வெள்ளி, 27 மார்ச், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.10 - 18.11

||18.10|| சாத்விக சந்யாசத்தின் பலன்:

न द्वेष्ट्यकुशलं कर्म कुशले नानुषज्जते ।

त्यागी सत्त्वसमाविष्टो मेधावी छिन्नसंशय: ।। १० ।।

ந த்3வேஷ்ட்யகுச1லம் கர்ம குச1லே நாநுஷஜ்ஜதே ।

த்யாகீ3 ஸ்த்த்வஸமாவிஷ்டோ மேதா4வீ சி2ந்நஸம்ச1ய: ।। 10 ।।


सत्त्व समाविष्ट:  ஸ்த்த்வ ஸமாவிஷ்ட:  சத்வம் மேலோங்கப் பெற்றவனும்     

मेधावी  மேதா4வீ  பேரறிஞனும்     छिन्न संशय:  சி2ந்ந ஸம்ச1ய:  சந்தேகத்தை அகற்றியவனும் ஆகிய   त्यागी  த்யாகீ3  தியாகியானவன்      अकुशलं कर्म  அகுச1லம் கர்ம  துன்பவினையை      

न द्वेष्टि  ந த்3வேஷ்டி  இகழான்      कुशले  குச1லே  இன்ப வினையில்     

न अनुषज्जते  ந அநுஷஜ்ஜதே  விருப்பம் வைப்பதில்லை.


சத்வம் நிறைந்தவனும், பேரறிஞனும், ஐயத்தை அகற்றியவனும் ஆகிய தியாகியானவன் துன்ப வினையை வெறுப்பதில்லை, இன்ப வினையை விரும்புவதில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

சத்வ குணத்திலிசைந்து, மேதாவியாய் ஐயங்களையறுத்த தியாகி இன்பமுற்ற செய்கையைப் பகைப்பதில்லை; இன்பமுடைய செய்கையில் நசையுறுவதில்லை.


விளக்கம்:

சாத்விக-தியாகி பற்றற்றவன் என்பதை எத்தகைய மனப்பான்மை விளக்குகிறது என பகவான் இந்த சுலோகத்தில் கூறுகிறார். அல்லது, இதை சாத்விக தியாகத்தின் பலன் என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.


=> ஞான நிஷ்டைக்கு வழிவகுக்கும் சாத்விக-தியாகம்:

முன் சுலோகத்தில் சொல்லப்பட்டது போல, சாத்விக தியாகம் என்பது கர்ம-பல-தியாகம் மற்றும் அஹங்கார-தியாகத்தைக் குறிக்கிறது. முற்றிலும் ஈஷ்வரனிடம் சரணடைந்தவனாக, எந்தவொரு குறிப்பிட்ட பலனிற்காகவும் அல்லாமல் அவன் தனது நித்ய கடமைகளைச் செய்கிறான். அப்போது அவன் சத்வம் மேலோங்கப் பெற்றவனாக, சத்வ குணத்தில் பொருந்தியவனாக ஆகிறான் — ஸ்த்த்வ ஸமாவிஷ்ட:. அதாவது, ராஜஸ தாமஸத்தின் ஆதிக்கத்திலிருந்து அவனது மனம் விலகுகிறது. தெளிவான ஆத்ம-அனாத்ம பகுத்தறிவுக்கு காரணமாக இருக்கின்ற சத்வத்தினால் மனமானது நிரப்பப்படும்போது அவன் ‘ஸ்த்த்வ ஸமாவிஷ்ட:’ ஆகிறான் என்கிறார் சங்கரர். ஏனெனில் அவன் ஒரு தியாகி மற்றும் கர்மயோகி என்பதால், சத்வத்துடன் கூடியவனாக, அந்த-கரண-தூய்மையைக் கொண்டவனாக அவனால் ஆத்மாவிற்கும் அனாத்மாவிற்கும் இடையில் வேறுபடுத்திப் பார்க்க முடிகிறது. இங்கு ‘த்யாகீ3’ என்பது சாத்விக தியாகத்தை செய்தவனை, விடப்பட வேண்டியதை விட்டு, நாடப்பட வேண்டியதை நாடியவனைக் குறிக்கிறது. இங்கு ஒரு வரிசைமுறை உள்ளது. 

முதலில் அவன் கர்மயோக வாழ்க்கையை வாழ்கிறான். அதன் காரணமாக அவன் சத்வ-குணத்தை அடைகிறான். பின்னர் அவனுக்கு ஆத்ம-அனாத்ம விவேகத்தை செய்யும் திறன் வந்தமைகிறது. இந்த பகுத்தறியும் விவேகத்துடன் கூடியவன் ‘மேதா4வீ’ என்றழைக்கப்படுகிறான். விஷயத்தை மனதில் தங்க வைக்கும் சக்தி கொண்டவன் மேதாவி. இங்கு அது ஆத்ம தத்துவத்தை அறிந்தவனைக் குறிக்கிறது. இந்த அறிவை(மேதா4) உடையவன் ‘மேதா4வீ’ எனப்படுகிறான்.

     கர்ம-பல2-த்யாகீ3 —> ஸ்த்த்வ ஸமாவிஷ்ட —> மேதா4வீ.


=> சந்தேகம் தெளிந்தவன்:

இவ்விதம் ஆத்ம-அறிவைப் பெற்றவுடன், அவன் ‘சி2ந்ந ஸம்ச1’ ஆகிறான். அதாவது, சந்தேகத்தை அகற்றியவன் ஆகிறான். அனைத்து சந்தேகங்களும் நீங்கும்போது அறிவில் உறுதியும் தெளிவும் அடையப்பெறுகிறான். பொதுவாக பலவகையான சந்தேகங்கள் உள்ளன. அதில் சிலவற்றை இங்கு காணலாம்.

    * எது மோக்ஷம்? எது மோக்ஷ சாதனம்?

   * ஆத்ம சொரூபம் என்ன? அது காலத்திற்கு உட்பட்டதா? காலத்தை கடந்ததா? — நித்ய அல்லது அநித்ய?

   * ஆத்மா என்பது தான் ப்ரம்மமா? எனில் அது உண்மையானதா? — ஸத்ய அல்லது அஸத்ய?

   * அதன் இயல்பு பூரணமானதா? அல்லது துக்கத்துடன் கூடியதா? — ஆனந்த அல்லது து3:க2?

   * அது செயலைச் செய்பவனாகவும் பலனை அனுபவிப்பவனாகவும் இருக்கிறதா? அல்லது அகர்தா அபோ4க்தா-வாக இருக்கிறதா?

   * ஈஷ்வரன் என்னிலிருந்து வேறானவரா?

ஆத்ம-அனாத்ம விசாரத்தின் மூலமாகவும் ஆத்மாவைப் பற்றிய சரியான அறிவை அடைவதன் மூலமாகவும் இந்த அனைத்துவிதமான சந்தேகங்களும் வெட்டப்படுகிறது, நீக்கப்படுகிறது — சி2ந்ந

அறியாமையின் காரணமாக மட்டுமே சந்தேகம் பிறக்கிறது. எனவே ஒருவன் மேதாவியாக ஆனவுடன், அதாவது சரியான அறிவை அடைந்தவுடன், இயற்கையாகவே அவனது அனைத்து சந்தேகங்களும் நீங்கிவிடுகிறது, ஏனெனில் சந்தேகமும் அறிவும் ஒன்றாக இருக்க முடியாது. இது முண்டகோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது — ‘பி4த்3யதே ஹ்ருத3யக்3ரந்தி2: சித்3யந்தே ஸர்வ ஸம்ச1யா:’, ஹ்ருதயத்திலுள்ள முடிச்சு அவிழ்க்கப்படுகிறது, எல்லா சந்தேகங்களும் நீக்கப்படுகிறது. இங்கு ‘ஹ்ருதய முடிச்சு’ என்பது அறியாமையை குறிப்பதால், அதிலிருந்து உண்டான விருப்பு-வெறுப்புகள், அதன் காரணமாக செய்யப்படுகிற செயல்கள், அச்செயலின் பலன்கள் என அனைத்தையும்  அது உள்ளடக்குகிறது. இந்த முடிச்சு அவிழ்க்கப்படுகிறது எனில் அவன் அனைத்து சந்தேகங்களும் நீங்கியவனாக ஆகிறான். இது எப்போது நடக்கிறது? இந்த முழு படைப்பிற்கும் காரணமும் விளைவுமாக இருக்கின்ற ப்ரம்மம் ‘நானாகவே இருக்கின்றேன்’ என்கிற அறிவு உண்டாகும்போது இது நடக்கிறது. மோக்ஷத்திற்கான வழிமுறை என்பது ஆத்மாவைப் பற்றிய தெளிவான அறிவைப் பெறுவதைத் தவிர வேறில்லை என்று சங்கரர் இங்கே கூறுகிறார்.


=> செயலில் அவனது மனப்பான்மை எத்தகையது?

அத்தகைய மேதாவியானவன், பந்தப்படுத்தும் கர்மத்தை வெறுப்பதில்லை — அகுச1லம் கர்ம ந த்3வேஷ்டி, சுகத்தை கொடுக்கும் கர்மத்தில் ஒட்டிக் கொள்வதில்லை — குச1லே ந அநுஷஜ்ஜதே. ‘அகுச1லம் கர்ம’ என்பது துன்பவினையை, அல்லது பந்தப்படுத்தும் கர்மத்தை, காமிய கர்மத்தைக் குறிக்கிறது. தனக்கு விருப்பமில்லாத கர்மம் என்று ஒன்றை வெறுப்பதுவுமில்லை, மேலும் பிடித்தமான அல்லது இன்பத்தை கொடுக்கின்ற கர்மம் என்று அதை விரும்புவதுவுமில்லை. அவன் செய்யப்பட வேண்டியதை விருப்பு-வெறுப்பின்றி செய்கிறான். அதேபோல, மற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட பலனை எதிர்ப்பார்த்து செய்கிற காமிய-கர்மங்களை, அது மோக்ஷத்திற்கு உதவாது; ஏன் அச்செயலை செய்கிறீர்கள் என்பதாகக் கூறி அதை அவன் எதிர்ப்பது கிடையாது. எந்தவொரு கர்மமும் அவனுக்கு கீழானது கிடையாது. மங்களமான செயல் என்பதால் அதை மேலானதாக எண்ணி அதில் விருப்பம் கொள்வதும் கிடையாது. 

ஆத்ம சொரூபத்தையும் பிரக்ருதி சொரூபத்தையும் உள்ளபடி உணர்ந்தவன் மேதாவி, பேரறிஞன், ஞானி. அவனுக்கு கர்மமும் அகர்மமும் நன்கு விளங்குகின்றன. அகர்மமாகிய ஆத்ம சொரூபம் நிலைக்கண்ணாடியைப் போன்றது ஆகும். பிம்பங்களைக் காட்டும்பொழுதும் காட்டாமல் இருக்கும்பொழுதும் கண்ணாடி தன்மயமாயிருக்கிறது. கர்மம் நடைபெறும் பொழுதும் நடைபெறாத பொழுதும் ஆத்ம சைதன்யம் தன்மயமாக இருக்கிறது. அழகான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குப் புதிய பெருமையொன்றும் வருவதில்லை. கோணலானதும் அழுக்குப்படிந்ததுமான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குக் குறையொன்றும் உண்டாவதில்லை. பொருள்களை உள்ளபடி பிரதிபிம்பிப்பதோடு மட்டுமல்லாமல் அது எப்போதும் தன்மயமாகவே இருக்கிறது. அதுபோலவே ஆத்ம சாக்ஷியின் முன்னிலையில் நிகழும் பிரக்ருதியின் செயல் எதுவானாலும் தன் எதார்த்த சொரூபத்தைப் பற்றி மேதாவிக்கு சந்தேகம் எதுவும் உண்டாவதில்லை. எனவே அவைகளை வெறுக்காமலும் விரும்பாமலும் மனதை நடுநிலையில் நிறுத்தித் தனது கடமையை அவன் முறையாகச் செய்கின்றான். உண்டு, உடுத்துக் களித்திருப்பது பாமரர்களுக்கு இன்பமான செயல்களாகின்றன. ஆனால் சத்வம் நிறைந்த விவேகி அவைகளில் மகிழ்வுறுவது கிடையாது. இன்ப துன்ப வினைகளைச் சமமாக அவன் நினைக்கின்றான். அதுவே அவனது பற்றற்ற நிலைக்கு அறிகுறியாகும். 

பற்றற்று கர்மம் செய்வதற்கு பதிலாக ஏன் கர்மத்தை நாம் அடியோடு விட்டுவிடக் கூடாது? என்ற கேள்வி எழலாம். அதற்கான பதிலாக அடுத்த சுலோகம் வருகிறது. 

---------------------------------------------------------------------------------------------

||18.11|| அக்ஞானிகளுக்கு கர்ம சந்யாசம் இயலாது:

न हि देहभृता शक्यं त्यक्तुं कर्माण्यशेषत: ।

यस्तु कर्मफलत्यागी स त्यागीत्यभिधीयते ।। ११ ।। 

ந ஹி தே3ஹப்4ருதா ச1க்யம் த்யக்தும் கர்மாண்யசே1ஷத: ।

யஸ்து கர்மப2லத்யாகீ3 ஸ த்யாகீ3த்யபி4தீ4யதே ।। 11 ।।


देहभृता  தே3ஹப்4ருதா  உடல் அபிமானமுடையவனால் (அக்ஞானியால்)    

अशेषत:  அசே1ஷத:  மிச்சமில்லாது     कर्माणि  கர்மாணி  கர்மங்களை    

त्यक्तुं  த்யக்தும்  தியாகம் செய்வது    न हि शक्यं  ந ஹி ச1க்யம்  சாத்தியமல்ல    तु  து  ஆனால்   

य: ய:  யார்      कर्मफल त्यागी  கர்மப2ல த்யாகீ3  வினைப் பலனைத் துறந்தவன்     स: ஸ:  அவன்      

त्यागी इति  த்யாகீ3 இதி  தியாகியென்று    अभिधीयते  அபி4தீ4யதே  இயம்பப்படுகிறான்.


உடல் அபிமானமுடையவனுக்கு கர்மங்களை அறவே விடுவது இயலாது. ஆனால் வினைப்பலனைத் துறந்தவன் எவனோ அவன் தியாகி எனப்படுகிறான். 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

(மேலும்) உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகி யெனப்படுவான்.


விளக்கம்:

அக்ஞானிகளால் கர்ம சந்யாசம் செய்ய முடியாது என பகவான் இங்கு கூறுகிறார்.


=> உடலில் பற்றுடையவன்:

தே3ஹப்4ருதா’ எனில் இந்த உடலை ஆத்மா என நினைப்பவன், தே3ஹாத்ம அபி4மாநிந:. ‘ப்4ருத்’ எனில் தாங்குபவன் என்று அர்த்தம். எனவே ‘தே3ஹப்4ருத்’ என்பது ஸ்தூல உடலை ‘நான்’ என அபிமானத்துடன் தாங்குபவனைக் குறிக்கிறது. அப்போது உடலின் தர்மம் அந்த நபரினுடைய தர்மமாகிறது. உடலிற்கு செயல் என்பது பிரதானமான ஒன்று. எனவே ‘உடல் நான்’ என அபிமானித்த ஒருவன், தன்னை ஒரு செயல் செய்பவனாக, கர்த்தாவாக எண்ணுகிறான். அறியாமையின் விளைவாக எடுக்கப்பட்ட ‘நான் செயல் செய்பவன்’ எனும் இந்த முடிவில் வேரூன்றியிருப்பவனால், அனைத்து கர்மங்களையும் முற்றிலுமாக கைவிட முடியாது — ந ச1க்யம் த்யக்தும் கர்மாணி அசே1ஷத:. அப்படி அவன் சந்யாசத்தை எடுத்துக் கொண்டாலும், சில கடமைகளைத் துறக்கலாமே தவிர, அப்போதும் அவன் தன்னை அனைத்து கர்மங்களையும் துறந்தவனாகவே இன்னும் கருதுவான். உண்மையில் கர்மங்களை கைவிடுவது யார்? கண்டிப்பாக ஸத்-சித்-ஆனந்த-ஆத்மா அல்ல, ஏனெனில் கர்மங்களை கைவிட அதற்கு ஒருபோதும் எந்த கர்மங்களும் இருந்ததில்லை. தன்னை ஒரு கர்த்தாவாக நினைப்பவனாலேயே ‘நான் கர்மங்களைத் துறந்துவிட்டேன்’ என்று சொல்லமுடியும். அத்தகையவனால் எல்லா கர்மங்களையும் ஒருபோதும் துறக்க முடியாது. ஆனால் விதிக்கப்பட்ட அனைத்து கடமைகளையும் செய்து கொண்டே அதன் பலனை அவனால் துறக்கமுடியும். அதுவே அவனுக்கு பொருத்தமான தியாகமாக ஆகிறது.

அதில் அவன் ‘நான் செய்கிறேன்’ எனும் தனது கர்த்ருத்துவத்தை தக்கவைத்துக் கொண்டு, அதே சமயம் பலனிற்காகவென விருப்பு-வெறுப்பின்படி அல்லாமல், ‘இது செய்யப்பட வேண்டும்’ என கடமையைச் செய்து தர்மப்படி வாழ்வதன்மூலம், தனது அன்றாட வாழ்க்கையை யோகமாக மாற்றுகிறான். இதில் கர்மம் நடைபெற்ற போதிலும், பலனில் ஆர்வம் இல்லாததால், விருப்பு-வெறுப்புகள் நடுநிலையாக்கப்படுகின்றன. இதனால் மன-அழுத்தம் நீங்கி, உற்சாகத்துடன் அவனால் இருக்க முடிகிறது. இப்பொழுது ஞானத்திற்கானப் பாதையில் முழு மனதுடன் ஈடுபடும் பான்மையை அவன் அடைகிறான். எனவேதான் ஸர்வ-கர்ம-சந்யாசதைக் காட்டிலும் இத்தகைய தியாகத்திற்கே அவன் தகுதியை அடைகிறான்.


=> ஸர்வ-கர்ம-சந்யாசம்:

ஸர்வ-கர்ம-சந்யாசம் என்பது வெறும் செயலைத் துறத்தல்(கர்ம-த்யாக3) மட்டும் அல்ல. அது, ‘நான் செய்கிறேன்’ என்கிற மனப்பான்மையை, ஆத்மாவில் இருக்கின்ற செய்பவன் எனும் ஏற்றிவைத்தலை துறத்தலாகும். ‘ஆத்மா செய்பவன் அல்ல’ என்கிற ஞானத்தினால் மட்டுமே அது நிகழ்கிறது. உண்மையை சொல்லப்போனால், அங்கு எந்த துறவும் இல்லை. ஏனெனில் அறியாமையின் காரணமாக அகர்தாவான ஆத்மாவின் மீது கர்த்தா எனும் தன்மை ஏற்றிவைக்கப்பட்டுள்ளது அவ்வளவே. ஞானத்தின் மூலம் அந்த ஏற்றிவைத்தல் நீக்கப்படும்போது, இயல்பாகவே ஆத்மா அகர்த்தாவாக ஆகிறது. செயல் நடக்கும்போதும் ஆத்மா எந்த செயலையும் செய்வதில்லை. இதுவே ஸர்வ-கர்ம-சந்யாசம் ஆகும். இது ஞானத்திலிருந்து வேறானது அல்ல. இந்த ஞானத்திற்காகத் தன்னை தயார்படுத்திக் கொள்ள ஒருவன் ஒரு கர்மயோகியாகவோ அல்லது ஒரு சந்யாசியாகவோ இருக்கலாம். இங்கே கர்மயோகி புகழப்படுகிறான், அவனது தியாகமே கர்ம-பல-தியாகம் ஆகும். ‘ஆத்மா அகர்த்தா’ என்கிற அறிவு இல்லாத அக்ஞானியால் அனைத்து கர்மங்களையும் விட்டுவிட்டு ஒரு பிக்ஷு வாழ்க்கையை வாழ முடியாது. அத்தகையவனுக்கு கர்மயோக வாழ்க்கையே அதாவது கர்ம-பல-தியாகமே சிறந்தது.

இது கர்மயோகத்தைப் புகழ்ந்து அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஒரு சுலோகம் ஆகும். கர்மத்தைச் செய்தபோதிலும் அவன் ஒரு தியாகி. கர்மத்தை முழுமையாகத் துறப்பது என்பது ஆத்மா அகர்த்தா என்ற தரிசனத்தை கொண்ட ஒருவனாலேயே முடியும். அத்தகையவனுக்கு இயற்கையாகவே, உடலுடன் எந்த அபிமானமும் இல்லை. எனவே அவன் உடலைத் தாங்குபவன் அல்ல, தே3ஹப்4ருத். அவன் மரணிக்கவில்லைதான் எனினும் ‘நான்’ என்பது உடல் என்ற குழப்பம் அவனிடத்து இல்லை. இதுவே உண்மையான சந்யாசம். ஆனால் உடலுடன் அடையாளம் இருக்கும்வரை, தே3ஹப்4ருத்-ஆக ஒருவன் இருக்கும்வரை அவன் சந்யாசியாக அல்ல, கர்ம-பல-தியாகியாகவே இருக்கவேண்டும் என கிருஷ்ணர் இந்த சுலோகத்தில் கூறுகிறார். 

ஒருகால் அந்த நபர் உடலுடனான அபிமானத்தை விட்டுவிட்டு ஸர்வ-கர்ம-சந்யாசத்திற்கான தகுதியை பெற முடிந்தால், அதன் விளைவு என்னவாக இருக்கும்? அதற்கான விடை அடுத்த சுலோகத்தில் வருகிறது. 

---------------------------------------------------------------------------------------------