்திற்கானக் காரணிகள் குறித்து பகவான் பேசுகிறார். இனி அந்த ஐந்து காரணங்கள் அல்லது காரணிகள் எவையெவை என்பதை அடுத்த சுலோகத்தில் விளக்குகிறார்

---------------------------------------------------------------------------------------------