வியாழன், 1 ஜனவரி, 2026

சிரத்தாத்ரய விபாக யோகம் 17.9 - 17.10

||17.9|| ராஜஸீக உணவு: 

कट्वम्ललवणात्युष्णतीक्ष्णरूक्षविदाहिन:

आहारा राजसस्येष्टा दु:खशोकामयप्रदा: ।। ।।

கட்வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதா3ஹிந:

ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து3:2சோ1காமயப்ரதா3: ।। 9 ।।


(अति) कटु अमल लवण  (அதி) கடு அமல லவண  அதிக கசப்பு, அதிக புளிப்பு, அதிக உவர்ப்பு     अति उष्ण  அதி உஷ்ண  அதிக உஷ்ணம்    तीक्ष्ण  தீக்ஷ்ண  அதிக காரம்     

रूक्ष  ரூக்ஷ  மிக உலர்ந்தவை    विदाहिन:  விதா3ஹிந:  எரிச்சலூட்டுபவை      

दु: शोक आमयप्रदा:  து3:2 சோ1 ஆமயப்ரதா3:  துக்கத்தையும் சோகத்தையும் நோயையும் உண்டுபண்ணுபவைகள்    आहारा:  ஆஹாரா:  ஆகாரங்கள்     

राजसस्य इष्टा:  ராஜஸஸ்ய இஷ்டா:ரஜோ குணமுடையவர்களுக்கு இஷ்டமானவைகள்


அதிக கசப்பு, அதிக புளிப்பு, அதிக உவர்ப்பு, அதிக உஷ்ணம், அதிக காரம், வறட்சி மற்றும் எரிச்சல் மிகுந்தவையும், துன்பம் சோகம் நோய் உண்டுபண்ணுபவைகள் ஆகிய உணவுகள் ரஜோ குணமுடையவர்களுக்கு விருப்பமானவைகள்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

கசப்பும், புளிப்பும், உப்பும், உறைப்பும் மிகுந்தன, அதிகச் சூடு கொண்டன, உலர்ந்தன, எரிச்சலுடையன -- இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர். இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைப்பன.


விளக்கம்:

ரஜோ குணமுடையவர்களின் விருப்பமான உணவுகள் எப்படிப்பட்டவைகளாக இருக்கின்றன என இந்த சுலோகத்தில் பகவான் பேசுகிறார்


=> ராஜஸ உணவு வகைகள்:

இந்த சுலோகத்தில்அதிகஎனும் அர்த்தத்தை கொடுக்கும்அதிஎனும் முன்னொட்டு, அந்த சேர்மத்தில் உள்ள அனைத்து சொற்களுடனும், கடு-அமல-லவண-உஷ்ண-தீக்ஷ்ண-ரூக்ஷ-விதா3ஹீ, சேர்க்கப்பட வேண்டும் என சங்கரர் கூறுகிறார். ஏனெனில் இவை அனைத்துமே நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியம்தான். ஆயுர்வேதத்திலும்கூட இச்சுவைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றை மிதமாகப் பயன்படுத்த வேண்டும். ரஜோ குணமுடையவர்களோ இவைகளின் மிகைக்குச் செல்கின்றனர். எனவே இவைகளை அளவுக்கு மீறி எடுத்துக் கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே இதன் கருத்து ஆகும். ‘அதி-கடுஎனில் மிகவும் கசப்பானது, ‘அதி-அமலஎனில் அளவுக்கு மீறிய புளிப்பு, பத்து பதினைந்து நாட்கள் பழமையான தயிர் போல. அதிக உப்புத்தன்மை(அதி-லவண) கொண்டது, நாவை சுட்டெரிக்குமளவு அதிக சூடாக இருப்பது(அதி-உஷ்ண) போன்ற உணவு வகைகள் ரஜோ குணமுடையவர்களுக்கு இஷ்டமானவைகளாக உள்ளன

மேலும் நாவை எரிக்காமலோ அல்லது கண்ணீர் சிந்தாமலோ உண்ண முடியாதளவு அதிகபடியான காரத்தை(அதி-தீக்ஷ்ண) உடைய உணவும், அதிக துவர்ப்புத் தன்மை(அதி-ரூக்ஷ) கொண்ட உணவும் அவர்களின் விருப்ப உணவுகளாகின்றன. நாவை மட்டுமல்ல வயிற்றிலேயே எரிச்சலையூட்டுகிற(விதா3ஹீ), வீக்கத்தை ஏற்படுத்துகிற உணவும் அவர்களின் பிரிய உணவுகளில் இடம் பிடிக்கின்றன

மேற்சொல்லப்பட்ட உணவு வகைகளுக்கு அவர்கள் அடிமையாகி விடுவதால், அவைகளை அதிகமாக உட்கொள்வதும், நேரத்தை கடைபிடிக்காமல் சாப்பிடுவதும் நிகழ்கிறது. இதனால் ஏற்படும் விளைவு என்ன?


=> ராஜஸ உணவின் விளைவு:

இந்த ராஜஸ உணவுகள் வலியை, துன்பத்தைத் தருகின்றனது3:2. அதாவது இவ்வகை உணவுகளை உட்கொள்ளும்போதே துக்கம் உண்டாகிறது. பின்னர் சாப்பிட்ட பிறகும் அது சோகத்தை(சோ1) கொடுக்கிறது. மேலும் நோயை உண்டு பண்ணுகின்றனஆமயப்ரதா3:

நாவில் சுரீலென்று பாய்கிறது; கண் சிவந்து கண்ணீர் சொட்டுகிறது; நாசியில் நீர் வடிகிறது; தலை சுழல்கிறது; வயிறு எரிகிறதுஇத்தகைய பாங்குடையவைகள் ரஜோகுணத்தை வளர்க்கும் உணவுகள். ஆயுளைக் குறைக்கும் தன்மை இவைகளிடத்தில் உண்டு

————————————————————————————————

||17.10|| தாமஸீக உணவு: 

यातयामं गतरसं पूति पर्युषितं यत्

उच्छिष्टमपि चामेध्यं भोजनं तामसप्रियम् ।। १० ।।

யாதயாமம் 3தரசம் பூதி பர்யுஷிதம் யத்

உச்சி2ஷ்டமபி சாமேத்4யம் போ4ஜநம் தாமஸப்ரியம் ।। 10 ।।


यत्  யத்  எது     यातयामं  யாதயாமம்  மூன்று மணி நேர பழையது அல்லது போதுமான அளவு சமைக்கப்படாதது     गतरसं  3தரசம்  சுவையிழந்த அல்லது அதிகம் சமைத்தது     

पूति  பூதி  துர்நாற்றமெடுத்த     पर्युषितं  பர்யுஷிதம்  ஒரு நாள் பழைய உணவு       

उच्छिष्टम्  உச்சி2ஷ்டம்  எச்சிலானது     अमेध्यं अपि  அமேத்4யம் அபி தூய்மையற்றதும்     भोजनं  போ4ஜநம்  உணவானது      तामस प्रियम्  தாமஸ ப்ரியம்  தமோ குணத்தாருக்குப் பிரியமானது.


யாமம் கழிந்த, சுவையற்ற, துர்நாற்றமெடுத்த, பழைய, எச்சிலான தூய்மையற்ற உணவு தமோ குணத்தாருக்குப் பிரியமானது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பழையது, சுவையற்றது, அருகியது, கெட்டுப் போனது, எச்சில், அசுத்தம் -- இத்தகைய உணவு தமோ குணமுடையோருக்குப் பிரியமானது.


விளக்கம்:

தமோ குணமுடையவர்களின் இஷ்ட உணவுகள் எவை என இந்த சுலோகத்தில் பகவான் எடுத்துரைக்கிறார்.


=> மந்தமாக அல்லது அதிகமாக சமைக்கப்பட்டவைகள்:

யாத-யாமஎனில் யாமம் கடந்த உணவைக் குறிக்கிறது. ஒரு யாமம் என்பது சுமார் நான்கு முஹுர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஒரு முஹுர்த்தம் என்பது நாற்பத்தெட்டு நிமிடங்கள் ஆகும். எனவே யாமம் என்பது மொத்தம் நூற்றி தொண்ணூற்றி ரெண்டு நிமிடங்கள், அதாவது சுமார் மூன்று மணி நேர பழைய உணவைக் குறிக்கிறது. குளிர்சாதன வசதி இல்லாதபோது, ​​வெப்பமான காலநிலை கொண்ட இந்தியா போன்ற நாடுகளில், சமைத்து மூன்று மணி நேரம் கழிந்த உணவானது பாக்டீரியாக்களால் நிறைந்திருக்கும். எனவே அது நுகர்வுக்கு தகுதியற்றதாக இருக்கும். ‘யாத-யாமஎனும் இந்த வார்த்தைக்கு சங்கரர், ‘போதுமான அளவு சமைக்கப்படாத உணவுஎன்றும் பொருள் கொள்ளலாம் என்கிறார். ஏனெனில் அடுத்த சொல்லான3தரசம்என்பது பழைய உணவைக் குறிக்கிறது. எனவே இங்கேயாமஎன்ற சொல், உணவு சமைக்கப்பட பரிந்துரைக்கப்பட்ட நேரத்தைக் குறிக்கும். அவ்விதமாக சமைக்கப்படாதது இங்குயாத-யாமஎன்று அழைக்கப்படுகிறது

3-ரசம்எனில் சுவையிழந்த உணவு, சாரத்தை இழந்த உணவு. அதிகம் சமைக்கப்பட்டதால் அது அதன் சாரத்தை இழந்துவிட்டது. எனவே, அதன் ஊட்டச்சத்தும் இழக்கப்பட்டுவிட்டது. பழைய உணவும் சாரத்தை, ஊட்டச்சத்தை இழக்கிறது.


=> தாமஸ உணவின் பிற தன்மைகள்:

பூதிஎனில் ஊசிப்போய் துர்நாற்றமெடுக்கிற உணவுகளைக் குறிக்கிறது. ‘பர்யுஷிதஎன்பதற்கு சங்கரர், நேற்று இரவு சமைத்து எஞ்சிய உணவு என்கிறார். இதில் புளித்த அனைத்து பொருட்களும் அடங்கும். ‘கஷாயம்என்கிற பெயரில் அவைகள் சில நேரங்களில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை உணவாக எடுத்துக் கொள்ளுதற்கு உசிதமானதல்ல. ‘உச்சி2ஷ்டம்என்பது வேறு யாராவது சாப்பிட்ட பிறகு எஞ்சியதை, எச்சில்பட்டதைக் குறிக்கிறது. பின்னர்அமேத்4யம்என்பது இறைவனுக்கு வழங்கப்படாத அல்லது சாத்விக தேவதைகளுக்குப் படைக்க யோகியதை இல்லாத உணவைக் குறிக்கிறது

இந்த வகையான உணவுகள் தாமஸீக குணமுடையவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. இதிலிருந்து, இந்த வகையான உணவில் ஏதேனுமொன்றை சாப்பிடுபவனை தாமஸ குணமுடையவன் என்று முடிவு செய்ய வேண்டாம். அது வெறும் பழக்கமாக இருக்கலாம். இங்கு கூறப்பட்டுள்ளதை, இந்த வகையைச் சார்ந்தவர்களென மற்றவர்களை எடைபோட உபயோகிக்கக் கூடாது. நாம் தாமஸமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக இந்த உணவுகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

மூன்று வகையான உணவுகளைப் பற்றிச் சொன்ன பிறகு, இப்போது மூன்று வகையான வழிபாடுகளைப் பற்றி பகவான் பேச இருக்கிறார்.

---------------------------------------------------------------------------------------------