திங்கள், 26 ஜனவரி, 2026

சிரத்தாத்ரய விபாக யோகம் 17.18 - 17.20

||17.18|| ராஜஸம் தவம்:

सत्कारमानपूजार्थं तपो दम्भेन चैव यत्

क्रियते तदिह प्रोक्तं राजसं चलमध्रुवम् ।। १८ ।। 

ஸத்காரமாநபூஜார்த2ம் தபோ 3ம்பே4 சைவ யத்

க்ரியதே ததி3 ப்ரோக்தம் ராஜஸம் சலமத்4ருவம் ।। 18 ।।


सत्कार मान पूजा अर्थं   ஸத்கார மாந பூஜா அர்த2ம்  பாராட்டுதலையும், பெருமையையும், போற்றுதலையும் முன்னிட்டு     दम्भेन एव 3ம்பே4 ஏவ   ஆடம்பரத்தோடே     

यत् तप:  யத் தப:  எந்த தவம்    क्रियते  க்ரியதே  செய்யப்படுகிறதோ     इह  இஹ  இங்கு      

चलम्  சலம்  தற்காலிகமான    अध्रुवम्  அத்4ருவம்  உறுதியற்ற     तत्  தத்  அது       

राजसं  ராஜஸம்  ராஜஸமானதென்று      प्रोक्तं  ப்ரோக்தம்  பகரப்படுகிறது.


பாராட்டுதலையும், பெருமையையும், போற்றுதலையும் முன்னிட்டு ஆடம்பரத்தோடே இங்கு எத்தவம் செய்யப்படுகிறதோ, தற்காலிகமானதும் உறுதியற்றதுமான அது ராஜஸமானதென்று பகரப்படுகிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

மதிப்பையும், பெருமையையும், பூஜையையும் நாடிச் செய்வதும், ஆடம்பரத்துக்காகச் செய்வதுமாகிய தவம் ரஜோ வெனப்படும்; அஃது நிலையற்றது; உறுதியற்றது.

விளக்கம்:

இந்த சுலோகத்தில் ராஜஸிகமான தவம் குறித்த விளக்கம் வருகிறது.


=> வெளிவேஷம்:

அந்த-கரண-சுத்திக்காக அல்லாமல், மற்றவர்களால் நல்லவராகக்  கருதப்படுவதற்காகவென சிலர் தவத்தைச் செய்கிறார்கள். ‘அவர் எவ்வளவு ஒழுக்கமானவர், எவ்வளவு அழகாகப் பேசுகிறார், எப்படி மிகக் குறைவாகச் சாப்பிடுகிறார்,’ என்று மக்கள் சொல்வதற்காக செய்கிற தவம் ராஜஸம் ஆகும். வெறும் வெளி வேஷத்துக்காகவே அவர்கள் அதைச் செய்கிறார்கள். தவமுடையவர்களென்று மற்றவர்கள் தங்களைப் பாராட்டி வரவழைக்க வேண்டும்; போற்றிப் புகழ வேண்டும்; வீழ்ந்து வணங்க வேண்டும்இதுபோன்ற எண்ணங்களை மனதில் வைத்து தவம் புரிபவர்கள் போல நடிப்பதுஸத்கார மாந பூஜா அர்த2ம்ஆகும்.

தன்னை ஒரு சிறந்த தபஸ்வியாகக் காட்டிக்கொள்ளும் வடிவத்தில் அவர்கள் தோன்றுவார்கள். தங்களது வீட்டில் அமைதியாக அமர்ந்திருக்காமல், பொது இடத்தில், அதாவது தங்களை அனைவரும் கவனிக்கக்கூடிய இடத்தில் தவம் செய்வார்கள். சாதுவின் உடை மற்றும் அணிகலன்களோடு(ருத்ராட்ச மாலை, விபூதி) வருவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் உள்ளே நுழையும்போது, அனைவரும் எழுந்திருக்க வேண்டும் என்றெல்லாம் கோருவார்கள். இதுமாநஆகும். தங்களை ஒரு தபஸ்வியாக அங்கீகரிப்பதையும், அனைவரும் சாஷ்டாங்கமாக விழுந்து மரியாதையுடன் வரவேற்பதையும் உறுதி செய்தவர்களாய், தங்களுக்கு உயர்ந்த இருக்கை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள். யாரையும் விடக் கீழே அமரும்போது தங்களை அவமதித்து விட்டதாகக் கருதுகிறார்கள். இதுமாநஎன்று அழைக்கப்படுகிறது.

இவர்கள் புரிகின்ற தவங்கள் ஆடம்பரத்திற்காகவும், அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படுகிறது. தங்களை தபஸ்வி என மக்களுக்கு காட்டும்போது அதற்கான மரியாதைகள் அனைத்தையும் பெற முடியும். எனவே தாங்கள் தவம் செய்யும்போது, அதற்கான பார்வையாளர்கள் இருப்பதை அவர்கள் உறுதி செய்கிறார்கள். இது3ம்ப4எனப்படுகிறது

பாராட்டிற்காகவும் போற்றுதலுக்காவும், பெருமைக்காகவும் செய்யப்படுகிற இத்தகைய தவம் ராஜஸம் எனச் சொல்லப்படுகிறது. இது ரஜோ குணத்திலிருந்து பிறக்கிறது.  


=> ராஜஸ தவத்தின் பலன்

இத்தகைய தவம் நிலையற்றதுசலம், மற்றும் உறுதியற்றதுஅத்4ருவம், என்கிறார் பகவான். பாசாங்காகச் செய்யும் தவம் சில நாட்களுக்கு மட்டுமே நடைபெறும். பிறகு அது இல்லாது மறைந்து போகும். செய்கிறபோதும் அதில் எவ்வித உறுதிப்பாடும் இருக்காது. அல்பமான பலனாக, பெயரும் புகழும் சிறிது காலத்திற்குக் கிடைக்கிறது அவ்வளவே. அதுவும் தற்காலிகமானதாகவே இருக்கும். ஏனெனில் தபஸ்வியாக இல்லாமல் அவ்விதம் காட்டிக்கொள்ளும் ஒருவனுக்கு அந்நிலையைப் பராமரிப்பது மிகவும் கடினம். ஒரு நாள் அல்லது மறுநாள் அவர் வெடிப்பார். யாரோ ஒருவர் அவர் விரும்பும் வகையில் அவரை மதிக்கத் தவறும்போது கோபப்படுவார். அப்போது அவரது தவம் என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். எனவே தவத்தை செய்வதிலும் சரி பலனை அனுபவப்பதிலும் சரி இத்தகைய தபஸானது நீண்ட காலம் இருக்கப் போவதில்லை.

அடுத்ததாக பகவான் தாமஸிகமான தபஸை வரையறுக்கிறார்.

————————————————————————————————

||17.19|| தாமஸமான தவம்:

मूढ ग्राहेणात्मनो यत् पीडया क्रियते तप:

परस्योत्सादनार्थं वा तत्तामसमुदाहृतम् ।। १९ ।। 

மூட4 க்3ராஹேணாத்மநோ யத் பீட3யா க்ரியதே தப:

பரஸ்யோத்ஸாத3நார்த2ம் வா தத்தாமஸமுதா3ஹ்ருதம் ।। 19 ।।


मूढ ग्राहेण  மூட4 க்3ராஹேண  மூடக்கொள்கையால்      

आत्मन: पीडया  ஆத்மந: பீட3யா  தன்னை துன்புறுத்தியோ     परस्य  பரஸ்ய  பிறரை

उत्सादनार्थं वा  உத்ஸாத3நார்த2ம் வா  அழித்தல் பொருட்டோ    यत् तप:  யத் தப:  எத்தவம்    

क्रियते  க்ரியதே  செய்யப்படுகிறதோ     तत्  தத்  அது    तामसम्   தாமஸம்  தாமஸம் என்று     उदाहृतम्   உதா3ஹ்ருதம்  இயம்பப்படுகிறது


மூடக்கொள்கையால் தன்னையே துன்புறுத்தியோ அல்லது பிறரை அழித்தற் பொருட்டோ செய்யப்படுகிற தவம் தாமஸமெனப்படுகிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

மூடக் கொள்கையுடன் தன்னைத்தான் துன்பப்படுத்திக் கொண்டு செய்வதும், பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய தவம் தாமச மெனப்படும்.

விளக்கம்:

இந்த சுலோகத்தில் தாமஸிகமான தபஸ் சுட்டிக் காட்டப்படுகிறது


=> தன்னை துன்புறுத்துதல்:

மூட4 க்3ராஹேணஎனில்மூடத்தனமான கொள்கையுடன்’, ‘குழப்பமான, மயக்கமடைந்த கருத்துடன்என்று பொருள். தன்னைப் பற்றிய புரிதலும், என்ன செய்ய வேண்டும், எது சரியானது, எது தவறானது என்பது பற்றிய பாகுபாடும் இல்லாததால் இது ஏற்படுகிறது. விவேகம் இல்லாத காரணத்தினால் தவத்தின் உட்பொருளை அவன் உள்ளபடி புரிந்துகொள்வதில்லை. திரிவுபட அதைப் பொருள்படுத்திஅவன் தன்னைத்தானே, அதாவது தனது சொந்த உடலையே, தவம் என்கிற பெயரில் துன்புறுத்துகிறான்ஆத்மந: பீட3யா. இது உடலை மட்டுமல்லாமல் மனதையும் பாதிக்கிறது; மேலும் பலனையும் தருவதில்லை. பட்டினி கிடந்து, உடலைக் குலைத்து, அதைத் தீயில் வாட்டி, வேல் ஊசியால் உடலைக் குத்தி, நீரில் நனைத்துச் சிறிது சிறிதாகத் தற்கொலை செய்வது போன்று தன்னையே அவன் துன்புறுத்திக் கொள்கிறான். அதுபோல நீண்ட நேரம் ஒரு காலில் நிற்பது, ஆணிகளால் ஆன கட்டிலில் படுத்துக் கொள்வது போன்ற தவங்களையும் நாம் சில நேரங்களில் பார்ப்பதுண்டு. இவைகளனைத்தும் தாமஸிகமான தவங்கள் ஆகும்.


=> பிறரை அழிப்பதற்காகச் செய்தல்:

மேலும், இதுபோன்ற தவங்கள் சில சமயங்களில் மற்றொரு நபரை அழிக்கும் நோக்கத்திற்காகச் செய்யப்படுகின்றனபரஸ்ய உத்ஸாத3நார்த2ம். ராவணனைப் போன்ற ஒரு அசுரன் அல்லது ஒரு ராக்ஷஸனின் மனநிலையைக் கொண்டவர்கள், தங்கள் எதிரிகளை அழிக்கும்பொருட்டு மட்டுமே நிறைய தவங்களைச் செய்கிறார்கள். மேலும் ஏவல் முதலிய மாந்திரிகச் செயல்களால், பிறரை அழிக்கும் சில சக்தியைப் பெற அல்லது சில ஆவிகளைப் பிடிக்க விரும்புகிறார்கள். இது பொதுவாக சூனியம் என்று அழைக்கப்படுகிறது. அக்ஞான இருளில் தோன்றிய இத்தகைய தவம் தாமஸமெனப்படுகிறது

குணத்தின் அடிப்படையில் சாத்விக, ராஜஸ மற்றும் தாமஸ தவங்கள் இங்கு கூறப்பட்டன. ராஜஸ மற்றும் தாமஸ தவங்களை ஒருவன் தவிர்க்கவேண்டும் என்ற நோக்கத்துடனேயே அவையிரண்டும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே உண்மையான தவம் என்பது சாத்விகமான தவம் மட்டுமே ஆகும்

அதேபோல, தானம் கொடுப்பதும் குணத்தின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கப்படும். அது அடுத்த சுலோகத்திலிருந்து விளக்கப்படுகிறது.

————————————————————————————————

||17.20|| சாத்விகமான தானம்

दातव्यमिति यद्दानं दीयतेऽनुपकारिणे

देशे काले पात्रे तद्दानं सात्विकं स्मृतम् ।। २० ।।

தா3தவ்யமிதி யத்3தா3நம் தீ3யதேऽநுபகாரிணே

தே3சே1 காலே பாத்ரே தத்3தா3நம் ஸாத்விகம் ஸ்ம்ருதம் ।। 20 ।।


देशे  தே3சே1  தகுந்த தேசத்தில்    काले   காலே   காலத்திலும்    

पात्रे   பாத்ரே  பாத்திரத்திலும்     दातव्यम् इति   தா3தவ்யம் இதி  கொடுத்தல் கடமையென்று     अनुपकारिणे  அநுபகாரிணே  பிரதியுபகாரம் செய்யாதவர்க்கு     यत् दानं   யத் தா3நம்  எந்த தானம்      दीयते  தீ3யதே  கொடுக்கப்படுகிறதோ    तत् दानं  தத் தா3நம்  அந்த தானம்    

सात्विकं  ஸாத்விகம்  சாத்விகமானதென்று     स्मृतम्  ஸ்ம்ருதம்  கருதப்படுகிறது.


தக்க இடத்திலே, வேளையிலே பிரதியுபகாரம் செய்யாதவர் எனினும் தகுந்த பாத்திரமாயுள்ளவர்க்குத் தானம் செய்வது முறையெனக் கருதி வழங்கும் தானம் சாத்விகமானது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

கொடுத்தல் கடமையென்று கருதிக் கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே சாத்விக மென்பர்.


விளக்கம்:

இங்கு, குணத்தின் அடிப்படையில் தானம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, சுலோகம் 20 முதல் 22 வரை விளக்கப்படுகிறது. இந்த சுலோகத்தில் சாத்விக தானம் வரையறுக்கப்படுகிறது.


=> கொடுப்பவரின் மனப்பாங்கு:

கொடுக்கப்பட வேண்டியதுஎன்கிற மனப்பான்மையுடன் வழங்கப்படும் தானம் சாத்விக தானமாகும்தா3தவ்யம் இதி. கொடுத்தல் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவசியமானதாகி, ‘இது என்னால் கொடுக்கப்பட வேண்டும்என்கிற மனப்பாங்கை ஏற்படுத்துகிறது. அப்போது அந்த கொடுத்தல் கடமையென்று, இன்னும் சொல்லப்போனால், கடன்பட்டதைப் போல பகிர்ந்து கொடுத்தல் நிகழ்கிறது

மேலும், கொடுப்பவரிடமிருந்து எந்த பலனையும் எதிர்பாராமல் வழங்குதல் சாத்விக தானமாகும்அநுபகாரிணே. அதாவது, உதவியைத் திருப்பித் தர இயலாத ஒரு நபராக இருக்கலாம் என இங்கு சங்கரர் விளக்கமளிக்கிறார். மிகவும் வயதான, அல்லது பலவீனமான, அல்லது ஏழையான ஒருவராகவோ, அல்லது சூழ்நிலைகள் மேலும் மேம்பட வாய்ப்பில்லை என்பவருக்கோ அந்த தானம் கொடுக்கப்படலாம்இவ்வகையான தானம் என்பது, எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல், உதவியைத் திரும்பத் தரஇயலாத ஒருவருக்கு வழங்கப்படுகிறது. ஒருகால் பெற்றுக்கொள்பவர் திரும்பக் கொடுக்கும் திறன் கொண்டவராக இருந்தாலும், அப்போதும்கூட கொடுக்கப்பட்டது திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல், ஏன் நன்றியைக் கூட எதிர்பார்க்காமல் அளிப்பது சாத்விக தானம் ஆகும். செய்த உபகாரத்துக்குப் பிரதியுபகாரம் எதிர்ப்பார்ப்பது வியாபாரமாகிறது. அது தானமாகாது. தனக்குப் பயன்படும் பொருள் மற்றவர்களுக்கும் பயன்படமேண்டுமென்று மனமுவந்து கொடுப்பது தானம். வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக்கூடாது எனும் சொல்லாடல் வழக்கதில் இருக்கிறது. அங்கு, கொடுக்கப்படுவது முற்றிலும் மறக்கப்படுகிறது. அதுவே உண்மையான தானம், இங்கே அது சாத்விக-தானம் என்று அழைக்கப்படுகிறது.


=> கொடுக்கப்படும் நபர்

செய்யப்படுகிற தானம் சாத்விகமா இல்லையா என்பது அது யாருக்கு வழங்கப்படுகிறது என்பதையும் பொறுத்திருக்கிறது. தகுந்த பாத்திரமாய் உள்ளவர்களுக்கு தானம் கொடுத்தல் முக்கியம். ‘பாத்ரஎன்பதன் நேரடிப் பொருள் பாத்திரம் ஆகும், இங்கு அது பெறுபவரைக் குறிக்கிறது. உதவி கேட்டு விட்டார்கள் என்பதற்காக மட்டும் நாம் கொடுத்து விடமுடியாது. அந்த நபர் அதற்கு தகுதியானவரா இல்லையா என்பதையும் ஒருவன் பார்க்க வேண்டும். அதே போல, சரியான இடத்தில் மற்றும் சரியான காலத்தில் தானம் கொடுக்கப்பட வேண்டும். உதாரணமாக எட்டு மணி நேரத்திற்குப் பிறகு முதலுதவி சிகிச்சை அளிப்பதால் பாதிக்கப்பட்டவனுக்கு எந்தப் பயனும் இல்லை, அது உடனடியாக அளிக்கப்பட வேண்டிய ஒன்று. அதுபோல தேவையிருக்கும்போது அங்கு உதவி செய்ய வேண்டும். பயன்படுத்துகிற காலத்துக்கு மிக முன்போ அல்லது பின்போ கொடுப்பது காலத்தில் செய்த தானமாகாது

சாஸ்திரப்படி பார்க்கும்போது இந்த சரியான இடம் மற்றும் சரியான காலத்திற்கு வேறு சில முக்கியதுவங்கள் இருக்கின்றன. சாஸ்திரத்தில் சரியான இடம் என்பது கோயில், நதிக்கரை, மலையடிவாரம் போன்ற புண்ணிய க்ஷேத்திரத்தைக் குறிக்கிறது. காசி, ரிஷிகேஷ், வாரணாசி போன்றவைகளும், அல்லது ராமர் பிறந்த இடமான அயோத்தி, கிருஷ்ணர் பிறந்த இடமான விருந்தாவன் ஆகியவைகளும் அல்லது, ஒரு துறவியுடனோ அல்லது புராணங்களிலோ பதிவு செய்யப்பட்டுள்ள சில நிகழ்வுகளுடன் தொடர்புடையதாக இருக்கின்ற இடங்களும் மக்கள் மனதில் புனிதமாகக் கருதப்படுகிறது

சாஸ்திரப்படி சரியான நேரம் என்பது புண்ணிய-காலத்தைக் குறிக்கிறது. சூரியன் வடக்கு நோக்கி பயணிக்கத் தொடங்கும் குளிர்கால சங்கிராந்தி, மகர சங்கராந்தி, கிரஹண காலம் போன்றவைகள் வேத மரபில் புண்ணிய காலமாகக் கருதப்படுகின்றன.

இன்றளவும்கூட சடங்கின் ஒரு பகுதியாக உணவு, உடைகள், கால்நடைகள், நிலம், வீடு போன்றவைகள் தானமாக வழங்கப்படுகின்றன. நமது மரபில் தங்களது மகளை திருமணம் செய்து கொடுக்கப்பதும் தானம் என்றே சொல்லப்படுகிறதுகன்னிகா தானம்.

=> தானத்திற்கான விஷயங்கள்

* பணம், பொருள், உணவு மட்டுமல்ல, அறிவு, சில நல்ல சொற்கள், ஏன் புன்னகையும்கூட ஒருவகை தானம் ஆகும்.

* தானம் கொடுத்தலில் அளவாகக் கொடுத்தல் என்பதும் முக்கியம். மனம் போன போக்கில் கொடுத்துவிட்டு, ஒருநாள் நாம் தானம் பெறும் நிலைக்கு வந்துவிடக் கூடாது.

* பவ்யமாகவும், பெறுபவர்களை மதித்தும் கொடுத்தல் வேண்டும். தாங்கள் தானம் பெறுகிறோம் என்கிற எண்ணமும்கூட பெறுநருக்கு வராத வகையில் அது மரியாதையுடன் கொடுக்கப்படல் வேண்டும். மேலும் கொடுக்கின்ற நிலையில் நம்மை பகவான் வைத்திருக்கின்றார் என்ற நன்றியுணர்வுடன் கொடுத்தல் சிறந்தது.

இனி, ராஜஸ தானத்தை குறித்து பகவான் அடுத்த சுலோகத்தில் பேசுகிறார்

---------------------------------------------------------------------------------------------